இவ்வளவு சொன்ன பிறகும், இந்த பக்கம் வந்திருககீங்கன்னா....... இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல, நேரா கீழே உள்ள " யாராண்ணே இருக்கும் ? " இதை மட்டும் படிச்சுட்டு கிளம்புங்க...
இன்னும் இங்க தான் இருக்கீங்களா, சரி படிங்க, விதி யாரை விட்டது ?
அடரிருள் தேகத்துக்குள் வந்த அக்னி தேவதை !

நினைவுகள் அழிந்த
நடுநிசி நித்திரையில்
ஆதியந்தமேதுமற்ற
அடரிருள் பிரபஞ்சத்தின்
ஏகாந்த படிமம் தாங்கி
கவிழ்ந்த கனபரிமானத்தில்,
கடிவாளமற்ற புரவியேறி
சூன்யப்பெருவெளியை
சுமக்கின்ற கரும்பள்ளத்தின்
சுழி தாண்டிய பிரதேசத்தின்
புதையல் நோக்கிப் பறக்கின்றேன் !
சுழல்கின்ற சுழியினுள்
உயிர்பெற்ற ஒளிப்புள்ளி
கற்றையென தெறித்து வந்து
எரிதழலாய் வளர்கிறது,
சுழற்சி விதிகள் மாறும் போது
ஜ்வாலையாய் எழுந்து நின்று
விஸ்வரூபம் எடுக்கிறது !
கொழுந்துவிட்டு எரியும் மேனி
முழுவதுமாய் பிரபஞ்ச நெருப்பு,
ஒளிபிம்பத்தின் நிறைந்த கீற்றாய்
வழிநடத்தும் பெருவிழிகள்,
சுடர்மிகு விழிவழியே
சிரிக்கின்றாள் எனைப்பார்த்து !
புரவி, புதையல் எல்லாம் துறந்து
என் ஆதியந்தம் எல்லாம் மறந்து
சேர்ந்து நானும் எரிகின்றேன்,
தழலோடு தழல் சேர்ந்த
தனித்துவத்தை உணர்கின்றேன் !
சரி, இவ்வளவு தூரம் பொறுமையா படிச்சிருக்கீங்க, நான் என்ன சொல்ல வர்றேன்னு தெரியாமலே போகலாமா ? இதையும் படிச்சுட்டு ஒரு நல்ல பதிலா சொல்லிட்டுப் போங்க !!
யாராண்ணே இருக்கும் ?
நேத்து பொழுதுசாய
படுத்தது தான் தெரிஞ்சது,
அடிச்சுப் போட்டாப்ல
அப்படியொரு உறக்கம்ண்ணே !
நட்டநடு ராத்திரில
குப்பறக்க படுத்திருந்தப்ப,
கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி
திக்குத் தெரியாத திசையில,
தூரதேசமா போயிட்டிருக்காப்ல,
அப்படியொரு கனவுண்ணே !
அப்போ, இம்மினிக்கானா
புள்ளி மாதிரி ஆரம்பிச்சு
தீயாட்டம் தகதகன்னு
சுத்தி நின்னு எரியுது !
கொஞ்சம் சுதாரிச்சுப் பார்த்தா...
மோகினியோ, பிசாசோ ஏதோ ஒன்னு
மானத்துக்கும் பூமிக்குமா
நெருப்பாட்டம் ஜொலிக்குது,
நான் அப்படியே
வாய் பொழந்து நிக்கிறேண்ணே !
என் கிட்டக்க தாண்ணே,
நிக்கிறாப்புல நிக்குது,
ஆனா கண் கூசுறாப்புல மின்னுதுண்ணே !
அப்படியே லேசா சிரிச்சுக்கிட்டே
என்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்,
எனக்கு என்னமோ போல ஆயிருச்சுண்ணே !
ஆடு, குட்டி, காடு, கழனி
அல்லாத்தையும் விட்டுப்புட்டு
அது கூடவே செத்துப் போயிரலாம்னு
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன் !