இன்றைய சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் எதனையும் வர்த்தகமாக்கி காசுபார்க்கும்
வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் குழந்தைகளை குறிவைத்து இயங்கும் வியாபார
உலகம் மிக பிரமாண்டமானது. நாமும் கூட குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து
கொடுக்கிறேன் பேர்வழி என்று, அவர்களுக்கென பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட தனியறை, மேஜை
நாற்காலி, கணினி, அலைபேசி, அவர்கள் பார்க்குற, கேள்விப்படுகிற மற்றும் நாம்
சிறுவயதில் வாங்க நினைத்து வாங்க முடியாமல் போன பொருட்கள், சந்தையில்
குழந்தைகளுக்கென புதிதாய் வரும் எல்லாவிதமான விளையாட்டுப் பொருட்கள், கல்வி சார்
சாதனங்கள் என்று நம் குழந்தைகளுக்கென பார்த்துப் பார்த்து
வாங்கிக் குமிக்கின்றோம். குழந்தைகளின் மகிழ்ச்சி என்பது நாம் அவர்களுக்காக செலவு
செய்யும் பணத்தில் அடங்கி இருக்கிறது என்ற அளவிலேயே நாம்
புரிந்து வைத்திருக்கின்றோம். ”என் குழந்தை என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துடுவேன், அவ எந்தவொரு சின்ன
விஷயத்துக்குக் கூட ஏமாந்து போறது எனக்குப் பிடிக்காது” என்பதை கொள்கையாக
வைத்திருக்கும் பெற்றோர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்.
நல்ல வசதி
வாய்ப்புகளோடு நம் குழந்தைகளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்து
கொடுப்பது பெற்றோராகிய நம் கடமை தான். ஆனால் நமது நிகழ் உலகத்தில், ”மகிழ்ச்சி” என்ற பொருளுக்கு நாம் நிர்ணயித்து வைத்திருக்கும் கோட்பாடுகளையும்,
அளவுகோல்களையும் தாண்டி அவர்களின் உலகை புரிந்து கொள்வது அவசியம். குழந்தைகள்
என்னும் சின்ன்ஞ்சிறிய மனிதர்களை வலியக் கொண்டு வந்து நமது மன எல்லைக்குள் அமரவைத்து,
நம் கண் கொண்டு அவர்களைக் காணச்செய்வதைக் காட்டிலும், அவர்களின் சிறிய உலகத்தில்
நாம் நுழைந்து பார்த்தால் பற்பல அற்புதங்களை நாமும் ஸ்பரிசிக்க முடியும். நாம் அனைவருமே
குழந்தைகளாக இருந்தவர்கள் தான். அதை மறந்து விட்ட்தாலேயே நாம் அனைவரும் பெரிய
மனிதர்கள் வேடமிட்டு எதெற்கெடுத்தாலும் ஒரு கவலையை கட்டிக் கொண்டு சுற்றிக்
கொண்டிருக்கிறோம். மாறாக நம்முள்
இருக்கும் குழந்தைமை நம்மையும் மீறி வெளிவரும் தருணங்களில் தான் நாம் எந்தவிதக்
கவலையுமின்றி ஆத்மார்த்தமான மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்பதே உண்மை.
நம் குழந்தைமையை
மீட்பதெப்படி? மிகவும் சுலபமான வழி தான், நாம் குழந்தைகளோடு இருக்கும் போது நாமும்
குழந்தைகளாக வேண்டும், அவ்வளவு தான். ஆனால் அவர்களின் உலகிற்கு ஒரு பார்வையாளராக அல்லாமல்
சகபயணியாய் சென்று பயணித்தால் மட்டுமே அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள
முடியும், நம்மாலும் அவர்களின் குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.
குழந்தைகளின் கற்பனை உலகம் (fancy world) தர்க்கங்களற்ற களங்கமின்மையால் (illogical innocence) நிறைந்து இருக்கும். அங்கே இயல்பு
வாழ்க்கையில் நாம் வகுத்து வைத்திருக்கும் நேர்க்கோட்டு வரைமுறைகளுக்கு வேலையே
இல்லை. குழந்தைகள் கேள்விகளின் துணை கொண்டே தங்களின் கற்பனை உலகை வளர்க்கின்றனர். அவர்களின்
கேள்விகளை காது கொடுத்துக் கேட்டு, பொறுமையாக பதில் சொன்னாலே போதும், அவர்களின்
உலகிற்குள் நுழைய கதவு திறந்துவிடும்
என் மகள்
பேசத்துவங்கிய பருவத்தில், அவள் பேசும் எல்லா வாக்கியங்களுமே கேள்வியில் தான்
முடியும். அதுவும் “ஏன்” என்ற வார்த்தை இல்லாமல் ஒரு வாக்கியமும் முடியாது.
“அப்பா, ஏன் வெயில் மறஞ்சு
மறஞ்சு வருது?”
“அப்பா, பஸ் எல்லாம் எங்க
தூங்கும்?”
“அப்பா, அம்மா
காக்கா வீடு எங்க இருக்கும், பாப்பா காக்கா எப்போ ஸ்கூலுக்குப் போகும்?”
“அப்பா, வண்டி ஏன் ஜம்ப்
பண்ணி ஜம்ப் பண்ணி போகுது?”
“அப்பா, ரொம்ப தூரம்
சைக்கிள் ஓட்டுனா எனக்குத் தண்ணி தவிக்குதுல்ல, சைக்கிள் எப்படி தண்ணீர்
குடிக்கும்?”
“அப்பா, காக்கா, கார் ரெண்டும்
பறக்கும்ல, யாரு ஃபர்ஸ்ட்?”
“அப்பா, சைக்கிள் ரெஸ்ட்
எடுக்க என் பெட்ல படுக்க வைக்கலாமா?”
"அப்பா, இது ஓசூர் பஸ்ஸா, சென்னை பஸ்ஸா?”
"அப்பா, போட்ல ஸ்பீடா போனா
கடலுக்குள்ள போலாமா?”
“அப்பா, ஃபிஷ்
டேங்குல மீனெல்லாம் எப்போ தூங்கும்?”
இப்படியான கேள்விகளை
அநேகமாக நம்மில் எல்லோரிடமுமே நம் குழந்தைகள் கேட்டிருப்பார்கள். இக்கேள்விகளுக்கு
நேரடியான அறிவுப்பூர்வமான பதில்களைக் காட்டிலும், கற்பனை கலந்த, குழந்தைகளையும்
அந்த கேள்விக்கான பதிலின் கதாப்பாத்திரங்களாக உள்நுழைத்து கதை போல விரிவாகச்
சொல்லும் போது, அவர்களின் யோசிக்கும் திறனும், அறிந்து கொள்ளும் ஆர்வமும்
அதிகரிக்கும்.
இப்பொழுது எல்.கே.ஜி
படிக்கும் என் மகள், பள்ளியிலிருந்து சுமந்து வரும் கேள்விகளுக்காகவும், கதைகளுக்காகவும்
நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம். ஆசிரியை சொல்லும் கதைகளுடன் இவளது சொந்தக்
கற்பனையையும் சேர்த்து ஒரே கதை பல்வேறு வடிவங்கள் எடுத்த நிகழ்வுகளும் உண்டு.
இக்கதை இப்படித் தான் முடியும் என்ற எந்த வரைமுறைகளையும் நாங்கள் அவளுக்கு
நிர்ணயிப்பதில்லை, மாறாக ”ஒரு பாட்டி வடை சுட்ட கதை”க்கே பல பரிமாணங்களை
வைத்திருக்கிறோம்.
நாம் படித்த
காலத்தில், நம் பெற்றோர் வியந்தது போலவே தான் நாம் நம் குழந்தைகளைப் பார்த்து
வியக்கின்றோம். மாறிவரும் கல்வி முறை குழந்தைகளின் மனப்பாட்த்திறனை மட்டும்
சோதிப்பதோடு நிற்காமல், அவர்களுக்கான செயல்முறைக் கல்வி அவர்களின் கற்கும் திறனை
அதிகரிக்கவே செய்கிறது. நம் பெற்றோர், “நாங்கள் எல்லாம் ஆறாவதில் தான் “A” எழுதவே கற்றுக்
கொண்டோம், என் மகன் எல்.கே.ஜி.யிலேயே எல்லா எழுத்தும் எழுதுகிறான்” என்று பெருமை கொண்டிருப்பர். இன்று என் மகள் வீட்டுக்குக் கொண்டு வரும்
செயல்முறைப் பயிற்சிகள் எங்களுக்கு வியப்பூட்டுகிறது
கடந்த சுதந்திர
தினத்தன்று என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வந்த செயல்முறைத் தாளில், செயல்பணி
இவ்வாறு இருந்த்து.
முதலில், சில
தாமரைகள் – அவை எத்தனை என்று கூட்ட வேண்டும், தாமரைக்குரிய நிறங்களை
வடிவத்திற்குள் சரியாக நிரப்ப வேண்டும். ஏன் அந்த்தாளில் தாமரை இருக்கிறதென்றால்,
அது நமது தேசிய மலர், அதனால். அது போல அந்த தாளிலேயே, தேசிய விலங்கான புலி,
தேசியப்பறவையான மயில் மற்றும் தேசியக்கொடி ஆகியவற்றிற்கும் இது போல கூட்டிப்
பார்த்து, நிறமடித்து, அவை அனைத்தும் தேசிய சின்னங்கள் என்ற விளக்கத்தையும்
குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறது. ஒரே
நேரத்தில பல விஷயங்களை கற்றுத் தரும் இத்தகைய செயல்வழிக் கல்வி முறை எங்களுக்கு
ஒரு சேர வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
வீட்டில் அவளோடு சேர்ந்து நாங்களும் கற்கத் துவங்கியிருக்கிறோம். நாம் படிக்கும்
காலத்தில், நோட்டு புத்தகங்களை கிழிக்காமல் பாதுகாப்பதையே தலையாய கடமையாய்
கருதியிருப்போம். இன்று பள்ளியில் இருந்து வரும் போதே அன்றைய நாளுக்கான
செயல்முறைத் தாளை மட்டுமே என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வருகிறாள். அதையும்
வடிவத்துக்கேற்றவாறு கத்தரித்து ஒட்டும் செயலை வீட்டுப்பாடமாக அவளோடு சேர்ந்து
நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்.
குழந்தைகள் உலகில்
அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அன்றாட
அயற்சியூட்டும் அலுவல்களுக்கிடையே நமக்குமே நாம் இழந்த பால்யத்தை மீண்டுமொரு முறை
வாழ்ந்து பார்க்கும் இனிய அனுபவமாக இருக்கிறது.
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=7507
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=7507
******
No comments:
Post a Comment