மாடசாமியின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இன்று. எலி வளை என்றாலும் தனி வளை என்பது மாதிரி இவனுக்கென்று தனியாக ஒரு சொந்த வீடு. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இந்த வீட்டைக் கட்டி இன்று புதுமனை புகுவிழாவும் நடத்தியாகிவிட்டது. விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள்.
“நல்ல, கிழக்கு பார்த்த அம்சமான வீடுப்பா, நீ பட்ட கஷ்டமெல்லாம் இன்னியோட போச்சு, இனி உனக்கு எல்லாம் நல்ல காலம் தான்". மாடசாமிக்கு நிறைவாகவும், பெருமிதமாகவும் இருந்தது.
ஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது.
கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா... ரொம்ப காலத்துக்கு முன்ன இங்க அரசும், வேம்பு பிணைஞ்ச மாதிரி ஒரு பெரிய விருட்சம், அதுக்குக் கீழே புத்து ஒன்னு நல்லா செழிப்பா இருந்துச்சாம். அது அழிஞ்சு பல வருசமானாலும், விட்ட குறை தொட்ட குறை... இப்பமும் ஊறிட்டே இருக்கு" என்றார்
மாடசாமிக்கும் தெய்வ நம்பிக்கை உண்டு தான் என்றாலும், எப்போதோ இருந்த புற்று தன்னை ஒன்றும் செய்யாது என்று திடமாய் நம்பினான். அதோடு அந்த ஏரியாவில் இவ்வளவு மலிவாய் வேறு இடமும் கிடைக்காது
“நாம யாருக்கு என்ன தீமை செஞ்சோம், யார் காசுக்கு நாம ஆசைப்படுறோம், அதலாம் நம்ம ஒன்னும் செய்யாது, இந்த இடத்தையே முடிச்சுக்கலாம்" என்று இன்னும் விலையை குறைத்து பத்திரம் பதிந்து விட்டான். இப்போது வந்திருந்தவர்கள் எல்லாம் வாழ்த்திச் சொல்லும் போது, மனதிற்குள் இருந்த சிறு ஐயமும் விலகி நிம்மதியானான்.
புதிய வீடு பால் காய்ச்சிய அன்று இரவு வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் புது வீட்டில் தான் தங்க வேண்டும் என்பது சம்பிரதாயம். முழுமையாக கட்டட வேலை முடிந்து வீடு குடியேற இன்னும் நாட்களாகும். கன்னி மூலையில் அமைந்திருந்த படுக்கையறையில் தளம் கூட பதிக்கப்படாமல் இருந்தது. இருந்தும் மாடசாமிக்கு அந்த அறையில் படுத்துக் கொள்ளவே விருப்பமாய் இருந்தது. மனைவி பிள்ளைகளோடு தளம் போடாத தரையில் பாய் விரித்து அனைவரும் உறங்கத் துவங்கினர். விடிகாலையில் இருந்து இங்குமங்கும் ஓடியாடி வேலை பார்த்த அசதியில், படுத்தவுடன் அவனுக்கு உடனே தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது.
மஞ்சள் பொடியைக் குழைத்து செய்தது போன்று உருவமுடைய ஒரு பத்து வயது சிறுமி மஞ்சள் நிற பாவாடை சட்டை அணிந்தபடி, அந்த அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு, மாடசாமியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
படுத்திருக்கும் மாடசாமி சுற்றும் முற்றும் பார்க்க, மற்ற அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அவள் இவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள்
இவன் பதறிப்போய், “ஏய்... யார் நீ, இங்க என்ன பண்ற" மனதுக்குள் பயம் இருந்தாலும் அதட்டும் தொனியில் கேட்டான்
இவனது அதட்டலில் பயந்த அவளது முகம் வாடிப் போனது
“இல்ல, இல்ல... சும்மா தான்" என்று நடுங்கிய குரலில் சொல்லியடி மூலையோடு மூலையாக ஒடுங்கிக் கொண்டாள்
அவளது பயம், நடுக்கம் அவளது மருண்ட விழிகள்... மாடசாமிக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. “ச்சேய், சின்னப்பிள்ளையப் போய் திட்டுறோமே" என்று தன்னையே கடிந்து கொண்டவன், சிறிது தைரியம் வந்தவனாக,
“பாப்பா... நீ யாரு பாப்பா. இங்க என்ன பண்ற" சற்று நிதானமாகக் கேட்டான்
"நானா... நான் இங்க தான் இருக்கேன்."
“இங்கெல்லாம் இருக்கக்கூடாது பாப்பா, உங்க வீட்டுல உன்னைத் தேடப்போறாங்க, நீ கிளம்பிப் போ"
“இல்ல, நான் இங்கியே ஒரு ஓரமா உக்கார்ந்துக்குறேன்... எனக்கு யாருமில்ல நான் இங்கேயே ஒடுங்கி ஓரமா மூலைல இருந்துக்கவா"
இவனுக்கு அந்த சிறுமி கெஞ்சுவது மனதை இளக்கிவிட்டது.
“ஒன்னும் பிரச்சனை இல்லை பாப்பா, நீ பாட்டுக்கு தாராளமா இரு. நல்லா தாராளமா புழங்கு.. இங்காரு நான் எழுதுற பேனா இருக்கு பாரு. அதை வச்சு வேணா விளையாடு. நான் ஒன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன்"
அவனது ஆதரவான வார்த்தைகளினால் இயல்புக்குத் திரும்பிய சிறுமி, தன் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து அதிலிருந்த சில்லறைக்காசுகளை அறை முழுதும் கொட்டி விளையாடத் துவங்கினாள்.
திடுக்கிட்டு எழுந்தவனுக்கு நடந்தது கனவா, நினைவா எதுவும் புரியவில்லை. எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க இவன் சுற்றி சுற்றி பார்த்தான். எதுவும் இயல்புக்கு மாறாய் தோன்றவில்லை. தனக்கு வந்தது கனவு தான் என்று மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டான். அது என்ன மாதிரியான கனவு என்று சற்று பயந்தவன், காலையில் இருந்து யாகம், மஞ்சள், குங்குமம், அது தொடர்பான பூஜைப்பொருட்கள் அவற்றுடன் புழங்கிக் கொண்டிருப்பதால் அத்தகைய கனவு வந்திருக்கும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டு மீண்டும் படுத்தான். அதன் பிறகு பொட்டுத் தூக்கம் வரவில்லை. விடிகாலை எழுந்து மற்ற வேலைகளை செய்யத்துவங்கியவன், அந்த கனவை அத்தோடு மறந்தும் விட்டான்.
புது வீட்டு பூச்சு வேலைகள் முடிந்து, வெள்ளையடித்து குடியேற சில மாதங்கள் ஆகி விட்டது. பழைய வாடகை விட்டை காலி செய்து விட்டு ஒரு வழியாக புது வீட்டிற்கு குடி வந்த தினத்திலிருந்து தினமும் நள்ளிரவில், அந்த சிறுமியின் முகம் தென்படுவதும், அது அந்த அறைக்குள் ஓடியாடி விளையாடுவது போலவும், சில்லறைக்காசுகளை அறை முழுவது வீசும் சப்தமும் மாடசாமிக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. மனைவி, குழந்தைகளிடம் பட்டும் படாமல் அது பற்றி கேட்ட பொழுது, அவர்கள் கண்ணுக்கோ, அல்லது கனவிலோ அந்தச்சிறுமி தெரிவதில்லை என்று உணர்ந்து கொண்டான். முதல் சில நாட்களில் இருந்த பயமும் போகப் போக குறைந்து, அந்த சிறுமியின் இருப்பை இயல்பாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டான். இவனது இருப்பு சௌகர்யம் அளிப்பது போன்றான பாவனையில் சிறுமியும் சில்லரைக்காசுகளை வீசி விளையாடிக்கொண்டிருப்பாள். அரிதான வேளையில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் பார்த்து மெல்லிய புன்சிரிப்பை பரிமாறிக்கொள்வர். அவ்வாறு சிரித்துக் கொண்ட இரவுக்கு மறுநாள் தொழில்நிமித்தமாகவோ, குடும்ப வகையிலோ, நண்பர்கள் சுற்றத்தார் மூலமோ ஏதாவதொரு எதிர்பாராத இன்பச் செய்தி இவன் காதில் நிச்சயம் ஒலிக்கும்.
சொந்த வீடு கட்டுவது தான் லட்சியமாக இருந்த மாடசாமிக்கு, வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்ற தன்முனைப்பு இயல்பாகவே இருந்தது. அவனது முமு மூச்சான உழைப்பினால், செய்து வந்த வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கி மெதுவாக காசு சேர ஆரம்பித்தது. நேற்றைக்கு இன்று மோசமில்லை என்ற ரீதியில் வரவிற்கும் செலவிற்கும் சரியாய் சென்று கொண்டிருந்த நிலையில், ஊரார் மதிக்ககூடிய நல்ல நிலையை வெகு சொற்ப காலகட்டத்தில் எய்தினான்.
ஓர் இரவு வழக்கமான கனவு கண்டு கண் விழித்த மாடசாமி, தன் வீட்டிற்கு வெளியே வித்தியாசமான ஒலி கேட்கவும், ஜன்னலருகே சென்று பார்த்தான். வீட்டின் முன் குடுகுடுப்பைக்காரன் நிற்பது அந்த இருட்டில் மங்கலாகத் தெரிந்தது. வாசலில் இருந்து கைப்பிடி மண்ணெடுத்து நெற்றியில் பூசிக் கொண்ட குடுகுடுப்பைக்காரன் ஏதோ முனகுவது போலத் தெரிந்தது. அவன் சொன்ன வார்த்தைகளை மாடசாமி உற்றுக் கேட்டான்.
“இந்த வீட்டுல மகமாயி குடியிருக்கா, ஒரு குறையுமில்ல... மலை போல வாழ்விருக்கு. அவ பானை நிறைய புதையலை வச்சிகிட்டு அலைமோதுறா. அள்ளிக் கொடுக்க முடியாம கிள்ளிக் கொடுக்குறா. அவளுக்கு அள்ளிக் கொடுக்கத் தடையா ஒரு கட்டு இருக்கு. அந்தக் கட்ட அறுத்திட்டா புதையலை அள்ளி அள்ளிக் கொடுப்பா... ஒரு குறையுமில்ல, ஆத்தா மகமாயி துணையிருப்பா !"
குடுகுடுப்பைக்காரன் இரண்டு மூன்று தடவை இதே வார்த்தைகளை திருப்பி திருப்பிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் அடுத்து என்ன கூறப்போகிறான் என்ற ஆர்வம் மேலிட உன்னிப்பாய் கவனித்த மாடசாமிக்கு, அவன் எதுவும் கூறாமல் அடுத்தடுத்த வீடுகளுக்கு சென்று விட்டது சற்றே ஏமாற்றமாக இருந்தது. இதுவரை சலனமில்லாமல் இருந்த மனதில் குடுகுடுப்பைக்காரனின் வார்த்தைகள் புயலை வீசி விட்டு சென்றுவிட்டது. அவன் சொல்ல வந்ததன் முழு செய்தியையும் அறிய மனம் உறுத்தத் தொடங்கியது.
மறுநாள் விடிந்தும் விடியாமல் சத்திரப்பட்டியில் இருக்கும் கோடங்கியைப் பார்க்க கிளம்பினான். மனைவி கேட்டதற்குக் கூட சரியாக பதில் சொல்லாமல் “பொறு, அதிர்ஷ்டம் வந்து வாசல் வரை காத்திருக்கு, என்னன்னு விவரமா வந்து சொல்றேன்" என்று அவசர அவசரமாக ஓடினான்.
ஊருக்குள் நுழையும் போதே தெரிந்து விட்டது, கோடங்கியைப் பார்க்க, ஏகப்பட்ட கூட்டம். தினமும் குறிப்பிட்ட பேருக்கு மட்டும் தான் அவர் குறி சொல்வார். அவராக அழைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான். இன்று தன்னை அழைப்பாரா, மாட்டாரா என்ற பரபரப்பினூடேயே போய் கூட்டத்தோடு கூட்டமாய் காத்திருந்தான். தனக்கு தினமும் வரும் கனவிற்கும், குடுகுடுப்பைக்காரன் சொல்லி விட்டு சென்று செய்திக்கும் இருக்கும் தொடர்பை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“நானொரு கூறுகெட்ட கொங்காப்பய, இத்தன வருசமா வந்து கதவைத் தட்டிட்டு இருக்க சீதேவியா கண்டுக்காம இருந்துட்டேனே. இன்னிக்கு கோடங்கிட்ட ஒரு வழி கேட்டு எப்படியும் புதையலைக் கைப்பத்திடனும்"
நேரம் சென்று கொண்டே இருக்கிறதேயொழிய கோடங்கி அவனைக் கூப்பிடுவதாக தெரியவில்லை. பொறுமையிழந்து காத்திருந்தவனுக்கு மதியத்துக்கு மேல் பொழுது சாய்வதற்கு முன், கோடங்கியிடமிருந்து அழைப்பு வந்தது
“ஊமச்சிகுளத்துல இருந்து வந்தது யாருங்க, சாமி கூப்பிடுறாரு" இவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. தன்னைத் தான் அழைக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டு வேகமாக எழுந்து கோடங்கி இருந்த குடிசைக்குள் சென்றான்.
தயாராய் கொண்டு போயிருந்த மஞ்சள் பொடி, குங்குமம் சேர்த்த கலவையை சப்பணமிட்டு அமர்ந்திருந்த கோடங்கியின் முன் கொட்டிவிட்டு நின்றான்
அவனை தீர்க்கமாக நோக்கிய கோடங்கி, "ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் நினைக்கல, ஓடி ஓடி தான் உழைக்கிறோம், கைல ஒரு காசு தங்கல. இது தானே உன் குறை?"
உலகத்தில் யாருக்குத்தான் இந்தக் குறை இல்லை. இவனும் “ஆமா சாமி, ஆமா சாமி" என்று வேகமாக ஆட்டினான்.
“உட்காரு, உன்னை அந்த மகமாயி தான் இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கா. ஒன்னும் கவலைப்படாதே... தங்கும்... எல்லாம் நிலைக்கும், ஊத்தா பெருகி நிக்கும். மண்ணுக்குள்ள இருக்க ஒரு செல்வம் உன் கைக்குக் கிடைக்குற நேரம் வந்தாச்சு"
சாமி சொல்லச் சொல்ல இவனுக்கு உடம்பெல்லாம், சில்லிட ஆரம்பித்து விட்டது. தான் நினைத்து வந்த அனைத்தையும் சாமி புட்டு புட்டு வைக்கிறாரே என்று ஆச்சர்யம் ஒருபுறமென்றால், தனக்காக காத்திருக்கும் புதையல் தன் கைக்கு கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷம் மறுபுறம்.
“தண்ணி குடிக்கிற மாதிரி கைய சேர்த்து குவிச்சு வை !"
"என்ன சாமி ?" என்று பதற்றத்தில், சாமி கும்பிடுவது போல கைகளை சேர்த்து வைத்தான்
“இது தான் தம்பி உன் பிரச்சனை, சீதேவி வலியக் கொடுக்க வருது, கையேந்தி வாங்கிக்க சொன்னா, கும்பிடு போட்டு வேணான்னு மறுக்குற பாரு"
இவனுக்கு அவமானமாய் போயிற்று. “இல்ல சாமி, இல்ல சாமி “ என்று பதறியவாறு கைகளை ஏந்தினான்
சாமி அருகில் வைத்திருந்த எலும்பிச்சை பழத்தை நான்காக பிய்த்து, கொட்டிக்கிடக்கும் மஞ்சள் குங்குமம் பொடியில் தோய்த்து ஏந்தியிருக்கும் இவனது கைகளில் வழியவிட்டார். பின்பு அதில் அவனது நெற்றியில் திலகமிட்டு விட்டு, சன்னதம் வந்தவராக ஆவேசமாக பேச ஆரம்பித்தார்
“ம்ம்ம்.... ஆத்தா புதையலை ஆயிரமாயிரம் வருசமா அரசும் வேம்பும் குடும்பம் நடத்துன நிழல்ல சேர்த்து வச்சிருக்கா. காவலுக்கு இருக்க பெரிய பூச்சியோட கட்டு இறுகிப் போய் கிடக்கு. அது ஆத்தாளையே புதையல் பக்கமா அண்ட விடாம நெருக்கிக் கிடக்கு. ஒன்னும் கவலைப்படாதே, உனக்கான காலம் வந்திருச்சு... இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. நடுராத்திரி பூசை வச்சு, கட்டை அறுத்துட்டா போதும், மத்ததெல்லாம் அவ பார்த்துக்குவா... புதையலை தானா வந்து உன் காலடியில கொட்டிக் கொடுப்பா"
“காலடில வேணாம் சாமி, கைல கொடுத்தா போதும் சாமி"
“ம்ம்ம், எதிர்த்துப் பேசாதே, சொல்றபடி செய்"
“சொல்லுங்க சாமி"
“ஒரு வெத்தலை பாக்கு, பன்னெண்டு எலுமிச்சை, சூடம், பத்தாயிரத்து ஒன்னு காணிக்கை எடுத்து வை, சாம்புராணி, ஊதிபத்தி ஆகாது. ஆத்தா புதையலை கொட்டிக் கொடுப்பா, ம்ம்ம் எடுத்து வை"
“இல்ல சாமி, அவ்ளோ காசு எடுத்துட்டு வரல சாமி !"
“ஆத்தா அள்ளிக்கொடுக்க தயாரா இருக்கா, எதிர்த்துப் பேசாதே.... ஆத்தாளை நினைச்சுட்டு திரும்பிப் பார்க்காம, நேரா மெயின் ரோட்டைத் தாண்டி இருக்க முச்சந்திக்குப் போ, அதுல வலது பக்கம் இரண்டாவது பர்லாங்கில் காணிக்கை வச்சிருக்கா. வெரசா போ, போய் எடுத்துட்டு வந்து ஆத்தா கட்டை அவுத்து விடு, அள்ளிக் கொடுக்க தயாரா இருக்கா"
புரிந்தும் புரியாமல் தலையாட்டிக் கொண்டிருந்தவனுக்கு, ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"புதையல் தான் கிடைக்கப்போகுதே, பத்தாயிரத்தை கொடுத்துத் தான் பார்ப்போமே !" என்று சபலம் லேசாக எட்டிப்பார்க்க, அந்த இடைவெளியில் கோடங்கி இன்னும் நன்றாக உடுக்கை அடித்து மந்திரித்து விட்டார். விளைவு அடுத்த அரை மணி நேரத்தில் சாமிக்கான காணிக்கை கிடைத்துவிட்டது, இரண்டு பர்லாங்க் தூரத்தில் இருந்த ஏடிஎம் வாயிலாக.
“நேரா வீட்டுக்குப் போ, இன்னிக்கு அமாவாசை, நாளைக்குப் பாட்டமை.. ரெண்டையும் விட்டுட்டு மூனாம் நாள் வளர்பிறை ராத்திரி ஆத்தா உன் கனவுல வந்து புதையல் இருக்க இடத்தை சொல்லுவா, போய் அள்ளிக்கோ ! ஆனா தம்பி இது லேசுபட்ட காரியமில்லை. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். இந்த ரெண்டு நாள்ல உனக்கு எந்த இரத்தக்காயமும் படாம பார்த்துக்கோ, பெரிய காரியம் நடக்குற வீட்டுப்பக்கம் போகாதே... ஏதாவது சந்தேகம் இருந்தா இந்தா என் செல் நம்பரை வச்சுக்கோ, அவசியம்னா மட்டும் கூப்பிடு"
கோடங்கியின் வாக்கு ஏதோ அசரீரி போல் ஒலித்துக் கொண்டிருக்க, மந்திரித்து விட்டவன் போல வீடு வந்து சேர்ந்தான். அன்று நள்ளிரவு கனவில் வழக்கம் போல மஞ்சளால் ஆன உருவம் கொண்ட சிறுமி வந்தாள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அறையின் மூலையில் குத்துக்காலிட்டு ஒடுங்கிபோய் அமர்ந்திருந்தாள். இவன் அவளைப் பார்த்து சிரிக்க எத்தனிக்க, அவள் இவன் கண்களை இரைஞ்சும் பார்வையில் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்ல செல்ல அவளின் பயம் அதிகரித்து கொண்டே வந்தது. சிறிய அளவிலான சீற்றத்துடன் பெருமூச்சு விட்ட படி கேவத் துவங்கினாள். அவளை உற்று நோக்கியவனின் முகம் வெளிறியது. சிறிது நேரத்தில் அவளது மஞ்சள் உடம்பிலிருந்து குங்குமக்கரைசல் போன்ற திரவம் வெளிவரத் துவங்கியிருந்தது. அது குங்குமமா அல்லது அவள் உடம்பை யாரோ அறுத்து அதிலிருந்து இரத்தம் வெளிவருகிறதா என்று அவனுக்கு சரியாக புலப்படவில்லை. அவளது கேவல் அதிகரித்துக் கொண்டே வந்தது. உடலில் நிறைய கீறல்கள் விழுந்து அத்தனை கீறல்களின் வழியாகவும் இரத்தம் கொட்டத்துவங்கியது.
மாடசாமிக்கு ஏதோவொரு பொறி தட்ட கனவிலிருந்து சடாரென பதறியடித்து எழுந்தான். உடனே அவசரமாக கோடங்கியை செல்ஃபோனில் அழைத்தான். இரண்டு மூன்று அழைப்புக்குப் பிறகு கோடங்கி பதில் அளித்தார்
“யாரு... இந்நேரத்துல?"
“சாமி, நான் தான்... ஊமச்சிகுளத்துல இருந்து வந்து குறி கேட்க வந்தேன்ல. அந்த புதையல்......."
“ஆ...... ஆமா.... தம்பி நீயா! உன்னோட பூசை தான் நடந்திட்டு இருக்கு. ஒன்னும் கவலைப்படாதே புதையல் அகப்பட்டுரும்"
“இல்ல சாமி, தயவு செஞ்சு பூஜையை நிப்பாட்டுங்க. இன்னும் எவ்ளோ பணம் வேணும்னாலும் தாரேன். தயவு செஞ்சு கட்டை அறுக்க வேணாம். எனக்கு புதையல் வேண்டாம் சாமி. இப்பவே நல்லா இருக்கேன் சாமி, தயவு செஞ்சு நிப்பாட்டுங்க" வாய் குழறி உளறியபடி தன்னையும் அறியாமல் கை கூப்பினான்
“சரி, சரி தம்பி, பதட்டப்படாதே... உரியவனே வேணாம்னு சொல்லும் போது, நான் எதுக்கு பண்ணப்போறேன், இப்ப நிறுத்திட்டேன்" என்று சொல்லி விட்டு சிவப்பு பொத்தானை அழுத்தினார்
வேர்த்து விறுவிறுத்த படபடப்போடு படுக்கையில் விழுந்தவனை, தூக்கம் மெல்லத் தழுவியது. கனவில் ஓரமாய் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்த அந்த சிறுமி, தன் மருண்ட விழிகளால் மெதுவாக இவனைப் பார்த்தாள்.
அவன் சலனமில்லால் சிரித்துக் கொண்டே சொன்னான், “பாப்பா, நீ பயப்படாம விளையாடு பாப்பா, நான் ஒன்னும் செய்ய மாட்டேன்!"
*******
நன்றி: சொல்வனம் இதழ் - http://solvanam.com/?p=35593
நீங்களா ... இப்படி ஒரு கதை எழுதியிருக்கீங்க ...! என்ன ஆச்சு...?
ReplyDeleteஆத்தா உங்கள காப்பாத்தட்டும் ........
தொடர்புக்கு ...........
ReplyDeleteஎல்லா வகையையும் முயற்சித்துப் பார்ப்போம், ஐயா !
ReplyDeleteஎல்லா வகை அப்டின்னா இது மாதிரி ’தர்க்க ரீதியான’ மாந்தரீக, ஆன்மீகக் கதைகளுமா?
ReplyDeleteநல்லது ....... நடக்கட்டும்....!
ம்ம்ம், அதுவும் தான் !
ReplyDelete