Monday, April 25, 2016

1947 – தீராத துயரம்


1947  என்றவுடன் நமக்கு இயல்பாகத் தோன்றுவது நம் நாடு சுதந்திரம் அடைந்தது குறித்த பெருமை உணர்வு. ஆனால் 1947 என்ற எண்ணை நினைக்கும் போதெல்லாம், நெஞ்சில் ஆறாத வடுக்களோடும், தீராத துயரோடும் அல்லாடும் லட்சக்கணக்கான மக்கள் இதே நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளையர்களால் அடைந்த துன்பங்களை அல்ல, தங்களோடு ஒன்றாய் பிறந்து வளர்ந்த ஒரே நாட்டை, பிராந்தியத்தை, ஊரை சேர்ந்த சக மனிதர்களால் ஏற்பட்ட அவமானங்களையும், இழப்புகளையும் எண்ணி மௌனமாக கண்ணீர் சிந்தியபடியே இருக்கிறார்கள்.

இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பிரித்து, இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளாக்கி தனித்தனியாக சுதந்தரம் தந்துவிட்டுச் சென்றார்கள். அப்பொழுது இந்திய மக்கள், தாங்கள் எந்தநாட்டில் வாழ விரும்புகிறார்களோ அங்கே குடிபெயர்ந்து கொண்டார்கள் என்று ஒற்றை வரி தகவலில் இந்தப் பிரிவினையை கடந்து சென்றிருப்போம். ஆனால் அரசியல் அதிகாரங்களுக்காக திடீரென நடுவில் கிழிக்கப்ப்ட்ட ஒரு கோட்டிற்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்திலுள்ள பெண்கள், குழந்தைகளை, நிலபுலன்களை, சொத்துக்களை இழந்து அகதிகளாக அலைந்து கொண்டிருந்த அவலத்தை உண்மைத்தன்மை மாறாமல் பதிவு செய்திருக்கிறது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “1947” என்ற சிறு புத்தகம்.

பிரிவினையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களில் இருந்து வலுக்கட்டாயமாக துரத்தியடிக்கப்பட்டனர். அநேகமாக அனைத்து சம்பவங்களிலும் பெண்களைக் கற்பழிப்பது தான் பிரதான நோக்கமாக இருந்தது. இதற்கு பயந்து, ஏதேனும் கும்பல் தங்கள் கிராமத்தைத் தாக்க வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்தால், அந்த கிராமத்திலுள்ள இளம்பெண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பத்தினரே கொன்று விடுவது அல்லது அவர்களை தற்கொலை செய்ய வைப்பது என்ற கொடுமைகளும் நடந்தன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர விரும்பிய பெரும்பணக்காரர்கள் பாகிஸ்தான் தினசரிகளில் தங்களது சொத்து மதிப்பினைக் குறிப்பிட்டு அதற்கு இணையாக பாகிஸ்தானில் சொத்து உள்ளவர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர விரும்பினால், பண்டமாற்று செய்வதைப் போல சொத்துக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று விளம்பரம் செய்தனர். அதே போல் தான் பாகிஸ்தானில் இருந்த பலரும் விளம்பரம் கொடுத்தனர். பணக்காரர்கள் இத்தகைய பரிவர்த்தணைகளில் இறங்க, ஏழைகளோ மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு, தங்களுக்கு இருந்த சொற்ப நிலபுலன்களை விட்டுவிட்டு இடம்பெயரத் துவங்கினர். இதில் கொடுமை என்னவென்றால், செல்லும்  வழியில் தங்கள் குடும்பத்துப் பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றெண்ணி, அவர்களை மொத்தமாகக் கொன்று விட்டோ அல்லது தற்கொலை செய்யச் சொல்லியோ, பின் பயணம் செய்யத் துவங்கினர்.

இவ்வாறு தப்பிப் பிழைத்து எஞ்சி வந்த லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் தீராத ரணமாகப் பதிவாகியிருக்கிறது “1947”. ஆனால் இந்த இந்தியத்திருநாட்டில் இது ஒற்றை நிகழ்வல்ல. எப்பொழுதெல்லாம் வாய்ப்பு அமைகிறதோ, அப்பொழுதெல்லாம் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் இந்த சூறையாடல்களும், துரத்தல்களும், கற்பழிப்புகளும், வன்முறையும், அக்கிரமங்களும், அநியாயங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனைக் மட்டுப்படுத்த வேண்டிய ஆளும் அதிகார வர்க்கமோ என்றென்றைக்கும் இந்தத் தீயை அணையவிடாமல் ஊதி ஊதிப் பெரிதாக்கி அதில் குளிர்காய்ந்து சுகம் காண்கின்றனர்.

புத்தகம் சிறிய அளவில் இருந்தாலும், இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வை எளிய மொழியில் பிரதிபலித்திருக்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

புத்தகம்: 1947
பாரதி புத்தகாலயம்
பக்கம்: 30, விலை: ரூ.20.

-------------------------------------

No comments:

Post a Comment