Wednesday, October 9, 2019

குருவிகள் திரும்பும் காலம்


அழியும் ஊரின் சாட்சியங்களாய் வெற்றுத் திண்ணையைக் காத்துக்கிடந்த முடமான வயசாளிகளும், வாழ்ந்துகெட்ட ஞாபகத்தின் பாரத்தை சுமந்தபடி எந்தவித எதிர்பார்ப்புகளின் தளிரும் துளிர்விடாதபடியான கட்டந்தரை மனதோடு நடைபிணமாய்த் திரியும் சம்சாரிகளும், அத்துவானக்காட்டிற்குள் மைல்க்கணக்கில் நடந்துபோய் தும்பிக்கை நீள அகப்பை போட்டு உச்சிப்பகல் வரை அடைகாத்து காற்குடம் நிறைந்த கலங்கிய நீரைப் பொக்கிஷமாகப் பொதிந்துவரும் பெண்களும், கொடுக்காப்புளி ஞாபகத்தில் கருவேல நெற்றுகளைப் பறித்துத் தின்ற கசப்பை அடிவயிற்றிலிருந்து குமட்டி ஓங்கரிக்கும் சவலைப்பிள்ளைகளும் தவிர உயிர்ப்பின் நடமாட்டம் என எதுவும் எஞ்சியிருக்காத அந்த ஊரின் சித்திரம் இரண்டு வாரங்களாய் வளர்மதியின் கனவில் அலைக்கழித்தபடியே இருந்தது.

தலைப்பிள்ளையைப் பாதிக் கருவில் பறிகொடுத்த பிறகு, மூன்று வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் அடுத்ததை வயிறு சரியத் தாங்கியிருந்தாள். தனக்கு நடுக்காட்டம் தந்த கெட்ட கனவுகளை விரட்டும் பொருட்டு, கால்மாட்டில் போட்டு வைத்திருந்த விளக்குமாறு சர்ப்பமாகத் தோற்றம் கொண்டு அவள் காலை உரசியபடி இருந்தது. அதனை லேசாக விலக்கித் தள்ளிவிட்டவள்,  தூக்கமும் பிடிக்காமல் திரும்பிப்படுக்கவும் முடியாமல் ஒருக்களித்தபடி, சுண்ணாம்புக் காரை பொக்குவிட்டு பெயர்ந்துபோயிருந்த சுவரை மெல்லிய விளக்கொளியில் வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். அவளின் முதுகுக்குப் பின்னே குப்புறப் படுத்திருந்த தனசேகர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவைத் தாண்டி, அதிகாலை வேளையில் தன்னையும் அறியாமல் அவளது கண்கள் செருகிய அடுத்த அரைநொடி, பாழ்பட்ட எச்சங்களைச் சுமந்து திரியும் அந்த ஊர் கனவில் வந்ததை அவளால் தவிர்க்கமுடியவில்லை.

ஒரே கட்டிடத்தில், பக்கவாட்டில் கீழே நான்கும் மேலே நான்குமாக இருந்த கூட்டு வீடுகளின் கீழ்த்தளத்தில் கடைசி வீட்டில் அவர்கள் வசித்தனர். பத்துக்கு பனிரெண்டில் ஒற்றை படுக்கையறை, ஒரு ஆள் நின்று சமைக்கும் அளவிற்கான அடுப்படி, நான்கு பேர் உட்காரும் அளவுக்கான ஹால் என்று சிக்கனமாகக் கட்டப்பட்ட தொகுப்பு. அதில் தெருவைப் பார்த்திருக்கும் தலைவாசலை இந்த வாரம் கூட்டிப்பெருக்கிக் கோலமிடவேண்டிய முறை வளர்மதியுடையது. சரியாகத் தூங்காததால், எழும்போதே தலை வெடித்துவிடுவது போன்ற பெருத்த வலி எடுப்பது இந்த இரண்டு வாரங்களில் அவளுக்கு அன்றாட நிகழ்வாகியிருந்தது. தனசேகரை வேலைக்கு அனுப்பிவிட்டு காலை உணவுக்குப் பின் சற்று நேரம் உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்து இருந்தால் தலைவலி சரியாகிவிடும் என்று நினைத்தவளாய் தண்ணீர் வாளியையும் கோலப்பொடி டப்பாவையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க, ரோட்டுக் குழாயில் வரிசை போட்டு நான்கு மணி நேரம் காத்திருந்து அடித்து வர வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒருநாள் வாசல் தெளிக்காவிட்டாலும் ஓனரம்மா வேலை மெனக்கெட்டு வீட்டுக்குள் வந்து அரைமணி நேரம் வகுப்பெடுக்கும். வளர்மதி திருமணம் முடிந்த கையோடு இந்த வீட்டில் குடியேறி மூன்று வருடங்களுக்கு மேலாகவிட்டது. வீட்டுக்குள் தண்ணீர் குழாய் இல்லை. வாசலில் இருக்கும் குழாயில் தான் எட்டு வீட்டுக்காரர்களும் முறை வைத்து நல்ல தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் போக புழங்குவதற்கான உப்புத் தண்ணீரை தெருமுக்கில் இருக்கும் அடி குழாயிலிருந்து பிடித்துவர வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை தவிர வேறு பெரிய குறைகளும் இல்லாத சிறிய வீடு. அவர்கள் இருவருக்கு அது போதுமானதாகவே இருந்தது. மற்ற வீடுகளிலும் என்ன வாழ்கிறது. இந்த கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போன பிறகு, தெருவில் இருக்கும் எல்லா வீடுகளிலும் மோட்டர் போட்டால் காற்றுதான் வருகிறது. வாரத்துக்கு இரண்டு நாள் வரும் காப்பரேஷன் நல்ல தண்ணீர் போக, புழக்கத்துக்கு எல்லோரும் தெருமுக்கில் இருக்கும் அடிகுழாயைத் தான் நம்பி இருக்கிறார்கள்.

முன்வீட்டு அக்கா வளர்மதியின் முகம் வீங்கிப்போய் இருந்ததைப் பார்த்து, நன்றாக நீர் போகவதற்கு பார்லித் தண்ணீர் வைத்துக் குடிக்கச் சொன்னாள். சரியென்று தலையாட்டிவிட்டு, வாசலைப் பெருக்கி பேருக்கு நான்கு கை நீரள்ளித் தெளித்துவிட்டுக் குனிந்து கோலமிடுகையில் சுருக்கென இடுப்பு வலிப்பது போலிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் வேலையை முடித்து வீட்டிற்குள் வந்து, தனசேகருக்கு மதியத்துக்குக் கட்டிகொடுத்துவிட வேண்டியவற்றையும், காலைக்கானதையும் தனித்தனியாய் சமைத்து எடுத்துவைத்துவிட்டு நிமிர்ந்தாள். தனசேகர் குளித்து முடித்துவந்து சாப்பிட உட்காருகையில் வளர்மதி வழக்கத்தைவிட அதிகம் சோர்ந்துபோயிருப்பதைக் கவனித்தான். மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றதற்கு வேண்டாமென்றவள், முந்தைய இரவு தனக்கு வந்த கனவினைக் கூறினாள். அதேபோன்று, சென்றவாரம் முழுவதும் அவள் அந்த ஊர் பற்றிய துர்கனவுகளைச் சொன்னபோது உதாசீனப்படுத்தி எரிச்சலடைந்தவன், இந்த முறை ஏதோ ஆழ்ந்த யோசனைக்குச் சென்றான். வெகுநேரமாய் தட்டு காலியாகாமல் இருந்ததைப் பார்த்தவள், அவனைச் சாப்பிட நினைவுபடுத்திவிட்டு, தன் கனவின் தீவிரத்தன்மையை அவன் உணர்ந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

வளர்மதியின் கனவில் வந்த அந்த ஊர் தனசேகரின் பூர்வீக ஊரான பெரியகுட்டம். அவனது பால்யத்தில் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு மதுரைக்கு வந்தவர்கள், வந்த இடத்தில் வேறூன்றிவிட்டனர். அவனது சிறுவயதில் எப்போதேனும் முளைப்பாரித் திருவிழாவிற்குச் சென்றுவந்தது, அவனது பெற்றோர்கள் இறந்தபின் ஊருக்குச் செல்வது அடியோடு நின்றுவிட்டது. வானம் பார்த்த பூமியில் பசுமை மறைந்து, கரட்டுக்காடாய் மாறிய ஊரிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்தபின் ஊரே தரிசாகிப்போனது. அவன் மகிழ்வாய் இருக்கும் அரிய தருணங்களில் அவன் தந்தை அவனுக்குச் சொன்ன, ஊரோடுத் தன்னைப் பிணைத்திருக்கும் சில பால்யக் கதைகளை அவளிடம் உற்சாகம் பொங்கச் சொல்வான். அன்றாடங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து செக்கு மாட்டு வாழ்க்கையாய் நூற்பாலையில் சுற்றிக்கொண்டிருப்பவனுக்குள் ஒளிந்திருக்கும் சிறுவன் எட்டிப்பார்க்கும் அத்தகைய தருணங்களை அவள் தவறவிட்டதே இல்லை. 

பெரியகுட்டம் கிராமத்தை வளர்மதி ஒரு முறைகூட நேரில் பார்த்ததில்லை. ஆனால் தனசேகர் சொன்ன கதைகள் மூலமாக ஒரு அழகிய சித்திரத்தையே மனதிற்குள் வரைந்து வைத்திருந்தாள். அதற்கு மாறாக, முதல் முறை நாள் தள்ளிப்போய் தான் கருவுற்றிருப்பதாய் அவள் நம்பத் துவங்கிய அன்று இரவு அந்த ஊரைப் பற்றிய மங்கலதானதொரு சித்திரம் அவள் கனவில் வந்தது. அக்கனவின் தன்மை இன்னதென்று பிரித்தறிய முடியாமல் பதறிப்போய் வியர்த்து விறுவிறுத்து எழுந்து அமர்ந்தாள். பின் நான்காவது மாதத்தில் மீண்டும் அத்தகைய துர்கனவினவினூடாகவே அடிவயிற்று வலியோடு பாவாடை முழுதும் உதிரம் கசிய கரு கலைந்து நழுவுவதை உணர்ந்தாள். அதன் பின் அத்தகைய கனவுகள் வராமல் இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள், இருபது நாட்கள் தள்ளிப்போவதும், சோதித்துப் பார்க்கும்போது கர்ப்பமில்லை என்பதும் தொடர்கதையாகியது. பின், பிசிஓடிக்காக மாத்திரைகள் எடுக்கத் துவங்கியதும், ஒவ்வொரு மாதமும் சரியான நாளில் தீட்டானது. ஆனால், மாத்திரையின் விளைவா அல்லது அவளின் மனப்பதற்றமா தெரியவில்லை, தீட்டாவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வயிற்று வலியின் அறிகுறிகள் தெரியும் போதே, எரிச்சலும் தூக்கமின்மையும் அவளை ஆட்டிப் படைக்கத் துவங்கின. அப்படியும் பின்னிரவில் சோர்வினால் கண்ணயர்ந்ததும், அந்த ஊர் பற்றிய துர்கனவுகள் அவளைச் சூழந்துகொள்ளும். அந்த மனப்போராட்டத்திலிருந்து வெளிவரவும் முடியாமல், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போன்ற மனநிலையிலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு முறை டாக்டரிடம் கேட்டபோது, பீரியட்ஸை சீராக்க, பக்கவிளைவுகளாய் வரும் அத்தகைய வேதனைகளைக் கடந்துதான் ஆக வேண்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்ட பின், டாக்டரின் அறிவுரைப்படி மாத்திரையை நிறுத்திய அடுத்த மாதமே மீண்டும் கரு உண்டானது. மாத்திரைகளின் பக்கவிளைவுகளில் இருந்து விடுதலை, அதோடு கரு உருவாகியிருந்தது என்ற இரட்டை மகிழ்ச்சியில் அவள் மனம் அமைதியடைந்தது. அதிலிர்ந்து கடந்த எட்டரை மாதங்களும் முகத்தெளிச்சியும், அமைதியும் கூட, கெட்ட கனவுகளின் அறிகுறிகள் எதுவுமின்றி நிம்மதியாகத் தூங்கி எழுந்தாள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க மீண்டும் ஊர் பற்றிய கொடுங்கனவுகள் தினமும் வந்து அவள் தூக்கத்தையும் மனநிம்மதியையும் கெடுத்தது.

மாலை வேலை முடிந்து தனசேகர் வீட்டிற்கு வரும்போது, வளர்மதியின் நெற்றி நிறைய மஞ்சள் காப்பும், குங்குமமும் இருந்ததைப் பார்த்து, ’எங்கெயாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தியா?’ என்றான். ’சாயங்காலமா ஓனரம்மா வந்தாங்க. நான் சோர்ந்து போயிருக்கதைப் பார்த்து, என்ன ஏதுன்னு கேட்டாங்க. நான் கண்ட கனவாப் பத்தி சொன்னேன். குலதெய்வத்துக்கு ஏதாச்சும் குறையிருக்கும். அதான் பூர்வீக ஊரை அடையாளம் காட்டுதுனு சொன்னாங்க’  என்றாள். அதை கவனித்தும் கவனியாதவன் போல, காக்கி சட்டையைக் கழட்டி கொடியில் போட்டுவிட்டு, கைலிக்கு மாறியபடி, ‘காபி போடு” என்றான். அமர்ந்திருந்தவள் வலது கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தாள். அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அவன் வாங்கி வந்திருந்த பொட்டலத்தில் இருந்து ஒரு தேய்ங்காய் போளியையும், தூள் வெங்காய பஜ்ஜியையும் ஒரு தட்டில் வைத்து, வாசலில் முகம் கழுவிவிட்டு வந்தவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கியபடி, அடுத்து என்ன என்பது போல லேசாகச் செருமினான். அதற்காகவே காத்திருந்தவள் போல, ’ஏங்க, ஒரு தாட்டி நம்ம குலசாமி கோயிலுக்கு போய்ட்டு வருவோமா?’ என்று மெதுவாகக் கேட்டாள். அவன் என்ன நினைத்தான் என்று அவனது முகக்குறிப்பில் அவளால் உணர முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள். அவன் இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு, ‘பார்ப்போம்” என்று மட்டும் கூறினான்.

தன் ஆயுள் முழுதும் செக்கில் சுற்றி மொளி தேய்ந்து இறந்துபோன காளையின் காற்குளம்பு எலும்பில் ஏற்றி வைத்த பந்தம் அணையப் போவது போல மாடத்தில் படபடத்து எரிந்தபடி இருந்தது. வாசல் திண்ணையில் புரண்டு படுத்திருந்த பிறழ்மனம் கொண்ட பதின்ம வயதினன் ஒருவன், இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை தன் கால்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியால் விரட்டியடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் முன்முற்றத்தின் நடுவே வாழை இலையில் குவித்து வைத்திருந்த அவித்த மொச்சைப் பயிறு படையலைச் சுற்றி ஒப்பாரிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. படையலுக்கு உரியவனான மூப்பன் வீட்டுக்கு வெளியே முச்சந்தியில், குத்துக்காலிட்டு அமர்ந்து கன்னத்தில் கைவைத்தபடி, மையிருட்டில் தனக்கு முன்னிருக்கும் கொட்டாங்குச்சி நீரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பளிங்கைக் கண்களாய்க் கொண்ட ஊர்க்காவல் நாய்கள் மூப்பனுக்குச் சற்றி தள்ளி நின்றபடி, இடைவிடாமல் ஊளையிட்டபடி இருந்தன. அந்த நாய்களின் ஓலம் வளர்மதியின் செவிப்பறைகளுக்குள் விடாமல் ஒலித்தபடி அவளை எங்கோ துரத்திக்கொண்டே இருந்தது.

பதறியடித்து எழுந்தவளின் அலறல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த தனசேகரையும் அச்சம்கொண்டு எழச் செய்தது. வேகமாக எழுந்தவன், அவள் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீர் செம்பை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒரு மடக்கு குடித்தவள், மீண்டும் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவளுக்குப் பின்புறம் அமர்ந்திருந்தவன் மெதுவாக அவளது முதுகைத் தடவிக் கொடுத்தான். அவள் உடல் படபடத்து நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. அவள் பயம் போக்க, ஊருக்குச் சென்று குலசாமியைக் கும்பிட்டு வர வேண்டும் என்று தீர்மானித்தான்.

மதுரையிலிருந்து கமுதி செல்லும் பேருந்தில் நல்லூர் விலக்கில் இருங்கி அங்கிருந்து மூன்று மைல்தூரம் ஓடைப்பாதையில் நடந்து தனது பெரியகுட்டம் கிராமத்திற்குச் சென்றது அவனக்கு நினைவிருந்தது. இப்போது கமுதி வரை சென்று அங்கிருந்து ஏதேனும் ஆட்டோ பிடிக்கலாம் என்று எண்ணியவனுக்கு, பேருந்து நடத்துநர் நல்லூர் விலக்கிலிருந்தே பெரியகுட்டத்திற்கு ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன என்ற கூறிய தகவல் வியப்பாக இருந்தது. ஆளரவமற்று அழிந்த ஊரில் யாருக்காக ஆட்டோக்கள் ஓடுகின்றன என்ற கேள்வியும் அவனது குழப்பத்தை அதிகரித்தன.

முன்னொரு காலத்தில், விதையில்லா பயிர்களை விளைவிக்கத் துவங்கிய நாளில்தான் அந்த ஊரின் அழிவுக்கான விதை விழுந்தது என்று சொன்ன குருவிக்காரனை குடியானவர்கள் எல்லாம் சேர்ந்து கல்லால் அடித்துத் துரத்தியதாகவும், இரத்தக் காயங்களுடன் அவன் அந்த ஊரை விட்டுச் செல்லும் பொழுது அந்த ஊரிலிருந்த குருவிகள் உட்பட அனைத்து பறவைகளும் அவனுடன் சென்று விட்டதாகவும், அப்போது அவன் காகங்களை மட்டும் ஊரிலிருக்கச் சொல்லி கட்டளையிட்டதால், கோபத்தில் அவை தினமும் விடிகாலையில் ஊரிலுள்ள குடியானவர்களை சபித்துக் கொண்டிருப்பதாகவும் தனசேகரின் தந்தை சொன்ன கதை ஏனோ அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஊர் பற்றிய தந்தையின் கதைகளோடு அவனும், அவன் அருகில் பதற்றமும் கவலையும் சூழ்ந்தவளாக வளர்மதியும் பேருந்தில் பயணித்தனர்.

தற்காலிக பஞ்சத்தைத் தீர்க்க, உலங்கூர்தியில் மூலம் ஊரெங்கும் கருவேல விதைகளைத் தூவ அரசாங்கம் உத்தரவிட்ட நாளில் தாங்கள் பருத்தி போட்ட காடெல்லாம் பாழாய்ப்போனது என்ற தனது தந்தையின் ஓலம் தனசேகரின் மனதில் இப்போது ஒலித்தது. கருவேலமரங்கள் காற்றெங்குமிருந்த ஈரப்பதத்தை உறிஞ்சி வளர்ந்து, பின் தமது தண்டையும், தூரையும் கரிமூட்டமாகி ஊர் முழுவதையும் சுடுகாடாக்கிவிட்டு மூட்டை மூட்டையாய் சுமையூர்திகளில் சவ ஊர்வலம் போன கதைகளையும், இனி அங்கு நமக்கு வேலையில்லை என்று பதறித் திசைமாறிச் சென்ற கருமேகங்களை சமாதானம் செய்து அழைத்துவந்து மழை பெறவைக்கவும், தரிசாகிப் போன நிலங்கள மீட்கவும் வழியில்லாமல், அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்து பசியாற்றப் பழகியிருந்த தனது தலைமுறைக் கதைகளை நினைத்தபடியே அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்து கண்ணயர்ந்தபடி வந்தாள் வளர்மதி.

நல்லூர் விலக்கில் அவர்கள் இறங்கும்போது அநேகமாக பேருந்தில் பாதி காலியாகி அவர்களுடன் இறங்கியது. தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களைப் போல இருந்தவர்கள் அங்கிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஏறினர். தனசேகர் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் சந்தேகத்தோடு, பெரியகுட்டம் என்று இழுக்க, அவர் ‘ஏறுங்க, எல்லாரும் அங்க தான். ஆளுக்கு பத்து ரூபாய்’ என்று வண்டியைக் கிளப்பினார். பிள்ளைத்தாச்சிக்கு கொஞ்சம் இடம்விட்டு மற்ற பெண்கள் ஆட்டோவை நிறைத்தனர். ஓட்டுநருக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த தனசேகர், ‘பெரியகுட்டத்துல ஏதேனும் வேலை நடக்குதா?’ என்பது போல ஓட்டுநரிடம் மெதுவாய்க் கேட்டான்.
‘என்ன தம்பி வேலைனு சாதாரணமா கேட்டுப்புட்டீங்க. சுத்துவட்டாரமே எவ்ளோ பரபரப்பா ஓடிட்டு இருக்கு. ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க’
‘இல்லண்ணே, நமக்கு சொந்த ஊர் பெரியகுட்டம் தான். ஊருப்பக்கம் வந்து வருஷக்கணக்காச்சு. குலசாமியக் கும்பிட்டுப் போகலாம்னு இப்போதான் வாறோம்’.
‘பெரியகுட்டம் ஊருல மக்க நடமாட்டம் இல்லாம இருந்தது உண்மைதான். ஒரு ஆறுமாசம் முந்தி வடநாட்டு சேட்டு ஆளுங்க ஏக்கர் கணக்குல சுத்துவட்டாரத்து நிலங்களை விலை பேசி வாங்குனாங்க. அத்துவானக் காட்டுக்குள்ள, மானம் பார்த்த பூமியா கிடக்குற தரிசு நிலத்தை ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்குறானுக கிறுக்குப் பயலுகன்னு, ஊரக் காலி பண்ணிட்டு எங்கெங்கோ போய் செட்டிலானவுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வந்து பத்திரம் முடிச்சுக் கொடுத்தாங்களே. ஊரக் கெட்டிப் புடிச்சுட்டுக் கெடுக்குற கொஞ்சம் குடியானவங்க தான் பாக்கி. உங்களுக்கு அது பத்தி எதுவும் தெரியாதா?”
“இல்லண்ணே, நாங்க ஊரை விட்டுப் போனதும், நிலம் நீச்சு எல்லாத்தையும் பங்காளிங்க பராமரிப்புல விட்டுவிட்டு வந்துட்டார் அப்பா. அதுக்கப்புறம் நான் வந்து போய் இருக்கல. ஊர்க்காரவுங்க யாரு கூடயும் அவ்ளோ நெருக்கத்துல இல்லை. சரி, வடக்கத்தி சேட்டுக எதும் தொழிற்சாலை கட்றானுகளா… பரவால்ல, ஊரு முன்னேறுனா நல்லதுதான்.”
“மயித்துல முன்னேத்துவானுக. எரநூறு வருஷத்துக்கு முந்தி இந்த பகுதி முழுக்க பாம்பாறுன்னு ஒரு பெரிய ஆறு ஓடுன படுகை தம்பி. சுமார் நூறு அடிக்குக் கீழே பெரியகுட்டம் முழுக்க நஞ்சை, புஞ்சை, கரட்டுக்காடு, கருவக்காடு எல்லா இடத்துலயும் சுத்தமா சலிச்ச தங்கம் போல ஆத்து மணல் அடுக்கடுக்கா கொட்டிக் கிடந்திருக்கு. இன்னிக்கு நெலமைக்கு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சொத்து. அதை வடக்கத்தியானுக எப்படியோ மோப்பம் பிடிச்சு உள்ள வர்றானுக. நம்ம ஆளுகளும் வெவரம் தெரியாம, தண்ணி இல்லாத காட்டை வச்சு என்ன பண்ணன்னு வந்த வெலைக்கு வித்துட்டுப் போறாங்க.”

பேசிக் கொண்டே ஆட்டோ ஓட்டி வந்தவர், பெரியகுட்டம் கிராமத்தின் எச்சமாய் இருந்த சிதிலமடைந்த வீடுகளைக் கடந்து, கிழக்குப் பக்கம் வரண்டு போயிருந்த ஊரணியைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தினார். முன்னும் பின்னுமாக பத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் வந்து நின்றன. ஆண்களும் பெண்களுமாக அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கிழக்குப் பக்கமாக நடக்கத் துவங்கினர். ஊரணியைத் தாண்டி ரெண்டு பர்லாங்கு பருத்திக் காடுகளின் வழியே சென்றால் தென்திசை ஓரத்தில் பாம்பாளம்மாள் கோவில் வரும் என்று தனசேகருக்கு நினைவிருந்தது. ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘ஒரு அரை மணி நேரம் காத்திருக்க முடியுமாண்ணே. போய் சாமி கும்பிட்டுட்டு இதே ஆட்டோல விலக்கு வரை வந்துருவோம்’ என்றான். அவர் ’சரி காத்திருக்கிறேன்’ என்றதும் தனசேகரைத் தொடர்ந்து, வளர்மதியும் மெதுவாக ஆட்டோவில் இருந்து இறங்கினாள். சாமி கும்பிட இங்கே எதுவும் கிடைக்காது என்பதால் மதுரையிலிருந்தே தேங்காய், பழம், சூடம் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள். அவளிடமிருந்த கட்டைப் பையை வாங்கியவன், சற்று தூரம் நடந்தனர். கோவில் திசையை உத்தேசித்துத் திரும்பியவன் விநோதமான காட்சிகள் தெரிந்தன.

அங்கே பருத்திக் காடுகள் இருந்த எந்த அடையாளமும் இன்றி, ஏக்கர் கணக்கில் சுமார் நூற்றைம்பது அடிக்குக் குறைவில்லாத ராட்சச பள்ளத்தாக்குகளும், அவற்றைச் சுற்றி நீண்ட ஓடுபாதைகளின் மீது லாரிகள் செல்லும் பாதைகளுமாக மிகப் பெரிய மணல் குவாரியைப் போல அந்த சுற்றுவட்டாரமே காட்சியளித்தன. பத்துப் பதினைந்து ராட்சச கிரேன்களும், ஜே.சி.பி கனரக ஊர்திகளும் நடுவில் அலைந்தபடி இருக்க, சுற்றி நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நின்றிருந்தன. மிகப்பெரிய இயந்திரக் கைகள் பள்ளத்தாக்குகளில் பொதிந்து பரவிக் கிடக்கும் பொன்னிற ஆற்று மணலை அள்ளி அள்ளி, வரிசையாக நின்றிருந்த லாரிகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. 

பருத்திக் காடுகளின் இடையே தென்திசையோரமாய் இருந்த ஒற்றைக் குத்துக்கல் தான் தனசேகரின் குலதெய்வமான பாம்பாளம்பாள் கோவில். இப்போது திசைகெட்டு திணை கெட்டுக் கிடக்கும் அந்தப் பள்ளத்தாக்குகளையும் ஓடுபாதைகளையும் பார்க்க, தனசேகருக்குத் தன் ஈரல்குலையை யாரோ ரம்பம் கொண்டு அறுப்பது போலிருந்தது. அவன் அப்படியே பிரமை பிடித்தவனைப் போல நிற்க, அந்நிலக் காட்சிகளைப் பார்த்த வளர்மதியின் கண்களில் இன்னெதென்று தெரியாமல் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கேவியழும் தேம்பலை உணர்ந்த தனசேகர் சுயநினைவுக்கு வந்தவனாய் அவளைத் தேற்றுவது போலத் தோளோடு அணைத்தான். அவனது இடக்கையில் இருந்த கட்டைப்பையின் பாரம் இன்னும் இன்னும் அழுத்தத் துவங்கியது. மணல் குவாரிக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவர்களைக் கடந்து நடந்துகொண்டிருந்தார்கள். தான் வாழ வந்த குடும்பத்தின் மூதாதையர்களின் உடல் பொருள் அனைத்துமாக அவர்களுக்குப் பசியாற்றிய விளைநிலங்களின் அடிமடியை அறுத்து அவை குடல் சரியக் கிடக்கும் இந்நிலையைக் காணத்தான் இத்தனை வருடங்கள் கழித்து பாம்பாளம்பாள் தன்னை இங்கே அழைத்தாளா என்றூ விசும்பியபடி இருந்தாள் வளர்மதி. 

குனிந்த தலை நிமிராமல், திரும்பிய இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள வார்த்தைகள் அனைத்தும் தூர்ந்துபோனதாய்த் தோன்றியது. செல்லும் முன், குலசாமிக்கென தாங்கள் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அரூபமாய் பாம்பாளம்பாள் அங்கே தான் எங்கேயோ குடிகொண்டிருக்க வேண்டும் என்று தனது மனதை ஆற்றுப்படுத்திய வளர்மதி, தென்கிழக்கு திசையை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நின்ற இடத்திலேயே தேங்காயை உடைத்து, வழிந்த நீரை நிலத்துக்கு விளாவி, குனிந்து சூடம் பாக்கெட் மொத்தத்தையும் அங்கேயே குவித்துப் பொருத்தி கண்களின் ஒற்றிவிட்டு, அந்த மண்ணை எடுத்து நிலக்காப்பாய் நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் பூசிக்கொண்டாள். நிலக்காப்பை அடி வயிற்றில் பூசுகையில் பனிக்குடம் நிறைந்து தளும்புவதை, அது உடைந்து ஒரு புதிய உயிர் ஜனிக்கும் தருணம் சமீபிப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. அவளைத் தொடர்ந்து தனசேகரும் சூடத்தைத் தொட்டு கும்பிட, இருவரும் சற்று தூரத்தில் காத்திருக்கும் ஆட்டோவை நோக்கி நடக்கத் துவங்கினர்.

ஆட்டோவை நெருங்கும் போது, குவாரி பக்கமிருந்து கூச்சலும் குழப்பமுமாய் பெருங்குரலெடுத்தபடி ஆண்களும் பெண்களும் வேகமாக ஓடி வந்தனர். இவர்களைக் கடந்து செல்பவர்களை என்ன என்பது போல இவர்கள் பார்க்க, அடுத்து வந்த ஒரு நடுத்தர வயது பெண், “நிலமும் பொம்பளதானே. அவ அடிமடி வரை குதறி எடுத்தா சும்மா இருப்பாளா. மொத்தமா பொங்கிட்டா. நூறு அடிக்கு மேல தோண்டுன அத்தனை பள்ளத்துலயும் ஆயிரக்கணக்குல ஊத்துக்கண் ஒரே நேரத்துல திறந்து நாலு, எட்டு, பதினாறு திசைகள்லயும் மடை வெள்ளமா பீச்சி அடிக்குறா. உள்ள நின்னு மண்ண அள்ளுன ஆளு, அம்பு, சேனை, மெசினு, வண்டி, லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் முக்கி ஏப்பம் விட்டுட்டா. குவாரி முழுக்க வெள்ளக்காடு. சீக்கிரம் வண்டியைக் கிளப்பிட்டு நீங்களும் வெளியேறுங்க.” என்றபடி ஆவேசமாகக் கத்தியபடி அந்தப் பெண் ஓடினாள். இவர்கள் அவள் சொல்வது இன்னதென்று புரிந்து விளங்கிக் கொள்வதற்குள் கிழக்குப் பக்கமிருந்து குவாரித் தடுப்புகளைப் ஊடாக முதலில் ஊர்ந்தும், சற்று நேரத்திற்கெல்லாம் பெருகி ஓடிவந்த ஊற்றுத் தண்ணீர் கீழே பூஜை செய்துவிட்டு மண்ணில் வைத்திருந்த தேய்ங்காய் முடிகளை சுழற்றி அடித்து அள்ளிக்கொண்டு, இவர்களின் கால்களைத் தழுவியபடி ஊரணியை நோக்கி பெருக்கெடுத்து ஓடியது.

****** 
நன்றி: கனலி http://kanali.in/kurivakal-thirumbum-kaalam/

No comments:

Post a Comment