Tuesday, September 10, 2013

பாழி நோக்கிய பயணம்

வாவலின் அதிர்வொலிப்பெருக்கம்
திணைப்பெயர்வுக்கான பேரூழி
வன்மம் செய்பொருளாகிய வதனத்தில்
கவணம் போர்த்திய மறைவெறியீடு

ஓர் ஓலச்சத்த தூரத்திலிருக்கும்
விடுபடலுக்கஞ்சி
தொங்கிதழின் கீழ் குரல்வளையில் 
பாரமாய் தொக்கி நிற்கும் மொழி

புலரியின் உரித்தீட்டை மறுதலித்து
அசுரசந்தியொளியில் இறக்கை விரித்து 
காத்திருக்கையில் இறுதி எரிமீன் வீழ்ச்சி

சோடு பிரிந்த இணைபட்சியின்
கேவல் பொதிந்த இசைச்சுரம்
நெடுவழிப்பயணத்தின் சமிக்ஞை

துர்க்கந்தம் வீசும் பாழ்நத்தத்தின்
எஞ்சிய ஆன்மா புதைமணலில் அமிழும்
உடற் பாய்மத்தில் மிதக்கும் நோய்க்குறியோ
நாவாய் திசையின் முற்றொருமையாகும்

குகியம் நிறைந்த பாதைவழி
பற்றெல்லையை காணாக்கிரகணமாக்கி
பாழி நோக்கிய பயணம் நெடுகப்பிடிக்கிறது...

செல்வோம்!


Saturday, September 7, 2013

பெயரற்றவன் கனவு

குழு நிழற்படங்களின் ஓரத்தில்
பாதியாய் தெரிபவன்

எதற்கான எதிர்வினையாயும்
தலைகவிழந்த ஒற்றை சிரிப்பை உதிர்ப்பவன்

நன்றியறிவித்தலில்
தன் பெயர் விடுபட்டதை
பொருட்டாக எண்ணாதவன்

கடைசிக்கு இரண்டு வரிசை முந்திய
இருக்கையை எப்போதும்
தேர்ந்து கொள்பவன்

மஞ்சள் முடிந்து 
பச்சை தெரியக் காத்து நிற்பவன்

அவனுக்குள்ளும் இருக்குமோ
ஆளம்புசேனை கொண்டு
பிரபஞ்சத்தைக் கட்டியாளும் பெருங்கனவு !


Monday, August 26, 2013

விருட்சத் திருவிழா



மதுரையைச் சுற்றிய தொன்மையான இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அந்த இடங்களைப் பார்வையிடவும் என்று குழுமிய நண்பர்கள் “பசுமை நடை” என்ற அமைப்பை உருவாக்கி, மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மலைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பசுமை நடை குழுவினரின் இருபத்தி ஐந்தாவது பயணத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக “விருட்சத் திருவிழா” நடைபெற்றது.

நேற்று (25/08/2013 - ஞாயிறு) மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் நடைபெற்ற “விருட்சத் திருவிழா”விற்குச் சென்றிருந்தோம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள குளத்தின் கரையிலுள்ள ஆலமரங்களின் பிரம்மாண்ட நிழலில், இயற்கையான சூழலில் இனிதே நடந்தது திருவிழா. இந்த அமைதியான சுற்றுப்புறத்தின் காரணமோ இல்லை “பசுமை நடை”யின் இயல்போ தெரியவில்லை, விழா முழுமையுமே நிதானமாக, வெற்று பரபரப்பின்றி, இயல்பான இளைப்பாறுதல் தருவதாய் அத்தனை சுகமாக இருந்தது. விழாவில் பேசியவர்களும் மேடைப்பேச்சு போல நீட்டி முழக்காமல், தேர்ந்த கதை சொல்லிகள் போல் மென்மையாகவே பேசியது கேட்க இதமாக இருந்தது.

பொதுவாக பொதுப்பயன் கருதிய சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் “ஒளிவட்டம்” பொருந்திய பிரபலங்களின் வரத்து அதிகமாய் இருந்தால், நிகழ்ச்சியின் மையப்புள்ளியை விட்டுவிட்டு இந்த பிரபலங்களைச் சுற்றியே கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனாலேயே அத்ததைய நிகழ்வில் ஒன்ற பார்வையாளர்களுக்கு சிறு மனத்தடங்கல் இருக்கும். ஆனால் நேற்று நடந்த “விருட்சத் திருவிழாவில்” அத்தகைய ஒளிவட்டங்களின்றி ஒரு குடும்ப விழா போன்று ஆளாளுக்கு இழுத்துப் போட்டு அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்தனர். அதுவும் சுறுசுறுப்பாக இங்குமங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த இளைஞர்கள் இணையமேற்றுவதிலிருந்து இலையெடுப்பது வரை புகுந்து விளையாடினர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “விளையாட்டு முகாம்”. கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், களிமண்ணில் பொம்மை செய்தல் என்று அமர்க்களப்படுத்திவிட்டனர். குழந்தைகளைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, அவர்களை அலுப்படைய விடாமல் தொடர்ந்து உற்சாகமூட்டி பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்திய தன்னார்வலர்களின் பணி பாராட்டுதற்குரியது. தன்னார்வலர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் போன்று தான் தோன்றினார்கள். தங்களுடைய விடுமுறையை இவ்வாறு சமூக நிகழ்வுகளுக்காக, அதுவும் மைய நிகழ்வு தனியாக நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான பொழுபோக்கில் ஈடுபடுத்தும் பணிக்காக வந்திருந்து ஆர்வத்துடன் பங்கேற்றது வியப்பாய் இருந்தது. இறுதியில் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பரிசுப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 

விழாவில், மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அழகர்மலை கிடாரிப்பட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம், கீழகுயில்க்குடி உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த இடங்களைப் பற்றிய ஆவனம், “மதுர வரலாறு” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், தேநீரும், பருத்திப்பாலும், மதியம் உணவும் வழங்கப்பட்டது. மொத்தத்தில் நம் பூர்வீக கிராமத் திருவிழாவிற்கு சென்று ஊர் சுற்றிவிட்டு, குளக்கரையோரத்து ஆலமர நிழலில் காலாற அமர்ந்து சொந்த பந்தங்களிடம் கொஞ்சம் கதைகேட்டுவிட்டு, பார்த்துப் பார்த்து பசியாற்றிய நண்பர்களின் விருந்தோம்பலில் வயிறு நிறைய உண்டு வீடு திரும்பிய மகிழ்வைத் தந்தது நேற்றைய முற்பகல் பொழுது. பிரதிபலன் பாராது விழாவை முன் நின்றும், பின் நின்றும் சிறப்பாக நடத்தியிருக்கும் பசுமை நடை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மனம்நிறைந்த வாழ்த்தும், நன்றியும்.



படங்கள்: நன்றி - இணையம்
******

Tuesday, August 13, 2013

சார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்


இன்னிக்கு அதிகாலை ஆறு மணிக்கு காலிங் பெல் சத்தம். இரண்டு பேர் பக்கா யூனிஃபார்மல வந்து, “நாங்க ப்ரஸ்ல இருந்து வர்றோம். ”குடும்பத்தலைவர்”ட்ட முக்கியமான விஷயம் பேசனும்”னு சொல்லி இருக்காங்க. எங்கம்மா என்னமோ ஏதோனு என்னை எழுப்பி விட, நான் “ஆறு மணிக்கு கூப்ட்டு விசாரிக்கிற அளவுக்கு என்ன பண்ணிட்டோம்”னு யோசிச்சுட்டே வந்தேன்.

சார், நாங்க “ஹிந்து” நியூஸ் பேப்பர்ல இருந்து வர்றோம். ஹிந்துல தமிழ் பேப்பர் வரப்போகுது. ஆறுமாத சந்தா 375 ரூபாய் சார், கட்டுறீங்களா?

(அடப்பாவிகளா, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லயாய்யா) பேப்பர் என்ன பெயர் சொன்னீங்க?

”ஹிந்து” சார்

(யே, என்னைப்பார்த்தா கொஞ்சம் மாங்கா மாதிரி தான் இருக்கும், அதுக்காக இப்படி ஓட்டாதே!) இல்லங்க. தமிழ்ல வர்றதுக்குப் பெயர் என்ன?

ஹிந்து தமிழ் பேப்பர் சார்.

(சூப்பர் ஆன்சர்) சரி விடுங்க, வழக்கமா புதுப்பேப்பர் வர்றதுக்கு முன்னாடி சாம்பிள் வருமே, அது மாதிரி இருக்கா? (ஓசி சாம்பிள் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்காட்டா நாம என்ன தமிழன்)

இல்ல சார், ப்ரௌச்சர் தான் இருக்கு. பார்க்குறீங்களா?

சரி கொடுங்க. (அது ஓசி தானே!)

இந்தாங்க சார். வேற காப்பி இல்ல, பார்த்துட்டு திருப்பிக் கொடுத்துருங்க.

(அது வேறயா, தெளிவாத்தாய்யா மார்க்கெட்டிங் பண்றீங்க) இல்லங்க சந்தோசம், நீங்களே வச்சுக்கங்க.

சார், ஆறு மாத சந்தா போட்றவா சார்?

(காரியத்துல கண்ணா இருக்காராமாம், ஆனா நம்மகிட்டயேவா) இல்லங்க பேப்பர் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.

சார், ஹிந்து சார். ஆஃபர் பிறகு கிடைக்காது சார்.

(நாங்கெல்லாம் பல வருசமா தினத்தந்தியவே டீக்கடை க்யூல நின்னு தான் ஓசில படிச்சிட்டு வர்றோம், எங்ககிட்டயேவா?) ரொம்ப நன்றி சார். போய்ட்டு வாங்க சார்.

ஆனாலும் “தி ஹிந்து”வின் மார்க்கெட்டிங் திறமை வியக்க வைக்கிறது. ஊர் முழுக்க இதுக்குன்னு நூத்துக்கணக்கான இளைஞர்களை இறக்கி விட்டிருக்காங்க. ஆனா, பேப்பருக்கு என்ன பெயர்னு சொல்ல மாட்டாங்களாம். எப்போல இருந்து வருதுன்னு தெரியாது. மாடல், ஃப்ரிவியூ எதுவும் கிடையாது. சந்தா மட்டும் முதல்லயே கட்டிட்டு பேப்பர் வர்றதுக்காக தேவுடு காக்கனுமாம். ஒரு வேளை நாம கொடுக்குற காசெல்லாம் சேர்த்து வச்சு தான் பூஜை போடப்போறாங்களோ என்னவோ!

******

Monday, August 12, 2013

ஒரு போத்தல் மது


ஒரு போத்தல் மது...

கொஞ்சம் கிறக்கத்தை கொடுத்து,
குழறல் பேச்சில் சில தற்பெருமைகளை
வெளிக்கொணர்ந்திருக்கும்

மூளையை மழுங்கடித்து
ஏதேனுமொரு ஒழுக்கக்கோட்டின்
எல்லையை தொட வைத்திருக்கும்

அர்த்தமில்லாதவொரு கொண்டாட்டத்தில்
வெற்றுக்கூச்சலை கொட்டியிருக்கும்

மனதை சொஞ்சம் பூஞ்சையாக்கி,
வாய்விட்டு அழ வைத்திருக்கும்

வாழ்நாளின் சில மணித்துளிகளை
குறைத்திருக்கும்.

இல்லையென்றால்....

சொந்த ஊரிலிருந்து
முன்னூறு கிலோமீட்டர் தள்ளிப்போய்
கவனமாய் தகுந்த அடையாளங்களை
பதிந்து எடுத்த அறையினுள்,
மிரிண்டாவில் பொட்டாஷியம் சல்ஃபேட்
கலந்து குடித்து மரித்துக் கிடந்த ஒருவனின்
தற்கொலையைத் தவிர்த்திருக்கும்.

******

Monday, July 8, 2013

புனைப்பெயர்

பன்னெடுங்காலமாக இலக்கியம சமைக்கும் பெருங்கூட்டத்தில் துவங்கி இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் வறுப்பவர்கள் வரை முக்காலே அரைக்கால் வீசம் பேர் புனைப்பெயரில் தான் எழுதுகிறார்கள். நாமும் சீத்தலை சாத்தனார், நரிவெருவூர்த்தலையார் என்று ஆரம்பித்து  டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி, பன்னிக்குட்டி ராமசாமி வரை பற்பல நாமகரணங்களையும் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஒருவர் தன் இயற்பெயரை விட்டு புனைப்பெயரில் எழுதுவதன் உளவியல் தான் என்ன? அதிலும் ஒரு ஆண் எழுத்தாளர் எதற்காக பெண் பெயரில் எழுத வேண்டும் என்ற சந்தேகமெல்லாம் நடிகை சுஜாதா வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு என்று தெளிந்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலும் புனைப்பெயர்கள் போக சில பட்டப்பெயர்கள் வேறு.

இதில் என் நண்பன் ஒருவன் சொல்லும் லாஜிக் மிகவும் எளிமையானது. “உனக்கு மத்தவங்க வச்சா பட்டப்பெயர், உனக்கு நீயே வச்சுக்கிட்டா அது புனைப்பெயர். அவ்வளவு தான்”. அவ்வாறு தொடர்ந்த விவாதத்தில், தனக்கான பெயர் இன்னதென்று முடிவெடுக்கும் ஞானம் அடையுமுன்னே குழந்தைப்பருவத்திலேயே பெயர் சூட்டு விழா நடத்தி விடும் சமுதாயத்தில், பிற்காலத்தில் தனக்கான பெயரைத் தானே புனைந்து கொள்வதில் தவறனென்ன இருக்க முடியும் என்று முடிவுரை வாசித்தோம். புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் பலவகை. காரணப்பெயராக நினைத்து வைத்துக் கொள்வது ஒரு புறமென்றால் அழகுணர்ச்சிக்காகவும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் வைத்துக் கொள்ளும் பெயர்களும் இருக்கத்தான் இருக்கின்றன. 

ஆனால் புனைப்பெயராளர்களே! பெயர் வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக ”ஆக்கங்கெட்ட கூகை”, "அகிலத்தால் நிராகரிக்கப்பட்ட அரைவேக்காட்டு ஆஃப்பாயில் வாயன்" என்பது போன்றெல்லாம் பெயர் வைத்தால் அழைப்பதற்கு சற்று சிரமமாய் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெயர் வையுங்கள். உங்களுக்கு தன்னடக்கம் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்றாலும் கூட அதைப் பெயரில் எல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என்பதில்லை. பெயர் என்பது நமக்கே நமக்கானது தான் என்றாலும் அதை பெரும்பான்மையான சமயங்களில் நம்மைத் தவிர பிறரும் பயன்படுத்தும் போது அவர்களை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ள வேண்டாமே!. இவர்களாவது பரவாயில்லை, சிம்பதி சிகாமணிகள். ஏதோ போகட்டும் என்று விட்டுவிடலாம். சில தலைப்பிரட்டைகள் இருக்கின்றன, அவர்களின் புனைப்பெயரைக் கேட்டவுடனேயே “ஆளை விடுங்கடா சாமி” என்று நம்மைத் தெறித்து ஓட வைக்கும். இதற்கு இணையத்திலேயே நிறைய உதாரணங்கள் சொல்லலாம். யாரிடமும் சண்டை போட்டு பிரபலம் ஆகும் எண்னம் எதுவும் எனக்கில்லாததால் அத்தகைய பெயர்களை குறிப்பிட முடியவில்லை.

இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் “யாகூ சேட் ரூம்” என்று ஒரு சேவை இருந்தது. அங்கே காளையர்களும் கன்னியர்களும் வைத்துக் கொண்டிருந்த புனைப்பெயர்கள் எல்லாம் ரொம்ப ஓபன் ரகம். அதன் நீட்சி இன்று “ஃபேஸ்புக்” வரை தொடர்கிறது என்றாலும் ஃபேக் ஐடி பற்றிய அறிவு சார் சிந்தனைகள் இப்பொழுது போல அப்போது சரிவர புரிபடாத பருவமாதலால், சேட் ரூம் பெண் பெயர்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் தான் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் ஒன்று இருந்தது... ம்ம்ம் அது ஒரு காலம். இப்போதைய இணைய பிரபலங்கள் பலரும் யாகூ சேட் ரூமில தாங்கள் வைத்திருந்த பெண் ஐடி பிரஸ்தாபங்களை அளந்து விடும் போது, “இவன் தான் மாப்ள எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விடுறான்” என்பது தான் ஞாபகம் வருகிறது. முதலில் ஏமாறுவது, பிறகு போதுமான பல்புகள் பெற்று ஞானம் அடைந்தபின் அடுத்து வருபவர்களை ஏமாற்றுவது. இது தானே பாஸ் காலங்காலமாய் தொடரும் வழக்கம். இன்று பத்துப்பதினைந்து ஃபேக் ஐடி வைத்து சுத்திக்கொண்டிருக்கும் எந்தப் பிரபலமும் ஒரு காலத்தில் “ஏ.எஸ்.எல் ப்ளீஸ்” கேட்டுத் தான் இணைய வாழ்வை துவக்கியிருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது.

சரி, உண்மையில் புனைப்பெயர் என்பது நிஜ வாழ்க்கையின் சுவடுகளின்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையாய் வெளிப்படுவதற்கான வாய்ப்பு என்பதற்காகவே பலர் புதிய பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் அரசு அலுவலகங்கள், ஐ.டி கம்பெனிகள் போன்று கட்டுப்பெட்டியான இடத்தில் வேலை செய்து கொண்டு அதே பெயரில் புரட்சிப் போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் சட்டச்சிக்கலை உண்டாக்குற காரியம் தானே. எனவே, தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவற்காக தன் சுயத்தை மறைத்துக் கொண்டு புனைப்பெயரில் எழுதுபவர்களும் உண்டு. அப்படி எழுதும் போது, கவன ஈர்ப்புக்காகவோ அல்லது தங்கள் கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாகவோ அல்லது சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ற மாதிரியோ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள் போலும். முதலில் நிஜப்பெயர் வாழ்க்கைக்கும், புனைப்பெயர் வாழ்க்கைக்கும் நடுவில் கோடு கிழித்துக் கொண்டு டபுள் கேம் ஆடத்துவங்குபவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பிரபல லெவல் மேலேறும் போது இயற்பெயர் அமிழ்ந்து போய் புனைப்பெயரே சாஸ்தவமாகி அதன் மூலமாகவே அவர்கள் முகமும் வெளி உலகின் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. தெரிந்தவர்களிடம் இருந்து தனது இருப்பை மறைப்பதற்காக புனைந்த கொண்ட பெயர் மூலமாகவே இன்னும் பெரிய வட்டத்திற்கு அடையாளம் காட்டப்பட்ட பலர் இருக்கிறார்கள். எது எப்படியோ பத்தோடு பதினொன்றாக செல்லும் ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குப்புசாமி வகையறாவிற்கு பதிலாக புதுமையான புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்கள் முதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.

-வி.பாலகுமார்.
******
நன்றி: மலைகள் இணைய இதழ் http://malaigal.com/?p=2416