கடைசி விவசாயி !
தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.
சினிமா
பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும்
பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே
சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக்
கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று
சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம்,
விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச்
சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர்
வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான்
சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும்
முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி
பரிதவிப்பதும் மிக இயல்பு.
பணியாரத்தை சிணுக்கருக்கியால்
திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு,
”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம்
பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும்
பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே
பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை
எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள்
ரசிக்க வைத்தன.
ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி
மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும்
பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு
நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து
கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும்
போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில்
அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும்
சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய்,
பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.
படத்தில்
தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக்
கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு
நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது
ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக
நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும்
வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள்
செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு
விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக்
கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன்
அவர்களுக்கு வாழ்த்துகள்.
விவசாயம் என்பது புனிதம்
அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும்
கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும்,
நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும்
மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு
காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு
நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில்
ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு
பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார்.
எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.
விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை
தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!
(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)
No comments:
Post a Comment