Monday, September 8, 2014

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை

கானகன் நாவல் குறித்த வாசிப்பனுபவம்:

மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். அதனூடே வனத்தைத் தனது பிரதாபங்களுக்கான களமாகவும் வேட்டையாடப்படும் உயிர் என்பது வெறும் மிருகம், அதற்கான ஆன்மா என்று ஒன்றில்லை என்று நம்பும் வேட்டைக்கார கருமாண்டியான தங்கப்பனுக்கும், இறந்து போன மனிதர்களின் ஆன்மா மட்டுமல்ல, விலங்குகளின் ஆன்மாவும் வனங்களில் நூற்றாண்டுகளாக வேர் கொண்டு இருக்கும் விருட்சங்களில் உறைந்து இருக்கின்றன, அவை அங்குள்ள மனிதர்களின் செயல்களைத் தொடந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன என நம்பும் தங்கப்பனின் வளர்ப்பு மகனான வாசிக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம் திரைக்கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.
நாவலின் முன்னுரையில் “புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில்” முடிவதாக ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் நாவலுடனான தொடர்ந்த பயணத்தில் ”கானகனை”, தன் தாயைக் கொன்ற ஒரு மனிதனை, குட்டி விலங்கு தேடி வந்து பழி வாங்குகிறது என்ற ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியவில்லை. உண்மையில் தங்கப்பனை கொல்வது பழிவாங்கும் எண்ணம் கொண்ட புலி மட்டும் இல்லை. அவனைப் பொறி வைத்து வலைக்குள் விழ வைத்து, புலிக்குத் தின்னக்கொடுப்பது வாசிதான். ஆக தன் கண்முன்னே வேட்டை என்ற பெயரில் யானைக்கூட்டத்தையும், மற்ற வன விலங்குகளையும் துடிக்கத் துடிக்கக் கொன்ற ஓர் இராட்சசனை சூதின் துணை கொண்டு வீழ்த்தியது வாசிதான்.
நாவல் துவக்கத்தில் “சோளகர் தொட்டி”, “காடு” ஆகிய புதினங்களின் சாயல் இருப்பது போல தோன்றியது. ஆனால் சில பக்கங்கள் சென்று நாவலின் மொழிநடைக்குள் நம்மை ஒப்புக் கொடுத்தபின், இந்த வனம் கொங்கு மணம் வீசும் சத்தியமங்கலக்காடோ அல்லது மலையாள சாரலடிக்கும் சேர நாட்டுப் பகுதியோ அல்ல, மதுரைத் தமிழின் வாசமடிக்கும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தேனி, பெரியகுளத்து வாழ்வியலோடு இயைந்த வருசநாட்டு மலை என்ற ஈர்ப்பு இன்னும் நாவலோடு நம்மைக் கட்டியணைத்துக் கொள்கிறது. தங்களது சிறுசிறு தேவைகள் போக வனத்தை எந்தத் தொந்தரவும் செய்யாத, வனவிலங்குகளின் வாழ்வுச்சங்கிலியை குலைக்காத எளிய வாழ்க்கை நடத்துகின்ற பழங்குடியின மக்களை அப்புறப்படுத்திவிட்டு காட்டின் அளப்பரிய செல்வங்களை அபகரிக்க நினைக்கும் பெருமுதலாளிகள் மற்றும் அவர்களின் வன்செயலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளையும் பற்றியும், அதனால் சுற்றுச்சூழல் எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றியும் பேசுகிறது இந்நாவல்.
சிறந்த வேட்டைக்காரனான சடையன், வேட்டையில் பெரிதாக விருப்பம் இல்லாதவனாகவே இருக்கிறான். ஆனால் அவனது மனைவியான செல்லாயிக்கோ வேட்டையின் சாகச வெறி உடலெங்கும், மனதெங்கும் ஊறிக்கிடக்கிறது. சடையனை வற்புறுத்தி அவ்வப்பொழுது அவளும் அவனுடன் வேட்டையாடச் செல்கிறாள். அவளது வேட்கை பல்கிபெருகி யானை, சிறுத்தை, புலி வேட்டை என்ற பெருங்கனவாய்த் தொடர்கிறது. அதனை அவள் சடையனிடம் கூறும் போது அவன் அவளைக் கண்டு மிரள்கிறான். “வேட்டைக்காரனின் பலம் முழுக்க அவன் வைக்கும் குறியில் தானேயன்றி, ஆயுதத்தில் அல்ல” என்பதில் நம்பிக்கையுடைய அவன், காட்டின் பெருவிலங்கான “கொம்பன்” யானையைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன, அதை யாரோ கொல்லப்போகிறார்கள் என்று ஊர் முழுக்க அரற்றித் திரிகிறான்.
அவன் மனம் பேதலித்து விட்டதாய் நம்பும் பளியங்குடி பெரியவர்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சில தினங்களில், வனத்தின் அடர்ந்த பகுதியில் தந்தத்திற்காகக் கொம்பன் யானை கொல்லப்பட்டதைப் பார்ப்பதில் இருந்து சடையன் மனம் பிறழ்ந்தவன் அல்ல, அவன் பளிச்சியின் பிள்ளை என்று நம்பத்துவங்குகின்றனர். வனத்தின் ஆன்மாவை படிப்பவனாக, வனவிலங்குகளுடன் உரையாடுபவனாக, அந்தக் காட்டின் ஆதிக்குடியர்களான பளியர்களின் தெய்வமான பளிச்சியின் பிள்ளையாக மக்களால் பார்க்கப்படுகின்ற, வாசியின் மீது அரூபமாகப் பிள்ளைப் பாசம் கொள்பவனாகச் சித்தரிக்கப்படும் சடையனின் செயல்களை நாவலின் மைய இழையாக மாற்றி வைத்து வாசித்தால், படைப்பின் இன்னொரு பரிமாணத்தை நம்மால் உணர முடியும். இறந்தவர்களின் ஆன்மா மரங்களில் உறைந்திருப்பதை உணர்தல், எதிர்வரும் துர்நிகழ்வுகளின் குறியீடாகப் பட்டாம்பூச்சிகளைக் காணுதல், தங்கள் சுயலாபத்திற்காக வனத்தின் இயல்பை அழித்து நாசம் செய்பவர்களை பளிச்சியம்மன் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதே என விசனம் கொள்ளுதல், பயிரிடப்பட்ட நிலங்களில் யானைக்கூட்டம் புகுந்து சகலத்தையும் அழித்து விட்டுச் செல்லும் போது பூரிப்படைதல், எதிர்பாராத தருணத்தில் பெருங்களிற்றின் பாகனாய் வந்து வாசியைக் காத்தல் என்று ஒரு நல்ல படைப்புக்குத் தேவையான புனைவின் பல்வேறு சாத்தியங்கள் இவன் மூலமாக மெருகேற்றப்பட்டிருக்கிறது. தனிமை விரும்பியான சடையனின் அருகே இருந்து வனத்தில் அவனது செயல்களைச் சற்று விரிவாக எழுதியிருந்தால், நாவலின் செழுமை இன்னும் கூடியிருக்கும்.
”வேட்டைக்காரனுக்கும், வேட்டையாடப்படும் மிருகத்துக்கும் ஓர் அந்நியோன்யமான உறவு இருக்கிறது. இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட பிறகுதான் வேட்டைக்காரன் அந்த மிருகத்தைச் சுட வேண்டும். நல்ல வேட்டைக்காரன் ஒளிந்திருந்து சுட மாட்டான்”. அந்த மலைப்பகுதியின் சிறந்த வேட்டைக்காரனான தங்கப்பனுக்கு அவனது அப்பா சொல்லிக்கொடுத்த பாலபாடம் இது. ஆனால் அவனைப் பொறுத்தவரை வேட்டை என்பது வீரம் மட்டுமல்ல அதில் கொஞ்சம் சூதும் கலந்திருக்க வேண்டும். முதலில் வேறு வழியின்றி நடக்கும் புலி வேட்டையில், புலியின் மீசை மயிரை மட்டும் சன்மானமாகப் பெற்று வருபவன், பின்னாளில் யானைக்கூட்டத்தைத் துரத்தி மலையாள தேசத்து காட்டுப்பகுதிக்குள் அனுப்பினாலே போதும் என்ற நிலையிலும், வலுக்கட்டாயமாகச் சூது செய்து இரண்டு ஆண் யானைகளைக் கொல்வது அவற்றின் தந்தங்களில் ஒன்றைப் பெற்று தன் மகளுக்குத் தொட்டில் செய்யவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதன் மலைக்காட்டில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் அவனது சுய தேவை அல்லது பேராசை என்னும் தீ எரியத்துவங்கிய பின், அவனுக்குள் இருக்கும் அறம் அனைத்தும் மறந்து போய் தன்னை விட வலுவில் குறைந்த ஜீவராசிகளிடம் மிருகத்திற்கும் கீழாக இறங்கி வெறி கொண்டு தாக்கவும் தயங்கமாட்டான் என்றே தோன்றுகிறது. சுற்றியுள்ள அத்தனை பகுதிக்கும் நன்கு அறியப்பட்ட வேட்டைக்காரனாகவும், சிறந்த கருமாண்டியாகவும் அறியப்படும் அவன், தனக்குப் பின் அந்தப் பெருமை தனது வளர்ப்பு மகனான வாசிக்குச் செல்ல வேண்டுமென எண்ணுகிறான். ”நீ வேட்டையாடறது ஒரு மிருகம் அவ்வளவு தான். நீ வேட்டையாட இந்த காடு ஆயிரம் மிருகங்களைக் கொடுக்கும். எல்லாத்துக்கிட்டயும் கருணை காட்டிட்டு இருக்கக் கூடாது. நீ வாழறதுக்குச் செய்யுறது தான் வேட்ட. இது கொலை இல்லை…” இதுதான் தங்கப்பனின் எண்ணமும் வாழ்க்கைமுறையும். ஆனால் பிறப்பில் பளியனான வாசியால் அவ்வாறு இருக்கமுடியவில்லை. அவனுக்கு எல்லா விலங்குகளுக்கும், மரங்களுக்கும், வனத்திற்கும் ஆன்மா இருக்கிறது. வேட்டை நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தவனாக இருந்தாலும் எந்தவொரு விலங்கையும் வாசியால் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ள முடியாது. அதனால் ஆத்திரம் கொள்ளும் தங்கப்பன், வாசியைத் தன்னை அவமானப்படுத்தும் எதிரியாக எண்ணுகிறான். அதன் பொருட்டே அவன் இயல்பில் இருந்து விலகி இன்னும் மூர்க்கமாகி விடுகிறான்.
பளியங்குடியைச் சேர்ந்த சடையனின் மகனான வாசிக்கு, தன் தாய் சடையனை விட்டு விட்டு வேறு குடியைச் சேர்ந்த தங்கப்பனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவனின் சிறுவயதில் இருந்தே தங்கப்பனின் மற்ற மனைவிகள் அவனைத் தங்கள் மகனாகப் போற்றி வளர்த்தாலும், அவன் தன்னை ஒரு பளியனாகவே உணர்கிறான். மௌனியாகச் சுற்றித் திரியும் சடையனின் செயல்களை உற்றுக் கவனித்தவனாகவே இருக்கிறான். சடையன் தன்னிடம் எதையோ சொல்ல விழைகிறான் ஆனால் அதனை அவனால் ஒரு போதும் தன்னிடம் சொல்லமுடியவில்லை என்பதையும் உணர்கிறான். தக்க சமயத்தில் எங்கிருந்தோ வந்து யானைக்கூட்டத்திடமிருந்து தன்னைச் சடையன் காக்கும் போதுதான் அவன் எங்கும் செல்வதில்லை, தன்னுடனே இருக்கின்றான் என்ற தெளிவு கொள்கிறான். சிறுவனாய் இருந்தவன், ஜமீனும் அருகிலிருப்பவர்களும் தூண்ட, பனி போர்த்திய இரவு விறுவிறுப்படைய வனம் முழுக்க அதிர அதிர நடமாடிய இரவில் ஜமீனின் மனைவி மூலம் தன்னை முழு ஆணாக உணர்கிறான். அதுவரை தங்கப்பனை மைய அச்சாக வைத்து முன்னேறிக் கொண்டிருந்த நாவலை லாவகமாகத் தனது பிடிக்குள் கொண்டு வந்து விடுகிறான் வாசி. நிறை சினையான மானை வேட்டையாட வேண்டாம் என எதிர்க்கும் அவனைப் பொருட்படுத்தாமல் ஜமீன் அந்த மானைச் சுட்டு வீழ்த்த, தன் இடுப்பிலிருக்கும் கத்தியின் மூலம் அதன் வயிற்றைக் கிழித்து உள்ளேயிருக்கும் குட்டியை உயிருடன் மீட்டெடுக்கிறான். பின் வருபவை எல்லாம் வாசி முழுமையானதொரு பளியனாக, காட்டாளனாக, கருமாண்டியாக, கானகனாகப் பரிமளிக்கும் நிகழ்வுகள்தாம்.
புனைவின் கட்டமைப்பில் பெண்களுக்கான உலகு அதன் போக்கில் சித்தரித்திருக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. சடையனை விட்டுவிட்டு தங்கப்பனுடன் வாழும் செல்லாயி, பின்னொரு இரவில் பித்தனைப் போல் திரியும் சடையனை சந்திக்க நேர்கையிலும், தங்கப்பனுக்குப் பிறந்த பெண் குழந்தையைக் காட்டி, அதுவும் சடையனின் மகள் தான், அவளும் ஒரு பளிச்சிதான் என அவனிடம் கூறி உச்சி முகரக் கொடுக்கிறாள்.
அவள் தற்பொழுது தங்கப்பனின் மனைவியாக இருந்தாலும், சடையனை இன்னும் கணவனாகவே எண்ணி அவனுடனும் சேர்கிறாள். இறுதியில் அந்தக் குழந்தையிடம் “உனக்கு ரெண்டு அப்பனுக” என்று உள்ளன்புடனேயே கூறுகிறாள். வாசியின் இணையான குயிலம்மா, அழகான மான்குட்டி போன்ற சிறு பெண். பளிச்சி இறங்கி ஆட்டமாடிய பின், தனிமையில் களைத்துறங்கும் வாசிக்கு அருகில் சென்று அவனது தாகத்துக்குத் தண்ணீர் வைக்கிறாள், அந்த இரவில் அவன் மயக்கத்தில் இருக்கும் நிலையிலேயே அவனைத் தூண்டி அவன் உடல் வெப்பம் தணிக்கிறாள். பின் வாசி அவளையறிந்து சேர்ந்தபின், அவனது அம்மாமார்களோடும், தங்கப்பனோடும் இயல்பாக நெருங்கிவிடுகிறாள். ”கோபல்லபுரத்து மக்கள்” நாவலில், கோயில் காளையான ”காரி” கொட்டிலில் உள்ள ஒரு பசுவுடன் கூடுவதைப் பார்த்த நாயகி, பின் நாயகனுடன் தான் கூடும் சமயத்தில், அவனை காரியாகவும் தன்னைப் பசுவாகவும் நினைத்துக் கொள்வாள். அதே போன்றதொரு சித்திரம் “கானகன்” நாவலிலும் இருக்கிறது. வேட்டைக்குச் செல்லும் தங்கப்பன், இரு காட்டெருமைகள் கூடுவதைக் காண்கிறான். அதன் நினைவில், தான் முன்பு நோட்டமிட்டு வைத்திருந்த “சுப்பு” என்ற பெண்ணின் வீட்டிற்குச் செல்கிறான். பெரிதாய் முன்னறிமுகம் இல்லாவிட்டாலும் அவளும் இவனது வருகையை ஏதோவொரு வகையில் எதிர்பார்த்தே காத்திருக்கிறாள். தன் குழந்தையைத் தாயிடம் கொடுத்து விட்டு மிக இயல்பாக, ஒன்றாகக் குடித்தனம் நடத்துபவன் போல அவனுடன் முயங்குகிறாள். அந்த நள்ளிரவில் இரு காட்டெருமைகள் சரசம் கொண்டு விளையாடுவது போல அவர்கள் சீண்டிக்கொள்கின்றனர். பின்னர் அவளது வேட்டை விளையாட்டின் வேகத்திற்கு அவன் தன்னைக் ஒப்புக்கொடுத்து இருவரும் திருப்தியடைகின்றனர்.
இவ்வாறு பெண்கள் தங்கள் விருப்பம் போலக் கூடுகிறார்கள் என்று கட்டமைத்தாலும், நாவல் நாயக வழிபாடுக்கு வலு சேர்ப்பதாகவே தோன்றுகிறது. தங்கப்பனின் இரண்டாவது மனைவி சகாயமேரியின் பாத்திரம் இதற்கு உதாரணம். தங்கப்பனை மிகவும் விரும்புபவளாக அவள் இருந்தாலும், எதிர்பாராத விதமாக அன்சாரியுடன் கூடச் சேர்ந்து, பின் அது தொடர்ந்தபோதும் தங்கப்பனை விட்டு விலகாதவளாகவே இருப்பது ஏனெனப் புரியவில்லை.
சடையனை விட்டுவிட்டு மனதிற்குப் பிடித்ததால் தங்கப்பனுடன் வாழும் செல்லாயிக்கு இருக்கும் உரிமை, ஏனோ சகாயமேரிக்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் சினிமா பாரம்பர்யத்தில் தங்கப்பனின் நாயக பிம்பத்துக்கு எந்தக்குறையும் வந்துவிடக்கூடாது என ஆசிரியர் நினைத்திருப்பார் போலும்.
தங்கப்பன் சாவதுதான் முடிவு என்றாகி விட்டால், உண்மையில் கீழ்தேசத்திலிருந்து முட்ட முட்ட குடித்துவிட்டு சுயநினைவின்றி வரும் தங்கப்பனை புலி அடித்தவுடனேயே அவன் இறந்திருக்க வேண்டும். பின் அவன் உடல் காயங்கள் எல்லாம் ஆறி, வாசியுடன் மீண்டும் புலி வேட்டை நடத்தத் தயாராவது எல்லாம் தனியாகத் தொக்கி நிற்பது போலவேதான் தோன்றியது. அதனை வாசியின் பலிவாங்குதலுக்கான களம் என்று எடுத்துக் கொண்டாலும்கூட அதை இன்னும் நிறைவாக எழுதியிருக்கலாம் என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. நாவலில் மீண்டும் மீண்டும் “காட்டு விலங்குகள் எப்போது இயல்பு மாறும் என்பதைச் சொல்ல முடியாது, காடு அளப்பரிய ஆச்சர்யங்களைக் கொண்டுள்ளது” என்பன போன்ற விளிப்புகள் வருகின்றன. அவை வாசிப்பின் தொடர் கண்ணியை அறுத்துவிடும் அளவு இல்லையென்றாலும் சிறு சலிப்பை தருவதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் கறாரான எடிட்டிங்கிற்கான தேவை இருப்பதாகவே தோன்றுகிறது. அதனளவில் முழுமை பெற்று வெளிவந்த ஒரு படைப்பை “இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்” என்று கூறுவது அபத்தம். ஆனால் எந்தெந்த இடங்களில் நீச்சலடிப்பது சுளுவாக இருந்தது, எந்தெந்த இடங்களில் தரை தட்டியது என்ற வாசகனின் அனுபவத்தையும் படைப்பாளிகள் கேட்டுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாலேயே இவை சுட்டிக்காட்டப்படுகின்றன, மற்றபடி வலிந்து குறை சொல்வதற்காக அல்ல.
மொத்தமுள்ள 264 பக்கங்களையும் ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடும் படியான சுவாரஸ்யமான நடையில் இந்த “கானகன்” நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர் திரைத்துறையில் இருப்பதாலோ என்னவோ நாவலின் போக்கு ஒரு திரைக்கதையை வாசிப்பது போன்றே இருக்கிறது. இந்த நடை இலக்கியத்தில் சரியா தவறா என்றெல்லாம் தெரியாது, ஆனால் வாசிப்பவனின் கவனம் சிதறாமல் இறுதிப்பக்கம் வரை இழுத்துச் செல்லும் கலை கைவரப்பட்டிருக்கிறது என்ற வகையில் இந்த “திரைக்கதை” அமைப்பு இன்னும் புதிய, இளம் வாசகர்களை, வாசிப்பின் பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
காட்டு வாழ்வு, வனவுயிர்கள், வேட்டை, காதல், காமம் எனத் தொய்வில்லாமல் விறுவிறுவெனச் செல்லும் இத்தகைய நாவல் குறித்த அறிமுக நிகழ்வுகள் ஏற்கனவே இலக்கிய அறிமுகமுள்ள வாசகர்களிடம் நடப்பதற்குப் பதிலாக, சமகாலப் படைப்பாளிகள் பற்றி அறிமுகமில்லாத ஆனால் நிகழெதிர் காலத்தில் மிகப்பெரிய வாசகப்பரப்பாய் மாற வாய்ப்புள்ள கல்லூரி மாணவர்களிடையே நடத்தினால், சேத்தன் பகத், வைரமுத்து, கோபிநாத் புத்தகங்கள் தான் விற்கும், நம் புத்தகங்கள் லட்சங்களைத் தொடுவது கனவாகவே இருக்கும் என்ற நிலை மாறும். மிகக்குறுகிய காலத்தில் தனது வேலைப்பளுவிற்கு இடையில் இந்த நாவலை சிறப்பாக எழுதியிருக்கும் ”நண்பர் லக்ஷ்மி சரவணகுமார்” அவர்களுக்கும், நாவல் போட்டி அறிவித்து ஒரு நல்ல படைப்பு உரிய நேரத்தில் வெளிவர உத்வேகமாய் இருந்த ”நற்றிணை” பதிப்பகத்திற்கும், தனது முதல் பதிப்பாக “கானகன்” நாவலை பதிப்பித்திற்கும் ”மலைச்சொல்” பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
கானகன் (நாவல்) – லக்ஷ்மி சரவணகுமார்
மலைச்சொல் பதிப்பகம்
பக்கம்: 264, விலை: ரூ. 200
**********************
நன்றி : சொல்வனம் இதழ் http://solvanam.com/?p=34981

No comments:

Post a Comment