Wednesday, November 20, 2013

கருப்பு என்னும் காவல்காரன்


புறநகர்ப்பகுதியில் புதிதாய் வீடுகட்டிப் போகும் எல்லோருக்கும் இருக்கும் பயம் தான் கண்ணனுக்கும் இருந்தது. அந்தப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பொழுது தான் வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. இருட்டி விட்டால் போதும். சில்வண்டுகளின் இரைச்சலும், தேங்கிக் கிடந்த தண்ணீரிலிருந்து வரும் தவளைச் சத்தமும் பெரும் பயத்தைக் கொடுப்பதாய் இருக்கும். அலுவலகத்தில் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து மாதத் தவணையில் சீட்டுப் போட்டதில் கிடைத்த இடம் அது. ஒவ்வொருவராக அவரவர் வசதிக்கேற்ப வீடு கட்டி குடிவந்து கொண்டிருந்தனர். கண்ணன் முன்பு குடியிருந்த வீட்டின் வாடகையும், உரிமையாளரும் ஒன்றாய் கழுத்தை நெறிக்க, வேறு வழியின்றி இங்கு அவசர அவசரமாக வீடு கட்டி குடிவந்து விட்டார்கள். ஒரு கடை கண்ணிக்கு செல்வதென்றால் கூட இரண்டு மூன்று கிலோ மீட்டர் செல்ல வேண்டி இருந்தது. அதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் திருட்டு பயம் தான் பெரிதாகத் தோன்றியது. அதுவும் அக்கம்பக்கத்தில் இரண்டு முறை களவு போயிருக்கிறது என்று கேள்விப்பட்டவுன் அவர்களது பயம் இன்னும் அதிகமானது.

பால் காய்ச்சு விழாவிற்கு வந்திருந்த போதே அவனது அப்பா சொன்னார், “அத்துவானக் காட்டுக்குள்ள கிடக்குறது மாதிரி இருக்கு, ராத்திரில வீடு புகுந்து அடிச்சாக் கூட கேக்க நாதியில்ல” 

அதற்கு அவன், “அதுக்கென்னப்பா பண்றது... பக்கத்து இடங்க பூராம் எங்க ஆபிஸ் ஆளுங்க தான். ஒவ்வொருத்தரா கட்ட ஆரம்பிச்சா கொஞ்ச நாள்ல பக்கா டவுன் மாதிரி ஆகிரும் பாருங்க” என்றான். அவனுக்கும் அந்த நம்பிக்கை தான். 

ஆனால் அவன் அப்பாவுக்கு மனம் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. பால் காய்ச்சு முடிந்து கண்ணனையும் அவனது மனைவியையும் குடியமர்த்தி விட்டு ஊருக்குப் போனவர், கொஞ்ச நாட்களிலேயே திரும்பி வந்தார். கையில் வித்தியாசமாய் வயர் கூடை ஒன்று இருந்தது.

“என்னப்பா, திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க... ?” என்றவன் அவர் கையிலிருந்த கூடையையே உற்று நோக்கினான்.

அவரும் “ஒன்னுமில்லய்யா, நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா கிடக்கீங்க. எங்களாலயும் உங்க கூட வந்து இருக்க தோதுப்படல... அதான் இதப் புடிச்சிட்டு வந்தேன். மீந்ததைப் போடுங்க. துணைக்கு நிக்கும்”

கூடையில் இருந்து இறக்கி விட்டதும் அதற்கு திசை பிடிபடவில்லை போல. லேசாக முனங்கி விட்டு மெல்ல தத்தித் தத்தி கண்ணன் காலடி வரை வந்து விட்டது.

“ஐயோ, இதெ எங்கெருந்துப்பா புடிச்சிட்டு வந்தீங்க. நான் பொழுது விடிய போனா, பொழுது சாய தான் வர்றேன். இவ ஒருத்தியால இதை வச்சு பண்டுவம் பாக்க முடியாது. பேசாம, போறப்போ வீட்டில கொண்டு போடுங்க... உங்களுக்குத் தான் இதெல்லாம் சரிப்படும்”

கண்ணன் அப்பாவிற்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். கிராமத்தில் நான்கைந்து நாய்களை வீட்டில் வைத்து வளர்ப்பது போக ஊரிலுள்ள் அத்தனை உருப்படிகளோடும் உறவு கொண்டாடிக் கொண்டிருப்பார். அந்த நினைப்பில் மகன் வீட்டிற்கும் காவல் நிற்கட்டும் என ஒரு குட்டியைத் தூக்கி வந்து விட்டார்.

“டேய், ஊருலருந்து தான் வேலை மெனக்கட்டு கொண்டு வர்றேன். தலையீத்துக் குட்டி. அம்சம் எப்படி இருக்கு பாரு. நம்ம குலதெய்வம் கருப்பசாமியவே கொண்டு வந்து உன் புது வீட்டுல விட்டுருக்கேன். உஙகளுக்கு எப்பவும் காவல் நிக்கும்டா” என்று சொல்லிவிட்டு மருமகளைப் பார்த்தாள். அவள் கண்ணன் என்ன சொல்வானோ என அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்

கண்ணனுக்கு நாய் வளர்ப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லை. சொல்லப்போனால் சின்ன வயதிலிருந்து போதும் போதும் என்கிற அளவுக்கு அவன் அப்பா நாய்களுடனேயே விளையாட்டுக் காட்டியதில் ஒரு வித வெறுப்பே வந்திருந்தது. இப்போது தான் புதுவீடு கட்டி வந்திருந்தார்கள். அங்கேயும் நாயைக் கொண்டு வந்து விட்டதில் எரிச்சல் தான் அதிகமாகியது.

“புரியாம பேசாதீங்கப்பா... அதெல்லாம் சரிப்படாது, நீங்க போறப்போ தூக்கிட்டுப் போயிடுங்க”

கண்ணன் கடிந்து சொன்னதும் அவனது அப்பாவின் முகம் சட்டென சுருங்கி விட்டது.

“சரிப்பா.. நான் கொண்டு போய்க்கிட்றேன்”

கண்ணனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ”ஒரு நிமிஷத்துல முகத்தில் அறைவது போல பேசிட்டோமே. இதுக்காக நூத்தம்பது கிலோ மீட்டர் வந்திருக்கார். வீட்டுக்குள்ள நுழைஞ்சும் நுழையாம இப்படி கத்திட்டோமே” என மனது அடித்தது.

“சரி வாங்க... முகத்தைக் கழுவிட்டு சாப்பிட உக்காருங்க” என்று அரவணைத்துக் கூட்டிப் போய் அவருக்கு முகம் துடைக்க துண்டை எடுத்துக் கொடுத்து விட்டு, உள்ளே அடுப்படிக்குள் சென்று ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அதில் தண்ணீரை ஊற்றி அந்த நாய்க்குட்டியினருகே வைத்து விட்டு அதைப் பார்த்தான். சுமார் ஒரு மாதமான ஆண் குட்டி. முற்றிலும் கறுப்பான உடலில், நெத்தி சுழி மற்றும் நான்கு கால்களில் மட்டும் வெள்ளை நிறம். கிராமத்தில் விலா எலும்பு தெரிய நீட்டு வாக்காய் சுற்றிக் கொண்டிருக்கும் நாட்டு நாயினம் தான். ஆனாலும் அப்பா சொன்னது போல அம்சமாய்த் தான் இருந்தது. லேசாக அதன் தலையைத் தொட்டான். அதுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அது அவன் தொடுதலில் ஏதோ உணர்ந்ததைப் போல, வாலை வேகமாய் ஆட்டிக் கொண்டே குழைந்தபடி தண்ணீரை நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.

அப்பா வீட்டில் இருந்த இரண்டு நாட்களுக்குள் கண்ணனின் மனைவியிடம் குட்டி நன்றாக பழகி விட்டது. அவளுக்கும் முதலில் இருந்த தயக்கம் விலகி அதனோடு சகஜமாய விளையாடத் துவங்கியிருந்தாள். இனி வேறு வழியில்லை, அந்த நாய்க்குட்டி இனி தங்களுடன் தான் இருக்கப் போகிறது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டான் கண்ணன். குட்டிக்கு “கருப்பு” என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது. அப்பாவும் நிம்மதியாக ஊருக்குக் கிளம்பினார். அதற்கு பால், பிஸ்கட் கொடுப்பது, சமயங்களில் வராண்டாவில் அது எடுத்து வைத்திருக்கும் வாந்தி மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வது, அதனுடன் விளையாடுவது என்று வேண்டா வெறுப்பாக செய்யத்துவங்கிய வேலைகள் எல்லாம் நாட்கள் செல்லச்செல்ல கணவன் மனைவி இருவருக்கும் விருப்பமானதாகவே மாறிப்போயின. கட்டிப் போட்டு வளர்க்காவிட்டாலும் வீட்டைத் தாண்டி எங்கும் செல்லாமல் “கருப்பும்” எப்போதும் அவர்களுடனேயே வலம் வந்தது.

வெளியூரில் நடக்கும் உறவினரின் திருமணத்திற்காக கணவ்ன் மனைவி இருவரும் செல்ல வேண்டிய நாளில் கருப்பை தனியே விட்டு விட்டு செல்வது குறித்தே அதிகம் கவலைப்பட்டனர். சரி இரவுக்குள் வீடு திரும்பி விடலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஒரு நாளில் கருப்பு சாப்பிடும் அளவிற்கு சாப்பாட்டை அதற்குரிய தட்டில் வைத்து விட்டுக் கிளம்பினர். அதிகாலை சென்றவர்கள் ஊர் வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டது. பேருந்து நிலைத்தை அடைந்து அங்கே விட்டுவிட்டுச் சென்றிருந்த இருசக்கரவாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிக் கிளம்பினர்.

பேருந்து நிலைய நுழைவாயிலைக் கடக்கையிலேயே கண்ணன் சத்தமிட்டான்.

“இங்க பாரு, நம்ம கருப்பு இங்க வரை வந்து சுத்திட்டு இருக்கு”

கருப்பு, அவர்கள் வீடு இருக்கும் புறநகர்ப்பகுதியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பேருந்து நிலையம் வரை எப்படி வந்திருக்க முடியும் என்று அவன் மனைவிக்கும் ஆச்சரியம் தான். ஆனால் அவள் பார்வைக்கு கருப்பு தட்டுப்படவில்லை.

“சும்மா உளறாதீங்க.. இவ்வளவு தூரத்துக்கு அது எப்படி வரும்” என்றவளாய் வண்டியை கவனமாய் ஓட்டச் சொல்லி விட்டு திரும்பினாள்.

நகரம் கடந்து புறநகர்ப்பகுதிக்கு செல்ல வேண்டிய நெடுஞ்சாலையைத் தொடும் போதும், கண்ணனுக்கு கருப்பு கூடவே ஓடி வருவது போலவே தோன்றியது. சற்று நிதானித்துப் பார்த்தால் கண்ணுக்கு அகப்படவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கொரு முறை அது வண்டியை ஒட்டி நெடுஞ்சாலையில் முன்னால் ஓடிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. அதனைப் பற்றி அவன் மனைவியிடம் அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டே வந்தாலும் அவள் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை.

நெடுஞ்சாலையைக் கடந்து அவர்கள் வீடு இருக்கும் புறநகர் சாலைக்குச் செல்ல வண்டியை வலதுபுறம்  திருப்ப எத்தனிக்கையில் எதிரே கண் மண் தெரியாமல் ஒரு மணல் லாரி இவர்களை நோக்கி விரைந்து வந்தது. ”செத்தோம்” என இவர்கள் கூச்சலிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த நாய் போன்ற ஏதோ ஒரு விலங்கை அடித்து விட்டு, இவர்களின் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை மயிரிழையில் தவிர்த்து சீரில்லாமல் பறந்து சென்றது. அதனை சற்றும் எதிர்பாராத இவர்கள், சுதாரித்து வண்டியை ஓரமாய் நிறுத்தி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தனர். சுற்றுமுற்றும் எந்தவொரு விலங்கும் அடிபட்டதற்கான எந்தத் தடயமும் அங்கில்லை,

பயம் விலகாமல் வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு, வாசல் கதவருகே கருப்பு படுத்திருப்பதைப் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அவர்களைக் கண்டவுடன் அது மெல்லிய குரலில் முனகத்துவங்கியது.
“காலைல இருந்து ஆளக்காணாம்னு செல்லம் கொஞ்சுது... வச்ச சாப்பட்டக்கூட தொட்டுப்பார்க்கல பாரேன்” என்றான் கண்ணன்.
“அது பாட்டுக்கு படுத்த இடத்த விட்டு எந்திருக்காம கிடக்கு.. நீங்க ரோட்டுல பார்த்தேன், காட்டுல பார்த்தேன்னிங்க!” என்று அவன் மனைவி சொன்னதற்கு சிரித்துக் கொண்டே போய் கதவைத் திறக்க முற்பட்டான். வாசல் படியெங்கும் இரத்தம் உறைந்து போய் இருந்தது.

வீட்டைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இரத்தத் துளிகளாய் சிதறிக் கிடப்பதையும், கருப்பின் முனகல் சத்தம் அதிகமாவதையும் கவனித்து வேகமாய் வந்து அதனைத் தூக்கினான்.அதன் முன்னங்கால் இரண்டிலும் சதை பிய்ந்து இரத்தம் உறைந்து போய் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அவன் கருப்பை கையில் ஏந்தியதும் அது பலகீனமாய் அவன் மார்பில் தலை சாய்த்து, அது வரை தேக்கி வைத்திருந்த வலியணைத்தையும் வெளிப்படுத்துவது போல, ஈனசுரத்தில் பெருங்குரலெடுத்து முனங்கத் துவங்கியது.

தங்கள் குலதெயவமான கருப்பசாமியை நினைத்து நிலக்காப்பை எடுத்து அதன் நெற்றியில் பூசி விட்டு, அதனைத் தூக்கிக் கொண்டு நகரத்திலுள்ள மருத்துவமனை நோக்கி ஓடினான்.

முறையாக வைத்தியம் பார்த்து, கண்ணும் கருத்துமாக கவனித்ததில் வெகு விரைவிலேயே கருப்பு குணமாகி விட்டது. வேண்டாவெறுப்பாக வீட்டுக்குள் வந்த ஜீவன், வீட்டின் முக்கிய உறுப்பினராக மாறி விட்டது. கருப்பினை தனியாக விட்டுச் செல்ல நேருமே என்று பெரும்பான்மையான வெளியூர்ப் பயணங்களைக் கூட அவர்கள் தவிர்த்தனர்.

மாதங்கள் செல்லச் செல்ல அவர்கள் குடியிருந்த பகுதியில் நிறைய வீடுகள் வரத்துவங்கியது. ஓரிரு ஆண்டுகளிலேயே மக்கள் அதிகமாய் புழங்கும் ஏரியாவாக மாறிப்போனது.

ஒரு முறை கண்ணனது அப்பா அவன் வீட்டிற்கு வந்தார். 

”வீட்டைக் கண்டுபிடிக்குறக்குள்ள பெரும்பாடா போச்சுப்பா. சுத்தி எத்தனை கட்டடங்கள் ஆகிபோச்சு.. திக்கும் தெரியல, தெசையும் தெரியல” என்று நொந்து கொண்டவர். 

”எங்கடா நம்ம கருப்பு எங்கே... ஊர் சுத்துற அளவு முன்னேறிடுச்சா?”

“இல்லப்பா, ஏரியால போற வர்றங்களை எல்லாம் துரத்த ஆரம்பிச்சிருச்சு. எல்லாரும் வீட்டுல வந்து சண்டை போட்டாங்க"

“பருவத்துல கொஞ்சம் விளையாட்டுத் தனம் இருக்கும்டா... கொஞ்ச நாள்ல சரியாடும்”

”கட்டி வச்சும் பார்த்தோம். ராத்திரியெல்லாம் ஊளையிட வேற ஆரம்பிச்சிருச்சு... அதனால”

"அதனால....”

“இல்லப்பா... ரெண்டு சின்னப்பசங்களுக்கு பல்லு பட்ற அளவு ஆகிடுச்சு... அதனால...”

“அதனால....”

கண்ணன் அதற்கு மேல் பேச முடியாமல், கொல்லைப்புறத்தில் நின்ற தென்னைங்கன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

******

நன்றி: மலைகள் இதழ்: http://malaigal.com/?p=3390

3 comments:

  1. நன்றியுள்ள ஜீவனுக்கு காட்டிய நன்றி....!

    ReplyDelete
  2. வணக்கம்
    கதை மனதை கவர்ந்துள்ளது அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பள்ளி பருவத்தில் நாய் வளர்த்த ஞாபகம் வருகிறது ....கருப்பு நாய் என்றாலே எப்போதும் பயம் தான்...வெள்ளை அல்லது செவலை கலர் தான் நம்ம சாய்ஸ் .....
    "நான் வளர்த்த நாய நானே கொல்லலாம , கண்டிப்பா ...அந்த நாய்க்கு வெறி புடிச்சா கண்டிப்பா கொல்லாம் " - ன்னு எங்கோ கேட்ட டயலாக் .... ஒரு வேளை கண்ணனும் அதே டயலாக் கேட்டிருப்பானோ.....
    நன்றி ...நியாயம்....தாண்டி சில விஷயங்களை முடிவு பண்ண வேண்டியிருக்கு போல .....தர்மம் சொல்கிற வழியில் ..... அட உடுங்க பாஸு .....

    -மதன்

    ReplyDelete