குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு ஒரு குக்கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஓர் இளைஞன். அந்த மக்களிடமும், சிறுவர்களிடமும் அவன் படும் அவஸ்தைகளையும், அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட அவன் மேற்கொள்ளும் முயற்சிகளையும் நகைச்சுவையாக பேசுகிறது “வாகை சூடவா”. ஒரு எளிய கதை, அதற்குத் தேவையான சின்னஞ்சிறிய கட்டமைப்பு இதில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வருவது போல கலகமும் இவ்வளவு சீக்கிரம் நடந்து, எளியவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறும் நிலையும், சர்க்கார் பெயரைச் சொல்லி ஒரு முறை மிரட்டுவதற்கே ஆண்டைகள் விலகி போவதுவும் நிஜத்திலும் நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் “இப்படி இருக்குமா”, “அப்படி இருக்குமா” என்ற யூகங்களை விட்டுவிட்டுப் பார்த்தால் இயக்குநர் தான் எடுத்துக் கொண்ட கருவிற்கு நேர்மையாக உழைத்திருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடியும் சிறிய படம், தெள்ளிய நீரோடை போல மிதமாக செல்கிறது. தொய்வென்று சொல்லும் படியாகவெல்லாம் இல்லை. காட்சிகளை ஆற அமர ரசிக்கும் மனநிலையில் இருந்த எனக்குப் பிடித்தே இருந்தது. அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஆவணப்படுத்தப் பட வேண்டிய ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கிறது.
“போஸ்ட் வுமனை” அறிமுகப்படுத்தும் காட்சியில் “ஒரு கனவுப்பாட்டை புகுத்திடுவானுகளோ” என்ற சிறிய சஞ்சலம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியேதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லை. காபிக் கொட்டை அரைக்கும் கருவி, ரேக்லா வண்டி, ஆண்டையின் பிரம்பு, சைக்கிள் முன்விளக்கு, பெரிய மூக்கு பஸ் என அறுபதுகளைக் கண்முன் கொண்டு நிறுத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செதுக்கப் பட்டிருக்கின்றன. “சூதாடி சித்தன்” போன்ற தோற்றத்தில் ஒரு கிழவனைப் பார்த்ததும், “ஐயோ, இந்த கேரக்டர் ஹீரோவிற்கு அப்பபோ வந்து அறிவுரையா சொல்லுமே” என பயந்தேன். அது போல் தான் நடந்தது, ஆனாலும் ஓரிரு வார்த்தைகளிலேயே அந்த கிழவன் பேசுவது நன்றாகவே இருந்தது. அதுவும் காட்டை அழித்த தன் தவறுக்கு வருந்தி “குருவிச்சத்தம் கேக்குது” என புலம்புவதும் யதார்த்தம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு என்று எந்த நுன்னறிவும் புலப்படாத எனக்கே இந்த படத்தின் முழுமைக்கு இவையெல்லாம் கண்டிப்பாக உதவியிருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடிகிறது. இன்னொரு மிகப்பெரிய ஆச்சர்யம், நாயகியின் நடிப்பும் பின்னனிக் குரலும். அழகு! நாயகனும் எங்கும் வீராவேசம் காட்டாமல் இயற்கையாக இருக்கிறார். போக, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு இனிய அனுபவத்தைத் தந்த மொத்த குழுவிற்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.
சரி, நம் கதைக்கு வருவோம். படத்தின் முடிவில் இன்னொரு கதை துவங்குகிறது. அதைப் பற்றி உரையாடுகையில் களம் இன்னும் விரியக்கூடும். செங்கல் சூளையில் இறக்கும் கற்களை விலைக்கு எடுக்கும் புதியவனும் ஒரு முதலாளி தானே. அவனையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது வேலு அதை எப்படி எதிர்கொள்வான். தோற்றுப் போன ஆண்டை பழி தீர்க்க என்னென்ன செய்வான். இதையெல்லாம் விட முக்கியமாக இரண்டு காசு, மூன்று காசு என ரகம் வாரியாக ”டீ” விற்கும் மதி ஊர் மதிக்கும் வாத்தியாரின் மனைவியான பின்பு அவள் நடவடிக்கை எப்படி இருக்கும்.
”யதார்த்ததில் வேலுவின் அடுத்த தலைமுறை ஒரு பண்ணையார் குடும்பமாகவே திகழும் அல்லது அவ்வாறு ஊராரால் பார்க்கப்படும். பிறகு அக்குடும்பத்தின் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்க இன்னொருவன் வருவான். பிறகு அவனைத் தலைவனாக்கி அவன் பின்னும் செல்வார்கள். அவனுக்கும் ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்துவார்கள். இயக்குநர் இதனைத் தொடர்கதையாக்கி படங்கள் இயக்கலாம்” என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
அது இருக்கட்டும், ஒரு படத்தைப் படமாக பார்க்காமல் அகழ்வாராய்ச்சி செய்வதே என் பொதுப்புத்தியின் நோக்கமாய் போய்விட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!
******
மிக அருமையான விமர்சனம்.கதாநாயகிக்கு பின்னணி குரலா? நம்பமுடியவில்லை. ஏனென்றால் சிம்ரனிளிருந்து இப்போ வரைக்கும் ஒரே பெண்தான் மூக்கிலையே பேசி டப்பிங் செஞ்சு கேட்டு பழக்கமா போச்சு.Good குடி இருப்பை சுற்றி ஒரு மரம செடி கூட இல்லாத அப்படி ஒரு பொட்டக்காடா? காட்டை அழித்தது எப்பயோ.அதன் பின் ஒரு செடி கூடவா வளர்க்கவில்லை? அப்புறம் சௌகரயத்திர்க்கு ஏற்றவாறு மரத்தையும் நீர் நிலைகளையும் காட்டுறாங்க. அப்புறம் கதாநாயகிக்கு ஒத்த பருவத்தினரையும் காமித்து இருக்கலாம். சின்னஞ்சிறுசுகள் விட்டா பெருசுகள். நடு பிராயத்தில யாருமில்லையா.போக்குவரத்தே இல்லாத பொட்டகாட்டில ஊருக்குள் யார் வந்தாலும் உடனே தெரிந்துவிடும். அப்படி இருக்க,பாக்கியராஜ் எப்படி திடீர்னு வந்தார் எப்படி திடீர்னு மறைந்தார்.மற்றபடி நல்ல முயற்சி.கொஞ்சம் பிசகி இருந்தால் டாக்குமெண்டரி படம்போல மாறியிருக்கும்.நன்றி நண்பரே.
ReplyDeleteதமிழ்ல நல்ல படமா! அப்படின்னா இது எந்த மொழிப் படத்தின் தழுவல் ?
ReplyDeleteஅண்ணே, பட விமர்சனம்ன்னு சொல்லிட்டு கியூபாவோட சமகால அரசியலைப் பேசிறீங்களேண்ணே..
ReplyDeleteசூப்பரு.
@சின்னப்பையன்: விரிவான கருத்துக்கு நன்றி. பின்னணி குரலாகத் தான் இருக்கும் என யூகிக்கிறேன்.
ReplyDelete@அரசு: இது நம்மூர் படம்ண்ணே !
@ராஜூ: இப்படியெல்லாம் சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு தானே விமர்சனம்னு எங்கேயும் சொல்லவே இல்லை. :)
உள்ளூர் படத்தையும், உலக அரசியலையும் இணைத்துப் பார்க்கும் உன்னைப் போன்ற பார்வையாளர்கள் இருக்கும் வரை படைப்பாளிகள் (?) வாழ்வார்கள், தம்பி... வாழ்க வளமுடன் :)
என்னையா இது வித்யாசமா இருக்கு அனால் நல்லா இருக்கு.
ReplyDeleteவாகை சூடவா’ குறித்த தங்கள் பகிர்வு அருமை. 1960ஐ காட்சிப்படுத்தி அந்தக் காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்றதற்காகவே இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். விமல், இனியா முதல் படத்தில் நடித்த பலரது நடிப்பும் இயல்பாக இருந்தது. இறுதிக் காட்சியில் அந்தச் சிறுவர்கள் தங்கள் சம்பளத்தை சரியாக லாரி டிரைவரிடம் கேட்கும் போதே அடுத்த கலகக்காரர்கள் உருவாகிவிட்டார்கள். எனவே நாம் கவலைப்படத் தேவையில்லை. போஸ்ட்வுமனைப் பார்த்ததும் தங்களைப் போலத்தான் நானும் நினைத்தேன். நல்லவேளை சற்குணம் வேறு மாதிரி நினைத்துவிட்டார். கதாநாயகிக்கு பின்னனி குரல் தான். களவானியில் ஓவியாவிற்கு பேசியவர் தான் இனியாவிற்கும் பேசியிருக்கிறார் என நினைக்கிறேன். நல்ல படங்களை எடுத்து வரும் சற்குணத்திற்கு வாழ்த்துகள். பாடல்களும் அருமை. பகிர்விற்கு நன்றி.
ReplyDelete