Thursday, March 7, 2013

குடிகார சமுதாயம்


முன்பு ஒரு காலம் இருந்தது. அப்பொழுதும் பொழுதுபோக்காக அல்லது எப்போதாவது அல்லது நினைத்தால் மட்டும் அல்லது அவ்வப்போது அல்லது முழுமூச்சாய் அல்லது வேறு ஏதோ ஒரு எழவு காரணம் சொல்லி குடிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அப்பொழுதும் மதுவிலக்கு வேண்டுமென்று சிறு சிறு சலம்பல் எப்போதாவது கேட்டுக் கொண்டு தான் இருக்கும். ஆனால் அப்பொழுதெல்லாம் குடிப்பவர்களுக்கு குடிக்காமல் இருக்கும் சமயங்களிலோ, சமூகத்தின் சராசரி பொது உரையாடல்களிலோ “இந்த சனியனை முதலில் ஒழிச்சுக்கட்டனும்” என்ற குற்றவுணர்ச்சியோ அல்லது “தம்பி, குடியை மட்டும் பழகாதே, ஆளை ஒருநாள் சாய்ச்சுடும்” என்ற அறிவுரைகளோ காணக்கிடைக்கும். அதையெல்லாம் கேட்டு, சபதமெடுத்துக் கொண்டு திருந்தியவர்கள் எத்தனை பேரெனத் தெரியவில்லை. ஆனால் குடிப்பது தவறு என்ற நினைப்பாவது இருந்தது. ஆனால் இன்று குடியை வெறுக்கும் ஒருவன் கூட, எங்கே தனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்று சொன்னால் சமுதாயத்தின் பொது நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டவனாக, வேற்று கிரகவாசியைப் போல பார்க்கப்படுவோமோ என்றெண்ணும் அளவுக்கு குடியின் ஊடுறுவலும், குடி பற்றிய பேச்சும் சாகசத் தன்மையாக மாறிப் போயிருக்கிறது.

குடியை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அரசாங்கம், மதுக்கடையை தானே எடுத்து நடத்துகிறது. வழக்கமாய் அரசு நடத்தும் வியாபாரம் படுத்துக் கொள்ளும் என்பது தான் பொதுபுத்தி. ஆனால் இங்கே மட்டும், கம்பை சுழற்றி வேலை வாங்கி, “டார்கெட்” எல்லாம் வைத்து லாபமீட்டுகின்றனர். 

திருவள்ளுவரே மதுவின் தீமைகளைப் பற்றி அதிகாரமாய் சொல்லியிருக்கிறார் என்றால் அப்பவே ” குடிகாரப்பயங்க” இருந்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். அதனால் குடியோடு வளர்ந்த சங்ககால மறத்தமிழர்களான, தேடிப்போய் குடிக்கும் “ப்ரஃபஸனல்” குடிகாரர்களைப் பற்றி கவலை கொள்ள நாமொன்றும் காந்தியல்ல. ஆனால் முக்குக்கு முக்கு கடையைத் திறந்து வைத்து, ரோட்டில் சும்மா போகிறவனைக் கூட “வாங்க பாஸ், ஒரு கட்டிங் போட்டுட்டுப் போகலாம்” என கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூவி விற்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும் டெக்னாலஜி வளருதோ இல்லையோ சீக்கிரமே விளைந்து விடும் நம் பதின்மவயது சிறுவர்கள் பாடு கொண்டாடடம் தான். ஏற்கனவே இறுக்கமான சமூக சூழ்நிலையில் வளரும் நம் சிறுவர்கள், மீசை முளைக்க ஆரம்பித்தவுடனே தங்களையும் பெரிய மனிதர்களாக காட்டிக் கொண்டு “காலர்” தூக்கிவிட எதுடா காரணம் என்று அலைந்து கொண்டிருக்கையில் இந்த மதுவின் கவர்ச்சி அவர்களை வெகுவாகவே வசீகரிக்கிறது. அதுவும் கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கிறது எனும் போது கேட்கவேண்டியதே இல்லை.

ஒரு காலத்தில், மதுவை எதிர்ப்பது எப்படி ஒரு அந்தஸ்தாக பார்க்கப்பட்டதோ இன்று மதுவை ஆதரிப்பது பெரிய “இண்டலக்சுல்” லுக் கொடுக்கிறது போல. அதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் செம சுவாரஸ்யம். அதில் மது விற்பனை மூலமான வருமானம் தான் அரசின் நலத்திட்டங்களுக்கு மூலதனமாக இருக்கிறது என்றொரு அரிய கண்டுபிடிப்பு. அப்படியென்றால் அரசின் வருவாயை இன்னும் பெருக்க மேலும் சில ஐடியாக்களை பரிந்துரைப்போம்.

அரசின் சிறப்பு மானியத்துடன் கஞ்சா செடிகளைப் பயிறிட்டு ஏற்றுமதி செய்வது.
மதுக்கடைகள் இருப்பது போன்று வீதிக்கொரு வீடியோ பூத் வைத்து ”பிட்டு” படங்கள் போட்டுக் காட்டுவது.
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கி அதற்கு “ப்ரிபெய்டு” அட்டைகளை ரேசன் கடைகள் மூலம் அரசே வழங்குவது.

இன்னும் பற்பல வழிகளில் அரசுக்கான வருவாயைப் பெருக்கலாம். நாம் என்ன அரசிடமிருந்து நல்ல நிர்வாகத்தையா எதிர்பார்க்கிறோம். நமக்குத் தேவை எல்லாம் கவர்ச்சிகரமான வாய்வார்த்தைகள் தானே. சொல்ல முடியாது, அடுத்த தேர்தலுக்கு “விலையில்லா மது” கூட ஏதாவதொரு கட்சியின் வாக்குறிதியாக இருக்கலாம்.

அப்புறம், குடியை எதிர்க்கிறவர்கள் எல்லாம் ஏதோ அம்மாஞ்சி போலவும், குடியைப் போற்றுபவர்கள் தாம் புரட்சியை “டமார்”ரென வெடிக்க வைக்கும் கலகக்காரர்கள் போலவும் அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் பரம்பரைக் குடிகாரர்கள் எல்லாம் “கம்முன்னு” உட்கார்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கையில் “வாட்டர் பாக்கெட்”டை, அதுவும் மோந்து பார்த்து விட்டு இந்த அல்ப்பைகள் கொடுக்கும் அலப்பறைகளைப் பார்க்கையில், நாராயணனனை மருந்தடிக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை மதுவிலக்கு வந்து விட்டால், இந்த புரட்சியாளர்கள் பாடு தான் திண்டாட்டம். இவர்களால் மேல்தட்டு போண்டா கோழிகளைப் போல் லைசன்ஸ் வாங்கி வைத்துக் கொண்டு குடிக்கவும் வழியிருக்காது. சாமானியர்களைப் போல் கள்ளச்சாராயத்தை அடிக்கவும் தைரியம் இருக்காது. 

ஆனால், இணையம் முழுதும் இவர்கள் பதறுவதைப் போல “பூரண மதுவிலக்கு” எல்லாம் ஒரு நடைப்பயணத்துக்கும் கொஞ்சம் பூட்டுக்களுக்கும் பயந்து அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரும் திராணி இங்கு ஒருவருக்குமில்லை. எனவே இந்த குடிகார “புரட்சியாளர்கள்” வழக்கம் போல குவாட்டரை சாத்திக் கொண்டு, நாட்டின் முன்னேற்றம் பற்றி லெக்சர் அடிக்கலாம், பொங்கலாம், அடங்கலாம், ”நான் எப்பவும் ஸ்டடி!” என்று பிதற்றலாம், வாந்தியெடுக்கலாம், குப்புறக்கா கவுந்து படுத்து புரட்சி செய்யலாம்.

வாழ்க எம் நாடு, வளர்க எம் “குடி”மக்கள் !

******

4 comments:

  1. உங்கள் கோபம் புரிகிறது... இந்த மன நோயை திருத்த யாராலும் முடியாது... தானாக தான் மாற வேண்டும்...

    களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

    குடி மட்டுமல்ல... எந்த போதைப் பொருளையும்... குறைவாகவோ, அதிகமாகவோ, பயன்படுத்துபவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதும் ஒன்றுதான்...

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் குடிப்பழக்கம் இல்லை என்று சொன்னால் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். சங்கடமாகயிருக்கிறது.
    எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்று குடிக்கத் தொடங்கியபின் குடியை நிறுத்துகிறேன் என்றாலும் பார்ட்டி கேட்பார்கள்.

    ReplyDelete
  3. ஒரு இளைஞனின் நியாயமான கோபத்தை இந்த இடுகையில் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நமது "குடி" மக்களை திருத்துவது என்பது இயலாத காரியம். ஆனால் நாமும் ,நமது நண்பர்களும் சரியாக இருந்து கொள்ளலாம். அதுதான் சாத்தியம்.

    ReplyDelete
  4. " சே என்ன பியர் கூட குடிப்பதில்லையா ? " என்று யாரேனும் நம்மை கேட்டுவிட்டு ஒரு கேவலமான லுக் சேர்த்து விடும் போதுதான் "பாவப்பட்ட " ஜென்மமாய் நாம் ஆகிகொண்டிருப்ப்து தெரிய வருகிறது.

    "நாங்கள் பாட்டிலில் கை வைத்தால் தான் நீங்கள் லேப்டாப் ல் கைவைக்க முடியும் " என்று பள்ளிசெல்லும் குழந்தைகளிடம் சொல்லி விட்டு டாஸ்மாக் கிளம்பும் நபர்களின் மத்தியில் இருந்து கொண்டு "வீண் சவடால்" பேசி கொண்டிருக்கிறோம்.

    "ஆங் நாங்கெல்லாம் எப்பவும் லிமிட் டோட கண்ட்ரோல் பண்றவிங்க" என்று சொல்லியே "குடிநோயாளிகள்" ஆனவர்கள் லட்சம் பேர். "சரக்கு" மூளையை என்னமாய் படுத்துகிறது என்று தெரியாமல் அலப்பறைக்கு ஆசைப்பட்டு அலைவோரை என்னவென்று சொல்ல......

    முன்பெல்லாம் (சுமார் பத்து வருடம் முன்பு) ஒரு கல்லூரி விடுதியை எடுத்து கொண்டால் "தண்ணி " அடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்....ஆனால் இப்போது "தண்ணி " அடிக்காதவர்களை சல்லடை போட்டு தேட வேண்டிதிருக்கிறது....மாப்ளே என்ன பார்ட்டி ஏதும் இல்லையா என்று மதியம் லஞ்ச் உடன் ஒரு "டின் பியர்" அடிப்பது சகஜமாகி கொண்டு வருகிறது.

    "நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா , பெண்ணுரிமை என்ன ஆவது" என்று சில படித்த / படித்து கொண்டிருக்கிற பெண்களும் "சியர்ஸ்" சொல்வது வாடிக்கை ஆகிக்கொண்டு வருகிறது.

    "பூரண மதுவிலக்கு" என்பதெல்லாம் இப்போதைக்கு கானல் நீர் , குறைந்த பட்சம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்று "சரக்கு" விற்பனை நேரத்தை நெறிப்படுத்தினால் , கொஞ்சமாவது அலப்பரை குறையும்.

    //நாராயணனனை மருந்தடிக்க //
    //மேல்தட்டு போண்டா கோழிகளைப் // --------- ஹா ஹா

    -மதன்

    ReplyDelete