Monday, January 25, 2016

விருதைத் துறந்த கலைஞன்

கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. நாட்டின் உயரிய கௌரவங்களில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதினை எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனை இணைய வழக்கப்படி ஒரு “மீம்” தயாரித்துப் போட்டு கலாய்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டுமா இல்லை அவரது ரசிகத் தொண்டர்கள் போல அவரது அருமை பெருமையை சில பல பத்திகள் எழுதி, அவர் இந்த விருதுக்கெல்லாம் மேலே என்பது போன்ற வரிகளை நடுநடுவே தூவி, இறுதியில் அவர் இதனைப் பெற்றுக்கொள்ளாததால் பச்சைத்தண்ணீர் பருகாமல் வாடிக்கொண்டிருக்கின்றேன் என்று இரண்டு சொட்டுக் கண்ணீரை காணிக்கையாக்கி முடிக்க வேண்டுமா தெரியவில்லை.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகிவருவதால் பலரும் தாம் வாங்கிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறிவரும் காலகட்டத்தில், தற்பொழுதைய மத்திய அரசின் சித்தாந்தங்களில் ஒத்துப் போகிற, இந்து ஞான மரபைப் போற்றுகின்ற ஜெயமோகன் அவர்கள் இந்த விருதை மறுத்திருப்பது வியப்பையே தருகிறது. தான் இந்த விருதைப் பெற்றுக்கொள்வது என்பது, தன் ஆகச்சிறந்த படைப்பான “வெண்முரசு” எழுதிவருவதும், தன்னுடைய தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளும் இத்தைய விருதுகளுக்காகத் தாம் என்று தன்னைத் தூற்றுபவர்கள் பேச வழிவகை செய்துவிடும். அதனாலேயே இந்த விருதினை தான் மிகுந்த மன வருத்தத்தோடு மறுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இது மிக வலிமையற்ற வாதம் என்பது அவருக்கே கூட தெரிந்திருக்கக்கூடும்.
மத்திய அரசின் முன்னாள் ஊழியர் என்ற முறையில் நாட்டில் விருதுகளுக்கான தகுதியுரைகள் (citations) மற்றும் பரிந்துரைகள் (recommendations) எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன, கோப்புகளுக்கான தரவுகள் எவ்வாறு திரட்டபடுகின்றன, அதிலுள்ள காரியச்சிக்கல்கள், விடுபடல்கள், தொடர்முயற்சிகள் இவற்றையெல்லாம் அவர் நன்கு அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். இருந்தும் கடைசி நேரத்தில் விருதினை அவர் மறுத்திருக்கிறார். தான் இதற்கெல்லாம் தகுதியுள்ளவன் தான் என்று நிரூபித்துப் பிறகு இது தன்னை எவ்விதத்திலும் சலனப்படுத்தவில்லை என்று நிறுவது ஒரு வகை ஹீரோயிஸம் அல்லது ஒரு வகை பற்றற்ற நிலை. இதில் எந்த எண்ணத்தில் அவர் விருதினை மறுத்தார் என்று தெரியவில்லை. அல்லது தனது தகுதிக்கு இந்த விருது ஏற்புடையதல்ல என்று அவர் எண்ணியிருந்தாலும், அடுத்து பிற்காலத்தில் இன்னும் பெரிய விருதுகளுக்கு இவர் பெயர் பரிந்துரை செய்யப்படும் பொழுது இச்சம்பவம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதே உண்மை. இவர் உள்ளூர் சண்டை காரணமாக இதனை மறுத்தார் என்ற சம்பவம் எல்லாம் அரசாங்கத்தின் கோப்புகளில் பதிவாகப்போவதே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, “வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும், அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது” என்று அவர் கூறியது சத்தியமென்றால், தன் வாழ்நாள் அனைத்தையும் தன் எழுத்துக்காக, தனக்குக் கிடைக்கின்ற தனிப்பட்ட புகழை ஒதுக்கிவிட்டு தன் படைப்பின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். (ஆனாலும் கூட இவர் இவ்விருதினை மறுப்பதால் அது வெண்முரசிற்கு பெருமை சேர்க்கும் என்று கூறுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.)
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுப்பக்கங்களை மேய்ந்ததில் சில தகவல்கள் கிடைத்தன. நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விற்கு மட்டும் பிரதமர் நேரடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம் போல. மற்ற விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகியவற்றிற்கு மாநில அரசுகள், மத்திய அமைச்சகம், மத்திய அரசுத்துறை, ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் பரிந்துரை செய்யலாம். இவர்கள் தவிர சுயபரிந்துரைகளும் ஏற்கப்படும். பிரதமரை உள்ளடக்கிய குழு வந்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியுள்ளோர்க்கு விருதுகளை வழக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள், ஜனாதிபதியின் பார்வைக்குப் பிறகு அவர் விருதுகளை அறிவிப்பார் என்று அறிகிறேன். ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பரிந்துரைகள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தின் போது விருதுகள் அறிவிக்கப்படும். ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள் பெறப்பட்டாலும், ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 120 பேர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமாக இன்னொரு தகவல், இந்த “பத்ம விருது” பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ இந்த விருதின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த விருதுகளுக்கு பணப்பரிசு எதுவும் கிடையாது. அப்புறம் மிக முக்கியமான இன்னொன்று, விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை சில நாட்களுக்குப் பின் அரசின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். உண்மையில் யார் யார் பெயர் பரிந்துரையில் இருந்தது என்ற தகவல் அதில் இருக்கும் :)

பத்ம விருதுகள் பெற்றிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் !
தரவுகள்:
http://mha.nic.in/awards_medals
http://mha.nic.in/sites/upload_files/mha/files/Scheme-BR.pdf
http://timesofindia.indiatimes.com/india/Govt-invites-nominations-for-Padma-awards-2016/articleshow/48526263.cms
http://www.jeyamohan.in/83792#.VqY2Q5p97IU

******

Saturday, January 23, 2016

அஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்


எனது முதல் மொழிபெயர்ப்பு நாவலான “அஞ்சல் நிலையம்” தற்பொழுது வெளியாகி இருக்கிறது. புகழ்பெற்ற கவிஞரான சார்லஸ் புகோவ்ஸ்கியின் முதல் நாவல். புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே இந்த நாவல் கருதப்படுகின்றது. அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியவற்றைக் கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்.

சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவிலும், இணையம் மூலமும் விற்பனைக்கு உள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் வாங்கலாம்.

புதினம்: அஞ்சல் நிலையம்
- சார்லஸ் புகோவ்ஸ்கி ( தமிழில்: பாலகுமார் விஜயராமன் )
விலை:  ரூ.200.00
பதிப்பகம்: எதிர் வெளியீடு

சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்:
அரங்கு எண்: 151 – எதிர் வெளியீடு
அரங்கு எண்: 90 - நாகரத்னா பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://goo.gl/a5JjUn (இணையதளம்: www.wecanshopping.com)

தபால் மூலம் பெற:
VPP / INDIA POST மூலம் புத்தகம் கிடைக்க: +91 8489401887 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பலாம்

மொழிபெயர்ப்பு குறித்த நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
******

Saturday, September 19, 2015

கனவுக்கதை – மொழிபெயர்ப்பு கவிதை

கனவுக்கதை - ரபியா அல் பாஸ்ரி
(தமிழில் பாலகுமார் விஜயராமன்)
-------------------------------------------------------------------
எனது நினைவுகளுக்கு அப்பாற்பட்ட அழகிய, பரந்த பசுமைத் தோட்டத்தில் நான் இருப்பதை உணர்ந்தேன். இத்தோட்டத்தில் ஒரு சிறுமி என்னுடன் இருந்தாள். அவள் என்னிடம் “இவ்விடம் எத்தனை அழகுடன் இருக்கிறது, பாருங்கள் !” என்று வியந்தாள்.

அவள், “நீங்கள் இதனைக்காட்டிலும் வியத்தகு அழகுடன் உள்ள மற்றோர் இடத்தைக் காண விரும்புகிறீர்களா ?” என்றாள்

நான் “ஆம்” என்றதும், என் கரம் பற்றி அழைத்துச் சென்றாள். அவ்விடம் இதுவரை மனிதக் கண்கள் கண்ணுற்றிராத மேன்மை பொருந்திய அழகுடன் திகழ்ந்தது. அச்சிறுமி ஒரு கதவைத் தட்டியதும், யாரோவொருவர் வந்து திறந்தார். உடனே நாங்கள் இருவரும் பெருவொளிப் பிரவாகத்தில் நனைந்தோம்

நாங்கள் அங்கே கண்ணுற்ற கன்னிப்பெண்களின் செயல்களின் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவாரென உணர்ந்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் ஒளி நிரம்பிய பரிமாறும் தட்டை ஏந்தியவாறு சென்றனர். என்னுடன் வந்த சிறுமி அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கேட்டதும், “கடலில் மூழ்கி உயிர்த்தியாகம் செய்த ஒருத்தியை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம். அவள் இரவில் ஒருபொழுதும், ஓர் இமைப்பொழுதும் உறங்காதவளாக இருந்தாள். நாங்கள் அவளது உடலில் ஈமக்கடனின் வாசனைத் திரவியத்தை பூசப்போகிறோம்.

“அவ்வாறென்றால், சிறிது திரவியத்தை இங்கிருக்கும் என் தோழியின் மீதும் பூசவும்” சிறுமி என்னைச் சுட்டிக்காட்டி கூறினாள்.

“ஒரு காலத்தில், இந்த வாசனைத் திரவியத்தின் நறுமணம் இவள் உடலெங்கும் பரவியிருந்தது, ஆனால் இவள் பயங்கொண்டு அதனை துறந்து விட்டாள்”

உடனே அந்த சிறுமி என் கையை விடுத்து விலகிச் சென்று, திரும்பி என்னை நோக்கிக் கூறினாள்:

”உனது பிரார்த்தனையே உனது ஒளி;
உனது பக்தியே உனது பலம்;
உறக்கம் இவை இரண்டுக்குமான எதிரி.
உனது ஜீவனே வாழ்க்கை உனக்குக்கொடுக்கும் ஒரே வாய்ப்பு.
அதை நீ உதாசீனம் செய்தால், அதை நீ வீணாக்கினால்,
உன் நிலையிலிருந்து நீயே தாழ்ந்து போவாய் !”

பிறகு அச்சிறுமி என் பார்வையிலிருந்து மறைந்து போனாள்

****** 
மூலம்: http://hellopoetry.com/poem/73235/dream-fable/
நன்றி: http://malaigal.com/?p=7177

Tuesday, September 8, 2015

மதுரை புத்தகத் திருவிழா 2015

வழக்கமான உற்சாகத்துடன் நிறைவடைந்திருக்கிறது, இந்த வருட புத்தகத் திருவிழா. காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களின் தேர்வு எப்போதும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்த பின்பே நிகழும். கொடுக்கும் காசுக்கு பிரயோஜனமா என்ற எண்ணம் எப்போதும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அப்படி வாங்கும் புத்தகங்கள் எப்படி இருந்தாலும்,  எப்பாடு பட்டாவது வாசித்து முடித்து விட்டால் தான் செய்த செலவுக்கு பிரயோஜனம் என்ற நினைப்பு சிறிது காலம் முன் வரை ஊறிப் போயிருந்தது. சமீப காலங்களில் தான், “காசையும் கொடுத்துட்டு இந்த கருமாந்திரத்தையும் ஏன் கட்டி அழ வேண்டும்” என்ற ஞானோதயம் பிறந்து, வாசிக்க சுகப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி அலமாரியின் கடைசி அடுக்குகளில் ஒளித்து வைத்து விட்டு, பின் காலம் வாய்க்கையில் வாசித்துக் கொள்ளலாம் என்ற பக்குவம் பிறந்திருக்கிறது.

வாசிப்பின் இத்தனை ஆண்டுகளில், தற்பொழுது புத்தகத் தேர்வுகளிலும் கூட மாறுதல் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. முன்னெல்லாம், சுவாரஸ்யம் என்ற ஒற்றை செயல்திட்டம் மட்டும் தான் குறிக்கோளாக இருக்கும். இப்பொழுது வாசிப்பின் தளம் விரிவடைந்திருப்பதை உணரமுடிகிறது. அது போல, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் வேற்றுக்கிரக வாசிகள் என நினைத்து ஒதுங்கிப் போய்விடுவதுண்டு. சமீப காலங்களில் அந்தப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து பேசுபொருள் போக மொழிபெயர்ப்பின் தரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் இணையத்தால் கிடைக்கும் “யானைப்பால்”.

இருநூற்றி சொச்சம் அரங்குகளில் மலை மலையாய் புத்தகங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். எல்லா வகையான புத்தகங்களுக்கும் சந்தை இருக்கத்தான் செய்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து, சிலவற்றை வாங்கிச் செல்லவும் செய்கிறார்க்ள். பெரிதாய் பெயர் அறிமுகமில்லாத ஒரு அரங்கில், உள்நுழைந்து பத்து நிமிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே மக்கள் விசாரித்த தலைப்புகளில், வாங்கிச் சென்ற புத்தகங்களில் சத்தியமாய் ஒன்று கூட இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இத்தகைய சமுத்திரத்தில் நமக்கான புத்தகங்களை தேர்வு செய்வது என்பது, சும்மா இருபது நொடி வாசித்துப் பார்த்து விட்டு சட்டென வாங்கி விடுகிற காரியமில்லை. வாங்க வேண்டும் என்று ஏற்கனவே குறித்து வைத்திருக்கும் புத்தகங்கள் போக, அரங்கில் கண்ணில்படும் புத்தகங்களில் தெரிந்த எழுத்தாளர்கள், படித்த மதிப்புரைகள், ஏற்கனவே நண்பர்களுடனோ, வாசிப்பிலோ அடிபட்ட பெயர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்வேன். இன்னொரு முக்கியமான நிபந்தனை கட்டுபடியாகும் விலை. இப்படி எல்லாம் கலந்து கட்டி இந்த வருடக் கண்காட்சியில் வாங்கியிருக்கும் புத்தகங்கள்.

கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மதினிமார்கள் கதை - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மறநிறப்பட்டாம்பூச்சிகள் - கார்த்திகைப்பாண்டியன் - எதிர் வெளியீடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் - பா.திருச்செந்தாழை - காலச்சுவடு
கீதாரி - சு.தமிழ்ச்செல்வி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சந்துருவுக்கு என்னாச்சு ? - யெஸ்.பாலபாரதி - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
மாயி-சான் ஹிரோஷிமாவின் வானம்பாடி - தோசி மாருகி (தமிழில் கொ.மா.கோ.இளங்கோ) - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் – கட்டுரைகள் – மலைகள் பதிப்பகம் (அன்பளிப்பாகக் கிடைத்தது)


பக்க எண்ணிக்கையில் எல்லாம் சிறிய புத்தகங்கள் என்பதால் சீக்கிரம் வாசித்து விடுவேன். சோம்பேறித்தனத்தை ஒத்தி வைத்து விட்டு வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும்… பார்ப்போம் !
******

Friday, July 24, 2015

உங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் !


உங்கள் கல்விச்சாலைகளின் பெருங்கருணை
எங்களை மழைக்கு ஒதுங்க அனுமதி வழங்கியிருக்கின்றன

உங்கள் தொழுகைக்கூடங்களின் உள்ளேயமர்ந்து
நாங்கள் யாசிக்க நன்னயத்தோடு இடம் தந்திருக்கிறீர்கள்

உங்கள் கேளிக்கை விடுதி வளாகங்களின் பின்புறச்சுவர்கள்
பெருந்தன்மையோடு எங்கள் ஒட்டுக்கூடாரங்களை
தாங்கிப் பிடிக்க சம்மதித்துள்ளன

மேன்மை பொருந்திய உங்கள் திருக்கரங்கள்
எங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்கையில்
நாங்கள் எப்போதும் போலவே
உங்களை உதாசீனப்படுத்திவிட்டு
எங்கள் வயிற்றுப்பாட்டிற்கான பாவங்களை செய்து கொண்டிருக்கின்றோம்
உங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் !

*******

Friday, May 22, 2015

திருவாளர் பொதுஜனம்

பெருநகரத்து அரசாங்க அலுவலகங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு புழுக்கம் இருக்கும். அதுவும் கோடைக்கால மதியங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கசகசப்பிற்கும், எரிச்சலுக்கும் எந்தக் குறையும் இருக்காது. நகரின் மத்தியில் நெருக்கடியான ஏரியாவில் ஐந்தடுக்கு மாடி கட்டிடத்தில் நான்காவது தளத்தில் அமைந்திருக்கும், எங்களது அலுவலக அறை இன்னும் சிறப்பு வாய்ந்தது. முன்பு உயரதிகாரி இருந்த அறையாதலால் குளிர் சாதன வசதி எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு மேம்படுத்தப்பட்ட வேறு அறை வழங்கப்பட்டு குளிர்சாதன வசதியும் அவருடன் சென்று விட்டபடியால், வெறும் அறையில் மின்விசிறி மாட்டப்பட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. காற்று புக எந்த வசதியும் இல்லாமல் நல்லா கொதிக்கின்ற இட்லி கொப்பரைக்குள் அமர்ந்து வேலை பார்ப்பது போல் இருக்கும். 

அலுவலக விதிமுறைகள் இன்னும் சுவாரஸ்யமானவை. ஒரு கடிதத்தை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் முதலில் எங்கள் அதிகாரி சொல்வதை நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து ஃபைலில் இண்டக்ஸ் செய்து அவர் சரி பார்ப்பதற்காக வைக்க வேண்டும். அதில் பிழைகள் ஏதும் இல்லையென்றாலும் ஓரிரண்டு வார்த்தைகளை மாற்றிப் போட்டு நம் உழைப்பை செம்மைப் படுத்திய பெருமிதத்தோடு எங்களைப் பார்ப்பார். நாங்களும் “அதிகாரி, அதிகாரி தான்” என்ற பாவனையோடு ஒரு நன்றி உதிர்க்கும் பார்வையை சமர்ப்பித்து விட்டு மீண்டும் கோப்பை சரி செய்து அவர் பார்வைக்கு வைப்போம். அதை மீண்டும் முதலிலிருந்து ஒரு முறை நிதானமாகப் படித்துப் பார்த்து, பின் பேனா சரியாக எழுதுகிறதா என்று அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தாளில் சிறு கிறுக்கல் கிறுக்கிப்பார்த்து விட்டு, அதில் திருப்தியடைந்தவராய் கோப்பில் தனது பொற்கரங்களால் கையெழுத்திட்டு விட்டு தலைமையிடத்துக்கு அனுப்பச் சொல்வார்.

இனி தான் இருக்கிறது தொழில்நுட்பம். கையெழுத்தான லெட்டரை ஸ்கேன் செய்து தலைமையிடத்துக்கு இமெயிலில் அனுப்ப வேண்டும். அங்குள்ளவர்கள் அலுவலக மின்னஞ்சல்களைப் பார்ப்பதே குதிரைக்கொம்பு. எனவே உடனுக்குடன் தகவல் பார்வையில் படும் பொருட்டு ஒரு ஃபேக்ஸ் காப்பியும் அனுப்ப வேண்டும். அரசாங்க அலுவகத்து ஃபேக்ஸ் மிசின்கள் வேலை செய்வதெல்லாம் தெய்வச் செயல் தான். ஒன்று அணைத்து வைக்கப்பட்டிருக்கும், இல்லை பேப்பர் அவுட் ”சிவப்பு” மிணுங்கிக் கொண்டிருக்கும். அதை சரி செய்ய அங்குள்ளவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, பின் அவர்கள் அதை சரி செய்த பின் ஃபேக்ஸ் அனுப்பி  அதை உறுதிப்படுத்த மீண்டும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டும். அது போக “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஆனால் அரசாங்க அலுவகங்களில் இமெயில், ஃபேக்ஸ் எல்லாம் நிரந்தர தகவல் தொடர்பு முறை இல்லை, அவசரத்துக்குத் தான். எனவே ஃபேக்ஸ் அனுப்பிய லெட்டரை ஒரு ஜெராக்ஸ் எடுத்து நகலை எங்களது அலுவலக கோப்பில் வைத்து விட்டு ஒரிஜினலை பதிவுத்தபால் தபால் மூலம் தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும். பிறகு அதற்கான “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் போட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். 

இந்த சுலபமான நடைமுறையெல்லாம் ஒரே கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருக்கும் எங்களது கிளை அலுவலகத்திலிருந்து, அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருக்கும் தலைமையிடத்துக்கு அனுப்புவதற்கு மட்டுமே. வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்கு ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் கூண்டிற்குள் உள்ள கிளிக்கு தினமும் பச்சை மிளகாய் வைத்து அதனைப் பேசப்பழக்குவது போல, எழுநூறு என்னூறு பக்க செயல்முறைக் கையேடு இருக்கிறது. அதன்படி, அது அது, அதன் அதன் செய்நேர்த்தியோடு நடைபெற வேண்டும். 

இப்படியாய் வியர்வை ஊற்றாய் கொட்டிக் கொண்டு, அரும்பாடுபட்டு அரசு இயந்திரத்தை சுழல வைத்துக் கொண்டிருந்த சுபயோக சுபதினமான ஒரு விசாலக்கிழமை நன்பகல் மணி ஒன்றரை - மூன்று கொழுத்த இராகு காலத்தில் திருவாளர் பொதுஜனம் எங்கள் அலுவலகத்திற்குள் காலடியெடித்து வைத்தார்.  வைத்தாரென்ன... அறைக்குள் நுழையும் போதே, கண்ணாடிக் கதவைத் திறந்தவர் தனது செல்ஃபோனின் ரிங் டோடான ”வந்தே மாதரம், ஜெய வந்தே மாதரம்” ஒலிக்கவும் ஒரு நொடி பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தவர் பின் சுதாரித்துக் கொண்டு “மன்னிக்கனும், சைலண்ட் மோடில் போட மறந்துட்டேன்” என்று கதவில் வைத்திருந்த கையை தன் கழுத்தில் ”டேக்” போட்டு தொங்கப்போட்டிருந்த செல்ஃபோனை நோக்கிக் கொண்டு சென்றார். எங்கள் அறைக்கதவும் அரசாங்க ஊழியராயிற்றே... இரண்டு நொடி அதே நிலையில் நின்று யோசித்து விட்டு பின் தன்னுடைய நெற்றியில் ”டோர் க்ளோசர்” மாட்டியிருக்கிறதே என்ற சுயநினைவு வந்து படாரென சாத்தத் துவங்கியது. அது சென்ற வேகத்தில் நமது பொதுஜனத்தை இரண்டு அடிக்கு வெளியே தள்ளி சமர்த்தாக மறுபடி பூட்டிக்கொண்டது. எது சொன்னாலும் குறைந்தது மூன்று முறை செயல்முறை விளக்கம் கொடுத்தால் மட்டுமே “என்ன, அப்படியா!” என்பது போல் திரும்பிப் பார்க்கும் எங்கள் அலுவலக சிப்பந்தியே அறைக்கதவின் இந்த செயல் கண்டு “படாரென” பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டார். அப்போதாவது இன்று ஒரு அசாதாரணமான நாள் என்று நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ம்ச்ச்... விதி வலியது போலும், துர்சகுணத்தை உணர்ந்து கொண்டேனில்லை.

சிப்பந்தி வேகமாக சென்று அவருக்கேயுரிய பிரத்யேக முறையில், பாதத்தால் தடுப்பு ஏற்படுத்தி, அறைக்கதவின் ஆற்றலை மட்டுப்படுத்தி, நிலை குலைந்திருந்த இராமசாமியை உள்ளே அழைத்து வந்தார். 
“சார், எத்தனை நாளா சொல்றேன், இந்த டோர் க்ளோசரை கழட்டி விட்றலாம்னு.. இப்ப பாருங்க ஐயாவை கழுத்தப் பிடிச்சு நாமே வெளியே தள்ளுனா மாதிரி ஆகிருச்சு”

அவர் சொல்வதும் வாஸ்தவம் தான். ஆனால் அரசாங்க அலுவலக பகவத் கீதையான “ஸ்வாமீஸ் கைடில்” தலைமை அலுவலகத்தின் முன்னனுமதியின்றி “டோர் க்ளோசரின்” ஸ்க்ரூவில் திருப்புளியை வைப்பதற்கு எந்த சரத்தும் இடம் கொடுக்காததால், அறைக்கதவை டோர் க்ளோசரிடமிருந்து விவாகரத்து செய்யும் விழா நிலுவையில் இருக்கிறது. இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தும் புதிதாய் ஒருவர் வந்திருக்கிறார் இல்லையா, அவர் முன் தான் ஒரு சிப்பந்தி மட்டுமல்ல, தவறென்றால் அலுவலரேயானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் ”தோழர்”  என்ற ஜபர்ஜஸ்த்தை காட்ட வேண்டுமென்ற முனைப்பு.
“ஏ, சும்மா இருப்பா... நீ வேற !” என்று அவரது அறச்சீற்றத்தை தற்காலிகமாக அமர்த்தி விட்டு, 
“ஐயா, ஒன்னும் அடிபடலியே... பார்த்து வரக்கூடாதா” என்று பொதுவாகத் தான் கேட்டேன். அதற்கு மையமாய் ஒரு பார்வையை மட்டும் வீசி விட்டு, தனது செல்போனை கழுத்துப் பட்டையிலிருந்து விடுவித்து, இரண்டொரு சங்கேத குறியீடுகளை செலுத்தி மௌன நிலைக்கு அனுப்பி விட்டு, மீண்டும் தாலிக்கொடியில் மாட்டிக் கொண்டு செருமியபடி பேசத்துவங்கினார் பொதுஜனம்.

”வணக்கம், தகவலறியும் சட்டத்தின் படி, எனக்கு ஒரு தகவல் தெரியனும்”
“நல்லதுங்கய்யா... அதற்கான அலுவலகம் மேலே ஐந்தாவது மாடில இருக்கு. அங்க பி.ஆர்.ஓ இருப்பார், அவரப்பாருங்க”
“இதான், நாடு நாசமாப் போறதுக்கான காரணமே இதான்... உங்களோட சேர்த்து பதிமூனு பேர். எனக்குத் தெரியாது, இங்க கேளு, அங்க கேளுன்னு ஒரு அலக்கழிப்பு. ஏன் சார், நான் தெரியாமத் தான் கேக்குறேன் அரசாங்கம் உங்களுக்கெல்லாம் எதுக்கு சார் சம்பளம் கொடுக்குது, எனக்கு எதுவும் தெரியாது வெளியே போன்னு கைய விரிக்குறதுக்கா?

அறைக்கதவு சம்பவத்தால் முதல் ஓவர் “மேட்-இன்” ஆகிவிட்டதே என்ற கவலையில் இருந்திருப்பார் போல, அடுத்த ஓவர் சிக்ஸரா வெளுக்கிறார்.

“ஐயா, நீங்க சொல்றது ஓகே தான்.. ஆனாலும் அதுக்குன்னு ஒரு அதிகாரி இருக்கார்ல , சரியா அவரப்போய் பார்த்தா தானே தேவையான தகவல் கிடைக்கும்”
“ஸீ... மிஸ்டர்  கவர்மெட் செர்வண்ட், இதெல்லாம் நல்லா பேசுறீங்க, உங்க ஆஃபிஸில் இதுவரை மொத்தம் எத்தனை ஃபைல்ஸ் உபயோகிச்சிருக்கீங்கன்னு ஒரு லிஸ்ட். இது தான் என்னோட ஸிம்பிள் க்வஸ்டீன். அதை சொல்றதுக்கு இவ்ளோ அலைக்கழிக்கிறீங்களே !”

நான் நாற்காலியில் உட்கார்ந்தபடியே ஒரு 360 டிகிரி வட்டம் போட்டு பார்த்தேன். பத்து அடி உயரத்துக்கு நாலா பக்கமும் கோப்புகள்.  இந்த நான்காவது மாடியில் மட்டும் இது மாதிரி சுமார் 20 அறைகள். அலுவலகத்திற்கு மொத்தம் ஐந்து தளங்கள்... ஐந்து பெருக்கல் இருபது, சுமார் நூறு அறைகள், ஒவ்வொரு அறை முழுதும் இவ்வளவு கோப்புகள்... அலுவலகம் 1996ல் இருந்து இந்த கட்டிடத்தில் இயங்குகிறது. இப்போ 2015, மொத்தம் பத்தொன்பது வருடம் உபயோகப்படுத்தின மொத்த கோப்புகளையும் தெரிந்து கொண்டு திருவாளர். பொதுஜனம் என்ன ஆராய்ச்சி செய்யப்போகிறார் என்று எனக்குத் தீராத ஆர்வம் பற்றிக்கொண்டது. நாக்கில சனி நர்த்தனமாடி விட, வாய்திறந்து கேட்டு விட்டேன். 

“ஐயா, இவ்ளோ ஃபைல் லிஸ்ட் வச்சு என்ன பண்ணபோறீங்க”
“மிஸ்டர்... ஆர்.டி.ஐ ல அப்ளிகண்ட் ரீசன் ஃபார் ஆஸ்கிங் டீடைல்ஸ் கொடுக்கவேண்டியதில்லை, தெரியும் தானே !”
இதெல்லாம் நல்லா தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால் யாரிடம் கேட்க வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.
”சரிங்கய்யா... நீங்க பி.ஆர்.ஓ வைப் பாருங்க, ப்ளீஸ்!”
“முடியாது சார்... எனக்கு தகவல் தெரியாம இங்கே இருந்து நகல மாட்டேன்”

அடுத்த பாலும் ஃபுல்டாஸா போச்சா. பவுண்டரிக்கு தூக்கி தூக்கி அடிக்கிறார். நான் மாட்டிக் கொண்டு விழிப்பதில், உடனிருக்கும் சிப்பந்திக்கு அப்படியொரு சந்தோஷம். அறையின் ஈசானி மூலையில் மூன்று செங்கோனங்கள் எப்படி சந்திக்கின்றன என்று அளவெடுத்துக் பார்த்துக் கொண்டே இருந்தார். என் பக்கம் தலையை சாய்க்கக் கூட மாட்டேன் என்கிறார். சரி, நம் வயிற்று வலிக்கு நாமே தான் கசாயம் காய்ச்ச வேண்டும் போலிருக்கிறது.

“அது சரிய்யா, ஆர்.டி.ஐ. ல தகவல் கேட்க பத்து ரூபாய்க்கு பி.ஓ எடுக்கனுமே, எடுத்துட்டு வந்துர்றீங்களா?
பனிரெண்டு எலிகள் தொட்டுப்பார்க்காத மசால் வடையை பதிமூன்றாவது ஆளாய் வந்த நான் மட்டும் ஏன் கடித்துத் தொலைக்க வேண்டும். அதன் பெயர் தான் விதி.
பேட்ஸ்மேனுக்கு சாதகமாய் எல்லா விதிகளும் மாற்றப்பட்ட வேளையிலும், கஷ்டப்பட்டு வீசும் பவுன்சருக்கு கொஞ்சம் மதிப்பிருக்கத் தான் செய்கிறது. மிஸ்டர் பொதுஜனம் இந்தக் கேள்விக்கு லேசாக பம்மினார் (என்று நானாக நினைத்துக் கொண்டேன்)
“ஓ, அப்படியா... சரி இதப்பிடிங்க”

என் கை ஓங்கி இருக்கின்ற தைரியத்தில், அவர் கிளம்பிச் சென்றால் போதும் என்ற ஆவலாதியில் அவர் கொடுத்த அந்த வஸ்துவை “கை” நீட்டி பெற்றுக்கொண்டு என்னவென்று பார்த்தேன். ஜோலி முடிந்தது என்று அப்போது தெரியவில்லை.

“சார்... பி.ஓ இல்லாட்டி கேஷா கூட கொடுக்கலாம்ல, அதான்.... இப்ப சொல்லுங்க, உங்க ஆஃபிஸ்ல மொத்தம் எத்தனை ஃபைல்?”
“ஐயா, என்கிட்ட எதுக்கு பணம் கொடுக்குறீங்க.. இந்தாங்க முதல்ல பிடிங்க.. பி.ஆர்.ஓ வைப் பாருங்க, தயவு செய்து இப்போ இடத்தை காலி பண்ணுங்க”
“என்ன சார், கவர்மெண்ட்ல வேலை இருக்கு, கை நிறைய சம்பளம், ஒரு வேலையும் கிடையாது, காலாட்டிட்டே சாகுற வரை பென்சன்... இதுல பப்ளிக்கை வேற இன்சல்ட் பண்ணுவீங்க... கவர்மெண்ட் மக்களுக்கு செய்றதை குட்டிச்சுவராக்குறதே உங்கள மாதிரி அரசாங்க ஊழியருங்க தான். இப்போல்லாம் காலம் முன்ன மாதிரி இல்ல சார்..  பப்ளிக் அவேர்னஸ் வந்திருச்சு சார். என்ன நடக்கும் தெரியுமில்ல”
“ஐயா, நான் ஒரு சாதாரண குமாஸ்தா.. எனக்குன்னு சில வரைமுறை அரசாங்கம் விதிச்சிருக்கு. அதை மீறிய விஷயத்தை என்கிட்ட கேட்டா என்ன சொல்ல... என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க, இப்போ முதல்ல இடத்தை காலி பண்ணுங்க”

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக ஏதோ சவால் விட்டபடி கிளம்பிச் சென்று விட்டார். 

சரியாக ஒரே வாரம், அடுத்த விசாலக்கிழமைக்கு அலுவலம் முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. எங்களது அலுவலகத்தில் ஒருவர் லஞ்சம் வாங்குற நேரடி வீடியோ க்ளிப்பிங் இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸப் எல்லாத்துலயும் சுத்திட்டு இருக்கிறது என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுகொண்டிருக்கிறார்கள். இதில் வரலாறு காணாத விதமாய் ஒரே வாரத்தில் ஒன்னரை லட்சம் வியூஸ் என்று ஆச்சர்யமாய் வேறு பேசிக்கொண்டார்கள். நானும் தேமே என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.  மதியத்துள் விஷயம் ஸ்படஷ்டமாக விளங்கி விட்டது. ஒரு காப்பி என் மொபைல் வரை வந்துவிட்டது, “இந்த கயவனை செருப்பாலடிக்க, ஐந்து பேருக்கு ஷேர் செய்யுங்கள்” என்ற தலைப்போடு. திருவாளர் பொதுஜனம் வேலையைக் காண்பித்து விட்டார்.  அன்று நடந்த அனைத்தையும் கழுத்தில் தொங்கவிட்டிருந்த மொபைல் மூலமாக படம் பிடித்து, வீட்டில் உட்கார்ந்து நல்லா எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்து நான் பத்து ரூபாய் லஞ்சம் வாங்குவது போல ஐம்பது செகண்ட் படமாக ஓட்டி விட்டார். இதில் எனது முகத்துக்கு இரண்டு முறை டைட் க்ளோசப் வேறு. சாயங்காலம் வீட்டிற்கு கை நிறைய சஸ்பென்ஸன் ஆர்டரோடு சென்று கொண்டிருக்கிறேன். வாழ்க தகவலறியும் உரிமை, வாழ்க திருவாளர் பொதுஜனம், வாழ்க வாட்ஸப் புரட்சிப் போராட்டம் !

******