Friday, October 7, 2016

”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி / பாலகுமார் ( மதுரை )

“Every nation gets the government it deserves.”
-    Joseph de Maistre


விளிம்பு நிலையிலிருக்கும் ஒரு சாதாரண குடிமகன், அதிகார வர்க்கத்தின் வருகைக்காக விரிக்கப்படும் சிவப்புக் கம்பளத்தின் அடியில் புழுவாக நசுக்கப்படுகிறான். அதன் வலி பொறுக்க மாட்டாமல், மனம் பேதலித்து தன்னையே அதிகாரத்தின் தலைமை பீடமாக உருவகித்துக் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான், ஆட்சி அதிகாரமும் அரசும் தனக்குக் கீழே என்ற கற்பிதத்தில் உலவத் துவங்குகிறான். அவன் செய்யும் கோமாளித்தனங்களுக்கான அரச, அதிகார அமைப்பின் எதிர்வினை தான் “ஜோக்கர்”. “வட்டியும் முதலும்”, “குக்கூ” என மக்களின்  இயக்குநர் ராஜூ முருகனின் இரண்டாவது படம்.

சமபலம் கொண்ட இரண்டு நபர்களுக்குள்ளான பகை ஆக்ரோசமான சண்டையாக மாறும். பலம் பொருந்திய ஒருவனுடன் மோதும் பலவீனமானவனோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் இயலாமையை வெளிப்படுத்துவான். தன்னை விட அசுர பலம் கொண்ட மிகப்பெரிய அதிகார அமைப்புடன் மோதும் சாமான்யன் தன்னை கோமாளியாக்கிக் கொண்டு தான் தன் கோபத்தைக் காட்டுவான், தனது கோமாளித்தனங்களின் மூலமே அதிகாரத்தை பதட்டமடையச் செய்வான்.

அந்த வகையில் தனது ஆற்றாமையை, மன்னர் மன்னன் என்னும் சமான்யன் தன்னை “மக்கள் ஜனாதிபதியாக” நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே சட்டங்கள் இயற்றிக் கொண்டு, அரசும் அதிகாரமும் தனக்குக் கீழே இருப்பதாக நம்புகிறான். அது, அவன் சத்துக்கான எதிர்வினை. ஆனால், இடதுசாரி சிந்தனை கொண்டு, மக்களுக்காக தனி மனிதனாக போராடக்கூடிய பொன்னூஞ்சலும், குடியால் கணவனை இழந்து நிற்கும் இசையும் உண்மையான போராளிகள். அவர்கள் ஏன் “மக்கள் ஜனாதிபதி”யின் உதவியாளர்களாக சுருங்கிப் போனார்கள் என்பது விளங்கவில்லை. அது இயக்குநர் தான் சொல்ல விரும்பிய கருத்தை தானே பகடி செய்து கொள்வது போலத் தான் தோன்றுகிறது.

நுகர்வுக் கலாச்சாரம், சுயநலம், உலகமயமாக்கல் என்ற எல்லா மாயைகளுக்குப் பின்னும் இன்றும் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு (ஓட்டு அரசியலில் அது பிரதிபலிக்கவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் தொண்டன் என்றால் காசுக்கு ஆசைப்பட மாட்டான் என்று) பொதுமக்கள் மத்தியில் ஓரளவு மரியாதை இருக்கிறதென்றால் அது கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் இயக்கக் கொள்கைகளின் மீது கொண்டிருக்கக் கூடிய சமரசமற்ற பற்றும், அமைப்பு ரீதியாக ஏற்படுத்தப் பட்டுள்ள ஒழுங்குமுறையுமே காரணம். அத்தகைய போராட்டங்களுக்கு வலுசேர்க்கக்கூடிய காட்சிகளை அமைத்தால் “க்ளிஷே” ஆகிவிடும் என்ற இயக்குநர் நினைத்தாரோ என்னவோ, “ஜோக்கர்” தலைமையேற்று நடத்தும் கவன ஈர்ப்பு கலை நிகழ்ச்சிகளாய் அமைத்து பார்வையாளர்களை வெறும் சிரிப்போடு நகர்ந்து போகச் செய்திருக்கிறார்.

ஆரம்ப காட்சிகளில் எங்கெல்லாம் மக்கள் ஜனாதிபதி சென்று உத்தரவு இடுகிறாரோ அங்கே அவரை சமாதானம் செய்து தள்ளிக்கொண்டு செல்ல ஒரு கடைநிலை ஊழியர் வருகிறார், அவ்வளவு தான். அதிகாரத்தில் இருப்பவர், மக்கள் ஜனாதிபதியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அது தான் நிதர்சனம். ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதிலும் அவருக்கு ஆதரவு பொங்கி வழிவது போலவும், அதனால் புரட்சி வெடிக்கக் காத்திருப்பது போலவும் காட்சிப்படுத்தியிருப்பது, இணையத்தில் இயங்கும் ஐயாயிரத்து சொச்சம் பேர் தனது படத்தை ஓட்டித் தள்ளிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக அவர்களையும் தன் பக்கம் கூட்டு சேர்த்துக் கொள்வதற்காக, இணைக்கப்பட்ட காட்சிகள் போலவே தான் தோன்றியது.

ஆனால், நீதித்துறையின் முன் காவல்துறை அடிபணிந்து நிற்பதையும், அந்த கோபத்தை எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காட்டும் வன்மத்தையும் உண்மையாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

அரசின் கடைநிலை ஊழியர் முதல், உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் என சகலரையும் ஊழல் பெருச்சாளிகளாக்கி, கடைக்கோடி சாமான்யன் மட்டும் தூய்மைவாதியாக வாழ்கிறான் என்பது என்ன “இஸம்” என்று தெரியவில்லை. நிஜ உலகில் கழிப்பறைகள் கட்டியதாக கணக்குக் காட்டி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வைபவங்களும் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அங்கே சாமான்யன் வெறும் கோப்பையை மட்டும் பெற்றுக் கொண்டு செல்வதில்லை, அவனது பங்காக ஐநூறோ, ஆயிரமோ பெற்றுக் கொண்டு அந்த ஊழலில் தன்னையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்வது தான் வாடிக்கையாக இருக்கிறது. சமூகத்தை பிரதியெடுக்கும் கலை எல்லா திசைகளிலும் ஒரே துலாக்கோலை பயன்படுத்த வேண்டும் தானே.

படத்தின் பலம், கூர்மையான மற்றும் துணிவான வசனங்கள். ஹெலிகாப்டரை வணங்குவது முதல் அரை மணி நேர உண்ணாவிரதம் வரை சமகால அரசியலை நேரடியாகவே பகடி செய்யும் வசனங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் இறுதிக் காட்சியில், பொன்னூஞ்சல் திரையைப் பார்த்து பேசுவதெல்லாம் சொஞ்சம் மேடை நாடக பாணியில் இருப்பது போலத் தோன்றியது. “நாளை ஒரு போராட்டம், வீதிக்கு வா தோழா !” என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது.

படம் முடிந்து வெளிவரும் போது, குற்றவுணர்வா அல்லது போதாமையா அல்லது எரிச்சலா என்று வகைப்படுத்த முடியாத ஒரு பாரம் அழுத்திக் கொண்டிருந்தது. இயக்குநர் சொல்ல விரும்பிய செய்தி என்னவாயிருக்கும் என்ற குழப்பத்துடனே திரையரங்கை விட்டு வெளியேறினேன். பலருக்கும் இதே போன்ற உணர்வுகள் தோன்றியதோ என்னவோ, சலசலப்புடன் வெளியேறும் கூட்டத்திலிருந்து வந்த குரல்களில், “இதை மறக்கணும்னா அடுத்து கிடாரியோ, தர்மதுரையோ பார்த்தா தான் சரியா வரும்” என்ற வார்த்தைகள் கேட்டன. இது தான், இவ்வளவு தான் இன்றைய சராசரி ரசிகனின் மனநிலை என்பதாகப் புரிந்து கொண்டு வந்தேன்.

***
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=9015

No comments:

Post a Comment