Monday, March 18, 2019

வாழ்வின் பசியம் தேடும் அறிவியல் கதைகள்


சந்தோஷ் நாராயணன் எழுதிய அஞ்ஞானச் சிறுகதைகள் குறித்த வாசிப்பனுபவம்




நூறு அஞ்ஞானச் சிறுகதைகளையும், கதை குறித்து இணையத்தில் வந்த ஒருவரி கருத்துக்களையும் தொகுத்து உருவாகியிருக்கும் இந்த புத்தகத்தின் கடைசி வரி - "எப்போ புத்தகமா போடுவீங்க?". அதேபோல கடவுளிடம் சவால்விட்டு, சந்தோஷ் நாராயணன் எழுதாத நூறாவது கதையுடன் தான் நூறு கதைகள் முடிகின்றன. இப்படி உணர்வுப்பூர்வமாக புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதாவது சித்து விளையாட்டு காட்டி, அறிவியல் புனை கதைகளில் வாழ்வியலைப் பேசியிருக்கிறார் சந்தோஷ்.

கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் அர்த்தப்பூர்வமானவை. படைப்பின் இயந்திரத்துக்குள் ப்ரம் மற்றும் விஷ் ஆகியோரை உள்ளிட்டு எண்ணிக்கையில்லா பிரதியெடுக்கும் ஷிவ், வெற்றியின்மையையும், தோல்வியின்மையையும் குறிக்கும் அவிக்டர்  அஃபெயில், காஸ்மிக் எனர்ஜியை அடையத் துணியும் நந்தன், துவக்கத்தையும் முடிவையும் குறிக்கும் ஆதன் அந்தன், வன அரசி மெர்குரி திரவமாய்க் கண்ணீர் சிந்துவதைக் காணும் பாண்ட்ஸ்... இப்படி இதிகாசங்களையும், தத்துவங்களையும், சமகால நிகழ்வுகளையும் அறிவியலுக்குள் உள்ளீடு செய்து, வினையூக்கியாக செழுமையான புனைவைச் செலுத்திக் கிடைக்கும் அற்புதமான விளைபொருளாக இருக்கின்றன இந்த அஞ்ஞானச் சிறுகதைகள்.

அறிவியல் புனைகதைகள் யார் எழுதினாலும்,  எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் பொதுவாகவே பலருக்கும் எழுவதுண்டு. சுஜாதாவின் எழுத்துகள் சென்றடைந்த வீச்சு அத்தகையது. சுஜாதாவின் கதைகள், பெரும்பாலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை, அதன் மூலம் சாதிக்கும் அதிசயங்களை, அது சாத்தியப்படுத்த வாய்ப்பிருக்கும் மாயாஜாலங்களை ஆச்சரியத்துடன் வியந்து ரசிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கும். ஆனால் சந்தோஷின் கதைகள் அநேகமாக அதற்கு நேர் எதிரானவை. அவை அறிவியலின் பூதாகர வளர்ச்சியைப் பகடி செய்பவை. எளிய வாழ்வுக்கு மனிதனைத் திருப்ப முடியாதா என்ற ஏக்கம் கொண்டிருப்பவை. எதிர்காலத்தில் வரவாய்ப்பிருக்கும் இயந்தரகதியான வாழ்வை, உணர்ச்சிகளற்ற உறவுகளை, வளங்களின் பற்றாக்குறைகளை அங்கதத்துடன் ஏகடியம் செய்யக்கூடியவை. சந்தோஷின் குறுங்கதைகளில் பாறை ஓவியம் வரையும் பழங்காலத்தவனும், சஞ்சீவி மூலியை இமைகளின் அடியில் பதுக்கியிருக்கும் ஆதிவாசியும் தான் நாயகர்களே தவிர காலங்கள் பின்சென்று ஓவியனை அழைத்துவரும் விஞ்ஞானியோ, ஆதிவாசியை ஆராயும் ஆய்வாளர்களோ அல்ல. அவ்வகையில் இந்த அஞ்ஞானச்சிறுகதைகள் அறிவியல் மீபுனைவு தோற்றம் கொண்டிருந்தாலும், இயற்கையை நேசிக்கும், எளிமையில் வாழ விரும்பும், மண்ணையும், மனதையும் மாசுபடுத்த விரும்பாத ஒரு அறிவியல் ஆய்வாளனின் மனப்பதிவாகவே தோன்றுகின்றன.

ஹிட்லரின் சாம்பலை விலைக்கு வாங்கி வைத்திருக்கும் இந்திய, இலங்கை அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளனைக் கொல்லக் கொல்ல முளைக்கும் லட்சம் மூளைகள், லட்சம் உடல்கள், பிரதேசங்கள் எத்தனை துண்டுகளானாலும், அத்தனை துண்டுகளிலும் துளிர்க்கும் பொதுவுடைமை என்று சமகால அரசியலையும் பேசியிருக்கின்றன இக்கதைகள்.

மிதிலையின் பெரிய விளையாடு மைதானத்தில் சீறிவரும் காளையை அடக்கக் காத்திருக்கிறான் மாயன். ஏறுதழுவல் விளையாட்டுக்கான திடீர் தடையால் கொதித்தெழுவது மாயன் மட்டுமல்ல, விளையாடக் காத்திருக்கும் காளையும் தான். அதேபோல, தனது மகனான நரகாசுரன் கொல்லப்பட்ட கோபத்தை, தன்னை லெட்சுமி வெடியாக்கி வெடித்துத் தீர்க்கிறாள் பூமாதேவி. இன்னொறுபுறம்,பெட்ரோலுக்காக சண்டையிட்டு பூமியின் மொத்த மனிதர்களும் அழிந்த பிறகு, மடிந்த உயிரிகளின் படிமங்களில் இருந்து உருவாகியிருக்கும் எரிபொருளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கிறார்கள் வேற்றுகிரக அறிவுஜீவிகள். இப்படி இன்றைய எதார்த்த நடைமுறைகளையும், பிரச்சனைகளையும், சிக்கல்களையும் நாம் யோசிக்காத இன்னொரு கோணத்தில் சொல்லி, நம்மை ஒரு நொடி அதிர்ச்சியடையவோ, வியப்படையவோ வைக்கின்றன அஞ்ஞானக்கதைகள். சந்தோஷ் இந்தக் குறுங்கதைகளுக்காக எடுத்திருக்கும் கருக்கள் நாம் அன்றாடம் புழங்கும் விஷயங்கள் தாம். ஆனால் அவர் அவற்றை பிராஸஸ் செய்து கதையாக வடிக்கும் கலை தனித்துவமானதாக இருக்கின்றது.

சில கதைகள், பாதியில் நிறுத்தியவை போல ஏமாற்றமளித்தன. இன்னும் சில, கதையே இல்லை என்று தோற்றமளித்தன (நமக்குத்தான் புரியவில்லையோ!). ஆனாலும் நூறு என்ற எண்ணிக்கை நிறைவானதாக இருந்தது. சந்தோஷ் இயல்பில் ஒவியர் என்பதனால் அத்தனை கதைகளுக்கும் மிகப்பொருத்தமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவை நன்றாகவும் இருக்கின்றன. ஆனால் அவை கதைகளின் வாசிப்புக்கு செய்த மதிப்புக்கூட்டல் மிகக்குறைவே. ஓவியங்கள் இல்லாமல் இருந்தாலும், இக்கதைகள் இதே உணர்வைத்தான் தந்திருக்கும் என்று தோன்றுகிறது.

இன்றைய இணைய உலகில் புதிய வாசகர்களைக் கவர, கதைகளையும் கேப்சூல் வடிவில் கொடுக்கவேண்டியிருக்கிறது. நவீன யுகத்தின் தற்போதைய புதிய இலக்கிய வடிவம் குறுங்கதைகள். அறிவியல் புனைகதைகளை குறுகத் தரித்துக் கொடுத்திருந்தாலும், தன் வேர்களையும் வாழ்வியலையும் மறக்காமல் அதை இந்தப் புதிய இலக்கித வகைமைக்குள் பொருத்தியிருக்கும் நண்பர் சந்தோஷ் நாராயணனுக்கும், புத்தகத்தை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் இந்த புத்தகம் பரவலாகச் சென்றுசேர வேண்டுமென்று விரும்புகிறேன். கல்லூரி ஆசிரியராக இருக்கும் நண்பர்கள், கல்லூரிகளில் சிறப்புரை ஆற்றச் செல்லும் நண்பர்கள் இந்த புத்தகத்தை மாணவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். அறிவியலில் இன்றைய வாழ்வியலைக் கலந்த சுவாரஸ்யமான ஒருபக்கக் கதைகள் என்ற வகையில் இளைஞர்களை இந்தப் புத்தகம் நிச்சயம் ஈர்க்கும்.

******
அஞ்ஞானச் சிறுகதைகள்
சந்தோஷ் நாராயணன்
உயிர்மை வெளியீடு
பக்கங்கள்: 224
விலை: ரூ. 200
******



No comments:

Post a Comment