
சார், என்னைத் தெரியுதா சார். நல்லாப் பாருங்க, நாம ஏற்கனவே பலமுறை சந்திச்சு இருக்கோம். சார், கண்டுக்காத மாதிரி போறீங்களே !
சின்ன வயசுல, உங்க வீட்டு மொட்டை மாடில நாம விளையாடிட்டு இருக்கும் போது, அந்த பெரிய ரயில் பொம்மையைக் கொண்டு வந்தானே.... எம்ம்ம்ம்மாம் பெரிய ரயில். அதை நம்மகிட்ட காட்டி, காட்டி வம்பிழுத்தானே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே அதை ........... நல்லா இருந்துச்சுல்ல அன்னைக்கு. இப்போ ஞாபகம் வருதா உங்களுக்கு !
அஞ்சாம் வகுப்புல போயி யாராவது வாட்ச் கட்டிட்டு வருவாங்களா சார். அவுங்க அப்பா வெளிநாட்டுல இருந்தாருன்னா, அந்த குட்டையனும் அங்கயே போய் இருக்க வேண்டியது தானே. சும்மா, சும்மா வாட்ச்சை காட்டி பிகு பண்ணிட்டே இருந்தா கோவம் வரத்தானே செய்யும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கனும்னு தானே நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வாட்ச்சை .......... டீச்சர் க்ண்டுபிடிச்சவுடன் என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு நீங்க ஓடிட்டீங்களே, சார். அது கூட உங்களுக்கு மறந்துடுச்சா !
சார், கல்லூரி சமயத்துல கூட, நாம ஒரே ரூம்ல தானே தங்கி இருந்தோம். அப்போ நாம என்ன என்ன பண்ணோம்னு சொன்னா ....... வேணாம் சார், விடுங்க ...... அதெல்லாம் இல்லாம எப்படி ? அது ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனா ஒவ்வொரு தடவையும் நீங்க பயந்து, பயந்து சாவீங்க, நான் மனசுக்குல்ல நல்லா சிரிச்சுக்குவேன். இப்போ நீங்க பேசுறதையெல்லாம் பார்க்கும் போது, அது நீங்க தானான்னு லைட்டா டவுட்டு கூட வருது சார் !
ஒரே ஒரு தடவை தான், எப்படி இருக்குனு மட்டும் பார்த்துட்டு வந்துருவோம்னு சொல்லி சொல்லியே யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போவீங்க. எனக்கு நல்லா பழக்கப்படுத்தி விட்டுட்டு, இப்போ நீங்க பொண்டாட்டி, புள்ள குட்டின்னு செட்டில் ஆகீட்டீங்க. ஆனா, என்னால இன்னும் அதை விட முடியல தெரியுமா !
சார், நீங்க பெரிய ஆளு சார், எப்போ பார்த்தாலும் பெரிய பெரிய ஆளுங்களோட தான் சுத்துறீங்க, பெரிய பெரிய அட்வைஸ் எல்லாம் சொல்றீங்க. ஆனா பாருங்க, எப்பவும் உங்க கூடவே இருக்குற என்னை மட்டும் அவுங்க முன்னாடி கண்டுக்கவே மாட்றீங்க. அது சரி, பெரிய ஆளுங்க பேச்சைக் கேட்டா மட்டும், எனக்கென்ன புரியவாப் போகுது !
உங்க மேல, எனக்கு ரொம்ப வருத்தம் சார். நீங்க கூப்பிட்டு தானே, நான் அன்னைக்கு நைட்டு உங்க கூட அங்க வந்தேன். சத்தம் கேட்டவுடனே என்னை அங்கேயே விட்டுட்டு நீங்க மட்டும் ஓடி வந்துட்டீங்க, நான் இன்னும் அங்கேயே தான் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா !
எல்லாமே, ரெண்டு பேரும் சேர்ந்து தானே சார் செஞ்சிட்டு இருக்கோம். பின்ன எப்படி நீங்க மட்டும் என்னைத் தெரியாத மாதிரி பாவ்லா பண்ணிட்டு, இராத்திரியானா நிம்மதியா தூங்குறீங்க ..... நான் உங்க குறட்டை சத்தத்தைக் கேட்டு தூக்கம் வராம தவிச்சிட்டு இருக்கேன். இப்போக் கூட பாருங்க, யாருக்கோ கதை சொல்ற மாதிரி, நீங்க பாட்டுக்கு சுவாரஸ்யமா படிச்சிட்டு இருகீங்க. எனக்கு தான் சார், நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு மண்டைக்குள்ள எறும்பு போன மாதிரி ஊறிட்டே இருக்கு !