Wednesday, November 5, 2014

கைப்பிடி மண்

அடர்கானகத்தின் நித்திய சாட்சியாய் ஆயிரமாயிரம் ஆண்டுக்கான நிகழ்வுகளை ரேகையில் பொதிந்து வைத்திருந்த பெருவிருட்சம், வேர் அழுகிச் சரிந்த தினத்தை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பருவம் மூத்த விருட்சம் உளுத்துப் போய் சரிவது ஒன்றும் அசாதாரண நிகழ்வல்ல என்று எண்ணிக்கொண்டவர்கள், சில நாட்களுக்குப் பிறகு விருட்சம் சரிந்த இடத்தில் மீண்டுமொரு கன்றினை நட்டு வைக்க முடிவு செய்து, வளர்பிறை விடிகாலை வேளையில் சிறு பள்ளம் தோண்ட கடப்பாறையைப் பதிக்க அந்தப்பகுதி நிலமெங்கும் அதிர்ந்தது. தொடர்ந்து நிலத்தை அகழ்ந்து கடப்பாறையை இறக்க முயற்சிக்க, நிலம் இன்னும் பல மடங்கு அதிர்ந்து குலுங்கியது. அந்த அதிர்வில் நிலத்திற்குக் குடை போல் காவலிருந்த மேகங்கள் நிலை குலைந்து தெறித்துச் சிதற வளிமண்டலத்தில் விரிசல் விழுந்தது. அந்தப் பிரதேசப் புழுதியின் ஒட்டுமொத்த நச்சுப் புகை சுழலாய் உருவெடுத்து அந்த விரிசல் வழியே வானேகி மேகப் பொதிகளை வன்புணரத்துவங்கின.

சில நாட்களிலேயே, விஷக்காற்றின் புழுதிச் சுழலால் சூல் கொண்ட மேகங்கள் அமில மழையை அந்தப்பிரதேசமெங்கும் பொழிய எஞ்சிய விருட்சங்களும், செடி கொடி தாவரங்களும், புல் பூண்டு வகைகளும் கருகிச் சரிந்தன. பச்சையம் அற்றுப் போன நிலமெங்கும் கொப்பளிக்கும் வெப்பம் பிரதேசத்தை அவ்வப்பொழுது தீக்கிரையாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பறவைகள், பூச்சிகள், புள்ளினங்கள் முற்றிலுமாய் அழிந்த அந்த பிரதேசமெங்கும் அமிலம் கலந்த துர்நாற்றம் வீசத்துவங்கிய மூன்றாம் நாளில் பூமியைப் பிளந்து கொண்டு முளைத்த ஏழு குடைக்காளான்களில் இருந்து சித்தரக்குள்ளர்கள் எழுவர் வெளிப்பட்டனர். அவர்கள் அங்கேயிருந்தவர்கள் அனைவரையும் பாழ்பட்ட அந்த பிரதேசத்தை விடுத்து அயல் கிரகம் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும், தாங்கள் கூறும் நாளில் அவர்கள் பயணத்தைத் துவங்கலாம் என்றும் அதுவரை அந்தப் பிரதேச மக்களனைவரும்  பதுங்கு குழி வெட்டி நிலத்திற்குக் கீழே தங்கியிருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

அயல் கிரகத்திற்கான தங்கள் பயணம் துவங்கும் நாளில் அந்த பிரதேசத்தின் ஆதி வனதேவதையை வருந்தியழைத்து பலியிட்டுச் செல்ல வேண்டுமென்றும், அப்போது தான் அந்த மக்களைத் துன்புறுத்தும் ஊழ் விலகுமென்றும் அந்த குள்ளர்கள் கூறியதைக் கேட்ட மக்கள் சிறிது கலக்கம் கொண்டனர். பிறகு அயல்கிரகத்து புதிய வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாத வனதேவதையை பலியாகக் கொடுத்து விட்டுச் செல்வதொன்றும் பாவச்செயலல்ல என்ற சமாதானத்தைக் தங்களுக்குள்ளாகவே கூறிக்கொண்டனர்.

அயல்கிரகத்துப் பயணத்திற்குக் காத்திருந்த ஏழாம் நாளில் முதல் குள்ளன் மரித்துப் போனான். நிலத்தில் படாதவாறு அவனது உடலைத் தூக்கிப் பிடித்தபடி மற்றவர்கள் இரவு பகலாக அலைந்து கொண்டிருப்பதை பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். ஆனால் அந்தக் குள்ளர்கள் நம்பியவாறு, மரித்தவன் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தான். அவ்வாறு உயிர் மீண்டவன் அவர்கள் செல்ல வேண்டிய அயல் கிரகத்திற்கான திசை நோக்கித் தான் பயணப்பட்டதாகவும், மூன்றாம் நாள் பயணத்தில் தான் சோர்ந்து மயங்கி விழுந்த தருணத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டதாகவும் கூறினான். அதனைக்கேட்ட மக்கள், ஒரு வேளை அவன் சோர்ந்து போகாமல் இருந்திருந்தால் இந்நேரம், அயல் கிரகத்திற்குச் சென்று புதிய வாழ்வை சிருஷ்டிக்கத் துவங்கி இருக்கலாம் என்றெண்ணி அவனைக் கடிந்து கொண்டனர். அவன் அவர்களை நோக்கி மெல்லிய புன்னகை சிந்தியவாறு அமைதியாக கடந்து சென்றான்.

முதலாமவன் மரித்த ஏழாம் நாள், குள்ளனில் இரண்டாமவன் மாண்டு போக அவனது உடலையும் தரையில் படாமல் மற்றவர்கள் தூக்கிக் கொண்டு அலைந்தனர்.  மீண்டும் மூன்றாம் நாளில் அவனும் உயிர்த்தெழுந்தான். அவன் முதலாமவன் கடந்த தூரத்தில் துவங்கி அயல் கிரகத்தை நோக்கி மேலும் சில தூரம் பயணப்பட்டதாகவும், மூன்றாம் நாளில் மயங்கி விழ மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டதாகவும் கூறினான். பதுங்கு குழிகளில் இருந்து இதனைக் கேட்ட மக்கள் தங்களுக்கான புதிய வாழ்வினை அந்தக்குள்ளர்கள் தாமதப்படுத்துவதாக நொந்து கொண்டனர். 

இந்த வரிசை முறையின் தருக்கத்தைத் தொடந்த சித்திரக்குள்ளர்கள், ஏழு பேரும் மரித்து உயிர்த்தெழுந்தபின் தான் தங்களுக்கு அயல் கிரகம் செல்வதற்கான திறப்பு கிடைக்குமென்றும் அதுவரை அந்த மக்கள் காத்திருக்க வேண்டுமென்றும் கூறினர். அதன்படியே ஒவ்வொரு ஏழாம் நாளும் ஒருவன் மரிக்க, மீண்டும் அவன் மூன்றாம் நாள் உயிர்தெழும் பொழுது புதிய கிரகத்தை அடையும் தூரம் குறைந்து வருவதாக உணர்ந்தனர். ஏழாமவன் மரித்த மூன்றாம் நாள் புதிய கிரகத்திற்கான நுழைவாயில் தூரத்தில் இருப்பதைக் கண்டு கொண்டான். அதே நேரம் அந்தப் பிரதேசத்திற்கு, அவனது உடலைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தவர்களை நோக்கி ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது.

ஆகாயம் பார்க்காமல், பதுங்கு குழிகளில் கிடந்து, செத்துப் பிழைத்து உழன்று அல்லலுற்றதற்கான பயனை அடைந்தது போன்று நினைத்துக் கொண்ட அந்த பிரதேசத்து மக்களின் காதுகளில் வாகனம் வரும் ஓசை கேட்டது. மக்கள் சற்று நேரம் பொறுமை காக்க வேண்டும் என்று கூறிய சித்தரக்குள்ளர்களின் வார்த்தைகள் அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. தங்களுக்குக் கிடைக்கும் நல்லூழைத் தடுத்த நிறுத்த அந்தக் குள்ளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று ஆத்திரம் கொண்டவர்கள் அவர்களை கல்லால் அடித்துத் துன்புறுத்தினர். மயங்கி விழுந்த ஆறு குள்ளர்களோடு சேர்த்து அவர்கள் தூக்கிக் கொண்டிருந்த ஏழாமவனின் உடலும் நிலத்தில் விழுந்தது. அவ்வாறு நிலத்தில் விழுந்த அவர்களின் உடல்கள் முழுவதும் அமிலம் பரவ, அவை முழுவதுமாய் வெந்து ஆவியாகிக் கொண்டிருந்தன 

தங்களுக்கான புதிய கிரகத்திற்குச் செல்ல வேண்டிய வாகனம் வந்து சேர்ந்ததில் ஆர்வமுற்ற மக்கள், ஒருவரையொருவர் நெட்டித் தள்ளி வேகமாக வாகனத்தை நோக்கி முன்னேறினர். ஆவியாகிக் கொண்டிருந்த உடல்களில் இருந்து எழுந்த துர்வாடை காற்றில் பரவி அந்த வெளியெங்கும் வியாபிக்கத் துவங்கியது.

மிக அருகில் வந்து நிற்கும் அந்த வாகனத்தை முழுவதுமாய் பார்த்ததும், அவர்களின் குதூகலம் மேலும் அதிகமாகியது. தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்ந்து கொள்ளும் முனைப்பில் இருந்த அவர்கள், வாகனத்தின் கதவுகளைத் திறக்க, பிறப்புறுப்பில் இரும்புக்கழி சொருகிய நிலையில் நிர்வாணமாய் ஒரு பெண் அவ்வாகனத்திலிருந்து கீழே விழுவதைக் கண்டனர். அந்தப்பெண் தங்கள் ஆதி வனதேவதையின் சாயலைக் கொண்டிருப்பதாக அவர்களில் ஒருவர் கூறியதை மற்றவர்கள் வேகமாக ஆமோதித்தனர். தாங்கள் வனதேவதையை வருந்தி அழைத்து அவளை சம்மதிக்கவைத்து பின் அவளை பலியிடுவதற்கான தேவை கூட இல்லாமல் அவளாக தங்கள் பயணத்திற்கு முன் பலியாகியிருப்பதாகவும், அவளின் நினைவாக அவளது உதிரம் தோய்ந்து சிதறிக்கிடக்கும் கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு போய் புதிய கிரகத்தில் வழிபடலாம் என்று முடிவெடுத்து அவசரமாக ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை அள்ளிக் கொண்டனர். பின் ஜன்னலோர இருக்கைகளில் இடம் பிடிப்பதில் முனைப்புக் காட்டி வாகனத்தில் ஏற எத்தனித்தவர்கள், ஏறும் அவசரத்தில் அவளை மிதித்து அவள் மேல் ஏறிச் சென்று, வேடிக்கை பார்க்க வசதியான இடங்களைத் தேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஏறியதும் வாகனம் கரும்புகை கக்கி கிளம்பத் துவங்கியது.

தொடர்ந்த பயணத்தின் ஜன்னல் வழிக்காட்சிகளில் லயித்திருந்தவர்கள், நாப்பத்தி ஒன்பதாவது நாளில் தாங்கள் சேர வேண்டிய கிரகத்திற்கான மிகப்பெரிய நுழைவாயிலைக் கண்டனர். தங்களுக்கான புதிய துவக்கத்திற்குத் தயார்ப்படுத்திக் கொண்டவர்கள் வாகனத்தை விட்டு இறங்கும் தருவாயில் பெருத்த சத்தத்துடன் இடி மின்னல் வெட்டத் துவங்கியது. வானம் வெடித்துச் சிதறியது போல கொட்டத்துவங்கிய அமில மழை நுழைவாயிலையும், வாகனத்தையும், அதில் இருந்த அவர்கள் அனைவரையும் எரித்தது. காற்றில் பரவியிருந்த துர்நாற்றம் புதிய கிரகம் முழுவதிலும் கவியத் துவங்கியது. தூரத்திலிருந்து இதனைக் கண்ணுற்ற ஏழாவது குள்ளனின் அரூப முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5772
******

No comments:

Post a Comment