Wednesday, December 10, 2014

பெரியகுளத்தானை மன்னனாய் உடைய தெள்ளுதமிழ்நாடு

சமீபத்தில் கன்னியாக்குமாரி கடலுக்குக் கீழே நடந்த அகழ்வாராய்ச்சியில், லெமூரியா நாகரீகம் தொடர்பான ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த வௌவால் சித்தர் எழுதியிருக்கும் குறிப்பில் பல சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்துள்ளன என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பலம் பொருந்திய அரசி தன் உச்சககட்ட சக்தியுடன் திகழும் பொழுது, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு தீவினையின் பயனை அனுபவிக்கும் பொருட்டு செயலிழந்து மௌனியாக இருக்க நேரிடுமென்றும், அதன் பின் அந்த அரசியின் சிப்பாய்களில் ஒருவன் குடவோலை முறை வழியாக இரண்டாம் முறையாக மன்னனாக தேர்வு செய்யப்படுவான் என்றும் குறிப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

அவ்வாறு அவன் பொறுப்பேற்றபின் நடக்கும் ஆட்சி வரலாறு காணாத விதத்தில் சிறப்பானதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் பொற்கால ஆட்சியாகவும் இருக்கும். மாதமல்ல, வாரம் மும்மாரி பொழிந்து தூர்ந்து போன வாய்க்கால் வழியெங்கும் நுரை பொங்க புதுவெள்ளம் பாய்ந்தோடும். காய்ந்து போன கண்மாய்கள் எல்லாம் நீர் தழும்ப நிறைந்திருந்தும். விசுவாசமே மூச்சாய் கொண்டு இயங்கும் மன்னன் ஆளும் நாட்டில் சட்டசபை கூடி அமைச்சரவை முடிவெடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லாமல், எல்லாம் இயற்கையின் வழியே தானாக நடக்கும். மாற்றுக்கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மன்னன் ஆட்சிப் பொறுப்பில் நிலைத்து நிற்பதற்கான அறிவுரைகளைக் கூறுவர். நம்மைப் போன்ற சாமான்யன் நடத்தும் ஆட்சி, சாமான்யர்களைப் போல அதிகாரமற்றதாய் தான் இருக்கும் என்றும் உணர்வுள்ளவர்களாய் மாறியிருக்கும் மக்கள் மன்னனோடு சேர்ந்து வாரமிருமுறை கூட்டு அழுகைப் பிரார்த்தனையும், அங்கப்பிரதட்சணங்களும் செய்து முன்னூறு ரூபாய் காணிக்கை பெற்றுச் செல்வர். மொத்ததில் ஆள்பவரில் இருந்து அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரும் உள்ளுக்குள் மனம் மகிழ குதூகலித்தாலும் கூட, வெளியே சோகமே உருவான மோன நிலையில் தியானம் செய்தபடியிருப்பர். இவ்வாறான தகவல்களும் அந்த செப்பேட்டில் பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இது பற்றி பழைய தலைமுறை தொலைக்காட்சியில் கருத்து கூறிய பல்துறை வித்தகர், கெத்துக்கு சொத்தை விற்ற கவிஞர். காத்தமுத்து அவர்கள் சங்கப்பாடல்களில் கூட இத்தகைய சிறப்பான மன்னனைப் பற்றிய பாடல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். “ விடிந்தும் விடியாமல் துயில் எழுந்து பல் கூட விளக்காமல் முதல் வேலையாய் தேநீர்க்கடைக்கு வந்து ஓசிப்பேப்பர் படித்து வெட்டி நியாயம் பேசும் மக்களைப் பெருவாரியாய்க் கொண்ட ஊரில், தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கலனிலிருந்து பாலினால் அசுத்தமடைந்த நீரானது மீண்டும் தன் தூய்மை நிலையை அடைய ஆவியாய் உருமாறிக் கொண்டிருக்கும் தேநீர்க்கடையில், தன் இரு கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் நீள வீசி, சளைக்காமல் ஒன்-பை-டூ டீ போடும் ஆற்றல்மிக்க கரங்களையுடைய, குங்குமத்தை விபூதி போல் பூசியிருக்கும் பெரியகுளத்தானை மன்னனாகக் கொள்ளும் தெள்ளுதமிழ்நாடு” என்ற பாடல் வரிகளே இதற்கு சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக இரண்டு நாட்களாகத் தொடரும் பயனற்ற விவாதங்கள் வைரலாகப் பரவி கண்டங்களைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதேச்சையாக தனது பேஸ்புக் பக்கத்தில் பார்த்த சீனாவைச் சேர்ந்த பாஸ்ட்ராமஸ், தனது வீட்டின் பூஜையறையில் பாதுகாத்து வைத்திருந்த தனது எள்ளுத்தாத்தாவான நாஸ்ட்ராமஸின் ஓலைச்சுவடிகளை மோந்து பார்த்ததில் மேலும் சில ஆச்சர்யமான விஷயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாஸ்ட்ராமஸ் குறிப்பின் படி ”குணிந்த முதுகும் நிமிரும் காலம், பரப்பன அக்ரஹார கதவுகள் அடைக்கும். நவநீதம், ஷீலாமயம், எடப்பாடியம் எல்லாம் மேலே பழைய பன்னீர் வாசம் தூக்கலாய் அடிக்கும். ஹூஹூட் வந்து நிறைய நனைக்கும். ஆவின்பாலின் ஜம்ப்பும் இருக்கும்” என்ற கூற்று தன்னிரலில்லா தமிழ் மன்னனின் தற்கால ஆட்சியைக் குறிப்பதாகவே உள்ளது என்று ”உண்மையின் உரைகல்”தெரிவித்துள்ளது.

குறிப்பு: இந்த கற்பனைக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு நமது தமிழ்நாடல்ல. லெமூரியா கண்டத்தில் வடகிழக்கு திசையில் இருநூற்று ஐம்பது மைல்கற்கள் தாண்டி, உள்ளடங்கி அமைந்த ஒரு சிற்றூரின் பெயரும் தமிழ்நாடு தான். எனவே மேலே சொல்லியிருக்கும் குறிப்புகள் யாவும் அந்த சிற்றூரில் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வசித்த ஒரு பழங்குடி இனத் தலைவனைப் பற்றிய குறிப்புகளேயாகும். இதற்கும் நிகழ்காலத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கோ, எந்தப்பொருளுக்கோ, முக்கியமாக எந்த அமைச்சருக்கோ சம்பந்தமில்லை என்று என் சுயநலன் கருதி தெரிவித்துக் கொள்கிறேன்.

******

Wednesday, November 5, 2014

கைப்பிடி மண்

அடர்கானகத்தின் நித்திய சாட்சியாய் ஆயிரமாயிரம் ஆண்டுக்கான நிகழ்வுகளை ரேகையில் பொதிந்து வைத்திருந்த பெருவிருட்சம், வேர் அழுகிச் சரிந்த தினத்தை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பருவம் மூத்த விருட்சம் உளுத்துப் போய் சரிவது ஒன்றும் அசாதாரண நிகழ்வல்ல என்று எண்ணிக்கொண்டவர்கள், சில நாட்களுக்குப் பிறகு விருட்சம் சரிந்த இடத்தில் மீண்டுமொரு கன்றினை நட்டு வைக்க முடிவு செய்து, வளர்பிறை விடிகாலை வேளையில் சிறு பள்ளம் தோண்ட கடப்பாறையைப் பதிக்க அந்தப்பகுதி நிலமெங்கும் அதிர்ந்தது. தொடர்ந்து நிலத்தை அகழ்ந்து கடப்பாறையை இறக்க முயற்சிக்க, நிலம் இன்னும் பல மடங்கு அதிர்ந்து குலுங்கியது. அந்த அதிர்வில் நிலத்திற்குக் குடை போல் காவலிருந்த மேகங்கள் நிலை குலைந்து தெறித்துச் சிதற வளிமண்டலத்தில் விரிசல் விழுந்தது. அந்தப் பிரதேசப் புழுதியின் ஒட்டுமொத்த நச்சுப் புகை சுழலாய் உருவெடுத்து அந்த விரிசல் வழியே வானேகி மேகப் பொதிகளை வன்புணரத்துவங்கின.

சில நாட்களிலேயே, விஷக்காற்றின் புழுதிச் சுழலால் சூல் கொண்ட மேகங்கள் அமில மழையை அந்தப்பிரதேசமெங்கும் பொழிய எஞ்சிய விருட்சங்களும், செடி கொடி தாவரங்களும், புல் பூண்டு வகைகளும் கருகிச் சரிந்தன. பச்சையம் அற்றுப் போன நிலமெங்கும் கொப்பளிக்கும் வெப்பம் பிரதேசத்தை அவ்வப்பொழுது தீக்கிரையாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பறவைகள், பூச்சிகள், புள்ளினங்கள் முற்றிலுமாய் அழிந்த அந்த பிரதேசமெங்கும் அமிலம் கலந்த துர்நாற்றம் வீசத்துவங்கிய மூன்றாம் நாளில் பூமியைப் பிளந்து கொண்டு முளைத்த ஏழு குடைக்காளான்களில் இருந்து சித்தரக்குள்ளர்கள் எழுவர் வெளிப்பட்டனர். அவர்கள் அங்கேயிருந்தவர்கள் அனைவரையும் பாழ்பட்ட அந்த பிரதேசத்தை விடுத்து அயல் கிரகம் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும், தாங்கள் கூறும் நாளில் அவர்கள் பயணத்தைத் துவங்கலாம் என்றும் அதுவரை அந்தப் பிரதேச மக்களனைவரும்  பதுங்கு குழி வெட்டி நிலத்திற்குக் கீழே தங்கியிருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

அயல் கிரகத்திற்கான தங்கள் பயணம் துவங்கும் நாளில் அந்த பிரதேசத்தின் ஆதி வனதேவதையை வருந்தியழைத்து பலியிட்டுச் செல்ல வேண்டுமென்றும், அப்போது தான் அந்த மக்களைத் துன்புறுத்தும் ஊழ் விலகுமென்றும் அந்த குள்ளர்கள் கூறியதைக் கேட்ட மக்கள் சிறிது கலக்கம் கொண்டனர். பிறகு அயல்கிரகத்து புதிய வாழ்க்கைமுறைக்கு ஒவ்வாத வனதேவதையை பலியாகக் கொடுத்து விட்டுச் செல்வதொன்றும் பாவச்செயலல்ல என்ற சமாதானத்தைக் தங்களுக்குள்ளாகவே கூறிக்கொண்டனர்.

அயல்கிரகத்துப் பயணத்திற்குக் காத்திருந்த ஏழாம் நாளில் முதல் குள்ளன் மரித்துப் போனான். நிலத்தில் படாதவாறு அவனது உடலைத் தூக்கிப் பிடித்தபடி மற்றவர்கள் இரவு பகலாக அலைந்து கொண்டிருப்பதை பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். ஆனால் அந்தக் குள்ளர்கள் நம்பியவாறு, மரித்தவன் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தான். அவ்வாறு உயிர் மீண்டவன் அவர்கள் செல்ல வேண்டிய அயல் கிரகத்திற்கான திசை நோக்கித் தான் பயணப்பட்டதாகவும், மூன்றாம் நாள் பயணத்தில் தான் சோர்ந்து மயங்கி விழுந்த தருணத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டதாகவும் கூறினான். அதனைக்கேட்ட மக்கள், ஒரு வேளை அவன் சோர்ந்து போகாமல் இருந்திருந்தால் இந்நேரம், அயல் கிரகத்திற்குச் சென்று புதிய வாழ்வை சிருஷ்டிக்கத் துவங்கி இருக்கலாம் என்றெண்ணி அவனைக் கடிந்து கொண்டனர். அவன் அவர்களை நோக்கி மெல்லிய புன்னகை சிந்தியவாறு அமைதியாக கடந்து சென்றான்.

முதலாமவன் மரித்த ஏழாம் நாள், குள்ளனில் இரண்டாமவன் மாண்டு போக அவனது உடலையும் தரையில் படாமல் மற்றவர்கள் தூக்கிக் கொண்டு அலைந்தனர்.  மீண்டும் மூன்றாம் நாளில் அவனும் உயிர்த்தெழுந்தான். அவன் முதலாமவன் கடந்த தூரத்தில் துவங்கி அயல் கிரகத்தை நோக்கி மேலும் சில தூரம் பயணப்பட்டதாகவும், மூன்றாம் நாளில் மயங்கி விழ மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டதாகவும் கூறினான். பதுங்கு குழிகளில் இருந்து இதனைக் கேட்ட மக்கள் தங்களுக்கான புதிய வாழ்வினை அந்தக்குள்ளர்கள் தாமதப்படுத்துவதாக நொந்து கொண்டனர். 

இந்த வரிசை முறையின் தருக்கத்தைத் தொடந்த சித்திரக்குள்ளர்கள், ஏழு பேரும் மரித்து உயிர்த்தெழுந்தபின் தான் தங்களுக்கு அயல் கிரகம் செல்வதற்கான திறப்பு கிடைக்குமென்றும் அதுவரை அந்த மக்கள் காத்திருக்க வேண்டுமென்றும் கூறினர். அதன்படியே ஒவ்வொரு ஏழாம் நாளும் ஒருவன் மரிக்க, மீண்டும் அவன் மூன்றாம் நாள் உயிர்தெழும் பொழுது புதிய கிரகத்தை அடையும் தூரம் குறைந்து வருவதாக உணர்ந்தனர். ஏழாமவன் மரித்த மூன்றாம் நாள் புதிய கிரகத்திற்கான நுழைவாயில் தூரத்தில் இருப்பதைக் கண்டு கொண்டான். அதே நேரம் அந்தப் பிரதேசத்திற்கு, அவனது உடலைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தவர்களை நோக்கி ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது.

ஆகாயம் பார்க்காமல், பதுங்கு குழிகளில் கிடந்து, செத்துப் பிழைத்து உழன்று அல்லலுற்றதற்கான பயனை அடைந்தது போன்று நினைத்துக் கொண்ட அந்த பிரதேசத்து மக்களின் காதுகளில் வாகனம் வரும் ஓசை கேட்டது. மக்கள் சற்று நேரம் பொறுமை காக்க வேண்டும் என்று கூறிய சித்தரக்குள்ளர்களின் வார்த்தைகள் அவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. தங்களுக்குக் கிடைக்கும் நல்லூழைத் தடுத்த நிறுத்த அந்தக் குள்ளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று ஆத்திரம் கொண்டவர்கள் அவர்களை கல்லால் அடித்துத் துன்புறுத்தினர். மயங்கி விழுந்த ஆறு குள்ளர்களோடு சேர்த்து அவர்கள் தூக்கிக் கொண்டிருந்த ஏழாமவனின் உடலும் நிலத்தில் விழுந்தது. அவ்வாறு நிலத்தில் விழுந்த அவர்களின் உடல்கள் முழுவதும் அமிலம் பரவ, அவை முழுவதுமாய் வெந்து ஆவியாகிக் கொண்டிருந்தன 

தங்களுக்கான புதிய கிரகத்திற்குச் செல்ல வேண்டிய வாகனம் வந்து சேர்ந்ததில் ஆர்வமுற்ற மக்கள், ஒருவரையொருவர் நெட்டித் தள்ளி வேகமாக வாகனத்தை நோக்கி முன்னேறினர். ஆவியாகிக் கொண்டிருந்த உடல்களில் இருந்து எழுந்த துர்வாடை காற்றில் பரவி அந்த வெளியெங்கும் வியாபிக்கத் துவங்கியது.

மிக அருகில் வந்து நிற்கும் அந்த வாகனத்தை முழுவதுமாய் பார்த்ததும், அவர்களின் குதூகலம் மேலும் அதிகமாகியது. தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்ந்து கொள்ளும் முனைப்பில் இருந்த அவர்கள், வாகனத்தின் கதவுகளைத் திறக்க, பிறப்புறுப்பில் இரும்புக்கழி சொருகிய நிலையில் நிர்வாணமாய் ஒரு பெண் அவ்வாகனத்திலிருந்து கீழே விழுவதைக் கண்டனர். அந்தப்பெண் தங்கள் ஆதி வனதேவதையின் சாயலைக் கொண்டிருப்பதாக அவர்களில் ஒருவர் கூறியதை மற்றவர்கள் வேகமாக ஆமோதித்தனர். தாங்கள் வனதேவதையை வருந்தி அழைத்து அவளை சம்மதிக்கவைத்து பின் அவளை பலியிடுவதற்கான தேவை கூட இல்லாமல் அவளாக தங்கள் பயணத்திற்கு முன் பலியாகியிருப்பதாகவும், அவளின் நினைவாக அவளது உதிரம் தோய்ந்து சிதறிக்கிடக்கும் கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு போய் புதிய கிரகத்தில் வழிபடலாம் என்று முடிவெடுத்து அவசரமாக ஆளுக்குக் கொஞ்சம் மண்ணை அள்ளிக் கொண்டனர். பின் ஜன்னலோர இருக்கைகளில் இடம் பிடிப்பதில் முனைப்புக் காட்டி வாகனத்தில் ஏற எத்தனித்தவர்கள், ஏறும் அவசரத்தில் அவளை மிதித்து அவள் மேல் ஏறிச் சென்று, வேடிக்கை பார்க்க வசதியான இடங்களைத் தேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஏறியதும் வாகனம் கரும்புகை கக்கி கிளம்பத் துவங்கியது.

தொடர்ந்த பயணத்தின் ஜன்னல் வழிக்காட்சிகளில் லயித்திருந்தவர்கள், நாப்பத்தி ஒன்பதாவது நாளில் தாங்கள் சேர வேண்டிய கிரகத்திற்கான மிகப்பெரிய நுழைவாயிலைக் கண்டனர். தங்களுக்கான புதிய துவக்கத்திற்குத் தயார்ப்படுத்திக் கொண்டவர்கள் வாகனத்தை விட்டு இறங்கும் தருவாயில் பெருத்த சத்தத்துடன் இடி மின்னல் வெட்டத் துவங்கியது. வானம் வெடித்துச் சிதறியது போல கொட்டத்துவங்கிய அமில மழை நுழைவாயிலையும், வாகனத்தையும், அதில் இருந்த அவர்கள் அனைவரையும் எரித்தது. காற்றில் பரவியிருந்த துர்நாற்றம் புதிய கிரகம் முழுவதிலும் கவியத் துவங்கியது. தூரத்திலிருந்து இதனைக் கண்ணுற்ற ஏழாவது குள்ளனின் அரூப முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5772
******

Monday, October 27, 2014

மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்


மதுரையில் நேற்று நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய விழா, மாலை நான்கரை மணி வரை சிறப்பாகவே நடந்தது. காலை நிகழ்வில், அனைத்து பதிவர்களும் மேடையேறி தங்களைப் பற்றியும், தங்களது வலைப்பூவைப் பற்றியும் அறிமுகம் செய்தனர். சுமார் இருநூறு பேர் அளவிற்கு இருந்த கூட்டத்தில் பத்து இருபது பேர்களைத் தவிர யாரையும் தெரியவில்லை. “என்னடா மதுரைக்கு வந்த சோதனை, பத்து வருசமா இந்த இணையத்துல தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்... ஒருத்தர் பேரும் கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே” என்று லேசாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இவர்கள் எல்லாம் நாம் தமிழ்மணத்தில் இருந்து ”வாலண்டரி ரிடயர்மெண்ட்” வாங்கி வந்த பிறகு அட்மிஷன் போட்டு இப்பொழுது கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் என்று. 

கலகக்காரர்கள் எல்லாம் பதிவுலகை காலி செய்து விட்டு சென்று விட்டதாலோ அல்லது நம்ம ஊர் மதுரையின் வீரத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவோ தெரியவில்லை, நிகழ்வு மிக நேர்த்தியாகவும் அமைதியாகவும் நடந்தது. ஒரு சண்டையில்ல, சச்சரவில்லை... ஒட்டு மொத்த மதுரை மாநகரமே நேற்று “அமைதிப்பூங்கா”வாக மாறிவிட்டது. நிகழ்ச்சி எந்த அளவுக்கு அமைதியாக சென்றதென்றால் வேடிக்கை பார்க்கும் நாம் கொஞ்சம் சத்தமாக சிரித்தால் கூட, நிகழ்ச்சியை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் நம் பக்கம் திரும்பி “என்ன தம்பி பிரச்சனை... நிகழ்ச்சியை கவனிங்க!” என்று அறிவுறுத்துவது போலத் தோன்றும் அளவுக்கு.

புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக வெளிவரும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கையில் “இந்த புத்தகங்களை எல்லாம் எழுதுவது யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்க்ள், எப்படி இத்தனை புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டே இருக்கிறார்கள், இவர்களுக்கான வாசகப் பரப்பு எங்கிருக்கிறது” என்று பெரும் மலைப்பாக இருக்கும். நேற்றைய விழாவில் இந்த சந்தேகங்களுக்கான விடை கிடைத்தது. வலைப்பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்யும் போது, சிலர் இருபது முப்பது புத்தகங்கள் வரை வெளியிட்டு தமிழுக்குத் தொண்டாற்றுவதாகக் கூறினர். எனக்குக் கொஞ்சம் “கேராகி” விட்டது. சுதாரித்துக் கொண்டு ”ஜிகிர்தண்டா” குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்

மதிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். சும்மா சொல்லிக்கூடாது... சப்ஜெக்ட் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் சாலிடாக ஒரு மணி நேரம் பேசினார். வாட்ஸப்பில் பிட்டுப் படம் அனுப்புபவர்களும் வலைப்பதிவர்களும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல, பார்வையாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றார்.

பின்பு வலைப்பதிவர்கள் இயக்கி, நடித்த “சில நொடி ஸ்நேகம்” என்ற குறும்படம் வெளியிடலும், திரையிடலும் நடந்தது. அதன் பின், வலைப்பதிவர்கள் எழுதிய நான்கு புத்தகங்களும் வெளியிடப்பட்டது. 

நண்பர்கள், தங்களது வீட்டுத் திருமண விழாவினைப் போல இந்த வலைப்பதிவர் திருவிழாவை அக்கறையோடும் பொறுப்புடனும் நடத்தினர். தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட விழாக்குழுவினருக்கு வாழ்த்துகள். இணையத்தின் வழி நிகழ்ச்சி நேரலையிலும் ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியின் அரங்க அமைப்பும், அலங்காரமும் மிக நேர்த்தியாக இருந்தது. ”போடியம்” முதல் “ப்ரஜக்டெர் வைக்கும் ஸ்டூல்” வரை அனைத்து ஏற்பாடுகளிலும் இருந்த ப்ரஃபஸனிலிஸம் தனித்தன்மையாகத் தெரிந்தது.  சிறப்பாக அரங்க அமைப்பு செய்த நண்பர் சுப்புரமணி மற்றும் அவரது குழுவினரின் பணி பாராட்டத்தக்கது. அனைவருக்கும் காலையில் மதுரை ஸ்பெஷல் “ஜிகிர்தண்டா”வும், மதிய உணவாக மதுரை மண்ணின் சௌராஸ்ர மணத்திலான நிறைவான உணவும், மாலையில் சூடான டீயும், வடையும் வழங்கப்பட்டது. ”வடை’ கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்று வந்தேன். விழாவை சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

*******

Friday, October 24, 2014

நியாயமாரே !!!

கங்காணி, இந்த வருசம் உருப்படி எல்லாம் எப்படி?

ஐயா, சிங்கர் சூப்பர்ல ஒரு பத்து சின்ன உருப்படிங்கைய்யா. அப்புறம் மத்த ரியாலிட்டி ஷோ வகையறாவுல ஒரு பதினஞ்சு. அப்படி இப்படினு ஒரு இருபது முப்பது புது உருப்படிங்க தேறும். இதுகல, ஒரு ரெண்டு மூனு வருசம் களை புடுங்க விட்டுட்டு அடிச்சு பத்தி விட வேண்டியது தான். இந்தவாட்டி ஜோடில எல்லாம் பழைய டிக்கட்டுங்க தாய்யா, ஒன்னும் புதுசு இல்ல...

அந்த ஜட்ஜு?

ஐயோ, அது ரொம்ப பழசுங்கய்யா.

சரி, விடு... துரைமாருங்க திருவிழாவுக்கு வரும் போது பழைய ஆளுங்க எல்லாம் வந்து வரிசைல நிக்கும்ல?

பின்னே, கால்ல சங்கிலி கட்டி தானே வுட்டுருக்கு.. எங்க கூப்பிட்டாலும் வந்து ஒப்பாரி வச்சுட்டு போகுங்க. என்ன ஆளுக்கொரு அவார்டு கொடுக்கனும், அவ்ளோ தான்.

கழுத, காசா பணமா.. அடிச்சு விடு.  முன்ன, பின்னன்னு அதை வச்சு ஒரு வருசம் ஓட்டலாம். ஏங்கங்காணி, இந்த நீயா நானா உருப்படிங்க எல்லாம் கிழடு தட்டி போயிடுச்சேய்யா, பூராப்பேத்தையும் பத்தி உட்டுட்டு புது ஐட்டமா புடிக்க வேண்டியது தானே.

எங்க சாமி, ஒன்னும் செட்டை விட்டு நகர மாட்டுதுக... ராத்திரி பகலா அங்கனயே கெடயா கெடக்குதுக.  எல்லாத்துக்கு வருசக் கூலி பேசி செட் ப்ராப்ர்டியா தான் உக்கார வச்சிருக்கோம், ஒன்னும் பாதகமில்ல. ஆனா சீரியல் கோஷ்டிங்க தொல்லை தாய்யா கொஞ்சம் அதிகமா இருக்கு. சொல்லாம கொள்ளாம திடீர்னு கல்யாணங்கட்டிட்டு வந்துருதுக. அது கூட பரவால்லன்னு ஒரு நாப்பது நாப்பத்ஞ்சு வயசு வரைக்கும் தாவணி கட்டி சுத்த வுட்டு சமாளிக்கிறோம். அதுக வெக்கப்பட்டு நடிக்கிறேனு பூராப்பயலுகளுக்கும் வெசம் வச்சு சாகடிக்குதுக. ஆனா சினிமா ஆசை வந்து பாதில ஓடிப்போற பொடியனுகளை தான் தடுக்க முடியல.

ஓடுற பொடியனுக கால் நரம்பை வெட்டி விடனுமய்யா. மீறிப்போனா கால்ல சூடு வை, அப்படியும் தப்பிச்சு போய்ட்டானா, ஒன்னும் பிரச்சனையில்ல. அடுத்த திருவிழாவுக்கு அவனுகளையே கூப்பிட்டு “பிரைடு ஆஃப் பரதேசி” அவார்டு கொடுப்போம். கூத்தை தொடர “இவனுக்கு பதில அவன்”னு வெய்ட்டிங் லிஸ்ட்ல இருந்து ஒருத்தனை இறக்கிவிடு. ஆனா ஒன்னு, ரொமான்ஸ் பண்றேன்னு சினுங்குறவகளை மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லனும்ய்யா, கருமம் என்னாலயே தாங்க முடியல.

ஐயா, நாம போடுற படத்துக்கெல்லாம் இப்ப மவுசு குறைஞ்சு போச்சுங்கய்யா
என்னய்யா சொல்ற?

பின்ன என்னங்கய்யா,  கும்கில நடிச்ச மாணிக்கமே ரிடயர்ட் ஆகிருச்சு, அல்லியெல்லாம் ஆண்ட்டி பலவருசம் ஆகிருச்சு. நாம இன்னும் இதையே புதுப்படம்னு சொல்லி திருப்பி திருப்பி போட்டு ப்ளேயரை தேய்ச்சுட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராட்டி வர்ற வருசத்துல என் கணக்கையும் முடிச்சு விடுங்க. ஊருப்பக்கம் போய் பொதிகைல வயலும் வாழ்வும் பார்த்துக்குறேன்.

அட பொறுமையா இருய்யா, ரொம்ப தான் கோச்சுக்குற.... வாராவாரம் நாம நடத்துற கோட்டு மேட்டர் தான் இண்டர்நெட் முழுக்க பெரிய பேச்சு தெரியும்ல
ஆமா, எல்லாம் யோக்கியனுக அங்க தான் துண்டைப் போட்டுட்டு உக்கார்ந்திருக்கானுக... பூராப்பயலுகளும் நம்ம நல்லா காறி காறி தான் துப்புறானுக, ஆனா ரெண்டு செகண்ட் மூஞ்சி தெரியும்டானு சொன்னா, நாலு ராத்திரி மூனு பகலுக்கும் மேல பல்லுல பச்சத்தண்ணி படாம பூட்டியிருக்க நம்ம ஸ்டுடியோ நிலைக்கதவை புடிச்சு தொங்குனமனியே தான் நிக்குறானுக. அதுல நம்மள யாரும் அடிச்சுக்க முடியாதுய்யா.

அப்போது அடுத்த சீசனுக்கான ஆடிஸன் முடிந்து, வெகு உற்சாகமாக புதியவர்கள் உள்ளே நுழைகிறார்கள். கங்காணி மெயின் கேட்டை இழுத்து மூடுகிறார்.

உள்ளேயிருந்து பரிதாபமான ஓலம் ஒலிக்கிறது.

“டிவில நடிக்கப்போறோம்ங்கிற ஆசைல இந்த நரகுழில வந்து விழுந்துட்டீங்களே, போச்சே, நியாமாரே....... உங்க மொத்த வாழ்க்கையையும் ரிபீட் டெலிகாஸ்ட் போட்டே சாகடிக்கப்போறானுகளே.....   நியாமாரேஏஏஏஏ..............”

******

Saturday, October 18, 2014

முப்பத்தைந்து வயது


இந்த முப்பத்தைந்து வயது...
விலக்கிவைக்க முடியாத பொறுப்புணர்வை
உங்கள் மீது வலுக்கட்டாயமாக சுமத்துகிறது
முதலீடுகளில், ஜாமின் கையெழுத்துகளில்,
வரவு செலவு கணக்குகளின் இடைவெளிகளில்
தயவு தாட்சண்யமின்றி உங்களை பணயமாக வைக்கிறது
நீங்கள் விரும்பாத ஒழுங்கு முறைக்கு
உங்களை ஒப்புக் கொடுக்கிறது
ஓர் இரவு வெளியே தங்க வேண்டுமென்றாலும்
மறுநாளுக்கான அடுக்கி வைக்கப்பட்ட
நேர அட்டவணையை குலைத்துப் போடுகிறது
எவ்வளவு நேரமானாலும் வீடு திரும்ப வேண்டுமென்ற
நிர்பந்தத்தை ஈவு இரக்கமின்றி திணித்து விடுகிறது
லேசான வாயுப்பிடிப்பு மாரடைப்புக்கான அறிகுறியோ
என்ற பதட்டம் கொள்ளச்செய்கிறது
இந்த ஆண்டுக்கான போனஸில் கண்டிப்பாக
மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ளவேண்டுமென்று
நினைக்கச் செய்கிறது, கையில் பணம் வந்ததும்
அதை அடுத்த வருடத்திற்கு ஒத்திப் போட வைக்கிறது
தினம் காலை சோற்றுப்பொட்டலத்தை சுமந்து கொண்டு
அலுவலகம் செல்ல வைக்கிறது
அரை நாள் மதிய தூக்கத்திற்காக
ஆறு நாட்கள் விரட்டி விரட்டி ஓட வைக்கிறது
ஒரு வாளித் தண்ணீருக்கு
இரண்டு கை ஏரியல் பவுடர் என்று பாடம் புகட்டுகிறது
உள்ளாடைகளை கொல்லைப்புறத்து கொடியில்
மறைவாய் காயப் போடும்
சூட்சமத்தை சொல்லிக் கொடுக்கிறது
இந்த முப்பத்தைந்து வயது...
யுவதிகளை சிறுமிகளாக பார்க்க வைக்கிறது
ஒன்றாம் தேதியை எதிர்பார்த்து காக்க வைக்கிறது
காப்பீட்டு ஒப்பந்தங்களை வரிவிடாமல் படிக்க வைக்கிறது
இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டுப்பெட்டி மாட்ட வைக்கிறது
இன்னும்...
உங்களின் எந்தவொரு செயலுக்கும்
குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற எதிர்வினையை
சதா நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

********
நன்றி மலைகள்: http://malaigal.com/?p=5666

Friday, October 17, 2014

நாகதேவதை

மாடசாமியின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இன்று. எலி வளை என்றாலும் தனி வளை என்பது மாதிரி இவனுக்கென்று தனியாக ஒரு சொந்த வீடு. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இந்த வீட்டைக் கட்டி இன்று புதுமனை புகுவிழாவும் நடத்தியாகிவிட்டது. விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள். 

“நல்ல, கிழக்கு பார்த்த அம்சமான வீடுப்பா, நீ பட்ட கஷ்டமெல்லாம் இன்னியோட போச்சு, இனி உனக்கு எல்லாம் நல்ல காலம் தான்". மாடசாமிக்கு நிறைவாகவும், பெருமிதமாகவும் இருந்தது. 

ஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. 

கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா... ரொம்ப காலத்துக்கு முன்ன இங்க அரசும், வேம்பு பிணைஞ்ச மாதிரி ஒரு பெரிய விருட்சம், அதுக்குக் கீழே புத்து ஒன்னு நல்லா செழிப்பா இருந்துச்சாம். அது அழிஞ்சு பல வருசமானாலும், விட்ட குறை தொட்ட குறை... இப்பமும் ஊறிட்டே இருக்கு" என்றார்

மாடசாமிக்கும் தெய்வ நம்பிக்கை உண்டு தான் என்றாலும், எப்போதோ இருந்த புற்று தன்னை ஒன்றும் செய்யாது என்று திடமாய் நம்பினான். அதோடு அந்த ஏரியாவில் இவ்வளவு மலிவாய் வேறு இடமும் கிடைக்காது

“நாம யாருக்கு என்ன தீமை செஞ்சோம், யார் காசுக்கு நாம ஆசைப்படுறோம், அதலாம் நம்ம ஒன்னும் செய்யாது, இந்த இடத்தையே முடிச்சுக்கலாம்" என்று இன்னும் விலையை குறைத்து பத்திரம் பதிந்து விட்டான். இப்போது வந்திருந்தவர்கள் எல்லாம் வாழ்த்திச் சொல்லும் போது, மனதிற்குள் இருந்த சிறு ஐயமும் விலகி நிம்மதியானான்.

புதிய வீடு பால் காய்ச்சிய அன்று இரவு வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் புது வீட்டில் தான் தங்க வேண்டும் என்பது சம்பிரதாயம். முழுமையாக கட்டட வேலை முடிந்து வீடு குடியேற இன்னும் நாட்களாகும். கன்னி மூலையில் அமைந்திருந்த படுக்கையறையில் தளம் கூட பதிக்கப்படாமல் இருந்தது. இருந்தும் மாடசாமிக்கு அந்த அறையில் படுத்துக் கொள்ளவே விருப்பமாய் இருந்தது. மனைவி பிள்ளைகளோடு தளம் போடாத தரையில் பாய் விரித்து அனைவரும் உறங்கத் துவங்கினர். விடிகாலையில் இருந்து இங்குமங்கும் ஓடியாடி வேலை பார்த்த அசதியில், படுத்தவுடன் அவனுக்கு உடனே தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது. 

மஞ்சள் பொடியைக் குழைத்து செய்தது போன்று உருவமுடைய ஒரு பத்து வயது சிறுமி மஞ்சள் நிற பாவாடை சட்டை அணிந்தபடி, அந்த அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு, மாடசாமியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

படுத்திருக்கும் மாடசாமி சுற்றும் முற்றும் பார்க்க, மற்ற அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அவள் இவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள்

இவன் பதறிப்போய், “ஏய்... யார் நீ, இங்க என்ன பண்ற" மனதுக்குள் பயம் இருந்தாலும் அதட்டும் தொனியில் கேட்டான்

இவனது அதட்டலில் பயந்த அவளது முகம் வாடிப் போனது

“இல்ல, இல்ல... சும்மா தான்" என்று நடுங்கிய குரலில் சொல்லியடி மூலையோடு மூலையாக ஒடுங்கிக் கொண்டாள்

அவளது பயம், நடுக்கம் அவளது மருண்ட விழிகள்... மாடசாமிக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. “ச்சேய், சின்னப்பிள்ளையப் போய் திட்டுறோமே" என்று தன்னையே கடிந்து கொண்டவன், சிறிது தைரியம் வந்தவனாக,

“பாப்பா... நீ யாரு பாப்பா. இங்க என்ன பண்ற" சற்று நிதானமாகக் கேட்டான்

"நானா... நான் இங்க தான் இருக்கேன்."

“இங்கெல்லாம் இருக்கக்கூடாது பாப்பா, உங்க வீட்டுல உன்னைத் தேடப்போறாங்க, நீ கிளம்பிப் போ"

“இல்ல, நான் இங்கியே ஒரு ஓரமா உக்கார்ந்துக்குறேன்... எனக்கு யாருமில்ல நான் இங்கேயே ஒடுங்கி ஓரமா மூலைல இருந்துக்கவா"

இவனுக்கு அந்த சிறுமி கெஞ்சுவது மனதை இளக்கிவிட்டது.

“ஒன்னும் பிரச்சனை இல்லை பாப்பா, நீ பாட்டுக்கு தாராளமா இரு. நல்லா தாராளமா புழங்கு.. இங்காரு நான் எழுதுற பேனா இருக்கு பாரு. அதை வச்சு வேணா விளையாடு. நான் ஒன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன்"

அவனது ஆதரவான வார்த்தைகளினால் இயல்புக்குத் திரும்பிய சிறுமி, தன் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து அதிலிருந்த சில்லறைக்காசுகளை அறை முழுதும் கொட்டி விளையாடத் துவங்கினாள்.

திடுக்கிட்டு எழுந்தவனுக்கு நடந்தது கனவா, நினைவா எதுவும் புரியவில்லை. எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க இவன் சுற்றி சுற்றி பார்த்தான். எதுவும் இயல்புக்கு மாறாய் தோன்றவில்லை. தனக்கு வந்தது கனவு தான் என்று மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டான். அது என்ன மாதிரியான கனவு என்று சற்று பயந்தவன், காலையில் இருந்து யாகம், மஞ்சள், குங்குமம், அது தொடர்பான பூஜைப்பொருட்கள் அவற்றுடன் புழங்கிக் கொண்டிருப்பதால் அத்தகைய கனவு வந்திருக்கும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டு மீண்டும் படுத்தான். அதன் பிறகு பொட்டுத் தூக்கம் வரவில்லை. விடிகாலை எழுந்து மற்ற வேலைகளை செய்யத்துவங்கியவன், அந்த கனவை அத்தோடு மறந்தும் விட்டான். 

புது வீட்டு பூச்சு வேலைகள் முடிந்து, வெள்ளையடித்து குடியேற சில மாதங்கள் ஆகி விட்டது. பழைய வாடகை விட்டை காலி செய்து விட்டு ஒரு வழியாக புது வீட்டிற்கு குடி வந்த தினத்திலிருந்து தினமும் நள்ளிரவில், அந்த சிறுமியின் முகம் தென்படுவதும், அது அந்த அறைக்குள் ஓடியாடி விளையாடுவது போலவும், சில்லறைக்காசுகளை அறை முழுவது வீசும் சப்தமும் மாடசாமிக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. மனைவி, குழந்தைகளிடம் பட்டும் படாமல் அது பற்றி கேட்ட பொழுது, அவர்கள் கண்ணுக்கோ, அல்லது கனவிலோ  அந்தச்சிறுமி தெரிவதில்லை என்று உணர்ந்து கொண்டான். முதல் சில நாட்களில் இருந்த பயமும் போகப் போக குறைந்து, அந்த சிறுமியின் இருப்பை இயல்பாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டான். இவனது இருப்பு சௌகர்யம் அளிப்பது போன்றான பாவனையில் சிறுமியும் சில்லரைக்காசுகளை வீசி விளையாடிக்கொண்டிருப்பாள். அரிதான வேளையில் இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் பார்த்து மெல்லிய புன்சிரிப்பை பரிமாறிக்கொள்வர். அவ்வாறு சிரித்துக் கொண்ட இரவுக்கு மறுநாள் தொழில்நிமித்தமாகவோ, குடும்ப வகையிலோ, நண்பர்கள் சுற்றத்தார் மூலமோ ஏதாவதொரு எதிர்பாராத இன்பச் செய்தி இவன் காதில் நிச்சயம் ஒலிக்கும்.

சொந்த வீடு கட்டுவது தான் லட்சியமாக இருந்த மாடசாமிக்கு, வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்ற தன்முனைப்பு இயல்பாகவே இருந்தது. அவனது முமு மூச்சான உழைப்பினால், செய்து வந்த வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கி மெதுவாக காசு சேர ஆரம்பித்தது. நேற்றைக்கு இன்று மோசமில்லை என்ற ரீதியில் வரவிற்கும் செலவிற்கும் சரியாய் சென்று கொண்டிருந்த நிலையில், ஊரார் மதிக்ககூடிய நல்ல நிலையை வெகு சொற்ப காலகட்டத்தில் எய்தினான். 

ஓர் இரவு வழக்கமான கனவு கண்டு கண் விழித்த மாடசாமி, தன் வீட்டிற்கு வெளியே வித்தியாசமான ஒலி கேட்கவும், ஜன்னலருகே சென்று பார்த்தான். வீட்டின் முன் குடுகுடுப்பைக்காரன் நிற்பது அந்த இருட்டில் மங்கலாகத் தெரிந்தது. வாசலில் இருந்து கைப்பிடி மண்ணெடுத்து நெற்றியில் பூசிக் கொண்ட குடுகுடுப்பைக்காரன் ஏதோ முனகுவது போலத் தெரிந்தது. அவன் சொன்ன வார்த்தைகளை மாடசாமி உற்றுக் கேட்டான்.

“இந்த வீட்டுல மகமாயி குடியிருக்கா, ஒரு குறையுமில்ல... மலை போல வாழ்விருக்கு. அவ பானை நிறைய புதையலை வச்சிகிட்டு அலைமோதுறா. அள்ளிக் கொடுக்க முடியாம கிள்ளிக் கொடுக்குறா. அவளுக்கு அள்ளிக் கொடுக்கத் தடையா ஒரு கட்டு இருக்கு. அந்தக் கட்ட அறுத்திட்டா புதையலை அள்ளி அள்ளிக் கொடுப்பா... ஒரு குறையுமில்ல, ஆத்தா மகமாயி துணையிருப்பா !"

குடுகுடுப்பைக்காரன் இரண்டு மூன்று தடவை இதே வார்த்தைகளை திருப்பி திருப்பிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் அடுத்து என்ன கூறப்போகிறான் என்ற ஆர்வம் மேலிட உன்னிப்பாய் கவனித்த மாடசாமிக்கு, அவன் எதுவும் கூறாமல் அடுத்தடுத்த வீடுகளுக்கு சென்று விட்டது சற்றே ஏமாற்றமாக இருந்தது. இதுவரை சலனமில்லாமல் இருந்த மனதில் குடுகுடுப்பைக்காரனின் வார்த்தைகள் புயலை வீசி விட்டு சென்றுவிட்டது. அவன் சொல்ல வந்ததன் முழு செய்தியையும் அறிய மனம் உறுத்தத் தொடங்கியது.

மறுநாள் விடிந்தும் விடியாமல் சத்திரப்பட்டியில் இருக்கும் கோடங்கியைப் பார்க்க கிளம்பினான். மனைவி கேட்டதற்குக் கூட சரியாக பதில் சொல்லாமல் “பொறு, அதிர்ஷ்டம் வந்து வாசல் வரை காத்திருக்கு, என்னன்னு விவரமா வந்து சொல்றேன்" என்று அவசர அவசரமாக ஓடினான்.

ஊருக்குள் நுழையும் போதே தெரிந்து விட்டது, கோடங்கியைப் பார்க்க, ஏகப்பட்ட கூட்டம். தினமும் குறிப்பிட்ட பேருக்கு மட்டும் தான் அவர் குறி சொல்வார். அவராக அழைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான். இன்று தன்னை அழைப்பாரா, மாட்டாரா என்ற பரபரப்பினூடேயே போய் கூட்டத்தோடு கூட்டமாய் காத்திருந்தான். தனக்கு தினமும் வரும் கனவிற்கும், குடுகுடுப்பைக்காரன் சொல்லி விட்டு சென்று செய்திக்கும் இருக்கும் தொடர்பை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“நானொரு கூறுகெட்ட கொங்காப்பய, இத்தன வருசமா வந்து கதவைத் தட்டிட்டு இருக்க சீதேவியா கண்டுக்காம இருந்துட்டேனே. இன்னிக்கு கோடங்கிட்ட ஒரு வழி கேட்டு எப்படியும் புதையலைக் கைப்பத்திடனும்"

நேரம் சென்று கொண்டே இருக்கிறதேயொழிய கோடங்கி அவனைக் கூப்பிடுவதாக தெரியவில்லை. பொறுமையிழந்து காத்திருந்தவனுக்கு மதியத்துக்கு மேல் பொழுது சாய்வதற்கு முன், கோடங்கியிடமிருந்து அழைப்பு வந்தது

“ஊமச்சிகுளத்துல இருந்து வந்தது யாருங்க, சாமி கூப்பிடுறாரு" இவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வேறு யாரும் எழுந்திருக்கவில்லை. தன்னைத் தான் அழைக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டு வேகமாக எழுந்து கோடங்கி இருந்த குடிசைக்குள் சென்றான்.

தயாராய் கொண்டு போயிருந்த மஞ்சள் பொடி, குங்குமம் சேர்த்த கலவையை சப்பணமிட்டு அமர்ந்திருந்த கோடங்கியின் முன் கொட்டிவிட்டு நின்றான்

அவனை தீர்க்கமாக நோக்கிய கோடங்கி, "ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் நினைக்கல, ஓடி ஓடி தான் உழைக்கிறோம், கைல ஒரு காசு தங்கல. இது தானே உன் குறை?"

உலகத்தில் யாருக்குத்தான் இந்தக் குறை இல்லை. இவனும் “ஆமா சாமி, ஆமா சாமி" என்று வேகமாக ஆட்டினான்.

“உட்காரு, உன்னை அந்த மகமாயி தான் இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கா. ஒன்னும் கவலைப்படாதே... தங்கும்... எல்லாம் நிலைக்கும், ஊத்தா பெருகி நிக்கும். மண்ணுக்குள்ள இருக்க ஒரு செல்வம் உன் கைக்குக் கிடைக்குற நேரம் வந்தாச்சு"

சாமி சொல்லச் சொல்ல இவனுக்கு உடம்பெல்லாம், சில்லிட ஆரம்பித்து விட்டது. தான் நினைத்து வந்த அனைத்தையும் சாமி புட்டு புட்டு வைக்கிறாரே என்று ஆச்சர்யம் ஒருபுறமென்றால், தனக்காக காத்திருக்கும் புதையல் தன் கைக்கு கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷம் மறுபுறம்.

“தண்ணி குடிக்கிற மாதிரி கைய சேர்த்து குவிச்சு வை !"

"என்ன சாமி ?" என்று பதற்றத்தில், சாமி கும்பிடுவது போல கைகளை சேர்த்து வைத்தான்

“இது தான் தம்பி உன் பிரச்சனை, சீதேவி வலியக் கொடுக்க வருது, கையேந்தி வாங்கிக்க சொன்னா, கும்பிடு போட்டு வேணான்னு மறுக்குற பாரு"

இவனுக்கு அவமானமாய் போயிற்று. “இல்ல சாமி, இல்ல சாமி “ என்று பதறியவாறு கைகளை ஏந்தினான்

சாமி அருகில் வைத்திருந்த எலும்பிச்சை பழத்தை நான்காக பிய்த்து, கொட்டிக்கிடக்கும் மஞ்சள் குங்குமம் பொடியில் தோய்த்து ஏந்தியிருக்கும் இவனது கைகளில் வழியவிட்டார். பின்பு அதில் அவனது நெற்றியில் திலகமிட்டு விட்டு, சன்னதம் வந்தவராக ஆவேசமாக பேச ஆரம்பித்தார்

“ம்ம்ம்.... ஆத்தா புதையலை ஆயிரமாயிரம் வருசமா அரசும் வேம்பும் குடும்பம் நடத்துன நிழல்ல சேர்த்து வச்சிருக்கா. காவலுக்கு இருக்க பெரிய பூச்சியோட கட்டு இறுகிப் போய் கிடக்கு. அது ஆத்தாளையே புதையல் பக்கமா அண்ட விடாம நெருக்கிக் கிடக்கு. ஒன்னும் கவலைப்படாதே, உனக்கான காலம் வந்திருச்சு... இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. நடுராத்திரி பூசை வச்சு, கட்டை அறுத்துட்டா போதும், மத்ததெல்லாம் அவ பார்த்துக்குவா... புதையலை தானா வந்து உன் காலடியில கொட்டிக் கொடுப்பா"

“காலடில வேணாம் சாமி, கைல கொடுத்தா போதும் சாமி"

“ம்ம்ம், எதிர்த்துப் பேசாதே, சொல்றபடி செய்"

“சொல்லுங்க சாமி"

“ஒரு வெத்தலை பாக்கு, பன்னெண்டு எலுமிச்சை, சூடம், பத்தாயிரத்து ஒன்னு காணிக்கை எடுத்து வை, சாம்புராணி, ஊதிபத்தி ஆகாது. ஆத்தா புதையலை கொட்டிக் கொடுப்பா, ம்ம்ம் எடுத்து வை"

“இல்ல சாமி, அவ்ளோ காசு எடுத்துட்டு வரல சாமி !"

“ஆத்தா அள்ளிக்கொடுக்க தயாரா இருக்கா, எதிர்த்துப் பேசாதே.... ஆத்தாளை நினைச்சுட்டு திரும்பிப் பார்க்காம, நேரா மெயின் ரோட்டைத் தாண்டி இருக்க முச்சந்திக்குப் போ, அதுல வலது பக்கம் இரண்டாவது பர்லாங்கில் காணிக்கை வச்சிருக்கா. வெரசா போ, போய் எடுத்துட்டு வந்து ஆத்தா கட்டை அவுத்து விடு, அள்ளிக் கொடுக்க தயாரா இருக்கா"

புரிந்தும் புரியாமல் தலையாட்டிக் கொண்டிருந்தவனுக்கு, ஆச்சர்யமான ஆச்சர்யம்.

"புதையல் தான் கிடைக்கப்போகுதே, பத்தாயிரத்தை கொடுத்துத் தான் பார்ப்போமே !" என்று சபலம் லேசாக எட்டிப்பார்க்க, அந்த இடைவெளியில் கோடங்கி இன்னும் நன்றாக உடுக்கை அடித்து மந்திரித்து விட்டார். விளைவு அடுத்த அரை மணி நேரத்தில் சாமிக்கான காணிக்கை கிடைத்துவிட்டது, இரண்டு பர்லாங்க் தூரத்தில் இருந்த ஏடிஎம் வாயிலாக.

“நேரா வீட்டுக்குப் போ, இன்னிக்கு அமாவாசை, நாளைக்குப் பாட்டமை.. ரெண்டையும் விட்டுட்டு மூனாம் நாள் வளர்பிறை ராத்திரி ஆத்தா உன் கனவுல வந்து புதையல் இருக்க இடத்தை சொல்லுவா, போய் அள்ளிக்கோ ! ஆனா தம்பி இது லேசுபட்ட காரியமில்லை. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். இந்த ரெண்டு நாள்ல உனக்கு எந்த இரத்தக்காயமும் படாம பார்த்துக்கோ, பெரிய காரியம் நடக்குற வீட்டுப்பக்கம் போகாதே... ஏதாவது சந்தேகம் இருந்தா இந்தா என் செல் நம்பரை வச்சுக்கோ, அவசியம்னா மட்டும் கூப்பிடு"

கோடங்கியின் வாக்கு ஏதோ அசரீரி போல் ஒலித்துக் கொண்டிருக்க, மந்திரித்து விட்டவன் போல வீடு வந்து சேர்ந்தான். அன்று நள்ளிரவு கனவில் வழக்கம் போல மஞ்சளால் ஆன உருவம் கொண்ட சிறுமி வந்தாள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அறையின் மூலையில் குத்துக்காலிட்டு ஒடுங்கிபோய் அமர்ந்திருந்தாள். இவன் அவளைப் பார்த்து சிரிக்க எத்தனிக்க, அவள் இவன் கண்களை இரைஞ்சும் பார்வையில் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்ல செல்ல அவளின் பயம் அதிகரித்து கொண்டே வந்தது. சிறிய அளவிலான சீற்றத்துடன் பெருமூச்சு விட்ட படி கேவத் துவங்கினாள். அவளை உற்று நோக்கியவனின் முகம் வெளிறியது. சிறிது நேரத்தில் அவளது மஞ்சள் உடம்பிலிருந்து குங்குமக்கரைசல் போன்ற திரவம் வெளிவரத் துவங்கியிருந்தது. அது குங்குமமா அல்லது அவள் உடம்பை யாரோ அறுத்து அதிலிருந்து இரத்தம் வெளிவருகிறதா என்று அவனுக்கு சரியாக புலப்படவில்லை. அவளது கேவல் அதிகரித்துக் கொண்டே வந்தது. உடலில் நிறைய கீறல்கள் விழுந்து அத்தனை கீறல்களின் வழியாகவும் இரத்தம் கொட்டத்துவங்கியது. 

மாடசாமிக்கு ஏதோவொரு பொறி தட்ட கனவிலிருந்து சடாரென பதறியடித்து எழுந்தான். உடனே அவசரமாக கோடங்கியை செல்ஃபோனில் அழைத்தான். இரண்டு மூன்று அழைப்புக்குப் பிறகு கோடங்கி பதில் அளித்தார்

“யாரு... இந்நேரத்துல?"

“சாமி, நான் தான்... ஊமச்சிகுளத்துல இருந்து வந்து குறி கேட்க வந்தேன்ல. அந்த புதையல்......."

“ஆ...... ஆமா.... தம்பி நீயா! உன்னோட பூசை தான் நடந்திட்டு இருக்கு. ஒன்னும் கவலைப்படாதே புதையல் அகப்பட்டுரும்"

“இல்ல சாமி, தயவு செஞ்சு பூஜையை நிப்பாட்டுங்க. இன்னும் எவ்ளோ பணம் வேணும்னாலும் தாரேன். தயவு செஞ்சு கட்டை அறுக்க வேணாம். எனக்கு புதையல் வேண்டாம் சாமி. இப்பவே நல்லா இருக்கேன் சாமி, தயவு செஞ்சு நிப்பாட்டுங்க" வாய் குழறி உளறியபடி தன்னையும் அறியாமல் கை கூப்பினான்

“சரி, சரி தம்பி, பதட்டப்படாதே... உரியவனே வேணாம்னு சொல்லும் போது, நான் எதுக்கு பண்ணப்போறேன், இப்ப நிறுத்திட்டேன்" என்று சொல்லி விட்டு சிவப்பு பொத்தானை அழுத்தினார்

வேர்த்து விறுவிறுத்த படபடப்போடு படுக்கையில் விழுந்தவனை, தூக்கம் மெல்லத் தழுவியது. கனவில் ஓரமாய் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்த அந்த சிறுமி, தன் மருண்ட விழிகளால் மெதுவாக இவனைப் பார்த்தாள்.

அவன் சலனமில்லால் சிரித்துக் கொண்டே சொன்னான், “பாப்பா, நீ பயப்படாம விளையாடு பாப்பா, நான் ஒன்னும் செய்ய மாட்டேன்!"

*******
நன்றி: சொல்வனம் இதழ் - http://solvanam.com/?p=35593

Wednesday, September 10, 2014

மதுரை புத்தகக் கண்காட்சி - 2014

சென்ற வாரத்தில் மதுரையில் புத்தகக் கண்காட்சி களை கட்டியிருந்தது. (29/08/2014 முதல் 07/09/2014). சித்திரைத் திருவிழாவிற்குப் போய் அழகரை வெவ்வேறு இடங்களில் வைத்து வேடிக்கை பார்த்து விட்டு வருவது போல் நானும் நான்கைந்து முறை கண்காட்சியை எட்டிப்பார்த்து விட்டு வந்தேன். ஃபேஸ்புக்கின் உபயத்தில்,  அங்கே வந்திருந்த கூட்டத்தில் பத்தில் ஒருவரை ஏற்கனவே பார்த்தது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. நேரடி அறிமுகம் இல்லாதவர்களிடம் போய் பேசுத் தயக்கமிருந்ததால், பேசவில்லை. அப்புறம்  ஆங்காங்கே பிரபலங்களின் ஆட்டோகிராப் படலங்களும், போட்டோகிராப் படலங்களும் சிறப்பாய் நடந்து கொண்டிருந்தன. நமக்குத் தான், அந்த காற்று பட்டால் அலர்ஜி ஆகிவிடுமே. லைம்லைட்டில் இருப்பவர்களிடமிருந்து போதிய தூரம் விலகி மெதுவாய், பாதுகாப்பாக கூட்டத்துக்குள் கலந்து விட்டேன். பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இந்த வருடம் வாங்கிய புத்தகங்களின் பகுப்பு பயங்கர கலவையாக அமைந்து விட்டது. இந்த புத்தகங்கள் எல்லாம் வாங்க வேண்டுமென்ற என்ற முன்முடிவும் இல்லாமல் கண்ணில்பட்டதில் பிடித்ததை எடுத்திருக்கிறேன். காலச்சுவடு அரங்கில் அறுபது சதவீத கழிவில் நல்ல சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்தும் கொஞ்சம் வாங்கினேன்

சொல் என்றொரு சொல் / ரமேஷ்-பிரேம்
கெடை காடு / ஏக்நாத்
விலங்குப் பண்ணை / ஜார்ஜ் ஆர்வெல் (தமிழில் க.நா.சு)
நான் காணாமல் போகும் கதை / ஆனந்த்
புதிய சலனங்கள் / இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் (2004)
பனிமூடி மீது ஒரு கண்ணகி / எம்.வி.வெங்கட்ராம்
வெண்ணிற இரவுகள் / ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (தமிழில் ரா.கிருஷ்ணையா)
தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி / சில்வியா பிளாத் (தமிழில் கீதா சுகுமாரன்)
கயம் / குமாரசெல்வா
ஆட்டிஸம் - சில புரிதல்கள் / எஸ்.பாலபாரதி
ஆயிஷா / இரா.நடராசன்

கண்காட்சிக்குள் உள்ளே நுழையும் போதே, புத்தகங்களின் அருமை பற்றி பல்வேறு துறைசார் விற்பன்னர்களின் உரையை ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் உரை வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.
"கல்யாண வீட்டுக்குப் போனா மொய் வச்சிட்டு, தாம்பூலப்பை வாங்காம திரும்பி வாரோமா ? புத்தக கண்காட்சிக்கு வந்தா மட்டும் நல்லா சுத்திப்பாத்துட்டு ஒரு புத்தகமும் வாங்காம வெறுங்கையை வீசிட்டு போகலாமா, நீங்களே சொல்லுங்க !”

நம்ம மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து சுற்றிப் பார்த்து விட்டு, பதிப்பாளர்களுக்கு டாட்டா காட்டி விட்டு போய்விடுகிறார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

அதை விட இன்னொரு சுவாரஸ்ய நிகழ்வு, பிரபலங்கள் தங்களை ப்ராண்டாக நிறுவ எவ்வளவு திட்டங்கள் தீட்டி உழைக்கிறார்கள் என்று புரிந்தது. புத்தகங்களை வாங்கி விட்டு வந்து கொண்டிருக்கும் போது, ஒரு இளைஞர் அழைத்தார்

“சார், அந்த ஸ்டாலுக்குக் கொஞ்சம் வர முடியுமா, நீங்க வாங்குன புத்தகத்துல எழுத்தாளர் ............. ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பார் சார்”

“இல்லங்க, எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல”

“சார், அவரு ஃபேமஸ் ரைட்டர் சார், டீவில கூட அடிக்கடி பார்த்திருப்பீங்களே”

“ஆமா, தெரியும்.. ஆனா அவர் புக் எதுவும் நான் வாங்கலீங்க!”

“பரவால்ல சார், எந்த புக்னாலும் கையெழுத்து போடுவார், ப்ளீஸ் சார்”

“இல்லிங்க, சாரி”

“சார், நீங்க கையெழுத்து வாங்குனா அவருக்கு ஒரு என்கரேஜ்மெண்டா இருக்கும், அதான்”

“இல்லிங்க, பரவால்ல.. ஆமா நீங்க யாரு”

“அவரு ஸ்டாஃப் சார்”

“ஓகேங்க, நீங்க டாட்கெட் அச்சீவ் பண்ண வாழ்த்துகள்... பை”

அவருக்கு ஆறுதல் வாழ்த்து சொல்லி விட்டு நகர்ந்தேன். ம்ம்ம்ம், மக்கள் என்னமா மார்க்கெட்டிங் பண்றாங்க... !

*******************

Monday, September 8, 2014

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை

கானகன் நாவல் குறித்த வாசிப்பனுபவம்:

மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். அதனூடே வனத்தைத் தனது பிரதாபங்களுக்கான களமாகவும் வேட்டையாடப்படும் உயிர் என்பது வெறும் மிருகம், அதற்கான ஆன்மா என்று ஒன்றில்லை என்று நம்பும் வேட்டைக்கார கருமாண்டியான தங்கப்பனுக்கும், இறந்து போன மனிதர்களின் ஆன்மா மட்டுமல்ல, விலங்குகளின் ஆன்மாவும் வனங்களில் நூற்றாண்டுகளாக வேர் கொண்டு இருக்கும் விருட்சங்களில் உறைந்து இருக்கின்றன, அவை அங்குள்ள மனிதர்களின் செயல்களைத் தொடந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன என நம்பும் தங்கப்பனின் வளர்ப்பு மகனான வாசிக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம் திரைக்கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.
நாவலின் முன்னுரையில் “புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில்” முடிவதாக ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் நாவலுடனான தொடர்ந்த பயணத்தில் ”கானகனை”, தன் தாயைக் கொன்ற ஒரு மனிதனை, குட்டி விலங்கு தேடி வந்து பழி வாங்குகிறது என்ற ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியவில்லை. உண்மையில் தங்கப்பனை கொல்வது பழிவாங்கும் எண்ணம் கொண்ட புலி மட்டும் இல்லை. அவனைப் பொறி வைத்து வலைக்குள் விழ வைத்து, புலிக்குத் தின்னக்கொடுப்பது வாசிதான். ஆக தன் கண்முன்னே வேட்டை என்ற பெயரில் யானைக்கூட்டத்தையும், மற்ற வன விலங்குகளையும் துடிக்கத் துடிக்கக் கொன்ற ஓர் இராட்சசனை சூதின் துணை கொண்டு வீழ்த்தியது வாசிதான்.
நாவல் துவக்கத்தில் “சோளகர் தொட்டி”, “காடு” ஆகிய புதினங்களின் சாயல் இருப்பது போல தோன்றியது. ஆனால் சில பக்கங்கள் சென்று நாவலின் மொழிநடைக்குள் நம்மை ஒப்புக் கொடுத்தபின், இந்த வனம் கொங்கு மணம் வீசும் சத்தியமங்கலக்காடோ அல்லது மலையாள சாரலடிக்கும் சேர நாட்டுப் பகுதியோ அல்ல, மதுரைத் தமிழின் வாசமடிக்கும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தேனி, பெரியகுளத்து வாழ்வியலோடு இயைந்த வருசநாட்டு மலை என்ற ஈர்ப்பு இன்னும் நாவலோடு நம்மைக் கட்டியணைத்துக் கொள்கிறது. தங்களது சிறுசிறு தேவைகள் போக வனத்தை எந்தத் தொந்தரவும் செய்யாத, வனவிலங்குகளின் வாழ்வுச்சங்கிலியை குலைக்காத எளிய வாழ்க்கை நடத்துகின்ற பழங்குடியின மக்களை அப்புறப்படுத்திவிட்டு காட்டின் அளப்பரிய செல்வங்களை அபகரிக்க நினைக்கும் பெருமுதலாளிகள் மற்றும் அவர்களின் வன்செயலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளையும் பற்றியும், அதனால் சுற்றுச்சூழல் எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றியும் பேசுகிறது இந்நாவல்.
சிறந்த வேட்டைக்காரனான சடையன், வேட்டையில் பெரிதாக விருப்பம் இல்லாதவனாகவே இருக்கிறான். ஆனால் அவனது மனைவியான செல்லாயிக்கோ வேட்டையின் சாகச வெறி உடலெங்கும், மனதெங்கும் ஊறிக்கிடக்கிறது. சடையனை வற்புறுத்தி அவ்வப்பொழுது அவளும் அவனுடன் வேட்டையாடச் செல்கிறாள். அவளது வேட்கை பல்கிபெருகி யானை, சிறுத்தை, புலி வேட்டை என்ற பெருங்கனவாய்த் தொடர்கிறது. அதனை அவள் சடையனிடம் கூறும் போது அவன் அவளைக் கண்டு மிரள்கிறான். “வேட்டைக்காரனின் பலம் முழுக்க அவன் வைக்கும் குறியில் தானேயன்றி, ஆயுதத்தில் அல்ல” என்பதில் நம்பிக்கையுடைய அவன், காட்டின் பெருவிலங்கான “கொம்பன்” யானையைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன, அதை யாரோ கொல்லப்போகிறார்கள் என்று ஊர் முழுக்க அரற்றித் திரிகிறான்.
அவன் மனம் பேதலித்து விட்டதாய் நம்பும் பளியங்குடி பெரியவர்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சில தினங்களில், வனத்தின் அடர்ந்த பகுதியில் தந்தத்திற்காகக் கொம்பன் யானை கொல்லப்பட்டதைப் பார்ப்பதில் இருந்து சடையன் மனம் பிறழ்ந்தவன் அல்ல, அவன் பளிச்சியின் பிள்ளை என்று நம்பத்துவங்குகின்றனர். வனத்தின் ஆன்மாவை படிப்பவனாக, வனவிலங்குகளுடன் உரையாடுபவனாக, அந்தக் காட்டின் ஆதிக்குடியர்களான பளியர்களின் தெய்வமான பளிச்சியின் பிள்ளையாக மக்களால் பார்க்கப்படுகின்ற, வாசியின் மீது அரூபமாகப் பிள்ளைப் பாசம் கொள்பவனாகச் சித்தரிக்கப்படும் சடையனின் செயல்களை நாவலின் மைய இழையாக மாற்றி வைத்து வாசித்தால், படைப்பின் இன்னொரு பரிமாணத்தை நம்மால் உணர முடியும். இறந்தவர்களின் ஆன்மா மரங்களில் உறைந்திருப்பதை உணர்தல், எதிர்வரும் துர்நிகழ்வுகளின் குறியீடாகப் பட்டாம்பூச்சிகளைக் காணுதல், தங்கள் சுயலாபத்திற்காக வனத்தின் இயல்பை அழித்து நாசம் செய்பவர்களை பளிச்சியம்மன் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதே என விசனம் கொள்ளுதல், பயிரிடப்பட்ட நிலங்களில் யானைக்கூட்டம் புகுந்து சகலத்தையும் அழித்து விட்டுச் செல்லும் போது பூரிப்படைதல், எதிர்பாராத தருணத்தில் பெருங்களிற்றின் பாகனாய் வந்து வாசியைக் காத்தல் என்று ஒரு நல்ல படைப்புக்குத் தேவையான புனைவின் பல்வேறு சாத்தியங்கள் இவன் மூலமாக மெருகேற்றப்பட்டிருக்கிறது. தனிமை விரும்பியான சடையனின் அருகே இருந்து வனத்தில் அவனது செயல்களைச் சற்று விரிவாக எழுதியிருந்தால், நாவலின் செழுமை இன்னும் கூடியிருக்கும்.
”வேட்டைக்காரனுக்கும், வேட்டையாடப்படும் மிருகத்துக்கும் ஓர் அந்நியோன்யமான உறவு இருக்கிறது. இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட பிறகுதான் வேட்டைக்காரன் அந்த மிருகத்தைச் சுட வேண்டும். நல்ல வேட்டைக்காரன் ஒளிந்திருந்து சுட மாட்டான்”. அந்த மலைப்பகுதியின் சிறந்த வேட்டைக்காரனான தங்கப்பனுக்கு அவனது அப்பா சொல்லிக்கொடுத்த பாலபாடம் இது. ஆனால் அவனைப் பொறுத்தவரை வேட்டை என்பது வீரம் மட்டுமல்ல அதில் கொஞ்சம் சூதும் கலந்திருக்க வேண்டும். முதலில் வேறு வழியின்றி நடக்கும் புலி வேட்டையில், புலியின் மீசை மயிரை மட்டும் சன்மானமாகப் பெற்று வருபவன், பின்னாளில் யானைக்கூட்டத்தைத் துரத்தி மலையாள தேசத்து காட்டுப்பகுதிக்குள் அனுப்பினாலே போதும் என்ற நிலையிலும், வலுக்கட்டாயமாகச் சூது செய்து இரண்டு ஆண் யானைகளைக் கொல்வது அவற்றின் தந்தங்களில் ஒன்றைப் பெற்று தன் மகளுக்குத் தொட்டில் செய்யவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதன் மலைக்காட்டில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் அவனது சுய தேவை அல்லது பேராசை என்னும் தீ எரியத்துவங்கிய பின், அவனுக்குள் இருக்கும் அறம் அனைத்தும் மறந்து போய் தன்னை விட வலுவில் குறைந்த ஜீவராசிகளிடம் மிருகத்திற்கும் கீழாக இறங்கி வெறி கொண்டு தாக்கவும் தயங்கமாட்டான் என்றே தோன்றுகிறது. சுற்றியுள்ள அத்தனை பகுதிக்கும் நன்கு அறியப்பட்ட வேட்டைக்காரனாகவும், சிறந்த கருமாண்டியாகவும் அறியப்படும் அவன், தனக்குப் பின் அந்தப் பெருமை தனது வளர்ப்பு மகனான வாசிக்குச் செல்ல வேண்டுமென எண்ணுகிறான். ”நீ வேட்டையாடறது ஒரு மிருகம் அவ்வளவு தான். நீ வேட்டையாட இந்த காடு ஆயிரம் மிருகங்களைக் கொடுக்கும். எல்லாத்துக்கிட்டயும் கருணை காட்டிட்டு இருக்கக் கூடாது. நீ வாழறதுக்குச் செய்யுறது தான் வேட்ட. இது கொலை இல்லை…” இதுதான் தங்கப்பனின் எண்ணமும் வாழ்க்கைமுறையும். ஆனால் பிறப்பில் பளியனான வாசியால் அவ்வாறு இருக்கமுடியவில்லை. அவனுக்கு எல்லா விலங்குகளுக்கும், மரங்களுக்கும், வனத்திற்கும் ஆன்மா இருக்கிறது. வேட்டை நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தவனாக இருந்தாலும் எந்தவொரு விலங்கையும் வாசியால் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ள முடியாது. அதனால் ஆத்திரம் கொள்ளும் தங்கப்பன், வாசியைத் தன்னை அவமானப்படுத்தும் எதிரியாக எண்ணுகிறான். அதன் பொருட்டே அவன் இயல்பில் இருந்து விலகி இன்னும் மூர்க்கமாகி விடுகிறான்.
பளியங்குடியைச் சேர்ந்த சடையனின் மகனான வாசிக்கு, தன் தாய் சடையனை விட்டு விட்டு வேறு குடியைச் சேர்ந்த தங்கப்பனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவனின் சிறுவயதில் இருந்தே தங்கப்பனின் மற்ற மனைவிகள் அவனைத் தங்கள் மகனாகப் போற்றி வளர்த்தாலும், அவன் தன்னை ஒரு பளியனாகவே உணர்கிறான். மௌனியாகச் சுற்றித் திரியும் சடையனின் செயல்களை உற்றுக் கவனித்தவனாகவே இருக்கிறான். சடையன் தன்னிடம் எதையோ சொல்ல விழைகிறான் ஆனால் அதனை அவனால் ஒரு போதும் தன்னிடம் சொல்லமுடியவில்லை என்பதையும் உணர்கிறான். தக்க சமயத்தில் எங்கிருந்தோ வந்து யானைக்கூட்டத்திடமிருந்து தன்னைச் சடையன் காக்கும் போதுதான் அவன் எங்கும் செல்வதில்லை, தன்னுடனே இருக்கின்றான் என்ற தெளிவு கொள்கிறான். சிறுவனாய் இருந்தவன், ஜமீனும் அருகிலிருப்பவர்களும் தூண்ட, பனி போர்த்திய இரவு விறுவிறுப்படைய வனம் முழுக்க அதிர அதிர நடமாடிய இரவில் ஜமீனின் மனைவி மூலம் தன்னை முழு ஆணாக உணர்கிறான். அதுவரை தங்கப்பனை மைய அச்சாக வைத்து முன்னேறிக் கொண்டிருந்த நாவலை லாவகமாகத் தனது பிடிக்குள் கொண்டு வந்து விடுகிறான் வாசி. நிறை சினையான மானை வேட்டையாட வேண்டாம் என எதிர்க்கும் அவனைப் பொருட்படுத்தாமல் ஜமீன் அந்த மானைச் சுட்டு வீழ்த்த, தன் இடுப்பிலிருக்கும் கத்தியின் மூலம் அதன் வயிற்றைக் கிழித்து உள்ளேயிருக்கும் குட்டியை உயிருடன் மீட்டெடுக்கிறான். பின் வருபவை எல்லாம் வாசி முழுமையானதொரு பளியனாக, காட்டாளனாக, கருமாண்டியாக, கானகனாகப் பரிமளிக்கும் நிகழ்வுகள்தாம்.
புனைவின் கட்டமைப்பில் பெண்களுக்கான உலகு அதன் போக்கில் சித்தரித்திருக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. சடையனை விட்டுவிட்டு தங்கப்பனுடன் வாழும் செல்லாயி, பின்னொரு இரவில் பித்தனைப் போல் திரியும் சடையனை சந்திக்க நேர்கையிலும், தங்கப்பனுக்குப் பிறந்த பெண் குழந்தையைக் காட்டி, அதுவும் சடையனின் மகள் தான், அவளும் ஒரு பளிச்சிதான் என அவனிடம் கூறி உச்சி முகரக் கொடுக்கிறாள்.
அவள் தற்பொழுது தங்கப்பனின் மனைவியாக இருந்தாலும், சடையனை இன்னும் கணவனாகவே எண்ணி அவனுடனும் சேர்கிறாள். இறுதியில் அந்தக் குழந்தையிடம் “உனக்கு ரெண்டு அப்பனுக” என்று உள்ளன்புடனேயே கூறுகிறாள். வாசியின் இணையான குயிலம்மா, அழகான மான்குட்டி போன்ற சிறு பெண். பளிச்சி இறங்கி ஆட்டமாடிய பின், தனிமையில் களைத்துறங்கும் வாசிக்கு அருகில் சென்று அவனது தாகத்துக்குத் தண்ணீர் வைக்கிறாள், அந்த இரவில் அவன் மயக்கத்தில் இருக்கும் நிலையிலேயே அவனைத் தூண்டி அவன் உடல் வெப்பம் தணிக்கிறாள். பின் வாசி அவளையறிந்து சேர்ந்தபின், அவனது அம்மாமார்களோடும், தங்கப்பனோடும் இயல்பாக நெருங்கிவிடுகிறாள். ”கோபல்லபுரத்து மக்கள்” நாவலில், கோயில் காளையான ”காரி” கொட்டிலில் உள்ள ஒரு பசுவுடன் கூடுவதைப் பார்த்த நாயகி, பின் நாயகனுடன் தான் கூடும் சமயத்தில், அவனை காரியாகவும் தன்னைப் பசுவாகவும் நினைத்துக் கொள்வாள். அதே போன்றதொரு சித்திரம் “கானகன்” நாவலிலும் இருக்கிறது. வேட்டைக்குச் செல்லும் தங்கப்பன், இரு காட்டெருமைகள் கூடுவதைக் காண்கிறான். அதன் நினைவில், தான் முன்பு நோட்டமிட்டு வைத்திருந்த “சுப்பு” என்ற பெண்ணின் வீட்டிற்குச் செல்கிறான். பெரிதாய் முன்னறிமுகம் இல்லாவிட்டாலும் அவளும் இவனது வருகையை ஏதோவொரு வகையில் எதிர்பார்த்தே காத்திருக்கிறாள். தன் குழந்தையைத் தாயிடம் கொடுத்து விட்டு மிக இயல்பாக, ஒன்றாகக் குடித்தனம் நடத்துபவன் போல அவனுடன் முயங்குகிறாள். அந்த நள்ளிரவில் இரு காட்டெருமைகள் சரசம் கொண்டு விளையாடுவது போல அவர்கள் சீண்டிக்கொள்கின்றனர். பின்னர் அவளது வேட்டை விளையாட்டின் வேகத்திற்கு அவன் தன்னைக் ஒப்புக்கொடுத்து இருவரும் திருப்தியடைகின்றனர்.
இவ்வாறு பெண்கள் தங்கள் விருப்பம் போலக் கூடுகிறார்கள் என்று கட்டமைத்தாலும், நாவல் நாயக வழிபாடுக்கு வலு சேர்ப்பதாகவே தோன்றுகிறது. தங்கப்பனின் இரண்டாவது மனைவி சகாயமேரியின் பாத்திரம் இதற்கு உதாரணம். தங்கப்பனை மிகவும் விரும்புபவளாக அவள் இருந்தாலும், எதிர்பாராத விதமாக அன்சாரியுடன் கூடச் சேர்ந்து, பின் அது தொடர்ந்தபோதும் தங்கப்பனை விட்டு விலகாதவளாகவே இருப்பது ஏனெனப் புரியவில்லை.
சடையனை விட்டுவிட்டு மனதிற்குப் பிடித்ததால் தங்கப்பனுடன் வாழும் செல்லாயிக்கு இருக்கும் உரிமை, ஏனோ சகாயமேரிக்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் சினிமா பாரம்பர்யத்தில் தங்கப்பனின் நாயக பிம்பத்துக்கு எந்தக்குறையும் வந்துவிடக்கூடாது என ஆசிரியர் நினைத்திருப்பார் போலும்.
தங்கப்பன் சாவதுதான் முடிவு என்றாகி விட்டால், உண்மையில் கீழ்தேசத்திலிருந்து முட்ட முட்ட குடித்துவிட்டு சுயநினைவின்றி வரும் தங்கப்பனை புலி அடித்தவுடனேயே அவன் இறந்திருக்க வேண்டும். பின் அவன் உடல் காயங்கள் எல்லாம் ஆறி, வாசியுடன் மீண்டும் புலி வேட்டை நடத்தத் தயாராவது எல்லாம் தனியாகத் தொக்கி நிற்பது போலவேதான் தோன்றியது. அதனை வாசியின் பலிவாங்குதலுக்கான களம் என்று எடுத்துக் கொண்டாலும்கூட அதை இன்னும் நிறைவாக எழுதியிருக்கலாம் என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. நாவலில் மீண்டும் மீண்டும் “காட்டு விலங்குகள் எப்போது இயல்பு மாறும் என்பதைச் சொல்ல முடியாது, காடு அளப்பரிய ஆச்சர்யங்களைக் கொண்டுள்ளது” என்பன போன்ற விளிப்புகள் வருகின்றன. அவை வாசிப்பின் தொடர் கண்ணியை அறுத்துவிடும் அளவு இல்லையென்றாலும் சிறு சலிப்பை தருவதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் கறாரான எடிட்டிங்கிற்கான தேவை இருப்பதாகவே தோன்றுகிறது. அதனளவில் முழுமை பெற்று வெளிவந்த ஒரு படைப்பை “இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்” என்று கூறுவது அபத்தம். ஆனால் எந்தெந்த இடங்களில் நீச்சலடிப்பது சுளுவாக இருந்தது, எந்தெந்த இடங்களில் தரை தட்டியது என்ற வாசகனின் அனுபவத்தையும் படைப்பாளிகள் கேட்டுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாலேயே இவை சுட்டிக்காட்டப்படுகின்றன, மற்றபடி வலிந்து குறை சொல்வதற்காக அல்ல.
மொத்தமுள்ள 264 பக்கங்களையும் ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடும் படியான சுவாரஸ்யமான நடையில் இந்த “கானகன்” நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர் திரைத்துறையில் இருப்பதாலோ என்னவோ நாவலின் போக்கு ஒரு திரைக்கதையை வாசிப்பது போன்றே இருக்கிறது. இந்த நடை இலக்கியத்தில் சரியா தவறா என்றெல்லாம் தெரியாது, ஆனால் வாசிப்பவனின் கவனம் சிதறாமல் இறுதிப்பக்கம் வரை இழுத்துச் செல்லும் கலை கைவரப்பட்டிருக்கிறது என்ற வகையில் இந்த “திரைக்கதை” அமைப்பு இன்னும் புதிய, இளம் வாசகர்களை, வாசிப்பின் பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
காட்டு வாழ்வு, வனவுயிர்கள், வேட்டை, காதல், காமம் எனத் தொய்வில்லாமல் விறுவிறுவெனச் செல்லும் இத்தகைய நாவல் குறித்த அறிமுக நிகழ்வுகள் ஏற்கனவே இலக்கிய அறிமுகமுள்ள வாசகர்களிடம் நடப்பதற்குப் பதிலாக, சமகாலப் படைப்பாளிகள் பற்றி அறிமுகமில்லாத ஆனால் நிகழெதிர் காலத்தில் மிகப்பெரிய வாசகப்பரப்பாய் மாற வாய்ப்புள்ள கல்லூரி மாணவர்களிடையே நடத்தினால், சேத்தன் பகத், வைரமுத்து, கோபிநாத் புத்தகங்கள் தான் விற்கும், நம் புத்தகங்கள் லட்சங்களைத் தொடுவது கனவாகவே இருக்கும் என்ற நிலை மாறும். மிகக்குறுகிய காலத்தில் தனது வேலைப்பளுவிற்கு இடையில் இந்த நாவலை சிறப்பாக எழுதியிருக்கும் ”நண்பர் லக்ஷ்மி சரவணகுமார்” அவர்களுக்கும், நாவல் போட்டி அறிவித்து ஒரு நல்ல படைப்பு உரிய நேரத்தில் வெளிவர உத்வேகமாய் இருந்த ”நற்றிணை” பதிப்பகத்திற்கும், தனது முதல் பதிப்பாக “கானகன்” நாவலை பதிப்பித்திற்கும் ”மலைச்சொல்” பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
கானகன் (நாவல்) – லக்ஷ்மி சரவணகுமார்
மலைச்சொல் பதிப்பகம்
பக்கம்: 264, விலை: ரூ. 200
**********************
நன்றி : சொல்வனம் இதழ் http://solvanam.com/?p=34981

Thursday, August 21, 2014

சமாதானம்

ஏழெட்டு தவணை தவறிப் போனதற்காக
வீட்டுப் பெண்ணை கூப்பிட்ட
தண்டல்காரன் முன்
தலைகவிழ்ந்து நின்று விட்டு
அவன் போன பின்பு
“கண்டார*** மக உன்னால தான்டி எல்லாம்...
மினுக்கிட்டு முன்னால வந்து நிக்குறா!”
என்று மனைவியை அறைகிறான் சம்சாரி

”இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு தொங்கலாம்”
என்ற வார்த்தைகளை கடந்து செல்ல
ஏதாவதொரு சமாதானம்
தேவையாய் இருக்கிறது அல்லது
போதுமானதாய் இருக்கிறது

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

Wednesday, August 20, 2014

கனிந்ததொரு பார்வை

அவநம்பிக்கையின் நிழல்
படரத் துவங்கும் தருணத்தில்
எப்படியோ ஒரு பெருமழை
பொழிந்து விட்டுச் செல்கிறது

பருவம் பொய்த்து
வாய்பிளந்து கிடக்கும் நிலங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
அனிச்சையாய் ஒரு நேர்த்திக்கடன்
மனதிற்குள் வேண்டப்படுகிறது

இத்தோடு விலகிக் கொள்ளுங்கள்
என்ற அறிவிப்பை
எந்தக்கூட்டுப்பிரார்த்தனையும்
சொல்லிக் கொடுப்பதே இல்லை

யாரோ போகிற போக்கில்
பார்த்துவிட்டுச் சென்ற
ஒரு கருணைப்பார்வையில்
பட்ட மரங்கள் துளிர்விட்ட
கதைகள் நமக்குத் தெரியும் தானே !

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

Tuesday, August 19, 2014

வாதையின் இசை

சருகுகள் பூத்துக் கிடக்கும்,
மதிகெட்டான் சோலையில்
ஊர்ந்து ஊர்ந்து
தடம் தேடிச்செல்கிறது திசைமாணி

காலங்களின் ஈரம்
அடர்த்தியாய் இறங்கியிருக்கும்
விருட்சத்தின் பெருங்கிளைகள்
தோலுரித்துக் கொள்கின்றன

பொருள் விளங்கவியலா
ஆதிக்குடியின் பாடலாய் ஒலிக்கிறது,
தன் இணையை
துப்பாக்கிக் குண்டுக்குப் பறிகொடுத்த
பெயர் தெரியாத பறவையின் கேவலோசை

காலம், மொழி, பெயர் மறந்து
வாதையின் இசையை நுகர்ந்தபடி
திட்டுத் திட்டாய் உதிரப்போக்கை
முதன்முறையாக உணர்கின்றாள்
மலையக கிராமத்து சிறுமியொருத்தி

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

Tuesday, August 12, 2014

அந்தரங்க அடையாளம்


கடவுச்சொல்லை களவாட நடக்கும் 
முயற்சியின் எச்சரிக்கை சமிக்ஞை 
ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது

இவ்வளவு பதற்றத்துடன்
இத்தனை வரிசைவகுதி சேர்மானங்களில்
என் கதவுக்கு கள்ளச்சாவி முயற்சிக்கும்
பெயரிலியின் முகம் காண ஆசை

ப்ராக்ஸிகளின் தோலுறித்துக் காட்டும் 
தளங்களுக்கான பயனர் கணக்கு
என்னிடம் ஏற்கனவே இருக்கிறது

அடுத்தவர் அந்தரங்கத்தை 
எட்டிப்பார்க்கும் கிளர்ச்சியும்
பெயரிலியின் முகமூடியை 
உருவிப்பார்க்கும் கிளர்ச்சியும் 
இணை மாற்றாகுமா தெரியவில்லை

******

Friday, August 1, 2014

சமகால இலக்கிய கோஷ்டி

எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு பயங்கர காமெடி சீன் எல்லாம் நடக்கும்.

வழக்கமா, ஆறாவதில் இருந்து பனிரெண்டாவது வரைக்கும் எல்லா வகுப்பு மாணவர்களையும் நாலு ஹவுஸா பிரிச்சு போட்டி நடத்துவாங்க. டிஸ்ட்ரிக்ட் லெவல்ல, ஸ்டேட் லெவல்ல விளையாடுற சீனியர் அண்ணங்க, எல்லா வகுப்புலயும் ஸ்போர்ட்ஸ் பெர்சனா இருக்க பசங்களா பார்த்து ரெட் ஹவுஸ், ப்ளூ ஹவுஸ் இந்த ரெண்டுல ஏதாவது ஒரு ஹவுஸ்ல சேர்த்துக்குவாங்க. ஸ்கூல் லெவல்ல அவங்களுக்குள்ள தான் காம்படீஷன் எல்லாம். இதுல சேர்த்துக்காத, ஆனா ஸ்போர்ட்ஸ் ஆர்வமுள்ள, கொஞ்சம் திறமையுள்ள பசங்க மூனாவதா இருக்குற க்ரீன் ஹவுஸ்ல இருப்பாங்க. ஸ்போர்ட்ஸ்னா என்ன ஸ்பெல்லிங்னு தெரிஞ்சவங்க எல்லாம் இந்த மூனு ஹவுஸ்க்குள்ள்யே வந்துருவாங்க. கடைசியா இருக்க நாலாவது ஹவுஸ் எங்க செட். நாங்க எப்படின்னா, ஸ்போர்ட்ஸ் டே அப்போ கலர் கலர் கொடி எல்லாம நட்டு, பயங்கர ஏற்பாட்டோட மெயின் கிரவுண்டல போட்டி எல்லாம் நடந்துகிட்டு இருக்கும் போது, நாங்க முன் பக்கம் இருக்குற பிரேயர் கிரவுண்டுல டென்னிஸ் பாலை வச்சு, ஒன் பிட்ச் கேட்ச், தூக்கி அடிச்சா அவுட், இன்னும் சில பல நுனுக்கமான ரூல்ஸோட அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாட்டு இருப்போம். பி.டி. மாஸ்டர் அப்பைக்கப்ப கையில பிரம்பை வச்சுகிட்டு விசிலடுச்சுக்கிட்டே வந்து, எங்களை மெயின் கிரவுண்டு வரை துரத்திட்டு வரிசையா உக்கார வச்சு, போட்டிகளைப் பார்த்து கை தட்ட வச்சிடுவார். அப்படியும் கொஞ்ச நேரத்துல நாங்க ஒவ்வொருத்தரா எஸ்கேப் ஆகி வந்து, விட்ட இடத்துல இருந்து மறுபடியும் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிருவோம். வெள்ளைக்கொடிக்கு வேலை வைக்குற “ஒயிட் ஹவுஸ்” தான் எங்க ஹவுஸ்.

இது வருசா வருசம் நடக்குற கூத்து தான்.  நாங்க ஒன்பதாவது படிக்கும் போது நடந்த ஸ்போர்ட்ஸ் டேலயும் அதே மாதிரி பிரேயர் கிரவுண்டல கிரிக்கெட் ஆடிட்டு இருந்தப்போ, இரண்டு மூன்று தரம் பி.டி. மாஸ்டர் வந்து விரட்டி விட்டுட்டே இருந்தார். நாங்களும் மறுபடியும் எஸ்கேப் ஆகி விளையாட வந்துட்டே இருந்தோம். ஒரு கட்டத்துல கடுப்பான அவர், இன்னும் நாலஞ்சு வாத்தியார்களை கூட்டிட்டு வந்து சுத்தி வளைச்சு எங்களைப் பிடிச்சுட்டுட்டார். இந்த மாதிரி வெட்டியா சுத்திட்டு இருக்குற பசங்க எல்லாம் “ஒயிட் ஹவுஸ்”  தான்னு அவருக்கும் நல்லா தெரியும். எங்க எல்லாரையும் பார்த்து, “ஏண்டா மாடு மாதிரி வளந்துருக்கீங்கல்ல, ஒயிட் ஹவுஸ் வாங்க, ஒயிட் ஹவுஸ் வாங்கன்னு எல்லா போட்டிலயும் ஏலம் விட்டுட்டு இருக்காங்க, நீங்க ஒன்னுலயும் கலந்துக்காம இப்படி திருட்டுத்தனமா ஒன்னுத்துக்கும் உதவாத இந்த கிரிக்கெட்டை விளையாடிட்டு இருக்கீங்க” என்று ஏகமாய் திட்டினார். இதுக்கெல்லாம் அசந்து போறவிங்களா நாங்க, கம்முனு தலையைக் குனிஞ்சு சிரிச்சுட்டே நின்னோம். திடீர்னு என்ன நினைச்சாரோ தெரியல.. “அடுத்து 4 x 400 மீட்டர் ரிலே இருக்கு. ஒயிட் ஹவுஸ் சார்பா, உங்கள்ள நாலும் பேர் கலந்துக்குறீங்க. 400 மீட்டர் நாக்கு தள்ளி ஓட விட்டாத்தான் காம்படீசன்னா என்ன, அதுல ஜெயிக்கிறதோட அருமை உங்களுக்கெல்லாம் புரியும், நீங்க நிச்சயம் ஜெயிக்கப் போறதில்லை, ஒழுங்கா ஃபுல் லேப்பை முடிக்கிறீங்களா பார்ப்போம்”ன்னு சொல்லிட்டு கூடவே எங்கள்ள நாலு பேரைக் கையோட கூட்டிட்டுப் போய்ட்டார். நாங்களும் கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டே அவர் பின்னாடி போனோம்.

சரி, போட்டில கலந்தாகனும்னு முடிவாயிருச்சு. ஒரே வெறியோட ஜெயிச்சாகனும்னு சபதம் எடுக்குற ஆளுங்கல்லாம் நாங்கல்ல. ஓசி வாங்கிய ஸ்போர்ட்ஸ் ட்ராயரைப் போட்டுக்குட்டு, அது இப்ப அவுருமோ, அப்ப அவுருமோனு யோசிச்சுக்கிட்டே, அங்கிட்டும் இங்கிட்டு பராக்கு பார்த்துக்கிட்டு களத்துல எறங்கியாச்சு. போட்டில கலந்துக்குற மத்த ஹவுஸ் பசங்களுக்கும் ”யாருடா இவனுக, கோமாளிக” அப்படிங்கிற மாதிரி ஒரே சிரிப்பு தான். நாங்களும் பந்தாவா மசில்ஸ் எல்லாம் லூஸ் பண்னிட்டு  ”கெட், செட், கோ”க்கு ரெடியாகிட்டோம். விசில் ஊதி ஓட ஆரம்பிச்சவுடன், முதல்ல ஓடிட்டு இருக்கவன் கால் தடுக்கி கீழே விழுகுறது, பக்கத்துல ஓடுறவன் கண்ணுல பெப்பர் ஸ்ப்ரே அடிக்கிறது, அடுத்தவன் காலை வாரி விடுறது, எங்களுக்கு அது வரை நடந்த அவமானங்களை நினைச்சு, வீறு கொண்டு எழுந்து வெறித்தனமா ஓடுறது... இப்படி எந்த கிறுக்குத்தனங்களும் இல்லாமலே நாங்க ஓரளவுக்கு நல்லாவே ஓடி “ரெண்டாவது ப்ளேஸ்” வந்துட்டோம். எங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே பயங்கர ஆச்சர்யம். “பாருங்கடா, இந்த பையனுகளுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்” டைப் லுக்குகள் தான் கிரவுண்டு முழுக்க இரைந்து கிடந்துச்சு. நாங்களும் கொஞ்சம் கூச்சத்தோட அப்படியே விலகி வந்துட்டோம்.

பரிசு கொடுக்கும் போது, எங்க ஒயிட் ஹவுஸுக்கு மொத்தமே அந்த ஒரே ஒரு பதக்கம் தான். “சீனியர்ஸ் 4 x 400 மீட்டர் ரிலே சில்வர் மெடல் வாங்க ஒயிட் ஹவுஸ் வாங்க.... யாராவது வாங்கப்பா !” னு தொண்டைத்தண்ணி வத்த மைக்குல கத்திட்டு இருக்கும் போது, நாங்க அதெயெல்லாம் கண்டுக்காம, மறுபடியும் ஒன் பிட்ச் வச்சு, அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாண்டுட்டு இருந்தோம். அப்புறமா சேம்பியன்ஷிப் அடிச்ச ஹவுஸ்ல இருந்த சீனியர் அண்ணுங்க வந்து, நல்ல ஸ்டெமினாவோடதாண்டா ஓடுறீங்க, ஒழுங்கா டெய்லி ப்ராக்டீஸ் வாங்க, அடுத்த வட்டம் எங்க ஹவுஸ்ல சேர்த்துக்குறோம்”னு சொன்னாங்க. நாங்க கெத்தா “வருசம் பூரா மாங்கு மாங்குனு ப்ராக்டீஸ் பண்ணி, ஒரே ஒரு நாள் வீரத்தை காமிக்குறதெல்லாம் எங்களுக்கு சரியா வராதுன்ணே, டெய்லி ஜாலியா ஒன் பீட்ச் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிற ஒயிட் ஹவுஸ் தான்ணே எங்க சய்ஸ்”னு சொல்லி அவங்களை அனுப்பி வச்சுட்டோம். “உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா”னு துப்பிட்டு அவங்களும் போய்ட்டாங்க.

சமகால இலக்கியத்தில், ”நீங்க அந்த கோஷ்டியா, இந்த கோஷ்டியா?”னு கேக்குறவங்களுக்கெல்லாம், ”நானெல்லாம் ஒயிட் ஹவுஸ்ண்ணே!” என்பது தான் என் பதில்.

******

Sunday, July 27, 2014

நினைவுப் பறவை

மதுரைக்குப் பயணம் என்று சொன்னதுமே, அவன் மனமும் உடலும் தன்னிச்சையாக கல்லூரிக் காலத்திற்குத் திரும்பி உற்சாகத்தை வாரி இறைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டது. தான் படித்த கல்லூரியில் கருத்தரங்கு ஒன்றிற்கு தலைமை தாங்குவதற்காக ஒரு நாள் பயண அட்டவனை. காலையில் விமானத்தில் மதுரை சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அன்று இரவே சென்னை திரும்புவதாக ஏற்பாடு. இது போல எத்தனையோ பயணங்கள், எத்தனையோ நகரங்களுக்குச் சென்றாகி விட்டது, இருந்தும் மதுரை என்றவுடன் ஒரு வாரமாகவே அந்த ஊர் பற்றிய நினைவுகளே சுழன்று கொண்டிருந்தது. விமானம் விட்டு இறங்கியதுமே மதுரைக்கான பிரத்யேக வெயில் அவனை அரவணைத்துக் கொண்டது. வீடு விட்டால் பள்ளி, பள்ளி முடிந்தால் வீடு என்று சிறு நேர்கோட்டில் முன்னும் பின்னும் மட்டும் சென்று கொண்டிருந்த பள்ளிச்சிறுவனை, நான்காண்டு கால விடுதி வாழ்க்கையின் மூலம், உலகத்தை பரந்த விழிகளால் பார்க்கச் சொல்லிக் கொடுத்த ஊர். அந்த வகையில் தன் சுயத்தை வெளிக்கொணர்ந்த களமான மதுரைக்கு எப்போதும் அவன் மனதில் தனியாக ஒரு இடமுண்டு. பின் கோடை தகிக்க, அனல் காற்று சுழற்று அடிக்க, மனதுக்குப் பிரியமான மதுரை அவனை வரவேற்றது.
     
இது போன்றதொரு தகிக்கும் பின் கோடையில் தான் அவளை முதன் முதலாக சந்தித்தான். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்குச் செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தவனை இரண்டு கண்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. பேருந்து வர தாமதமாகவே அவன் அருகிலுள்ள பெட்டிக்கடைக்கு சென்று வார இதழ் வாங்குவது, அருகில் இருந்த திண்டில் அமர்வது என்று ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் இங்குமங்கும் அலைந்து கொண்டே இருந்தான். அப்போதும் அந்த கண்கள் விடாமல் அவனை மிரட்சியுடன் பின் தொடர்ந்து கொண்டு, அவனது இருப்பை நோட்டமிட்டபடியே இருந்தன. சிறிது நேரத்தில் அதனை அவனும் உணர்ந்து, அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்க்கவும், அந்த மருண்ட விழிகளுக்கு சொந்தக்காரியான அவள் அதிக பதற்றமாகி பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பேருந்து வந்தது. அதிக கூட்டமில்லை. அவன் காலியாய் இருந்த இருக்கைகளில் அமராமல், பின் படிக்கட்டில் சாய்ந்தபடி பயணம் செய்து வந்தான். அவளும் இருக்கையில் அமராமல் முன் படிக்கட்டுக்கு அருகில் கம்பியை இறுகப் பிடித்தபடியே வந்தாள். அவ்வப்பொழுது அவள் அவனைப் பார்ப்பதும், அவன் தன்னை பார்ப்பது தெரிந்ததும் தலையை கவிழ்த்திக் கொள்வதுமாக பயணம் தொடர்ந்தது. திருப்பரங்குன்றம் நிறுத்தம் வந்து அவன் இறங்கும் போது பொழுது இருட்டத் துவங்கியிருந்தது, அவளும் வேகமாக இறங்க எத்தனிக்கையில் கால் இடறிக் கீழே விழப் போனாள். பின் அவளாக சுதாரித்துக் கொண்டு வேகமாக இறங்கினாள். கல்லூரிக்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் உள்ளே நடந்து செல்ல வேண்டும். அவன் முன்னே செல்ல அவளும் தயங்கிய படியே சில அடிகள் தள்ளி பின்னால் நடந்து வந்தாள்.

அதனை கவனித்த அவன் நின்று பின்னால் திரும்பி, “என்ன ஃப்ர்ஸ்ட் இயரா?” என்றான்

அவன் கேட்ட குரலில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டத்துவங்கியது.

“ஏய், ஏ.. என்னாச்சு.. இப்போ ராகிங் பண்ற மூடெல்லாம் இல்ல, சும்மா  பேரத்தான் கேட்டேன். அதுக்கேன் அழுற?”

“இல்ல....” வார்த்தை முடிவதற்குள்ளாக தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

“அம்மா தாயே.... என்னாச்சு? சரி ஹாஸ்டல் தானே, சீக்கிரம் போமா தாயே !” விலகி வழி விட்டு நின்றான்

அவள் அந்த இடத்திலிருந்து அசையாமல் அழுது கொண்டே இருந்தாள். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண், அதுவும் இது வரை யாரென்றே ஒருத்தி, இரண்டு அடி தூரத்தில் நின்று தன்னைப் பார்த்து அழுது கொண்டிருக்கவும்.. அவளைப் பார்க்க பாவமாய் போய்விட்டது.

என்ன சொல்லி அவளைத் தேற்றலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவளே பேசினாள்.

“இல்ல, வந்து... சிவகங்கைல இருந்து வாரேன். பஸ் ப்ரேக் டவுன்.... லேட்டாயிடுச்சு.... வார்டன் உள்ள விடமாட்டாங்க...”

அவள் மென்று முழுங்கி சொன்னதை அவன் ஒருவாறு கோர்த்துப் புரிந்து கொண்டான்.

“அட, இதுக்குப் போயா இவ்வளவு ஆர்ப்பாட்டம். வா, நான் கொண்டு போய் விட்றேன்”

அவன் சொல்லிக் கொண்டு முன்னால் நடக்க, அவள் தொடர்ந்து பின்னால் வந்தாள்.

“பேரு என்ன?”

“ஃப்ர்ஸ்ட் இயர் சிவில்... ச்சீ கண்ணாத்தாள்”

அவன் லேசாக சிரித்துக் கொண்டே.... “ஊரு சிவகங்கையா இருக்காதே, பக்கத்துல எந்த கிராமம்...”

“ஆமா, காணாடுகாத்தான்.... வார்டன் ஹாஸ்டலுக்குள்ள அலோ பண்ணுவாங்களா, பயமா இருக்கு”

“உங்க சேர்மனை வந்து கூட்டிட்டு போகச் சொல்றேன், போதுமா?”

“ம்ம்ம்....”

“என்னை உனக்கு தெரியுமா என்ன, பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நோட் பண்ணிட்டே இருந்த?”

“இல்ல, ஃப்ரஷர்ஸ் டே அன்னிக்கு நீங்க தானே வெல்கம் ஸ்பீச் கொடுத்தீங்க... மாட்டுத்தாவணில இருந்து தனியா பஸ் ஏறி வந்து பழக்கமில்லை, லேட்டா வேற ஆகிருச்சு. அதான் உங்களைப் பார்த்தோன்ன அப்படியே ஃபாலோ பண்ணி, அப்படியே காலேஜ் வந்துறலாம்னு.....”

”நல்லா வந்த போ !”

பேசிக்கொண்டே வந்தவன், வழியில் இருந்த காயின் பூத்தில் இருந்து கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு ஃபோன் அடித்து, அவனது வகுப்புத் தோழியான ஸ்டூடண்ட் சேர்மனை ஹாஸ்டலுக்கு வெளியே வரச் சொன்னாள். 
அவள் வந்ததும், ”ஏ, என்னடா யாருக்குடா பாடிகார்டா வர்ற” என்றாள்

“ஏ, லூசு... எனக்குத் தெரிஞ்ச பொண்ணு... ஊருலருந்து வர லேட்டாயிடுச்சு, உங்க குண்டம்மா உள்ளே விடாதுனு ஒரே அழுகை... அதான் ஹாஸ்டல் ரௌடி நம்மாளு தான், நான் சொல்லி உனக்குப் பாதுகாப்பு தர்றேன்னு கூட்டி வந்தேன்... நம்ம பொண்ணுமா, பாத்துக்கோங்க”

“சொல்லிட்டேல்ல, ஸ்பெசல் ராகிங் கிளாஸ் எடுத்துருவோம்”

“ஹே ரௌடி... ஒழுங்கா பார்த்துக்கோ... சரி ஜூனியர், ஒன்னும் கவலைப்படாதே, இவ பார்த்துப்பா”

ஒருவழியாக ஆறுதல் சொல்லி வழியனுப்பிவிட்டு, அவன் பாய்ஸ் ஹாஸ்டலுக்குக் கிளம்பினான். அவள் காய்ந்த கண்ணீர்த் தடத்தை துடைத்தவாறே அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குள் சென்றாள்.

அவன் இறுதியாண்டு படித்த அந்த ஒரு வருடம் முழுமைக்குமே அவன் அவளுடன் பேசிக்கொண்டது மொத்தம் நூறு வார்த்தைகளுக்குள் தான் இருக்கும். ஆனால் அவன் செய்த அறிமுகத்தால் அவளுக்கு ஹாஸ்டலில் சிறப்பு அந்தஸ்த்து கிடைத்தது. ராகிங்கில் இருந்து முழுதாய் தப்பிக்க முடிந்தது. சீனியர்கள் கூட்டத்தில் சரிசமமாய் உட்கார்ந்து கதையடிக்க முடிந்தது. சொல்லப்போனால் வகுப்பில் அவன் வழக்கமாய் செய்யும் ஏதாவது ஒரு குட்டிக்கலாட்டாவிற்கு நேர்வினை, எதிர்வினை எல்லாம் ஹாஸ்டலில் அவளை வைத்து நடத்திக் காட்டப்பட்டது. மொத்தத்தில் அவனைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அவனது வகுப்புத் தோழிகள் மூலமாக அவ்வப்பொழுது அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல அவள் விடுதியில் செய்யும் சிறுபிள்ளைத்தனங்கள் முதல் வியாழக்கிழமை காலை உப்புவாவிற்கு பயந்து இராகவேந்தர் விரதம் இருப்பது வரை, ஹாஸ்டல் டேவிற்கு அவள் வரைந்த ரங்கோலி முதல் அவன் பிறந்தநாளுக்காக ஹாஸ்டலில் அவன் தோழிகள் எல்லாம் அவளது முகத்தில் கேக் அப்பி கொண்டாடியது வரை எல்லாம் அவனுக்கும் தெரிந்து இருந்தது. அவ்வப்பொழுது கல்லூரிக்குள் எங்காவது கண்ணுத்தட்டுப்பட்டு ஒருவரையொருவர் சந்திக்கும் போது சிந்தும் ஸ்நேகமான புன்னகையில், உள்ளன்பை பரிமாறிக்கொண்டனர். ஏதோ நீண்ட நாள் பழகிய பிரியம் போல இருவரின் உள்ளத்திலும் அன்பு நீக்கமற நிறைந்திருந்தது. பிரத்யேகமாய் முயற்சி எடுத்து ஒருவரையொருவர் சந்திக்கப் பிரயத்தனங்கள் செய்யாமலே, அவ்வாறான சந்திப்புகள்  நிகழாமலே கூட இருவரும் ஒருவரின் அருகாமையை மற்றவர் எப்போதும் உணர்ந்தே இருந்தனர்.

அவனுக்கு கல்லூரி இறுதியாண்டு முடியும் சமயத்தில், அவனது வகுப்புத் தோழிகள் எழுதுவதற்காக அவனது “ஆட்டோகிராப்” டைரியை பெண்கள் விடுதிக்கு எடுத்துச் சென்றிருந்தனர். அந்தப்புத்தகம் திரும்பி அவனிடம் வந்த போது, அதனை யதார்த்தமாக திருப்பிக் கொண்டிருந்தான். அதில் ஒரு தேதியில் வட்டமிட்டு, அதில் சிறிய தென்னை மரம் வரைந்து அதன் கீழ் இரண்டு கண்கள் வரைந்து இருந்தது. அவனுக்கு யோசிக்கவெல்லாம் தேவையிருக்கவில்லை. அவளை தான் முதன் முதலில் பார்த்த நாளும், அவளது மருண்ட கண்களும், அவற்றிலிருந்த தவிப்பும் சட்டென அவன் நினைவுக்கு வந்தன. இமைகளை மூடுவதைப் போல மெதுவாக, மிக மெதுவாக டைரியை மூடி வைத்தான்.

கல்லூரி முடிந்த பிறகு, வாழ்க்கைக்கான தேடலில் அவளுடனான தொடர்பு முற்றிலும் விடுபட்டுவிட்டது. எங்கேனும் அதிசயமாக சிவகங்கை என்றோ, கண்ணாத்தாள் என்றோ காதில் விழுந்தால், முதலில் அவள் மருண்ட கண்களும், அந்த பேருந்துப்பயணமும் தான் ஞாபகம் வரும். இன்று மதுரை பயணம் என்றவுடனேயே, ஏதோ அவனை அறியாமல் பழைய ஞாபகம் கிளரப்பட்டு விட்டது. மனதின் ஏதோவொரு மூளையில் “இன்று அவளை சந்திப்போம்” என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. கல்லூரி நெருங்க நெருங்க படித்த காலத்தின் நினைவுகள் அலையடித்துக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக கல்லூரியை அடைந்து கருத்தரங்கிற்கு வளாகத்தில் நுழையுமுன்னர் நிகழ்ச்சி நிரலுக்கான அட்டவனை அவனுக்குத் தரப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த ஓர் அமர்விற்கு கருத்துரை வழங்குபவர்களின் பெயர்ப்பட்டியலில் கண்ணாத்தாள் என்ற பெயரைப் பார்த்ததும் அவனது படபடப்பு இன்னும் சற்று அதிகமாகியது. அவளை முதன்முதலாக பார்த்த நாள் முதல் அவனது மனதில் பசுமையாய் பதிந்திருந்த அந்த களங்கமில்லாத முகமும், மருண்ட கண்களுமே அவனை முழுமையாக ஆக்கிரமித்தது. நேரம் செல்லச்செல்ல ஏனோ மனதின் ஓரத்தில், பெயர்ப்பட்டியலில் இருக்கும் கண்ணாத்தாள் அவளாக இருக்ககூடாது என்று மனது பிரார்த்தனை செய்யத்துவங்கியது.

**********
நன்றி: மலைகள்  - http://malaigal.com/?p=5124

Thursday, May 29, 2014

சமிக்ஞை

பேச்சரவம் முற்றிலும் நின்று போன கிராமத்தில் மனிதர்களின் இயக்கம்  ஊரெங்கும் வியாபித்திருக்கும் கருவேலங்காடுகளை மையமாய் வைத்தே சுழன்று கொண்டிருந்தது. கூர்மையான முட்களையுடைய கிளைகளின் மூலம் காற்றின் ஈரத்தையும் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக் கொண்ட அம்மரங்கள்,சதா வெக்கையை கக்கிக் கொண்டிருந்தன. முன்பு செழிப்பாய் இருந்த காலத்தில் நெல் போட்டு அறுத்த நன்செய் நிலங்கள் ஓய்வெடுக்கும் பருவங்களிலும்மழை பொய்த்துப் பெருதானியங்கள் தோற்று பஞ்சம் எட்டிப் பார்க்கும் கடும் பொழுதுகளிலும் கூட பெருமுயற்சிகளோ முதலீடுகளோ இன்றி சிறுதாணியங்கள் விளைவித்துத் தந்து குடி காத்த புன்செய் நிலங்களும்,இப்போது கருவேலங்காடாய் மாறிக் கிடந்தன.

கருவேலம் மரங்களை வெட்டி விறகாக்கி அவற்றை எரித்து கரிமூட்டமிட்டு நகரங்களுக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் வரத்துவங்கிய முதல் நாளன்று மறைந்து போன சிட்டுக்குருவிகளை அதன் பின் எப்போதும் அந்த கிராமத்தில் காணமுடியவில்லை. ஊரை அடைத்துக் கொண்டிருந்த கருவேல மரங்கள் கரிக்கட்டைகளாய் மாறிக் கொண்டிருக்கையில்காற்றின் பரப்புகளில் எல்லாம் கரித்துகளின் நெடி முழுமையாய் போர்த்திச் செல்ல துவங்கியிருந்தது. குத்துயிராய் போராடிக் கொண்டிருந்த ஒரு சில நிலங்களும் அடுத்தடுத்த மகசூல்களில் சாவிகளை பெற்றெடுத்துதாங்கள் தற்கொலை செய்து கொண்டதை சொல்லிவிட்டுத்தான் மரித்தன என்றாலும் அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் குடியானவர்கள் இல்லை. மாறாக நிமித்தப் போக்கைக் காட்டி எச்சரித்த அயலூர்க்காரர்களையும் விரக்தியுடன் விரட்டியடித்தனர். ஊரெங்கும் பரவியிருந்த கரித்துகள்கள்காலம் தப்பியேனும் பெய்யும் சில பருவமழைகளையும் உள்ளே வரவிடாமல் மூடி போட்டு விட்டன. அதன் பின் ஊரின் விளைநிலங்களையெல்லாம் மொத்தமாய் சுடுகாடாய் மாற்றி எப்போதும் பிணங்களற்ற கட்டைகளை எரித்து கரியாக்கும் நிகழ்வுகள் தாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அழிந்து கொண்டிருக்கும் ஊருக்கான சகல சமிக்ஞைகளும் கனவில் தெரியத் தொடங்கிய நாளில் கிராமத்து வயசாளிகளின் தூக்கம் முற்றிலுமாய் அற்றுப் போனது. அவர்கள் இரவைக் குடித்தபடி ஊளையிடும் நாய்களுக்கு காவல் இருக்கத் துவங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. தவறியும் கண்ணசரும் அதிகாலைப் பொழுதுகளில் கொடுங்கனவுகளின் வதைக்கும் நிழற்படங்கள்,தாங்கள் அனுபவிக்கும் நரகம் இன்னும் விரியப் போகிறது என்பது போலவும் மரணத்திற்கும் தங்களுக்குமான தூரம்நாவரண்டு தேடியலையும் போது கண்கட்டு வித்தை காட்டும் கானல்நீரைப் போலவும்நுரையீரல் துடிக்க தொடர்ந்து ஓடி எட்டிப்பிடிக்க முயலும் தொடுவானம் போலவும் துன்புறுத்தின. முன்பொரு காலத்தில் மிளகாய்ச்செடிக்குக் களையெடுக்கையில் கையில் பட்ட தளிரைப் பத்திரப்படுத்தி தனி பக்குவம் பார்த்துவயிற்றுப் பாட்டுக்கு கொண்டு சென்ற நீராகாரத்தைக்கூட ஆசையாய் அதன் மீது உமிழ்ந்து வளர்த்தெடுத்து,அது விருவிருவென வளர்ந்து இரண்டொரு ஆண்டுகளில் அத்துவான பொட்டக்காட்டில் குடைபிடித்து நிற்கும் ஒற்றை மாமரமாக சிரித்திருந்ததையும்அரசங்குட்டியை விடவும் வேப்பங்கன்று தடித்திருக்கிறது என்று அரசுக்கு தனி எருகிட்டு அது சத்துப் பிடித்ததும் இரண்டையும் பிணைத்து விட்டு விழாக்காலங்களில் வழிபாட்டிற்காயும்வேலை முடித்த காலங்களில் இளைப்பாறுதலுக்குமாய் பயன்படுத்திய கதையையும்இன்னும் அதுபோன்ற பலநூறு நினைவுகளையும் செறிக்கவும் முடியாமல் ஞாபக இடுக்குகளில் தொலைக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

அயல்தேசத்தைவை போல தோற்றங்கொண்ட பறவைகளின் பெருங்கூட்டம் வரண்டு கிடக்கும் ஊரணியின் கருவேலம் மரங்களில் அடைந்திருந்த விடிகாலைப் பொழுது வேறு மாதிரியாக தோற்றங்கொண்டிருந்தது. ஊரைப் பிடித்திருந்த கிரகணம் விடுபடுவதற்கான அறிகுறி என்றும் அந்தப் பறவைகள் தங்களுடன் கருமேகங்களைக் கொண்டு வந்திருப்பவை என்றும் அவை மழையாய் பொழிந்து ஊரின் கரிய முகமூடி கிழிக்கப்படும் என்றும் நம்பிக்கைகள் துளிர்விடத்துவங்கின. அந்தப்பறவைகளும் வந்தது முதல்,மயான அமைதியில் ஆண்டாண்டுகளாய் உறைந்திருந்த கிராமத்தை தங்களது ஓயாத சத்தத்தினால் கொத்தியவாறு இருந்தன. அவை இனப்பெருக்கம் செய்வதற்கான சூழலை அந்த கிராமத்து தட்பவெப்பத்தில் உணர்ந்திருக்கின்றன என்று தோன்றும் படியாக கருவேலம்மரங்களின் கிளைகளெங்கும் கூடுகள் கட்டுவதற்கான முனைப்பில் இருந்தன. நீர்க்குளியல் இல்லாத பொழுது தங்கள் உடலின் சூட்டைத் தனித்துக் கொள்ள மண்குளியலெடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த அந்தப் பறவைகள் ஊரெங்கும் படர்ந்திருக்கும் கரிய மண்ணைப் பார்த்து திகைத்தன. பின் அந்த நிறம் தான் அந்த மண்ணின் இயல்பு என்ற எண்ணங்கொண்டவைகளாய் நீண்டு கூர்மையாய் இருக்கும் தங்கள் கால் நகங்களால் மண்ணை பறிக்க ஆரம்பித்தன.

காலையில் வெள்ளை நிறமாய் கருவேலமெங்கும் படர்ந்திருந்த பறவைக்கூட்டத்தைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சும்அடக்கவியலா ஆர்வமும் கொண்டிருந்த அவ்வூர் மக்கள்மாலைப்பொழுது சாய்கையில் அவை ஊரணி மரங்களில் அடைந்து கொண்டிருப்பதைக் கண்டு உடல் வியர்ப்பதும் கால் தடுமாறுவதுமாக முற்றிலும் அதிர்ந்தனர். தங்களுக்கான விடியல் ஒரு போதும் வரப்போவதில்லைதற்பொழுது பார்ப்பது இனி வரும் காலங்களில் தாங்கள் எதிர் கொள்ள வேண்டிய கோர நிகழ்வுகளின் இன்னொரு காட்சிப் படிமம் தான் என்பதை உணர்ந்து தலை கவிழ்ந்தவாறு தத்தம் வீடுகளை நோக்கிச் சென்றனர். அது பற்றி அனைத்தும் அறிந்தோ இல்லை எதுவும் அறியாமலோ பெரும்சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன இறகுகள்,சிறகுகள் என உடல் முழுதும் கரியப்பிய பிசுபிசுப்பில்காலனைப் போன்று கொடூரமாய் காட்சியளித்த அப்பறவைகள்.

நாட்கள் செல்லச் செல்ல அந்தப்பறவைகள் இருக்கும் பகுதியில் இருந்து கொடிய துர்நாற்றம் வீசுத்துவங்கியதுஅந்தப்பறவைகளின் சத்தம் நாராசமாய் ஒலிப்பது போலிருந்தது. அது எப்போதும் மரண ஒலத்தை ஒத்திருப்பதாக உணர்ந்த மக்கள்அவற்றை தங்கள் ஊரிலிருந்து விரட்டியடிப்பதற்கான முடிவினை எடுத்தனர். மறுநாள் விடியலில் ஊரணியின் கருவேலங்களை வெட்டிவிறகைத் தீயிட்டு கரிமூட்டமிட வேண்டும் எனவும் நெருப்புக்குப் பயந்து அந்தப் பறவைகள் மீண்டும் அங்கோ சுற்றுப் புறத்தில் வேறு எங்குமோ தங்காது என்றும் தங்களுக்குள் தீர்மாணித்த தினத்தின் நள்ளிரவில் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் படையெடுத்து வந்து வீட்டின் உட்புற பரண்களிலும்படுக்கைகளுக்கு அடியிலும் உரி கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் தாழிகளிலும் குடுவைகளிலும்அடுப்படிகளிலும்கொட்டில்களிலும் ஆக்கிரமிக்கத் துவங்கின. குடியானவர்கள் மயக்கம் கொண்டவர்களைப் போல உறங்கிக் கொண்டிருக்க,திண்ணையில் வெறித்தபடி அதனைக் கண்ணுற்ற முதியவர்கள் இனி வேறு மாதிரியான நரகம் காத்திருக்கிறது என்றும் அது ஜென்ம ஜென்மத்திற்கும் தங்கள் சந்ததியினரைத் தொடரும் தொற்றாக இருக்கும் என்றும் உணரத் துவங்கினர். அவற்றை வாய் திறந்து சொல்லி சிறு எச்சரிக்கையாவது செய்யலாம் என்று எண்ணியவர்களின் நினைவும் சொல்லும் வெவ்வேறாய் பிரிந்து அவர்கள் அது வரை காத்துவந்த அத்தனை மௌனத்திற்கும் சேர்த்து மொத்தமாய் பெருங்குரலெடுத்து கத்தத் துவங்கினர். அது மனம் பிறழ்ந்தவர்களின் கூச்சலாக வெளி வந்தது.

முன்பொரு காலத்தில் சம்சாரியாய் இருந்தவர்களாதலால்பறவைக்கூடுகளை முட்டைகளோடும் குஞ்சுகளோடும் எரிப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை. எனவே பறவைகளை முதலில் அப்புறப்படுத்தி விட்டு குஞ்சுகளை பெருவலி ஏற்படா வண்ணம் கொன்று புதைக்க முடிவெடுத்தனர். அவ்வாறே,கரிப்பிடித்து கோர உருவம் கொண்டு அழிவின் முன்னோட்டமாய் தோற்றம் கொண்டிருந்த பறவைகளை நெருப்புப் பந்தங்களைக் காட்டி விரட்டி விட்டு கூடுகளை அடைந்தனர். அங்கே கடின ஓடில்லாமல் மெல்லிய தொலியுடன் கூடிய முட்டைகளையே அந்தப்பறவைகள் பெரும்பாலும் இட்டிருப்பதையும் அவையும் அடைகாக்கப்படும் பக்குவம் முழுவதும் இல்லாமல் பாதி அடையில் தொலி கிழிந்து கருச்சிதைவான பிண்டங்களாய் கூடுகள் தோறும் நிறைந்திருப்பதைக் கண்டனர். அப்படியும் தப்பிப் பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அங்ககீனமாய் விகாரமாய் காட்சியளித்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அங்கே வீசிய துர்நாற்றம் தங்கள் மயக்கமடையச் செய்யும் என்று தோன்றவே உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். அந்தப்பறவைகளின் பிணி குறித்து அச்சம் கொண்டு வெளிறிய பார்வையுடன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி முத்திரையிட்ட வாகனமொன்று மணியொலிக்க வந்தது.


விவசாயம் பொய்த்துப் போய் பஞ்சம் பிழைக்கவும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலங்களை எடுத்துக் கொண்டு அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்குமென்ற உறுதிப்பத்திரம் வாசிக்கப்பட்ட நாளில் நீண்ட யுகங்களுக்குப் பிறகு தங்களுக்கான காலம் மீண்டும் வந்திருப்பதாகவே அவர்கள் மனதார நம்பினர். ஒப்பங்களிட்டு தாரை வார்த்துவிட்டு,  நாளது தேதியில் சம்பளத்துடன்பயணப்படியும்பஞ்சப்படியும் கிடைப்பது பற்றி அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கையில் இரண்டு உலைகள் நிறுவதற்கான வரைவுகளுடன் அரசாங்க இயந்திரம் தன் இரும்புக் கரங்களைப் பதித்து வானம் தோண்ட பள்ளம் பறிக்கஅது காற்று வெளியெங்கும் கரிய நெடியை புழுதி வாறித் தூற்றியது.

(வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டிக்காக எழுதியது:  http://vettibloggers.blogspot.in/2013/11/shortstory5.html )
******