என் பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில், ஆண்டு விடுமுறைக்கு கிராமத்திற்கு எங்கள் அய்யா (அம்மா வழி தாத்தா) வீட்டுக்கு செல்வது வழக்கம். எங்கள் ஊருக்கு செல்வதென்றால் எனக்கு மிக விருப்பம், இரண்டு காரணங்கள், ஒன்று எங்கள் அம்மாயியின் (அம்மா வழி பாட்டி) அருகாமை. மற்றொன்று எங்கள் மாமா படித்து விட்டு கட்டுக் கட்டாக பரணில் போட்டிருக்கும் ராஜேஷ் குமார் நாவல்கள். அப்படி இருந்த எல்லா புத்தகங்களையும் வாசித்து விட்டு, வேறு புத்தகங்கள் அகப்படாமல் துலாவிக் கொண்டிருந்த ஒரு கோடை விடுமுறையில், ஊரில் பக்கத்து வீட்டு ஆசிரியர், நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. தலைப்பும், எழுத்து நடையும் அது வரை படித்திருந்த கிரைம் நாவல்களில் இருந்து வேறுபட்டு தானாகவே உள்ளிழுத்துச் சென்றது.
வெக்கை படர்ந்த கிராமத்து முன் இரவில், சுவர்கோழிகளின் சத்ததினூடே நான் வாசித்த முதல் படைப்பு, தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான கி.ராஜநாராயணனின் "கோபல்லபுரத்து மக்கள்". அந்த பதினோரு, பணிரெண்டு வயதில் எனக்கு கி.ரா வும் தெரியாது, எதுவும் தெரியாது (இப்போதும் நிறைய பேரைத் தெரியாது என்பது வேறு கதை). ஆனால் அந்த வாசிப்பு ஏதோ, நான் அந்த கோபல்ல கிராமத்திற்குள் தான் இருப்பது போலவும், அவர்களுடனே விவசாயம் செய்வது போலவும், கால்நடை வள்ர்ப்பது போலவும் ஒரு தோற்றமயக்கத்தை கொடுத்து, "கோபல்லபுரத்து மக்கள்" என் நினைவின் அடுக்கில் ஆழப்பதிந்து விட்டது.
இணையத்தின் பரிச்சயம் ஏற்பட்ட சமீபத்திய ஆண்டுகளில், கோபல்லபுரத்தை தேடி, கி.ரா. வைத் தேடி இறுதியில் நீண்ட காத்திருப்புக்குப் பின் வாங்கிப் படித்த இரட்டை நாவல்கள், "கோபல்ல கிராமம்" மற்றும் "கோபல்லபுரத்து மக்கள்". இதில் பதின்ம வயதில் வாசித்து, பின் சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து இப்போது வாசித்த "கோபல்லபுரத்து மக்கள்" பற்றிப் பின்னொரு நாளில் பகிர்கிறேன். இப்போது அதன் முன்கதையாக வரும் "கோபல்ல கிராமம்" நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம்.
முன்னுரையில் சொல்லி இருப்பது போல இது நாவலா, இல்லை சம்பவங்களின் கோர்வையா, இல்லை கோட்டையார் என்று அழைக்கப்பட்டவர்களின் குடும்பக் கதையா, இல்லை அந்த கோப்பல்ல கிராமம் உருவான கதையா, இல்லை அந்த ஊர்மக்கள் ஒவ்வொருவரின் இயல்புகள் பற்றிய ஆவனமா, இல்லை இது எல்லாமுமா என்றெல்லாம் பிரிக்க முடியவில்லை. ஆனால் சும்மா புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பவனை (வாசகன் என்று சொல்லும் அளவுக்கெல்லாம் நான் இன்னும் வளரவில்லை) கதையின் போக்கினூடே கைபிடித்துக் கூடவே கூட்டிச் சென்று, கோபல்ல கிராமத்தையும், அந்த ஊர் மனிதர்களையும் அறிமுகம் செய்து வைக்கிறார் கி.ரா தாத்தா.
நிகழ்காலத்தில், வாழ்ந்து நொடித்துப்போன கோட்டையார் குடும்பத்தினர் மற்றும் சிதிலமடைந்த அவர்களின் வீட்டைப் பற்றி விவரித்து விட்டு, அவர்கள் செழிப்போடு வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த ஒரு ஊர்வழக்கை விசாரிப்பதில் துவங்குகிறது கதை. இடையிடையே கோட்டையார் வீட்டின் "பூட்டி" வாயிலாக, அந்த இடத்திற்கு அவர்கள் வர நேர்ந்த காரணங்களும், அந்த கிராமத்தை அவர்கள் உருவாக்கிய விதமும் கதையாகவே சொல்லப்படுகிறது.
கோபல்ல கிராமம் வழியாக, தனியாக செல்லும் ஒரு பெண். அவள் காது பம்படத்தை அபகரிக்க வரும் வழிப்பறி திருடன். அவள் எதிர்க்கவே அவளை நீரில் அமிழ்த்தி கொன்று விடுகிறான். இதை பார்க்கும் கோட்டையாரின் தம்பி அவனை ஊர் பஞ்சாயத்துக்கு இழுத்து வர, ஊர் கூடி அவனை கழுவில் ஏற்ற முடிவு செய்கிறது. அவன் கழுவில் ஏற்றபட்டிருக்கும் பொழுது, அங்கே வேப்பமுத்து சேகரிக்க வரும் சிறு பெண்களை, தன்னைச் சுற்றி கும்மி அடித்து பாட்டுப்பாடச் சொல்கிறான்.
அந்த பாடல் இப்படி தொடர்கிறது,
"....செங்கல் அறுத்த கிடங்குக்குள்ளே - நாங்க
சீரகச் சம்பா விளைய வச்சோம் - இப்பெ
பச்சைக்கிளிவந்து கெச்சட்டம் போடுது
பறந்தடிங்கடீ தோழிப்பொண்ணே."
கழுவில் ஏற்றப்பட்டு மூன்று நாட்களாக சாவுக்காக காத்துக் கொண்டிருப்பவனுக்கு இந்த பாட்டை கேட்ட மாத்திரத்தில் தன்னுடைய பிறந்த ஊர் நினைவுக்கு வருகிறது. அங்கே தான் செய்த தான்தோன்றித்தனங்கள் பற்றி நினைத்து கண்ணீர் விடுகிறான். ஒரு பிரகாசமான தெளிச்சியுடன் செத்தும் போகிறான்.
இதனூடே கதையாக சொல்லப் படும் கோபல்லத்தின் வரலாறு. ஒரு காலத்தில், ஆந்திர தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் செழிப்பாக வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தில் சர்வ லட்சணங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மானத்தை காக்க வேண்டி ஊர், நிலம் நீச்சு, சொந்தபந்தம், கால்நடை அனைத்தையும் விட்டு பலநாட்கள் பட்டினியோடும், உடல் ரணங்களோடும் தெற்கு நோக்கி பயணப்படுகிறார்கள். வழிநெடுக பல இன்னல்களையும், தெய்வாதீன்மான சில நிகழ்வுகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒரு வனப்பகுதியை அடைகிறார்கள்.
கோபல்ல கிராமத்தை உருவாக்க அந்த மக்கள் ஒன்று கூடி பாடுபடுவதும், கரட்டுக் காடாக இருந்த வனப்பகுதியை அழித்து, விவசாய நிலங்களை உருவக்குவதும் அழகு. ஒரு பெரிய வனத்திடம் இருந்து சிறு பகுதியைப் பிரித்து அதை தனிமைப்படுத்தி, காற்று பரவும் காலம் வரை காத்திருந்து அந்த சிறு பகுதியை தீ வைத்து, பண்படுத்தி, விவசாய நிலமாக மாற்றுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து இராப்பகலாக உழைக்கிறார்கள். அதுவும் வெளி மக்களின் தொடர்பு இல்லாத சூழ்நிலையில், அந்த மக்களின் விடாமுயற்சியும், உழைப்பும் வியக்க வைக்கிறது. நமது ஊர்களை ஒட்டி, இன்று சர்வ சாதாரணமாக பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு நிற்கும் விவசாய நிலங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இப்படி வனங்களில் இருந்து அரும்பாடுபட்டு பிரித்து பண்படுத்தப்பட்ட வளங்கள் என நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது.
கிராமத்தை உருவாக்கும் சமயத்தில், காட்டுக்குள்ளிருந்து வழி தவறிய சினைப்பசு ஒன்று பெரும்சகதியில் மாட்டி அவதிப்படுவதை காண்கிறார்கள். பெரும் முயற்சிக்குப்பின் அந்த காட்டுப்பசுவை மீட்டு கொட்டிலில் பராமரிக்கிறார்கள். அதுவரை கால்நடை செல்வம் இல்லாத கோபல்லத்திற்கு, அந்த காட்டுப்பசுவின் மூலமாக, எல்லா செழிப்பும் வந்ததாக நம்புகிறார்கள். ("கோப்பல்லபுரத்து மக்கள்" நாவலில் "காரி" எனும் கோவில் காளையின் சரித்திரத்தை அழகாக சொல்லியிருப்பார் கி.ரா.) . மாடுகளோடு அந்த மக்கள் கொண்ட நேசத்தையும், அவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் கால்நடை பராமரிப்பு பற்றியும் நாவல் முழுவதும் காணலாம்.
இறுதியாக, ஒரு நாள் அந்த ஊருக்குள் இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் முற்றுகையிட்டு பயிர் பச்சை அனைத்தையும் கண் இமைக்கும் நேரத்தில் அழித்துச் செல்கிறது. மக்கள் இன்னது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள். பின் சொல்லாத காரண்ம் போல ஆங்கிலேயர் அந்த கிராமத்துக்கு அடியெடுத்து வைப்பதோடு முடிகிறது நாவல்.
ஆசிரியர் மேலே அமர்ந்து கொண்டு, வாசிப்பவனை அண்ணாந்து பார்த்து கதை கேட்க வைக்கும் உணர்வே எனக்கு வழக்கமாக தோன்றும். (இது எனது குறைந்த வாசிப்பனுவம் காரணமாகவும் இருக்கும்). ஆனால் கி.ரா. தாத்தாவின் எழுத்துக்கள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டு கதை சொல்லுவது போல ஒரு உணர்வு. அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. சொல்லித் தெரியப் படுத்த முடியாது, நண்பர்களே ! நீங்களும் கி.ரா வை வாசிக்கும் போது அதையே உளமாற உணர்வீர்கள் என்று மட்டும் நிச்சயமாக நம்புகிறேன்.
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்.
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.100
******************************
கோபல்லபுரத்து மக்கள் படித்திருக்கிறேன்.நல்ல இடுகை .பாராட்டுகிறேன்.
ReplyDeletenalla vilakkam.:)
ReplyDelete//கதையின் போக்கினூடே கைபிடித்துக் கூடவே கூட்டிச் சென்று,//
ReplyDeleteஇதுதான் நம்மை நமக்கு தெரியாமலே சுவாரசியபடுத்தி கதையினை திரும்ப திரும்ப வாசிக்க தூண்டுகிறது
//அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. சொல்லித் தெரியப் படுத்த முடியாது, //
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் தெரிஞ்சுகிறேன்
நல்ல பதிவு!!!
-மதன்
innum intha puthagam padikavillai..Aanal vasipatharkana thoondukolai aminthullathu intha article..Thanks bala...
ReplyDeleteஎனது பகிர்வில் நீளம் கருதி என் உணர்வுகளை மட்டும் சொல்லிக்கொண்டு முடித்துக்கொண்டேன். கதையின் முக்கிய விஷயங்களை நீங்கள் சொல்லியிருப்பது போல இப்படித்தான் அழகாக அளவோடு சொல்லியிருக்கவேண்டும், நான் தவறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். உங்கள் பகிர்வு சிறப்பானது.
ReplyDeleteஆங்காங்கே எழுத்துப்பிழைகள் உள்லன.. களையலாம். அடிக்கடி 'கோப்பல்ல' என்று வருகிறது.. அது 'கோபல்ல'. மேலும் கி.ரா வை தாத்தா எனச் சொல்வதை ஏனோ என் மனம் ஒப்ப மறுக்கிறது.
@ஆதி: நன்றி, ஒப்பீடு எல்லாம் வேண்டாம், சும்மா வாசிக்க சொன்னேன் அவ்வளவு தான். பிழைகளைக் களைய முயற்சிக்கிறேன்.
ReplyDeleteபாராட்டினேன். ஒப்பிடுவது எண்ணமில்லை. :-))
ReplyDelete