Friday, April 24, 2026
ஏன் தொடர வேண்டும் திமுக அரசு?
Thursday, March 26, 2026
தன்நெஞ்சறிவது! - வைரமுத்து - ஞானபீடம் தொடர்பான கட்டுரை
தன்நெஞ்சறிவது!
பாலகுமார்
விஜயராமன்
---
கவிஞர்
வைரமுத்துவுக்கு 2025ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும்
இன்னும் சர்ச்சைகளும், விவாதங்களும் முடிந்தபாடில்லை. தமிழ்ச் சூழலில் வழக்கமாக எந்த
விருது அறிவிப்புக்குப் பின்னும் அத்தேர்வு குறித்த போதாமைகளும், அவநம்பிக்கைகளும்
எழுவது இயல்புதான் ஆனால் இம்முறை எதிர்ப்புகள் இவ்வளவு காத்திரமாக வெளிவருவதற்கு விருதாளர்
வைரமுத்து என்பதே முக்கியக் காரணம். முற்போக்காளர்கள், இடதுசாரிகள், நடுநிலையாளர்கள்,
அடிப்படைவாதிகள், வலதுசாரிகள், சங்கிகள், தீவிர இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டோரும்
வைரமுத்துவின் தேர்வை விமர்சிக்கிறார்கள். ஏனென்றால் வைரமுத்து அவர்களின் முந்தைய வரலாறு
அப்படி இருக்கிறது. ஞானபீடம் போன்ற இந்திய
அளவில் மிக உயரிய இலக்கிய அந்தஸ்து உள்ள விருதுக்கு வைரமுத்து தகதியானவர் இல்லை என்று
சொல்வதற்கு மூன்று வகையான காரணங்கள் காணக் கிடைக்கின்றன.
1.
வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் ஞானபீட விருதுக்கான தரத்தில் இல்லை. அவர் பெரும்பாலும்
கூட்டு உழைப்பைக் கோரும் திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லுநர். அவரது தனிப்பட்ட
கவிதைத் தொகுப்புகளும், புதினங்களும் மிகவும் மேம்போக்கானவை. அவற்றிற்கு இலக்கிய மதிப்பு
இல்லை.
2.
வைரமுத்து நேர்மையான முறையில் இவ்விருதைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் விருதுக்
குழுவினர்கள், பரிந்துரையாளர்கள், அதிகார மையத்திலிருப்போர், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள்
என அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தி, நீண்ட கால காய்நகர்த்தலின் தொடர்ச்சியாக இவ்விருதைக்
கைக்கொண்டிருக்கிறார்.
3.
வைரமுத்து #metoo தொடர்பாக பெண்கள் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். தார்மீக அடிப்படையில்
அவருக்கு இவ்விருதை வழங்கக் கூடாது.
முதல்
விஷயத்திற்கான விளக்கம் நேரடியானது. ஞானபீட விருது என்பது தீவிர இலக்கிய எழுத்துக்கான
விருது மட்டுமா? சாமானியர்களின் உணர்வுகளைத் தீண்டும் திரையிசை போன்ற மற்ற கலை வடிவங்களுக்கு
அதில் இடமில்லையா? இவற்றிற்கான பதில்: ஞானபீடம் பல்துறை வகைமைகளைச் சேர்ந்த கலை வடிவங்களை
உள்ளடக்கிய தேர்வாகவே இதுவரை இருந்திருக்கிறது. 2023ம் ஆண்டு உருது/இந்தி கவிஞர், திரைப்பட
பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போதும் சர்ச்சைகள் வெடித்தன.
குல்சாருக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை அங்கீகரிக்காத தீவிர இலக்கியவாதிகள் ஒருபுறமென்றால்,
குல்சாரோடு சேர்ந்து அவ்வருடம் ஞானபீட விருது பகிர்ந்தளிக்கப்பட்ட இன்னொரு நபர் குறித்தும்
சர்ச்சை எழுந்தது. 2023ம் ஆண்டு கவிஞர் குல்சார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்/ஆன்மீக
வழிகாட்டி/ பக்தி இலக்கிய குரு ராம்பத்ராச்சாரியா ஆகிய இருவருக்கு ஞானபீட விருது சேர்ந்தளிக்கப்படது.
குல்சார் போன்ற திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீட விருதை அளிப்பதா என்றும், குல்சார்
போன்ற தேர்ந்த கவிஞருக்கு ராம்பத்ராச்சாரியா போன்ற ஒரு மதத் தலைவரை இணை வைத்து விருது
கொடுத்து அவரை அவமானப்படுத்துவதா என்றும், ஞானபீட விருதை ராமர் கோயில் கட்டுவதற்காகத்
தொடர் பிரச்சாரம் செய்த ஒரு மதகுருவிற்கு அளிப்பதா என்றும் பல்முனைகளில் விமர்சனங்கள்
எழுந்தன. அதே போல, 1998ம் ஆண்டு புகழ்பெற்ற கன்னட நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் அவர்களுக்கு
ஞானபீட விருது வழங்கப்பட்டது. கன்னட இலக்கிய அடையாளம் என்பது தீவிர எழுத்து வடிவம்
மட்டுமல்ல அது நாடக அரங்கிலும் சமானமான உயிர்ப்புடன் இயங்கிறது என்பதை அவ்வருட விருது
அறிவிப்பு உணர்த்தியது. இன்னும் பின்னே போனால், 1972ல் தேசியவாதக் கவிஞரான ராம்தாரி
சிங் தினகருக்கு (இந்தி) வழங்கப்பட்ட விருது முக்கியமாக அவர் ஆற்றிய நாட்டுப்பற்று
மிக்க அரசியல் உரைகளுக்கானதே. இலக்கியம் என்பது தனிப்பட்ட வாசிப்பு இன்பம் மட்டுமல்ல,
அது வாய்மொழி மரபும்கூட என்ற செய்தியை அறிவிப்பதாக அமைந்தது. 1982ல் விருது பெற்ற கவிஞர்,
ஓவியர் மகாதேவி வர்மா (இந்தி) அவரது கவிதைகளைப் போலவே சமூக சீர்திருத்தத்திற்காகவும்,
பெண்கள் உரிமை மற்றும் கல்விக்காக அவர் கொடுத்த குரலுக்காகவும் போற்றப்பட்டவர்.
1996ல் விருது வென்ற மகஸ்வேதா தேவி (வங்கம்) தீரமிக்க மனித உரிமைப் போராளி மற்றும்
பத்திரிகையாளர். பொதுவெளியில் அவரது இலக்கியத்தைக் காட்டிலும் பழங்குடியினர் நல்வாழ்வு
மற்றும் கொத்தடிமைத் தொழிலுக்கெதிரான நேரடிச் சமூகச் செயல்பாடு வீரியமிக்கவை. இப்படி
பன்முக இலக்கிய, பண்பாட்டு வடிவங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது ஞானபீட விருது. ஆயிரக்கணக்கான
திரையிசைப் பாடல்களை, கவிதைகளை, சில புதினங்களை எழுதிய வைரமுத்துவும் செழுமையான மொழிப்பங்காற்றியிருக்கிறார்.
பல முறை தன் திரையிசைப் பாடல்கள்களுக்காக தேசிய அளவிலான அங்கீகாரமும், தனது “கள்ளிக்காட்டு
இதிகாசம்” நாவலுக்காக
2003ம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருதும் பெற்றிருக்கிறார். அவர் சாகித்ய அகாடெமி விருது
பெறும் போதும் சில சர்ச்சைகளை எதிர்கொண்டார். எனினும் இத்தகைய அவரது சாதனைகள், அவருக்கான
ஞானபீட விருதுத் தேர்வுக்கு பலமான அடித்தளம் அமைக்கின்றன.
இரண்டாவது
விஷயம், வைரமுத்து நேர்மையற்ற முறையில் மறைமுக அழுத்தங்கள் மற்றும் சிபாரிசுகள் மூலமே
ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படும் யூகம். இதனை வைரமுத்துவின் மீதான
வெற்றுக் காழ்ப்பு என்ற ஒற்றை வரியில் சுருக்கிவிடவும் முடியாது. தமிழின் தன்னிகற்ற
படைப்பாளி எனத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் வைரமுத்து, எப்போதும் ஆட்சியாளர்களின்
நன்மதிப்புப் பட்டியலில் இடம் பெறத் தவறியதே இல்லை. திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்பு
பாராட்டி அவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே வேளையில்
ஒன்றிய அரசுப் பிரதிநிதிகளுடனும் அமைச்சர்களுடனும் இணக்கத்தை வளர்க்கத் தவறியதும் இல்லை.
ஒன்றிய நிதியமைச்சரை “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தது போல இருக்கிறார்”
என்று
பாராட்டியது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு
சி்லை நிறுவ முன்னெடுக்கையில் வலியச் சென்று வாழ்த்தியது, முக்கியமாக, தற்போதைய பிரதம
மந்திரியின் இந்தி மொழி கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து
கலந்து கொண்டு அவரின் “கவிப்புலமை”யை
வானளாவப் புகழ்ந்து தள்ளியது இவையெல்லாம் பொதுப்பார்வையாளர்களுக்கு அவர் மீது அசூயையை
ஏற்படுத்தின. அவரது இத்தகைய செயல்கள் மூலம் அவர் எத்தகைய நேரடி, மறைமுகப் பலன்கள் பெற்றிருப்பார்
என்று தங்கள் யூகங்களை வளர்க்க அவரது நடவடிக்கைகள் துணைபோயின. ஞானபீடம் போன்ற உயரிய
விருதுகளுக்குத் தகுதியுடைய பலர் தேர்வுப் பரிசீலனையில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில்
ஆளுமை செலுத்துபவர்கள், முக்கிய படைப்பாளுமைகள் போன்றோரின் பரிந்துரைகள் முக்கியப்
பங்கு வகிக்கும் சூழ்நிலையில் வைரமுத்து அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பார்
என்ற சந்தேகத்தை, அவருக்கு ஞானபீட விருது அறிவித்திருக்கும் இவ்வேளையில் தங்கள் எதிர்ப்புக்கான
காரணமாக முன்வைக்கின்றனர். இச்சங்கிலியில் முக்கியமான இன்னொரு கண்ணி, தமிழில் இதற்கு
முன் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறுதிக் காலத்தில் இருக்கும்
போது, வைரமுத்து வலியச் சென்று அவரிடம் தனது சிறுகதைகள் குறித்து ஜெயகாந்தன் எழுதியது போல ஒரு பாராட்டுக் கடிதம்
எழுதி அவரது கையெழுத்தைப் பெற்றார் என்று ஜெயகாந்தன் அவர்களின் மகள் முன்வைத்த குற்றச்சாட்டு.
அதற்கு வைரமுத்து தரப்பில் இருந்து ஜெயகாந்தனின் ஒப்புதலின் பெயரிலேயே அந்தக் கடிதம்
தயாரிக்கப்பட்டது என்று மறுப்பு வந்தாலும், கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே தான்
இருக்கின்றன.
மூன்றாவது
விஷயம், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #metoo சர்ச்சை. பிரபலங்கள் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி தம்
அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் பணிந்து போக வேண்டிய இடத்தில் இருக்கும் எளியவர்களை பாலியல்
ரீதியாக சீண்டல்கள்/அத்துமீறல்கள் / துன்புறுத்தல்கள் செய்ததை சமூகத்தின் பார்வைக்கு
அம்பலப்படுத்தும் ஒரு பேரியக்கமாக உலகம் முழுவதும் வெடித்தெழுந்தது #metoo அதாவது
”நானும் பாதிக்கப்பட்டேன்”
எனும்
கையறு நிலையின் முழக்கம். 2017ம் ஆண்டு ஹாலிவுட்
தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்
வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதன் மூலம் அவர் வகித்துவந்த
துறை சார்ந்த பதவிகள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் #metoo ஒரு
இயக்கியமாகப் பரவியது. பின்னர் வெயின்ஸ்டீன்
மீதான குற்றங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனையும் கிடைத்தது.
அவர் தொடர்பான செய்திகளை ஆழமாகவும், விரிவாகவும்
பிரசுரித்ததற்காக, நியூ யார்க் டைம்ஸ் மற்றும் நியூ யார்க்கர் பத்திரிகைகளுக்கு
2018ம் ஆண்டு பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க “புலிட்சர் விருதும்”
வழங்கப்பட்டது.
ஆனால் #metoo பரவலாகியபின், ஆதாரப்பூர்வமாகவும் சட்டப்படியும் நிரூபிக்க வாய்ப்பில்லாத
/ விருப்பமில்லாத பாலியல் சீண்டல்களை, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்துவதன்
மூலம் குற்றம்சாட்டப்படும் பிரபலங்களின் சமூக மதிப்பைக் குலைக்கும் சிறிய ஆயுதமாக அது
பயன்படத் துவங்கியது. அதே சமயம், சட்டப்படியான அல்லது ஆதாரப்பூர்வமான இறுகியப் பிடிப்பு
இல்லாத காரணங்களினால் #metoo என்பது பிரபலங்களின் சமூக நன்மதிப்பைக் கெடுக்கும் வெறும்
அவதூறாக நீர்த்துப் போகும் வாய்ப்புகளும் பெருகின.
தமிழ்ச்
சூழலில், 2018ம் ஆண்டு வைரமுத்துவுக்கு எதிரான #metoo பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை
பிரபல பாடகி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முன்வைத்தனர். இன்று வரை அவை சட்டப்பூர்வமான
வழக்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகள்,
திரைத்துறையைத் தாண்டி சமூகத்திலும் அரசல் புரசலாக ஒரு வதந்தியைப் போலவே சுற்றியபடியே
இருக்கின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிராக புகாரளித்தவர்களுக்கு வாய்ப்புகள் இரகசியமாக
மறுக்கப்படுகின்றன. அதே போல வைரமுத்துவுடன் பணிபுரிந்த பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்
மௌனமாக அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். அவர் மீது குற்றம் சாட்டியவர்கள்
தொடர்ந்து பொதுவெளியில் அவரைப் பற்றி விமர்சித்தபடியே இருக்கின்றனர். ஆனால் இவையாவும்
தன் சட்டை நுனி தூசி என்பது போல, தட்டிவிட்டு வைரமுத்து தொடர் தனியிசைப் பாடல்கள் வெளியிட்டுக்
கொண்டே இருந்தார், பொதுநிகழ்வுகளில் வலிய தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றார், புத்தகங்கள்
எழுதி தன்னைவிடப் பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்ட வெளியீட்டு விழாக்கள் நடத்திக்
கொண்டே இருந்தார். தனது படைப்பாளுமை பற்றி
வாய்ப்புள்ள சந்தைகளில் எல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். இன்று
மதிப்புமிக்க ஞானபீட விருதையும் பெற்றிருக்கிறார். அதற்கு சமூகத்தின் மேன்மை மிக்க
பல ஆளுமைகள் தஙகள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அவர் புதிய சிறகுகளுடன் தான் இன்னும் உயரப்பறக்க
இவ்விருது சிறந்த உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று பேருவகை கொள்கிறார். அதே வேளையில்
அவர் மீது அபிமானம் கொண்டோர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிண்ணனியில் இருந்து வந்த
ஒருவர் ஞானபீடம் போன்ற உயரிய விருதினை பெறுவது பொறுக்காத மேட்டிமைக் குழுவின் சூழ்ச்சியே
அவர் மீதான இத்தகைய அவதூறுகள் என்கின்றனர்.
வைரமுத்து
ஞானபீட விருதுக்குத் தகுதியற்றவர் என்று நம்புபவர்கள் அவருக்கு அவ்விருது வழங்கியதை,
தங்களுக்குச் சரியென்று தோன்றும் தேற்றத்தை வைத்து எதிர்க்கிறார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட
ஊடகத் துறையில் செல்வாக்கு உள்ளோர் அவருக்கு எதிராகக் கட்டுரை எழுதுகின்றனர். சிலர்
விருதுக்குழுவுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுகின்றனர். எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள்,
வாசகர்கள் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள்.
இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், தங்களது தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டு, இவ்விருது
அவருக்குக் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும், அதனையும் மீற இந்த அசம்பாவிதம்
நடந்துவிட்டதால், தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறொரு விருதுக்கு, ஞானபீடத்திற்கு
மாற்று என்ற சாயத்தைப் பூசி கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கிறார்கள்.
தேரளத்தைச்
சேர்ந்த ஒ.என்.வி. பண்பாடுக் கழகம் சார்பாக பழம்பெரும் மலையாளக் கவிஞர் ஒ.என்.வி. குரூப்
நினைவாக வழங்கப்படும் இலக்கிய விருது 2021ம்
ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது. கவிஞர் ஒன்.என்.வி. குரூப் 2007ம்
ஆண்டு இதே ஞானபீட விருதை வென்றவர் என்பது இதில் இன்னொரு உபசெய்தி. #metoo தொர்பான சர்ச்சைகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மலையாளத் திரைத்
துறையினரின் எதிர்ப்பு காரணமாக விருதுக் குழுவினர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட
அவ்விருது குறித்த தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தனர். ஆனால் விருதுக்குழு
தன் மறுமுடிவை அறிவிக்கும் முன்பே, தான் அந்த விருதை ஏற்க மறுப்பதாகவும்/திருப்பித்
தருவதாகவும் விருதுத் தொகையான மூன்று லட்ச ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு
அளித்துவிடும்படியும் வைரமுத்து அவசரமாக ஒரு காணொளி அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு
முற்றுப் புள்ளி வைத்தார். அவரை அந்த முடிவு நோக்கி உந்தித் தள்ளியது எதுவாக வேண்டுமானாலும்
இருக்கலாம்.
தன்நெஞ்சே
தன்னைச் சுடும்"
--- பாலகுமார் விஜயராமன்
******
Tuesday, April 23, 2024
நோ சொல்லுங்க!
Saturday, March 9, 2024
கமல் - அரசியல்
Friday, January 19, 2024
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2024
Sunday, January 14, 2024
எங்கள் விஜயகாந்த்
கலைஞர் பல்கலைக்கழகம்
Monday, January 1, 2024
2023
Tuesday, August 8, 2023
வீரப்பன் வேட்டை
Sunday, July 30, 2023
வீரமே ஜெயம்
Monday, July 25, 2022
தவிட்டுக் குருவி
Thursday, July 21, 2022
அதிகாரம்!
Wednesday, June 29, 2022
தேர்வுகள் கடினமாக்கப்பட வேண்டுமா?
Thursday, May 5, 2022
தமிழ் விக்கி(பீடியா)
பயணிகள் கவனிக்கவும் - திரை அனுபவம்
Friday, March 18, 2022
கடைசி விவசாயி !
கடைசி விவசாயி !

தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.
சினிமா
பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும்
பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே
சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக்
கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று
சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம்,
விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச்
சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர்
வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான்
சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும்
முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி
பரிதவிப்பதும் மிக இயல்பு.
பணியாரத்தை சிணுக்கருக்கியால்
திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு,
”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம்
பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும்
பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே
பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை
எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள்
ரசிக்க வைத்தன.
ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி
மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும்
பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு
நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து
கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும்
போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில்
அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும்
சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய்,
பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.
படத்தில்
தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக்
கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு
நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது
ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக
நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும்
வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள்
செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு
விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக்
கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன்
அவர்களுக்கு வாழ்த்துகள்.
விவசாயம் என்பது புனிதம்
அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும்
கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும்,
நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும்
மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு
காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு
நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில்
ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு
பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார்.
எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.
விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை
தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!
(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)
Monday, March 8, 2021
ஹோமர் - அமேசான் #pentopublish4 (2021) போட்டிக்கான நாவல் - அறிமுகம்
”ஹோமர்” எனும் இந்நாவல் கூடு சேரும் ஒரு பறவையைப் பற்றிய நாவல். ஆனால் அது மட்டுமே அல்ல, மதுரையின் உள்ளூர் அரசியல், அதிலுள்ள போட்டி, அதனால் ஏற்படும் ஒரு கொலை, கொலையில் சம்பந்தப்படும் ஓர் இளைஞனின் தப்பிக்கும் பயணம், கொலையுண்டவரின் குடும்பம் என பல அடுக்குகளாக விரிகிறது நாவல். நாம் இதுவரை பார்க்காத ஒரு புதிய உலகின் வாழ்வையும் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நாவல். வாசிக்க சுவாரஸ்யமான திரில்லராகவும், அதே நேரம் தமிழ்ல் இதுவரை சொல்லாத ஒரு புதிய களத்தில் அழுத்தமான படைப்பாகவும் உருவாகியிருக்கிறது.
ஒரு பறவையின் வாழ்வுக்கும், மனிதனின் இருப்புக்குமான போராட்டத்தை இயல்பான மதுரைப் பேச்சு மொழியில் பேசும் ”ஹோமர்”, இதோ உங்கள் வாசிப்புக்காக.
இந்நாவல் அமேசான் #pentopublish4 போட்டியில் இருக்கிறது. நாவலை வாசியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அமேசானில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், ஆங்கிலத்தில் சிறு ரெவ்யூவும் எழுத மறக்காதீர்கள்.
Monday, November 18, 2019
சிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).
கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்?
மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல்.
ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு.
Thursday, October 17, 2019
தெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை
'வெக்கை' நாவல் ரொம்ப முன்னாடி வாசித்தது. கதைக்கரு மற்றும் கதையோட்டம் தவிர காட்சிவாரியான நிகழ்வுகள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட்டது. 'அசுரன்' அந்நாவலைத் தழுவியது என்றதும் நாவலை மறுபடி வாசிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தி ஒரு புதிய படமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். எனவே இது அசுரன் - வெக்கை பற்றிய ஒப்பீடு அல்ல.
படத்தின் முதல் பாதி காட்சிகள் முழுக்க லகானின் பிடி எங்குமே நழுவாமல், கச்சிதமாகக் கோர்க்கப்ப்பட்டிருக்கின்றன. தனுஷ் சிவசாமியின் குணவார்ப்புக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது அவரது தனித்தன்மையால் மெருகேற்றி இருக்கிறார். அவரது மூத்த மகனாக வரும் டிஜேய். அருணாசலமும் துடிப்பான ஓர் இளைஞனை இயல்பாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இடைவெளிக்குப் பிரகான முன்னிகழ்வு காட்சிகள், இளமையான தனுஷ், அதில் ஒரு சிறிய காதல், ஒரு பாடல் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் ஆட முடியும் என்ற நிலையில், மூல நாவலின் ஆன்மாவை சிதைக்காமல், வணிக எல்லை துருத்திக் கொண்டு தெரியாத வண்ணம் அழகாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
முதல் பாதியில் இயல்பாய் வந்திருந்த “மாஸ்” காட்சிகள், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கனமற்று செயற்கையாக இருந்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். திரைக்கதைக்கான முதல் வரைவில் (first draft) இருந்திருக்கக் கூடிய முதல் பாதிக் காட்சிகளைக் காட்டியிலும் பின்பு சேர்த்திருக்க வாய்ப்புள்ள இரண்டாம் பாதி காட்சிகள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது போலத் தோன்றியன.
இன்றைய இணைய உலகில், ஒரு படம் வருவதற்கு முன்பே, படத்தின் தொழில்நுட்பம், கதையின் அவுட்லைன் மற்றும் படத்தில் பணிபுரிபவர்களின் மனவோட்டம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு பார்வையாளனுக்கு இருக்கின்றன. வெற்றிமாறன் போன்ற நுண்கலைஞனின் படம் எனும் போது, படம் குறித்த தேடல் இன்னும் விரிவடையவே செய்யும். அப்படி ஏற்றிக்கொண்ட தகவல்கள், படத்தைப் பார்க்கும் போது குறுக்கிடுவதை தவிர்க்க முடிவதில்லை. அசுரன் வெளி வருவதற்கு முன்பான பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் தான், முதன்முறையாக இரண்டாம் குழுவை (second unit) வைத்து சில காட்சிகளை எடுத்திருப்பதாகவும், தான் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் இது எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.
படத்தில் பெயர் போடும் போது, இரண்டாம் குழுவின் இயக்குநர், படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகிய மணிமாறன் என்று கண்ணில்பட்டது. படம் முடிகையில் மணிமாறன் பெயர் நினைவிலாட, இது இரண்டு இயக்குநர்கள் இயக்கிய படங்களின் கலவையோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிடும் வழக்கம் கொண்ட தயாரிப்பாளர் தாணுவின் சிக்கன நடவடிக்கைகளால், நுணுக்கங்களுக்குள் (detailing) செல்லாமல், குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுக்க முடிந்த காட்சிகளை வைத்து, விடுபட்ட இடங்களை தூரக்காட்சி மற்றும் பின்னணி வசனங்கள் மூலமாகக் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. அதும்போக, நடிகர்களின் வாயசைவிற்கும், பின்னணி குரலுக்கும் ஏகப்பட்ட வசன மாற்றங்கள்.
எப்போதும் தேர்வுகளில் 98சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவன், ஏதேதோ நெருக்கடியினால் முழுதாய்ப் படிக்க நேரமில்லாமல் 80சதவீத மதிப்பெண் எடுத்தது போல இருந்தது ‘அசுரன்’. 80சதவீதம் என்பதும் மிகச் சிறந்த மதிப்பெண் என்ற எண்ணத்திலேயே இதைப் பதிவு செய்கிறேன். யோசித்துப் பார்த்தால், தயாரிப்பின் கால அளவு நீட்டம், அதற்குண்டான செலவுகள், கச்சிதத்தை நோக்கி மீண்டும் மீண்டும் மெனக்கெடுதல் ஆகியவற்றால், படம் நன்றாக இருந்தும் அதிகமாகும் தயாரிப்புச் செலவுகளால், வணிக ரீதியாக வெற்றியடைய முடியாமல் போவதைக் காட்டிலும், குறுகிய காலத்தில் நல்ல கதைகளை சீக்கிரமாக படமெடுத்து ஒரு ஸ்பார்க் தெறிக்கவிட்டு வணிகரீதியாகவும் வெற்றிப் படமாக ஆக்குவதே இன்றைக்குத் தேவை என்று தோன்றுகிறது. இத்தகைய படங்களின் வணிக வெற்றி மட்டுமே, தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வருவதற்கான உந்துசக்தி.
இந்த சிறு மனக்குறை கூட, வெற்றிமாறன் ஏற்கனவே நின்றிருக்கும் உயரம் காரணமாகவே. இதைத் தாண்டியும், ‘அசுரன்’ சிறந்த படம் தான். தனுஷ் இறுதிக் காட்சியில் சொல்லும், “படிப்பை மட்டும் தான் நம்மகிட்ட இருந்து புடுங்கிக்க முடியாது சிதம்பரம்” என்னும் வசனம் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே கருதுகிறேன். சமூக அடுக்கில் கீழே உள்ளவன், படித்து வந்தாலும் அந்தப் படிப்பு பயனற்றுப் போகிறது எனும் போது, அந்த வசனம் காலாவதியான ஒன்று என்ற கருத்தை இணையத்தில் பார்த்தேன். பாதாளத்தில் கிடக்கிறவன் கல்வி என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துத் தான் மேலேறி வர வேண்டியிருக்கிறது. இதற்கு முன் கல்வியின் மூலம் மேலேறி வந்தவர்களுக்கு அதன் போதாமைகள் தெரியலாம். ஆனால் இன்னும் கீழே கிடப்பவனுக்கு அதுதான் ஒற்றை வழி எனும் போது, அது குறித்து அவநம்பிக்கைகளை விதைக்கலாகாது. எனவே அசுரன் சொல்லும் “படிச்சு அதிகாரத்திற்கு வா சிதம்பரம். வந்து உனக்கு செஞ்ச கொடுமைய நீ யாருக்கும் செய்ய நினைக்காதே!” என்னும் செய்தி இன்றைக்கும் முக்கியமானது தான்.



