Friday, May 20, 2016

இயந்திரம்

அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு,குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

இன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.

“என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க!”

“என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

“ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க”

“சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே.எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு”

“அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாது… இன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்க… வேற என்ன செய்ய.. ?”

வழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.

“ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன?” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது? இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்

“என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க?”

“எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க”

“இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா?”

“இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க”

“எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க”

“ம்ம்ம்… நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க!”

“என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்…சும்மா டென்ஷனைக் கிளப்பாதே…  சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு”

ஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.

சாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,“என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா,நிச்சயம் பையன் தான்” என்று வாதிடுவாள்
“பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதே” என்று அவளை வம்பிழுப்பாள்

”அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க!” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்

”பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான்,பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க”

“நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா!”

“சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்” என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.

இன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம் “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான்.அப்பொழுதும் பதிலில்லை.

சரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, “எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தா… உன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.

சில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான்.அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம்!.  முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.

பின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு,உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.


நன்றி: பதாகை மின்னிதழ் - https://padhaakai.com/2016/01/17/machine-story/

Monday, May 9, 2016

யாருக்கு வாக்களிக்கலாம் ?


எழுத்தாளர் சுஜாதா அவர்கள்  யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி சில குறிப்புகள் கொடுத்திருந்ததைப் படித்தேன். என்னளவில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க என்னென்ன வரையறைகள் வைத்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

1. என் சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக எந்தவொரு முன்னுரிமையும் கொடுக்க மாட்டேன்
2. தொழில் நுட்ப பரிச்சயம் / உதவியாளர்கள் இல்லாமல் நேரடி இணையப் புழக்கம் உடையவர் என்றால் நாட்டு நடப்பின் மறுபக்கத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்ற அடிப்படையில் கொஞ்சம் “ப்ளஸ்” 
3. கிரிமினல் கேஸ், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி இப்படியில்லாத, பொதுமக்கள் போராட்டம் சார்ந்த நிகழ்வுகளின் மூலம் ஏற்கனவே கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா என்று பார்ப்பேன்
4. தனிநபர் துதி பாடுகிற போஸ்டர்கள், விளம்பரங்கள் கொடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால் மைனஸ் மார்க்
5. எந்தக்கூட்டணி சார்பாக என்றாலும், கோமாவிற்குச் சென்றுவிட்டார்கள் என்று வசைபாடப்பட்டாலும், என் தொகுதியில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக களத்தில் இருந்தால், பிரதிபலன் பாராமல் களத்தில் போராடுபவர்கள் என்ற அடிப்படையில் , அநேகமாக அவர்களுக்குத் தான் முன்னுரிமை. (மோகன், பாலபாரதி, நன்மாறன், நல்லகண்ணு என்று நம் காலத்திய உதாரணங்களே நிறைய பேர் இருக்கின்றார்கள்)
6. சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறவர்களுக்கோ, அல்லது சர்வாதிகாரத்தைப் போற்றுபவர்களுக்கோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளுக்கோ நிச்சயம் “நோ” தான்
7. சமூகநீதி, இட ஒதுக்கீடு ஆகியவை சார்ந்து செயல்படுகிறவர்கள் என்றால் “யெஸ்”
8. மனுதர்மத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை
9. ஊர், பெயர் தெரியாத சுயேட்சைகளுக்கு நிச்சயமாக இல்லை
10. சத்தியமாக “நோட்டோ” கிடையாது. தற்பொழுதைய நிலையில் அது ஒரு செத்த பாம்பு
11. இருப்பதில் நிறைய படித்திருப்பவருக்கு வாக்களிக்க வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம் (அதிலும் பி.இ. என்று தெரிந்தால் தன்னியல்பாய் காலரைக்கால் வீசம் படி அளவு பாசம் அதிகரிக்கும்)
12.  இது எதுவும் தேறவில்லையென்றால், வெளியே சொல்லாவிட்டாலும் எப்படியும் உள்ளுணர்வுப்பட்சி அந்தந்த சம்யத்திற்கேற்றாற்போல், எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும். ரகசியமாகத் தானே வாக்களிக்கப் போகிறோம். எனவே அட்டைப்பெட்டி மறைப்புக்குப் பின் சென்று அந்த உள்ளுணர்வின்படி ஒரு சின்னத்தை அழுத்திவிட்டு வரவேண்டியது தான். ஆனால் எல்லோருமே அயோக்கியர்கள் தானே, எதற்குப் போய் வீணாய் வரிசையில் நின்று வாக்களிக்க என்று காலாட்டிக் கொண்டு வீட்டில் இருக்காமல், கண்டிப்பாகப் போய் வாக்களிப்பேன்

--- வி.பாலகுமார்

Monday, April 25, 2016

1947 – தீராத துயரம்


1947  என்றவுடன் நமக்கு இயல்பாகத் தோன்றுவது நம் நாடு சுதந்திரம் அடைந்தது குறித்த பெருமை உணர்வு. ஆனால் 1947 என்ற எண்ணை நினைக்கும் போதெல்லாம், நெஞ்சில் ஆறாத வடுக்களோடும், தீராத துயரோடும் அல்லாடும் லட்சக்கணக்கான மக்கள் இதே நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளையர்களால் அடைந்த துன்பங்களை அல்ல, தங்களோடு ஒன்றாய் பிறந்து வளர்ந்த ஒரே நாட்டை, பிராந்தியத்தை, ஊரை சேர்ந்த சக மனிதர்களால் ஏற்பட்ட அவமானங்களையும், இழப்புகளையும் எண்ணி மௌனமாக கண்ணீர் சிந்தியபடியே இருக்கிறார்கள்.

இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பிரித்து, இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளாக்கி தனித்தனியாக சுதந்தரம் தந்துவிட்டுச் சென்றார்கள். அப்பொழுது இந்திய மக்கள், தாங்கள் எந்தநாட்டில் வாழ விரும்புகிறார்களோ அங்கே குடிபெயர்ந்து கொண்டார்கள் என்று ஒற்றை வரி தகவலில் இந்தப் பிரிவினையை கடந்து சென்றிருப்போம். ஆனால் அரசியல் அதிகாரங்களுக்காக திடீரென நடுவில் கிழிக்கப்ப்ட்ட ஒரு கோட்டிற்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்திலுள்ள பெண்கள், குழந்தைகளை, நிலபுலன்களை, சொத்துக்களை இழந்து அகதிகளாக அலைந்து கொண்டிருந்த அவலத்தை உண்மைத்தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிறது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “1947” என்ற சிறு புத்தகம்.

பிரிவினையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களில் இருந்து வலுக்கட்டாயமாக துரத்தியடிக்கப்பட்டனர். அநேகமாக அனைத்து சம்பவங்களிலும் பெண்களைக் கற்பழிப்பது தான் பிரதான நோக்கமாக இருந்தது. இதற்கு பயந்து, ஏதேனும் கும்பல் தங்கள் கிராமத்தைத் தாக்க வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்தால், அந்த கிராமத்திலுள்ள இளம்பெண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பத்தினரே கொன்று விடுவது அல்லது அவர்களை தற்கொலை செய்ய வைப்பது என்ற கொடுமைகளும் நடந்தன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர விரும்பிய பெரும்பணக்காரர்கள் பாகிஸ்தான் தினசரிகளில் தங்களது சொத்து மதிப்பினைக் குறிப்பிட்டு அதற்கு இணையாக பாகிஸ்தானில் சொத்து உள்ளவர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர விரும்பினால், பண்டமாற்று செய்வதைப் போல சொத்துக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று விளம்பரம் செய்தனர். அதே போல் தான் பாகிஸ்தானில் இருந்த பலரும் விளம்பரம் கொடுத்தனர். பணக்காரர்கள் இத்தகைய பரிவர்த்தணைகளில் இறங்க, ஏழைகளோ மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு, தங்களுக்கு இருந்த சொற்ப நிலபுலன்களை விட்டுவிட்டு இடம்பெயரத் துவங்கினர். இதில் கொடுமை என்னவென்றால், செல்லும்  வழியில் தங்கள் குடும்பத்துப் பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றெண்ணி, அவர்களை மொத்தமாகக் கொன்று விட்டோ அல்லது தற்கொலை செய்யச் சொல்லியோ, பின் பயணம் செய்யத் துவங்கினர்.

இவ்வாறு தப்பிப் பிழைத்து எஞ்சி வந்த லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் தீராத ரணமாகப் பதிவாகியிருக்கிறது “1947”. ஆனால் இந்த இந்தியத்திருநாட்டில் இது ஒற்றை நிகழ்வல்ல. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு அமைகிறதோ, அப்பொழுதெல்லாம் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் இந்த சூறையாடல்களும், துரத்தல்களும், கற்பழிப்புகளும், வன்முறையும், அக்கிரமங்களும், அநியாயங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனைக் மட்டுப்படுத்த வேண்டிய ஆளும் அதிகார வர்க்கமோ என்றென்றைக்கும் இந்தத் தீயை அணையவிடாமல் ஊதி ஊதிப் பெரிதாக்கி அதில் குளிர்காய்ந்து சுகம் காண்கின்றனர்.

புத்தகம் சிறிய அளவில் இருந்தாலும், இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வை எளிய மொழியில் பிரதிபலித்திருக்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

புத்தகம்: 1947
பாரதி புத்தகாலயம்
பக்கம்: 30, விலை: ரூ.20.

-------------------------------------

Friday, February 26, 2016

லாக்கப் - நாவல் வாசிப்பனுபவம்


ஒரு பயணத்தின் இணைப்பு ரயிலுக்காக காத்திருந்த நான்கு மணி நேர இடைவெளியில் சந்திரகுமார் எழுதிய “லாக்கப்” நாவலை வாசித்து முடித்தேன். இரயில் நிலையத்தின் மிகுந்த நெரிசல் நேர சலசலப்புகளுக்கு நடுவே அமர்ந்திருந்தாலும் அந்த நான்கு மணி நேரமும் வியர்வையும், மூத்திரமும் முடை நாற்றமெடுக்கும் காவல் நிலையத்தின் சிறிய இருட்டு அறையில் ஒரு விசாரணைக் கைதியாகவே என்னை உணர்ந்தேன். நீண்ட வர்ணனை, விவரிப்பு, தேர்ந்த எழுத்து நடை என எதுவும் இல்லாவிட்டாலும் கூட உண்மைத்தன்மைக்கு அருகில் இருக்கும் காரணத்தினால் எழுத்தின் வீரியத்தை நாவல் முழுவதுவதே ஆழமாக அனுபவிக்க முடிந்தது.

விசாரணை அறையில், குமார் இத்தனை சித்தரவதை அனுபவிப்பதற்கு பதிலாக பேசாமல், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டால் தான் என்ன என்ற பதைபதைப்பு நமக்குமே ஒட்டிக் கொள்கிறது. இறுதியில் ஐந்து மாதங்கள் விசாரணைக்கைதியாக சிறையில் கழித்து விட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது நீதிபதியும் அதே கேள்வியைத் தான் கேட்கிறார். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்கள் என்றால், தண்டனைக்காலத்திற்கும் அதிகமாகவே சிறையில் இருந்து விட்டீர்கள் எனக்கூறி விடுதலை செய்கிறேன், என்ன சம்மதமா?” என்கிறார். குமாரும் அவனது நண்பர்களும் அவ்வாறே சம்மதித்து வெளியே வருகிறார்கள். அவர்கள் விடுதலையாகி வெளியே வந்தாலும், இனி வருங்காலத்தில் அவர்கள் போலீசாரால் எதிர்கொள்ளப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது நாவலில் முன்னரே ஒரு இடத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது. அந்தக் கேள்வி, “ஏற்கனவே ஜெயிலுக்குப் போயிருக்கியா?” ஒருவனை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போலீசாரின் இந்தக் கேள்விக்கு “ஆம்” என்ற ஒற்றை பதில் போதும், அவனை முத்திரை குத்த.

அதிகாரத்தின் கரங்கள் உதிரி மனிதர்களின் கழுத்தை எவ்வளவு அழுத்தமாக நெரிக்கிறது, அதிகாரத்திற்கு உடன்படாதவர்களின் நெஞ்சுரம் எப்படி நசுக்கப்படுகிறது என்பதையும், அத்தகைய உதிரிகள் தங்கள் பிழைப்புக்காகவோ அல்லது அதிகார அமைப்பின் மீது ஏற்படும் தன்னியல்பான பயம் காரணமாகவோ அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்களாக மாறும் போது கிடைக்கும் சலுகைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

வலியை அச்சு அசலாக எழுத்தில் கொண்டுவந்திருக்கும் எழுத்தாளர் சந்திரகுமார் அவர்களுக்கும், இத்தனை ஆண்டுகள் கழுத்து சரியான நேரத்தில் நாவலை மறுபதிப்பு செய்திருக்கும் “டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்.

இனி விசாரணை படம் பார்க்க வேண்டும்.

லாக்கப் (நாவல்) – மு.சந்திரகுமார்
விலை: ரூ. 120
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

******

Monday, January 25, 2016

விருதைத் துறந்த கலைஞன்

கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. நாட்டின் உயரிய கௌரவங்களில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதினை எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனை இணைய வழக்கப்படி ஒரு “மீம்” தயாரித்துப் போட்டு கலாய்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டுமா இல்லை அவரது ரசிகத் தொண்டர்கள் போல அவரது அருமை பெருமையை சில பல பத்திகள் எழுதி, அவர் இந்த விருதுக்கெல்லாம் மேலே என்பது போன்ற வரிகளை நடுநடுவே தூவி, இறுதியில் அவர் இதனைப் பெற்றுக்கொள்ளாததால் பச்சைத்தண்ணீர் பருகாமல் வாடிக்கொண்டிருக்கின்றேன் என்று இரண்டு சொட்டுக் கண்ணீரை காணிக்கையாக்கி முடிக்க வேண்டுமா தெரியவில்லை.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகிவருவதால் பலரும் தாம் வாங்கிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறிவரும் காலகட்டத்தில், தற்பொழுதைய மத்திய அரசின் சித்தாந்தங்களில் ஒத்துப் போகிற, இந்து ஞான மரபைப் போற்றுகின்ற ஜெயமோகன் அவர்கள் இந்த விருதை மறுத்திருப்பது வியப்பையே தருகிறது. தான் இந்த விருதைப் பெற்றுக்கொள்வது என்பது, தன் ஆகச்சிறந்த படைப்பான “வெண்முரசு” எழுதிவருவதும், தன்னுடைய தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளும் இத்தைய விருதுகளுக்காகத் தாம் என்று தன்னைத் தூற்றுபவர்கள் பேச வழிவகை செய்துவிடும். அதனாலேயே இந்த விருதினை தான் மிகுந்த மன வருத்தத்தோடு மறுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இது மிக வலிமையற்ற வாதம் என்பது அவருக்கே கூட தெரிந்திருக்கக்கூடும்.
மத்திய அரசின் முன்னாள் ஊழியர் என்ற முறையில் நாட்டில் விருதுகளுக்கான தகுதியுரைகள் (citations) மற்றும் பரிந்துரைகள் (recommendations) எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன, கோப்புகளுக்கான தரவுகள் எவ்வாறு திரட்டபடுகின்றன, அதிலுள்ள காரியச்சிக்கல்கள், விடுபடல்கள், தொடர்முயற்சிகள் இவற்றையெல்லாம் அவர் நன்கு அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். இருந்தும் கடைசி நேரத்தில் விருதினை அவர் மறுத்திருக்கிறார். தான் இதற்கெல்லாம் தகுதியுள்ளவன் தான் என்று நிரூபித்துப் பிறகு இது தன்னை எவ்விதத்திலும் சலனப்படுத்தவில்லை என்று நிறுவது ஒரு வகை ஹீரோயிஸம் அல்லது ஒரு வகை பற்றற்ற நிலை. இதில் எந்த எண்ணத்தில் அவர் விருதினை மறுத்தார் என்று தெரியவில்லை. அல்லது தனது தகுதிக்கு இந்த விருது ஏற்புடையதல்ல என்று அவர் எண்ணியிருந்தாலும், அடுத்து பிற்காலத்தில் இன்னும் பெரிய விருதுகளுக்கு இவர் பெயர் பரிந்துரை செய்யப்படும் பொழுது இச்சம்பவம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதே உண்மை. இவர் உள்ளூர் சண்டை காரணமாக இதனை மறுத்தார் என்ற சம்பவம் எல்லாம் அரசாங்கத்தின் கோப்புகளில் பதிவாகப்போவதே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, “வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும், அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது” என்று அவர் கூறியது சத்தியமென்றால், தன் வாழ்நாள் அனைத்தையும் தன் எழுத்துக்காக, தனக்குக் கிடைக்கின்ற தனிப்பட்ட புகழை ஒதுக்கிவிட்டு தன் படைப்பின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். (ஆனாலும் கூட இவர் இவ்விருதினை மறுப்பதால் அது வெண்முரசிற்கு பெருமை சேர்க்கும் என்று கூறுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.)
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுப்பக்கங்களை மேய்ந்ததில் சில தகவல்கள் கிடைத்தன. நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விற்கு மட்டும் பிரதமர் நேரடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம் போல. மற்ற விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகியவற்றிற்கு மாநில அரசுகள், மத்திய அமைச்சகம், மத்திய அரசுத்துறை, ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் பரிந்துரை செய்யலாம். இவர்கள் தவிர சுயபரிந்துரைகளும் ஏற்கப்படும். பிரதமரை உள்ளடக்கிய குழு வந்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியுள்ளோர்க்கு விருதுகளை வழக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள், ஜனாதிபதியின் பார்வைக்குப் பிறகு அவர் விருதுகளை அறிவிப்பார் என்று அறிகிறேன். ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பரிந்துரைகள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தின் போது விருதுகள் அறிவிக்கப்படும். ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள் பெறப்பட்டாலும், ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 120 பேர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமாக இன்னொரு தகவல், இந்த “பத்ம விருது” பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ இந்த விருதின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த விருதுகளுக்கு பணப்பரிசு எதுவும் கிடையாது. அப்புறம் மிக முக்கியமான இன்னொன்று, விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை சில நாட்களுக்குப் பின் அரசின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். உண்மையில் யார் யார் பெயர் பரிந்துரையில் இருந்தது என்ற தகவல் அதில் இருக்கும் :)

பத்ம விருதுகள் பெற்றிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் !
தரவுகள்:
http://mha.nic.in/awards_medals
http://mha.nic.in/sites/upload_files/mha/files/Scheme-BR.pdf
http://timesofindia.indiatimes.com/india/Govt-invites-nominations-for-Padma-awards-2016/articleshow/48526263.cms
http://www.jeyamohan.in/83792#.VqY2Q5p97IU

******

Saturday, January 23, 2016

அஞ்சல் நிலையம் - மொழிபெயர்ப்பு நாவல்


எனது முதல் மொழிபெயர்ப்பு நாவலான “அஞ்சல் நிலையம்” தற்பொழுது வெளியாகி இருக்கிறது. புகழ்பெற்ற கவிஞரான சார்லஸ் புகோவ்ஸ்கியின் முதல் நாவல். புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே இந்த நாவல் கருதப்படுகின்றது. அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியவற்றைக் கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்.

சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவிலும், இணையம் மூலமும் விற்பனைக்கு உள்ளது. விருப்பமுள்ள நண்பர்கள் வாங்கலாம்.

புதினம்: அஞ்சல் நிலையம்
- சார்லஸ் புகோவ்ஸ்கி ( தமிழில்: பாலகுமார் விஜயராமன் )
விலை:  ரூ.200.00
பதிப்பகம்: எதிர் வெளியீடு

சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்:
அரங்கு எண்: 151 – எதிர் வெளியீடு
அரங்கு எண்: 90 - நாகரத்னா பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://goo.gl/a5JjUn (இணையதளம்: www.wecanshopping.com)

தபால் மூலம் பெற:
VPP / INDIA POST மூலம் புத்தகம் கிடைக்க: +91 8489401887 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பலாம்

மொழிபெயர்ப்பு குறித்த நண்பர்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.
******