Friday, October 7, 2016

”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி / பாலகுமார் ( மதுரை )

“Every nation gets the government it deserves.”
-    Joseph de Maistre


விளிம்பு நிலையிலிருக்கும் ஒரு சாதாரண குடிமகன், அதிகார வர்க்கத்தின் வருகைக்காக விரிக்கப்படும் சிவப்புக் கம்பளத்தின் அடியில் புழுவாக நசுக்கப்படுகிறான். அதன் வலி பொறுக்க மாட்டாமல், மனம் பேதலித்து தன்னையே அதிகாரத்தின் தலைமை பீடமாக உருவகித்துக் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான், ஆட்சி அதிகாரமும் அரசும் தனக்குக் கீழே என்ற கற்பிதத்தில் உலவத் துவங்குகிறான். அவன் செய்யும் கோமாளித்தனங்களுக்கான அரச, அதிகார அமைப்பின் எதிர்வினை தான் “ஜோக்கர்”. “வட்டியும் முதலும்”, “குக்கூ” என மக்களின்  இயக்குநர் ராஜூ முருகனின் இரண்டாவது படம்.

சமபலம் கொண்ட இரண்டு நபர்களுக்குள்ளான பகை ஆக்ரோசமான சண்டையாக மாறும். பலம் பொருந்திய ஒருவனுடன் மோதும் பலவீனமானவனோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் இயலாமையை வெளிப்படுத்துவான். தன்னை விட அசுர பலம் கொண்ட மிகப்பெரிய அதிகார அமைப்புடன் மோதும் சாமான்யன் தன்னை கோமாளியாக்கிக் கொண்டு தான் தன் கோபத்தைக் காட்டுவான், தனது கோமாளித்தனங்களின் மூலமே அதிகாரத்தை பதட்டமடையச் செய்வான்.

அந்த வகையில் தனது ஆற்றாமையை, மன்னர் மன்னன் என்னும் சமான்யன் தன்னை “மக்கள் ஜனாதிபதியாக” நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே சட்டங்கள் இயற்றிக் கொண்டு, அரசும் அதிகாரமும் தனக்குக் கீழே இருப்பதாக நம்புகிறான். அது, அவன் சத்துக்கான எதிர்வினை. ஆனால், இடதுசாரி சிந்தனை கொண்டு, மக்களுக்காக தனி மனிதனாக போராடக்கூடிய பொன்னூஞ்சலும், குடியால் கணவனை இழந்து நிற்கும் இசையும் உண்மையான போராளிகள். அவர்கள் ஏன் “மக்கள் ஜனாதிபதி”யின் உதவியாளர்களாக சுருங்கிப் போனார்கள் என்பது விளங்கவில்லை. அது இயக்குநர் தான் சொல்ல விரும்பிய கருத்தை தானே பகடி செய்து கொள்வது போலத் தான் தோன்றுகிறது.

நுகர்வுக் கலாச்சாரம், சுயநலம், உலகமயமாக்கல் என்ற எல்லா மாயைகளுக்குப் பின்னும் இன்றும் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு (ஓட்டு அரசியலில் அது பிரதிபலிக்கவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் தொண்டன் என்றால் காசுக்கு ஆசைப்பட மாட்டான் என்று) பொதுமக்கள் மத்தியில் ஓரளவு மரியாதை இருக்கிறதென்றால் அது கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் இயக்கக் கொள்கைகளின் மீது கொண்டிருக்கக் கூடிய சமரசமற்ற பற்றும், அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப் பட்டுள்ள ஒழுங்குமுறையுமே காரணம். அத்தகைய போராட்டங்களுக்கு வலுசேர்க்கக்கூடிய காட்சிகளை அமைத்தால் “க்ளிஷே” ஆகிவிடும் என்ற இயக்குநர் நினைத்தாரோ என்னவோ, “ஜோக்கர்” தலைமையேற்று நடத்தும் கவன ஈர்ப்பு கலை நிகழ்ச்சிகளாய் அமைத்து பார்வையாளர்களை வெறும் சிரிப்போடு நகர்ந்து போகச் செய்திருக்கிறார்.

ஆரம்ப காட்சிகளில் எங்கெல்லாம் மக்கள் ஜனாதிபதி சென்று உத்தரவு இடுகிறாரோ அங்கே அவரை சமாதானம் செய்து தள்ளிக்கொண்டு செல்ல ஒரு கடைநிலை ஊழியர் வருகிறார், அவ்வளவு தான். அதிகாரத்தில் இருப்பவர், மக்கள் ஜனாதிபதியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அது தான் நிதர்சனம். ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதிலும் அவருக்கு ஆதரவு பொங்கி வழிவது போலவும், அதனால் புரட்சி வெடிக்கக் காத்திருப்பது போலவும் காட்சிப்படுத்தியிருப்பது, இணையத்தில் இயங்கும் ஐயாயிரத்து சொச்சம் பேர் தனது படத்தை ஓட்டித் தள்ளிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அவர்களையும் தன் பக்கம் கூட்டு சேர்த்துக் கொள்வதற்காக, இணைக்கப்பட்ட காட்சிகள் போலவே தான் தோன்றியது.

ஆனால், நீதித்துறையின் முன் காவல்துறை அடிபணிந்து நிற்பதையும், அந்த கோபத்தை எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காட்டும் வன்மத்தையும் உண்மையாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

அரசின் கடைநிலை ஊழியர் முதல், உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் என சகலரையும் ஊழல் பெருச்சாளிகளாக்கி, கடைக்கோடி சாமான்யன் மட்டும் தூய்மைவாதியாக வாழ்கிறான் என்பது என்ன “இஸம்” என்று தெரியவில்லை. நிஜ உலகில் கழிப்பறைகள் கட்டியதாக கணக்குக் காட்டி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வைபவங்களும் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அங்கே சாமான்யன் வெறும் கோப்பையை மட்டும் பெற்றுக் கொண்டு செல்வதில்லை, அவனது பங்காக ஐநூறோ, ஆயிரமோ பெற்றுக் கொண்டு அந்த ஊழலில் தன்னையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்வது தான் வாடிக்கையாக இருக்கிறது. சமூகத்தை பிரதியெடுக்கும் கலை எல்லா திசைகளிலும் ஒரே துலாக்கோலை பயன்படுத்த வேண்டும் தானே.

படத்தின் பலம், கூர்மையான மற்றும் துணிவான வசனங்கள். ஹெலிகாப்டரை வணங்குவது முதல் அரை மணி நேர உண்ணாவிரதம் வரை சமகால அரசியலை நேரடியாகவே பகடி செய்யும் வசனங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் இறுதிக் காட்சியில், பொன்னூஞ்சல் திரையைப் பார்த்து பேசுவதெல்லாம் சொஞ்சம் மேடை நாடக பாணியில் இருப்பது போலத் தோன்றியது. “நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா !” என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது.

படம் முடிந்து வெளிவரும் போது, குற்றவுணர்வா அல்லது போதாமையா அல்லது எரிச்சலா என்று வகைப்படுத்த முடியாத ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. இயக்குநர் சொல்ல விரும்பிய செய்தி என்னவாயிருக்கும் என்ற குழப்பத்துடனே திரையரங்கை விட்டு வெளியேறினேன். பலருக்கும் இதே போன்ற உணர்வுகள் தோன்றியதோ என்னவோ, சலசலப்புடன் வெளியேறும் கூட்டத்திலிருந்து வந்த குரல்களில், “இதை மறக்கணும்னா அடுத்து கிடாரியோ, தர்மதுரையோ பார்த்தா தான் சரியா வரும்” என்ற வார்த்தைகள் கேட்டன. இது தான், இவ்வளவு தான் இன்றைய சராசரி ரசிகனின் மனநிலை என்பதாகப் புரிந்து கொண்டு வந்தேன்.

***
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=9015

Sunday, July 17, 2016

நான் ஏன் தலித்தும் அல்ல - நூல் அறிமுக விழா


மதுரை, நார்த் கேட் ஹோட்டலில் கடந்த வெள்ளியன்று டி.தருமராஜ் அவர்கள் எழுதிய “நான் ஏன் தலித்தும் அல்ல” என்ற கட்டுரை நூலுக்கான அறிமுக விழா நடந்தது. ஏதேச்சையின் பயணியாக(!) அரங்கிற்குள் நுழைந்தேன். மாணவர்கள், படைப்பாளிகள், பெண்கள் என்று அரங்கு நிறைந்த கூட்டம். ஸ்டாலின் ராஜாங்கம் பேசிக்கொண்டிருந்தார். பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற சொல்லாடல் உருவான விதம், வரலாற்றின் ஊடாக ஆதிக்குடிகளின் இருப்பு குறித்து விளக்கமளித்தார். அடுத்ததாக பேசிய பவனந்தி அவர்கள், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பிற்காகத் தங்கியிருந்த பொழுது தனக்கும் தருமராஜ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் பற்றியும், தாங்கள் கொண்டிருந்த கொள்கை கோட்பாடுகள் பற்றியும் கூறினார். இந்த புத்தகத்தில் தான் பொதுவில் விவாதிக்கத் தயங்கும்படியான சில விஷயங்கள் இருப்பதாகவும், அதனை நேர்ப்பேச்சில் தருமராஜ் அவர்களிடம் விவாதிக்க விரும்புவதாகவும் பதிவு செய்தார். அடுத்து பேசிய சுபகுணராஜன் அவர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிராக வளர்ந்த திராவிட அரசியலின் அசுர வளர்ச்சியையும் பின் திராவிடத்தை தாங்கி/சார்ந்து நின்ற இயக்கங்கள் எவ்வாறு திராவிடக் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தன என்பதையும் சுருக்கமாக கூறினார். அவருமே புத்தகங்கள் குறித்த சில கருத்துக்களை பொதுவில் கூற முடியாது என்றார். அடுத்து புத்தகத்தின் பதிப்பாளரான பத்ரி சேஷாத்ரி பேசினார். உண்மையில் புத்தகத்தின் உள்ளடக்கத்தில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவருவதில் தனக்கு உவப்பு இல்லை என்றும், ஆனாலும் பல்வேறு கோட்பாடு, கருத்தாக்கம் கொண்ட பலதரப்பட்ட புத்தகங்களையும் தான் பதிப்பிக்க விரும்புவதாகவும், அதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். தருமராஜ் அவர்கள் அடுத்ததாக அயோத்திதாசர் குறித்த ஒரு புத்தகத்தை எழத வேண்டும், அதையும் தன்னுடைய “கிழக்கு பதிப்பகத்திற்காக” எழுத வேண்டுமென்ற வேண்டுகோளையும் வைத்தார்.

இறுதியாக டி.தருமராஜ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதுவரை கனமான சூழ்நிலையில் இருந்த அரங்கை தனது மெல்லிய, நட்பான குரலில் இலகுவாக்கினார். ”இந்த புத்தகம் வேண்டுவது ஒரு எளிய நட்பை மட்டுமே, இது ஒரு நட்புக்கான அழைப்பு அவ்வளவு தான், வேறொன்றுமில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். ”இப்புத்தகத்துக்கான தலைப்பு கடும் விவாதங்களையும், முரணான பார்வையையும் ஏற்படுத்தி இருந்தாலும், நான் விரும்புவது சக மனிதர்களிம் ஓர் எளிய நட்பை, காதலை மட்டுமே. என்னை நீங்கள் செய்வதெல்லாம் ஏசல் மட்டுமே. நான் உங்களிடம் எதிர்பார்ப்பது களங்கமற்றை நகைச்சுவையை, பரஸ்பரம் நண்பர்களுக்குள் செய்துகொள்ளும் கேலி கிண்டலை. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள  உங்களுக்கு எனது தலித் என்ற இந்த அடையாளம் தடையாக இருக்குமானால் உங்களின் நட்பிற்காக நான் அதையும் துறந்து வரத் தயாராக இருக்கிறேன். நான் ஏன் தலித்தும் அல்ல என்று கூறுகிறேன் என்று உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா?” என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினார். “சமூகத்திடன் தான் எதிர்பார்ப்பது விடுதலை அல்ல. விடுதலை ஒருவரை வென்று அவரைக் காயப்படுத்தி அடையக்கூடியது, நான் எதிர்பார்ப்பது சமநிலையுடன் கூடிய சமாதானத்தை. சமாதானத்தில் ஒருவரும் தோற்றவர் அல்ல. அந்த ஒரு இணக்கத்தைத் தான் நான் பெற விரும்புகிறேன். அதனையே இந்தக் கட்டுரைகளும் பேச முயற்சிக்கின்றன” என்றார். இந்தப்புத்தகத்துக்கு, தலித் அல்ல காதலன் என்ற தலைப்பைத் தான் முதலில் வைக்க எண்ணியதாகவும், அது தான் இந்த புத்தகம் சொல்ல நினைக்கும் கருத்து என்றும் கூறினார். நட்பின் அழைப்பாக அமைந்த தருமராஜ் அவர்களின் குரல் பார்வையாளர்களின் தோளில் கைபோட்டு அணைத்துச் சென்றது போலிருந்தது.

அந்த மாலைப்பொழுதை, இனிமையாய் மாற்றிய பேராசிரியர் தருமராஜ் அவர்களுக்கும், அழைப்பு விடுத்த கவிஞர். சமயவேல் அவர்களுக்கும் நன்றி !

Friday, May 27, 2016

சியாமளா கல்வி அறக்கட்டளை


சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது நண்பர்கள் சேர்ந்து சில நிவாரண உதவிகளை செய்தோம். அதன் வரவு செலவு விவரங்களை “சியாமளா கல்வி அறக்கட்டளை”யிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பி வைத்திருந்தார்கள். செய்த உதவிகளை பொது வெளியில் காட்சிப்படுத்தி விளம்பரம் தேட வேண்டுமா என்ற இயல்பான தயக்கமும், வழக்கமான சோம்பேறித்தனமும் சேர்ந்து கொள்ள அப்படியே போட்டு வைத்திருந்தேன். இன்று இணையத்தில் எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களின் வலைப்பூவில் வந்த பதிவைப்படித்ததும் (http://www.nisaptham.com/2016/05/blog-post_26.html) நல்ல விஷயத்திற்கான விளம்பரம் ஒன்றும் தவறல்ல என்று தோன்றவே வெள்ள நிவாரணப்பணிகளின் முழு விவரங்களை நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது நண்பர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்து, கல்லூரி நண்பர்களிடம் கோரிக்கை வைத்தேன். முதலில் பணமாக பெற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருந்தது. அப்போது ஆபத்பாந்தவனாக அருண்மொழி மேடம் நிர்வகிக்கும் “சியாமளா கல்வி அறக்கட்டளை” மூலம் பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கலாம் என்று முதல் உதவிக்கரம் வந்ததும், ஜி.சி.இ. கல்லூரி நண்பர்கள், பி.எஸ்.என்.எல் நண்பர்கள், சியாமளா கல்வி அறக்கட்டளை கொடையாளர்கள், மற்றும் பல நண்பர்கள் மளமளவென பணத்தை அனுப்பத் துவங்கி விட்டனர். சுமார் பதினைந்து நாட்களுக்குள் ரூ. 1,39,230 வரை வந்தது. அதன் முழு விவரம் கீழே அட்டவணையில் உள்ளது.



நண்பர்கள் நம்மை நம்பி பணம் அனுப்புகிறார்கள். அது உரிய நேரத்தில் உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற  பதட்டம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக சரியான தன்னார்வலர்களை கண்டுபிடித்து, சென்னைக்கும் கடலூருக்குமென நிவாரணப்பொருட்களை அலுவலக நண்பர் செந்தில் குமார் ராஜூ, மேலும் குமரேசன், ஜேம்ஸ் ஆகிய நண்பர்கள் மூலமாக கொண்டு சேர்த்தோம். சிவரஞ்சனி, அரவிந்த், ஆண்டியப்பன், கருப்பையா சார் என சில நண்பர்கள் பொருட்களாகவே நிவாரண உதவியை செய்தார்கள். முதலில் நண்பர் மதுரை சரவணன் உதவியோடு, நண்பர்கள் அருணாச்சலம் சார், கடங்கநேரியான் ஒருங்கிணைத்த மதுரை நண்பர்கள் மூலமாகவும், இரண்டாம் கட்டமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பசுமை நடை குழுவினர் ஒருங்கிணைத்த குழு மூலமாகவும், மூன்றாம் கட்டமாக பி.எஸ்.என்.எல். – டி.எஸ்.ஓ.ஏ சங்க நிர்வாகிகளான நண்பர்கள் சிலாவ் ராவ், ஆதிகோவிந்த் ஒருங்கிணைத்த குழு மூலமாகவும், பின் நான்காவது கட்டமாக நண்பர் ராமஜெயம் மூலமாக ஐ.ஆர். சி.டி.எஸ் குழு வழியாகவும், பின் ஐந்தாவது கட்டமாக நண்பர் “பிக்.ஏ அப்துல் ரஹீம்” மூலமாகவும் அவசர நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தோம். பின் கடந்த பிப்ரவரியில் சென்னையிலுள்ள பார்வையற்றோர் உறைவிடப்பள்ளிக்கு நண்பர் ராமஜெயம் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் தண்ணீர் சுத்தீகரிக்கும் இயந்திரத்தை நிறுவினோம். மீதமிருந்த ரூபாய்க்கு மதுரையில் இருக்கும் நமது சேவாலயம் விடுதி மாணவர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வாங்கிக் கொடுத்தோம். செலவுக்கணக்கு முழு விவரம் அட்டவணை வடிவில் கீழே உள்ளது.



பள்ளி, கல்லூரி, அலுவலகம், இணையம், இலக்கியம், தொழில், மேற்படிப்பு, அறக்கட்டளை, குடும்பம் என்று வெவ்வேறு வட்டங்களில் நண்பர்களுடன் பழகுகிறேன். அந்தந்த வட்டத்துக்குள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், எல்லாம் தனித்தனி தீவுகளாகத் தான் இருந்து வந்தன. முதன்முறையாக, வெள்ள நிவாரணப்பணியின் சிறு துளி இந்த வட்டங்களை இணைத்து என்னுள் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. வெள்ள நிவாரணப்பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றால், அங்கு எனது அலுவகத்தின் வாடிக்கையாளர் வரவேற்கிறார், பள்ளித்தோழியின் கணவர் வந்திருக்கிறார், அலுவலகத்தின் வேறு பிரிவில் வேலை பார்ப்பவர் தானாக வந்து அறிமுகம் செய்து கொள்கிறார், நடுவில் அவ்வப்பொழுது அலைபேசி அடித்துக்கொண்டே இருக்கிறது, எடுத்துப்பேசினால் வெளிநாடுகளில், வெளியூரில் இருக்கும் கல்லூரித் தோழர்கள் தங்களது பங்களிப்பின் விவரங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர், பொதுமேலாளர் அழைத்து அலுவலகம் சார்ப்பாக என்ன செய்யலாம் என விவாதிக்கிறார். வாட்ஸப் குழுக்களிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவுக்கரங்களை நீட்டியவாறே இருக்கின்றனர். இது போல உலகமெங்கும் வெவ்வேறு வகையான இணைப்புப் பாலங்கள். நாம் நேரடியாக சொல்லாவிட்டாலும் கூட, யார் மூலமோ கேள்விப்பட்டு தாமாக வந்து உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் என்று வட்டம் இன்னும் இன்னும் பெரியதாகிக் கொண்டே இருந்தார்கள். உதவி செய்யத் தயாராய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவலை, தான் செய்கின்ற உதவி சரியான நபரிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான். ஒருங்கிணைக்கும் பணியில் இருந்த என் மீதும், சியாமளா கல்வி அறக்கட்டளை மீதும் நம்பிக்கை வைத்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இதை ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கான உதவி என்றில்லாமல், தொடர்ந்து இது போன்ற உதவிகளை ஒருங்கிணைக்க எண்ணமிருக்கிறது. முக்கியமாக ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக. ஏற்கனவே மதுரை “சேவாலயம்” மாணவர்களுக்காக செய்து வரும் உதவிகள் போக மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தி கல்வி சார்ந்த உதவிகள் வழங்க, சியாமளா கல்வி அறக்கட்டளையின் அருண்மொழி அம்மா விருப்பம் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து என்னாலான ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறேன். இதன் செயல்பாடுகள் குறித்து ”தென்திசை” (thendhisai.blogspot.in) தளத்திலும், ஃபேஸ்புக், வாட்ஸப் மூலமாகவும் அவ்வப்பொழுது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். உடனடியாக செய்ய வேண்டியது, வரும் கல்வியாண்டில் பள்ளியில் தொடர பணம் செலுத்த முடியாதவர்களைக் கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

விருப்பமுள்ள நண்பர்கள், அருண்மொழி அம்மா அலைபேசி எண்ணான 9486102324 என்ற எண்ணுக்கு உங்கள் விவரங்களுடன் வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பினால் “சியாமளா கல்வி அறக்கட்டளை” வாட்ஸப் குழுமத்தில் உங்களை இணைத்துக் கொண்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அல்லது shyamalatrust@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமிருந்தால் அதனையும் தயங்காமல் தெரிவியுங்கள்.

நாம் போகிற போக்கில் செய்கின்ற சிறு உதவி, யாரோ ஒருவருடைய வாழ்க்கையே மாற்றி விடலாம். நல்ல நினைப்பை செல்லும் வழியெங்கும் தூவிச் செல்வோம். சேர்ந்து பயணிப்போம் !

 - வி.பாலகுமார்.
******


Friday, May 20, 2016

அகாலத்தின் மெல்லிசை – கவிஞர் சமயவேல் பணிநிறைவில் சில நினைவுகள்

அலுவலகத்தை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில்
விரும்பித் தங்குகிறேன்.
இசை அரங்குகளை விட
சப்தங்கள் உயிர்ப்புடன் எழும்
பேருந்து நிலையங்களில் வெகு நேரம்
பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன்
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும்
குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன்
கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து
வாசகர் கடிதம் எழுதுகிறேன்….. “
-    “இப்பொழுதெல்லாம்”, கவிஞர் சமயவேல்: ஜுலை 31, 2009

மத்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சமயவேல் அவர்கள் கடந்த 30/04/2016 அன்று பணி நிறைவு பெற்றார். இறுக்கங்களுக்குப் பெயர் போன கட்டுப்பெட்டியான துறையில் வேலை பார்த்தபடியே, அவர் நவீனக்கவிதை எழுதும் மனமும் வாய்க்கப்பெற்றவராக இருந்திருக்கிறார். உலக இலக்கியங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் சமயவேல் அவர்களுக்கு இந்த பணி ஓய்வு மிகப்பெரிய இளைப்பாறுதலையும், விடுதலையுணர்வையும், இடைவிடாத வாசிப்பிற்கான களமாக அமையும் என்று நம்புகிறேன். அவரைப் பற்றிய எண்னம் வரும் பொழுதெல்லாம், ஒருமுறை அவர் நேர்ப்பேச்சில் கூறியது தான் முதலில் தோன்றும், “I am in delearning process. தெரிந்த விஷயம் ஒன்வொன்றிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொண்டே வருகிறேன்”. அடர்ந்த வனத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த பருத்த முதுமரத்தில் பெருங்கிளையொன்றின் உள்ளடங்கிய பொந்தில், காற்றின் இசையை ரசித்தபடி தன் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருக்கும் தனித்த ஆண் பறவையின் தோற்றம் அது.

சென்ற ஆண்டு, கவிஞர் சமயவேல் அவர்களின் “பறவைகள் நிரம்பிய முன்னிரவு” கவிதைத் தொகுப்பு வெளியான சமயத்தில், எங்களது அலுவலகத்தின் “வாசிப்போர் களம்” சார்பாக மதுரையில் ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தினோம். அப்போது அவர் தனது ஏற்புரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் கவிதைத்தொகுப்பு தனக்கு மீண்டும் பழைய உத்வேகத்தைத் தருவதாகக் கூறினார். அதே சமயம், அலுவலக நண்பர்கள் பலர் கூடியிருக்க, தன்னை மேடையில் இருத்திப் பாராட்டுவது, தனது பணி ஓய்வுக்கான ஒத்திகையைப் போல இருப்பதகாவும் தெரிவித்தார். அக்கூட்டத்தில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு, எதுபற்றிய கவலையுமின்றி சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த வேளையில் கிடைத்த அரசுப்பணி எவ்வாறு தன்னை கட்டிப்போட்டது என்றும், அரசுத்துறையின் ஒழுங்குமுறை சட்ட திட்டங்கள், காலத்திற்கு ஒவ்வாத வெற்று நடைமுறைகள் ஆகியவற்றில் அமிழ்ந்து காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே இலக்கியத்தை இறுகத் தழுவிக் கொண்டதாகவும் கூறினார். இந்த கெடுபடிகள் நிறைந்த அரசுக் கட்டுப்பாடுகளைத் தாண்டியும் இத்தனை வருடமாய் தனக்குள் இருக்கும் ஒரு நவீனக்கவிஞனை உயிர்ப்புடன் வைத்திருப்பது தனது பரந்துபட்ட வாசிப்பின் மூலம் தான் என்பதையும் குறிப்பிட்டார்.

“எளியவனின் அரசியல் ஆயுதம் மௌனம்” என்பார்கள். தனது அலுவக பணிநாட்களிலும் கூட சமயவேல் அவர்கள் அதனையே தான் கடைப்பிடித்திருந்தார் என்று நினைக்கிறேன். தான் உண்டு தனது வேலை உண்டு என்ற அளவில் தான் அவரது அலுவலக செயல்பாடுகள் இருக்கும். எடுத்துக் கொண்ட வேலையை எவ்வளவு திறம்பட செய்தாலும் கூட அதற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்காதவராகவே இருந்து வந்தார். ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பதவி மாறுதலில் அலுவலக வளாகத்து கட்டிடங்களின் பராமரிப்பு பொறுப்பாளராக அவர் பதவி ஏற்ற பொழுது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானது. அது வரை அந்த வளக்கத்திற்குத் தேவையான தண்ணீர் வெளியில் இருந்து விலைக்குத் தான் பெறப்பட்டு வந்தது. அது பல ஆண்டுகளாக இருந்த நடைமுறை. மாதந்தோறும் தண்ணீருக்காக மட்டுமே பெரும் தொகை செலவாகிக் கொண்டிருந்தது. சமயவேல் அவர்கள் பதவியேற்றதும், அந்த வளாகத்திலுள்ள நீர்நிலைகளை ஆராய்ந்து, பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மோட்டாரை சரி செய்ய வழிசெய்து வெளியிலிருந்து தண்ணீர் வாங்குவதை நிறுத்தினார். இதனால் நிறுவனத்திற்கு மாதம் ஆயிரக்கணக்கான ரூபாய் செவவு தவிர்க்கப்பட்டது. இது போன்ற சீர்மிகு நடவடிக்கைகள் அவ்வப்போது பல்வேறு விஷயங்களில் பல அதிகாரிகளால் செய்யப்படுவதும் உண்டு தான். ஆனால் அது செய்யப்பட்ட உடனேயே தன் பெயர் பொறித்த அடையாளத்தோடு மேல் மட்ட நிர்வாகத்திற்குத் தெரிவித்துவிடுவார்கள். ஆனால் சமயவேல் அவர்கள் தனது சிறப்பான பணிகளை வெளியே சொல்வதில் பெரிய விருப்பம் கொண்டிருக்கவே இல்லை. அது தான் அவரது இயல்பு. நவீன இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கும் சமயவேலின் இலக்கியப்பணி பற்றி உடன் வேலை செய்யும் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்குண்டான கவியுலகில் அவர் அன்றாட வாழ்வின் அபத்தங்கள் அண்டாமல் பார்த்துக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.

வாசிப்பில் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கவிஞர். சமயவேல் அவர்களுக்கு இந்த பணி நிறைவு இன்னும் அதிக நேரத்தையும், படைப்பாற்றலுக்கான மனநிலையையும் அளிக்கட்டும். வாழ்த்துக்கள் !


******
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=8195

நீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள் ( தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ் )

“ஒரு படைப்பு அதன் மொழிபெயர்ப்புக்கு உண்மையாய் இருப்பதில்லை”
-- ஜார்ஜ் லுயிஸ் போர்ஹே

இணையப்புழக்கம் பெருகி விட்ட இந்தக்காலத்தில், எந்த நாட்டின் படைப்புகளையும், இலவச கோப்புகளாக தரவிறக்கிக் கொள்ள எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்றிருக்கிறோம். எந்தவொரு படைப்பாளரைப் பற்றிய குறிப்புகளையும், பின்புலனையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிற இந்த யுகத்தில், உண்மையில் மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறதா என்ன? இது பொதுவாக இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்கிற பிரதான கேள்வி. முன்பு பிற மொழிப்படைப்பாளர்களின் அறிமுகம் நூலகம் தவிர பிற வடிவங்கள் மூலமாக கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் அவர்களின் கலை, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அறிந்து கொண்டோம். உலகமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய சூழ்நிலையிலும், ஒரு படைப்பின் மொழிபெயர்ப்புக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது?

என்ன தான், பிறமொழிப்படைப்புகளை வாசித்தாலும், தன் தாய்மொழியில் ஒரு படைப்பை வாசிப்பதற்கு நிகரான இன்பத்தை, திருப்தியை ஒரு வாசகனுக்கு வேறு எதுவும் தரமுடியாது என்பதைத் தான் இன்றைக்கும் கணிசமான அளவிற்கு வெளியாகும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய நிலையில், மூலப்படைப்பை சிதைத்து விடாமல், அதே சமயம் தனக்கிருக்கும் குறைந்த பட்ச சுதந்திர எல்லைக்குள் படைப்பை மறு ஆக்கம் செய்வது என்பது இன்றைய மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அத்தகைய சவாலை தன் எளிமையான மொழியின் மூலமாக, மூலப்படைப்பிற்கு மிக அணுக்கமான நடையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் ஸ்ரீதர்ரங்கராஜ்.

ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமியின் சிறுகதைகளில் ஸ்ரீதர்ரங்கராஜ் மொழிபெயர்த்த ஏழு கதைகளை ”நீர்க்கோழி” என்ற தலைப்பில் தொகுப்பாக்கி வெளியிட்டு இருக்கிறது வலசை பதிப்பகம். முரகாமி எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தவை. கிழக்காசிய எழுத்தாளராக இருந்தாலும் அவரது படைப்புகளில் மேற்கத்திய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களின் சாயல்கள் இருப்பதைக் காண முடியும். இயல்பாய் யதார்த்த நிகழ்வுகளோடு தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை முறை பற்றிய விவரணை ஒருபுறம். மாய உலகின் கனவுகளோடும், அமானுஷ கற்பனைகளின் படிநிலையான சித்திரம் இன்னொரு புறம். இவையிரண்டும் சமுத்திரத்தில் கலக்கும் நதிகள் போல ஒன்றோடு ஒன்று இணையும் தருணம். மாய யதார்த்ததில் நிகழ் உலகம் தொலைந்து போவது போலவோ அல்லது நிஜ உலகில் அமானுஷத்தின் சுவடுகள் அமிழ்ந்து போவது போலவோ அவரது கதைகள் முடிவுறும். 

இக்கதைகள் மலைகள் மின்னிதழில் தனித்தனியாக வெளியான பொழுது வாசித்ததற்கும், இப்போது தொகுப்பாக வாசிக்கையில் உள்ள அனுபவத்தையும் குறிப்பாகச் சொல்லலாம். முரகாமியின் கதைகள் அனைத்திலும் அவரே பிரதான பாத்திரமாக இருக்கிறார். ஒரு மனிதன் தன் சுயம் சார்ந்த பிரச்சனைகள் மூலம் உலகத்தை அணுகும் கதைகள் அவருடையது. இந்த அகமுகச் சிந்தனை (introvert) தன்மை கொண்ட கதைகளை வாசிக்கும் போது நாமும் அந்த பாத்திரமாக மாறி கதைக்குள் நம்மை எளிதாக ஒப்புக்கொடுக்க முடிகிறது. எளிமையான சிக்கலற்ற வாழ்க்கை ஓர் எதிர்பாராமையை சந்திக்கும் போது நிகழும் தருணங்களைத் தாம் அவரது கதைகள் பேசுகின்றன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றிற்குமே தொடர்பு இருப்பது போலத் தோற்றமளிக்கிறது. “நீர்க்கோழி” கதையில் புதிதாய் வேலைக்குச் செல்பவனுக்கும், “எதேச்சையின் பயணிக்கும்” ஏதோ உறவு இருக்கிறது. ”டோனி தகிதானி”யின் தந்தை தான் ”ஏழாவது மனிதர்” தானோ. “நேற்று” கதையில் வரும் எதையும் மரபார்ந்த முறையில் கேள்விகளின்றி எதிர்கொள்ளும் எரிகா என்னும் அழகிய பெண்ணின் எதிர் வடிவம் தான் ”இரும்புத்துண்டுடன் ஒரு நிலக்காட்சி”யில் வரும் கேளிக்கைத்தீயை மணிக்கணக்காய் பார்த்தபடி அமரந்திருக்கும் ஜுன்கோவோ என்ற எண்னமும் எழுகிறது. அல்லது இவர்கள்
எல்லோருமே ஒருவர் தானோ என்ற எண்ணம் கதைகளை ஒரே வாசிப்பில் தொகுப்பாக வாசிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்குள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணநலன்கள், செயல்பாடுகள், எண்ணவோட்டம், எதிர்வினை, பார்வை எல்லாவற்றையும் வரைபடநிரலாக (graph chart) காட்சிப்படுத்தி அதனை ஆய்வு நோக்கில் அணுகிப் பார்த்தால், இன்னும் கூட விரிவான சித்திரம் கிடைக்கும்.

நிறைவான மொழிபெயர்ப்பை தந்திருக்கும் ஸ்ரீதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

நீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள்
(தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ்)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
வலசை பதிப்பகம்
விலை: ரூ 120.


******
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=8012
******

குழந்தைகள் உலகில் ஒரு பயணம்

இன்றைய சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் எதனையும் வர்த்தகமாக்கி காசுபார்க்கும் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் குழந்தைகளை குறிவைத்து இயங்கும் வியாபார உலகம் மிக பிரமாண்டமானது. நாமும் கூட குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து கொடுக்கிறேன் பேர்வழி என்று, அவர்களுக்கென பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட தனியறை, மேஜை நாற்காலி, கணினி, அலைபேசி, அவர்கள் பார்க்குற, கேள்விப்படுகிற மற்றும் நாம் சிறுவயதில் வாங்க நினைத்து வாங்க முடியாமல் போன பொருட்கள், சந்தையில் குழந்தைகளுக்கென புதிதாய் வரும் எல்லாவிதமான விளையாட்டுப் பொருட்கள், கல்வி சார் சாதனங்கள் என்று நம் குழந்தைகளுக்கென பார்த்துப் பார்த்து வாங்கிக் குமிக்கின்றோம். குழந்தைகளின் மகிழ்ச்சி என்பது நாம் அவர்களுக்காக செலவு செய்யும் பணத்தில் அடங்கி இருக்கிறது என்ற அளவிலேயே நாம் புரிந்து வைத்திருக்கின்றோம். என் குழந்தை என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துடுவேன், அவ எந்தவொரு சின்ன விஷயத்துக்குக் கூட ஏமாந்து போறது எனக்குப் பிடிக்காதுஎன்பதை கொள்கையாக வைத்திருக்கும் பெற்றோர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

நல்ல வசதி வாய்ப்புகளோடு நம் குழந்தைகளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்து கொடுப்பது பெற்றோராகிய நம் கடமை தான். ஆனால் நமது நிகழ் உலகத்தில், மகிழ்ச்சி என்ற பொருளுக்கு நாம் நிர்ணயித்து வைத்திருக்கும் கோட்பாடுகளையும், அளவுகோல்களையும் தாண்டி அவர்களின் உலகை புரிந்து கொள்வது அவசியம். குழந்தைகள் என்னும் சின்ன்ஞ்சிறிய மனிதர்களை வலியக் கொண்டு வந்து நமது மன எல்லைக்குள் அமரவைத்து, நம் கண் கொண்டு அவர்களைக் காணச்செய்வதைக் காட்டிலும், அவர்களின் சிறிய உலகத்தில் நாம் நுழைந்து பார்த்தால் பற்பல அற்புதங்களை நாமும் ஸ்பரிசிக்க முடியும். நாம் அனைவருமே குழந்தைகளாக இருந்தவர்கள் தான். அதை மறந்து விட்ட்தாலேயே நாம் அனைவரும் பெரிய மனிதர்கள் வேடமிட்டு எதெற்கெடுத்தாலும் ஒரு கவலையை கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறோம்.  மாறாக நம்முள் இருக்கும் குழந்தைமை நம்மையும் மீறி வெளிவரும் தருணங்களில் தான் நாம் எந்தவிதக் கவலையுமின்றி ஆத்மார்த்தமான மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்பதே உண்மை.

நம் குழந்தைமையை மீட்பதெப்படி? மிகவும் சுலபமான வழி தான், நாம் குழந்தைகளோடு இருக்கும் போது நாமும் குழந்தைகளாக வேண்டும், அவ்வளவு தான். ஆனால் அவர்களின் உலகிற்கு ஒரு பார்வையாளராக அல்லாமல் சகபயணியாய் சென்று பயணித்தால் மட்டுமே அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும், நம்மாலும் அவர்களின் குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியும். குழந்தைகளின் கற்பனை உலகம் (fancy world) தர்க்கங்களற்ற களங்கமின்மையால் (illogical innocence) நிறைந்து இருக்கும். அங்கே இயல்பு வாழ்க்கையில் நாம் வகுத்து வைத்திருக்கும் நேர்க்கோட்டு வரைமுறைகளுக்கு வேலையே இல்லை. குழந்தைகள் கேள்விகளின் துணை கொண்டே தங்களின் கற்பனை உலகை வளர்க்கின்றனர். அவர்களின் கேள்விகளை காது கொடுத்துக் கேட்டு, பொறுமையாக பதில் சொன்னாலே போதும், அவர்களின் உலகிற்குள் நுழைய கதவு திறந்துவிடும்

என் மகள் பேசத்துவங்கிய பருவத்தில், அவள் பேசும் எல்லா வாக்கியங்களுமே கேள்வியில் தான் முடியும். அதுவும் “ஏன்என்ற வார்த்தை இல்லாமல் ஒரு வாக்கியமும் முடியாது.

அப்பா, ஏன் வெயில் மறஞ்சு மறஞ்சு வருது?”
அப்பா, பஸ் எல்லாம் எங்க தூங்கும்?”
“அப்பா, அம்மா காக்கா வீடு எங்க இருக்கும், பாப்பா காக்கா எப்போ ஸ்கூலுக்குப் போகும்?
அப்பா, வண்டி ஏன் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி போகுது?”
அப்பா, ரொம்ப தூரம் சைக்கிள் ஓட்டுனா எனக்குத் தண்ணி தவிக்குதுல்ல, சைக்கிள் எப்படி தண்ணீர் குடிக்கும்?”
அப்பா, காக்கா, கார் ரெண்டும் பறக்கும்ல, யாரு ஃபர்ஸ்ட்?”
அப்பா, சைக்கிள் ரெஸ்ட் எடுக்க என் பெட்ல படுக்க வைக்கலாமா?”
"அப்பா, இது ஓசூர் பஸ்ஸா, சென்னை பஸ்ஸா?”
"அப்பா, போட்ல ஸ்பீடா போனா கடலுக்குள்ள போலாமா?”
“அப்பா, ஃபிஷ் டேங்குல மீனெல்லாம் எப்போ தூங்கும்?

இப்படியான கேள்விகளை அநேகமாக நம்மில் எல்லோரிடமுமே நம் குழந்தைகள் கேட்டிருப்பார்கள். இக்கேள்விகளுக்கு நேரடியான அறிவுப்பூர்வமான பதில்களைக் காட்டிலும், கற்பனை கலந்த, குழந்தைகளையும் அந்த கேள்விக்கான பதிலின் கதாப்பாத்திரங்களாக உள்நுழைத்து கதை போல விரிவாகச் சொல்லும் போது, அவர்களின் யோசிக்கும் திறனும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கும்.

இப்பொழுது எல்.கே.ஜி படிக்கும் என் மகள், பள்ளியிலிருந்து சுமந்து வரும் கேள்விகளுக்காகவும், கதைகளுக்காகவும் நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம். ஆசிரியை சொல்லும் கதைகளுடன் இவளது சொந்தக் கற்பனையையும் சேர்த்து ஒரே கதை பல்வேறு வடிவங்கள் எடுத்த நிகழ்வுகளும் உண்டு. இக்கதை இப்படித் தான் முடியும் என்ற எந்த வரைமுறைகளையும் நாங்கள் அவளுக்கு நிர்ணயிப்பதில்லை, மாறாக ஒரு பாட்டி வடை சுட்ட கதைக்கே பல பரிமாணங்களை வைத்திருக்கிறோம்.

நாம் படித்த காலத்தில், நம் பெற்றோர் வியந்தது போலவே தான் நாம் நம் குழந்தைகளைப் பார்த்து வியக்கின்றோம். மாறிவரும் கல்வி முறை குழந்தைகளின் மனப்பாட்த்திறனை மட்டும் சோதிப்பதோடு நிற்காமல், அவர்களுக்கான செயல்முறைக் கல்வி அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கவே செய்கிறது. நம் பெற்றோர், “நாங்கள் எல்லாம் ஆறாவதில் தான் “A” எழுதவே கற்றுக் கொண்டோம், என் மகன் எல்.கே.ஜி.யிலேயே எல்லா எழுத்தும் எழுதுகிறான்என்று பெருமை கொண்டிருப்பர். இன்று என் மகள் வீட்டுக்குக் கொண்டு வரும் செயல்முறைப் பயிற்சிகள் எங்களுக்கு வியப்பூட்டுகிறது

கடந்த சுதந்திர தினத்தன்று என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வந்த செயல்முறைத் தாளில், செயல்பணி இவ்வாறு இருந்த்து.

முதலில், சில தாமரைகள் – அவை எத்தனை என்று கூட்ட வேண்டும், தாமரைக்குரிய நிறங்களை வடிவத்திற்குள் சரியாக நிரப்ப வேண்டும். ஏன் அந்த்தாளில் தாமரை இருக்கிறதென்றால், அது நமது தேசிய மலர், அதனால். அது போல அந்த தாளிலேயே, தேசிய விலங்கான புலி, தேசியப்பறவையான மயில் மற்றும் தேசியக்கொடி ஆகியவற்றிற்கும் இது போல கூட்டிப் பார்த்து, நிறமடித்து, அவை அனைத்தும் தேசிய சின்னங்கள் என்ற விளக்கத்தையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறது.  ஒரே நேரத்தில பல விஷயங்களை கற்றுத் தரும் இத்தகைய செயல்வழிக் கல்வி முறை எங்களுக்கு ஒரு சேர  வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வீட்டில் அவளோடு சேர்ந்து நாங்களும் கற்கத் துவங்கியிருக்கிறோம். நாம் படிக்கும் காலத்தில், நோட்டு புத்தகங்களை கிழிக்காமல் பாதுகாப்பதையே தலையாய கடமையாய் கருதியிருப்போம். இன்று பள்ளியில் இருந்து வரும் போதே அன்றைய நாளுக்கான செயல்முறைத் தாளை மட்டுமே என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வருகிறாள். அதையும் வடிவத்துக்கேற்றவாறு கத்தரித்து ஒட்டும் செயலை வீட்டுப்பாடமாக அவளோடு சேர்ந்து நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்.


குழந்தைகள் உலகில் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அன்றாட அயற்சியூட்டும் அலுவல்களுக்கிடையே நமக்குமே நாம் இழந்த பால்யத்தை மீண்டுமொரு முறை வாழ்ந்து பார்க்கும் இனிய அனுபவமாக இருக்கிறது.

நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=7507
******