Wednesday, March 27, 2013

நதியின் பெயர் கொண்டோடும் ரயில்

மேனியிலிடும் சித்திரவித்தையின்
துகிலிகை ஓட்டத்திற்கு
தன் கூச்சத்தைப் பழகக் கொடுத்த
முதல் நாளை நினைத்துப் பார்க்கிறாள்
அயல்தேசத்து நடனக்காரி

தூரதேசப் பிரயாணம் போகிறவர்களின்
வீடுகளில் நாய்க்குத் துணையாக 
வயோதிகர்கள்
காவல் இருக்கிறார்கள்.

அடுக்ககங்களின்
கழிவுநீரை மறுசுழற்சி செய்து
தோட்டம் வளர்க்கும் திட்டத்திற்கு
எதிர்ப்பு வாக்குகள் முதலில் பதிவாகின்றன

எந்நேரமும் கஞ்சா புகை மிதக்கும்
கருவேலம்புதரை இன்னும் 
நந்தவனம் என்று தான் அழைக்கிறார்கள்

முன்பு பசியாற்றிக் கொண்டிருந்த
விளைநிலத்தில் மலம் கக்கிச் செல்லும்
அதிவேக ரயிலுக்கு 
நதியின் பெயரைச் சூட்டி
வேடிக்கை பார்க்கிறது காலம் !

******

4 comments:

  1. <>
    மனம் கனத்து சொல்ல முடியாத வலியை ஏற்படுத்தி செல்கிறது ..என்னே வலிமையான வரிகள்...

    ReplyDelete
  2. நல்ல வரிகள்.. வாழ்த்துக்கள்.. த.ம.2

    ReplyDelete
  3. அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்..
    த.ம 1

    ReplyDelete
  4. வைகை ரயிலாகவே
    ஓடினால் நாளை
    குடிநீர்க்கும் முன்பதிவு
    செய்ய வேண்டியிருக்கும்.
    -சித்திரவீதிக்காரன்

    ReplyDelete