Tuesday, April 1, 2014

ஃபேஸ்புக் பிரபலத்தின் தலையாய பத்து குணங்கள்


  • ஒருவரை ப்ளாக் பண்ணிட்டா, அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வார் என்று உண்மையிலேயே நம்புவார்
  • ஐயோ யாரும் என்னை டேக் செய்யாதீங்க என்று வாரமொரு முறை செல்லமாய் சிணுங்குவார்
  • ஃபேக் ஐடி தான் மிகப்பெரிய சமூகப்பிரச்சனை
  • ஃப்ரொபைலில் ஃபோட்டோ வைக்காதவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை இல்லாத பயந்தாங்கொளிகள்
  • வாரக்கணக்கில் இன்-ஆக்டிவா இருக்கும் ஐ.டி.களை அன்-ஃபிரண்ட் செய்ததை ஏதோ தயவு தாட்சண்யம் பார்க்காமல் பராக்ரமம் செய்தது போல ஸ்டேடஸ் போட்டு பெருமை கொள்வார்
  • ஒரு லைக் = ஒரு சல்யூட், ஒரு கமெண்ட் = ஒரு செருப்படி வகையறா படங்களை வகைதொகை இல்லாமல் ஷேர் செய்வார்
  • ஃபேஸ்புக்கில் ஏதேனும் சண்டை நடக்கும் போது, இந்தப்பக்கம் ஒரு குத்து அந்தப்பக்கம் ஒரு குத்து என்று ரெண்டு பக்கமும் லைக் செய்து, சண்டை போடுபவர்களையே குழப்புவார்
  • உலகத்தில் எந்தப் பிரச்சனையும் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை உடையவர்
  • இரத்தம் தேவை என்பது போன்ற முக்கியமான கோரிக்கைகளை தேதி பார்க்காமல் ஃபார்வேர்ட் செய்துவிட்டு தன் கடமையை செவ்வனே செய்ததாக பெருமிதம் கொள்வார்
  • தன் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் / தொடர்பவர்கள் அனைவரும் தனக்காக உயிரையும் விடத் துணியும் பரம ரசிகர்கள் / அடிமைகள் என்று நினைத்து அவ்வப்பொழுது தனக்குத்தானே (?) சிரித்துக் கொள்வார்.

****************

Friday, February 28, 2014

”பழைய பன்னீர் செல்வம்” மொமெண்ட்


மூன்று வருடங்களுக்கு முன்பு, தொழில்நுட்பப் பிரிவில் இருந்து வர்த்தகப் பிரிவுக்கு மாற்றலாகி வந்த போது, இனி தொழில்நுட்ப நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும் என்ற வருத்தம் லேசாக இருந்தது. அது வரை பணியாற்றியது, டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - DBA, மாறறலாகி வந்த இடம் - கஸ்டமர் ரிலேஷன் மேனேஜ்மெண்ட் - CRM. சரி, மாற்றத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்வோம் (வேற வழி!!!) என்ற மனநிலைக்கு வந்த பிறகு, புது இடத்துக்கேற்றவாறு மேலாண்மை விஷயங்களில் கவனம் செலுத்த, இதுவும் பிடித்தமானதொரு வேலையாக மாறிவிட்டது. இப்படியாப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஒரு சத்திய சோதனை. 

மாலை அலுவலகம் முடியப்போகும் நேரத்தில், தூத்துக்குடி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. இயங்கிக் கொண்டிருந்த ஒரு டேட்டாபேஸ் படுத்து விட்டது போல. பழைய ஞாபகத்தில் என்னை அழைத்து விட்டார்கள். நானும் “இந்தமாதிரி இந்தமாதிரி.... நான் யூனிஃபார்ம்மை கழற்றி மூனு வருஷமாச்சு. இப்போ மறுபடி மாட்டுனா... அளவு சரியா இருக்காது, கரண்ட்ல யூனிஃபார்ம் போட்டு ட்யூட்டி பாக்குற ஆபீஸர் யாரையாவது கூப்பிடுங்க” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் விடாப்பிடியாக “தீவிரவாதிகளை அடக்கனும்னா நீங்க தான் துப்பாக்கியை எடுத்துட்டு எல்லைக்கு வந்தே ஆகனும், உங்களால மட்டும் தான் இந்த மிஸனை கம்ப்ளீட் பண்ண முடியும். (என்ற அளவுக்கு இல்லாட்டியும்) யூனிஃபார்ம் இல்லேன்னா பரவால்ல, மஃப்டிலயே சார்ஜ் எடுங்க” என்று ஒரே பிடிவாதம் பிடித்தார்கள். பிறகு... ”ஏத்தி விட்டால், ஏறாதார் யாருமுண்டோ...?” நானும் சிக்கிட்டேன். 

கடைசியாக எஸ்.க்யூ.எல் கமாண்ட் அடித்துப் பார்த்தே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம், நமது மல்லுக்கட்டு எல்லாம் இயந்திரமயமான மனிதர்களோடு தான். செல்லமான செர்வர்களுடனும், பிரியமான டேட்டாபேஸ்களுடனும் பழக்கவழக்கம் சுத்தமாய் நின்று பலகாலம் ஆகிவிட்டது. அதுக்காக எடுத்துக் கொண்ட டாஸ்கை பார்த்து பயப்படவா முடியும். டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் கூகுள் டாட் காம் என்ற அதிநவீன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு  “குதிச்சுற்றா கைப்புள்ள...” என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்கியாயிற்று. “நாலு மணி நேரம், திணறத் திணற... சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, ரிமோட் டெக்ஸ்டாப்க்கு உள்ளேயே மூழ்கி தூத்துக்குடிக்கே போய்விட்டேன். சுத்தமாக மறந்து விட்டது என்றே நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள், ஆட்டோ ரீவைண்ட் செய்து தானாக மனத்திரையில் ஓட ஆரம்பித்து விட்டது. மூளையும் விரல்களும் தானாக கூட்டு சேர்ந்து அதுவாக வேலை பார்க்க நான் சும்மா வெளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பது போல இருந்தது. 

ஒரு வழியாக சுயநினைவுக்கு வரும் போது, எந்தவித சேதாரமும் இல்லாமல் டேட்டாபேஸ் மீண்டும் பழைய நிலையை அடைந்து ஓடிக் கொண்டிருந்தது. “சக்சஸ்” என்று கத்தலாம் என பார்த்தால், இங்கே அலுவலகத்தில் ஒரு காக்கா குருவியைக் கூட காணோம். சரியென மானிடருக்கும், சிபியூவுக்கும் டாட்டா சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்தாலும் “ஐயோ, இப்போ எதையாவது வாங்கனுமே!”னு துடிக்கிற கவுண்டமணி மனநிலை தான். இதற்கு முன்னர் இதை விட பலமடங்கு பெரிய வேலைகள் எல்லாம் செய்திருக்கிறோம் தான். ஆனால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, சடாரென களத்தில் குதித்தவுடன், பழைய அனுபவம் எல்லாம் லைன் கட்டி மனத்திரையில் வந்ததும், “குமாரு ஹேப்பி அண்ணாச்சி!”. சரி, அதைப் பகிர்ந்து கொள்ள இணையத்தை விட்டா வேறு வழி? அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன். இனி நார்மலாகி விடுவேன்.

ஆங், இதனால் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், “நமக்குள்ள இருக்க வித்தக்காரன் எத்தனை வருசமானாலும் உள்ளே தூங்கிட்டு தான் இருப்பான் போல, தேவைப்படும் போது தானா விழுச்சுக்குறான். நாம தான் அப்படி ஒருத்தன் இருக்கதையே மறந்துட்டு “பே”னு சுத்திட்டு இருக்கோம்”. :)

******

Monday, February 24, 2014

பெண்களின் உலகம்


ஆண்களும், பெண்களும் ஒரே உலகத்தில் தான் இருக்கிறார்க்ள். ஆனால் அவர்கள் இருவரின் உலகமும் வெவ்வேறாகவே இருக்கிறது. ஒரு ஆண், 89 என்பதை மிகச்சுலபமாக 90 என்று கற்பிதம் செய்து கொள்கிறான், ஆனால் பெண்ணோ தசம பின்ன கணக்கில் வாழ்பவள். அவளுக்கு எப்பொழுதும் 89.85258 என்பது போலத் தான் நினைவில் வைத்துக் கொள்ளத் தோன்றும். நிதர்சனம் என்னவென்றால் பெண் இவ்வாறு சிந்திக்கிறாள் என்பதே ஆணுக்குத் தெரிவதில்லை. அது தான் பிரச்சனை. நம் இந்திய சமூகத்தில், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் ஏதேனுமொரு விவாதத்தில் கணவன் தன் சார்பாக பேசாமல் மௌனமாக இருந்தான் என்ற ஒரு நிகழ்வு, பெண்ணின் மனதில் ஒரு தழும்பாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியதாக மாறி விடுகிறது. ஆணுக்கோ அப்படி ஒரு விவாதம் நடந்தது என்பதே வெகு விரைவில் நினைவில் இருந்து அழிந்து விடும். எந்தவொரு விஷயத்தையும் ஆணால் எளிதில் பொதுமைப் படுத்திவிட முடிகிறது. ஆணால் பெண்ணுக்கு அந்த விஷயத்தின் நுண்ணிய துளைகளை ஆராய்வது தான் இயல்பாக இருக்கிறது.

மலைகள் பதிப்பகம், ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் நான்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை “யானை காணாமலாகிறது”  என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது. அதிலுள்ள ஒரு கதை “தூக்கம்”. ச.ஆறுமுகம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு நடுத்தரவர்க்கத்துப் பெண். எல்லோராலும் விரும்பப்படுகின்ற, அதிர்ந்து பேசாத, பெரிய அளவில் குறைகள் தென்படாத ஒரு “மாதிரி” கணவன், பள்ளிக்குச் செல்லும், தொந்தரவுகள் தராத ஒரே மகன் என்று சிறு குடும்பம். எந்தவித சச்சரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை. வேலைக்குச் செல்லாத இல்லத்தரசியாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு, இந்த சீரான சுழற்சி முறை வாழ்க்கை சலிப்படையத் தொடங்குகிறது. ஓர் இரவு தூக்கத்தில் கொடூரமான கனவொன்றினால் நிலைகுலைந்து எழும் அவளால் அதன் பின் தூங்க முடியவில்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு தூக்கம் என்பதே வருவதில்லை. தினமும் பகலில் அன்றாட வீட்டு வேலைகளை செய்து, இயல்பாக இருப்பவள் இரவானால் தூங்க முடியாமல் அவதியுறுகிறாள். ஆனால் மறுநாள் காலை எந்த வித அசதியோ உடற்சோர்வோ இன்றி எப்பொழுதும் போலவே இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில் தூக்கமின்மைக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாமல், இரவை முழுமையாக தனக்கான பிரத்யேக நேரமாக மாற்றிக் கொண்டு, தனக்குப் பிடித்தமான விஷயங்களை செய்யத் துவங்குகிறாள். அவளுக்கு சிறுவயதில், சாக்லேட் திண்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் பல் மருத்துவரான அவளது கணவனை மணந்த பின், சாக்லேட் தின்பதை விட்டு விட்டிருப்பாள். இரவு விழிக்கும் பழக்கம் வந்தவுடன், அவளுக்கு சிறு வயது நினைவுகள் எல்லாம் துளிர் விடத் துவங்குகிறது. இரவு முழுவதும் தனக்குப் பிடித்தமான நாவலை வாசித்தபடியே அவ்வப்பொழுது சாக்லேட்டை சுவைத்து உண்கிறாள். தூக்கத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் முழிப்புத்தட்டாத கணவனின் இயல்பு, அவளுக்கு வசதியாய் இருக்கவே, தனது சிறிய காரை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள துறைமுகத்திற்குச் சென்று வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்கிறாள். தனது இந்த இயல்பு மீறிய இந்த செயலைத் தன் கணவனால் கண்டுபிடிக்க முடியவில்லை என அறியும் போது மனப்புழுக்கம் கொள்கிறாள். அதன் பிறகு, தூக்கத்தில் உறங்கும் கணவனின் முகத்தைப் பார்க்கும் போது, அவளுக்கு அது கொடூரமான ஒன்றாகத் தோன்றுகிறது. தன் மகன் தூங்குவதைப் பார்க்கும் போதும், அவ்வாறே தோன்ற சிறிது பதட்டமாகிறாள். பின் மகனின் முகத்தில் தன் கணவனின் சாயல் இருப்பதால் தான் தனக்கு அவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்க, கணவன் மேலுள்ள வெறுப்பு இன்னும் அதிகமாகிறது. பகல் பொழுதில் தன் சுயத்தில் இருந்து விலகி அன்றாட வேலைகளை ஒரு இயந்திரம் போல செய்வதையும், அவள் அவ்வாறு மாறியிருப்பதை ஒருவரும் உணராமல் அவரவர் வேலையை செய்து கொண்டிருப்பதை நினைத்து மிகுந்த சலனம் அடைகிறாள். ஒரு நிலையில் தான் தன் உடலில் இருந்து வெளியேறி தூரத்திலிருந்து அந்த உடலின் அன்றாட சலிப்புமிக்க செயல்களை கவனிப்பதைப் போன்ற மாயவுணர்வினைப் பெறுகிறாள். அப்பொழுது முறைமைப்படுத்தப்பட்ட ஒரு இயந்திரம் போல, வெளியிலிருந்து செலுத்தும் விசைக்கேற்ப தன் உடல் செயல்படுவதாகவும், தன் ஆன்மா அழிந்து கொண்டிருப்பதாகவும் நம்புகிறாள். ஒரு நாள், பிரியமான தனது சின்ன காரினுள்ளே அவளது உடல் அமர்ந்திருக்க, வெளியிலிருந்து இரண்டு ஆண்கள் அந்தக்காரை அழுத்திக் குறுக்க, அவள் மூச்சு முட்டி நெரிபடுதை அருகில் இருந்து பார்க்கிறாள். அத்துடன் அந்த சிறுகதை முடிகிறது.

மனவொற்றுமை இல்லாமல், சண்டை சச்சரவுகளுடன் இருக்கும் மணவாழ்வில் தான் ஒரு பெண் துன்பமடைகிறாள் என்பதே பொதுப்பார்வை. ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாத பொழுதும், கணவனது பிரத்யேக கவனிப்பு தன் மீது இருக்க வேண்டும், தனது சிறுசிறு அசைவுகளுக்கும், நுண்ணுணர்வுகளுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும் என்பதே ஒரு பெண்னின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த உணர்வானது, இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், வாழ்வுமுறை என்பதை எல்லாம் தாண்டி எல்லா பெண்களுக்குள்ளும் மையப்புள்ளியாக இருக்கிறது என்பதை எங்கோ கிழக்காசியாவில் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்தின் வழி தமிழுக்கு வந்திருக்கும் இந்த சிறுகதை மூலம் உணர முடிகிறது. அதே சமயம், எல்லா நாடுகளில் உள்ள ஆண்களும் கூட ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒரு ஆணைப் பொருத்தவரை, மனைவிக்குத் தேவையான அல்லது அல்லது தேவையில்லை என்று அவனுக்குத் தோன்றினாலும் அவள் வேண்டுமென்று கேட்பதற்காக வாங்கிக் கொடுப்பது என்பதே பெருங்கருணையுடனும், காதலுடனும் செய்யும் பரிவு மிக்க சாதனை. ஆனால் பெண்ணைப் பொருத்தவரை, அந்தப் பொருளைப் பெற்றுக் கொண்டாலும் கூட, தன் குறிப்பறிந்து செயலாற்றாமல் தான் வாய்திறந்து கேட்பது வரை காக்க வைக்கிறான் என்ற பெருங்கவலையும் கோபமும் உள்ளூர இருந்து கொண்டே இருக்கிறது. இதே மனநிலை இருவருக்கும் நீடிக்கும் போது, மனவாழ்வில் கண்ணுத்தெரியாத விரிசல் விழுந்து, அது வாழ்நாள் முழுமைக்கும் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை, 23/02/2014 அன்று மதுரையில் நடந்த மலைகள் பதிப்பக நூல்கள் திறனாய்வுக் கூட்டத்தில் ஹாருகி முரகாமியின் “தூக்கம்” சிறுகதையை முன்வைத்து பேசுவதற்காக தயார் செய்திருந்த உரை. வேறு ஒரு நிகழ்விற்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே செல்லும்படியாகிவிட்டது. ஆதலால் அங்கே இதனைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதெனாலென்ன, அங்கிருந்த நண்பர்களோடு சேர்த்து, இணைய நண்பர்கள் அனைவரிடமும் பகிர்கிறேன். வாசித்து விட்டு தங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

சொல்ல மறந்து விட்டேன், “யானை காணாமலாகிறது” என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் நான் மொழிபெயர்த்த “மனிதனைத் தின்னும் பூனைகள்” சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. 

******

Wednesday, January 22, 2014

நோய்மை



தலைச்சன் பிள்ளையை
கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்த
நிறைசூலியைத் தேடும் துர்சொப்பனங்கள்
அவள் கால்மாட்டில் கிடக்கும்
விளக்குமாறோடு மல்லுக்கு நிற்கின்றன

திண்ணையில் புரண்டு படுக்கும்
பிறழ்மன பதின்ம வயதினன்
இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை
காலைப் பிணைத்திருக்கும் சங்கிலியால்
விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றான்

செக்கு மாட்டுக் குளம்பில் பந்தமேற்றி
மொச்சைப் பயிரை அவித்து வைத்து 
ஒப்பாரி பாடிக் கொண்டிருக்கையில்
முந்தாநாள் இறந்த மூப்பன்
முச்சந்தி இருட்டில்
கொட்டாங்குச்சி நீரை
வெறித்துப் பார்க்கின்றான்

நேர்ச்சைக்காக ஏங்கிக்கிடக்கும்
கருப்பசாமியின் புரவி வாகனம்
கல்லடிபட்ட நாய்களை காவலுக்கு அனுப்பி விட்டு
நின்றவாக்கில் தூங்கிக் கொண்டிருக்கிறது

******

Wednesday, January 15, 2014

”வீரம்” - செம மாஸ்

”இந்தப்படத்தை இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் விளங்காது” என்று வழக்கமாக ரஜினி படங்களுக்குத் தான் சொல்லி வந்திருக்கோம். போகிறபோக்கைப் பார்த்தால் அஜித் படங்களுக்கும் அப்படியொரு உயர்வு கிடைத்துவிடும் போல. “வீரம்” முழுதும் செம மாஸ். அஜித் எப்பவும் போல படம் முழுவதும் ஸ்லோ மோசனில் நடந்து தான் வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அறிமுகக் காட்சி போல விசிலும், கைத்தட்டலும், தொண்டை கிழிய கத்துவதுமாக தியேட்டர் முழுவதும் கொண்டாட்டத்தில் திளைக்கிறது.

படம் முடிந்து வெளியே வந்த பிறகு யோசித்தால், படத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே இருந்தமாதிரி நினைவில்லை. அதுவும் இயக்குநர் பழைய ”சிறுத்தை” பாசத்தில் தமன்னாவை அஜித்துக்கு நாயகியாய் தேர்வு செய்தது எல்லாம் மனிதத்தன்மையற்ற செயல். இயக்குநருக்கு தயாரிப்பாளர் செலவில் வெளிநாடு செல்ல ஆசையிருந்தால், லொகேசன் பார்க்கப்போகிறேன் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு எழவோ சொல்லி விட்டோ சென்று இருக்கலாம். “ரெண்டு டூயட் ஃபாரின்ல ஸூட் பண்றோம் சார்” என்று சொல்லி படத்தோட ஃப்ளோவையே கெடுத்து இருக்கிறார். படத்துக்கு கொஞ்சமும் ஒட்டாமல், நாயக நாயகி இணையும் பொருத்தமில்லாமல் தனியாக துருத்திக் கொண்டிருக்கின்றன இரண்டு டூயட் பாடல்களும். 

படத்துக்கான இசையும் அது போல தான். சிறு நகர பின்னனி கதைக்கு “பீட்டர்” விடும் டி.எஸ்.பி இல்லாமல் இமான் மாதிரி லோக்கலாய் இறங்கி அடிக்கும் நேடிவிட்டி இருந்திருந்தால் இன்னும் கூட மாஸ் கூடியிருக்கும். அப்புறம், அஹிம்சாவாதியாகவே வாழ்ந்து வரும் நாசர், தன் குடும்பத்துக்காக அஜித் வில்லன்களை கொன்று குவிப்பதை நேருக்கு நேர் பார்த்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாதது போல, நாமும் அலட்டிக் கொள்ளக் கூடாது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி,  படம் பார்க்கும் போது அஜித்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மட்டும் தான் நம்மை ஆக்கிரமிக்கிறது. மற்ற எதுவும் தெரியவில்லை. அப்படியும் தொய்வு விழும் சில இடங்களில் கூட முந்திய மாஸ் காட்சிகளின் வைப்ரேசன் நீடிப்பதால் படம் முடியும் வரையுமே ஹை எக்ஸைட்மெண்ட் வெலவில் உற்சாகமாக அம்ர்ந்து ரசிக்க முடிகிறது.

நான்கு சில்லரைப் பசங்களுக்கு சரிக்குசமமாக நடி(ட)க்க விட்டு அஜித்தை தரம் தாழ்த்திய “மங்காத்தா”வையே ஹிட் அடிக்க வைத்த ரசிகர்கள், பெரியண்ணனாய் செம கெத்து காட்டும் “வீரத்தையா” வீழ்த்துவார்கள். நெவர்ர்ர்ர்ர். அதுவும் வில்லனுக்கு எதிரா எண்ட்ரி கொடுக்குற மாஸ் ஸீன் வித் மழை பேக்ரவுண்ட், இண்டர்வல் ப்ளாக்ல “ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் சண்டையிட்ட” என்று பக்காவாய் விளம்பரப்படுத்திய ஒரு ட்ரெய்ன் ஃபைட், நேட்டிவிட்டிக்காக ஒரு மாட்டு வண்டி சீன், ஒரு திருவிழா டான்ஸ், கிளைமாக்ஸில் ஒரு சென்டிமெண்ட் ஃபைட்,  இன்னும் சில பல மசாலாக்கள் என்று கலந்துகட்டி தயாரித்து இருக்கும் பொங்கல் விருந்து அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சாதாரண பார்வையாளர்களுக்குமே நல்ல பொழுது போக்காக இருக்கும்.

”நம்ம கூட இருக்கவங்களை நாம பார்த்துக்கிட்டா, நம்ம மேல இருக்கவன் நம்ம பார்த்துப்பான்” - இது படத்தின் பிரதான பன்ச். அஜித்தும் இந்த ஃபார்முலா நன்றாகவே தெரிந்திருக்கிறது. ”என்ன நான் சொல்றது !”

Wednesday, November 20, 2013

கருப்பு என்னும் காவல்காரன்


புறநகர்ப்பகுதியில் புதிதாய் வீடுகட்டிப் போகும் எல்லோருக்கும் இருக்கும் பயம் தான் கண்ணனுக்கும் இருந்தது. அந்தப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பொழுது தான் வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. இருட்டி விட்டால் போதும். சில்வண்டுகளின் இரைச்சலும், தேங்கிக் கிடந்த தண்ணீரிலிருந்து வரும் தவளைச் சத்தமும் பெரும் பயத்தைக் கொடுப்பதாய் இருக்கும். அலுவலகத்தில் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து மாதத் தவணையில் சீட்டுப் போட்டதில் கிடைத்த இடம் அது. ஒவ்வொருவராக அவரவர் வசதிக்கேற்ப வீடு கட்டி குடிவந்து கொண்டிருந்தனர். கண்ணன் முன்பு குடியிருந்த வீட்டின் வாடகையும், உரிமையாளரும் ஒன்றாய் கழுத்தை நெறிக்க, வேறு வழியின்றி இங்கு அவசர அவசரமாக வீடு கட்டி குடிவந்து விட்டார்கள். ஒரு கடை கண்ணிக்கு செல்வதென்றால் கூட இரண்டு மூன்று கிலோ மீட்டர் செல்ல வேண்டி இருந்தது. அதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் திருட்டு பயம் தான் பெரிதாகத் தோன்றியது. அதுவும் அக்கம்பக்கத்தில் இரண்டு முறை களவு போயிருக்கிறது என்று கேள்விப்பட்டவுன் அவர்களது பயம் இன்னும் அதிகமானது.

பால் காய்ச்சு விழாவிற்கு வந்திருந்த போதே அவனது அப்பா சொன்னார், “அத்துவானக் காட்டுக்குள்ள கிடக்குறது மாதிரி இருக்கு, ராத்திரில வீடு புகுந்து அடிச்சாக் கூட கேக்க நாதியில்ல” 

அதற்கு அவன், “அதுக்கென்னப்பா பண்றது... பக்கத்து இடங்க பூராம் எங்க ஆபிஸ் ஆளுங்க தான். ஒவ்வொருத்தரா கட்ட ஆரம்பிச்சா கொஞ்ச நாள்ல பக்கா டவுன் மாதிரி ஆகிரும் பாருங்க” என்றான். அவனுக்கும் அந்த நம்பிக்கை தான். 

ஆனால் அவன் அப்பாவுக்கு மனம் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. பால் காய்ச்சு முடிந்து கண்ணனையும் அவனது மனைவியையும் குடியமர்த்தி விட்டு ஊருக்குப் போனவர், கொஞ்ச நாட்களிலேயே திரும்பி வந்தார். கையில் வித்தியாசமாய் வயர் கூடை ஒன்று இருந்தது.

“என்னப்பா, திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க... ?” என்றவன் அவர் கையிலிருந்த கூடையையே உற்று நோக்கினான்.

அவரும் “ஒன்னுமில்லய்யா, நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா கிடக்கீங்க. எங்களாலயும் உங்க கூட வந்து இருக்க தோதுப்படல... அதான் இதப் புடிச்சிட்டு வந்தேன். மீந்ததைப் போடுங்க. துணைக்கு நிக்கும்”

கூடையில் இருந்து இறக்கி விட்டதும் அதற்கு திசை பிடிபடவில்லை போல. லேசாக முனங்கி விட்டு மெல்ல தத்தித் தத்தி கண்ணன் காலடி வரை வந்து விட்டது.

“ஐயோ, இதெ எங்கெருந்துப்பா புடிச்சிட்டு வந்தீங்க. நான் பொழுது விடிய போனா, பொழுது சாய தான் வர்றேன். இவ ஒருத்தியால இதை வச்சு பண்டுவம் பாக்க முடியாது. பேசாம, போறப்போ வீட்டில கொண்டு போடுங்க... உங்களுக்குத் தான் இதெல்லாம் சரிப்படும்”

கண்ணன் அப்பாவிற்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். கிராமத்தில் நான்கைந்து நாய்களை வீட்டில் வைத்து வளர்ப்பது போக ஊரிலுள்ள் அத்தனை உருப்படிகளோடும் உறவு கொண்டாடிக் கொண்டிருப்பார். அந்த நினைப்பில் மகன் வீட்டிற்கும் காவல் நிற்கட்டும் என ஒரு குட்டியைத் தூக்கி வந்து விட்டார்.

“டேய், ஊருலருந்து தான் வேலை மெனக்கட்டு கொண்டு வர்றேன். தலையீத்துக் குட்டி. அம்சம் எப்படி இருக்கு பாரு. நம்ம குலதெய்வம் கருப்பசாமியவே கொண்டு வந்து உன் புது வீட்டுல விட்டுருக்கேன். உஙகளுக்கு எப்பவும் காவல் நிக்கும்டா” என்று சொல்லிவிட்டு மருமகளைப் பார்த்தாள். அவள் கண்ணன் என்ன சொல்வானோ என அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்

கண்ணனுக்கு நாய் வளர்ப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லை. சொல்லப்போனால் சின்ன வயதிலிருந்து போதும் போதும் என்கிற அளவுக்கு அவன் அப்பா நாய்களுடனேயே விளையாட்டுக் காட்டியதில் ஒரு வித வெறுப்பே வந்திருந்தது. இப்போது தான் புதுவீடு கட்டி வந்திருந்தார்கள். அங்கேயும் நாயைக் கொண்டு வந்து விட்டதில் எரிச்சல் தான் அதிகமாகியது.

“புரியாம பேசாதீங்கப்பா... அதெல்லாம் சரிப்படாது, நீங்க போறப்போ தூக்கிட்டுப் போயிடுங்க”

கண்ணன் கடிந்து சொன்னதும் அவனது அப்பாவின் முகம் சட்டென சுருங்கி விட்டது.

“சரிப்பா.. நான் கொண்டு போய்க்கிட்றேன்”

கண்ணனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ”ஒரு நிமிஷத்துல முகத்தில் அறைவது போல பேசிட்டோமே. இதுக்காக நூத்தம்பது கிலோ மீட்டர் வந்திருக்கார். வீட்டுக்குள்ள நுழைஞ்சும் நுழையாம இப்படி கத்திட்டோமே” என மனது அடித்தது.

“சரி வாங்க... முகத்தைக் கழுவிட்டு சாப்பிட உக்காருங்க” என்று அரவணைத்துக் கூட்டிப் போய் அவருக்கு முகம் துடைக்க துண்டை எடுத்துக் கொடுத்து விட்டு, உள்ளே அடுப்படிக்குள் சென்று ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அதில் தண்ணீரை ஊற்றி அந்த நாய்க்குட்டியினருகே வைத்து விட்டு அதைப் பார்த்தான். சுமார் ஒரு மாதமான ஆண் குட்டி. முற்றிலும் கறுப்பான உடலில், நெத்தி சுழி மற்றும் நான்கு கால்களில் மட்டும் வெள்ளை நிறம். கிராமத்தில் விலா எலும்பு தெரிய நீட்டு வாக்காய் சுற்றிக் கொண்டிருக்கும் நாட்டு நாயினம் தான். ஆனாலும் அப்பா சொன்னது போல அம்சமாய்த் தான் இருந்தது. லேசாக அதன் தலையைத் தொட்டான். அதுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அது அவன் தொடுதலில் ஏதோ உணர்ந்ததைப் போல, வாலை வேகமாய் ஆட்டிக் கொண்டே குழைந்தபடி தண்ணீரை நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.

அப்பா வீட்டில் இருந்த இரண்டு நாட்களுக்குள் கண்ணனின் மனைவியிடம் குட்டி நன்றாக பழகி விட்டது. அவளுக்கும் முதலில் இருந்த தயக்கம் விலகி அதனோடு சகஜமாய விளையாடத் துவங்கியிருந்தாள். இனி வேறு வழியில்லை, அந்த நாய்க்குட்டி இனி தங்களுடன் தான் இருக்கப் போகிறது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டான் கண்ணன். குட்டிக்கு “கருப்பு” என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது. அப்பாவும் நிம்மதியாக ஊருக்குக் கிளம்பினார். அதற்கு பால், பிஸ்கட் கொடுப்பது, சமயங்களில் வராண்டாவில் அது எடுத்து வைத்திருக்கும் வாந்தி மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வது, அதனுடன் விளையாடுவது என்று வேண்டா வெறுப்பாக செய்யத்துவங்கிய வேலைகள் எல்லாம் நாட்கள் செல்லச்செல்ல கணவன் மனைவி இருவருக்கும் விருப்பமானதாகவே மாறிப்போயின. கட்டிப் போட்டு வளர்க்காவிட்டாலும் வீட்டைத் தாண்டி எங்கும் செல்லாமல் “கருப்பும்” எப்போதும் அவர்களுடனேயே வலம் வந்தது.

வெளியூரில் நடக்கும் உறவினரின் திருமணத்திற்காக கணவ்ன் மனைவி இருவரும் செல்ல வேண்டிய நாளில் கருப்பை தனியே விட்டு விட்டு செல்வது குறித்தே அதிகம் கவலைப்பட்டனர். சரி இரவுக்குள் வீடு திரும்பி விடலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஒரு நாளில் கருப்பு சாப்பிடும் அளவிற்கு சாப்பாட்டை அதற்குரிய தட்டில் வைத்து விட்டுக் கிளம்பினர். அதிகாலை சென்றவர்கள் ஊர் வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டது. பேருந்து நிலைத்தை அடைந்து அங்கே விட்டுவிட்டுச் சென்றிருந்த இருசக்கரவாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிக் கிளம்பினர்.

பேருந்து நிலைய நுழைவாயிலைக் கடக்கையிலேயே கண்ணன் சத்தமிட்டான்.

“இங்க பாரு, நம்ம கருப்பு இங்க வரை வந்து சுத்திட்டு இருக்கு”

கருப்பு, அவர்கள் வீடு இருக்கும் புறநகர்ப்பகுதியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பேருந்து நிலையம் வரை எப்படி வந்திருக்க முடியும் என்று அவன் மனைவிக்கும் ஆச்சரியம் தான். ஆனால் அவள் பார்வைக்கு கருப்பு தட்டுப்படவில்லை.

“சும்மா உளறாதீங்க.. இவ்வளவு தூரத்துக்கு அது எப்படி வரும்” என்றவளாய் வண்டியை கவனமாய் ஓட்டச் சொல்லி விட்டு திரும்பினாள்.

நகரம் கடந்து புறநகர்ப்பகுதிக்கு செல்ல வேண்டிய நெடுஞ்சாலையைத் தொடும் போதும், கண்ணனுக்கு கருப்பு கூடவே ஓடி வருவது போலவே தோன்றியது. சற்று நிதானித்துப் பார்த்தால் கண்ணுக்கு அகப்படவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கொரு முறை அது வண்டியை ஒட்டி நெடுஞ்சாலையில் முன்னால் ஓடிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. அதனைப் பற்றி அவன் மனைவியிடம் அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டே வந்தாலும் அவள் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை.

நெடுஞ்சாலையைக் கடந்து அவர்கள் வீடு இருக்கும் புறநகர் சாலைக்குச் செல்ல வண்டியை வலதுபுறம்  திருப்ப எத்தனிக்கையில் எதிரே கண் மண் தெரியாமல் ஒரு மணல் லாரி இவர்களை நோக்கி விரைந்து வந்தது. ”செத்தோம்” என இவர்கள் கூச்சலிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த நாய் போன்ற ஏதோ ஒரு விலங்கை அடித்து விட்டு, இவர்களின் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை மயிரிழையில் தவிர்த்து சீரில்லாமல் பறந்து சென்றது. அதனை சற்றும் எதிர்பாராத இவர்கள், சுதாரித்து வண்டியை ஓரமாய் நிறுத்தி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தனர். சுற்றுமுற்றும் எந்தவொரு விலங்கும் அடிபட்டதற்கான எந்தத் தடயமும் அங்கில்லை,

பயம் விலகாமல் வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு, வாசல் கதவருகே கருப்பு படுத்திருப்பதைப் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அவர்களைக் கண்டவுடன் அது மெல்லிய குரலில் முனகத்துவங்கியது.
“காலைல இருந்து ஆளக்காணாம்னு செல்லம் கொஞ்சுது... வச்ச சாப்பட்டக்கூட தொட்டுப்பார்க்கல பாரேன்” என்றான் கண்ணன்.
“அது பாட்டுக்கு படுத்த இடத்த விட்டு எந்திருக்காம கிடக்கு.. நீங்க ரோட்டுல பார்த்தேன், காட்டுல பார்த்தேன்னிங்க!” என்று அவன் மனைவி சொன்னதற்கு சிரித்துக் கொண்டே போய் கதவைத் திறக்க முற்பட்டான். வாசல் படியெங்கும் இரத்தம் உறைந்து போய் இருந்தது.

வீட்டைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இரத்தத் துளிகளாய் சிதறிக் கிடப்பதையும், கருப்பின் முனகல் சத்தம் அதிகமாவதையும் கவனித்து வேகமாய் வந்து அதனைத் தூக்கினான்.அதன் முன்னங்கால் இரண்டிலும் சதை பிய்ந்து இரத்தம் உறைந்து போய் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அவன் கருப்பை கையில் ஏந்தியதும் அது பலகீனமாய் அவன் மார்பில் தலை சாய்த்து, அது வரை தேக்கி வைத்திருந்த வலியணைத்தையும் வெளிப்படுத்துவது போல, ஈனசுரத்தில் பெருங்குரலெடுத்து முனங்கத் துவங்கியது.

தங்கள் குலதெயவமான கருப்பசாமியை நினைத்து நிலக்காப்பை எடுத்து அதன் நெற்றியில் பூசி விட்டு, அதனைத் தூக்கிக் கொண்டு நகரத்திலுள்ள மருத்துவமனை நோக்கி ஓடினான்.

முறையாக வைத்தியம் பார்த்து, கண்ணும் கருத்துமாக கவனித்ததில் வெகு விரைவிலேயே கருப்பு குணமாகி விட்டது. வேண்டாவெறுப்பாக வீட்டுக்குள் வந்த ஜீவன், வீட்டின் முக்கிய உறுப்பினராக மாறி விட்டது. கருப்பினை தனியாக விட்டுச் செல்ல நேருமே என்று பெரும்பான்மையான வெளியூர்ப் பயணங்களைக் கூட அவர்கள் தவிர்த்தனர்.

மாதங்கள் செல்லச் செல்ல அவர்கள் குடியிருந்த பகுதியில் நிறைய வீடுகள் வரத்துவங்கியது. ஓரிரு ஆண்டுகளிலேயே மக்கள் அதிகமாய் புழங்கும் ஏரியாவாக மாறிப்போனது.

ஒரு முறை கண்ணனது அப்பா அவன் வீட்டிற்கு வந்தார். 

”வீட்டைக் கண்டுபிடிக்குறக்குள்ள பெரும்பாடா போச்சுப்பா. சுத்தி எத்தனை கட்டடங்கள் ஆகிபோச்சு.. திக்கும் தெரியல, தெசையும் தெரியல” என்று நொந்து கொண்டவர். 

”எங்கடா நம்ம கருப்பு எங்கே... ஊர் சுத்துற அளவு முன்னேறிடுச்சா?”

“இல்லப்பா, ஏரியால போற வர்றங்களை எல்லாம் துரத்த ஆரம்பிச்சிருச்சு. எல்லாரும் வீட்டுல வந்து சண்டை போட்டாங்க"

“பருவத்துல கொஞ்சம் விளையாட்டுத் தனம் இருக்கும்டா... கொஞ்ச நாள்ல சரியாடும்”

”கட்டி வச்சும் பார்த்தோம். ராத்திரியெல்லாம் ஊளையிட வேற ஆரம்பிச்சிருச்சு... அதனால”

"அதனால....”

“இல்லப்பா... ரெண்டு சின்னப்பசங்களுக்கு பல்லு பட்ற அளவு ஆகிடுச்சு... அதனால...”

“அதனால....”

கண்ணன் அதற்கு மேல் பேச முடியாமல், கொல்லைப்புறத்தில் நின்ற தென்னைங்கன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

******

நன்றி: மலைகள் இதழ்: http://malaigal.com/?p=3390