“உயிர்ப்போடு இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன்”
-பாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்
நேர்கண்டவர் : க. விக்னேஷ்வரன்
-பாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்
நேர்கண்டவர் : க. விக்னேஷ்வரன்
எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மதுரையை சார்ந்தவர். பொறியாளர். தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார். தற்போது தனது பணியின் காரணமாக ஒசூரில் வசிக்கிறார். இதுவரை புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள் தொகுப்பு), சார்லஸ் புக்கோவ்ஸ்கி வின் அஞ்சல் நிலையம் (நாவல்), ஆலன் கின்ஸ்பெர்க் யின் Howl மற்றும் கவிதைகள் (கவிதை தொகுப்பு) ஆகிய படைப்புகள் எழுதி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளி.! தனது மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்காக வாசகசாலை விருதும் பெற்றவர். வாசகசாலை இணையதளத்திற்காக அவரை நேர்காணல் கண்டது மகிழ்ச்சியான அனுபவம்.
விக்னேஷ்: வணக்கம் சார், பொதுவான கேள்வியில் இருந்தே
தொடங்குவோம். நீங்கள் வாசிப்புக்குள் வந்த பின்புலத்தையும் அதிலிருந்து அடுத்த
கட்டத்திற்கு நகர்ந்து உங்கள் சுய படைப்புகளை எழுத ஆரம்பித்ததைப் பற்றியும்,
அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்புக்குள் வந்தது பற்றியும் எங்களுக்கு சொல்ல
முடியுமா?
பாலகுமார்: வணக்கம் விக்னேஷ். பள்ளிப்பருவத்தில்
ஆண்டுதோறும் கோடைக்கால விடுமுறைக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என்
அம்மாயி (அம்மாவின் அம்மா) ஊருக்குப் பேரப்பிள்ளைகள் செல்வோம். அங்கு எங்கள் மாமா
படித்துவிட்டு மூட்டை மூட்டையாகப் போட்டுவைத்திருந்த கிரைம் நாவல்கள் எனக்குப்
பொக்கிஷம். திகட்டத் திகட்ட ஒரு மாதம் உட்கார்ந்து வாசித்துவிட்டு ஊர்
திரும்புவேன். “உனக்கு சேனை வைத்தபோது, சக்கரைத் தண்ணீருக்குப் பதில், பேனா
மையைத்தான் தொட்டுவைத்தோம். அதனால் எப்போதும் பேப்பரில் மை கொட்டியிருந்தால் கூட
அதையும் வாசித்துக்கொண்டிருக்கிறாய்” என்று சிறுவயதில் என் அம்மா விளையாட்டாய்க்
கூறியது நினைவிலிருக்கிறது. அதில் பெருமைகொள்ள ஒன்றுமில்லை. இயல்பாகவே வாசிப்பு
எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்தது. ஐந்தாம் வகுப்போ, ஆறாம் வகுப்போ..
கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கே அருகிலிருந்த வாத்தியார்
வீட்டிலிருந்து எடுத்துவந்து படித்த புத்தகம், அதுவரையான வாசிப்பிலிருந்து
முற்றிலும் புதியதோர் உலகைக் காட்டியது. மின்சாரம் நின்றுபோன ஓர் இரவில்,
காடாவிளக்கின் வெளிச்சத்தில், சுவர்க்கோழிகளின் கீச்சொலிகளுனூடே நான் வாசித்த
முதல் இலக்கியப் புத்தகம், ரத்தமும் சதையுமான வேளான்குடிகளின் வாழ்வைப் பேசிய
கி.ரா.வின் “கோபல்லபுரத்து மக்கள்“. அப்போது கி.ரா. மட்டுமல்ல இராஜேஷ் குமாரைத்
தவிர ஒருவரையும் தெரியாது. ஆனால் பெயர் தெரியாமல் வாசித்த இந்த முதல் படைப்பின்
வாசிப்பனுபவம் இன்னும் மனதில் ஈரமாய் நிழலாடுகிறது. பின்பு கல்லூரிக் காலங்களில்
நிறைய வாசிக்கத் துவங்கினாலும் அது குறித்து நண்பர்களுடன் உரையாடியதில்லை.
வாசிப்பு என்பது எனக்கு மட்டுமான அந்தரங்கமான செயல்பாடாகவே இருந்தது. 22வயதில் பணி
நிமித்தம் கொடைக்கானலில் வாழ்ந்த மூன்று வருடங்கள், வாசிப்பைத் தாண்டி எனக்குள்
ஒரு எழுத்தாளன் இருப்பதை எனக்கு உணர்த்தியது. பல தயக்கங்களுக்கும், எழுதிக்
கிழித்துப்போட்ட காகிதங்களுக்கும் பிறகு எனக்கான வலைப்பூவைத் துவங்கி தொடர்ந்து
எழுத ஆரம்பித்தேன். வலைப்பூ மூலம் அறிமுகமான நண்பர்கள் அண்ணன் நேசமித்ரன் மற்றும்
கார்த்திகைப் பாண்டியன் வழியாக ” வலசை” இதழுக்காக எனது மொழிபெயர்ப்புப் பணி
துவங்கியது.
விக்னேஷ்: உங்கள் முதல் சிறுகதை தொகுப்பு
“புறாக்காரர் வீடு“. மொத்தம் 14 சிறுகதைகள். அதிலும் புறாக்காரர் வீடு, மணமுறிவு
நாள், முதல் தாயம் மூன்றும் மனதிற்கு நெருக்கமான சிறுகதைகள். நேர்கோட்டு கதைகளான
இவை எளிய மனிதர்களைப் பற்றி பேசுகிறது, மனித மனதின் அக நெருக்கடிகளையும் , அதிகமாக
அன்பையும் பேசுகிறது. இதை சார்ந்து நான்கு கேள்விகள எனக்கு தோன்றுகிறது. நல்ல
சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்த நீங்கள் இவற்றை விட்டு மொழிபெயர்ப்புகளுக்குப்
போனது ஏன்? இரண்டாவது மொழிபெயர்ப்பாளரான நீங்கள் உங்கள் சிறுகதைகளில் ஏன் புதிய
வடிவங்களை முயற்சி செய்யவில்லை? மூன்றாவது வட்டார வழக்கு பயன்படுத்தி அதிகம்
(நீங்கள் மதுரை சார்ந்தவர் என்று நினைக்கிறேன்) எழுத தயங்குவது ஏன்? (ஒருவேளை பொது
வாசகரை சென்றடையவது கடினம் என்பதாலா). நான்காவது புதிய சிறுகதை தொகுப்பு எப்போதும்
வரும்?
பாலகுமார்: நன்றி விக்னேஷ். வலைப்பூவில் தொடர்ச்சியாக
பதிவுகள் எழுதிவந்த போது, ”பண்புடன்” குழுமத்திற்காக எழுதிய முதல் சிறுகதை
“புறாக்காரர் வீடு”. முதலில், அது புறா வளர்ப்பு பற்றியதான தரவுகள் நிறைந்த ஒரு
கட்டுரையாகவே இருந்தது. அதில் ஒளிந்திருந்த சிறுகதையை இனம்கண்டு
சுட்டிக்காட்டியவர் கவிஞர் நேசமித்ரன் அண்ணன். ஒருவகையில் அவரது உள்ளீடுகள் எனது
புனைவுலகின் திறவுகோல் என்றுகூட சொல்லலாம். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு வருவோம்.
நல்ல சிறுகதைகளா என்று தெரியாது இன்றும் சிறுகதைகள் எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன். மொழிபெயர்ப்பு செய்வதால் சிறுகதை எழுதுவது குறைந்துவிட்டது என்று
சொல்லமுடியாது. ஆனால் நாவல் எழுதத் துவங்கியபிறகு ஒரு சிறுகதைக்கான கருவை நாவலின்
ஒரு அத்தியாயமாக யோசிக்கத் தோன்றுகிறது. சிறுகதையில் புதிய வடிவங்களை வலிந்து
முயற்சி செய்வதில்லை. ஒரு படைப்பு தனக்குண்டான சொல்முறையையும், வடிவத்தையும் தானே
தேர்ந்துகொள்ளும் என நம்புகிறேன். அடுத்து வட்டார வழக்குப் பயன்பாடு குறித்து…
நான் மதுரையைச் சார்ந்தவனாக இருந்தாலும் மதுரையின் மைய நகர்ப்பகுதியிலேயே பிறந்து
வளர்ந்தவன். மதுரையைச் சுற்றியுள்ள அசல் கிராமத்துமொழியின் சரளத்தன்மை எனக்குக்
குறைவே. அப்படியும் சிறுகதை, நாவல்களில் உரையாடல் பகுதியில், அனிச்சையாக மதுரை
வட்டார மொழியின் சாயல் வரத்தான் செய்கிறது. அடுத்த சிறுகதைத் தொகுப்பு அடுத்த
ஆண்டுவாக்கில் வெளியாகலாம். அதற்கு முன் ஒரு ஒரு மொழிபெயர்ப்பும், ஒரு நாவலும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

விக்னேஷ்: எழுதிக்கொண்டிருக்கும் நாவல்பற்றி
கூறுங்களேன்.
பாலகுமார்: முந்தைய நாவல் முழுக்க நேர்மறை
மனிதர்களைப் பற்றியதாக இருந்தது. இதில் மனிதர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களைப்
பற்றியதாகவும், மனதின் சிறந்த மற்றும் தாழ்ந்த தருணங்களின் செய்கைகள் மற்றும்
அவற்றிற்கான எதிர்வினை என்பதாக நினைத்திருக்கிறேன். எப்படி வருகிறதோ, பார்க்கலாம்.
விக்னேஷ்: சார்லஸ் புக்கோவ்ஸ்கி யை மொழிபெயர்ப்பு
செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது காரணம் இன்னும் அவர் இங்கு சரியாக
உள்வாங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அதிலும் ‘அஞ்சல்நிலையம்‘ நாவலை
தேர்ந்தெடுத்ததற்கு குறிபிட்ட காரணங்கள் எதாவது இருக்கிறதா?
பாலகுமார்: உண்மையில், பெரும்பான்மையான எனது
மொழிபெயர்ப்புகள் நான் தேடிக் கண்டடைந்தவை அல்ல. என் வழியில் சில படைப்புகள்
எதிர்ப்படும் போது, அவற்றில் மனதுக்கு நெருக்கமானவற்றை விரும்பி மொழிபெயர்ப்பேன்.
”அஞ்சல் நிலையம்” நாவலைப் பொறுத்தவரை, நான் தொலைத்தொடர்புத் துறையில் வேலை
பார்ப்பதால், நாவலில் அஞ்சல் துறை சார்பாக வரும் நடைமுறைகள் மற்றும்
சொற்பிரயோகங்கள் ஆகியவற்றை என்னால் சிறப்பாகக் கையாள முடியும் என்ற நம்பிக்கையில்,
நண்பர்கள் “எதிர் வெளியீடு” அனுஷ் மற்றும் காத்திகைப்பாண்டியன் இருவரும் என்னை
அனுகினார்கள். சார்லஸ் புக்கோவ்ஸ்கியைக் கவிஞராக அறிந்திருந்தவனுக்கு, அநேகமாக
அவரது வாழ்க்கை வரலாறு போன்றதான “அஞ்சல் நிலையம்” நாவல் மனதிற்கு
நெருக்கமானதாகவும், ஓர் அரசுப்பணியில் என்னென்ன வகையாசலிப்புகள் இருக்கும் என்பதை
உள்வாங்கிக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அப்படைப்பு மொழிபெயர்ப்புக்கான
அந்நியத்தன்மையின்றி இயல்பான படைப்பாக வந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணம் என
நினைக்கிறேன்.
விக்னேஷ்: ஆலன் கின்ஸ்பெர்க் ”ஹெளல்” கவிதை தொகுப்பை
மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்பட்ட மனநெருக்கடிகளை பற்றி உங்கள் முன்னுரையில்
படித்த ஞாபகம். பொதுவாகவே சில அயல் இலக்கியங்களை வாசிக்கும் போதே மனநெருக்கடிகள்
சாதரணமாக வந்து போகிறது. இன்னும் மொழிபெயர்ப்பு செய்வது என்பது மனதிற்கு அதிகமான
நெருக்கடிகளை நிச்சயமாக தரும். அப்போது எல்லாம் எப்படி அதிலிருந்து வெளி
வருகிறீர்கள்?
பாலகுமார்:
”ஹௌல்” கவிதையை மொழிபெயர்த்த அனுபவம் வாழ்நாளிற்கானது. அதை மொழிபெயர்க்கும்போது,
எப்போதும் அந்த வாதையில் இருந்து வெளியே வந்து விழ வேண்டும் என்றே விரும்பினேன்.
பித்தநிலை, பாலின விடுதலை, எதிர்க் கலாச்சாரம் எல்லாம் நம் சமூக அமைப்பில்
நேரடியாகக் கண்டிராதவை. பின், ஒரு தலைமுறை அமெரிக்க இளைஞர்களின் போக்கை
ஒட்டுமொத்தமாக மாற்றிய கவிதை, காலங்கடந்தும் அத்தகைய தாக்கத்தைக் கூட
கொடுக்கவில்லை என்றால் எப்படி என்று மீண்டும் கவிதைக்குள் செல்வேன். இக்கவிதை
மொழிபெயர்ப்பில், நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜ் மற்றும் கவிஞர் ஸ்ரீசங்கர் ஆகியோரின்
உள்ளீடும் முக்கியமானது. கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்த்ததும், அந்த
அழுத்தத்திலிருந்து வெளியேற சில வாரங்கள் வேறு எளிய புத்தகங்களை வாசிப்பேன்.
எவ்வளவு இடைவெளி விட்டு மீண்டும் மொழிபெயர்ப்பிற்குள் நுழைந்தாலும், பிரதியை
வாசிக்கும்போதே அந்த அக அலைச்சல் சூழ்ந்துகொள்ளும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக
நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கவிதை இதுவரை
மொழிபெயர்க்கப்படவில்லை என்ற சவால்தான் அப்பணியை முடிக்கத் தூண்டுகோலாக இருந்தது.
ஒருவழியாக, மொழிபெயர்ப்பை முடித்து, திருத்தங்கள் பார்த்து அச்சுக்குச் சென்றபிறகு
ஏற்பட்ட விடுபடல் உணர்வு வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.
விக்னேஷ்: கடவுளை போல தன்னை உணர்ந்து கொண்டு தனது
படைப்புகளை எழுதுவதாக கின்ஸ்பெர்க் தனது நேர்காணலில் சொல்கிறார். தொடர்ந்து
கின்ஸ்பெர்க் கவிதைகள் பற்றிய உரையாடல் இங்கு இலக்கிய உலகில் இருக்கிறது. ஆனால்
வாசகர்கள் மத்தியில் இவற்றிற்கு எத்தகைய வரவேற்புகள் இருக்கிறது? இன்னும் தமிழ் இலக்கியச்
சூழலில் முக்கியமாக வாசகப் பரப்பில் கவிதைகள் பற்றி சரியான புரிதலும், உரையாடலும்
இல்லை என்பதால் இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.
பாலகுமார்: ”ஹௌல்” மொழிபெயர்க்கும் போதே, அது பெரிய
வாசகப்பரப்பை அடையாது என்பது தெரிந்ததுதான். அப்படைப்பின் தீவிரத்தன்மை தமிழில்
பதிவு செய்யப்படவேண்டும் என்பதற்காகவே, “பாதரசம்” பதிப்பகம் சார்பாக நண்பர்
சரோலாமா அதனைப் பதிப்பிக்க விரும்பினார். இத்தகைய படைப்புகளைத் தேடித் தேடி
வாசிக்கும் தீவிர வாசகர்களிடமும், படைப்பாளிகளிடமும் “ஹௌல்” ஓரளவிற்கு நல்ல
வரவேற்பைப் பெற்றது. பொதுவாக இன்றைய தமிழ்ச் சூழலில் கவிதைகள் குறித்த உரையாடல்கள்
குறைந்துபோயிருப்பதற்கு, நீர்த்துப்போனவையே கவிதையாக அடையாளம் கொள்ளப்பட்டு,
படிமங்கள் நிறைந்த அசல் கவிதைகளை வாசகர்களுக்கு அடையாளம் காட்டத் தவறும்
விமர்சகர்களின் குறையாகத்தான் இதனைப் பார்க்கிறேன்.
விக்னேஷ்: கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள்
தொகுப்பு) பற்றி சொல்லுங்க (வாசகசாலை மொழிபெயர்ப்பு சிறுகதை பிரிவில் அது விருது
பெற்ற நூல் ) முக்கியமாக அதில் வெவ்வேறு நிலங்கள் வருகிறது, வெவ்வேறு மனிதர்களின்
வாழ்வியல் வருகிறது… அதில் வரும் சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்யும்போது மனதிற்கு
எவ்வளவு நெருக்கமாக உணர்ந்தீர்கள்? அந்த தொகுப்புக்கு அர்ஷியா எழுதிய சிறப்பான
முன்னுரை ஒன்று இருக்கிறது அதை பற்றியும் சொல்ல முடியுமா?
பாலகுமார்: ”கடவுளின் பறவைகள்” தொகுப்பில் உள்ள
சிறுகதைகள், ஒரு சிட்டுக்குருவி பறந்து பறந்து, தன் இரைப்பையில் தானியங்களை
நிறைப்பதைப் போல நான் தேடித் தேடி சேகரித்தவை. பிறந்ததிலிருந்தே நகர்ப்புற
நெருக்கடி வாழ்வையே எதிர்கொண்டிருந்தாலும், எனது மரபணுவில் எங்கோ ஒரு மூலையில்,
கடிகாரத்தின் ஒன்பது முதல் ஐந்து மணி வரையான வேலை சுழற்சிக்குக் கவலைப்படாத ஒரு
வாழ்க்கை முறையைக் கொண்ட சிறுவிவசாயியோ, கடலோடியோ, மந்தைகள் மேய்ப்பவனோ,
குகைவாசியோ, சிறுபறவைகளுக்கு தானியம் வீசி வேடிக்கை பார்த்தபடி மணிக்கணக்கான
வெறுமனே அமர்ந்திருப்பவனோ ஒளிந்திருக்கிறேன். அப்படி நிகழ்வாழ்வில் நான் வாழாத
வாழ்வை எழுத்தின் வழியாக அடைய முற்படுகிறேன். ”கடவுளின் பறவைகள்” தொகுப்பிலுள்ள
கதைகளின் மொழிபெயர்ப்பு என்பது, அவற்றில் வரும் எளிய மனிதர்களின் வாழ்வை நான்
வாழ்ந்துபார்த்தற்கான ஒரு வாய்ப்பாகவே இருந்தது. “புறாக்காரர் வீடு” சிறுகதைத்
தொகுப்பு வெளியிட்ட வகையில், சகோதரர் “நூல்வனம்” மணிகண்டன் அவர்களோடு நல்ல
அறிமுகமிருந்தது. அவர் கொடுத்த உற்சாகமும், நேரக்கெடுவும் தொகுப்பை குறித்த
நேரத்தில் கொண்டுவர உதவியாய் இருந்தது. எழுத்தாளரை ஒருமுறைகூட நேரில் பார்க்காமல்,
இரண்டு புத்தகங்களைப் பதிப்பித்த பெருந்தகையாளர் அவர். அத்தொகுப்பு எனக்கு
மனதிற்கு மிகப் பிடித்த தொகுப்பும் கூட. எந்தவித வெளிப் பரிந்துரைகளுமின்றி,
அதற்கு “வாசகசாலை” விருது கிடைத்ததும் மகிழ்வான நிகழ்வு. அத்தொகுப்பிற்கு முன்னுரை
எழுதியது மட்டுமன்றி, மெய்ப்பும் பார்த்து உதவியிருந்தார் எழுத்தாளர் அர்ஷியா
அவர்கள். எந்தவித தற்பெருமையும், அகந்தையும் இல்லாமல் மிகச்சிறந்த வழிகாட்டியாகவும்,
குடும்பத்தின் மூத்த சகோதரர் போன்ற வாஞ்சையுடனும் பழக்கக் கூடியவர் அர்ஷியா சார்.
அவரை இவ்வளவு விரைவில் இழந்தது, தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு.
விக்னேஷ்: ”சேவல்களம்” நாவல் தமிழகத்தின் வீர
விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டையைப் பற்றி பேசுகிறது! இதைப் பற்றி நாவல் எழுத
வேண்டும் எப்படி தோன்றியது? அப்படி முடிவு செய்த பின்பு அதற்கு எப்படி உங்களை
தயார் செய்து கொண்டீர்கள்? . முக்கியமாக சேவல் சண்டை பற்றி கள ஆய்வுகள், அதை
நடந்தும் மனிதர்களிடம் உரையாடுவது இப்படி?
பாலகுமார்: உண்மையில், நான் மிக எளிதாக எழுதியப்
படைப்பு “சேவல்களம்”. என் அப்பா சண்டை சேவல்கள் வளர்ப்பவர். எனவே பிறந்ததில்
இருந்தே, சேவல்களுடனே வளர்ந்து வந்திருக்கிறேன். சேவல் வளர்ப்பு முறைகளும்,
சண்டைப் பயிற்சிக்கான சூட்சமங்களும் தாமாகவே மனதில் பதிந்திருந்தன. சண்டை குறித்த
கள ஆய்வும், அப்பாவின் நண்பர்களிடம் அது குறித்து பேசுவதும்கூட, தரவுகள்
சேகரித்தல் என்ற நிலையில் இல்லாமல், இயல்பான உரையாடல்களாகவே அமைந்தன. அவை படைப்பை
ஆவணத்தன்மையின் சாயல் பதியாமல், புனைவு வடிவத்திற்கு மாற்றுவதற்கு உறுதுணையாக
இருந்தது. “ஆடுகளம்” திரைப்படம் வெளிவந்தபோது, நான் மகிழ்ச்சியையும்,
துக்கத்தையும் ஒருசேர உணர்ந்தேன். சேவல் சண்டை பற்றிய அசலான சித்திரத்தை படம்
காட்சிப்படுத்தியது என்ற வகையில் மகிழ்ச்சி என்றால், நான் சொல்லவேண்டியவற்றை
வெற்றிமாறன் இவ்வளவு தத்ரூபமாகக் காட்சிப்படுத்திவிட்டாரே என்ற துக்கமும்
எழுந்தது. “சேவல்களம்” நாவல் எழுதும்போது அதுவே எனக்கு முன்பிருந்த சவாலாகவும்
அமைந்தது. சேவல் சண்டை குறித்து ஆடுகளம் திரைப்படத்தில் இல்லாத வேறொரு பரிமாணத்தை
எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதில் வெற்றி பெற்றிருப்பதாகவே நம்புகிறேன்.
விக்னேஷ்: சேவல்களம் வெளிவந்த போது நிறைய நல்ல
விமர்சனங்கள் வந்தன. நிறைய பேர் அதைப் பற்றி எழுதினார்கள். அதே மாதிரி அதைப் பற்றி
சில எதிர்மறை விமர்சனங்களும் இருப்பதாக தோன்றுகிறது. முக்கியமாக கதாபாத்திரங்களின்
அணுகுமுறைகள், குறிப்பிட்ட வட்டார வழக்குகளை தவிர்த்து எழுந்திருப்பது…
இவையெல்லாம் உங்களுக்கு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவை சில பேரின்
கருத்துக்கள் மட்டுமே இவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று நினைக்கிறீர்கள்?
பாலகுமார்: ஒரு படைப்பு வெளிவந்த பிறகு, அதுபற்றிய விமர்சனங்களுக்கு உடன்படுகிறோமோ
இல்லையோ அவற்றை வரவேற்கத்தான் வேண்டும். ”சேவல்களம்” நாவலைப் பொறுத்தவரை, அது
பரவலாகப் பேசப்பட்டதற்கு “காலச்சுவடு” பதிப்பகத்தின் சந்தை அணுகுமுறை முக்கியமான
ஒன்று. அவர்கள் சரியான நேரத்தில் படைப்பை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தினார்கள்.
நாவலில் கதாபாத்திரங்களின் நேர்மறைத்தன்மை என்பது விரும்பிச் செய்த ஒன்றுதான்.
சங்ககாலாம் தொட்டு தமிழகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு கலையைப் பற்றி பேசும் போது,
அதிலுள்ள நேர்மறை விஷயங்களையும், மனிதர்களின் நேர்மையான பக்கங்களையும் மட்டும்
சொல்வோம் என்ற நிலைப்பாட்டில் எழுதப்பட்டது அது. ஒரு படைப்பு வெளிவந்த சுவடே
தெரியாமல் காணாமல் போகக் கூடிய சூழலில், எத்தன்மையதாயினும் விமர்சனங்கள்
வரவேற்கப்பட வேண்டியவையே. என்னவொன்று, உங்கள் அடுத்த படைப்பில் அந்த விமர்சனத்தின்
தாக்கம் இல்லாமல் இயல்பான தன்மையுடன் எழுதவேண்டும், அவ்வளவுதான்.
விக்னேஷ்: சிறுகதைகள், நாவல், மொழிபெயர்ப்பில்
(சிறுகதை, நாவல், கவிதை தொகுப்பு) கிட்டத்தட்ட வட்டத்தின் கடைசி இணைப்பாக உங்கள்
கவிதை தொகுப்பு இருக்குமா! காரணம் உலக கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்யும் உங்கள்
ஆர்வத்தில் தெரிகிறது உங்களுக்குள்ளே ஒரு கவிஞன் இருக்கிறான் என்று? உங்கள் சொந்த
கவிதை தொகுப்பு கொண்டு வர ஆர்வம் எதாவது உண்டா?
பாலகுமார்: உண்மையில், தமிழில் எழுத வரும்
முக்காலேயரைக்கால்வீசம் படைப்பாளிகளைப் போல, நானும் கவிதையில் இருந்துதான்
துவங்கினேன். இப்போது ஒரு கவிதைக்கான கரு தோன்றியதும், அதை எப்படி ஒரு
சிறுகதையாக்கலாம் என்று மனம் கணக்குப்போடத் துவங்கிவிடுகிறது. அப்படி சிறுகதையாக
அது ஆகாவிட்டால், தானாகவே கருகிவிடுகிறது. நீங்கள் கேட்டதற்காகச் சொல்கிறேன்,
நானும் ஒரு கவிதைத் தொகுப்பை, மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். “நதியின் பெயர்
கொண்டோடும் ரயில்” என்ற தலைப்பில் அமேசானில் கிடைக்கிறது.

விக்னேஷ்: எப்போதும் இதை படிப்பேன்: “சமரசமற்ற
மொழிபெயர்ப்பு” என்று. உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பை சமரசம் இல்லமால் தரமுடியுமா?
மொழிபெயர்ப்பில் இருக்கும் பெரிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்? தமிழ் இலக்கிய
சூழலில் மொழிபெயர்ப்புத் துறை இன்று எப்படி இருக்கிறது?
பாலகுமார்: எந்தவொரு படைப்பையும் நூறு சதவீதம்
உண்மையாக மொழிபெயர்க்க முடியாது என்றுதான் நம்புகிறேன். ஆனால், எடுத்துக்கொண்ட
பணிக்கு உண்மையாய் இருத்தல், நேரடிப் படைப்புகளுக்கு மட்டுமல்ல,
மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும். மூலப்படைப்பின் சூழல், கலாச்சாரம்,
பேசும்தொனி, படைப்பாளியின் அரசியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படும்
மொழிபெயர்ப்புகள் தாம் தட்டையாக வந்துவிடுகின்றன. எந்தவொரு மொழிபெயர்ப்பாளனும்,
ஒரு படைப்பை மொழிபெயர்க்குமுன் படைப்பிலிருந்து பின்னோக்கிச் சென்று மேற்கூறிய
காரணிகளை ரிவர்ஸ் இன்ஞினியரிங் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான்
படைப்பிற்கு நெருக்கமாக வரமுடியும். இன்று தமிழ்ச் சூழலில், மொழிபெயர்ப்பு
குறிப்பிட்ட ஏதோ நான்கு பேர்களின் கைகளில் மட்டுமே இல்லை என்பது ஆசுவாசமளிக்கிறது.
பல துறையைச் சேர்ந்த கலைத்தொழிலர் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்திருப்பதால், ஒரு
பன்முகத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. இது நல்ல துவக்கம் என்றே கருதுகிறேன். ஆனால்
இலக்கிய மொழிபெயர்ப்பு வல்லுநர்கள், பொதுசமுதாயத்தில் தாக்கம்
ஏற்படுத்தும்போதுதான் அது உண்மையான வெற்றியாகப் பார்க்கப்படும். இப்போது இலக்கிய
மொழிபெயர்ப்புக்கும், வணிக மொழிபெயர்ப்புக்கும் இடையே பெரிய பாதாளம் அளவு இடைவெளி
இருக்கிறது. ““ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி”என்பதுதான் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம்
என்று உலகம் நம்புகிறது. அது அப்படியில்லை என்பது, இலக்கிய மொழிபெயர்ப்பில்
திறம்பெற்றோர் வணிக வாய்ப்புகளைப் பெறும்போது மட்டுமே நிரூபிக்கப்படும்.
இலக்கியத்தில் இயங்குபவர்களும் வணிக வாய்ப்புகளைத் தீண்டத் தகாததாக எண்ண
வேண்டியதில்லை. சமீபத்தில், கோத்தகிரியில் டிஸ்கவரி புக் பேலஸ் முன்னெடுப்பில்
நான்கு நாள் மொழிபெயர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளைச்
சேர்ந்தவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மொழிபெயர்ப்புத்
துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையை விதைக்கின்றன.
விக்னேஷ்: தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து
இயங்குவதற்கு நண்பர்கள் ஆதரவும், எதிர்ப்புகளும் வேண்டும். இதில் உங்களுக்கு
எப்போதும் ஆதரவு தரும் இலக்கிய நண்பர்களைப் ற்றி சொல்ல முடியுமா?
பாலகுமார்: இலக்கிய உலகைப் பொறுத்தவரை, நான் ஒரு
வீட்டுப்பறவை. மதுரையில் இருக்கும் வரை வாரயிறுதி இலக்கிய நிகழ்வுகளிலாவது
பார்வையாளனாகக் கலந்துகொள்வது உண்டு. ஓசூருக்கு பணிமாறுதலில் வந்தபிறகு அலுவலகப்
பணிச்சுமை காரணமாக, பெரும்பான்மையான இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ள முடிவதில்லை.
ஆனால் நம்மை உற்சாகம் குறையாமல் மெருகேற்றுவதற்கு, எழுத்தின் நிறை குறைகளைச்
சுட்டிக் காட்டுவதற்கு என்று எப்போதும் நண்பர்கள் இலக்கிய உலகின் உள்ளேயும்
வெளியேயும் இருக்கிறார்கள். ”வலசை” எனது மொழிபெயர்ப்பு வாழ்வில் ஒரு முக்கியமான
அங்கம். வலசை இதழுக்காக மொழிபெயர்க்கையில் ஒரு பிரதியைத் தொடர்ந்து, பத்து முறை
பதினைந்து முறை திருத்தி எழுதுவதெல்லாம் உண்டு. ஒவ்வொரு முறை மொழிபெயர்ப்பை
அனுப்பும் போதும், நேசமித்ரன் அண்ணன் சளைக்காமல், “ரீவொர்க் பண்ணுங்க” என்று
திருப்பி அனுப்புவார். அவை ஒரு படைப்புக்கு எவ்வளவு தூரம் அணுக்கமாக நாம் செல்லமுடியும்
என்ற அனுபவத்தைத் தந்தன. முன்பு வலைப்பூ, பின்பு வலசை இதழின் பொருட்டு, பிறகு
எங்களது எந்தப்படைப்பாயினும், நேசமித்ரன் அண்ணனோடு கார்த்திகைப்பாண்டியன்,
ஸ்ரீதர்ரங்கராஜ் மற்றும் நான் ஒருவருக்கொருவர் குறை நிறைகளைப் பகிர்ந்துகொள்வது
ஆக்கப்பூர்வ விமர்சனமாகவும், ஒரு படைப்பு செழுமையடைந்து வெளியாவதற்கான
காரணியாகவும் இருக்கின்றன. இதுபோல பல நண்பர்கள், பெயர்கள் சொன்னால் பட்டியல்
பெரிதாகிவிடும், இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்குவதற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
அதுபோக, நேரடியாக நம் பெயர் சொல்லி எதிர்க்கின்ற அளவுக்கான எதிர்ப்புகளைச்
சம்பாரிக்க, இன்னும் அதிகமாக உழைக்கவும், வளரவும் வேண்டுமென்று நினைக்கிறேன்.
விக்னேஷ்: தொடர்ந்து இலக்கியச் சூழலில் இயங்குவது
என்பது தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தாகவே இருக்கிறதா? இந்த
இலக்கியச் சூழலுக்கு வராமல் இருந்திருக்கலாம் என்று எப்போதாவது
நினைத்திருக்கிறீர்களா?
பாலகுமார்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. அலுப்பு
ஏற்படுத்தக்கூடிய சமூக அன்றாடங்களில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ளவும்,
புத்துணர்ச்சியடையவுமே நான் இலக்கியத்தில் இயங்குகிறேன். வாசிப்பும், எழுத்துமே
அடுத்தநாளை உற்சாகமாக எதிர்கொள்ள வைக்கின்றன. நான் வலைப்பூ எழுதத் துவங்கிய
காலத்தில், என் கல்லூரி வாழ்வை மையமாக வைத்து “கிருக்கனிஸம்”என்று ஒரு தொடர்
எழுதினேன். பரவலான வாசிப்புப் பழக்கமும், எழுத்துத் திறனும் உள்ள என் மனைவிக்கு
மிகப் பிடித்த தொடர் அது. தீவிர இலக்கியம் எனது அந்த களங்கமின்மையைக்
கொன்றுவிட்டதாக அடிக்கடி கூறுகிறார். அவருக்காக தீவிர இலக்கிய சாயல் இல்லாத ஒரு
ஜாலி நாவல் எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். களங்கமின்மையை மீட்டெடுக்கமுடியுமா,
தெரியவில்லை.
விக்னேஷ்: புதியதாக எழுத வரும் அல்லது மொழிபெயர்ப்பு
செய்ய வரும் நண்பர்களுக்கு அறிவுரைகள் என்று எதையெல்லாம் சொல்வீர்கள்?
பாலகுமார்: கட்டாயம் கூறியே ஆகவேண்டும் என்று
சொல்வீர்களானால், யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள் என்பதுதான் என் ஆலோசனையாக
இருக்கும். நிறைய வாசித்தல், உங்கள் எழுத்துமுறையை கூர்த்தீட்ட உதவும். ஆனால் நல்ல
வாசிப்பாளர் நிச்சயம் நல்ல எழுத்தாளராக முடியுமா என்றால் இல்லை என்றுதான்
சொல்வேன். எந்தவொரு கலைக்கும் நுண்ணுணர்வு மிக முக்கியம். எழுத்துக்கும் அது
பொருந்தும்.
விக்னேஷ்: இலக்கியம் அறத்தை விதைக்கும் என்பது
எந்தளவுக்கு உண்மை? இரண்டாவது, வாசிப்பு சூழ்நிலை ஒரு பொது வாசகராக இங்கு எப்படி
இருப்பதாக பார்க்கிறீர்கள்?
பாலகுமார்: இலக்கியம் வாசிப்பவரிடத்தில் அறத்தை
விதைக்கலாம். ஒரு திறமையான எழுத்தாளனால் அறம் விதைக்கும் நல்மனிதரின் இயல்புகளைக்
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அறிந்துவந்து, தன் எழுத்தில் பிரமாதமாகப்
பிரதிபலித்துவிட முடியும். எழுத்தாளனின் பண்புகள் அவனது எழுத்தில் காணக்கிடைக்கும்
என்று நான் நம்பவில்லை. எழுத்துக்கு வெளியே சமூகச் செயல்பாடுகளில்,
பொதுமக்களிடையேயான அன்றாட நடவடிக்கைகளில் அவன் எந்தத் திசையில் பயணிக்கிறான்
என்பதே அவனது உண்மையான முகம். ஆயிரம் பேர் செல்லும், பயணிகள் ரயிலில் தினமும்
பயணிக்கிறேன். ஒரு மணிநேரப் பயணித்தில், மடியில் புத்தகம் வைத்திருக்கும்
இன்னொருவரை மிக அரிதாகவேப் பார்க்க முடிகிறது. ஒருவேளை இரண்டொருவர் அலைபேசியில்
வாசித்துக் கொண்டிருக்கலாம். இதுதான் இன்றைய நிலை. இதற்காகப் பெரிதாக விசனம்
கொள்ளத் தேவையில்லை. எப்போதுமே வாசிப்போரின் விகிதம் குறைவாகவே இருந்திருக்கிறது,
இப்போது அது இன்னும் குறைந்திருக்கிறது. ஆனால் வாசிப்புப் பழக்கம்
இல்லாதவர்களிடம்கூட இலக்கியக் கதைகள் கேட்கும் போக்கு பரவலாக அதிகரித்திருக்கிறது.
ஒரு சமுதாயம் தனக்குத் தகுதியுடையதை மட்டும் எப்படியேனும் அடைந்தே தீரும்.
விக்னேஷ்: எழுத வந்த போது நிறைய கனவுகள் உங்களுக்கு
இருந்திருக்கும். இப்போதும் அப்படிபட்ட கனவுகள் இருக்கிறதா? எதிர்கால திட்டங்கள்
என்னென்ன மொழிபெயர்ப்பிலும் சேர்த்து?
பாலகுமார்: நான் கனவுகளோடு எழுதவரவில்லை. உயிர்ப்போடு
இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன். வாய்ப்புகளுக்காகவும்,
அங்கீகாரங்களுக்காகவும் எப்போதும் ஏங்கியதில்லை. இயல்வாழ்வில் தான் சக்கரத்தைக்
கட்டிக் கொண்டு ஓட வேண்டியிருக்கிறது. எழுத்துலகிலேனும்,எழுத்துலகிலேனும், நதி வழி
செல்லும் ஒரு தக்கையின் இயல்புடன் இயங்க விரும்புகிறேன். அதே சமயம், நீர்ப்பாதைவழி
மிதந்து செல்கையில், கரையோர மலர்களின் மெல்லிய சுகந்தத்தைத் தவறவிடுவதுமில்லை.
எதிர்காலத்திற்கான பெரிய திட்டங்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. மொழிபெயர்ப்பு
சார்ந்து, இலக்கியத்துக்கும் வணிக வாய்ப்புக்குமான இடைவெளியைக் குறைக்க என்னாலான
முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறேன். அதனை இன்னும் தீவிரப்படுத்தவேண்டுமென்று
விரும்புகிறேன். எந்தப் பரிவட்டங்களையும் சுமக்காத ஒருவனைத் தேடிக் கண்டடைந்து,
நேர்காணல் செய்த வாசகசாலை நண்பர்களுக்கும், நேர்காணலுக்கு முன் எனது படைப்புகள்
அனைத்தையும் வாசித்து, நுண்ணுணர்வுடனான கேள்விகளை வடிவமைத்த நண்பர் க.விக்னேஷ்வரன்
அவர்களுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
நன்றி: வாசகசாலை http://www.vasagasalai.com/balakumar-vijayaraman-interview/