பழனி மலை முருகன் தரிசனம்...
படியேறி பயணம் தவிர்க்க
'ரோப் கார்' சவாரி - சீட்டுக்கு ரூபாய் நூறு;
வரிசையில் கூட்டம் விலக்கி,
சிறப்பு பூஜை - அதுக்கு ரூபாய் நூறு;
வேலனுக்கு ராஜ அலங்காரம் - எனக்கு
வெள்ளி டம்ளரில் அபிஷேகப் பால் - தட்டுக்கு ரூபாய் நூறு;
கடவுள் பெயரை விட என் பெயரே
அதிகம் உச்சரிக்கப்பட்ட அர்ச்சனை - அதுக்கு இன்னொரு ரூபாய் நூறு;
பின்னால் இருந்தவர் லேசாய் தள்ள,
மனம் பதறிற்று பர்ஸை நோக்கி - அப்போ
சிறப்பாய் நடந்தது தீபாராதனை !
பலநூறு படியேறி,
சிலநூறு அடிகளுக்கு அப்பால்,
இரும்பு கதவிற்குப் பின்னாலிருந்து...
காக்கிச் சட்டைகளுக்கும்,
காவி வேட்டிகளுக்கும் இடையே,
அலை மோதிய பாமர கூட்டம்,
ஒற்றைக் குரலில் சத்தம் போட்டது,
"அரோகரா அரோகரா" !
பக்கத்திலிருந்தவர் பக்தியுடன் சொன்னார்,
"அருமையான சாமி தரிசனம்!"
'ஆமாம் !ஆமாம்!' என்றேன்,
ஏழைப் பங்காளனான இறைவன்
என்னையும் காப்பான் என்ற
அசட்டு நம்பிக்கையுடன் !