Saturday, March 3, 2018

பதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்


தொலைக்காட்சித் தொடர்களின் வசனகர்த்தாவாக, பாசக்காரத் தேனிக்காரராக, வளர்ப்புப் பிராணிகளிடமும் தீராப்பிரியம் கொண்டவராக,  இயற்கையை நேசிப்பவராக, , களத்தில் செயலாற்றுபவராக, திரைப்பட ஆர்வலராக, பொறுப்புள்ள குடும்பஸ்தராக அறியப்படும் நண்பர், எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “நந்தலாலா” வாசித்தேன். நேரடிப் பழக்கம் ஏற்படுவதற்கு முன்பாகவே, முகநூலின் மூலமாக நந்தன் ஸ்ரீதரன் குறித்து ஒரு சித்திரம் எழுந்திருந்தது. அதில் இரண்டு விஷயங்கள் முதன்மையாகத் தோன்றின. ஒன்று வளர்ப்பு நாய்கள் மீது அவரும் அவர் மனைவியும் வைத்திருக்கும் பாசம். அதன் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் மூலம் தூண்டப்பட்டோ, ஒரு சிறுமியையும் ஒரு நாயையும் மையமாக வைத்து அவர் எடுக்க நினைத்திருக்கும் திரைப்படம். இரண்டாவது, ஒரு பயணத்தின் போது, அது நாள் வரை எழுதி வைத்திருந்த அத்தனை எழுத்துக்களையும், லேப்டாப்போடு பறிகொடுத்ததும், வேறு பிரதிகள் இல்லாததால் அனைத்தையும் இனி முதலில் இருந்து துவங்க வேண்டும் என்றும் அவர் எழுதியிருந்த ஒரு பதிவு. நந்தன் ஸ்ரீதரன் என்பவரின் சித்திரம் இந்த இரண்டு நிகழ்வுகளின் கலவையாகத் தான் என் மனதில் பதிந்திருந்தது. இத்தொகுப்பை படித்த மாத்திரத்தில் அந்த சித்திரம் இன்னும் துலக்கமாகத் தெரிகிறது.

கறாரான அப்பாவுக்கும், பாசம் கொடுத்து நண்பர்களைப் போல வளர்க்கும் மகன்களுக்கும் இடையே அவதியுறும் நடுத்தர வர்த்தகவன், சிறுவயது முதல் இளைஞனானது வரை, சதா பசி கொண்ட வயிறோடு அவதியுறும் தொலைக்காட்சித் தொடர் வசனகர்த்தா, அப்பழுக்கற்ற பாசம் வைத்த உறவுகளை அழவைத்து, அவர்களைப் பாடாய்படுத்தி சாவின் முனை வரை தள்ளிவிட்டுவிட்டு, அதனைத் தன்னிரக்கமாய் கதை சொல்லி குடிக்கு காசு பறிக்க நினைப்பவனை துரத்தும் சக குடிகாரன், தற்கொலையைப் பயமுறுத்தும் ஆயுதமாய் மாற்றி தன் காரியங்களை சாதிக்கும் சொந்தக்காரனின் இருப்பை தவிர்க்கவும் முடியாமல் அதனை அவனிடம் நேரில் சொல்ல தைரியமும் இல்லாமல் தவிக்கும் உதவி இயக்குநன், ஊரின் தேவதையான தேவமலர் அக்காவின் பிரியத்துக்குரிய வளர் இளம் பருவத்து சிறுவன், முன்னாள் காதலியின் கணவர், சினிமா தயாரிப்பாளராய் முன் நிற்க, அவரிடம் கதை சொல்ல வரும் புதிய இயக்குநன், ஊரறிந்த விலைமகள் பொத்திப் பொத்தி வளர்க்கும் மனவளர்ச்சி குன்றிய மகளை யாருக்கு தெரியாமல் தூக்கிச் செல்லும் ஊதாரிகள், மனவளம் குன்றிய மகளுக்கு ஆதுரமாய் இருக்கும் தந்தை, ஒரு விலைமகளுக்குப் பிறந்து, சிறுவயதில் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளான, ஒரு சிறு கொம்பு கிடைத்ததும் அதைப் பற்றி மேலேறிப் படரத்துடிக்கும் எளிய இளைஞன்… இப்படி நந்தன் ஸ்ரீதரின் கதை மாந்தர்கள் வழமையான இயல்புகளில் இருந்து விலகியவர்களாய், பசியோடும் ஆற்றாமையோடும் அலைகிறவர்களாய், அன்றாடம் வாழ்க்கைப் பாட்டை பூர்த்தி செய்ய முடியாதவர்களாய். காதலையும் அன்பையும் தொலைத்தவர்களாய, சுருக்கமாக உலகின் வழக்கில் சொன்னால் தோற்றுப்போனவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமும் ஒரு அறம் இருக்கிறது. லௌகீகங்களுக்கு மயங்காமல், தான் தோற்றாலும் தான் கொண்ட அறம் வென்ற பெருமிதத்தோடு தோல்வியை மனதார ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள்.

இந்த அறம், தனக்கு சம்பளம் கொடுக்காத இயக்குநரைப் பழி வாங்க வாய்ப்பு கிடைத்தும், “என் புலி பசித்தாலும் மனிதர்களைத் தின்னாது” என்று சொல்லி வேலையை உதறிவிட்டுச் செல்ல வைக்கிறது. கால ஓட்டத்தில் தொலைந்து போன தேவதையை, அம்மா என்று அழைக்க வைக்கிறது. இழந்த காதலி மூலம் கிடைக்கும் பெரிய வாய்ப்பை புறந்தள்ளி விட்டு வெளியேற் வைக்கிறது.

தொகுப்பை வாசித்து முடித்த பிறகு, இதில் உள்ள ஒன்பது கதைகளிலும் வரும் ஆண்கள் ஒருவனே என்று எண்ணமும் தோன்றுகிறது. அவ்வகையில் ஒரு நாவலின் ஒன்பது அத்தியாயங்களாகவும் இத்தொகுப்பை வாசிக்கலாம். ஆனால் இந்தப் பெரும்பான்மையையும் தாண்டி மனதில் நிற்பது, இத்தொகுப்பில் நந்தன் ஸ்ரீதரன் காட்சிப்படுத்தி இருக்கும் பெண்களின் வார்ப்பு. இவர்களைப் பற்றிய சித்தரிப்பு அதிகமாக இல்லாவிட்டாலும், இவர்களே அதிகம் மனதில் பதிந்திருக்கிறார்கள்.

 புத்தி கூர்மை மட்டுப்பட்ட ஒரு இளம் பெண்ணின் அக உலகைப் பேசும் அற்புதமான கதை “ நந்தலாலா”. அன்றன்றைக்குத் தனக்குக் கொடுக்கப்பட்ட சொல்லை, நினைவில் கொள்ள பிரயத்தனப்பட்டு எப்பொழுதும் அதில் தோல்வியுறும் பேதையின் வாழ்க்கையை, ஒரு வார்த்தை கூடக் குறைய இல்லாமல் வெகு இயல்பாகச் சொல்லி இருக்கிறார். அவள், தன்னிடமுள்ள மந்திரக்கோல் மூலம் தனக்கான உலகை படைத்துக் கொள்கிறாள். விலங்குகளுடனும் பறவைகளுடனும் எந்த முரணும் இல்லாமல் பழகக் கூடியவளுக்கு மனிதர்கள் மட்டும் தான் ஏறுக்கு மாறாக நடந்து கொள்பவர்களாகத் தோன்றுகிறார்கள். அது குறித்து அவளுக்குக் குழப்பங்கள் இருந்தாலும், பெரிதாய் புகார்கள் எதுவுமில்லை. ஏனெனில் அவளை உணர்ந்து பழக நாயும், காக்கையும், மற்ற விலங்குகளும் பறவைகளும், பிரத்யேக மந்திரக்கோலும் இருக்கின்றன.

இன்னொருவர் “பதினான்கு முத்தங்கள்” கதையில் வரும் சரசக்கா. தான் கட்டிய சேலையை அவழ்த்து மறைப்பாக்கி, ஊருக்கு நடுவே அத்தனை ஜனத்திரள் மத்தியில் கைவிடப்பட்ட பிச்சிக்கு பிரசவம் பார்ப்பவர். மொழுமொழுவென திரவமும், ரத்தமும் சொட்ட, வீறிட்டழும் பச்சிளம் குழந்தையை அவர் ஏந்தியிருக்கும் காட்சி கண்முன் விரிகிறது.

வாசகன் கதைக்குள் நுழைய தடையாய் இருக்கும் எந்தவித ஆடம்பரமும் இன்றி நேரடியாக கதைக்களத்தை காட்சிப்படுத்தும் பாணி, நந்தனுடையது. வாசிப்பதற்கு மிக எளிமையாகவும் அதே நேரம் கதை சொல்லியாய் வாசிப்பவனை உருவகித்துக் கொள்ளவும் மிக உதவியாய் இருக்கின்றன அவரது எழுத்துக்கள். தொகுப்பு முழுவதும் எளிய நடையில் இருந்தாலும், ஆங்காங்கே விழும் தெறிப்பு வரிகள், யதார்த்தத்தோடு கொஞ்சம் புனைவுத் தன்மையையும் சேர்க்கின்றன. ”எனது அறையில் ஓர் உடும்பு இருக்கிறது”, “தேவமலர் அக்காவும் பெர்ட்ரண்ட் ரசல் அண்ணனும்”, “பதினான்கு முத்தங்கள்” ஆகிய கதைகளில் புனைவும் யதார்த்தமும் இரண்டறக் கலந்து இனிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. எளிய வார்த்தைகளில் உண்மைக்கு மிக அருகாமையில் உள்ள படைப்பை வழங்கியிருக்கும் நந்தன் ஸ்ரீதரனுக்கும், தொகுப்பைப் பதிப்பித்த “யாவரும் பதிப்பகத்திற்கும்” வாழ்த்துகள்.


நந்தலாலா – சிறுகதைகள்
நந்தன் ஸ்ரீதரன்
யாவரும் பதிப்பகம் வெளியீடு
பக்கங்கள்: 124
விலை: ரூ 120