Friday, May 20, 2016

நீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள் ( தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ் )

“ஒரு படைப்பு அதன் மொழிபெயர்ப்புக்கு உண்மையாய் இருப்பதில்லை”
-- ஜார்ஜ் லுயிஸ் போர்ஹே

இணையப்புழக்கம் பெருகி விட்ட இந்தக்காலத்தில், எந்த நாட்டின் படைப்புகளையும், இலவச கோப்புகளாக தரவிறக்கிக் கொள்ள எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்றிருக்கிறோம். எந்தவொரு படைப்பாளரைப் பற்றிய குறிப்புகளையும், பின்புலனையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிற இந்த யுகத்தில், உண்மையில் மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறதா என்ன? இது பொதுவாக இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்கிற பிரதான கேள்வி. முன்பு பிற மொழிப்படைப்பாளர்களின் அறிமுகம் நூலகம் தவிர பிற வடிவங்கள் மூலமாக கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் அவர்களின் கலை, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அறிந்து கொண்டோம். உலகமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய சூழ்நிலையிலும், ஒரு படைப்பின் மொழிபெயர்ப்புக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது?

என்ன தான், பிறமொழிப்படைப்புகளை வாசித்தாலும், தன் தாய்மொழியில் ஒரு படைப்பை வாசிப்பதற்கு நிகரான இன்பத்தை, திருப்தியை ஒரு வாசகனுக்கு வேறு எதுவும் தரமுடியாது என்பதைத் தான் இன்றைக்கும் கணிசமான அளவிற்கு வெளியாகும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய நிலையில், மூலப்படைப்பை சிதைத்து விடாமல், அதே சமயம் தனக்கிருக்கும் குறைந்த பட்ச சுதந்திர எல்லைக்குள் படைப்பை மறு ஆக்கம் செய்வது என்பது இன்றைய மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அத்தகைய சவாலை தன் எளிமையான மொழியின் மூலமாக, மூலப்படைப்பிற்கு மிக அணுக்கமான நடையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் ஸ்ரீதர்ரங்கராஜ்.

ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமியின் சிறுகதைகளில் ஸ்ரீதர்ரங்கராஜ் மொழிபெயர்த்த ஏழு கதைகளை ”நீர்க்கோழி” என்ற தலைப்பில் தொகுப்பாக்கி வெளியிட்டு இருக்கிறது வலசை பதிப்பகம். முரகாமி எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தவை. கிழக்காசிய எழுத்தாளராக இருந்தாலும் அவரது படைப்புகளில் மேற்கத்திய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களின் சாயல்கள் இருப்பதைக் காண முடியும். இயல்பாய் யதார்த்த நிகழ்வுகளோடு தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை முறை பற்றிய விவரணை ஒருபுறம். மாய உலகின் கனவுகளோடும், அமானுஷ கற்பனைகளின் படிநிலையான சித்திரம் இன்னொரு புறம். இவையிரண்டும் சமுத்திரத்தில் கலக்கும் நதிகள் போல ஒன்றோடு ஒன்று இணையும் தருணம். மாய யதார்த்ததில் நிகழ் உலகம் தொலைந்து போவது போலவோ அல்லது நிஜ உலகில் அமானுஷத்தின் சுவடுகள் அமிழ்ந்து போவது போலவோ அவரது கதைகள் முடிவுறும். 

இக்கதைகள் மலைகள் மின்னிதழில் தனித்தனியாக வெளியான பொழுது வாசித்ததற்கும், இப்போது தொகுப்பாக வாசிக்கையில் உள்ள அனுபவத்தையும் குறிப்பாகச் சொல்லலாம். முரகாமியின் கதைகள் அனைத்திலும் அவரே பிரதான பாத்திரமாக இருக்கிறார். ஒரு மனிதன் தன் சுயம் சார்ந்த பிரச்சனைகள் மூலம் உலகத்தை அணுகும் கதைகள் அவருடையது. இந்த அகமுகச் சிந்தனை (introvert) தன்மை கொண்ட கதைகளை வாசிக்கும் போது நாமும் அந்த பாத்திரமாக மாறி கதைக்குள் நம்மை எளிதாக ஒப்புக்கொடுக்க முடிகிறது. எளிமையான சிக்கலற்ற வாழ்க்கை ஓர் எதிர்பாராமையை சந்திக்கும் போது நிகழும் தருணங்களைத் தாம் அவரது கதைகள் பேசுகின்றன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றிற்குமே தொடர்பு இருப்பது போலத் தோற்றமளிக்கிறது. “நீர்க்கோழி” கதையில் புதிதாய் வேலைக்குச் செல்பவனுக்கும், “எதேச்சையின் பயணிக்கும்” ஏதோ உறவு இருக்கிறது. ”டோனி தகிதானி”யின் தந்தை தான் ”ஏழாவது மனிதர்” தானோ. “நேற்று” கதையில் வரும் எதையும் மரபார்ந்த முறையில் கேள்விகளின்றி எதிர்கொள்ளும் எரிகா என்னும் அழகிய பெண்ணின் எதிர் வடிவம் தான் ”இரும்புத்துண்டுடன் ஒரு நிலக்காட்சி”யில் வரும் கேளிக்கைத்தீயை மணிக்கணக்காய் பார்த்தபடி அமரந்திருக்கும் ஜுன்கோவோ என்ற எண்னமும் எழுகிறது. அல்லது இவர்கள்
எல்லோருமே ஒருவர் தானோ என்ற எண்ணம் கதைகளை ஒரே வாசிப்பில் தொகுப்பாக வாசிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்குள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணநலன்கள், செயல்பாடுகள், எண்ணவோட்டம், எதிர்வினை, பார்வை எல்லாவற்றையும் வரைபடநிரலாக (graph chart) காட்சிப்படுத்தி அதனை ஆய்வு நோக்கில் அணுகிப் பார்த்தால், இன்னும் கூட விரிவான சித்திரம் கிடைக்கும்.

நிறைவான மொழிபெயர்ப்பை தந்திருக்கும் ஸ்ரீதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

நீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள்
(தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ்)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
வலசை பதிப்பகம்
விலை: ரூ 120.


******
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=8012
******

No comments:

Post a Comment