Thursday, March 26, 2026

தன்நெஞ்சறிவது! - வைரமுத்து - ஞானபீடம் தொடர்பான கட்டுரை

 

தன்நெஞ்சறிவது!

பாலகுமார் விஜயராமன்

---

கவிஞர் வைரமுத்துவுக்கு 2025ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் இன்னும் சர்ச்சைகளும், விவாதங்களும் முடிந்தபாடில்லை. தமிழ்ச் சூழலில் வழக்கமாக எந்த விருது அறிவிப்புக்குப் பின்னும் அத்தேர்வு குறித்த போதாமைகளும், அவநம்பிக்கைகளும் எழுவது இயல்புதான் ஆனால் இம்முறை எதிர்ப்புகள் இவ்வளவு காத்திரமாக வெளிவருவதற்கு விருதாளர் வைரமுத்து என்பதே முக்கியக் காரணம். முற்போக்காளர்கள், இடதுசாரிகள், நடுநிலையாளர்கள், அடிப்படைவாதிகள், வலதுசாரிகள், சங்கிகள், தீவிர இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டோரும் வைரமுத்துவின் தேர்வை விமர்சிக்கிறார்கள். ஏனென்றால் வைரமுத்து அவர்களின் முந்தைய வரலாறு அப்படி இருக்கிறது.  ஞானபீடம் போன்ற இந்திய அளவில் மிக உயரிய இலக்கிய அந்தஸ்து உள்ள விருதுக்கு வைரமுத்து தகதியானவர் இல்லை என்று சொல்வதற்கு மூன்று வகையான காரணங்கள் காணக் கிடைக்கின்றன.

1. வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் ஞானபீட விருதுக்கான தரத்தில் இல்லை. அவர் பெரும்பாலும் கூட்டு உழைப்பைக் கோரும் திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லுநர். அவரது தனிப்பட்ட கவிதைத் தொகுப்புகளும், புதினங்களும் மிகவும் மேம்போக்கானவை. அவற்றிற்கு இலக்கிய மதிப்பு இல்லை.

2. வைரமுத்து நேர்மையான முறையில் இவ்விருதைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் விருதுக் குழுவினர்கள், பரிந்துரையாளர்கள், அதிகார மையத்திலிருப்போர், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தி, நீண்ட கால காய்நகர்த்தலின் தொடர்ச்சியாக இவ்விருதைக் கைக்கொண்டிருக்கிறார்.

3. வைரமுத்து #metoo தொடர்பாக பெண்கள் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். தார்மீக அடிப்படையில் அவருக்கு இவ்விருதை வழங்கக் கூடாது.

முதல் விஷயத்திற்கான விளக்கம் நேரடியானது. ஞானபீட விருது என்பது தீவிர இலக்கிய எழுத்துக்கான விருது மட்டுமா? சாமானியர்களின் உணர்வுகளைத் தீண்டும் திரையிசை போன்ற மற்ற கலை வடிவங்களுக்கு அதில் இடமில்லையா? இவற்றிற்கான பதில்: ஞானபீடம் பல்துறை வகைமைகளைச் சேர்ந்த கலை வடிவங்களை உள்ளடக்கிய தேர்வாகவே இதுவரை இருந்திருக்கிறது. 2023ம் ஆண்டு உருது/இந்தி கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போதும் சர்ச்சைகள் வெடித்தன. குல்சாருக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை அங்கீகரிக்காத தீவிர இலக்கியவாதிகள் ஒருபுறமென்றால், குல்சாரோடு சேர்ந்து அவ்வருடம் ஞானபீட விருது பகிர்ந்தளிக்கப்பட்ட இன்னொரு நபர் குறித்தும் சர்ச்சை எழுந்தது. 2023ம் ஆண்டு கவிஞர் குல்சார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்/ஆன்மீக வழிகாட்டி/ பக்தி இலக்கிய குரு ராம்பத்ராச்சாரியா ஆகிய இருவருக்கு ஞானபீட விருது சேர்ந்தளிக்கப்படது. குல்சார் போன்ற திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீட விருதை அளிப்பதா என்றும், குல்சார் போன்ற தேர்ந்த கவிஞருக்கு ராம்பத்ராச்சாரியா போன்ற ஒரு மதத் தலைவரை இணை வைத்து விருது கொடுத்து அவரை அவமானப்படுத்துவதா என்றும், ஞானபீட விருதை ராமர் கோயில் கட்டுவதற்காகத் தொடர் பிரச்சாரம் செய்த ஒரு மதகுருவிற்கு அளிப்பதா என்றும் பல்முனைகளில் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல, 1998ம் ஆண்டு புகழ்பெற்ற கன்னட நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. கன்னட இலக்கிய அடையாளம் என்பது தீவிர எழுத்து வடிவம் மட்டுமல்ல அது நாடக அரங்கிலும் சமானமான உயிர்ப்புடன் இயங்கிறது என்பதை அவ்வருட விருது அறிவிப்பு உணர்த்தியது. இன்னும் பின்னே போனால், 1972ல் தேசியவாதக் கவிஞரான ராம்தாரி சிங் தினகருக்கு (இந்தி) வழங்கப்பட்ட விருது முக்கியமாக அவர் ஆற்றிய நாட்டுப்பற்று மிக்க அரசியல் உரைகளுக்கானதே. இலக்கியம் என்பது தனிப்பட்ட வாசிப்பு இன்பம் மட்டுமல்ல, அது வாய்மொழி மரபும்கூட என்ற செய்தியை அறிவிப்பதாக அமைந்தது. 1982ல் விருது பெற்ற கவிஞர், ஓவியர் மகாதேவி வர்மா (இந்தி) அவரது கவிதைகளைப் போலவே சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண்கள் உரிமை மற்றும் கல்விக்காக அவர் கொடுத்த குரலுக்காகவும் போற்றப்பட்டவர். 1996ல் விருது வென்ற மகஸ்வேதா தேவி (வங்கம்) தீரமிக்க மனித உரிமைப் போராளி மற்றும் பத்திரிகையாளர். பொதுவெளியில் அவரது இலக்கியத்தைக் காட்டிலும் பழங்குடியினர் நல்வாழ்வு மற்றும் கொத்தடிமைத் தொழிலுக்கெதிரான நேரடிச் சமூகச் செயல்பாடு வீரியமிக்கவை. இப்படி பன்முக இலக்கிய, பண்பாட்டு வடிவங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது ஞானபீட விருது. ஆயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களை, கவிதைகளை, சில புதினங்களை எழுதிய வைரமுத்துவும் செழுமையான மொழிப்பங்காற்றியிருக்கிறார். பல முறை தன் திரையிசைப் பாடல்கள்களுக்காக தேசிய அளவிலான அங்கீகாரமும், தனது “கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003ம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருதும் பெற்றிருக்கிறார். அவர் சாகித்ய அகாடெமி விருது பெறும் போதும் சில சர்ச்சைகளை எதிர்கொண்டார். எனினும் இத்தகைய அவரது சாதனைகள், அவருக்கான ஞானபீட விருதுத் தேர்வுக்கு பலமான அடித்தளம் அமைக்கின்றன.

இரண்டாவது விஷயம், வைரமுத்து நேர்மையற்ற முறையில் மறைமுக அழுத்தங்கள் மற்றும் சிபாரிசுகள் மூலமே ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படும் யூகம். இதனை வைரமுத்துவின் மீதான வெற்றுக் காழ்ப்பு என்ற ஒற்றை வரியில் சுருக்கிவிடவும் முடியாது. தமிழின் தன்னிகற்ற படைப்பாளி எனத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் வைரமுத்து, எப்போதும் ஆட்சியாளர்களின் நன்மதிப்புப் பட்டியலில் இடம் பெறத் தவறியதே இல்லை. திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்பு பாராட்டி அவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே வேளையில் ஒன்றிய அரசுப் பிரதிநிதிகளுடனும் அமைச்சர்களுடனும் இணக்கத்தை வளர்க்கத் தவறியதும் இல்லை. ஒன்றிய நிதியமைச்சரை “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தது போல இருக்கிறார் என்று பாராட்டியது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு சி்லை நிறுவ முன்னெடுக்கையில் வலியச் சென்று வாழ்த்தியது, முக்கியமாக, தற்போதைய பிரதம மந்திரியின் இந்தி மொழி கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு அவரின் “கவிப்புலமையை வானளாவப் புகழ்ந்து தள்ளியது இவையெல்லாம் பொதுப்பார்வையாளர்களுக்கு அவர் மீது அசூயையை ஏற்படுத்தின. அவரது இத்தகைய செயல்கள் மூலம் அவர் எத்தகைய நேரடி, மறைமுகப் பலன்கள் பெற்றிருப்பார் என்று தங்கள் யூகங்களை வளர்க்க அவரது நடவடிக்கைகள் துணைபோயின. ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளுக்குத் தகுதியுடைய பலர் தேர்வுப் பரிசீலனையில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில் ஆளுமை செலுத்துபவர்கள், முக்கிய படைப்பாளுமைகள் போன்றோரின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் சூழ்நிலையில் வைரமுத்து அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்தை, அவருக்கு ஞானபீட விருது அறிவித்திருக்கும் இவ்வேளையில் தங்கள் எதிர்ப்புக்கான காரணமாக முன்வைக்கின்றனர். இச்சங்கிலியில் முக்கியமான இன்னொரு கண்ணி, தமிழில் இதற்கு முன் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறுதிக் காலத்தில் இருக்கும் போது, வைரமுத்து வலியச் சென்று அவரிடம் தனது சிறுகதைகள் குறித்து  ஜெயகாந்தன் எழுதியது போல ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அவரது கையெழுத்தைப் பெற்றார் என்று ஜெயகாந்தன் அவர்களின் மகள் முன்வைத்த குற்றச்சாட்டு. அதற்கு வைரமுத்து தரப்பில் இருந்து ஜெயகாந்தனின் ஒப்புதலின் பெயரிலேயே அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது என்று மறுப்பு வந்தாலும், கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே தான் இருக்கின்றன.

 வெளியில் இருந்து பார்ப்பதற்கு இவை நேர்மையற்ற செயல்களாகத் தோன்றலாம். ஆனால் தகுதியுடைய தனது படைப்புகள் உயரிய இடங்களுக்குச் சென்று சேரத் தானே அதற்கான சந்தைப்படுத்துதலையும் செய்வதில் என்ன தவறு என்று வைரமுத்து நினைத்திருக்கலாம். தகுதியற்ற ஒன்றிற்காக சமூகத்தின் பிரபலர்களும், ஆளுமைகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் வலிய வந்து பாரட்டுப்பத்திரங்கள் வாசிப்பதில்லை. தான் முறையாக தன் படைப்பாற்றலை அவர்கள் முன் ‘கூச்சமின்றி (இதனைப் படைப்பாளர்களுக்கு உள்ள பொதுவான அவையடக்கம்/கூச்சம் என்ற பொருளில் வாசிக்கவும்) நடத்திக் காட்டுவதால் தன் படைப்புகளுக்கான சிபாரிசும் அங்கீகாரமும் கிடைக்கின்றன என்பது விருதாளரின் வாதமாக இருக்கலாம். ஒரு மனிதன் பல வருடங்களாகப் கணக்குகள் போட்டு, முன்னேறி, தனக்கு முன்பிருந்த விருது பெற வாய்ப்பிருந்த படைப்பாளுமைகளைப் புறந்தள்ளி, தன் சுயவிவரக் குறிப்புகளை மெருகேற்ற தகுதியான பரிந்துரைக் கடிதங்களைச் சேகரித்து அவற்றை வலுவுள்ளதாக்கி, விருதுக் குழுவின் பல படிநிலைகளைத் தனது செல்வாக்கினால் தகர்த்து, இறுதி வெற்றியையும் பெற்றிருப்பார் என்று நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் இன்றைய சமூக சூழ்நிலையில் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று முற்றாகப் புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால் அத்தகைய வழிமுறைகளில் தான் வைரமுத்து ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று பொது சமூகம் யூகித்தாலும், வலுவான ஆதாரங்களின்றி அதனை எதிர்க்க பொது சமுதாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் நேர்மையற்ற முறையில் இவ்விருதை அடைந்திருப்பார் எனில் அவ்விருதின் பொதுமதிப்பு குறைகிறதே ஒழிய, வேறொரு வெளிப்பாடும் அதன் மூலம் கிடைக்கப்போவதில்லை.

மூன்றாவது விஷயம், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #metoo சர்ச்சை.  பிரபலங்கள் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி தம் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் பணிந்து போக வேண்டிய இடத்தில் இருக்கும் எளியவர்களை பாலியல் ரீதியாக சீண்டல்கள்/அத்துமீறல்கள் / துன்புறுத்தல்கள் செய்ததை சமூகத்தின் பார்வைக்கு அம்பலப்படுத்தும் ஒரு பேரியக்கமாக உலகம் முழுவதும் வெடித்தெழுந்தது #metoo அதாவது ”நானும் பாதிக்கப்பட்டேன் எனும் கையறு நிலையின் முழக்கம்.  2017ம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதன் மூலம் அவர் வகித்துவந்த துறை சார்ந்த பதவிகள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் #metoo ஒரு இயக்கியமாகப் பரவியது.  பின்னர் வெயின்ஸ்டீன் மீதான குற்றங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனையும் கிடைத்தது. அவர்  தொடர்பான செய்திகளை ஆழமாகவும், விரிவாகவும் பிரசுரித்ததற்காக, நியூ யார்க் டைம்ஸ் மற்றும் நியூ யார்க்கர் பத்திரிகைகளுக்கு 2018ம் ஆண்டு பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க “புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது. ஆனால் #metoo பரவலாகியபின், ஆதாரப்பூர்வமாகவும் சட்டப்படியும் நிரூபிக்க வாய்ப்பில்லாத / விருப்பமில்லாத பாலியல் சீண்டல்களை, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்துவதன் மூலம் குற்றம்சாட்டப்படும் பிரபலங்களின் சமூக மதிப்பைக் குலைக்கும் சிறிய ஆயுதமாக அது பயன்படத் துவங்கியது. அதே சமயம், சட்டப்படியான அல்லது ஆதாரப்பூர்வமான இறுகியப் பிடிப்பு இல்லாத காரணங்களினால் #metoo என்பது பிரபலங்களின் சமூக நன்மதிப்பைக் கெடுக்கும் வெறும் அவதூறாக நீர்த்துப் போகும் வாய்ப்புகளும் பெருகின.

தமிழ்ச் சூழலில், 2018ம் ஆண்டு வைரமுத்துவுக்கு எதிரான #metoo பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை பிரபல பாடகி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முன்வைத்தனர். இன்று வரை அவை சட்டப்பூர்வமான வழக்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகள், திரைத்துறையைத் தாண்டி சமூகத்திலும் அரசல் புரசலாக ஒரு வதந்தியைப் போலவே சுற்றியபடியே இருக்கின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிராக புகாரளித்தவர்களுக்கு வாய்ப்புகள் இரகசியமாக மறுக்கப்படுகின்றன. அதே போல வைரமுத்துவுடன் பணிபுரிந்த பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மௌனமாக அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் அவரைப் பற்றி விமர்சித்தபடியே இருக்கின்றனர். ஆனால் இவையாவும் தன் சட்டை நுனி தூசி என்பது போல, தட்டிவிட்டு வைரமுத்து தொடர் தனியிசைப் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டே இருந்தார், பொதுநிகழ்வுகளில் வலிய தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றார், புத்தகங்கள் எழுதி தன்னைவிடப் பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்ட வெளியீட்டு விழாக்கள் நடத்திக் கொண்டே இருந்தார்.  தனது படைப்பாளுமை பற்றி வாய்ப்புள்ள சந்தைகளில் எல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். இன்று மதிப்புமிக்க ஞானபீட விருதையும் பெற்றிருக்கிறார். அதற்கு சமூகத்தின் மேன்மை மிக்க பல ஆளுமைகள் தஙகள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.  அவர் புதிய சிறகுகளுடன் தான் இன்னும் உயரப்பறக்க இவ்விருது சிறந்த உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று பேருவகை கொள்கிறார். அதே வேளையில் அவர் மீது அபிமானம் கொண்டோர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிண்ணனியில் இருந்து வந்த ஒருவர் ஞானபீடம் போன்ற உயரிய விருதினை பெறுவது பொறுக்காத மேட்டிமைக் குழுவின் சூழ்ச்சியே அவர் மீதான இத்தகைய அவதூறுகள் என்கின்றனர்.

வைரமுத்து ஞானபீட விருதுக்குத் தகுதியற்றவர் என்று நம்புபவர்கள் அவருக்கு அவ்விருது வழங்கியதை, தங்களுக்குச் சரியென்று தோன்றும் தேற்றத்தை வைத்து எதிர்க்கிறார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட ஊடகத் துறையில் செல்வாக்கு உள்ளோர் அவருக்கு எதிராகக் கட்டுரை எழுதுகின்றனர். சிலர் விருதுக்குழுவுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுகின்றனர். எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள், வாசகர்கள் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், தங்களது தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டு, இவ்விருது அவருக்குக் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும், அதனையும் மீற இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதால், தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறொரு விருதுக்கு, ஞானபீடத்திற்கு மாற்று என்ற சாயத்தைப் பூசி கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கிறார்கள்.

தேரளத்தைச் சேர்ந்த ஒ.என்.வி. பண்பாடுக் கழகம் சார்பாக பழம்பெரும் மலையாளக் கவிஞர் ஒ.என்.வி. குரூப் நினைவாக  வழங்கப்படும் இலக்கிய விருது 2021ம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது. கவிஞர் ஒன்.என்.வி. குரூப் 2007ம் ஆண்டு இதே ஞானபீட விருதை வென்றவர் என்பது இதில் இன்னொரு உபசெய்தி. #metoo தொர்பான சர்ச்சைகள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மலையாளத் திரைத் துறையினரின் எதிர்ப்பு காரணமாக விருதுக் குழுவினர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட அவ்விருது குறித்த தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தனர். ஆனால் விருதுக்குழு தன் மறுமுடிவை அறிவிக்கும் முன்பே, தான் அந்த விருதை ஏற்க மறுப்பதாகவும்/திருப்பித் தருவதாகவும் விருதுத் தொகையான மூன்று லட்ச ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துவிடும்படியும் வைரமுத்து அவசரமாக ஒரு காணொளி அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவரை அந்த முடிவு நோக்கி உந்தித் தள்ளியது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

 பள்ளிப்பருவத்தில் படித்த குறள், இப்போது ஏனோ பொருத்தப்பாடுடனோ, பொருத்தமின்றியோ திடீரென மனதில் தோன்றுகிறது. தன் நெஞ்சு அறிய ஒருவன் பொய் சொல்வானெனில் அந்தப் பொய்யே அவனைச் சுட்டுப் பொசுக்கும். கவிஞர் வைரமுத்துவுக்கான ஞானபீட அறிவிப்புக்குப் பின்னால், (தீவிர இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத) அவரது பாடல்கள், கவிதைகள், புதினங்கள் என்று நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அவை இலட்சக்கணக்கான சாமனியர்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறது. (அவர் பரிந்துரைக் கடிதங்களை எப்படிப் பெற்றிருப்பார் என்று பலவித யூகங்கள் இருந்தாலும்), மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் தன் சுயவிவரக் குறிப்பினை பலப்படுத்துவதற்கான போதுமான துணைக் கோப்புகளை இத்தனை ஆண்டுகளாகச் சேகரித்து அடுக்கியிருக்கிறார். ஆகவே முதல் இரண்டு விஷயங்களில், படைப்பாளர் சமூகமாக அவரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில் நியாயமில்லை. மூன்றாவது விஷயமுமே, நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை, அவதூறுகளுக்காக மனம் ஒடுங்கி ஓரமாக அமர்ந்திருக்க வேண்டியதும் இல்லை. எனவே வெளியில் இருந்து இக்காரணத்திற்காக அவருக்கான விருதை எதிர்ப்பது சரியா என்று தெரியவில்லை. ஆனால் தன் நெஞ்சறிய பொய்யை வைத்துக் கொண்டு ஒருவன் உயரிய மேடையில் தலை நிமிர்ந்து வீற்றிருப்பானெனில், அப்பொய் அவனைச் சுடும் என்று மட்டும் நம்புகிறேன், அவ்வளவுதான்.

--- 
பாலகுமார் விஜயராமன்

******