சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக வாழ்ந்திருக்கும் “மாற்றானைக்” காணும் வாய்ப்பு கிட்டியது. சரி, “கழுத, நாமும் ஒரு விமர்சனத்தைப் போடுவோமேனு பார்த்தா” ஒரு விஷயமும் தோணல. சரி ஏன் மாற்றான் என்ற பெயர் எனறு யோசித்துப் பார்த்தேன். அதிலேயே ஒரு நுட்பமான செய்தி ஒளிந்திருப்பது கண்டு வியந்தேன். மரபணுவில் மாற்றம் செய்து பிறந்ததால் வந்த பெயர்க்காரணம் தான் மாற்றான். அப்படியும் “மாற்றான்கள்” என்று வந்திருக்க வேண்டுமே என்றால் சூர்யாவின் விஞ்ஞானி அப்பா எதிர்பார்த்தது ஒரு சூர்யாவைத் தான். இயக்குநனரும் அதை நம்பி “மாற்றான்” என்று பெயர் ரிஜிஸ்டர் செய்து விட்டார். ஆனால் இரட்டையராய் பிறந்து “ஃபிளாப்” ஆக்கிவிட்டனர், படத்தையா என்று தெரியவில்லை, ஆனால் இயக்குநர் சொன்னது அப்பா சயிண்டிஸ்டின் திட்டத்தை மட்டும் தான் என நம்புகிறேன். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சூர்யா அப்பாவிற்கே தான் ஒரு விஞ்ஞானி என்று இடைவேளி வரை தெரியவில்லை. பிறகு ஒருவாறு வெள்ளைக் கோட்டை மாட்டிக் கொண்டு ஆராய்ச்சி செய்து சமாளித்து விடுகிறார்.
படம் முழுக்க டிவிஸ்ட்டோ, டிவிஸ்ட்டு தான். ஆனால் முதல் ரீலில் டெரர் லுக்குடன் வில்லி போன்று ஒரு வெள்ளைக்கார ஆண்ட்டியை டைட் கிளோசப்பில் காட்டும் போதே நான் பக்கத்து சீட்டைப் பிராண்டிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டேன். “இந்த ஆண்ட்டி நல்லவஙகளாத்தான் இருப்பாங்க, பாருங்களேன்”. பின்னர் நான் சொன்னது பலித்தவுடன் அவர் என்னை ஆச்சர்யமாய் பார்க்க, ”அந்த ஆண்ட்டியைப் பார்த்தால் ”டபிள்யூ.டபிள்யூ.எஃப்” டீவி ஷோவில் வரும் ஆயா போலவே இருந்தாங்க. அவுங்க நல்லவங்கன்னா, இவங்களும் நல்லவங்களாத்தான் இருக்கனும்” என்று லாஜிக்காக மடக்கினேன். சரி படத்தில் லாஜிக் இல்லை என்பதற்காக நானும் லாஜிக் இல்லாமல் பேச முடியுமா என்ன!
ஒரு காட்சியில் சும்மா ஒரு கிரிப்புக்காக காஜலின் இடுப்பைப் பிடிக்கும் சூர்யா, அவர் வழக்கமாய் படம் முழுதும் காட்டும் ஒரே ரியாக்ஷனனான “சாணியை மிதித்தது போன்ற கண்களின் அகலவிரிப்பையும், உதடு நெளிப்பையும்” வெளிப்படுத்தவும், சரி இது வேலைக்காகாது என்று தன் சகோதரனை அணைப்பது போன்று சீன் போடுகிறார். செண்டிமெண்டுக்கு மடங்காத தமிழ் ஹீரோயின் எந்த படத்திலும் இல்லை என்ற விதிக்கேற்ப காஜலும் லைட்டா வழிக்கு வருகிறார். ஆனால் அப்போது கூட முழு சம்மதம் தெரிவிக்காதவர், சூர்யா ஒரு ரஷ்ய ஆண்ட்டியுடன் டான்ஸ் ஆடும் போது, “ஜெலசி” அதிகமாகி “ஜாயின்” ஆகிவிடுகிறார். ஆயிரந்தான் பல நூறு மொழிகள் பயின்று சுவிஷேச கூட்டங்களில் பிரசங்கம் செய்தாலும் அவளும் ஒரு பெண் தானே !
பிறகு, புது பாஸ்போர்ட் கிடைத்த உற்சாகத்தில் சூர்யா வெளிநாடு சுற்றுப் பயணம் கிளம்ப, கூடவே காஜலும் கைடாக கிளம்புகிறார். அங்கே புரட்சியாளர் லெனினின் ஒன்று விட்ட வகையறாவைச் சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிள் கோல்ட் மெடல் வாங்கிய விளையாட்டு வீரர்களை எல்லாம் டாய்லெட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஹாலில் அடைத்து வைத்திருக்கிறார். அங்கு உள்ள அனைவரும் சேது பார்ட் 2 வில் நடிக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டாய்லட் செல்ல வரும் சூர்யா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, அவர்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கிறார். பின்னர் ஈஸ்ட்மென் கலர் மாதிரியான சித்திரத்தில் அவர்களின் சாதனைகளை நினைத்துப் பார்க்கிறார். அதே எஃபெக்டில் பின்னர் தன் அப்பாவிடம் “அத்த்த்த்தனையும் நடிப்ப்ப்ப்ப்பா?” என்று கேட்டு கண்கலங்குகிறார். இதைத்தான் விமர்சகர்கள் “உலக நடிப்புடா சாமி” என்று கூறுகிறார்கள்.
ஆனால் சூர்யாவுக்கு அநியாயத்துக்கு “மாஸ் மர்டரை” தடுத்து நிறுத்தும் அஸைன்மெண்டாக தான் வந்து வாய்க்கிறது. அவரும் ரஷ்யாவுக்குப் பக்கத்திலுள்ள உஸ்கா புஸ்கா என்று ஏதோவொரு நாட்டுக்குப் போய் பெல்லி டான்ஸ் எல்லாம் ஆடி, ராக்கெட் லான்ச்சருக்கெல்லாம் தப்பி, கடைசியில் குஜராத்தில் லேண்டாகி, “போதி தர்மர்” தவம் செய்த குகைக்குள் வசிக்கும் பெருச்சாளிகளுக்கு தீனி வைத்து விட்டு ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்குகிறார். ஆனால் அப்போது கூட அவர் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு கனவிலும் களங்கம் விளைவிக்க முற்படாதவராக இருக்கிறார். அதற்கு காரணம் இயக்குநர் ஆனந்த் சாரிடம் இருக்கும் கம்யூனிச சிந்தனை தான். நாடி நரம்பெல்லாம் கம்யூனிச வெறி ஊறிக் கிடக்கும் ஒருவரால் மட்டிமே இப்படி ஒரு திரைக்காவியத்தை எடுக்க முடியும் என்று நான் முழுமனதாக நம்புகிறேன். முதலில் கே.எஃப்.சி மூலம் உழைப்பாளர்களின் பசிப்பிணியைப் போக்குவதாகட்டும், பின்னர் “ரஷ்யர்கள் எல்லாம் பேசிக்கலி வெரி குட், பட் எங்களுக்கு திருட்டுத்தனம் சொல்லித்தந்தது எல்லாம் உங்க தமிழ்நாட்டு மாட்டு டாக்டர் தான்” என்று தாத்தா விஞ்ஞானி அப்ரூவர் ஆகி சூர்யாவுக்கு ஆராய்ச்சிக்கூடத்தின் கொல்லைப்புற ரகசிய வழியைக் காட்டி அனுப்பி வைப்பதாகட்டும் இயக்குநரின் சோஷியலிச வெறி கண்ணாபின்னாவென தலைவிரித்தாடுகிறது.
அப்புறம் இயக்குநரிடம் இருக்கும் கெமிஸ்ட்ரி செமயாக படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. “அயன்” படத்தில் கூகிள் செய்தே போதை மருந்தைக் கண்டுபிடித்து, டெல்லி கனேஷ் போன்ற உயர் அதிகாரியை வியக்க வைத்த ஆனந்த் சார் தான், இந்த படத்தில் தாத்தா விஞ்ஞானியின் உருவத்தில் நடித்திருக்கிறார் போல. ”எனர்ஜியான்” பாலை ஆராய்ச்சி செய்ய கம்ப்யூட்டருக்கு ஊசி போட்டு, “மேட்லாப்” அவுட்புட் கிராப் எல்லாம் பார்த்து ஒருவழியாய் பிரச்சனையைக் கண்டுபிடித்து, மாற்று மருந்துக்கான “பிராஜக்ட் ரிபோர்டையும்” கையோடு கொடுத்த்து விட்டு படம் கிளைமாக்ஸை நோக்கி நகருவதற்கு பெரும்பாடு பட்டிருக்கிறார் தாத்தா விஞ்ஞானி.
அப்புறம் சூர்யாவுக்கு பத்து அப்பா என்றொரு புத்தம் புதிய கான்செப்ட். அதிலும் உலக அறிவாளிகளாக தேர்ந்தெடுத்து கலந்து செய்த கலவை. எல்லாருமே பெயர் தெரியாத அப்பாட்டக்கர்களாக இருந்தால் ரசிகர்களுக்குப் புரியாது என்ற காரணத்தால், ரசிகக்கண்மணிகள் அறிந்த உலக விஞ்ஞானிகளான ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களின் பெயர்களை வைத்து வகுப்பெடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர்.
படக்குழுவுக்கு கடைசி வரை படத்தை சன் டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா, ஜெயா டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா என்று தெளிவில்லாமலே இருந்திருப்பார்கள் போல. போனால் போகுது என்று பொதுவாக டி.டி.பொதிகை சேனலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் சபாஷ் பெரும் இடங்களில் இதுவும் ஒன்று.
கே.வி.ஆனந்த் சார் ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய முந்தைய படங்களையே ஸ்பூஃப் செய்வார். இந்த முறை அவருக்கு எந்த கவலையுமில்லை. மாற்றானை ஸ்பூஃப் செய்தே இன்னும் ஒரு நான்கைந்து படங்கள் செய்யலாம். அப்படி செய்யும் போது இந்த பதிவிலுள்ள பாயிண்ட்டுகளையும் நோட் செய்ய வேண்டும். பதிவுக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும் செக் மட்டுமாவது கரெக்ட்டாக அனுப்பி வைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடைசி வரி பன்ச் டயலாக்கிற்கு தலைப்பை பார்த்துக் கொள்ளவும்.
கடைசி வரி பன்ச் டயலாக்கிற்கு தலைப்பை பார்த்துக் கொள்ளவும்.
:-)))) படம் பார்க்கவே வேண்டாம். ஆளை விடுங்கள்.
ReplyDelete