Wednesday, December 10, 2014

பெரியகுளத்தானை மன்னனாய் உடைய தெள்ளுதமிழ்நாடு

சமீபத்தில் கன்னியாக்குமாரி கடலுக்குக் கீழே நடந்த அகழ்வாராய்ச்சியில், லெமூரியா நாகரீகம் தொடர்பான ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த வௌவால் சித்தர் எழுதியிருக்கும் குறிப்பில் பல சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்துள்ளன என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பலம் பொருந்திய அரசி தன் உச்சககட்ட சக்தியுடன் திகழும் பொழுது, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு தீவினையின் பயனை அனுபவிக்கும் பொருட்டு செயலிழந்து மௌனியாக இருக்க நேரிடுமென்றும், அதன் பின் அந்த அரசியின் சிப்பாய்களில் ஒருவன் குடவோலை முறை வழியாக இரண்டாம் முறையாக மன்னனாக தேர்வு செய்யப்படுவான் என்றும் குறிப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

அவ்வாறு அவன் பொறுப்பேற்றபின் நடக்கும் ஆட்சி வரலாறு காணாத விதத்தில் சிறப்பானதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் பொற்கால ஆட்சியாகவும் இருக்கும். மாதமல்ல, வாரம் மும்மாரி பொழிந்து தூர்ந்து போன வாய்க்கால் வழியெங்கும் நுரை பொங்க புதுவெள்ளம் பாய்ந்தோடும். காய்ந்து போன கண்மாய்கள் எல்லாம் நீர் தழும்ப நிறைந்திருந்தும். விசுவாசமே மூச்சாய் கொண்டு இயங்கும் மன்னன் ஆளும் நாட்டில் சட்டசபை கூடி அமைச்சரவை முடிவெடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லாமல், எல்லாம் இயற்கையின் வழியே தானாக நடக்கும். மாற்றுக்கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மன்னன் ஆட்சிப் பொறுப்பில் நிலைத்து நிற்பதற்கான அறிவுரைகளைக் கூறுவர். நம்மைப் போன்ற சாமான்யன் நடத்தும் ஆட்சி, சாமான்யர்களைப் போல அதிகாரமற்றதாய் தான் இருக்கும் என்றும் உணர்வுள்ளவர்களாய் மாறியிருக்கும் மக்கள் மன்னனோடு சேர்ந்து வாரமிருமுறை கூட்டு அழுகைப் பிரார்த்தனையும், அங்கப்பிரதட்சணங்களும் செய்து முன்னூறு ரூபாய் காணிக்கை பெற்றுச் செல்வர். மொத்ததில் ஆள்பவரில் இருந்து அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரும் உள்ளுக்குள் மனம் மகிழ குதூகலித்தாலும் கூட, வெளியே சோகமே உருவான மோன நிலையில் தியானம் செய்தபடியிருப்பர். இவ்வாறான தகவல்களும் அந்த செப்பேட்டில் பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இது பற்றி பழைய தலைமுறை தொலைக்காட்சியில் கருத்து கூறிய பல்துறை வித்தகர், கெத்துக்கு சொத்தை விற்ற கவிஞர். காத்தமுத்து அவர்கள் சங்கப்பாடல்களில் கூட இத்தகைய சிறப்பான மன்னனைப் பற்றிய பாடல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். “ விடிந்தும் விடியாமல் துயில் எழுந்து பல் கூட விளக்காமல் முதல் வேலையாய் தேநீர்க்கடைக்கு வந்து ஓசிப்பேப்பர் படித்து வெட்டி நியாயம் பேசும் மக்களைப் பெருவாரியாய்க் கொண்ட ஊரில், தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கலனிலிருந்து பாலினால் அசுத்தமடைந்த நீரானது மீண்டும் தன் தூய்மை நிலையை அடைய ஆவியாய் உருமாறிக் கொண்டிருக்கும் தேநீர்க்கடையில், தன் இரு கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் நீள வீசி, சளைக்காமல் ஒன்-பை-டூ டீ போடும் ஆற்றல்மிக்க கரங்களையுடைய, குங்குமத்தை விபூதி போல் பூசியிருக்கும் பெரியகுளத்தானை மன்னனாகக் கொள்ளும் தெள்ளுதமிழ்நாடு” என்ற பாடல் வரிகளே இதற்கு சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக இரண்டு நாட்களாகத் தொடரும் பயனற்ற விவாதங்கள் வைரலாகப் பரவி கண்டங்களைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதேச்சையாக தனது பேஸ்புக் பக்கத்தில் பார்த்த சீனாவைச் சேர்ந்த பாஸ்ட்ராமஸ், தனது வீட்டின் பூஜையறையில் பாதுகாத்து வைத்திருந்த தனது எள்ளுத்தாத்தாவான நாஸ்ட்ராமஸின் ஓலைச்சுவடிகளை மோந்து பார்த்ததில் மேலும் சில ஆச்சர்யமான விஷயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாஸ்ட்ராமஸ் குறிப்பின் படி ”குணிந்த முதுகும் நிமிரும் காலம், பரப்பன அக்ரஹார கதவுகள் அடைக்கும். நவநீதம், ஷீலாமயம், எடப்பாடியம் எல்லாம் மேலே பழைய பன்னீர் வாசம் தூக்கலாய் அடிக்கும். ஹூஹூட் வந்து நிறைய நனைக்கும். ஆவின்பாலின் ஜம்ப்பும் இருக்கும்” என்ற கூற்று தன்னிரலில்லா தமிழ் மன்னனின் தற்கால ஆட்சியைக் குறிப்பதாகவே உள்ளது என்று ”உண்மையின் உரைகல்”தெரிவித்துள்ளது.

குறிப்பு: இந்த கற்பனைக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு நமது தமிழ்நாடல்ல. லெமூரியா கண்டத்தில் வடகிழக்கு திசையில் இருநூற்று ஐம்பது மைல்கற்கள் தாண்டி, உள்ளடங்கி அமைந்த ஒரு சிற்றூரின் பெயரும் தமிழ்நாடு தான். எனவே மேலே சொல்லியிருக்கும் குறிப்புகள் யாவும் அந்த சிற்றூரில் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வசித்த ஒரு பழங்குடி இனத் தலைவனைப் பற்றிய குறிப்புகளேயாகும். இதற்கும் நிகழ்காலத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கோ, எந்தப்பொருளுக்கோ, முக்கியமாக எந்த அமைச்சருக்கோ சம்பந்தமில்லை என்று என் சுயநலன் கருதி தெரிவித்துக் கொள்கிறேன்.

******

Wednesday, November 5, 2014

கைப்பிடி மண்

அடர்கானகத்தின் நித்திய சாட்சியாய் ஆயிரமாயிரம் ஆண்டுக்கான நிகழ்வுகளை ரேகையில் பொதிந்து வைத்திருந்த பெருவிருட்சம், வேர் அழுகிச் சரிந்த தினத்தை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பருவம் மூத்த விருட்சம் உளுத்துப் போய் சரிவது ஒன்றும் அசாதாரண நிகழ்வல்ல என்று எண்ணிக்கொண்டவர்கள், சில நாட்களுக்குப் பிறகு விருட்சம் சரிந்த இடத்தில் மீண்டுமொரு கன்றினை நட்டு வைக்க முடிவு செய்து, வளர்பிறை விடிகாலை வேளையில் சிறு பள்ளம் தோண்ட கடப்பாறையைப் பதிக்க அந்தப்பகுதி நிலமெங்கும் அதிர்ந்தது. தொடர்ந்து நிலத்தை அகழ்ந்து கடப்பாறையை இறக்க முயற்சிக்க, நிலம் இன்னும் பல மடங்கு அதிர்ந்து குலுங்கியது. அந்த அதிர்வில் நிலத்திற்குக் குடை போல் காவலிருந்த மேகங்கள் நிலை குலைந்து தெறித்துச் சிதற வளிமண்டலத்தில் விரிசல் விழுந்தது. அந்தப் பிரதேசப் புழுதியின் ஒட்டுமொத்த நச்சுப் புகை சுழலாய் உருவெடுத்து அந்த விரிசல் வழியே வானேகி மேகப் பொதிகளை வன்புணரத்துவங்கின.

சில நாட்களிலேயே, விஷக்காற்றின் புழுதிச் சுழலால் சூல் கொண்ட மேகங்கள் அமில மழையை அந்தப்பிரதேசமெங்கும் பொழிய எஞ்சிய விருட்சங்களும், செடி கொடி தாவரங்களும், புல் பூண்டு வகைகளும் கருகிச் சரிந்தன. பச்சையம் அற்றுப் போன நிலமெங்கும் கொப்பளிக்கும் வெப்பம் பிரதேசத்தை அவ்வப்பொழுது தீக்கிரையாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பறவைகள், பூச்சிகள், புள்ளினங்கள் முற்றிலுமாய் அழிந்த அந்த பிரதேசமெங்கும் அமிலம் கலந்த துர்நாற்றம் வீசத்துவங்கிய மூன்றாம் நாளில் பூமியைப் பிளந்து கொண்டு முளைத்த ஏழு குடைக்காளான்களில் இருந்து சித்தரக்குள்ளர்கள் எழுவர் வெளிப்பட்டனர். அவர்கள் அங்கேயிருந்தவர்கள் அனைவரையும் பாழ்பட்ட அந்த பிரதேசத்தை விடுத்து அயல் கிரகம் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும், தாங்கள் கூறும் நாளில் அவர்கள் பயணத்தைத் துவங்கலாம் என்றும் அதுவரை அந்தப் பிரதேச மக்களனைவரும்  பதுங்கு குழி வெட்டி நிலத்திற்குக் கீழே தங்கியிருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

அயல் கிரகத்திற்கான தங்கள் பயணம் துவங்கும் நாளில் அந்த பிரதேசத்தின் ஆதி வனதேவதையை வருந்தியழைத்து பலியிட்டுச் செல்ல வேண்டுமென்றும், அப்போது தான் அந்த மக்களைத் துன்புறுத்தும் ஊழ் விலகுமென்றும் அந்த குள்ளர்கள் கூறியதைக் கேட்ட மக்கள் சிறிது கலக்கம் கொண்டனர். பிறகு அயல்கிரகத்து புதிய வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாத வனதேவதையை பலியாகக் கொடுத்து விட்டுச் செல்வதொன்றும் பாவச்செயலல்ல என்ற சமாதானத்தைக் தங்களுக்குள்ளாகவே கூறிக்கொண்டனர்.

அயல்கிரகத்துப் பயணத்திற்குக் காத்திருந்த ஏழாம் நாளில் முதல் குள்ளன் மரித்துப் போனான். நிலத்தில் படாதவாறு அவனது உடலைத் தூக்கிப் பிடித்தபடி மற்றவர்கள் இரவு பகலாக அலைந்து கொண்டிருப்பதை பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். ஆனால் அந்தக் குள்ளர்கள் நம்பியவாறு, மரித்தவன் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தான். அவ்வாறு உயிர் மீண்டவன் அவர்கள் செல்ல வேண்டிய அயல் கிரகத்திற்கான திசை நோக்கித் தான் பயணப்பட்டதாகவும், மூன்றாம் நாள் பயணத்தில் தான் சோர்ந்து மயங்கி விழுந்த தருணத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டதாகவும் கூறினான். அதனைக்கேட்ட மக்கள், ஒரு வேளை அவன் சோர்ந்து போகாமல் இருந்திருந்தால் இந்நேரம், அயல் கிரகத்திற்குச் சென்று புதிய வாழ்வை சிருஷ்டிக்கத் துவங்கி இருக்கலாம் என்றெண்ணி அவனைக் கடிந்து கொண்டனர். அவன் அவர்களை நோக்கி மெல்லிய புன்னகை சிந்தியவாறு அமைதியாக கடந்து சென்றான்.

முதலாமவன் மரித்த ஏழாம் நாள், குள்ளனில் இரண்டாமவன் மாண்டு போக அவனது உடலையும் தரையில் படாமல் மற்றவர்கள் தூக்கிக் கொண்டு அலைந்தனர்.  மீண்டும் மூன்றாம் நாளில் அவனும் உயிர்த்தெழுந்தான். அவன் முதலாமவன் கடந்த தூரத்தில் துவங்கி அயல் கிரகத்தை நோக்கி மேலும் சில தூரம் பயணப்பட்டதாகவும், மூன்றாம் நாளில் மயங்கி விழ மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டதாகவும் கூறினான். பதுங்கு குழிகளில் இருந்து இதனைக் கேட்ட மக்கள் தங்களுக்கான புதிய வாழ்வினை அந்தக்குள்ளர்கள் தாமதப்படுத்துவதாக நொந்து கொண்டனர். 

இந்த வரிசை முறையின் தருக்கத்தைத் தொடந்த சித்திரக்குள்ளர்கள், ஏழு பேரும் மரித்து உயிர்த்தெழுந்தபின் தான் தங்களுக்கு அயல் கிரகம் செல்வதற்கான திறப்பு கிடைக்குமென்றும் அதுவரை அந்த மக்கள் காத்திருக்க வேண்டுமென்றும் கூறினர். அதன்படியே ஒவ்வொரு ஏழாம் நாளும் ஒருவன் மரிக்க, மீண்டும் அவன் மூன்றாம் நாள் உயிர்தெழும் பொழுது புதிய கிரகத்தை அடையும் தூரம் குறைந்து வருவதாக உணர்ந்தனர். ஏழாமவன் மரித்த மூன்றாம் நாள் புதிய கிரகத்திற்கான நுழைவாயில் தூரத்தில் இருப்பதைக் கண்டு கொண்டான். அதே நேரம் அந்தப் பிரதேசத்திற்கு, அவனது உடலைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தவர்களை நோக்கி ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது.

ஆகாயம் பார்க்காமல், பதுங்கு குழிகளில் கிடந்து, செத்துப் பிழைத்து உழன்று அல்லலுற்றதற்கான பயனை அடைந்தது போன்று நினைத்துக் கொண்ட அந்த பிரதேசத்து மக்களின் காதுகளில் வாகனம் வரும் ஓசை கேட்டது. மக்கள் சற்று நேரம் பொறுமை காக்க வேண்டும் என்று கூறிய சித்தரக்குள்ளர்களின் வார்த்தைகள் அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. தங்களுக்குக் கிடைக்கும் நல்லூழைத் தடுத்த நிறுத்த அந்தக் குள்ளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று ஆத்திரம் கொண்டவர்கள் அவர்களை கல்லால் அடித்துத் துன்புறுத்தினர். மயங்கி விழுந்த ஆறு குள்ளர்களோடு சேர்த்து அவர்கள் தூக்கிக் கொண்டிருந்த ஏழாமவனின் உடலும் நிலத்தில் விழுந்தது. அவ்வாறு நிலத்தில் விழுந்த அவர்களின் உடல்கள் முழுவதும் அமிலம் பரவ, அவை முழுவதுமாய் வெந்து ஆவியாகிக் கொண்டிருந்தன 

தங்களுக்கான புதிய கிரகத்திற்குச் செல்ல வேண்டிய வாகனம் வந்து சேர்ந்ததில் ஆர்வமுற்ற மக்கள், ஒருவரையொருவர் நெட்டித் தள்ளி வேகமாக வாகனத்தை நோக்கி முன்னேறினர். ஆவியாகிக் கொண்டிருந்த உடல்களில் இருந்து எழுந்த துர்வாடை காற்றில் பரவி அந்த வெளியெங்கும் வியாபிக்கத் துவங்கியது.

மிக அருகில் வந்து நிற்கும் அந்த வாகனத்தை முழுவதுமாய் பார்த்ததும், அவர்களின் குதூகலம் மேலும் அதிகமாகியது. தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்ந்து கொள்ளும் முனைப்பில் இருந்த அவர்கள், வாகனத்தின் கதவுகளைத் திறக்க, பிறப்புறுப்பில் இரும்புக்கழி சொருகிய நிலையில் நிர்வாணமாய் ஒரு பெண் அவ்வாகனத்திலிருந்து கீழே விழுவதைக் கண்டனர். அந்தப்பெண் தங்கள் ஆதி வனதேவதையின் சாயலைக் கொண்டிருப்பதாக அவர்களில் ஒருவர் கூறியதை மற்றவர்கள் வேகமாக ஆமோதித்தனர். தாங்கள் வனதேவதையை வருந்தி அழைத்து அவளை சம்மதிக்கவைத்து பின் அவளை பலியிடுவதற்கான தேவை கூட இல்லாமல் அவளாக தங்கள் பயணத்திற்கு முன் பலியாகியிருப்பதாகவும், அவளின் நினைவாக அவளது உதிரம் தோய்ந்து சிதறிக்கிடக்கும் கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு போய் புதிய கிரகத்தில் வழிபடலாம் என்று முடிவெடுத்து அவசரமாக ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை அள்ளிக் கொண்டனர். பின் ஜன்னலோர இருக்கைகளில் இடம் பிடிப்பதில் முனைப்புக் காட்டி வாகனத்தில் ஏற எத்தனித்தவர்கள், ஏறும் அவசரத்தில் அவளை மிதித்து அவள் மேல் ஏறிச் சென்று, வேடிக்கை பார்க்க வசதியான இடங்களைத் தேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஏறியதும் வாகனம் கரும்புகை கக்கி கிளம்பத் துவங்கியது.

தொடர்ந்த பயணத்தின் ஜன்னல் வழிக்காட்சிகளில் லயித்திருந்தவர்கள், நாப்பத்தி ஒன்பதாவது நாளில் தாங்கள் சேர வேண்டிய கிரகத்திற்கான மிகப்பெரிய நுழைவாயிலைக் கண்டனர். தங்களுக்கான புதிய துவக்கத்திற்குத் தயார்ப்படுத்திக் கொண்டவர்கள் வாகனத்தை விட்டு இறங்கும் தருவாயில் பெருத்த சத்தத்துடன் இடி மின்னல் வெட்டத் துவங்கியது. வானம் வெடித்துச் சிதறியது போல கொட்டத்துவங்கிய அமில மழை நுழைவாயிலையும், வாகனத்தையும், அதில் இருந்த அவர்கள் அனைவரையும் எரித்தது. காற்றில் பரவியிருந்த துர்நாற்றம் புதிய கிரகம் முழுவதிலும் கவியத் துவங்கியது. தூரத்திலிருந்து இதனைக் கண்ணுற்ற ஏழாவது குள்ளனின் அரூப முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5772
******

Monday, October 27, 2014

மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்


மதுரையில் நேற்று நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய விழா, மாலை நான்கரை மணி வரை சிறப்பாகவே நடந்தது. காலை நிகழ்வில், அனைத்து பதிவர்களும் மேடையேறி தங்களைப் பற்றியும், தங்களது வலைப்பூவைப் பற்றியும் அறிமுகம் செய்தனர். சுமார் இருநூறு பேர் அளவிற்கு இருந்த கூட்டத்தில் பத்து இருபது பேர்களைத் தவிர யாரையும் தெரியவில்லை. “என்னடா மதுரைக்கு வந்த சோதனை, பத்து வருசமா இந்த இணையத்துல தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்... ஒருத்தர் பேரும் கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே” என்று லேசாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இவர்கள் எல்லாம் நாம் தமிழ்மணத்தில் இருந்து ”வாலண்டரி ரிடயர்மெண்ட்” வாங்கி வந்த பிறகு அட்மிஷன் போட்டு இப்பொழுது கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் என்று. 

கலகக்காரர்கள் எல்லாம் பதிவுலகை காலி செய்து விட்டு சென்று விட்டதாலோ அல்லது நம்ம ஊர் மதுரையின் வீரத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவோ தெரியவில்லை, நிகழ்வு மிக நேர்த்தியாகவும் அமைதியாகவும் நடந்தது. ஒரு சண்டையில்ல, சச்சரவில்லை... ஒட்டு மொத்த மதுரை மாநகரமே நேற்று “அமைதிப்பூங்கா”வாக மாறிவிட்டது. நிகழ்ச்சி எந்த அளவுக்கு அமைதியாக சென்றதென்றால் வேடிக்கை பார்க்கும் நாம் கொஞ்சம் சத்தமாக சிரித்தால் கூட, நிகழ்ச்சியை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் நம் பக்கம் திரும்பி “என்ன தம்பி பிரச்சனை... நிகழ்ச்சியை கவனிங்க!” என்று அறிவுறுத்துவது போலத் தோன்றும் அளவுக்கு.

புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக வெளிவரும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கையில் “இந்த புத்தகங்களை எல்லாம் எழுதுவது யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்க்ள், எப்படி இத்தனை புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டே இருக்கிறார்கள், இவர்களுக்கான வாசகப் பரப்பு எங்கிருக்கிறது” என்று பெரும் மலைப்பாக இருக்கும். நேற்றைய விழாவில் இந்த சந்தேகங்களுக்கான விடை கிடைத்தது. வலைப்பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்யும் போது, சிலர் இருபது முப்பது புத்தகங்கள் வரை வெளியிட்டு தமிழுக்குத் தொண்டாற்றுவதாகக் கூறினர். எனக்குக் கொஞ்சம் “கேராகி” விட்டது. சுதாரித்துக் கொண்டு ”ஜிகிர்தண்டா” குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்

மதிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். சும்மா சொல்லிக்கூடாது... சப்ஜெக்ட் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் சாலிடாக ஒரு மணி நேரம் பேசினார். வாட்ஸப்பில் பிட்டுப் படம் அனுப்புபவர்களும் வலைப்பதிவர்களும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல, பார்வையாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றார்.

பின்பு வலைப்பதிவர்கள் இயக்கி, நடித்த “சில நொடி ஸ்நேகம்” என்ற குறும்படம் வெளியிடலும், திரையிடலும் நடந்தது. அதன் பின், வலைப்பதிவர்கள் எழுதிய நான்கு புத்தகங்களும் வெளியிடப்பட்டது. 

நண்பர்கள், தங்களது வீட்டுத் திருமண விழாவினைப் போல இந்த வலைப்பதிவர் திருவிழாவை அக்கறையோடும் பொறுப்புடனும் நடத்தினர். தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட விழாக்குழுவினருக்கு வாழ்த்துகள். இணையத்தின் வழி நிகழ்ச்சி நேரலையிலும் ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியின் அரங்க அமைப்பும், அலங்காரமும் மிக நேர்த்தியாக இருந்தது. ”போடியம்” முதல் “ப்ரஜக்டெர் வைக்கும் ஸ்டூல்” வரை அனைத்து ஏற்பாடுகளிலும் இருந்த ப்ரஃபஸனிலிஸம் தனித்தன்மையாகத் தெரிந்தது.  சிறப்பாக அரங்க அமைப்பு செய்த நண்பர் சுப்புரமணி மற்றும் அவரது குழுவினரின் பணி பாராட்டத்தக்கது. அனைவருக்கும் காலையில் மதுரை ஸ்பெஷல் “ஜிகிர்தண்டா”வும், மதிய உணவாக மதுரை மண்ணின் சௌராஸ்ர மணத்திலான நிறைவான உணவும், மாலையில் சூடான டீயும், வடையும் வழங்கப்பட்டது. ”வடை’ கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்று வந்தேன். விழாவை சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

*******

Friday, October 24, 2014

நியாயமாரே !!!

கங்காணி, இந்த வருசம் உருப்படி எல்லாம் எப்படி?

ஐயா, சிங்கர் சூப்பர்ல ஒரு பத்து சின்ன உருப்படிங்கைய்யா. அப்புறம் மத்த ரியாலிட்டி ஷோ வகையறாவுல ஒரு பதினஞ்சு. அப்படி இப்படினு ஒரு இருபது முப்பது புது உருப்படிங்க தேறும். இதுகல, ஒரு ரெண்டு மூனு வருசம் களை புடுங்க விட்டுட்டு அடிச்சு பத்தி விட வேண்டியது தான். இந்தவாட்டி ஜோடில எல்லாம் பழைய டிக்கட்டுங்க தாய்யா, ஒன்னும் புதுசு இல்ல...

அந்த ஜட்ஜு?

ஐயோ, அது ரொம்ப பழசுங்கய்யா.

சரி, விடு... துரைமாருங்க திருவிழாவுக்கு வரும் போது பழைய ஆளுங்க எல்லாம் வந்து வரிசைல நிக்கும்ல?

பின்னே, கால்ல சங்கிலி கட்டி தானே வுட்டுருக்கு.. எங்க கூப்பிட்டாலும் வந்து ஒப்பாரி வச்சுட்டு போகுங்க. என்ன ஆளுக்கொரு அவார்டு கொடுக்கனும், அவ்ளோ தான்.

கழுத, காசா பணமா.. அடிச்சு விடு.  முன்ன, பின்னன்னு அதை வச்சு ஒரு வருசம் ஓட்டலாம். ஏங்கங்காணி, இந்த நீயா நானா உருப்படிங்க எல்லாம் கிழடு தட்டி போயிடுச்சேய்யா, பூராப்பேத்தையும் பத்தி உட்டுட்டு புது ஐட்டமா புடிக்க வேண்டியது தானே.

எங்க சாமி, ஒன்னும் செட்டை விட்டு நகர மாட்டுதுக... ராத்திரி பகலா அங்கனயே கெடயா கெடக்குதுக.  எல்லாத்துக்கு வருசக் கூலி பேசி செட் ப்ராப்ர்டியா தான் உக்கார வச்சிருக்கோம், ஒன்னும் பாதகமில்ல. ஆனா சீரியல் கோஷ்டிங்க தொல்லை தாய்யா கொஞ்சம் அதிகமா இருக்கு. சொல்லாம கொள்ளாம திடீர்னு கல்யாணங்கட்டிட்டு வந்துருதுக. அது கூட பரவால்லன்னு ஒரு நாப்பது நாப்பத்ஞ்சு வயசு வரைக்கும் தாவணி கட்டி சுத்த வுட்டு சமாளிக்கிறோம். அதுக வெக்கப்பட்டு நடிக்கிறேனு பூராப்பயலுகளுக்கும் வெசம் வச்சு சாகடிக்குதுக. ஆனா சினிமா ஆசை வந்து பாதில ஓடிப்போற பொடியனுகளை தான் தடுக்க முடியல.

ஓடுற பொடியனுக கால் நரம்பை வெட்டி விடனுமய்யா. மீறிப்போனா கால்ல சூடு வை, அப்படியும் தப்பிச்சு போய்ட்டானா, ஒன்னும் பிரச்சனையில்ல. அடுத்த திருவிழாவுக்கு அவனுகளையே கூப்பிட்டு “பிரைடு ஆஃப் பரதேசி” அவார்டு கொடுப்போம். கூத்தை தொடர “இவனுக்கு பதில அவன்”னு வெய்ட்டிங் லிஸ்ட்ல இருந்து ஒருத்தனை இறக்கிவிடு. ஆனா ஒன்னு, ரொமான்ஸ் பண்றேன்னு சினுங்குறவகளை மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லனும்ய்யா, கருமம் என்னாலயே தாங்க முடியல.

ஐயா, நாம போடுற படத்துக்கெல்லாம் இப்ப மவுசு குறைஞ்சு போச்சுங்கய்யா
என்னய்யா சொல்ற?

பின்ன என்னங்கய்யா,  கும்கில நடிச்ச மாணிக்கமே ரிடயர்ட் ஆகிருச்சு, அல்லியெல்லாம் ஆண்ட்டி பலவருசம் ஆகிருச்சு. நாம இன்னும் இதையே புதுப்படம்னு சொல்லி திருப்பி திருப்பி போட்டு ப்ளேயரை தேய்ச்சுட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராட்டி வர்ற வருசத்துல என் கணக்கையும் முடிச்சு விடுங்க. ஊருப்பக்கம் போய் பொதிகைல வயலும் வாழ்வும் பார்த்துக்குறேன்.

அட பொறுமையா இருய்யா, ரொம்ப தான் கோச்சுக்குற.... வாராவாரம் நாம நடத்துற கோட்டு மேட்டர் தான் இண்டர்நெட் முழுக்க பெரிய பேச்சு தெரியும்ல
ஆமா, எல்லாம் யோக்கியனுக அங்க தான் துண்டைப் போட்டுட்டு உக்கார்ந்திருக்கானுக... பூராப்பயலுகளும் நம்ம நல்லா காறி காறி தான் துப்புறானுக, ஆனா ரெண்டு செகண்ட் மூஞ்சி தெரியும்டானு சொன்னா, நாலு ராத்திரி மூனு பகலுக்கும் மேல பல்லுல பச்சத்தண்ணி படாம பூட்டியிருக்க நம்ம ஸ்டுடியோ நிலைக்கதவை புடிச்சு தொங்குனமனியே தான் நிக்குறானுக. அதுல நம்மள யாரும் அடிச்சுக்க முடியாதுய்யா.

அப்போது அடுத்த சீசனுக்கான ஆடிஸன் முடிந்து, வெகு உற்சாகமாக புதியவர்கள் உள்ளே நுழைகிறார்கள். கங்காணி மெயின் கேட்டை இழுத்து மூடுகிறார்.

உள்ளேயிருந்து பரிதாபமான ஓலம் ஒலிக்கிறது.

“டிவில நடிக்கப்போறோம்ங்கிற ஆசைல இந்த நரகுழில வந்து விழுந்துட்டீங்களே, போச்சே, நியாமாரே....... உங்க மொத்த வாழ்க்கையையும் ரிபீட் டெலிகாஸ்ட் போட்டே சாகடிக்கப்போறானுகளே.....   நியாமாரேஏஏஏஏ..............”

******

Saturday, October 18, 2014

முப்பத்தைந்து வயது


இந்த முப்பத்தைந்து வயது...
விலக்கிவைக்க முடியாத பொறுப்புணர்வை
உங்கள் மீது வலுக்கட்டாயமாக சுமத்துகிறது
முதலீடுகளில், ஜாமின் கையெழுத்துகளில்,
வரவு செலவு கணக்குகளின் இடைவெளிகளில்
தயவு தாட்சண்யமின்றி உங்களை பணயமாக வைக்கிறது
நீங்கள் விரும்பாத ஒழுங்கு முறைக்கு
உங்களை ஒப்புக் கொடுக்கிறது
ஓர் இரவு வெளியே தங்க வேண்டுமென்றாலும்
மறுநாளுக்கான அடுக்கி வைக்கப்பட்ட
நேர அட்டவணையை குலைத்துப் போடுகிறது
எவ்வளவு நேரமானாலும் வீடு திரும்ப வேண்டுமென்ற
நிர்பந்தத்தை ஈவு இரக்கமின்றி திணித்து விடுகிறது
லேசான வாயுப்பிடிப்பு மாரடைப்புக்கான அறிகுறியோ
என்ற பதட்டம் கொள்ளச்செய்கிறது
இந்த ஆண்டுக்கான போனஸில் கண்டிப்பாக
மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ளவேண்டுமென்று
நினைக்கச் செய்கிறது, கையில் பணம் வந்ததும்
அதை அடுத்த வருடத்திற்கு ஒத்திப் போட வைக்கிறது
தினம் காலை சோற்றுப்பொட்டலத்தை சுமந்து கொண்டு
அலுவலகம் செல்ல வைக்கிறது
அரை நாள் மதிய தூக்கத்திற்காக
ஆறு நாட்கள் விரட்டி விரட்டி ஓட வைக்கிறது
ஒரு வாளித் தண்ணீருக்கு
இரண்டு கை ஏரியல் பவுடர் என்று பாடம் புகட்டுகிறது
உள்ளாடைகளை கொல்லைப்புறத்து கொடியில்
மறைவாய் காயப் போடும்
சூட்சமத்தை சொல்லிக் கொடுக்கிறது
இந்த முப்பத்தைந்து வயது...
யுவதிகளை சிறுமிகளாக பார்க்க வைக்கிறது
ஒன்றாம் தேதியை எதிர்பார்த்து காக்க வைக்கிறது
காப்பீட்டு ஒப்பந்தங்களை வரிவிடாமல் படிக்க வைக்கிறது
இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டுப்பெட்டி மாட்ட வைக்கிறது
இன்னும்...
உங்களின் எந்தவொரு செயலுக்கும்
குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற எதிர்வினையை
சதா நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

********
நன்றி மலைகள்: http://malaigal.com/?p=5666