Thursday, March 28, 2019

வீதிக்கு வரும் தெய்வங்கள்


சித்திரவீதிக்காரன் எழுதிய “திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை” பற்றிய வாசிப்பனுபவம்

  அன்றாட வழமைகளில் இருந்து, கொஞ்சம் விடுதலையாகி இலகுவான மனநிலையில் நம்மை மிதக்க வைப்பவை திருவிழாக்கள். ஊர்கூடி ஒன்றுசேர்ந்து, ஆக்கிப் பொங்கி தின்று, கூட்டத்தோடு சுற்றி அலைந்து, மனதிருப்தியுடன் கூடடையும் போது, ஆசுவாசமும், நிம்மதியும் பொங்கிப் பெருக வைக்கின்ற திருவிழாக்கள் என்பன எளிய மனிதர்களுக்கான புத்துணர்ச்சி முகாம்கள். “திருவிழாக்கள் சமூக இளைப்பாறுதல்கள்” என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம். மதுரை என்பதே ஒரு பெரிய கிராமம். அதுபோக சுற்றியுள்ள அத்தனை கிராமங்களுக்கும் தலைநகரம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்நகரம் உயிர்ப்புடன் இருப்பதற்கு இதன் பண்பாட்டு கட்டுமானமே முக்கியக் காரணம். அத்தகைய பண்பாட்டை தலைமுறை தலைமுறையாகக் கடத்திக் கொண்டுவருவன இந்நகரில் நிகழும் பண்பாட்டுத் திருவிழாக்கள்.

மதுரையை அங்குலம் அங்குலமாக ரசித்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தரின் திருவிழா அனுபவங்களின் தொகுப்பு, “திருவிழாக்களின் தலைநகரம் - மதுரை” என்னும் புத்தகம். மதுரையில் நடக்கும் அநேகத் திருவிழாக்களின் மரபு, வழிபாட்டு முறை, அங்கே ஆயரக்கணக்கில் கூடும் மக்களின் உற்சாக மனநிலை, தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கவழக்கங்கள், தொன்மங்களாக மாறிய சடங்குகள் ஆகியவற்றை அழகாக ஒரு சாமான்யனின் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுந்தர். வைதீகம் சார்ந்து, சாமி ஊர்வலங்களின் புனிதத் தன்மையை விதந்தோதுவது போலின்றி, கடவுள்கள் உற்சவமாய் தெருவில் நகர்ந்துவந்து எளிய மக்களின் வாழிடங்களில் காட்சிதரும் தருணங்களையே சுந்தரின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. அவரது எழுத்தில் மிளிரும் இந்த யதார்த்தமே, இப்புத்தகத்தை ஸ்தல புராணம் பாடும் ஆன்மீக நூலாக்கிவிடாமல், கடவுள்கள் தங்கள் சன்னதிகளில் இருந்து வீதிக்கு வந்து, கடைக்கோடி மனிதர்களோடு வீதிகளில் புழங்கும் நிகழ்வரத்தைப் பேசும் சிறந்த படைப்பாக்குகிறது.

கட்டுரைகளினூடே மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் தொடங்கி, பண்பாட்டு அசைவுகள், அழகர்கோவில், ஏழரைப்பங்காளி வகையறா, சொட்டாங்கல் வரை பல்வேறு நூல்களில் மதுரை சார்ந்து எழுதப்பட்ட பாடல்கள் மற்றும் பத்திகளில் இருந்து காட்டப்பட்ட மேற்கோள்களும், அவற்றைக் கட்டுரைகளுக்கு மிகத் தேவையான இடங்களில் இணைத்ததும் இந்தப் புத்தகத்தில் மிகவும் கவர்ந்தவை. இது கட்டுரைகளுக்கு செறிவான ஆழத்தையும், பண்முகத் தன்மையையும் அளிக்கின்றன.

மதுரையின் பண்பாட்டுத் திருவிழாக்களோடு சேர்த்து, சமூகத் திருவிழாக்களான புத்தகத் திருவிழா மற்றும் பசுமை நடை பயணங்களையும் இணைத்திருப்பதும் மிகச் சிறப்பு. பொதுவாகவே மதுரைக்காரர்களுக்கு ஊர்ப்பாசம் அதிகம் என்பார்கள். அப்படி மதுரையையும், அதன் திருவிழாக்களையும் எளிய மக்களில் ஒருவராக இருந்து, திகட்டத் திகட்ட ரசித்தும், மீண்டும் மீண்டும் இத்திருவிழாக்களின் ஊடான அசைவுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தரின் இப்புத்த்கம் இதன் எளிமைத் தன்மைக்காகவே முக்கியத்துவம் பெறுகிறது. மதுரை மக்கள் தாங்கள் இயல்வாழ்வில் பங்குபெறும் இத்திருவிழாக்களின் எழுத்து வடிவத்தை வாசிக்கையில், “அட ஆமால்ல!” என்று மன உற்சாகத்தையும், மெல்லிய புன்னகை கலந்த பெருமிதத்தையும் அடையலாம். மற்ற ஊர்க்காரகள் மதுரையின் தொன்மையான திருவிழாக்களை நேரில் கண்டது போன்ற ஆச்சரியத்தை இப்புத்தகத்தை வாசிக்கையில் பெறமுடியும். முழு அர்ப்பணிப்போடு இத்தகைய திருவிழாக்களைப் பதிவு செய்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தருக்கும், அழகான வழுவழு தாளில், நேர்த்தியாக வடிவமைத்து, குறைந்த விலையில் வெளியிட்டிருக்கும் பசுமைநடை நண்பர்களுக்கும் மதுரைக்காரனாக வாழ்த்துகளும், நன்றியும்!

******
திருவிழாக்களின் நகரம் – மதுரை (கட்டுரைகள்)
சித்திரவீதிக்காரன் சுந்தர்
பசுமைநடை வெளியீடு
விலை: ரூ. 130
பக்கங்கள்: 200
******

No comments:

Post a Comment