Monday, December 14, 2009

அப்பா ! ("உரையாடல்" கவிதை போட்டிக்காக.)



இரவிலிருந்தே கூட இருந்தோம்,
காலை மருந்தின்போது கூட
ஒரு முகக்குறிப்பு காட்டவில்லை.

மதியம் வரை தூங்கிவிட்டு
மெளனமாகவே சென்றுவிட்டார்,
என்ன செய்தி வைத்திருந்தாரோ
கடைசிவரை தெரியவில்லை.


தெருமுனையில் வண்டி நிற்க,
நண்பர்கள் துணைகொண்டு
நான்கு மாடி ஏற்றிவிட்டோம்.


வேறென்ன செய்ய வேண்டும்,
யாருக்கென்ன சொல்ல வேண்டும்
எப்போதும் அப்பாதானே கூட்டிப்போவார்,
அவரை எப்படி கூட்டிப்போக?


விஷயம் தெரிந்து வீடு நிறைந்தது...
முன்வந்து முகம் காட்டி,
கண் நனைத்து கட்டிப்பிடித்து,
ஆறுதல் சொல்லி, தேறுதல் கூறி
என்னென்னவோ செய்கின்றனர்...
தாம் வந்ததை தவறாமல் பதிவு செய்ய !


அங்கும் இங்குமாய் அம்மாவை
ஆளாளுக்கு அலைக்கழிக்க,
ஐஸ்கட்டி பாளத்தில் அப்பா
அவஸ்தையுடன் தான் படுத்திருந்தார்.


"இரவெல்லாம் நாய்க்குட்டி
தனியாக தூங்காது.
காலையில் தானே எடுப்பீங்க,
அதுக்குள்ள வந்துருவோம்"
தொலைபேசி சொன்னது
உயிருக்குயிரான் சொந்தம் சில.


விடிந்ததிலிருந்து
வரவுசெலவு கணக்கெழுதி
இல்லாத பொறுப்பையெல்லாம்
பங்கு வைத்து, பந்தி வைத்து
தலைகீழாய் தாங்கியது
ஒன்றுவிட்ட சொந்தமெல்லாம்,
அப்பா இல்லையென்ற தைரியத்தில்.


தடித்த சத்தம், குறுட்டு வழக்கம்...
யாராரோ அதிகாரம் செலுத்த,
யாராரோ உரிமை வளர்க்க,
முன்னும் பின்னுமாய் எல்லாரும்
தங்கள் பெயரை பொறித்துச் செல்ல,
கொட்டுகிறது பெருமழை.


முச்சந்தியில் அந்நியமாய்
ஒதுங்கி நாங்கள் நிற்கின்றோம்.
அனைத்தையும் மெளனமாய்
பார்த்துக்கொண்டிருந்த அப்பா,
பல்லக்கிலிருந்து முகம் திருப்பி
எங்களைப்பார்த்து லேசாக,
புன்முறுவல் பூக்கின்றார்.


சொன்ன செய்தி புரிந்து கொண்டு
மெல்லமாய் தலையசைக்கின்றோம்.








Thursday, November 26, 2009

பி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை

தொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.



சரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?
இருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான்.  அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு "நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! " என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம். 
ஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில், "இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா?  போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே !" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய "வீடியோ காலிங்" எனும் சேவை. 


ரொம்ப செலவாகுமோ ?
இப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... "கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் !" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான்  பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.  சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு,  3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.


(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு : 
மற்றும் http://bsnl.in/service/3G/3GHomepage.htm )
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
ரொம்ப சுலபம் தான். 
ஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல்  3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx  (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.  
புதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால் 
http://chennai.bsnl.co.in/CIP/NewLineRequest.asp?RequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம். 
மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய 
http://portal.bsnl.in/BSNLCCA/ThreeGRegistration.aspx ஐ அழுத்தவும்
அல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள
• Nokia N95,N96,N82,N73
       • Nokia 6233, 3120 Classic
• G700, G900, G502
        • K 660i, K 610i, K530i
       • P1i, W980i, W910i, W760i
• Samsung SGH J800
        • Touch wiz, Innov 8
• LG Viewty , LG KU 250
• Motorola Q, A925
        • MotoRazor V9
  • Apple 3G I Phone • HTC
       • Blackberry Bold 9000        
வேறென்ன சிறப்புகள் ?
3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
3G தொழில்நுட்பம் மூலம் "டேட்டா கார்டு" (Data Card) சேவையும் உள்ளது.
இன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.

தகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.
தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.
நன்றி, தகவல் உதவி...
http://bsnl.in/service/3G/3GHomepage.htm
http://chennai.bsnl.co.in/News/2gto3g.pdf
http://www.chennai.bsnl.co.in/index.html
http://www.bsnl.in/faq/faqans.php?paramCategory=3G%20Mobile%20Services
http://www.viparam.com/index.php?news=18750
http://www.maalaimalar.com/2009/11/19145338/CNI04901901109.html
http://www.dinaithal.com/business/10281--3-
http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_8694.html#ixzz0XsyCS2fb


Friday, November 13, 2009

தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவு !





அடர்ந்த கருவேலம் புதரும்
ஆட்டுப் புழுக்கையுமாய் -
இப்பொழுதும் அழகாய் தானிருக்கும்,
எப்பொழுதும் திறந்திருக்கும் எங்கள்
கிராமத்து வீட்டின் மிச்சமாய்
தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவும்,
அதைச் சுற்றிய குட்டிச்சுவரும் !


(நன்றி!  படம், நாதன். http://photo.net/photodb/photo?photo_id=4536455)


Thursday, November 5, 2009

பூனையெல்லாம் பூனை தான் !

வாசல்படியில் குழந்தை போல்
அழுதுகொண்டிருந்தது
சாகக்கிடந்த பூனைக்குட்டி.
கொஞ்சம் பாலும், சோறும்
போட்டுவைக்க மிதியடியுள்ளே
படுத்துக் கொண்டது.


நாட்கள் செல்ல, மிதியடியிலிருந்து
மடிவரை வந்து படுத்துக்கொள்ளும்.
செல்லமாய் வளர்க்கும்
புறாக்கூட்டதை பரிவோடு
காவல் காக்கும்.
புறாவுக்கும் பூனைக்கும் ஆகாது
என்று சொன்னவர்க்கெல்லாம்
பூனையெல்லாம் பூனையல்ல,
எங்கள் வளர்ப்பு தப்பாகாது
என்று சொல்லி வாயடைப்போம்.


வீட்டுப்புறா ஒவ்வொன்றாய்
தொலையும் போது
அன்னம் தண்ணீர் கொள்ளாமல்
அழும் அளவு பாசம்,
எங்கள் பாசக்காரப் பூனைக்கு.


புறாக்கள் எண்ணிக்கை குறையக் குறைய,
வளர்த்த வீடு விட்டு, 
வேறு கூடு அடையுமோவென
தினமும் கலக்கத்துடனே
இரை போட்டு வளர்த்தோம்.


பூனைகள் எல்லாம்
பூனையாய் மட்டுமே இருக்க முடியுமென்று,
அந்த நடுநிசி வரை தெரியவில்லை.
நம்வீட்டு பூனை தானே என,
புறாக்கள் தூக்கம் தொடர
எங்கள் பூனையின் பூனைத்தனம்
விழித்துக் கொண்டு வேலை செய்ய,
அடுத்த வீட்டு சந்தில் மட்டும்
பரவிக்கிடந்த புறா இறக்கை.


துரோகமும், கோபமும்
வெறியாய் மாறி 
பூனையைக் கொல்ல துரத்தும் போது,
இடைபுகுந்து ஒருவர் சொன்னார்,
"நூறு புறாவில், பத்து தானே
செத்துப் போச்சு, கோபப்பட்டு
இருக்குற ஒரு பூனையையும்
கொன்னுடாதீங்க !"


எங்கள் வீட்டு புறாவாய் 
இல்லாதிருந்தால், பூனையை
நான் என்ன செய்திருப்பேன் ???


பொங்கல் வரை தீபாவளி தானே !



தீபாவளி சிறப்பு பதிவிற்காக சீனா ஐயா அழைத்திருந்தார்.
அந்த பாக்கி பொங்கல் வரை நீளக்கூடாது என்பதற்காக, இப்போதே(?) என் பதில்கள்.


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
   பாலகுமார் (பெரும் குறிப்பு, பின்னாளில் சொல்லுவோம்)


2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது தீபாவளி தான்.. (வேற ஒன்னும் தோணலயே ! )


3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
இதுவரை எல்லா வருடமும் மதுரை தான்.


4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
மதுரை தீபாவளி பெரிய ஊர்த்திருவிழா...
முதல்நாள் இரவு நடைபாதை கடைகள்
மூனு பத்து ரூவா வியாபாரம்
புரோட்டா கடை கூட்டம்
புதுப்படம் தோரணம் கட்டுதல்
கருப்பு தீபாவளி போஸ்டர்கள்
திடீர் வெடி கடைகள்
அங்கங்கே தண்ணீ சலம்பல்கள்
..................................................................
மதுர மதுர தான்...


5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
இந்த முறை சென்னையில் இருந்து தம்பி எடுத்து வந்தான். ஆயத்த ஆடை தான்.


6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
கடையில் வாங்கினால் எப்போதும் அம்மாவிற்கு திருப்தி இருக்காது. என்வே கடையில் வாங்குனது போக வீட்டுல செஞ்சது... முறுக்கு, அதிரசம் சீவல், ஜாமுன், இன்னும் பல. (இந்த முறை தங்கைக்கு தலை தீபாவளி, அதனால் இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால், தங்கையும் மாப்பிள்ளையும் வர முடியவில்லை, என்வே இந்த தீபாவளி ரொம்ப "டல்" தான்.) 


7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
இந்த வருடம், வந்த வாழ்த்துக்களுக்கு பதில் மட்டும் குறுஞ்செய்திகள் மூலமாக...


8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
இந்த வருடம் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை, டி.வி. யும் பார்க்கவில்லை.


9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை.


10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
போதும், ரொம்ப நாளாச்சு.... அடுத்த வருடம் முன்னமே கூப்பிடுவோம். :) 


நன்றி !


குறிப்பு 1) இது என் முதல் தொடர்பதிவு, அழைத்த சீனா ஐயாவிற்கு நன்றிகள் !
குறிப்பு 2) என் வலைப்பதிவு துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது, வாழ்த்துக்கள் ! (நான் எனக்கு சொன்னேன், எனக்கு சொன்னேன்.) 

Thursday, September 17, 2009

பெயரில்லாதவை !



இதே மாதிரி பிட், பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு போன முறை (சில பல மாதங்களுக்கு முன்ன்ன்னாடி) கேட்டிருந்தேன் . நண்பர்களும் நிறைய பெயர்களை சொல்லி இருந்தீங்க. அனைவருக்கும் நன்றி, ஆனா "பெயரில்லாதவை" ங்கிற பெயரே நல்லா இருப்பது போல தோணுச்சா, அதையே தலைப்பா வச்சிட்டேன்.
**************************************


சமீபத்துல எனக்கும், மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும் நடந்த உரையாடல். 

நான் : குட்டி, உன் பனியன்ல உள்ள "யானை" பொம்மை சூப்பரா இருக்குடா.  
குட்டி : இது "யானை" இல்ல. குனிஞ்சு, குனிஞ்சு நடக்கும்ல அது, "ஒட்டகம்".  
நான் : இல்லடா, இது யானை மாதிரி தானே இருக்கு.  
குட்டி : ஒன்னுமில்ல, யானைனா வாய் பெருசா கீழ வரை தொங்கும் !
நான் : (வேறு வழியில்லாமல்) அப்போ, இது ஒட்டகம் தான்டா ! :):) :) 
**************************************

அப்புறம் சின்னதா ஒரு "பெயரில்லாதது" (கவிதைன்னு சொன்னாத்தான் அப்படியே "எஸ்கேப்" ஆகி ஓடிறீங்களே !


வாழ்க்கைப் பயணத்தின்
வழியோரமெல்லாம்
கவனிக்கப்படாமல்
பூத்துக் கிடக்கிறது,
வாழ்க்கை !
**************************************
ஒரு தடவை மேலோகத்துல நாரதர், மழைக் கடவுளான வருண பகவான்ட்ட போய்,
"சாமி, பூமில மனுசப்பயலுக எல்லாம், செழிப்பா சந்தோசமா இருக்கானுங்க. அதனால ஒரு பயலும் நம்ம நினைக்க மாட்றாய்ங்க. நீங்க கொஞ்ச நாளைக்கு மழைய நிப்பாட்டி வையுங்க, அப்ப தான் அவய்ங்களுக்கு நம்ம அருமை தெரியும்!" ன்னு சொன்னாராம்.  
அதுக்கு மழைக் கடவுளும், 
"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் ! " அப்படின்னு சொல்லி மழைய நிப்பாட்டிட்டாரு. 
பூமில, வறட்சி வர ஆரம்பிச்சிருச்சு. விவசாயம் படுத்திருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, சரி, மக்கள் எல்லாம் நம்ம நினைக்கிறாய்ங்களான்னு பார்க்க மழைக் கடவுள் மாறுவேசத்துல பூமிக்கு வந்தாரு.  
பார்த்தா, ஒரு குடியானவன் பாளம், பாளமா வெடிச்சு காஞ்சு போய் கிடக்குற நிலத்துல, ரெட்ட மாட்டு ஏர் பூட்டி உழுதுட்டு இருக்கான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவனென்ன சரியான முட்டாப்பயலாவுல்ல இருக்கான்னு நினைச்சுட்டு,
"ஏய், இங்க பாருய்யா, உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு? பொட்டு மழை பார்த்து கொல்ல காலமாச்சு. இப்போ போய் புழுதிப் பிஞ்சயில இழுக்க மாட்டாம இழுத்து பாடா பட்டுட்டு இருக்க ?" 
அதுக்கு அந்த குடியானவன் பொறுமையா, 
"இல்லைங்கையா, எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு, அவன் என்னைக்கும் எங்களை கைவிட மாட்டான். சீக்கிரம் மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு " ன்னு சொல்லி கடவுள் மனசை குளிர்விச்சு, மழை பொழிய வச்சான்னு சொல்லி கதைய முடிக்கிறத விட.....  
அந்த குடியானவன், 
"நானாய்யா கிறுக்குப்பய? மழை பெய்ய வைக்க வேண்டியது மேல இருக்க கடவுளோட வேலை. அதை அவன் செய்ய மறந்துட்டு, கூத்தடிச்சிட்டு இருக்கான் போல. அதுக்காக நானும் எஞ்சிவனேன்னு உக்கார்ந்து இருந்தேன்னா, ஏர் பூட்டுற என் வேலை எனக்கு மறந்துறும், ஒழுங்கா ஏர் இழுத்தோட்டுற வேலைய என் மாடுகளும் மறந்துறும். மழை பெய்யுறப்ப பெய்யட்டும், நாங்களாவது எங்க வேலைய மறக்காம செஞ்சுட்டு இருக்கோம்." ன்னு தொடர்ந்து ஏர் ஓட்டுனானாம். அதைக் கேட்டு மாறுவேசத்துல இருந்த கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்ன்னு சொல்லி கதையை முடிச்சா யதார்த்தமா இருக்கும் தானே..... நீங்க என்ன சொல்றீங்க!
**************************************

வரும் ஞாயிறு (செப்டம்பர் 20, 2009) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு இருப்பதாக, நண்பர் கார்த்தி தொலைபேசி சொன்னார். அதோடு இது வழக்கமான "சும்மா, வந்தோம், பேசினோம், பவண்டோ சாப்பிட்டோம், போனோம்" சந்திப்பல்ல, முக்கியமான விசயம் இருக்கு, பிறகு சொல்றேன்" ன்னு பெரிய பிட்டா போட்டிருக்கார். கலந்து கொண்டு கைகோர்க்க ஆர்வமாக இருக்கிறேன். ("ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் !!!)
**************************************

இப்போதைக்கு இவ்வளவு தான். உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க !
நட்புடன்,
பாலகுமார்.