Monday, February 6, 2012

புறாக்காரர் வீடு - சிறுகதை


ஃபிப்ரவரி 2012 - ”பண்புடன் மின்னிதழில்” வெளிவந்த எனது சிறுகதை.
125linesep
புறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். பல வருடங்களாக தன் உயிர் போல் வளர்த்து வருகிறார். எங்கள் வீடு சொந்த வீடு என்பதாலும், நாங்கள் நிறைய வருடங்களாய் அங்கேயே வசிப்பதாலும் யாரும் புறா பற்றிய புகார்களை அப்பாவிடம் தெரிவிப்பதில்லை, சொன்னாலும் அதை அவர் பெரிதாய் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். “போங்கடா வெளக்கெண்ணைகளா” என்று புறாக்களுக்கு இரை போடப் போய்விடுவார்.
புறாக்களுக்கென்றே மொட்டை மாடியில் தனியாக அமைக்கப்பட்ட அறை, மேலே ஓட்டுக் கூரை, உள்ளே அறைமுழுதும் மரப்பெட்டிகளாலான சிறு சிறு தடுப்புகள். புறாக்கள் வந்து போக வெளிக்கதவில் இரண்டு துவாரங்கள்.  புறாக்கள் நீர் அருந்த, அறைக்கு வெளியே மொட்டை மாடியில் அகலமான ஒரு தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அந்த தொட்டியை கழுவி தண்ணீர் மாற்றுவது தான் அப்பாவின் முதல் வேலை.
அப்பா திருமணம் முடித்து அம்மாவை அழைத்து வந்த முதல் நாளே அவளுக்கும் புறா வளர்ப்பு பிடித்து விட்டதாம். அப்பா வேலைக்கு செல்லும் சமயங்களில் எல்லாம் அவற்றை பராமரிக்கும் வேலையை அம்மா விருப்பமுடன் செய்வாள். எனவே பிறந்ததிலிருந்தே எங்களுக்கும் புறாக்களின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. சிறுவயதில் நாங்கள் விளையாடும் விளையாட்டில் நிச்சயம் எங்கள் வீட்டு புறாக்களுக்கும் இடமுண்டு. ரெக்கவெள்ள, பிளாக்கி, குண்டான், மரக்கண்ணு, வொய்ட்டி என அவற்றுக்கு பலவிதமான செல்லப்பெயர்கள் வைத்து அழைப்பது வழக்கம். ”எந்தப்புறாக்கு எது ஜோடி, எந்த ஜோடி முட்டை வச்சிருக்கு, குஞ்சு பொரிச்சு எத்தனை நாளாச்சு, ‘பட்டா’ பறக்க ஆரம்பிச்சிருச்சா, அடுத்த ஈடு முட்டை எந்த ஜோடி எப்ப வைக்கும், முதல்முறையா ‘பட்டா’ என்னைக்கு மேயப் போச்சு, போனது திரும்பி வந்துச்சா” இப்படி எல்லா நிகழ்வுகளும் தானாகவே எங்கள் மனதில் பதிந்து இருக்கும்.
மொட்டை மாடியில் எங்காவது முட்டை ஓடு பாதியாக உடைந்து கிடந்தால் எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையிருக்காது. எங்கள் வீட்டுக்கு இன்னுமொரு புதிய உறுப்பினர் வந்த மகிழ்ச்சி. புறா குஞ்சு பொரித்தவுடன் முதல் வேளையாக பொரிந்த முட்டை ஓட்டை கொண்டு வந்து வெளியில் போட்டுவிடும். சில ஜோடிகளுக்கு எப்போதும் இரண்டு முட்டையும் பொரிந்து இரண்டு குஞ்சுகள் இருக்கும், சில ஜோடிகளுக்கு எப்போதும் இரண்டு முட்டையில் ஒன்று மட்டுமே பொரிக்கும்.
இதை எங்கள் அப்பாவிடம் கேட்டால், “அது அப்படித்தான், அவுங்க ஒத்த பிள்ளைய்ப் பெத்து, நல்ல வளக்குறாங்களாம்”
”அப்போ ரெண்டு குஞ்சு பொரிக்கிற ஜோடியெல்லாம்...?” என நாங்கள் குறுக்குக் கேள்வி கேட்டால்,
”அவங்கெல்லாம் உங்க அப்பா போல, நாலு பிள்ளை பெத்தாலும் நல்லாத்தான் வளப்பாய்ங்க!” என்று சொல்வார். எங்களின் சந்தோசம் எங்கள் சிரிப்பில் தெரியும், எங்கள் அப்பாவின் சந்தோசம் அன்று இரவு வாங்கி வரும் முட்டைபுரோட்டாவில் தெரியும். 
125linesep
பந்தயப் புறாக்கள் என சில வகையுண்டு. தொலைவில் எந்த ஊருக்கும் எடுத்துச் சென்று பறக்கவிட்டாலும் சரியாக நம் வீட்டை வந்து சேர்ந்துவிடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இடையில் எங்கும் அவை இரையெடுக்கவோ, நீர் அருந்தவோ செய்யாது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள், பறவைகளுக்கு அவற்றை வளர்ப்பவரின் குணமே அமையும் என்பார்கள். ஆனால் அந்த பறவைகளின் வாழ்வோடு இணைந்து வாழும் போது நம்மையறியாமலே அவற்றின் குணம் நமக்கும் வருவதுண்டு. 
125linesep
பெரியக்கா திருமணம் செய்து கொடுத்த குடும்பம் கொஞ்சம் பெரிய இடம். ஊர் வேறு சென்னை... அவ்வளவு தூரம் என்றாலும் மனதுக்கு பிடித்ததால் முடித்து வைத்தோம். அவளுக்கும் அங்கு பெரிதாய் குறையில்லை. ஆனால் ஏதேனும் நல்லது கெட்டதுக்கு வந்து செல்வதென்றால் தான் பெரும்பாடு.
மாப்பிள்ளை அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாததால்,
“நீங்க எப்ப வேணும்னாலும் உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க, ரெண்டொரு நாள் இருந்த பிறகு திருப்பி நீங்களே கொண்டு வந்து விட்டுருங்க” என்ற ஏற்பாடு.
அம்மா இன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரையிலிருந்து கிளம்பி, நாளை காலை சென்னை செல்கிறாள் என்றால், அங்கு அக்கவை அழைத்துக் கொண்டு அன்று மதியம் வைகை எக்ஸ்பிரஸில் கிளம்பி இரவு வீட்டுக்கு வந்து விடுவாள். அக்காவை திருப்பி கொண்டு போய் விடும் போதும் அதே போல் தான். அங்கு அவர்கள் வீட்டிலுள்ள் வரவேற்பு உவப்பாக இருக்காதாகையால் அங்கு சென்று தங்கவோ, உண்ணவோ விரும்ப மாட்டாள்.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு முறை பெரியக்கா ஊருக்கு வந்திருந்த போது, வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல் நேராக மொட்டை மாடிக்கு ஓடினாள். அங்கே சென்று ஆசை தீர ஒவ்வொரு புறாவாக இனம் கண்டு பார்த்துக் கொண்டே இருந்தாள். புறாக்களின் சிறகடிப்பும், அங்குள்ள நெடியும் அவளுக்கு ஒரு பெரிய அமைதியையும், நிம்மதியையும் தந்தது போல. ஆனால் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
“ஏ, கழுத! இதப் பார்க்கவா இப்படி பறக்க ஓடியாந்த ?” அப்பா பின்னாலிருந்து கேட்டார்.
லேசாக முகம் திருப்பியவள் அப்பா முகத்தை பார்த்ததும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு அதை எப்படி சொல்வதென்றும் தெரியவில்லை, சொல்லாமல் இருப்பதும் ஏதோ உறுத்துவது போலவே தோன்றியது. அழுத கண்களை துடைத்துக் கொண்டே.
“இல்லப்பா, இங்க நாம ஒவ்வொன்னையும் எப்படி பார்த்து, பார்த்து வளக்குறோம். அங்க சனியனுக புறாக்கறி சமைக்கச் சொல்லி ஒரே சண்டை. எனக்கு உசுரே போச்சுப்பா...” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள். அப்பாவுக்கும் கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேச்சை மாற்றி அக்காவை கீழே அழைத்து வந்தார்.
125linesep
புறா பறக்க ஆரம்பிக்கும் பருவத்தில் தான் ‘பட்டா’  என சொல்வோம். கூட்டை விட்டு வெளியே பறக்க வரும் ’பட்டா’ முதல் இரண்டு மூன்று நாள் தந்தைப்புறா கூடவே சுற்றிக் கொண்டிருக்கும். அது பறந்தால் இதுவும் கூடவே பறக்கும். அது எந்த இடத்தில் மேற்கூரையிலோ, எதிர் மொட்டை மாடியிலோ எங்கு இறங்குகிறதோ இதுவும் கூடவே இறங்கும். ஆனால் தந்தைப்புறா மேச்சலுக்குப் போகும் போது மட்டும் சட்டென்று போக்கு காட்டி விட்டு, மற்ற புறாக்களுடன் சென்று விடும். போன தந்தைப்புறா திரும்பி வரும் வரை, புதிதாய் வெளி உலகத்தைப் பார்த்த இளையது “பாக், பாக்” என்று இங்கும் அங்கும் வெறித்துக் கொண்டு தண்ணீர் தொட்டிக்கும், ஓட்டுக் கூரைக்குமாய் பறந்து கொண்டிருக்கும். திரும்பி வரும் தந்தைப்புறா , இரை எடுத்துக் கொண்டு, பறந்து வந்து சரியாக குறிப்பிட்ட இடத்தில் தான் இறங்கும். ஒரு புறா மொட்டை மாடியின் வலது ஓரத்தில் வந்து அமர்கிறதென்றால், தினமும் அது அதே இடத்தில் தான் இறங்கும். பிறகு தண்ணீர் தொட்டியில் வயிறு முட்ட ஒரே உறிஞ்சலில் நீர் அருந்தி விட்டு இளைப்பாறும். பிள்ளை அதற்குள் அப்பாவை தேடி வந்துவிடும். அதுவும் பிள்ளைக்கு எடுத்து வந்த இரையை ஊட்டி விடும். பறக்க ஆரம்பித்த பிறகும் கூட இரண்டு, மூன்று நாட்களுக்கு தந்தை புறா வாய்வழியாகவே இரை கொடுக்கும். பிறகு சில நாட்களில் ‘பட்டா’வும் தந்தையுடன் மேச்சலுக்குக் கிளம்பி விடும். மழலை விலகிய பிறகும் நிறைய நாட்களுக்கு பாசம் கொஞ்சிக் கொண்டிருந்தாலும், தந்தைப்புறா கொத்தி விட்டு “தூரப்போ கழுத!” என விரட்டி விடும்.
125linesep
 எனக்கு பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரி என்னவோ அரசுக் கல்லூரியே கிடைத்தது. ஆனால் வெளியூர். திருநெல்வேலி எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாது.
“ஹாஸ்டல் எல்லாம் சேர்ந்து படிக்க மாட்டேன், இங்கேயே ஆர்ட்ஸ் காலேஜ் சேர்ந்து படிச்சுக்குறேன்” என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தேன்.
”நீ தானடா இன்ஜினியரிங் தான் படிப்பேன்னு சொல்லிட்டு திரிஞ்ச. இப்ப என்ன கோணச்சால அடிக்கிற. உங்கம்மா முந்தானைக்குள்ளயே இருந்தா சரிப்பட மாட்ட. ஒழுங்கு மரியாதையா கிளம்புற வழியைப் பாரு” என்று அப்பா கத்தி விட்டு கிளம்பி விட்டார். எங்கள் வீட்டில் அப்பா ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் வீட்டில் யாரும் மறுபேச்சு பேச முடியாது. அழுத கொண்டோ, புலம்பிக் கொண்டே அவர் முடிவின் படியே நடக்கப் பழகி விட்டோம். கல்லூரி விஷயத்திலும் அதே தான். “அப்பா சொன்னா சரி தான்” என்று முடிடுகு வந்தவனாய், மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு கிளப்பி விட்டேன். அதன் பிறகு விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அப்பா என்னிடமிருந்து சற்று விலகியிருப்பது போலவும், என்னை கொஞ்சம் மரியாதையாக அழைப்பது போலவும் தோன்ற ஆரம்பித்தது.
125linesep
பிறக்கும் போது கறுப்பாய் இருக்கும் புறாக்குஞ்சின் கண்கள், இறக்கை முளைத்து பறக்க ஆரம்பித்து சில நாட்களில் சிவப்பு நிறத்திலோ, மரப்பட்டை நிறத்திலோ, அடர்கறுப்பு நிறத்திலோ மாறி விடும். பெண் புறாக்களாக இருந்தால் இணை சேரும் பருவம் அது. ஆணாக இருந்தால் கொஞ்சம் சண்டியர்த்தனம் சேர்ந்திருக்கும், சும்மா இருக்கும் மற்ற புறாக்களை வம்பிழுக்கும். ஆனால் பெண் புறா படு கெட்டி. இப்படி சலம்பிக்கொண்டிருப்பவைகளை விட்டு விட்டு, விடலைத்தனமெல்லாம் முடித்து விட்டு கொஞ்சம் பக்குவமடைந்திருக்கும் ”முந்தைய செட்” ஆண்களையே தேர்ந்தெடுக்கும். ஜோடி சேர்ந்த பிறகு இணைபிரியாமல் சுற்றிக் கொண்டே இருக்கும். கூட்டிற்குள் தங்களுக்கென ஒரு தடுப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். முட்டையிடும் பருவம் வந்தவுடன், முட்டையிடுவதற்கு இரண்டு நாள் முன்பிருந்தே ஆண் பரபரப்பாகிவிடும். சிறுசிறு குச்சி, இறகு என எதை எதையோ சேகரித்துக் கொண்டு போய் கூட்டிற்குள் உள்ள பெண்ணிடம் கொடுக்க அது, அவற்றை தடுப்புக்குள் அழகாக பரப்பி முட்டையிட மிருதுவான சிறிய மெத்தை மாதிரி அமைத்து விடும். இதில் முட்டை உருண்டு விடக்கூடாதென்பதற்காக குச்சிகளால் மெத்தையை சுற்றி பின்னல் வேறு அமைத்துக் கொள்ளும். கணவனும், மனைவியும் மாறி மாறி அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும்.
125linesep
நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு, சின்னக்கா பி.எட் முடித்துவிட்டு அருகில் இருந்த பள்ளியில் பகுதி நேர ஆசிரியையாக சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தான் வீட்டில் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அவள் திடீரென்று ஒரு நாள் வந்து குண்டைத் தூக்கிப் போட்டாள்.
“எனக்கு கல்யாணமெல்லாம் ஒன்னும் வேணாம், எப்பவும் இதே பேச்சு, ஒரே எரிச்சாட்டியா இருக்கு”
அம்மாவுக்கு பட்டும் படாமல் தெரியும் போல. ஆவேசமாய் கத்த ஆரம்பித்து விட்டாள்
“சனியனே, எங்குடிய கெடுக்கவா வந்த. பொழுதன்னைக்கும் செல்லு மயிர நோண்டிட்டு இருக்கும் போதே நெனச்சேன். நீ ஒன்னும் வேலைக்குப் போயி கிழிக்க வேணாம் வீட்டோடயே கிட”
சின்ன அக்கா தெளிவாகவே பேசினாள்.
“இங்க பாருங்க, இனியும் மறைக்க ஒன்னுமில்ல. நான் கூட வேலை பார்க்குறவரைத் தான் கட்டிக்கப் போறேன். சம்மதம்னா பண்ணி வைங்க, இல்லாட்டி நான் இப்படியே இருந்துக்குறேன்”
கேட்டுக் கொண்டிருந்த அப்பா, “ஒன்னும் மோசமில்லை தாயி. நீ எங்க மேல வச்ச மரியாதைக்கு ரொம்ப நன்றி. ஆகவேண்டியதைப் பார்க்கலாம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். பெரிய அண்ணன் தான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான். எல்லாம் சின்னக்கா திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சரியாகி விட்டது. மாப்பிள்ளை அக்காவை நல்லா பாத்துக்குறார் என்றதும் உள்ளே இருந்த சிறு சிறு வருத்தங்களும் நீங்கியது.
அடுத்து அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளூரிலிருந்தே ஒரு இடம் வந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்த இடத்தை முடிப்பதில் விருப்பம். ஆனால் அண்ணன் அசலூரில் போய் பார்த்துவிட்டு வந்த ஒரு இடத்துக்குத் தான் ”ஓகே” சொன்னான்.
”டேய், குடும்பம் ஒன்னும் தரமாத் தெரியலடா, வேற இடம் பார்போம்” என்று அப்பா சொல்லிப் பார்த்தார். ”அண்ணன் தான் பெண்ணின் பூனைக்கண்ணில் மயங்கி விட்டானே” யார் சொல்வதும் அவன் காதிலேயே விழவில்லை. அந்தப்பெண்ணுடனே அண்ணனுக்குத் திருமணமானது. அவர்களுக்குத் தனியறை வேண்டுமென்பதற்காக மாடியில் அப்பா படுக்கும் ஒற்றையறையை அண்ணன் எடுத்துக் கொண்டான். அப்பாவுக்கு அதில் சிறு வருத்தம்.
“டேய், நீங்க கீழ் ரூமில் இருந்துக்கலாம்ல, நான் புறாவை கவனிச்சிட்டு மேலேயே இருப்பேன்ல” என்று சொல்லிப்பார்த்தார்.
அவன் “அதெல்லாம் சரிப்படாது. நீங்க கீழேயே படுத்துக்கோங்க” என்று தலைகுணிந்து, எங்கேயோ பார்த்துக் கொண்டு முனகினான். அப்பாவுக்கு அந்த செய்கை பிடிக்கவில்லை. குடும்பத்தில் தன் பிடி விலகுவதை உணர்ந்தவர், மறுப்பேதும் சொல்லாமல் சரி என்று இருந்து விட்டார்.
சிறிது நாட்களிலேயே, மொட்டை மாடியில் பூனைகள் வரத்து அதிகமாய் இருப்பது போல் தோன்றியது. ராத்திரி திடீர் திடீரென்று புறாக்கள் சிறகுகளை படபடவென அடிக்கும் சத்தம் கேட்கும். அப்பாவுக்கு முழிப்பு தட்டினாலும், சட்டென்று மாடிக்கு சென்று புறாக்கூட்டை பார்க்க வேண்டுமென்றால் அண்ணன் ரூம் வழியாகத் தான் செல்ல முடியும். அகால நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது என சங்கடத்துடன் படுத்துக் கொள்வார். வெகு சீக்கிரத்திலேயே, புறாக்களின் எண்னிக்கையும் வெகுவாக குறையத் தொடங்கி விட்ட்து, வீட்டில் அப்பா, அம்மாவின் மதிப்பைப் போலவே.
ஒரு நாள், அண்ணி அம்மாவை ஏதோ சாடையாக பேச, எதேச்சையாக கவனித்த அப்பா அண்ணியை கொஞ்சம் சத்தம் போட்டுவிட்டார். அதற்காக அண்ணன் அப்பாவை திட்ட, வீட்டில் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை எப்போதும் நிலவத் தொடங்கி விட்டது.
அப்பாவின் உடல்நிலையும் ஆரோக்யமாக் இல்லை. புறாக்களுக்கும் சரியான பராமரிப்பு இல்லை. பூனைத் தொந்தரவும் அதிகரிக்கவே, புறாக்கள் “காப்ரா”வாகிவிட்டன. இரவில் கூட்டில் அடைய பயந்து ஓட்டுக் கூரை மேலும், ஜன்னல்கள் மீதும் அடைந்தன. முட்டை வைப்பதும் சுத்தமாக நின்று விட்டது.
ஒரு கறுப்பு தினத்தன்று கூட்டை திறந்து பார்க்கும் போது அங்கே ஒரே ஒரு புறா கூட இல்லை. இரவிலும் அவை வீடு திரும்பவேயில்லை.
இப்பொழுதும் எங்கள் வீட்டை “புறாக்காரர் வீடு” என்று தான் அழைக்கிறார்கள். அப்பாவும் அங்கே தான் இருக்கிறார். ஆனால் அவர் பழைய “புறாக்காரராக” இல்லை.
125linesep

3 comments:

  1. இயல்பான/ தெளிவான நடை, பாலா..

    புறா வீட்டின் ஒப்புமை அருமை.. எல்லாம் கண் முன்னால் நடப்பது போல இருந்தது..

    புறாக்களைப் பற்றி நிறைய புதிய தகவல்கள்.. படிச்சு தெரிஞ்சுகிட்டதா? இல்ல அனுபவ அறிவா??

    One of your best.. keep up the good work!!!

    ReplyDelete
  2. bala , how many times i called u to wish u.very nice story. nice try. and congrats too !!
    maha

    ReplyDelete
  3. தீபா, மகா.. மிக்க நன்றி.

    @தீபா: புறா பற்றிய தகவல் அனைத்தும் அனுபவம் தான். கதை தான் கற்பனை

    @மகா: சாரி. ஆஃபிஸ் மீட்டிங் டைம்.

    ReplyDelete