எனது தோழி ஒருவர் நடத்தும் மழலையர் பள்ளிக்கூடத்தில் நடந்த "Grand parents Day" விழாவில் வாசிப்பதற்காக, "தாத்தா தன் பேரனுக்கு எழுதுவது போல" ஒன்றைக் கேட்டிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தும் வழக்கம் போல் சும்மா இருந்து விட்டு, விழாவிற்கு முதல் நாள் நள்ளிரவு அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தேன். நன்றாக இருந்ததாக அவர் சொன்னார். எப்படி இருக்கிறதென உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.
****************************** ****************************** *********************
தன் செல்லப் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா எழுதும் கடிதம்.
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வந்த தலைமுறை இடைவெளியெல்லாம்
பேரக் குழந்தைகளிடம் வருவதில்லையே என நினைத்ததுண்டு!
"எல்லாப் பிடிவாதமும் அப்படியே தாத்தா போல" என்று பாட்டி
செல்லமாய் கோபிக்கும் போது தான் புரிந்தது,
என் செல்லமே, நீ தான் நான் என்பது!
உன்னுடன் இருக்கும் போது தான்
என்னையும் நீ மழலையாக்கி விடுகிறாயே,
பின்பு எங்கிருந்து வரும் இடைவெளி.
நேற்று என் வேர் ஆழப்பதிந்து செழித்து வளர்ந்த
கிளையைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்தேன் - ஆனால்
இன்றோ என் நிழலில் வேறூன்றும் விழுதைப் பார்த்து
மெய்சிலிர்த்து நிற்கின்றேன்.
என் இள விழுதே, இந்த முதுமரத்தை
நீ முழுதாய் தாங்கும் நன்னாளும்
வரும் தானே!
அதைப் பார்த்து பூரித்து நிற்கும் நிலையை
கடவுள் தந்தால் நல்வரம் தானே!
உன் அப்பாவின் பால்யத்தை ரசிக்கவும் நேரமின்றி
வேலை வேலை என்று தான் ஓடிக் கொண்டிருந்தேன்.
இன்றோ உன் மழலை சொல்லில், செய்யும் குறும்பில்
என் பால்யத்தையே மீண்டும் முழுதாய் உணர்கிறேன்.
என் கைப்பிடித்து நீ நடைபயின்று வரும் போது,
உன் தத்துப்பித்து மழலை மொழியில்
உன் தந்தை பெருமையை எனக்கு சொல்வாய்
உலகத்தில் சிறந்த மனிதன் எல்லாம்
உன் தந்தை தான் என்ற நம்பிக்கை உனக்கு
அதை உன் வார்த்தைகளில் கேட்கையில்
மென்சிரிப்பு பூக்கும் எனக்கு!
ஏழேழு பிறவிக்கும் நான் செய்த தவத்திற்குப் பலனாய்த் தான்
நான் வாழும் நாளிலேயே இறைவன் உன்னைத் தந்தானோ!
நீ நல்லதைச் செய்ய, நட்பைப் பாராட்ட
நாளை உலகை வெல்ல,
கல்வி, கலை, கருணை
மனித நேயம் , மக்கட்பண்பு
அனைத்தும் பெற்று
வளமாய் வாழ
என்றும் உன் நிழலாய் இருப்போம்
நலமே வாழ இனிதான வாழ்த்துகள் !
மண்ணோடு வேர் கொண்டிருக்கும் ஆழமான அன்புடன்,
வானமெங்கும் கிளைப் பரப்பி பூத்துக் குலுங்கும் விருட்சமாய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க !
****************************** ****************************** **********
மிக மிக அருமை
ReplyDeleteதாத்தா பேரன் பாச நிலையை
மிக அழகாக சொல்லிப்போகிறது
உங்கள் படைப்பு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
very very nice one.....
ReplyDeleteovvorutharum feel panratha appadiye ezhuthirukeenga..congrats....real one..:)
"உன் அப்பாவின் பால்யத்தை ரசிக்கவும் நேரமின்றி..." அருமை அருமை. அவசரமாக வடித்ததே இவ்வளவு அழகுற இருக்குதே. இதுவே நாலு நாட்களுக்கு முன்னாள் என்றால்? நன்றி.
ReplyDelete