
வாகனமியக்குவதன் அரிச்சுவடியை,
சுதந்திரத்தை, தனித்தன்மையை
சொல்லிச் சொல்லி அச்சம் நீக்குவான்
நச்சூதும் சர்ப்ப நாக்காய் நீளும்
சாலைகளின் சூட்சமத்தை,
விதிகளின் புதிர்களை
சதுரங்க நகர்த்தலைப் போல்
ஒன்றொன்றாய் விடுவிப்பான்
தன் குட்டியை வேட்டைக்குப் பழக்கும்
வனமிருகத்தையொத்த லாவகத்துடன்
கர்மசிரத்தையாய் கற்றுத் தருவான்
செல்ல சினுங்கல்களுக்கோ
கொஞ்சலுக்கோ, சிரிப்புக்கோ
திசைதிரும்பாமல்
கனிவாய் பயிற்சியைத் தொடர்வான்.
தாழும் கண்களையும்
பதறும் கைகளையும்
தோள்பிடித்து நேர்செய்து
தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பான்.
தகுதிகாண் பருவம் முடிந்து
தனியாய் சிறகடித்து வானம் தொட்டு
திரும்பி கூடடைந்த முதல் நாள்
ஏனோ, அவள் உற்சாகத்தை
கவனமாய் உதாசீனப்படுத்துவான்
கணவன் என்ற இயந்திரத்திற்கு
எழுதியிருக்கும் நிரல் புரியும் நாளில்
அவளும் இதை புன்னகையுடன் கடந்து விடுவாள்.
அதுவரை ....