" நான் மனிதன், ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான்
வண்ணத்துப்பூச்சி, ஒரு மனிதனாய்
உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன்"
- ஸுயாங் ஸீ
- ஸுயாங் ஸீ
கண்கொள்ளுமளவு முழுமையாய் விரிந்து கிடக்கிறது வனம். காலங்களின் ஈரம்
அடர்த்தியாய் இறங்கியிருக்கும், சருகுகள் பூத்துக் கிடக்கும் மதிகெட்டான் சோலையில்
ஊர்ந்து ஊர்ந்து தடம் தேடிச்செல்கின்றன பாதங்கள். கண்முன்னே ஒரு திசைமாணி, வடக்கை
குறித்துக்காட்டிக் கொண்டே முன்னே செல்கிறது. நான் திசைமாணியைப் பார்த்துவிட்டு,
வலதுபக்கம் திரும்பித் திரும்பி, கிழக்கை நோக்கி முன்னேறுகிறேன். ஆயுள் ரேகைகளை
வட்டவட்டமாய் செதுக்கி வைத்திருக்கும் முதிய மரங்கள் நிறைந்த அடர்வனத்திற்குள்
செல்லச் செல்ல, கிளைகள் சரசரக்கும் பேரோசை, பெயர் தெரியாத பறவைகளின் இடைவிடாட
கீச்சொலி இவற்றிற்கு அப்பால், சிற்சிறிய குன்றுகளையும், குதித்தோடும் குறு நீரோடைகளையும் தாண்டியபடி கிழக்கு நோக்கிய
பயணத்தைத் தொடர்கிறேன். முடிவில் வனத்தைத் தாண்டிய பெரிய புல்வெளியை அடையும் போது,
சூரியக்கதிரின் முதல் கீற்று, செம்பழுப்பாய் ஒளிர்விடத் துவங்குகிறது.
வனத்திலிருந்து வெளியேறியதில் ஒருவித விடுதலை உணர்வு தோன்ற,
வெளிச்சக்கீற்றினூடே வேகமாக நடக்கிறேன். வழியின் நடுவே கரிய குன்று போல் ஏதோ
தடுக்க, தடுமாறி அப்படியே திகைத்தபடி நிற்கிறேன். பார்வைக்கு மிக அருகே, இரு
யானைகள் மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கின்றன. நான் அசைவற்று, சிறு சத்தமும்
கொடுக்காமல், அவற்றின் ஆக்ரோசத்தை, கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
அவற்றின் இயக்கத்துக்கு இடையூறாக சிறு ஒலி எழுந்தாலும் , அவற்றின் கோபம் என் மீது
திரும்பி விடும் என்ற நிலையில், நான் சிலையாய் நிற்கையில், பீப், பீப் … பீப்,
பீப் … பீப், பீப் … என்று இடைவிடாத இடர் எச்சரிக்கை ஒலி !
திடுக்கிட்டு எழுந்து அலாரத்தை அணைத்தேன். பசியம் நிறைந்த வனத்தின்
வாசனையும், பறவைகளின் கீறீச் ஒலியும், அகன்ற புல்வெளி தந்த குளுமையும், யானைகள்
அருகில் திடுக்கிட்டு நிற்கும் நிலையும் இன்னும் நினைவில் நிழலாடியது. கண்களை
கசக்கிக் கொண்டு பார்த்தால், பார்வையின் ஒளி தூரமாய் பரவுவதற்கு வழியின்றி, நான்
படுத்திருந்த பத்துக்கு எட்டு அறையின் சுவரில் பட்டு எதிரொளித்தது. சோம்பல்
முறித்தபடி எழுந்தேன். இரண்டு வாரங்களாய் துவைக்காத ஆடைகள் அறையெங்கும் விரவிக்
கிடந்தன. ஜன்னல் இல்லாத அறையில் எப்போதும் இருக்கும் அழுக்கு வாடையோடு சேர்ந்து,
லேசான முடை நாற்றமும் அடித்தது. யானைக்கனவின் கிளர்ச்சியையும், பயத்தையும்
நினைத்துக் கொண்டே, தளம் முழுவதும் உள்ள 10 அறைகளுக்கும் பொதுவாக உள்ள கழிப்பறையை
நோக்கி நடந்தேன்.
எனக்கு வரும் கனவுகள் எப்போதும் விசித்திரமானவை. நினைவு தெரிந்து
முதன் முதலில் வந்த விசித்திர கனவு, எனது திருமணம் தொடர்பானது. அதுவும் எனது
ஏழாவது வயதில். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள்,
வகுப்பில் ஒரு தோழியோடு பென்சிலையும், சாக்பீஸையும் வைத்து விளையாடிக்
கொண்டிருந்தேன். அப்போது தவறுதலாக அவளது பென்சிலை என் பாக்ஸில் வைத்து எடுத்து
வந்துவிட்டதை, மாலை வீட்டுக்கு வந்த பிறகு தான் கவனித்தேன். அந்தப்பெண் தவறாக
நினைத்துக் கொள்வாளே என்ற வருத்தம், அன்று தூங்கும் வரை மனதுக்குள் இருந்துகொண்டே
இருந்தது. அன்று இரவு கனவில், எனக்கும் அந்த தோழிக்கும் திருமணம் நடப்பது போல கனவு
வந்தது. விடிந்ததும் ஒரு மாதிரி குதூகலமான மனநிலையில் தான் இருந்தேன் என்று
இப்பொழுது வரை நினைவிருக்கிறது. வெகு நாட்களாய் அந்த கனவை மனதுக்குள் நினைத்துக்
கொண்டே மகிழந்து கொண்டிருந்தது தனிக்கதை. மறுநாள், மிக வருத்தத்துடனேயே அந்த
பென்சிலை அவளிடம் கொடுத்தேன். நான் வேண்டுமென்றே அந்த பென்சிலை திருடிக் கொண்டு
சென்று விட்டதாகவும், அதனால் முதல் நாள் இரவு முழுவதும் என்னைத் திட்டிக்
கொண்டிருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவள் சொன்னாள். ஆக,
எந்தப் பெண்ணாவது நம்மைத் திட்டினால், அன்று இரவு கனவில், அவளுடன் நமக்குத்
திருமணம் நடக்கும் என்று ஒரு தியரியை வடிவமைத்துக் கொண்டேன்.
கனவுக்கான ”ஹேப்பி ஹவர்ஸ்” முடிந்ததும், அன்றைக்கான வழமைக்குள் நம்மை
ஒப்புக் கொடுத்து விட வேண்டியது தான். மாநகரத்தின் பரபரப்பான பகுதியில்
அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மேன்ஷன்களில், உள்ளடங்கிப் போயிருக்கும் “சேவல்
பண்ணை”யின் நான்காவது மாடியில், இரண்டு பேர் தங்கக்கூடிய சிறிய அறையில் தான்
இப்பொழுதைய எனது இருப்பு. உடன் தங்கியிருப்பவன் கல்லூரித்தோழன் என்றபடியால்,
அறையில் பெரிய பாகப்பிரிவினை எதுவும் கிடையாது. அறை முழுதும் இருவரின் உடைகளும்,
புத்தகங்களும், பொருட்களும் தங்கு தடையின்றி எங்கெங்கும் விரவிக் கிடக்கும்.
அலுவலம் செல்லும் அவசரகதியில், பொதுக் கழிவறை வரிசையைத் தாண்டி, உடை மாற்றி, உடலுக்கு
ஒருமுறை, காலுறைக்குள் ஒரு முறை என வாசனை திரவியங்களைத் தெளித்து விட்டு, கசகசக்கும் கழுத்துப் பட்டையையும், இடுப்புபட்டையையும்
இறுக்கிக் கொண்டு, வெக்கு வெக்கென்று நேரத்திற்குள் ஓடி, மின்சார ரயிலைப் பிடித்து
அலுவலகம் அடைந்து, அங்கே உணவகத்தில் தினமும் ஒரே மாதிரியாய், பரப்பி
வைக்கப்பட்டிருக்கும், காய்ந்த ரொட்டிகளை ஊறவைத்துத் தின்னும் போதெல்லாம்
நினைத்துக் கொள்வேன்... "கனவுகள் எவ்வளவு வண்ணமயமாய், ஒவ்வொரு நாளும்
புதுவிதமாய். எதிர்பார்ப்பின் அழகியலோடு தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்தகைய
கனவுகளுக்குள்ளே சென்று சென்று வாழ வழி இருக்கிறதா ? "
விதவிதமான கனவுகள் வருகின்றதே, நாம் வாழ்கின்ற இந்த வாழ்வும் அப்படியே கனவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்பொழுது
யோசிக்கத் தோன்றும். தவறவிட்ட தருணங்கள், கொஞ்சம் முயற்சி எடுத்தால்
வெற்றியடைந்திருக்கக் கூடிய வாய்ப்புகள், கொஞ்சம் நிமிர்ந்து நின்றிருக்கக் கூடிய
சவால்கள், இன்னும் இளகிப்போயிருக்க வேண்டிய கோபங்கள் என்று எல்லாக் கோட்டையையும்
அழித்து விட்டு முதலில் இருந்து விளையாடத் தோன்றும் சாகசமும் நன்றாகத் தான்
இருந்தது. மனம் குதூகலிக்கும் வேளையில் வாழ்வை அப்படியே உறைந்து போக வேண்டுவதும், துவண்டு போகும் வேளையில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அப்படியே
அழித்துவிட்டு புதிதாய் துவங்கிவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த சாத்தியக்
கூறுகள் வாழ்வில் இல்லாவிட்டலும், கனவுகளில் நிரம்ப நிரம்பக் கிடைப்பதாகவே
எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.
நிறைவேறாத உள்ளுணர்வு
ஆசைகள் தான் கனவுகளாக வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால், இவ்வளவு
ஆசைகள் உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன என்பதே வியப்பாக இருக்கும். வழமையாய்
செல்லும் வாழ்க்கைக்கு வண்ணமயமான் கனவுகள் சுவாரஸ்யத்தைக் கொடுப்பதால்,
இப்பொழுதெல்லாம், அதை வரவேற்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன். இன்று வந்த கனவு
இன்னும் வித்தியாசமானது.
இதுவரை அறிந்திராத ஒரு பெயரற்ற ஊரில், வார சந்தை போன்று
நடந்துகொண்டிருந்தது. ஓவ்வொரு கடையின் முன்னும் பெருந்திரளான கூட்டம்
குழுமியிருந்தது. தேசாந்திரியாக சுற்றித்திருந்து, அந்த ஊருக்குள் பெரும்
களைப்புடன் நுழைபவனாக நான், கால் போன போக்கில் சந்தையினூடே நடந்து சென்று
கொண்டிருந்தேன். நா வரண்டு, தாகமெடுக்க, தண்ணீர் தேடி ஒவ்வொரு கடையாக பார்த்தபடி
நடந்தேன். வித்தியாசமாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில், மற்ற கடைகளை விட மிக
அதிகமான கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று பார்க்கின்ற
ஆர்வத்தில், அந்தக் கடையை எட்டிப் பார்க்க, எனக்குப் பின்னால் வந்த கூட்டம்,
என்னையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு கடை வாசல் வரை கொண்டு போய் விட்டது.
வடநாட்டு பாணி உருமாலும், பெரிய மீசையும், வித்தியாசமான உடையும்
அணிந்திருந்த கடைக்காரர் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். எனக்குத் தண்ணீர்
தாகம் அதிகமாகி மயக்க வருவது போலத் தோன்றியது. என் தேவையைப் புரிந்து கொண்டவர்
போல, ஒரு மண் குவளையில் தண்ணீர் கொடுத்தார். நான் ஆவலாக வாங்கி, நெஞ்சு நனைய
வேகமாகக் குடித்தேன். நன்றியுணர்ச்சியாக, இந்தக் கடையில் ஏதாவது வாங்கிச் செல்ல
வேண்டும் என்று நினைத்தவனாய், எனது பர்ஸை எடுத்தேன். அதில் இருந்த சில்லரைக்
காசுகளை எண்ணுவதற்கு முன்பாகவே கடைக்காரர், கைகளால் சைகை காட்டி நிறுத்தச்
சொன்னார். முதலில் பொருளை உபயோகப்படுத்திப் பார்த்து விட்டு, பின் விலையைப் பேசிக்
கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றவே,
சரியென்று பொருட்களைக் காண்பிக்கச் சொன்னேன்.
அவ்வளவு கூட்டத்தையும் விலக்கி, என்னை உள்ளறைக்குக் கூட்டிச்
சென்றார். சாணி போட்டு மெழுகியிருந்த மண் தரையும், தென்னங்கீற்று வைத்து
கட்டியிருந்த கூரையும், ஒரு கிராமத்து வீட்டை நினைவுபடுத்தியது. அந்த அறை
முழுவதும், சிறிதும் பெரிதுமாக மண் தாழிகள் மூங்கில் கூடைகளைக் கொண்டு மூடி
வைக்கப்பட்டிருந்தன. ஓவ்வொரு தாழியும் வெவேறு வடிவம் கொண்டிந்தன. தாழியில்
இருந்தவை என்ன பொருளாக இருக்கும் என்ற ஆர்வத்தில், கைக்கு எட்டிய முதல் தாழியைத்
திறந்து பார்த்தேன். அதில் மீன் குஞ்சுகள் நீந்திக் கொண்டிந்தன. மீன்கள் வியாரமாக
இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அடுத்த தாழியைத் திறந்தேன் அதில் மேகப்பொதிகள்
மிதந்து கொண்டிருந்தன. இது என்னவிதமான வியாபாரம் என்று குழப்பத்துடன்,
கடைக்காரரைப் பார்த்தேன். அவர் அர்த்தமான புன்முறுவலுடன், “இது கனவு வியாபாரம்,
இங்கே, பயமும், சிலிர்ப்பும், கூச்சமும், வெறியும், பக்தியும், மோகமும், சாகசமும், புலம்பலும், சிறியதும், பெரியதுமாக இப்படி
ஏகப்பட்ட கனவுகள் விற்பனைக்கு இருக்கின்றன. எந்தக் கனவு வேண்டுமோ, அந்த கனவுக்குள் சென்று வாழ்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச்
செல்லலாம்” என்றார். ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் என்னுள்
தொற்றிக் கொள்ள, "ஒரு கனவு வாங்குவதற்கு எத்தனை வாழ்க்கையை வேண்டுமானாலும்
இலவசமாய் முயன்று பார்க்கலாம்" என்ற விளம்பரமும் கவரவே, ஒவ்வொரு தாழியாகத்
திறந்து பார்த்தேன். அதில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்த தாழி
கவனத்தை ஈர்த்தது. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எனும் அந்த கனவுக்குள் நுழைந்து
பார்க்க விரும்பினேன். அதைக் கடைக்காரரிடம் தெரிவித்ததும், அவர், அந்த தாழிக்குள்
என்னை இறங்கச் சொன்னார். சுவாரஸ்யமும், பயமும் ஒரு சேர பிணைத்துக் கொள்ள, மெல்ல
தாழிக்குள் இறங்கினேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தேன். இன்னும்
கொஞ்சம் நேரம் தான், பிறகு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாகலாம் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டி, இருட்டறைக்குள் தள்ளுவது
போன்று ஒரு உணர்வு. ஏதோ பயம் தொற்றிக் கொள்ள பதறிப் போய், " வேண்டாம், நான் சிட்டுக் குருவியின் கனவை முயற்ச்சிக்கிறேன், இது வேண்டாம்!" என கதற., வெளியே இருந்து கடைக்காரரின் சத்தம்...
" இந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வை முடித்து விட்டு வா, பிறகு சிட்டுக் குருவியாகலாம்!". நானும் வேறு வழியின்றி
சிட்டுக்குருவின் கனவை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்கையின் துவக்கத்தில் உழன்று
கொண்டிருந்தேன், அப்பொழுது…."
திடீரென்று, கனவு கலைந்து, முழித்துப் பார்த்தால், என்
முதுகில் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் முளைத்து இருப்பது போன்ற உணர்வு. கொஞ்சம்
நிதானித்ததும், நினைவு வந்தது. வழக்கமாய் கனவு தான் வரும். இப்பொழுது கனவுக்குள்
கனவை வாங்குவது போல ஒரு கனவு வந்திருக்கிறதே என்று யோசித்தவாறே கண்களைக்
கசக்கியபடி அமர்ந்திருந்தேன்.
"டீ சாப்பிடப்
போகலாமா ?" என்று அறை நண்பன் கேட்கும் போது தான் முழுதாய்,
சுய நினைவு வந்தது. தலையணையை ஒரு புறமும், கனவை இன்னொரு புறம் ஓரமாய் வைத்துவிட்டு,
தெருமுனையில் இருக்கும் கடைக்குத் தேநீர் குடிக்கக் கிளம்பினேன். ம்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் மகரந்தத்துடன் தேன்
குடித்திருக்கலாம்.
நன்றி மலைகள் இதழ் : http://malaigal.com/?p=10984
No comments:
Post a Comment