Monday, October 27, 2014

மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்


மதுரையில் நேற்று நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய விழா, மாலை நான்கரை மணி வரை சிறப்பாகவே நடந்தது. காலை நிகழ்வில், அனைத்து பதிவர்களும் மேடையேறி தங்களைப் பற்றியும், தங்களது வலைப்பூவைப் பற்றியும் அறிமுகம் செய்தனர். சுமார் இருநூறு பேர் அளவிற்கு இருந்த கூட்டத்தில் பத்து இருபது பேர்களைத் தவிர யாரையும் தெரியவில்லை. “என்னடா மதுரைக்கு வந்த சோதனை, பத்து வருசமா இந்த இணையத்துல தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்... ஒருத்தர் பேரும் கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே” என்று லேசாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இவர்கள் எல்லாம் நாம் தமிழ்மணத்தில் இருந்து ”வாலண்டரி ரிடயர்மெண்ட்” வாங்கி வந்த பிறகு அட்மிஷன் போட்டு இப்பொழுது கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் என்று. 

கலகக்காரர்கள் எல்லாம் பதிவுலகை காலி செய்து விட்டு சென்று விட்டதாலோ அல்லது நம்ம ஊர் மதுரையின் வீரத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவோ தெரியவில்லை, நிகழ்வு மிக நேர்த்தியாகவும் அமைதியாகவும் நடந்தது. ஒரு சண்டையில்ல, சச்சரவில்லை... ஒட்டு மொத்த மதுரை மாநகரமே நேற்று “அமைதிப்பூங்கா”வாக மாறிவிட்டது. நிகழ்ச்சி எந்த அளவுக்கு அமைதியாக சென்றதென்றால் வேடிக்கை பார்க்கும் நாம் கொஞ்சம் சத்தமாக சிரித்தால் கூட, நிகழ்ச்சியை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் நம் பக்கம் திரும்பி “என்ன தம்பி பிரச்சனை... நிகழ்ச்சியை கவனிங்க!” என்று அறிவுறுத்துவது போலத் தோன்றும் அளவுக்கு.

புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக வெளிவரும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கையில் “இந்த புத்தகங்களை எல்லாம் எழுதுவது யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்க்ள், எப்படி இத்தனை புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டே இருக்கிறார்கள், இவர்களுக்கான வாசகப் பரப்பு எங்கிருக்கிறது” என்று பெரும் மலைப்பாக இருக்கும். நேற்றைய விழாவில் இந்த சந்தேகங்களுக்கான விடை கிடைத்தது. வலைப்பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்யும் போது, சிலர் இருபது முப்பது புத்தகங்கள் வரை வெளியிட்டு தமிழுக்குத் தொண்டாற்றுவதாகக் கூறினர். எனக்குக் கொஞ்சம் “கேராகி” விட்டது. சுதாரித்துக் கொண்டு ”ஜிகிர்தண்டா” குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்

மதிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். சும்மா சொல்லிக்கூடாது... சப்ஜெக்ட் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் சாலிடாக ஒரு மணி நேரம் பேசினார். வாட்ஸப்பில் பிட்டுப் படம் அனுப்புபவர்களும் வலைப்பதிவர்களும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல, பார்வையாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றார்.

பின்பு வலைப்பதிவர்கள் இயக்கி, நடித்த “சில நொடி ஸ்நேகம்” என்ற குறும்படம் வெளியிடலும், திரையிடலும் நடந்தது. அதன் பின், வலைப்பதிவர்கள் எழுதிய நான்கு புத்தகங்களும் வெளியிடப்பட்டது. 

நண்பர்கள், தங்களது வீட்டுத் திருமண விழாவினைப் போல இந்த வலைப்பதிவர் திருவிழாவை அக்கறையோடும் பொறுப்புடனும் நடத்தினர். தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட விழாக்குழுவினருக்கு வாழ்த்துகள். இணையத்தின் வழி நிகழ்ச்சி நேரலையிலும் ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியின் அரங்க அமைப்பும், அலங்காரமும் மிக நேர்த்தியாக இருந்தது. ”போடியம்” முதல் “ப்ரஜக்டெர் வைக்கும் ஸ்டூல்” வரை அனைத்து ஏற்பாடுகளிலும் இருந்த ப்ரஃபஸனிலிஸம் தனித்தன்மையாகத் தெரிந்தது.  சிறப்பாக அரங்க அமைப்பு செய்த நண்பர் சுப்புரமணி மற்றும் அவரது குழுவினரின் பணி பாராட்டத்தக்கது. அனைவருக்கும் காலையில் மதுரை ஸ்பெஷல் “ஜிகிர்தண்டா”வும், மதிய உணவாக மதுரை மண்ணின் சௌராஸ்ர மணத்திலான நிறைவான உணவும், மாலையில் சூடான டீயும், வடையும் வழங்கப்பட்டது. ”வடை’ கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்று வந்தேன். விழாவை சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

*******

8 comments:

 1. அருமையாக நிகழ்வினைப் பதிவு செய்துள்ளீர்கள்
  (முதல் பாதி நேரம் மேடையிலேயே இருக்க நேர்ந்ததும்
  பின் பாதி நேரம் நிகழ்வுகள் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாலும்
  பெரும்பாலான பதிவர்களைச் சந்தித்துப் பேசமுடியாமல் போனது)
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மதுரையில் நடந்த வலைப் பதிவர் சந்திப்பைப் பற்றி ஒரு இளைஞனின் பார்வையில் மனம்விட்டு சிறப்பாக எழுதி இருந்தீர்கள். வாழ்த்துக்கள்! உங்களைப் போன்ற இளைஞர்கள் வலைப் பதிவில் இன்னும் எழுத வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றவர்கள் விருப்பம். நானும் விருப்ப ஓய்வு பெற்றவன்தான். நன்றி!

  உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

  த.ம.3

  ReplyDelete
 3. எப்படி என் ‘பொட்டி’க்குள் விழாமல் தப்பித்தீர்கள்?

  ReplyDelete
 4. வாழ்த்திய உங்களுக்கு சக 'வடை'ப் பதிவாளர் என்ற முறையில் என் நன்றி !
  த ம +1

  ReplyDelete
 5. நாங்கள் புதியவர்கள்...உங்களைப் பற்றி இப்போது அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி...எனது ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டில் நீங்களும் கலந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 6. நாங்கள் புதியவர்கள்...எனது ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டதற்கும் நன்றி

  ReplyDelete
 7. மதுரை விழா மூலமாக அனைவரும் ஒன்றுசேர வாய்ப்பு கிடைத்தது. தங்களது பதிவைக் கண்டேன். நல்லமுறையில் பதிந்துள்ளீர்கள். வலை நட்பு தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete