Tuesday, August 28, 2012

நெகிழ்த்தல் தேற்றம்


அன்று காலையிலிருந்து ஒரே மன அலைச்சல். செய்து முடிக்கவேண்டிய வேலை அடுக்கடுக்காய் சேர்ந்து கொண்டே வந்தது. மலை போல் வேலை குவியும் போது, அதை வகை வாரியாக பிரித்து ஒன்றொன்றாக செய்யத் துவங்குவதற்கு முதல் நாள் வரக்கூடிய நெருக்கடி. அப்படிப்பட்ட நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது முன்னனுபவம். எதைத் துவங்குவது என்ற குழப்பத்திலேயே எதையும் தொட மனம் வராது. கெடு நெருங்கக்கூடிய வேலையை துவங்கலாம் என்றால் அது கொஞ்சம் கடுப்படிக்ககூடியதாக இருக்கும், சரி விருப்பமானதை முதலில் துவங்கலாமென்றால் முக்கியமில்லாததற்கு முன்னுரிமை கொடுக்கிறோமே என்று நமக்குள்ளேயே ஒரு குற்றவுணர்ச்சி தோன்றி அதிலுள்ள ஈடுபாட்டையும் குறைத்து விடும். அப்போதெல்லாம் ஒரே வழி, கனினியை முறைத்துப் பார்த்துக் கொண்டு நாள் முழுவதும் கடுப்பாக அமர்ந்திருப்பது தான். 

செய்யக்கூடிய வேலைகளில் பெரும்பான்மை கணினி சார்ந்தவைகள் தாம். ஆனாலும் மூடி வைத்த மஞ்சள் பெட்டிகள் பக்கம் எலிக்குட்டியின் சுட்டி தவறியும் செல்ல மனம் இடம் தராது. இலக்கற்று எங்கெங்கோ செல்லும் இணைய மேச்சல். அதிலும் சலிப்புற்று ஃபேஸ்புக், ட்விட்டர், ஜி.பிளஸ் என்று மாறி மாறி சுழன்று கொண்டிருக்கும். அலுவல உபயோகம், சொந்தக் கணக்கு,  கருத்து சொல்லக்கூடிய முற்றொருமை ஒன்று, சும்மா வேடிக்கை பார்ப்பதற்கான கணக்கு ஒன்று என்று சுற்றி, சுற்றி, மாற்றி மாற்றி ஒன்றில் வெளியேறி இன்னொன்றில் நுழைந்து மீண்டும் மீண்டும் சுழன்று தலைக்குள் பூச்சி பறக்கத் துவங்கி விடும். முடிவில் பார்த்தால் மொத்தமே ஒரு பத்துக்குள்ளான தளங்களைத் தான் நாள் முழுவதும் திரும்பித் திரும்பி பார்த்திருக்கிறோம் என்ற நினைவு வந்து அதுவே பெரிய அயற்சியை உருவாக்கி விடும். 

பிறகு ஒருவழியாக அன்றைய தினத்து ஏய்ப்புகள் போதுமென்று அட்டையைத் தேய்த்து வெளியேறினால் மாநகரம் ஆவென்று வாயைப் பிளந்து காத்திருந்தது. அலுவலக குகைக்குள் சென்று விட்டால் நேரம், காலம் மட்டுமல்ல வெளியிலுள்ள சீதோசன நிலை கூட தெரியாது. பகலில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையோரமெங்கும் தண்ணீர் தேய்ங்கி இருந்தது. ஆனாலும் புழுக்கம் அதிகமாகவே இருந்தது. இருள் முழுதும் கவிந்திருந்தது. பகல் முழுவதும் குளிரூட்டப்பட்ட சிறைக்குள் இருந்து விட்டு வெளியே வந்ததால் உடம்பு உடனடியாக தன்னை நெகிழ்த்திக் கொள்ள முயற்சி செய்தது.  முதுகு, கைகள், மார்பு என எங்கும் வியர்வை சுரபி அடைபட்ட தோலின் துவாரங்களை திறக்க முயற்சிக்க உடம்பெங்கும் சுள்ளென்று குத்தியது. செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருந்தது.

ஒருவழியாய் இரண்டு பேருந்துகள் மாறி கசக்கித்துப்பிய சக்கையாக அறைக்குள் வந்து விழுந்த பிறகு தான் இரவு உணவுக்கு எதையும் வாங்கி வரவில்லை என உறைத்தது.  இனி மீண்டும் நான்கு அடுக்கு இறங்கிப் போய் சாப்பிட்டு விட்டு வர உடம்பிலும் மனதிலும் தெம்பு இல்லை என்று தோன்றியது. காலை ஏழு மணிக்குக் கிளம்பினால தான் ஒன்பதரை மணி அலுவலகத்திற்கு சிறிது தாமதத்துடனாவது செல்ல முடியும். காலை உணவு என்பது எப்போதும் நிகழ்ச்சி நிரலில் வரவே வராது. மதிய உணவு அலுவலகத்தில் கிடைத்து விடும், எனவே அதற்கான தேடலில்லை. இரவுக்குத்தான் நித்தம் ஒரு வழிவகை யோசிக்க வேண்டியிருக்கிறது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வருகிற நாப்பத்தேழு கிலோமீட்டர் தூரத்தில் எந்த கையேந்திபவன் இட்லிக்கு அரைத்த மாவிற்கான அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அங்கே தான் அன்றைக்கான பார்சல் கட்டப்படும். இன்று அதையும் தவரவிட்டு வந்தாகி விட்டது. அலமாரியைத் துலாவியதில் இரண்டு பாக்கெட் மில்க் பிக்கீஸ் கண்ணில்பட்டது. நினைவடுக்கினில் சென்ற ஜென்மத்தில் ஊரிலிருந்து கொண்டு வந்த ஊறுகாய் பாட்டிலும் நிழலாடியது. பெருமுயற்சிக்குப் பின் அதையும் தேடி எடுத்தால் முதலுக்கு மோசமில்லை. மேலுள்ள ஒரே ஒரு அடுக்கு தான் பூசனம் பிடித்திருந்தது. அதை நீக்கிவிட்டு பிஸ்கட்டுக்கு ஊறுகாய் தொட்டு அன்றைய இரவு உணவுக்கான கடமையை முடித்து விட்டேன்.

மறுநாள் செய்யவேண்டிய வேலைக்குக் குறிப்பெடுக்கலாம் என்று நினைத்து மடிக்கணினியைத் திறந்தேன். சாத்தான் மீண்டும் முழித்துக் கொண்டு விட்டது. டேட்டா கார்டை சொருகியது தான் தாமதம். சாத்தான் மேய்ச்சலுக்கு என்னையும் இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் சாத்தனைக் கட்டுப்படுத்தி வேலைக்குத் திருப்பி விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் சொல் பேச்சு கேளாமல் அது நேரத்தை விழுங்கிக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து மடிக்கணினியை மூடிய அடுத்த நிமிடம் மின்சாரம் நின்று விட்டது. வேகமாக அலைபேசியைத் தேடி எடுத்து மணி பார்த்தால் பத்து நாற்பத்தி மூன்று. வழக்கமாக சரியாக பதினோரு மணிக்குத் தான் மின்சாரம் நிற்கும். மீண்டும் நள்ளிரவு ஒரு மணிக்கு வரும் என்ற சமாதானத்தில் நானும் வியர்வை மழையில் தூங்கி விடுவேன். பிறகு மூன்று மணிக்கு நிற்கும் போதும்,  ஐந்து மணிக்கு வரும் போதும் முழிப்பு தட்டும். அதற்கொரு முக்கியத்துவம் தராமல் நான் தூங்கிக் கொண்டிருப்பேன். காலை ஏழு மணிக்கு மீண்டும் மின்சாரம் நிற்கும் போது நான் வாசல் கதவை சாத்திக் கொண்டிருப்பேன். இந்த ஒழுங்குமுறைக்கு பழகி தான் நாட்கள் சென்று கொண்டிருந்தது. என்றேனும், நிகழ்வில் எதிர்பாரா ஒழுங்கின்மை நேரும் போது ஒரு பதட்டம் வந்து விடுகிறது.  

அலைபேசியை தலைமாட்டுக்கு அருகில் வைத்துவிட்டு படுத்தால் தூக்கம் பிடிபடவே இல்லை. ஏதேதோ சிந்தனைகள். எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி செய்தி, ஒரே மாதிரி சண்டை, ஒரே மாதிரி ஊழல், ஒரே மாதிரி போராட்டம், நம்மை சுற்றி நடப்பவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்தது போலவும், ஆனாலும் அது நிகழ்வதையே எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவும் ஏதேதோ நம்மை சுற்றி சுற்றி மாய வலைப்பின்னல். எண்மயமாக்கப்பட்ட பின்னல். சுழியமாகவும், ஒன்றாகவும் மட்டுமே நிரம்பி நிற்கின்ற உலகம். உலகம் முழுக்க எண்கள், எண்கள், எண்கள் மட்டுமே. அர்த்தமில்லாத சுழியங்கள், அர்த்தமில்லாத ஒன்றுகள் இவற்றால் தழும்பித் தழும்பி சுழலும் உலகம்.

விழித்துப் பார்த்தால் எப்போது தூங்கினேன் என்று நினைவே வரவில்லை. பயங்கர தலைவலி. ஆனாலும் அந்த இரவு ஏதோ ஒரு பாடத்தை எனக்கு நடத்திச் சென்றது போலவே தோன்றியது. என்ன பாடம் என்று மீண்டும் மீண்டும் யோசிக்கத் துவங்கினேன். உலகத்தை சுருக்கி உள்ளங்கைக்குள் வைக்கிறேன் என்ற நினைப்பில், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன் என புரிய இரண்டு மூன்று நாட்கள் ஆகியது. அறையில் இணையத்துக்கு மூடுவிழா நடத்தினேன். மறுநாள் அலுவகலத்திலிருந்து அறைக்கு வரும் போது, நான் தங்கியிருக்கும் அடுக்ககத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு மாணவர் விடுதியிலிருந்து வரும் சிறுவர்களில் சத்தம் என்னை ஈர்த்தது. இத்தனை நாட்களும் இங்கு ஒரு விடுதி இருந்ததை எப்படி கவனிக்காமல் சென்றேன் என எனக்கே வியப்பாய் இருந்தது. வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளி அது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சிறுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கிப் படித்தனர். அடுத்து வந்த வார இறுதி நாள், பொழுதைக் கழிக்க நினைத்து அந்த விடுதியின் அருகில் சென்று எட்டிப்பார்த்தேன். உள்ளே சிறுவர்கள் பலவித விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். நானும் அப்படியே அவர்களை ரசித்துக் கொண்டே நின்று விட்டேன். 

சில நாட்களில் இது எனது வழக்கமான பழக்கமாகி விட, நாளடைவில் சிறுவர்களுடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. ஒரு நாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, விருப்பமுள்ள தன்னார்வலர்கள் சிலர் தங்களது விடுமுறை நாட்களில் விடுதிக்கு வந்து மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதாகத் தெரிவித்தனர். எனக்கும் ஆர்வம் வரவே, விடுதிக் காப்பாளரிடம் சென்று நானும் மாணவர்களுக்கு டியூசன் எடுக்க விரும்புவதாகக் கூறினேன். அவரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டு, நான் கணினி நிறுவனத்தில் வேலை செய்வதால் மாணவர்களுக்கு கணினி சொல்லித் தர வேண்டுமென விரும்பினார். நான் அதை மறுத்து, மாணவர்களுக்கு கணக்கு சொல்லித் தர விரும்புவதாகக் கூறினேன். அவரும் சரியென்று சொல்லி விட்டார்.

வாரயிறுதி நாட்களில் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சி முழுவீச்சில் சென்று கொண்டிருக்கிறது. நான் என்றோ உருப்போட்ட ஆர்.எஸ்.அகர்வாலும், சகுந்தலா தேவியும் இவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களாய் மாறியிருக்கின்றன. இப்போதும் என் கனவில் அவ்வப்போது எண்கள் வரத்தான் செய்கிறது. ஆனால் இவை வெற்று சுழியமும், ஒன்றுமாக இருப்பதில்லை. அடர்த்தியாக, பொருள் உள்ளதாக, தகைநேர்த்தி மிகுந்ததாக நிறைந்து இருக்கின்றது. உடலைப் போல தான் மனமும்,  தன் இயல்பிலிருந்து மாறினாலும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர தன்னைத் தானே நெகிழ்த்திக் கொள்ளவும் செய்கிறது.

************

6 comments:

  1. அருமை நண்பரே!! இயல்பாய் வருகின்றன சூழலுக்கு தக்கவாறு வார்த்தைகள்...தொடரட்டும்.

    ReplyDelete
  2. முயற்சி சிறக்க வாழ்த்துகள் அண்ணாச்சி :)

    ReplyDelete
  3. அடர்த்தியாக, பொருள் உள்ளதாக, தகைநேர்த்தி மிகுந்ததாக நிறைந்து இருக்கின்றது

    வாழ்த்துகள்1

    ReplyDelete
  4. அனைவருக்கும் மிக்க நன்றி !

    ReplyDelete
  5. மிக பிரமாதம்! அருமையான மனக்கோர்வை! மனம் நெகிழ்ந்ததற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. உங்களது அனைத்து படைப்புகளும் அருமை ..படித்த உடன் கிடைக்கும் நிறைவுக்கு அளவே இல்லை ..
    மிக்க நன்றி...

    ReplyDelete