Thursday, November 26, 2015

வலசை போகும் ஒற்றைப்பறவையின் நிழல்

(கவிஞர் நேசமித்ரனின் “உதிரிகளின் நீலப்படம்” கட்டுரைத்தொகுப்பு குறித்த எனது வாசகப்பார்வை)

விமர்சனம் என்பது தீர்ப்புரை அல்ல. உள்ளார்ந்து வாசித்த ஒரு வாசகன், படைப்பு தன்னுள் தோற்றுவித்த உணர்வெழுச்சியை தன் அனுபவம் சார்ந்தும், வாசிப்பு சார்ந்தும், பழகுமுறை சார்ந்தும் வெளிப்படுத்துகின்ற ஒரு அகஎதிரசைவு. அத்தகைய விமர்சனமானது படைப்பை (இன்றைய நிலையில் சொல்வதானால் படைப்பை பத்திரமாக பெட்டிக்குள் பூட்டி வைத்து விட்டு, படைப்பாளியை) துதிபாடுவது போலவோ, அல்லது எதிர்முனையில் நின்று முன்முடிவுகளோடு வசைபாடுவது போலவோ அமையாது. கவிதையோ, புதினமோ, திரைப்படமோ, நாடகமோ... படைப்பு எதுவாகினும் விமர்சகனானவன் தனது அனுபவம் சார்ந்து, எடுத்துக் கொண்ட உரிப்பொருளை ஒட்டிய நேர் மற்றும் எதிர் மேற்கோள்கள் (references) துணையுடன் படைப்பு தனக்குள் விளைவித்த சலனத்தையோ, பொதுவெளியில் நிகழ்த்தப் பிரயத்தனப்படும் கட்டமைப்பையோ, படைப்பாளியின் அலையும் நுண்ணிய உணர்வுகளை விழியாடி கொண்டு விளக்கிக் காட்டுபவனாகவோ இருத்தல் நலம்.
ஓர் ஆராய்ச்சியாளன் தான் படித்து, பகுத்தறிந்து (analyse), செயல்முறையாற்றி (proceed), தேர்வாய்வு செய்து (experiment), நீடுபல்காட்சியுணர்வு (experience) புரிந்து, முற்றுவித்த (conclude) ஓர் உரிப்பொருளை (subject) ஆராய்ச்சிக்கட்டுரையாக கட்டைமைக்க மேற்கொள்ளும் வழிமுறைகள் பொருள் பொதிந்ததாகவும், ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் இடைவிடாமை உள்ளதாகவும், புதிதாக அப்படைப்பை அனுகுபவர்க்கும் பொருள் விளங்கும்படி நேர்கோட்டுத்தன்மை பொதிந்ததாகவும், உரிப்பொருளை விட்டு விலகாத தன்மை உடையதாகவும் இருக்க வேண்டியது அடிப்படை ஒழுங்குவிதி. அத்தகைய ஒழுங்கமைவில் எழுதப்படும் ஆராய்ச்சிக்கட்டுரையின் உள்ளடக்கங்கள் (contents): தொடக்கக்கூறு (introduction), உரிப்பொருளை ஒட்டிய முந்தைய செயல்முறைகளின் மீட்டாய்வு (literature review), பொருளின் கொள்குறி (objective), செயல்நோக்கம் (purpose), கடுவினா அறிக்கை (problem statement), புத்தாய்வு செயல்முறையியல் (research methodology), புனைவுகோள் (hypothesis), தேர்வாய்வுமுறை பகுப்பு (experimental analysis), முடிவின் மீதான ஆய்வுரை விவாதம் (results and discussion), இறுதியாக அவசானம் (conclusion) என்று அமைக்கப்பட்டிருக்கும்.
நேசமித்ரன் தனது விமர்சனக்கட்டுரைகளுக்கு இந்த அளவுகோலைத் தான் பயன்படுத்துகிறார்.
”உதிரிகளின் நீலப்படம்” தொகுப்பில் கவிதைத் தொகுப்புகள் குறித்து ஐந்து, திரைப்படங்கள் குறித்து ஆறு, புதினங்கள் குறித்து இரண்டு, நாடகம் குறித்தும் ஒன்று என்று மொத்தம் பதினான்கு கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் அதனளவில் முழுநிறைவான ஒன்று. ஆக்கிரமிக்கப்பட்ட முன்முடிவுகள் எதுவுமின்றி பிரதியை பிரதியாய் வாசித்து அதன் கொள்குறியை தனது பரந்துபட்ட வாசிப்பனுபவம் மூலம் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான நேர்த்தியுடன் படைத்திருக்கிறார் நேசமித்ரன். எழுத்தின் வழி கலைஞனின் மனச்சிதைவு பற்றி பேசும் வெள்ளைப்பல்லி விவகாரமாகட்டும், மழையை ஒரு மிருகமென எண்ணி மழை வேட்டைக்குச் செல்லும் ஆதிக்குடிகளின் நம்பிக்கை வழி கிளிமூக்குப் பயணியின் ஞாபகப்புனைவாய் தொடரும் பிதிராவாகட்டும், நேசமித்ரனின் வாசகப்பார்வை பிரதியின் படைத்தவரின் பார்வைக்கு மிக அணுக்கமாகவும், அதன் தொடர் சங்கிலி இணைப்பாகவும், சூல் கொண்ட கருவை சுற்றிய புரதச்சத்தாகவுமே இருக்கிறது.
ஒரு உண்மையான விமர்சகன் இரத்தத்தை இரத்தமாகவும், தண்ணீரைத் தண்ணீராகவுமே சொல்லுவான். தொகுப்பில் பேசப்ப்ட்டிக்கும் படைப்பான ”அழுகிய முதல் துளி” குறித்த வாசகப்பார்வையில் கவிதைகளில் சொட்டவிடப்பட்டிருக்கும் உதிரத்தை அதே அடர்த்தியோடு விமர்சிக்கிறார் நேசமித்ரன். தான் வாசித்த படைப்பின் அணுக்கருவை ஒட்டிய செவ்விலக்கிய, மற்றும் சமகால படைப்புகளோடு சேர்த்து வைத்து அதே சமயம் ஒப்பீடாக இல்லாமல் இணை கதை சொல்லிச் செல்கிறார். அது போலவே ஏழிலைகிழங்கின் கதை சொல்லும் ஆதிப்பாடலாகட்டும், தற்குறிப்பேற்றம் அடைந்த பகுபொருட்களின் பிரத்யேக குரல்களைப் பேசும் ஏரிக்கரையில் வசிப்பவன் பற்றியதாகட்டும் தன் தனித்தன்மையான மொழியில் பிரதியின் பேசுபொருளுக்கான களத்தை விரிவடையச்செய்கிறார்.
ஆண்டாண்டு காலமாய், சென்ம சென்மமாய் அடுப்படிகளிலும், படுக்கையறைகளிலும், இருண்ட வீதி முனைகளிலும், முள்ளுக்காடுகளிலும், திரையரங்குகளிலும், ஊடகங்களிலும், இணையங்களிலும், ஓடும் பேருந்துகளிலும் நார்நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுடலின் மொத்த வடிவாய் எழுந்து நிற்கும் சூர்ப்பணங்கினைப் பற்றி பேசுகிறது ஒரு கட்டுரை. பாழாய் விரிந்து கிடக்கும் பூமியில் ஊட்ட ஒரு வாய்ச்சோறு கிடைக்காமல் தன் ஏழு பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கும் தாய், இறுதியில் ஏழு தனங்களைக் கொண்டவளாய் அவதரித்து உலகுக்கு அமுதூட்டுகிறாள். செவ்விற மேலாடை குருதியால் நனைந்த படியும், வெண்ணிற பாவாடை, சாட்டையடிகளுக்கு ஏற்றவாறு முடிச்சுகளை இறுக்குவதுமாக பெண்ணுடலின் மீதான அதிகாரம் தொன்மம் தொட்டு தொடர்ந்து வருவதை அழுத்தமாக பதிவு செய்து நேர்படப் பேசுகிறது “சூர்ப்பணங்கின் எச்சில் வழிப்பயணம்” என்னும் கட்டுரை.
திரைப்படங்களின் பிரதான நோக்கமான வணிக இலாபங்கள் தாண்டி அவற்றில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை பற்றியும், அவை பேசும் அரசியல் குறித்தும் அடுக்ககடுக்கான படிமங்கள் மூலம் விவரிக்கிறார் நேசமித்ரன். புத்தக தலைப்பின் கட்டுரையான இயக்குநர் பாலாவின் படங்கள் பற்றிய பார்வையில் நாயகன், எதிர்நாயகன், நாயகி, இணை நாயகி என்று பாத்திர வாரியாக பகுத்து திறனாய்வு செய்பவர், இயக்குநர் மணிரத்னத்தின் கடல் படத்தையே பல்வேறு வளைவுகளாகப் பிரித்து கூர்ந்தாய்வு செய்கிறார். ஞானஸ்நானம், இச்சை/காமம், அதிஆவல், பேராசை, சினம், மாற்று நம்பிக்கை, வன்முறை, ஏமாற்று, நம்பிக்கை துரோகம் என்ற ஒன்பது வளையங்களாகப் படம் பயணித்திருப்பதாக விளக்கியுள்ளார்.
கறிப்பொட்டலாமாய் வளரும் பிராய்லர் கோழியை சாப்பிடுவதற்கே மனம் கூசும் ஒருவரால், போலிகளை விதந்தோத முடியாது என்று நம்பலாம். தான் பார்த்த, படித்த படைப்புகளை உள்ளன்போடு அலசி தனது வாசகப்பார்வையை இலக்கிய வெளியில் திறந்த மடலாய் ”உதிரிகளின் நீலப்படம்” என்ற தொகுப்பின் மூலமாய் சமர்ப்பித்திருக்கிறார் நேசமித்ரன். வானில் எங்கோ உயரத்தில் பறக்கும் பருந்து ஒருமைய வட்டங்களாக சுற்றி சுற்றி இறுதியில் இலக்கை கொத்திச் செல்வது போல, இந்த கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் அவை பேசியிருக்கும் படைப்புகள் குறித்த வாசகனின் மற்றும் சக படைப்பாளியின் பார்வை பரந்துபட்டதாகவும் அதே நேரம் நுண் தன்மை கொண்டதாகவும் ஆகும். அந்த படைப்புகளை அதுவரை பார்க்காத / படிக்காதவர்களுக்கு புதிய வாசலுக்கான கதவின் திறப்பாகவும், ஏற்கனவே பார்த்த / படித்தவர்களுக்கு மற்றொரு புதிய திசைக்கான சாளராகவும் இந்தக்கட்டுரைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு: உதிரிகளின் நீலப்படம்
ஆசிரியர்: நேசமித்ரன்
வெளியீடு: வலசை
விலை: ரூ. 80
******