
ஐயா ,
இவன் எங்கள் வீட்டின் செல்ல இளவரசன் -இங்கே
இவன் வைத்தது தான் சட்டம் . இவனுக்கு
உலகில் அனைவரும் சமமானவர்கள் என்பதை
உங்கள் பாரபட்சமற்ற போக்கால் புரிய வையுங்கள்.
இவனுக்கு அ,ஆவோடு சேர்த்து வாழ்வின்
அரிச்சுவடியையும் சொல்லி கொடுங்கள்.
இவன் வீட்டை தாண்டிய உலகத்தை
முதன்முறையாக எட்டி பார்க்கிறான்,
இவனுக்கு பாடத்தோடு பூக்களையும் ,
பட்டாம்பூச்சிகளையும் ,பறவைகளையும்
ரசிக்க சொல்லி கொடுங்கள்.
இந்த பிரபஞ்சத்தின் அத்தியாயங்களை இவன்,
உங்கள் கண் கொண்டு வாசிக்க போகிறான்.
இவனை சிறு,சிறு அதிசயங்களிலும் வியக்க வையுங்கள்.
இவன் எங்கள் வீட்டில் நடை பயில்வதெல்லாம் ,
எங்கள் உள்ளங்கைகளில் தான்.ஆனால்
வாழ்வில் முட்புதர்களையும் தாண்ட வேண்டி வரும்
என்று சொல்லி கொடுங்கள்.
இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
பரிவினால் புரிய வையுங்கள்.
உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.
இவனுக்கு இதுவரை எங்கள் வீடு தான் உலகம்.
இனி ,உலகையே தன் வீடாய் பாவிக்கக் கற்றுக் கொடுங்கள்.
நட்பை போற்றச் சொல்லுங்கள்,
நல்லதை பாராட்டச் சொல்லுங்கள்,
திறந்த மனம் கொண்டிருக்கச் சொல்லுங்கள்,
திறம்பட செயலாற்றச் சொல்லுங்கள்.......
ஐயா,
இவன் வல்லவனாகவும்,
நிச்சயம் நல்லவனாகவும் வளர,
உங்களை முன் மாதிரியாய் நிறுத்துங்கள்.
நன்றி!
(சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு !)
(Inspired from Abraham Lincoln Letters)
நட்புடன்,
பாலகுமார்.