Wednesday, April 18, 2012

வலசை (பயணம் 1) சிற்றிதழிலில் வெளிவந்த எனது பொழிபெயர்ப்பு - பகுதி 1

The Blindness - Novel by Jose Saramago


பார்வையின்மை / ஜோஸ் சரமகோ / தமிழில் வி.பாலகுமார்

1
மஞ்சள் விளக்கு ஒளிரத் துவங்கியது. சிவப்பு விழும்முன், முன்னால் வந்து கொண்டிருந்த கார்கள் இரண்டு வேகமெடுத்து சிக்னலைக் கடந்தன. பாதசாரிகள் கடப்பதற்கான ‘பச்சை மனிதன்’ குறிகை ஒளிர்ந்தது. சாலையைக் கடப்பதற்காக காத்திருந்த மக்கள், வரிக்குதிரையைப் போன்று தோற்றமளித்த தார்சாலையின் பக்கவாட்டு வெள்ளைக் கோடுகளில் அடி எடுத்து வைத்தனர். கழுத்து நரம்பு புடைக்க காத்திருக்கும் பந்தயக்குதிரைகள் போல, வாகனவோட்டிகள் பொறூமையின்றி விடுபற்றியை (க்ளெட்ச்) அழுத்தியவாறு கார்களை கிளப்பக் காத்திருந்தனர். பாதசாரிகள் சாலையைக் கடந்து முடித்திருந்தனர், இருப்பினும் வாகனங்கள் செல்வத்ற்கான சமிக்கை விழ இன்னும் சில நொடிகளாகும். பாதசாரிகள் கடந்து முடிப்பதற்கும் வாகனங்கள் செல்லத் துவங்குவதற்குமான இந்த இடைவெளி அதிகமில்லை தான். இருந்தாலும் இது போன்று நகரம் முழுமையிலுமுள்ள ஆயிரக்கணக்கான சிக்னல்களினால் ஏற்படும் காலவிரயமே போக்குவரத்து நெரிசலும், சிக்கலும் ஏற்படக் காரணமென்று சிலர் வாதிடுவார்கள்.
ஒரு வழியாக, பச்சை விளக்கு ஒளிரத்துவங்கியது. கார்கள் வேகமெடுத்து கிளம்பின. ஆனால் சாலையின் நடு ஓடுதளத்தில் முதலாவதாக சென்ற கார் சட்டென்று நின்றது. ஏதோ இயந்திரக் கோளாறோ, முடுக்குப்பொறி கழன்றோ, பிரேக் பிடிக்காமலோ, விசை நெம்பு இறுகியோ, மின்னியல் சுற்றமைப்பில் ஏதேனும் பழுதோ ஏற்பட்டிருக்க வேண்டும், அல்லது எரிபொருள் கூட தீர்ந்து போயிருக்கலாம். எது எப்படியோ, கார்கள் இப்படி நிற்பது இது ஒன்றும் முதன்முறையாக இருக்காது.

அங்கே சாலையைக் கடக்க காத்திருந்த பாதசாரிகள் நின்றிருந்த காரின் ஓட்டுநர், கண்ணாடி வழியாக இங்குமங்கும் கையசைப்பதைக் கண்டனர். அந்த காருக்குப் பின்னால் நின்றிருந்த வாகனங்கள் வேகமாக ஹாரன் சத்தமெழுப்பின. அதற்குள் சில ஓட்டுநர்கள், நின்று கொண்டிருக்கும் காரை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத ஓர் ஓரத்திற்கு நகர்த்தும் முடிவுடன் கீழிறங்கினர். அவர்கள் அந்த காரின் மூடிய கதவுகளை தட்டும் திசைகள் நோக்கி காருக்குள் இருந்தவன் மாறி, மாறி திரும்பி ஏதோ உறக்க கத்திக் கொண்டிருந்தான். பூட்டிய காருக்குள் இருந்து அவன் கத்தும் வாயசையை கூர்ந்து கவனிக்கையில் அவன் சில வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது தெரிந்தது. சிலர் முயற்சி செய்து கார் கதவைத் திறந்த போது, அவன் உறக்கக் கத்திய வார்த்தைகள் தெளிவாகக் கேட்ட்து, “என் கண்பார்வை தெரியவில்லை!” 

யார் தான் நம்பியிருப்பார்கள் ! முதல் பார்வைக்கு, அவனின் கண்கள் ஆரோக்யமாகவும், கருவிழிகள் ஒளிபொருந்தியவைகளாகவும், வெள்விழிக்கோளத்தின் புறத்தோல் பீங்கான் போன்று கச்சிதமாகவுமே காட்சியளித்தன. கண்களை அகல விரிப்பதையும், முகச்சுருக்கத்தையும், கண் இமைகள் அடிக்கடி மூடிக்கொள்வதையும் பார்க்கையில், அவன் ஏதோவொரு கடும்வலியின் காரணமாக கலக்கமடைந்தவனைப் போலத் தோன்றினான்.

நன்றி : வலசை சிற்றிதழ்
******

No comments:

Post a Comment