#2023
மற்றுமோர் ஆண்டு முடிகிறது, அலுவக ரீதியாக மிகச் சிறப்பான ஆண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கின் பொருட்டு இரண்டு வாரங்கள் தில்லியில் தங்கி இருந்தேன். பலதரப்பட்ட அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பயிற்சி என்று சிறப்பாகச் சென்றது. அதோடு இணையப் பாதுகாப்புத் துறையில் தேசிய அளவில் முக்கியமான ஓர் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த உத்வேகத்தையும், கற்றலையும் தொடர வேண்டும்.
தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பைக் கடைசி மாதத்தில் தந்துவிட்டு நகர்கிறது இவ்வாண்டு. எனது பணியின் முதல் மூன்றாண்டுகள் கொடைக்கானலில் தொழிலாளர் மேலாண்மை சார்ந்தே சென்றது. அதன் பின் மதுரை வந்து முழுமையாகத் தொழில்நுட்பத்தில் இறங்கி, தென் தமிழகத்தின் பத்து தொலைதொடர்பு மாவட்டங்களுக்கான “டாட்சாஃப்ட்” சர்வரில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், எங்கள் மேலதிகாரியாக வேறு பிரிவில் இருந்து மாற்றலாகி வந்தார் அருண்மொழி அம்மா. துறையில் ஏற்கனவே கடுமையான அதிகாரியாக அறியப்பட்டவர் ஆதலால் அனைவரும் அவரை வரவேற்று வணக்கம் வைத்து வந்தனர். இயல்பாக எனக்கிருந்த தயக்கத்தாலும், நம் வேலையை நம் இடத்தில் இருந்து பார்ப்போம் என்ற உந்துதலாலும் நான் மட்டும் சென்று அவரைப் பார்க்கவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் என்னை அவர் தனது அலுவலக அறையில் வந்து பார்க்கும்படி கூப்பிட்டு விட்டார். நான் சென்று பார்த்த போது, நான் வேலை பார்த்த தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் ஒரு செமினார் கொடுக்கச் சொன்னார். சரியென்று ஒத்துக் கொண்டேன். இருந்தும் என்னைச் சோதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தேவையில்லாத வேலை என்ற எரிச்சல் மனதிற்குள் மண்டியிருந்தது.
அறை நிறைய அதிகாரிகளும் சக பணியாளர்களும் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நேர்காணல் எடுக்கும் தொனியில் டைரி, பேனா என்று முழுத் தயாரிப்புடன் செமினாருக்கு வந்திருந்தார். “நீங்க என்ன என்னை சோதித்து மதிப்பெண் கொடுப்பது?” என்ற ஈகோவில் ஏனோ தானோவென்று துவங்கினேன். இரண்டே நிமிடத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார். கேள்வியின் உண்மைத் தன்மை என்னைச் சுட்டது. அவர் என்னைச் சோதிக்க வரவில்லை, உண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறார் என்று எனக்குப் புலப்பட்டது. பிறகு அவர் சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்து, உண்மையான அர்ப்பணிப்புடன் எனக்குத் தெரிந்த விஷயங்களை எளிமையாக ஆரம்பித்து, கடுமையான பகுதிகள் வரை ஒவ்வொன்றாக விளக்கம் கொடுத்தேன். சுமார் ஒருவாரம், தினமும் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த செமினாரின் முடிவில் இருவரும் சீனியர் ஜூனியர் பாகுபாடின்றி அலுவலக ரீதியாக இயல்பாகக் கலந்துரையாடும் நிலைக்கு வந்திருந்தோம். துறையில் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர், உண்மையான திறமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுப்பார் என்று நேரடியாக உணர்ந்தேன். அது நடந்து ஆகின்றன 19 ஆண்டுகள் ...
அப்போதே, அருண்மொழி அம்மா அவரது மகள் நினைவாக, சமூக நிலையில், பொருளாதாரத்தில், குடும்ப அமைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விச் சேவையில் பங்காற்றி வந்தார். அவருக்கு உதவியாக நானும், என் அலுவலக நண்பர்களும் பணி முடிந்த மாலை நேரங்களில் தினமும் செல்லத் துவங்கினோம். அவர் தலைமையில் சேவாலயம் மாணவர் விடுதிக்குச் சென்று மாணவர்களுக்குத் தனிவகுப்புகள் நடத்தினோம், பொருளாதார உதவிகள் செய்தோம், மாணவர்களின் மேல்படிப்புக்காக துறை வல்லுநர்களை, புரவலர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினோம். தனித்தனியாகச் செய்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து, பின்பு “சியாமளா கல்வி அறக்கட்டளை” என்ற குடையின் கீழ், மாணவர்களுக்கான உதவியைத் தொடர்ந்தார் அருண்மொழி அம்மா. நானும் சில நண்பர்களும் உடன் இருந்து பணியாற்றுகிறோம். இத்தகைய எனது ”மெண்ட்டாரை” இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி இழந்துவிட்டேன். சமூகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு.
இப்போது எழுதும் போது, “அம்மா” என்று விளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரும் அதனை விரும்பியிருப்பார், ஆனால் அவருடன் பேசும்போது “மேடம்” என்பதைத் தாண்டி வாய் எழவேயிவில்லை. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை என்றாலும், முதலில் இருந்த அந்தத் தயக்கம் அப்படியே இறுதி வரை தங்கிவிட்டது. ஆனால், மாணவர் விடுதிக்குத் தனி வகுப்புகள் எடுக்கச் செல்கையில் எங்களைத் தொடர்ந்து மாணவர்களும் அவரை “மேடம்” என்று அழைக்கத் துவங்க, அதனை கட்டாயமாக மாற்றி, மாணவர்கள் அனைவரையும் அவரை “அம்மா” என்று அழைக்க வைத்தேன். இழந்த தன் ஒரு மகளின் நினைவாக அவர் செய்த நற்செயல்களின் பொருட்டு அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு “அம்மா”வானார்.
அலுவலகம் சார்ந்தும், சமூக நலம் சார்ந்தும் அவர் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். அதைவிட மிக மிக முக்கியமான தருணம், என் வாழ்க்கைத் துணையை நான் கண்டடைந்தது அவரது அறிமுகத்தின் மூலமே. அதற்காக என் வாழ்நாள் நன்றிக்கடனுக்கு உரியவர் அவர். ஆனால் அதன் பொருட்டே சில பிணக்குகளும் ஏற்பட்டன. அவரைப் பொருத்தவரை, அன்பென்றாலும், ஆத்திரமென்றாலும் அதிரடி தான். சில ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் கோபம் கொண்டிருந்தார். ஆனாலும் அலுவகப் பணியிலும், அறக்கட்டளைப் பணியிலும் எந்த விலக்கமும் இன்றி தொடர்ந்து வழிநடத்திய வண்ணமே இருந்தார். நானும் கேட்டதற்கு பதில் சொல்லி, கொடுத்த பணியை மனசாட்சிப்படி திறம்பட செய்தேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு, அவரது பெருந்தன்மை காரணமாக மீண்டும் எங்களுடன் நன்றாகப் பேசத் துவங்கினார். பணி மாறுதல் காரணமாக உள்ளூரை விட்டு ஒசூர் வந்தபோதும் அவரது அணுக்கமும், வழிகாட்டுதலும் தொடர்ந்தபடியே இருந்தது.
சமூகக் கடமைகள் போக, தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அவரது அப்பாவைப் பராமரிக்கும் பணி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகளாக தீவிரமாக விபாசனா தியானத்தை மேற்கொண்ட அனுபவம் உள்ள அவர், தனது அப்பா காலத்திற்குப் பிறகு முழுமையாக விபாசனா தியானத்திற்குத் தன்னைப் ஒப்புக்கொடுத்துப் பணி செய்ய எண்ணியிருந்தார். ஆனால் காலம், அப்பா இறந்ததும் அவர் பூமிக்கு வந்த பணி முடிந்தது என்று தீர்மானித்துவிட்டது போல. அவரது அப்பா இறந்த ஒரு மாதத்திற்குள் அருண்மொழி அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற “சியாமளா கல்வி அறக்கட்டளை” பணி மீதமிருக்கிறது. சுமார் நூறு உறுப்பினர்களோடும், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவப் பயனாளர்களோடும் இயங்கி வரும் அறக்கட்டளையை திறம்பட நடத்த, அவர் வழிகாட்டிய எங்கள் குழுவிற்குக் காலம் உறுதுணை புரியவேண்டும்.
இந்த ஆண்டும் கணிசமான அளவு எழுதினேன். இயக்குநர் நண்பர் ஒருவருக்காக நான்கு திரைக்கதைகளின் ஒன்-லைனர்களையும், காட்சிச் சுருக்கங்களையும் எழுதினோம், இருந்தும் முழுமையான திரைக்கதை வடிவமாக மாற்றவில்லை. இரண்டு நாவல்கள் பாதி எழுதி நிற்கின்றன. இவை எவையுமே முழுமை பெறாதாதால் இவற்றை எழுத்துப் பணி கணக்கில் சேர்க்க முடியாது. நேரம் போதவே இல்லை என்று அழகாகக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் ஒழுங்கான நேர மேலாண்மையில் இவற்றை முடித்திருக்க முடியும் என்று உள்ளுக்குள் உறுத்தியபடியே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சாக்குப் போக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும், பிறகு வேலைகள் தாமாக நடந்து முழுமை பெறத் துவங்கும். ஆண்டு இறுதியில் “நஞ்சுக் கொடி” சிறுகதைத் தொகுப்பு மட்டும் வெளியாகிறது. புத்தாண்டில் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள். கேட்கவும், கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.
இந்த வருடம் தங்கள் புதிய புத்தகங்கள் குறித்துக் முன்னுரை, விமர்சனம், மதிப்புரை கேட்டுச் சிலர் அணுகினர். அவை ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், “அடே நான் எழுத நினைத்து எழுதாததே இன்னும் நிறைய இருக்கேடா, அதுக்குள்ள சீனியர் சிட்டிசனாக்கி கருத்து கேட்குறீங்களே” என்று தோன்றாமல் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் நாம் இளையர் இல்லை. காலம் கடத்தாமல் எழுத வேண்டியதை சீக்கிரம் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறது. வரும் வருடமும் எழுத்து, வாசிப்பு, கற்றல் உட்பட மனதிற்குப் பிடித்ததை செய்துகொண்டு இங்கே தான் ஓரமாக சுற்றிக் கொண்டிருப்பேன்.
மற்றுமொரு துவக்கம், அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக 2024 அமையட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!
#HappyNewYear2024