Monday, February 4, 2013

கடல் - பெருங்காயம்



வாரயிறுதிக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு ஏதேனும் ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த மத்தியவர்க்க கணவனுக்கு, திரைத்துறை சென்ற வாரம் அருளியது இரண்டு படங்கள் தான், டேவிட் மற்றும் கடல். ஏ.ஆர்.ரஹ்மான் கொஞ்சம் ஆசை காட்டி வைத்திருந்ததால் “கடலுக்குள்” குதிப்பது என முடிவானது.

நவீன மணிரத்னம் படங்களின் மீது எப்போதும் ஒருவித ஒவ்வாமை உண்டு. செயற்கை அழகியல் வலிந்து திணிக்கப்பட்டு, எல்லா பாத்திரங்களிலும் இயக்குநரின் முகமே பிரதிபலிக்கும் கொடுமை நிறைந்திருக்கும். போதாதற்கு, செழுமையான தொழில்நுட்பக் குழுவை சேர்த்துக் கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊடக உதவியுடன் பயங்கர எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு கல்லா கட்டிக் கொண்டு, புஸ்வானம் பற்ற வைப்பது. பிறகு படத்தின் தோல்வி சுவடுகள் மறைந்த பிறகு மீண்டும் அடுத்த படத்துக்கான துவக்க விழா, அடுத்த புஸ்வானம். எனவே அன்னாரின் படங்கள் என்றால் தொலைக்காட்சியில் பாட்டு பார்ப்பதோடு நின்று விடும் என் கலையார்வம்.

ஆனால், கடல் துவங்கி முதல் பாதி வரை வேறு மாதிரியான தோற்றத்தைக் காட்டியது. ”சேவகர்களை வெட்டுக் கொடுத்து, குதிரைகளை யானைகளை இழந்து, மந்திரிகளை பணயம் வைத்து, அரசியை கேடயமாக்கி ராஜ்ஜியத்தை காத்து வெற்றியை சுவைப்பதாய் முடியும், மதிநுட்பம் பொருந்திய போர் விளையாட்டாக ஆடப்படும் கடவுளுக்கும் சாத்தானுக்குமான சதுரங்க ஆட்டம். கடவுள் கடவுளாக இருக்கிறபடியால் நேர்வழியில் சென்று தீமைக் காரியங்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாதவராகவும், அதே போல சாத்தானும் தன் குணத்திற்கேற்ப, கிடைக்கின்ற வாய்ப்பில் கீழ்மையான காரியங்களைச் செய்து கடவுளை வெற்றி கொள்கிறான். கடவுளை வெல்ல சாத்தனுக்கு ஒரு தேவதையின் உதவி தேவைப்படுகிறது. அதே போல இறுதியில் கடவுள் சாத்தானை அடக்க இன்னொரு தேவதையின் அருகாமையால் தேவதூதனாக மாறிக் கொண்டிருக்கும் சிறிய சாத்தானை துணைக்கு வைத்துக் கொள்கிறான்.” இது தான் இயக்குநர் நினைத்திருந்த கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி-வெற்றி, வெற்றி-தோல்வி என்ற பரமபத நிகழ்வுகள் எதுவுமின்றி தட்டையாக இருக்கிறது படம். சாத்தான் கடவுளை வீழ்த்திய முதல் சுற்றோடு ஆட்டம் முடிந்து விட்டது. பின்னர் வந்தவையெல்லாம் நேரநிரப்பிகள் தாம். அதுவும் ஒருவன் தன்னைத் தானே ”சாத்தான் சாத்தான்” என்று உரக்கக் கத்திக் கொண்டு எதுவுமே செய்யாமல் தோற்றுப் போவதை பார்க்கையில் “இதுக்குத்தானா இவ்வளவு அலப்பறையக் கூட்டுன?” என்று தான் கேட்கத் தோன்றியது.

பராமரிப்பின்றி காட்டுச்செடி போல வளரும், பதின்மத்தின் துவக்கத்திலிருக்கும் சிறுவன் ஒருவனது அழுக்கெல்லாம் வார்த்தைகளாக, வன்சொற்களாக வெளியேறி இறுதியில் தன் தாயை, தான் தந்தையாக நம்பும் ஒருவனை ஏங்கி அழைக்கும் அழுகையாக முடியும் காட்சி ஒரு தரிசனம். ஆனால் அப்படிப்பட்ட தருனங்கள் படத்தில் மிக சொற்பான இடங்களில் மட்டுமே கிடைத்தது துரதிஷ்டம். அது கடலில் கரைந்த பெருங்காயமாகி விட்டது என்ற வாக்கியத்தை சேர்த்து தலைப்பிற்கு ஒரு இணைப்பு ஏற்படுத்திக் கொள்கிறேன்.

படம் முழுவதும் துருத்திக் கொண்டிருந்த செயற்கைத்தனம் அம்மக்களின் வழக்கு மொழி. வட மாநில திரைத்துறையினருக்கு தமிழர்கள் என்றாலே ஒவ்வொரு வாக்கியத்தையும் “ஐயோ” என்று சொல்லித்தான் துவக்குவார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல நெல்லை மக்கள் என்றாலே “ஏலே” தவிர வேரெதையும் விளிச்சொல்லாக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை இயக்குநருக்கும் இருந்திருக்கும் போல. படம் நெடுக எல்லோரும் எப்போதும் “ஏலே”மயமாகித் திரிகிறார்கள். இன்னொரு உறுத்தல், எப்பொழுது ஃபிரேம் முழுதும் அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு லோடு துணை நடிகர்கள். அவர்களும் கடமை தவறாது ஒவ்வொரு காட்சியிலும் இரண்டடி முன்னே வந்து கேமிராவைப் பார்த்து இரண்டு வரி வசனத்தை ஒரு நான்கைந்து ”ஏலே” சேர்த்துச் சொல்லிவிட்டு பின் செல்கின்றனர். அப்புறம், வில்லன் தான் சுட்டுக் கொல்லும் ஒருவனை, கடலில் தூக்கிப் போடச் சொல்லி விட்டு, ”கடலுக்கு போறவங்களை பக்கத்து ஊர்க்காரங்க சுட்டு கடல்ல போட்றாங்க” என்று சிரித்துக் கொள்கிறான். போகிற போக்கில் வரும் இந்த வசனத்தின் உள்ளர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ தெரியவில்லை.

ஒரு படத்தின் நுண்ணிய கூறுகளையெல்லாம் அலசி ஆராய்ந்து சீர்தூக்கும் பக்குவம் எல்லாம் வாய்க்கப்பெறாததால், என்னளவில் திரைப்படங்களில் இரண்டே இரண்டு பிரிவுகள் தாம். ஒன்று தலைவலி தரக்கூடியது மற்றொன்று தலைவலி தராதது. கடல் என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை, நேற்று பார்த்ததற்கு இன்று வரை தலை “வின்வின்”னென்று தெறித்துக் கொண்டிருக்கிறது. 

படம் உதவி: http://www.zastavki.com/eng/Fantasy/wallpaper-23319-18.htm
******

2 comments:

  1. Win Win Win-ன்னுன்னா வலிக்குது...?
    :)

    ReplyDelete
  2. அது ஒரு முரன்நகை :)

    ReplyDelete