Wednesday, March 27, 2013

நதியின் பெயர் கொண்டோடும் ரயில்

மேனியிலிடும் சித்திரவித்தையின்
துகிலிகை ஓட்டத்திற்கு
தன் கூச்சத்தைப் பழகக் கொடுத்த
முதல் நாளை நினைத்துப் பார்க்கிறாள்
அயல்தேசத்து நடனக்காரி

தூரதேசப் பிரயாணம் போகிறவர்களின்
வீடுகளில் நாய்க்குத் துணையாக 
வயோதிகர்கள்
காவல் இருக்கிறார்கள்.

அடுக்ககங்களின்
கழிவுநீரை மறுசுழற்சி செய்து
தோட்டம் வளர்க்கும் திட்டத்திற்கு
எதிர்ப்பு வாக்குகள் முதலில் பதிவாகின்றன

எந்நேரமும் கஞ்சா புகை மிதக்கும்
கருவேலம்புதரை இன்னும் 
நந்தவனம் என்று தான் அழைக்கிறார்கள்

முன்பு பசியாற்றிக் கொண்டிருந்த
விளைநிலத்தில் மலம் கக்கிச் செல்லும்
அதிவேக ரயிலுக்கு 
நதியின் பெயரைச் சூட்டி
வேடிக்கை பார்க்கிறது காலம் !

******

Thursday, March 7, 2013

குடிகார சமுதாயம்


முன்பு ஒரு காலம் இருந்தது. அப்பொழுதும் பொழுதுபோக்காக அல்லது எப்போதாவது அல்லது நினைத்தால் மட்டும் அல்லது அவ்வப்போது அல்லது முழுமூச்சாய் அல்லது வேறு ஏதோ ஒரு எழவு காரணம் சொல்லி குடிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அப்பொழுதும் மதுவிலக்கு வேண்டுமென்று சிறு சிறு சலம்பல் எப்போதாவது கேட்டுக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அப்பொழுதெல்லாம் குடிப்பவர்களுக்கு குடிக்காமல் இருக்கும் சமயங்களிலோ, சமூகத்தின் சராசரி பொது உரையாடல்களிலோ “இந்த சனியனை முதலில் ஒழிச்சுக்கட்டனும்” என்ற குற்றவுணர்ச்சியோ அல்லது “தம்பி, குடியை மட்டும் பழகாதே, ஆளை ஒருநாள் சாய்ச்சுடும்” என்ற அறிவுரைகளோ காணக்கிடைக்கும். அதையெல்லாம் கேட்டு, சபதமெடுத்துக் கொண்டு திருந்தியவர்கள் எத்தனை பேரெனத் தெரியவில்லை. ஆனால் குடிப்பது தவறு என்ற நினைப்பாவது இருந்தது. ஆனால் இன்று குடியை வெறுக்கும் ஒருவன் கூட, எங்கே தனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்று சொன்னால் சமுதாயத்தின் பொது நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டவனாக, வேற்று கிரகவாசியைப் போல பார்க்கப்படுவோமோ என்றெண்ணும் அளவுக்கு குடியின் ஊடுறுவலும், குடி பற்றிய பேச்சும் சாகசத் தன்மையாக மாறிப் போயிருக்கிறது.

குடியை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அரசாங்கம், மதுக்கடையை தானே எடுத்து நடத்துகிறது. வழக்கமாய் அரசு நடத்தும் வியாபாரம் படுத்துக் கொள்ளும் என்பது தான் பொதுபுத்தி. ஆனால் இங்கே மட்டும், கம்பை சுழற்றி வேலை வாங்கி, “டார்கெட்” எல்லாம் வைத்து லாபமீட்டுகின்றனர். 

திருவள்ளுவரே மதுவின் தீமைகளைப் பற்றி அதிகாரமாய் சொல்லியிருக்கிறார் என்றால் அப்பவே ” குடிகாரப்பயங்க” இருந்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். அதனால் குடியோடு வளர்ந்த சங்ககால மறத்தமிழர்களான, தேடிப்போய் குடிக்கும் “ப்ரஃபஸனல்” குடிகாரர்களைப் பற்றி கவலை கொள்ள நாமொன்றும் காந்தியல்ல. ஆனால் முக்குக்கு முக்கு கடையைத் திறந்து வைத்து, ரோட்டில் சும்மா போகிறவனைக் கூட “வாங்க பாஸ், ஒரு கட்டிங் போட்டுட்டுப் போகலாம்” என கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவி விற்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும் டெக்னாலஜி வளருதோ இல்லையோ சீக்கிரமே விளைந்து விடும் நம் பதின்மவயது சிறுவர்கள் பாடு கொண்டாடடம் தான். ஏற்கனவே இறுக்கமான சமூக சூழ்நிலையில் வளரும் நம் சிறுவர்கள், மீசை முளைக்க ஆரம்பித்தவுடனே தங்களையும் பெரிய மனிதர்களாக காட்டிக் கொண்டு “காலர்” தூக்கிவிட எதுடா காரணம் என்று அலைந்து கொண்டிருக்கையில் இந்த மதுவின் கவர்ச்சி அவர்களை வெகுவாகவே வசீகரிக்கிறது. அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கிறது எனும் போது கேட்கவேண்டியதே இல்லை.

ஒரு காலத்தில், மதுவை எதிர்ப்பது எப்படி ஒரு அந்தஸ்தாக பார்க்கப்பட்டதோ இன்று மதுவை ஆதரிப்பது பெரிய “இண்டலக்சுல்” லுக் கொடுக்கிறது போல. அதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் செம சுவாரஸ்யம். அதில் மது விற்பனை மூலமான வருமானம் தான் அரசின் நலத்திட்டங்களுக்கு மூலதனமாக இருக்கிறது என்றொரு அரிய கண்டுபிடிப்பு. அப்படியென்றால் அரசின் வருவாயை இன்னும் பெருக்க மேலும் சில ஐடியாக்களை பரிந்துரைப்போம்.

அரசின் சிறப்பு மானியத்துடன் கஞ்சா செடிகளைப் பயிறிட்டு ஏற்றுமதி செய்வது.
மதுக்கடைகள் இருப்பது போன்று வீதிக்கொரு வீடியோ பூத் வைத்து ”பிட்டு” படங்கள் போட்டுக் காட்டுவது.
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கி அதற்கு “ப்ரிபெய்டு” அட்டைகளை ரேசன் கடைகள் மூலம் அரசே வழங்குவது.

இன்னும் பற்பல வழிகளில் அரசுக்கான வருவாயைப் பெருக்கலாம். நாம் என்ன அரசிடமிருந்து நல்ல நிர்வாகத்தையா எதிர்பார்க்கிறோம். நமக்குத் தேவை எல்லாம் கவர்ச்சிகரமான வாய்வார்த்தைகள் தானே. சொல்ல முடியாது, அடுத்த தேர்தலுக்கு “விலையில்லா மது” கூட ஏதாவதொரு கட்சியின் வாக்குறிதியாக இருக்கலாம்.

அப்புறம், குடியை எதிர்க்கிறவர்கள் எல்லாம் ஏதோ அம்மாஞ்சி போலவும், குடியைப் போற்றுபவர்கள் தாம் புரட்சியை “டமார்”ரென வெடிக்க வைக்கும் கலகக்காரர்கள் போலவும் அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் பரம்பரைக் குடிகாரர்கள் எல்லாம் “கம்முன்னு” உட்கார்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கையில் “வாட்டர் பாக்கெட்”டை, அதுவும் மோந்து பார்த்து விட்டு இந்த அல்ப்பைகள் கொடுக்கும் அலப்பறைகளைப் பார்க்கையில், நாராயணனனை மருந்தடிக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை மதுவிலக்கு வந்து விட்டால், இந்த புரட்சியாளர்கள் பாடு தான் திண்டாட்டம். இவர்களால் மேல்தட்டு போண்டா கோழிகளைப் போல் லைசன்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு குடிக்கவும் வழியிருக்காது. சாமானியர்களைப் போல் கள்ளச்சாராயத்தை அடிக்கவும் தைரியம் இருக்காது. 

ஆனால், இணையம் முழுதும் இவர்கள் பதறுவதைப் போல “பூரண மதுவிலக்கு” எல்லாம் ஒரு நடைப்பயணத்துக்கும் கொஞ்சம் பூட்டுக்களுக்கும் பயந்து அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரும் திராணி இங்கு ஒருவருக்குமில்லை. எனவே இந்த குடிகார “புரட்சியாளர்கள்” வழக்கம் போல குவாட்டரை சாத்திக் கொண்டு, நாட்டின் முன்னேற்றம் பற்றி லெக்சர் அடிக்கலாம், பொங்கலாம், அடங்கலாம், ”நான் எப்பவும் ஸ்டடி!” என்று பிதற்றலாம், வாந்தியெடுக்கலாம், குப்புறக்கா கவுந்து படுத்து புரட்சி செய்யலாம்.

வாழ்க எம் நாடு, வளர்க எம் “குடி”மக்கள் !

******

Monday, February 4, 2013

கடல் - பெருங்காயம்



வாரயிறுதிக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு ஏதேனும் ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த மத்தியவர்க்க கணவனுக்கு, திரைத்துறை சென்ற வாரம் அருளியது இரண்டு படங்கள் தான், டேவிட் மற்றும் கடல். ஏ.ஆர்.ரஹ்மான் கொஞ்சம் ஆசை காட்டி வைத்திருந்ததால் “கடலுக்குள்” குதிப்பது என முடிவானது.

நவீன மணிரத்னம் படங்களின் மீது எப்போதும் ஒருவித ஒவ்வாமை உண்டு. செயற்கை அழகியல் வலிந்து திணிக்கப்பட்டு, எல்லா பாத்திரங்களிலும் இயக்குநரின் முகமே பிரதிபலிக்கும் கொடுமை நிறைந்திருக்கும். போதாதற்கு, செழுமையான தொழில்நுட்பக் குழுவை சேர்த்துக் கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊடக உதவியுடன் பயங்கர எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு கல்லா கட்டிக் கொண்டு, புஸ்வானம் பற்ற வைப்பது. பிறகு படத்தின் தோல்வி சுவடுகள் மறைந்த பிறகு மீண்டும் அடுத்த படத்துக்கான துவக்க விழா, அடுத்த புஸ்வானம். எனவே அன்னாரின் படங்கள் என்றால் தொலைக்காட்சியில் பாட்டு பார்ப்பதோடு நின்று விடும் என் கலையார்வம்.

ஆனால், கடல் துவங்கி முதல் பாதி வரை வேறு மாதிரியான தோற்றத்தைக் காட்டியது. ”சேவகர்களை வெட்டுக் கொடுத்து, குதிரைகளை யானைகளை இழந்து, மந்திரிகளை பணயம் வைத்து, அரசியை கேடயமாக்கி ராஜ்ஜியத்தை காத்து வெற்றியை சுவைப்பதாய் முடியும், மதிநுட்பம் பொருந்திய போர் விளையாட்டாக ஆடப்படும் கடவுளுக்கும் சாத்தானுக்குமான சதுரங்க ஆட்டம். கடவுள் கடவுளாக இருக்கிறபடியால் நேர்வழியில் சென்று தீமைக் காரியங்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாதவராகவும், அதே போல சாத்தானும் தன் குணத்திற்கேற்ப, கிடைக்கின்ற வாய்ப்பில் கீழ்மையான காரியங்களைச் செய்து கடவுளை வெற்றி கொள்கிறான். கடவுளை வெல்ல சாத்தனுக்கு ஒரு தேவதையின் உதவி தேவைப்படுகிறது. அதே போல இறுதியில் கடவுள் சாத்தானை அடக்க இன்னொரு தேவதையின் அருகாமையால் தேவதூதனாக மாறிக் கொண்டிருக்கும் சிறிய சாத்தானை துணைக்கு வைத்துக் கொள்கிறான்.” இது தான் இயக்குநர் நினைத்திருந்த கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி-வெற்றி, வெற்றி-தோல்வி என்ற பரமபத நிகழ்வுகள் எதுவுமின்றி தட்டையாக இருக்கிறது படம். சாத்தான் கடவுளை வீழ்த்திய முதல் சுற்றோடு ஆட்டம் முடிந்து விட்டது. பின்னர் வந்தவையெல்லாம் நேரநிரப்பிகள் தாம். அதுவும் ஒருவன் தன்னைத் தானே ”சாத்தான் சாத்தான்” என்று உரக்கக் கத்திக் கொண்டு எதுவுமே செய்யாமல் தோற்றுப் போவதை பார்க்கையில் “இதுக்குத்தானா இவ்வளவு அலப்பறையக் கூட்டுன?” என்று தான் கேட்கத் தோன்றியது.

பராமரிப்பின்றி காட்டுச்செடி போல வளரும், பதின்மத்தின் துவக்கத்திலிருக்கும் சிறுவன் ஒருவனது அழுக்கெல்லாம் வார்த்தைகளாக, வன்சொற்களாக வெளியேறி இறுதியில் தன் தாயை, தான் தந்தையாக நம்பும் ஒருவனை ஏங்கி அழைக்கும் அழுகையாக முடியும் காட்சி ஒரு தரிசனம். ஆனால் அப்படிப்பட்ட தருனங்கள் படத்தில் மிக சொற்பான இடங்களில் மட்டுமே கிடைத்தது துரதிஷ்டம். அது கடலில் கரைந்த பெருங்காயமாகி விட்டது என்ற வாக்கியத்தை சேர்த்து தலைப்பிற்கு ஒரு இணைப்பு ஏற்படுத்திக் கொள்கிறேன்.

படம் முழுவதும் துருத்திக் கொண்டிருந்த செயற்கைத்தனம் அம்மக்களின் வழக்கு மொழி. வட மாநில திரைத்துறையினருக்கு தமிழர்கள் என்றாலே ஒவ்வொரு வாக்கியத்தையும் “ஐயோ” என்று சொல்லித்தான் துவக்குவார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல நெல்லை மக்கள் என்றாலே “ஏலே” தவிர வேரெதையும் விளிச்சொல்லாக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை இயக்குநருக்கும் இருந்திருக்கும் போல. படம் நெடுக எல்லோரும் எப்போதும் “ஏலே”மயமாகித் திரிகிறார்கள். இன்னொரு உறுத்தல், எப்பொழுது ஃபிரேம் முழுதும் அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு லோடு துணை நடிகர்கள். அவர்களும் கடமை தவறாது ஒவ்வொரு காட்சியிலும் இரண்டடி முன்னே வந்து கேமிராவைப் பார்த்து இரண்டு வரி வசனத்தை ஒரு நான்கைந்து ”ஏலே” சேர்த்துச் சொல்லிவிட்டு பின் செல்கின்றனர். அப்புறம், வில்லன் தான் சுட்டுக் கொல்லும் ஒருவனை, கடலில் தூக்கிப் போடச் சொல்லி விட்டு, ”கடலுக்கு போறவங்களை பக்கத்து ஊர்க்காரங்க சுட்டு கடல்ல போட்றாங்க” என்று சிரித்துக் கொள்கிறான். போகிற போக்கில் வரும் இந்த வசனத்தின் உள்ளர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ தெரியவில்லை.

ஒரு படத்தின் நுண்ணிய கூறுகளையெல்லாம் அலசி ஆராய்ந்து சீர்தூக்கும் பக்குவம் எல்லாம் வாய்க்கப்பெறாததால், என்னளவில் திரைப்படங்களில் இரண்டே இரண்டு பிரிவுகள் தாம். ஒன்று தலைவலி தரக்கூடியது மற்றொன்று தலைவலி தராதது. கடல் என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை, நேற்று பார்த்ததற்கு இன்று வரை தலை “வின்வின்”னென்று தெறித்துக் கொண்டிருக்கிறது. 

படம் உதவி: http://www.zastavki.com/eng/Fantasy/wallpaper-23319-18.htm
******

Wednesday, January 23, 2013

வலசை (பயணம் 3) - சொல்ல செய்தியொன்று இருக்கிறது



"இவ்வலசை ஒரு சிறப்புக்கவனத்திற்குரிய குழந்தையின் தாய்க்கு இம்மியளவு நம்பிக்கையை பெருக்க முடிந்தால், ஒரு கற்றல் குறைபாடுள்ள குழந்தை ஒரு புதிய சொல்லை கற்பதை எளிதாக்க இக்கல்விமுறை தன் புகட்டுமுறையில் திருத்தங்கள் செய்ய ஒரு விதை விழுந்தால், தன்னளவில் இப்பயணத்திற்கான பொருளடையும்" (பக்கம் 212)

சிறப்புக்குழந்தைகளை பேசுபொருளாகக் கொண்டு வெளிவந்துள்ள “வலசை - பயணம் 3” இதழின் ஒருவரிப்படிமம் தான் மேற்கூறியவை. பல்வேறு திசைகளிலிருந்து ஒற்றை செவி நோக்கி உரைக்கப்படும் ஒருபொருட்பன்மொழியாக ஒலிக்கிறது வலசையின் மூன்றாம் பயணம். வேறுபட்ட சூழல்களில், மொழிகளில், நாடுகளில், இலக்கியங்களில் பேசப்பட்ட ஒற்றைக் கரு உருவமாகி வெளிவந்திருக்கிறது. 

ஒரு தேர்ந்த ஆய்வு நூலைப் போல, களஞ்சியத்தைப் போல, விதை நெல்லைப் போல, கன்னி மூலையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள் நிறைந்த பெட்டகத்தைப் போல செழிப்புடன் வந்திருக்கிறது இவ்வலசை ஆழ்ந்த வாசிப்பாளர்களுக்கான அடர்த்தியான பெருளை மென்மையான பேசுமொழியில், வரிகளுக்கிடையில் கண்ணுறுத்தாத போதிய இடைவெளி விட்டு அழகாக உருவாக்கியிருப்பது வலசையின் முதல் வாசகர்களின் தீராத வாசிப்பின் விளைபயன் . 

வலசை - மூன்றாம் பயணத்தின் சில பக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம். முழு இதழையும் இன்னும் வாசிக்கவில்லை. அதற்கு நாட்களாகலாம். சொல்லப்போனால் சில பகுதிகள் என்னளவில், நெருங்க முடியாத அளவிற்கு கனமாகக் கூட இருக்கிறது. நீங்களும் இந்த இதழை வாசிக்கும் போது இதே போன்றோ அல்லது வேறுவிதமான சிரமங்களோ எதிர்கொள்ள நேரிடலாம். ஆனாலும் குழந்தைகளை விரும்புகிற உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் சொல்ல செய்தியொன்றை வைத்திருக்கிறது இவ்வலசை.

வானத்தை அண்ணாந்து பார்க்கும் வானம் தவிர வேறொன்றுமறியாத சிறுவர்கள், எல்லையில்லா வானத்தை தம் சிறகுகளால் மறைத்து வலசை செல்லும் பறவைகளைக் காண்கிறார்கள். தம் கண்களிலிருந்து தொடங்கி, வானமெங்கும் பூத்துக் கிடக்கும் மேகத்தைப் பார்க்கிறார்கள், ஆடுகளைக் கிடையில் அடைப்பதைப் போல மேகத்தை அடைத்து வைக்கிறார்கள். அகன்ற வானத்தின் மேகங்களை ரசித்தபடி தாம் கட்டிய மணல்வீடுகளிலிருந்து வெளியேறும் நீர்மிருகங்களுக்கஞ்சி அவ்ர்கள் ஓடி ஒளியும் பொழுது குழியளவாய் சுருங்கிய ஆகாயம் அச்சிறுவர்களின் வாலாய் திரிகிறது. எல்லையில்லா வானத்தை மேய்த்துக் கொண்டு செல்லும் சிறுவர்களின் உலகிற்கு பயம்கொண்டு சுருளும் வாலாக ஆகாயன் பின் செல்லும் படிமத்தைப் பேசும் ஒரு கவிதை. (மேகத்தைத் தூண்டிலிடும் சிறுவர்கள் - செல்மா பிரியதர்ஸன் - பக்கம் 6)

விதிமுறைகளுக்குள் அடைக்கப்பட்டு போன்ஸாய் மரமாய் கட்டுக்குள் வளர்க்கப்படும் குழந்தைகளைப் பற்றி பேசுகிறது ஒரு கதை (குழந்தை அவள் செய்த முதல் தப்பு -டொனால்ட் பார்த்தலுமே - பக்கம் 7). புத்தகங்களின் பக்கங்களைக் கிழிப்பது குற்றம் எனும் கற்பிதத்தில் தனியறையில் பூட்டி வைக்கும் தண்டனைக்குள்ளாகும் சிறுமி மேலும் மேலும் பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறாள். தண்டனைக்காலம் மலை போல் குவிய, ஒரு முறைநெறிச் சிக்கலுக்கு ஆளாலும் தந்தை கற்பிதங்களை மாற்றி வடிவமைத்துக் கொண்டு மன உளைச்சலிலிருந்து விடுபடுவதாக முடிகிறது. பிற்போக்குத்தனமாய் இருந்த தன் தந்தைக்கு எதிர் செயல்பாடாக பின்னவீனத்துவ முறையில் எழுதப்பட்ட கதை. “வாய்விட்டுப் படி, எழுதிப்பார், சுவரில் கிறுக்காதே” என எண்ணற்ற வழிமுறைகளை, நமக்குக் கற்பிக்கப்பட்டதை நாமும் கண்மூடிக்கொண்டு நமது குழந்தைகளுக்குக் கடத்திக் கொண்டிருப்பது நினைவில் வருவதைத் தடுக்கமுடியவில்லை. 

தேவபாவனைகளின் முணுமுணுப்புடன் வெளிறித் தேய்ந்த தேவதைகள் ஆமோதிக்க, இறுதி ஊர்வலத்தை ஒரு உன்னதமான இசைக்கோர்ப்பாக்கி, மனிதன் என்னும் துன்பவியல் நாடகத்தின் முடிவில் மண்ணரித்துப் போகும் அழகியலை வெளிப்படுத்துகிறது ஒரு கவிதை (வாகை சூடும் புழு - எட்கர் ஆலன் போ - பக்கம் 54). துன்பத்தைக் கொண்டாடும் அகநிலை.

வகுப்பில் கற்றல் குறைபாடுள்ளவனாக சித்தரிக்கப்படும் ஒரு சிறுவன்,  கரும்பலகையில் எழுதியுள்ள எழுத்துக்கள் தலைகீழ் எறும்புச்சாரையைப் போல் நகர்வது ஏன் என தன் ஆசிரியரிடம் கேட்கவும் ஒரு கேள்வி வைத்துள்ளான். ஆனால் அதை உரக்கக் கேட்கவும் துணிவின்றி, ”நீ எதற்கும் லாயக்கற்றவன், நீ இன்னும் கூர்மையாக கவனிக்க வேண்டும்” என்பது போன்ற தொடர்பற்ற அறிவுரைகளால் துவண்டு போய் தனக்கென ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு அதிலேயே சஞ்சரிக்கத் துவங்கி விடுகிறான். அத்தகைய ஒரு குழந்தையில் உள்ளக் கிடக்கையை சொல்கிறது ஒரு கவிதை (கற்றல் குறைபாடுள்ள குழந்தை - ஜேம்ஸ் மெக்லெய்ன் - பக்கம் 66)

இன்னொரு கவிதையில், பள்ளியில் தன்னைத் திட்டும் அனைத்து ஆசிரியர்களையும் கேலிச்சித்திரங்களாக்கி தண்டனை அளிக்கத் துவங்குகிறாள் சிறுமியொருத்தி. குச்சியைக் கொண்டு அதட்டும் டீச்சரின் உடம்பைக் குச்சியாக வரைகிறாள். கிள்ளும் டீச்சரின் காதை தரை வரை இழுத்து வைக்கிறாள். தலைமையாசிரியரின் தலையை மழித்து அதைக் கரும்பலகையாக்கி அதில் மதிப்பெண் இடுகிறாள். பூனைகளை, நாய்க்குட்டிகளை ஒத்த சேட்டைகளால் வீட்டையே கலவரப்படுத்துகிறாள், கலகலப்பூட்டுகிறாள். சில நாட்களுக்குப் பிறகு அவள் உற்சாகமெல்லாம் வடிந்து மௌனமாகிறாள். பள்ளி துவங்கும் நாள் நெருங்குவதை எண்ணி நாங்களும் பெற்றோரும் பதற்றமடைகின்றனர். (வலியின் சித்திரங்கள் - ந.பெரியசாமி - பக்கம் 68)

கல்குழவி கொண்டு மார்பு மொட்டுகளை நசுக்கும் “முலை நீவுதல்” என்னும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க தேசங்களில் உள்ள ஒரு பழக்கம். முறையற்ற கர்ப்பம், கற்பழிப்பு ஆகியவைற்றை தடுப்பதற்காக செய்யப்படுவதாக சொல்லப்படும் இச்செயல் பூப்படையும் சிறுமிகளுக்கு பெரும்பாலும் தம் தாயின் மூலமே நடைபெறுகிறது. மார்புப் புற்று நோய்க்குக் பெரும்காரணியாக இருக்கும் இந்த செயலுக்கு நான்கு மில்லியனுக்கும் மேலான சிறுமிகள் உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அச்சிறுமியரின் வலியைப் பேசும் கவிதை (முலை நீவுதல் - நேசமித்ரன் - பக்கம் 78) நாவற்பழ வாசமும், நீருயிரியைப் போன்று கதகதப்பும் உடைய தன் தாயின் அடிவயிற்றில் முகம்புதைத்து படுத்துறங்கும் வழக்கமுடைய சிறுமி, பூப்பெய்தவுடன் முலை நீவுதலுக்கு உட்படும் பொழுதும் நடுநடுங்கும் கைகளையுடைய தன் தாயின் அடிவயிற்றுக் கதகதப்பை உண்ர்கிறாள். பின்னாளில் புற்று நோய்க்கு தின்னக்கொடுத்த தன் மார்புக் குழிகளை அவளது தாய் வருடும் போது முன்னெப்போதையும் விட நாவற்பழ வாசனை அதிகமாய் கசிவதை உணர்ந்து கண்ணீர் சிந்துகிறாள். 

தன் மனைவியின் பிரசவத்தை எதிர்நோக்கி விரைந்து செல்கின்றான் கணவன். வழியெங்கும் சகுணங்கள் வாழ்த்திசைக்க “மகனாக இருக்கட்டும், மகனாக இருக்கட்டும்” என்று ஆவலுடன் செல்பவனுக்கு மனவளர்ச்சி குன்றிய ஆண்மகவெனக் கூறும் மருத்துவரின் சொல் இடியென இறங்குகிறது. தன் உலகில் இருந்து விலகிவிட்டவனாகவும், இனி ஒருபோதும் தன்னருகே வரமுடியாதவனாகவும் ஆகிவிட்ட மகனைக் குறித்து கண்ட கனவுகளனைத்தையும் புறந்தள்ளி நிற்கும் இளம் தகப்பனைப் பற்றிய கவிதையொன்று. (வாதுமை மரம் - ஜோன் ஸ்டால்வொர்தி - பக்கம் 93)

சர்வ வல்லமை படைத்த ஸ்வஸ்திகையின் கீழ் ஜெர்மனியெங்கும் வேட்டையாடப்படும் யூத அடிமையென அலைக்கழிக்கப்படும் மனதுடன் தன் தந்தையின் வன்கொடுமையால் உழன்று வெதும்பும், தந்தையின் இன்னொரு உருவாக அமைந்த கொடுங்கணவனையும் கொல்ல ஏக்கம் கொள்ளும் இளம்பெண்ணின் குமுறலாக ஒலிக்கிறது இன்னொரு கவிதை. தான் பிறந்த மண்ணும், மண்ணின் மொழியும் கீழ்மையானதாக வெறுக்க வைக்கும் எண்ணம் தழைத்தெழுந்து தன்னை மாயத்துக் கொள்ளுமுன் எழுதிய தற்கொலைக் கவிதையது (அப்பா! - சில்வியா ப்ளாத் - பக்கம் 152)

சூல் கொண்ட நாள் முதல் தொப்புள் கொடியறுத்து முடிச்சிட்டு முதல் சுவாசம் கொண்ட நொடி வரை நேசனும், கார்த்தியும் ஏற்றுக் கொண்ட சிரமங்களை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும், பொறுமைக்கும் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். எந்தப்பருவத்தில் ஊட்டச்சத்து கொடுக்க வேண்டுமென்பதில் மட்டுமல்ல எப்போது பத்தியம் இருக்கவேண்டும் என்பதையும் இவர்கள் அறிந்தே வளர்த்தெடுத்திருக்கிறார்கள் இந்த வலசையை. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே, இன்னும் உயரம் தொடுவீர்கள் !

வலசை - பயணம் 3
பக்கம் 212 (A4 அளவு)
விலை - ரூ 100
தொடர்புக்கு :
nesamithranonline@gmail.com - 9677250213
karthickpandian@gmail.com - 9842171138

******

Tuesday, January 22, 2013

ஃபேஸ்புக் டியடிக்சன் செண்டர்


மணிக்கணக்கில் கணினியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததில் தோன்றிய அரிய குருத்துக்கள்... ச்சீ... கருத்துக்கள்...

***********************************
இணைய நட்புக்கு:

உங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். உங்கள் மீதான நன்மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது. உங்கள் வெற்றியை, மகிழ்ச்சியை இணையத்தில் பகிரும் போதெல்லாம் நானும் ஓரமாய் நின்று உங்கள் கொண்டாட்டத்தில் பங்கு கொள்கிறேன், மனதுக்குள் வாழ்த்து சொல்கிறேன். உங்களது பயணத்தில் நீங்கள் அறியாமலேயே நானும் உடன் வந்து கொண்டே இருக்கின்றேன். 
உங்களுக்கான ஒரு தோல்வியை, ஒரு இழப்பை, ஒரு அவமானத்தை, ஒரு பரிதவிப்பை, ஒரு நம்பிக்கை துரோகத்தை நீங்கள் எழுதும் போது உங்கள் தோள் தொட்டு, இறுக அணைத்து முதுகைத் தட்டிக் கொடுத்து, ஒன்றாய் தேநீர் அருந்தி கண்களால் மட்டும் ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருக்கிறது. 
ஆனால் உங்களுக்கு என்னை யாரென்றே தெரியாது.

#இணையம் கானல் நீர் :(

***********************************
பிரபல எழுத்தாளர் பேட்டி:

எப்படி ஒரே நேரத்தில் எல்லாத் தளங்களிலும் உங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது?

எளியவர்களால் முடியாத சிரமமான காரியம் தான். உள்ளேயிருந்து ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் சொற்களை ரகம் வாரியாக பிரித்து மூட்டை கட்டுவது தான் என் வேலை. அறிவுரை எழுத்தை நாளிதழுக்குக் கொடுப்பேன். புரட்சி எழுத்தை ஒரு ஃபோட்டோ ஷுட் நடத்தி அதனுடன் இணைத்து வார இதழுக்கு அனுப்புவேன். பயணக்கட்டுரையை பாக்கெட் நாவலாய் மாற்றுவேன். யாரையாவது திட்ட வேண்டுமென்றால் கேள்வி பதில் எழுதுவேன். சுயவொழுக்க வகுப்பெடுப்பேன். கட்டுடைத்தல் பற்றிய கதையும் சொல்வேன். அப்புறம் இவ்வாறெல்லாம் பிழைக்க வேண்டிய இருப்பதை பகடியாய் மாற்றிப் பதிவெழுதி பிறகதை புத்தகமாக்கி உங்கள் தலையில் கட்டுவேன்.

# எழுதிக் கொண்டிருக்காத “எழுத்து வியாபாரி” தொகுப்பிலிருந்து.
#புனைவு 

***********************************

பசித்திருக்குமொரு சிறுத்தையைப் போன்று ஒளிரும் கண்களுடன் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது இந்த இரவு. இமைகள் தாழத் துடித்தாலும் ஏதோவொரு பதைபதைப்பில் என்னை ஒப்புக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

#வேலைநிறையஇருக்கு!

***********************************
அழகாக எழுதிய ஒவ்வொரு பேனாவையும் தீர்ந்த பிறகும் கூடை நிறைய சேமித்து வைத்திருப்பவள் என் மனைவி. இரண்டு வரிகளுக்கு மேல் எழுத நேரிடும் போதெல்லாம் எழுத்துக்களோடு பேனாவையும் சேர்த்து தொலைத்து விட்டு வருபவன் நான். 

#இனியஇல்லறம் :)

***********************************
இலக்கிய ஆளுமையான அண்ணன் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.  சிறுகதை எழுதுவதை introduction, literature review, problem statement, research methodology, problem analysis, conclusion என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்புக்கான நேர்த்தியுடன் எழுத வேண்டுமென்றார்.
“நானெல்லாம் ரிசர்ச் ஆர்டிகிளையே கதை போல தான் எழுதி அனுப்பிட்டு இருக்கேன்” என்று தொண்டை வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டு, “சரிண்ணே, சரிண்ணே !” என்று தலையை மட்டும் ஆட்டினேன்.

#தகவல்பிழை  

***********************************
தன்னையறியாமல் கீழிறங்கும் இமையிதழ்களின் வழியே, தண்டவாளப்பயணமாக விரைந்து செல்கின்றன வாசிப்பிலிருக்கும் வரிகள்.

#படிச்சிட்டு இருக்கும் போதே தூங்கி விழுகிறதை எப்படி சமாளிக்குது பாரு, பயபுள்ள !

***********************************

என்னய்யா, சமூக வலைத்தளங்களை கண்காணிக்க ஸ்பெஷல் போஸ்டிங் போட்டோமே, அந்த 402 எங்கய்யா போனார். சத்தத்தையே காணோம்?

சார், அவர் ஃபேஸ்புக்கல பயங்கரமா அடிக்ட் ஆகிட்டாரு சார். நாலு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணிட்டு லீவு போட்டுட்டு ராத்திரி பகலா ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டே இருக்கார் சார். பாவம், நல்லா இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டார்.

#சைபர்லீக்ஸ்

***********************************
இந்த இரவு கண்கொள்ளுமளவு முழுமையாய் விரிந்து கிடக்கிறது. காலங்களின் ஈரம் அடர்த்தியாய் இறங்கியிருக்கும் சருகுகள் பூத்துக் கிடக்கும் மதிகெட்டான் சோலையில் ஊர்ந்து ஊர்ந்து தடம் தேடிச்செல்லும் பாதங்களை வழிநடத்திச் செல்லும் கொம்பின் துணையைப் போன்றா இருக்கிறதிந்த இணையம்?

***********************************
சக இணைய பயனாளிகளுக்கு:

சும்மா வேடிக்கை பார்க்குற நமக்கே இவ்வளவு அடிக்சன் ஆகுதே, தினமும் மொக்கை ஸ்டேடல் போட்டு எக்கச்சக்க “லைக்” வாங்குறவங்களுக்கு எவ்வளவு போதையா இருக்கும்!

#விரைவில் ஆரம்பம், ஃபேஸ்புக் டியடிக்சன் செண்டர்,  கூகுள் பிளஸ் கிளை.

***********************************

Monday, January 21, 2013

சூறாவளி காற்றில் சுண்டல்


கூகிள் பிளசிலும், ஃபேஸ்புக்கிலும் அவ்வப்பொழுது கிறுக்கியவை, இங்கேயேயும்....

பிறந்த வீட்டுக்கு சென்றால் போதும், பெண்களின் சவுண்டு சிஸ்டம் தானாகவே சிலபல டெசிபல் அதிகரித்துக் கொள்கிறது.

***********************************
இடர்க்காலங்களில் வலியதன் மௌனமும் தன்னை அண்டியிருக்கும் எளியதற்கான துரோகமே !

***********************************
வயிறைக் கட்டி வாயைக் கட்டி சீட்டு கட்டி சிறுகச் சிறுக சேமித்து மொத்தமாய் செலவழிக்கும் நடுத்தரவர்க்கம்.

***********************************
ரோகித் சர்மாவுக்கு எங்கூட்டு சின்னப்பையன் வைத்திருக்கும் பெயர் “சொங்கி மங்கி” :)

***********************************
புதிய வாழ்க்கை முறைக்குப் பழகி விட்டோம். கரண்ட் இருந்தால்   ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய், கரண்ட் இல்லாவிட்டால் மூன்று ரூபாய்.

யாரைக் குறை சொல்ல ?

***********************************

போங்க தம்பி, நாங்கல்லாம் மிளகா பஜ்ஜிக்கு காரச்சட்னி வச்சு சாப்பிட்றவய்ஙக.. காரக்குழம்புக்கு பட்ட வத்தல் தொட்டுக்கிறவய்ங்க... இங்க வந்து உப்புமாக்கு சக்கரை கேட்டுகிட்டு !

#பிரபல இலக்கியவாதியின் பன்ச்

***********************************
பொருளின் தரத்தை விட,பொருளைப் பற்றிய எதிர்பார்ப்புளை ஏற்றி விட்டு கல்லா கட்டும் வித்தையை எவ்வளவு திறமையாக செய்கின்றனர் திரைத்துறையினர் !

#ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது மச்சி !!!

***********************************
இரண்டு மூன்று வருடங்களாக வியாபாரம் ஆகாமல் இருந்த, பாண்டியராஜனின் ஏதோவொரு படத்தை நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பினார்களே... விஸ்வரூபம் அது மாதிரி இல்லையே!

#கோயிந்துகொஸ்டீன்

***********************************
"எனக்கு என் புருசன் தான், எங்களுக்கு எப்பவும் ........... கடை தான்”  - மதுரையில் இன்று பார்த்த ஒரு விளம்பரம்.

#என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க !!!

***********************************
நான்: ”நாங்கெல்லாம் சூறாவளி காத்துல சுண்டல் சாப்பிடுறவிங்க, அடைமழைல அவல் சாப்பிடுறவிங்க !”

மைண்ட்வாய்ஸ்: இதெல்லாம் அந்தந்த சீசன்ல எல்லாரும் பண்றது தான். இதெப்போய் பெரிசா சொல்லிக்கிட்டு... பேசாம போப்பா!

#ஸ்டேடஸ்அப்டேட்

***********************************
தன் குறட்டை சத்தம் கேட்டு, தானே அலறியடித்து தூக்கம் கலைந்து எழுந்து உட்காரும் நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது.

***********************************
வெளியூர் கிளைகளிலிருந்து வரும் அலுவல தொலைபேசி அழைப்புகளில் பேசுவது “சாரா” இல்லை “மேடமா” என புலப்படாத சமயங்களில் சும்மா பொதுவாகவே பேசி வைத்ததும் வரும் பாருங்க ஒரு சங்கடம் .... 

#அலுவலக அசம்பாவிதங்கள்

***********************************
பெருநகர மூட்டைகளிலிருந்து ஒருவழியாக அவிழ்த்துக் கொண்டு, ஐந்தாறு ஊர்திகளில் தொடர் பயணம் செய்து தாமதமாக வீடு சென்று “அக்கடா” என்று தலை சாய்க்குமுன் நம் வரவுக்காக வாசலையும் அலைபேசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு, சமைத்த பலகாரங்களோடும் பரிதவிப்போடும் காத்துக் கிடந்த தாய் தகப்பன், பெண்டு பிள்ளைகளின் கண்ணீர் ததும்பும் சிரிப்பில்... கொண்டாடத்தானே பண்டிகை... அன்பும் நேசமும் எங்கெங்கும் பரவட்டும், அனைவருக்கும் வாழ்த்துகள் !

***********************************
யப்பா... இந்த இண்டெலக்சுவல் வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருக்கிறது !

***********************************