Saturday, March 17, 2012

போட்டோ கமெண்ட்ஸ் – சச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல்

மூன்றாம்கோணம் மின்னிதழில் வெளிவந்துள்ள எனது "போட்டோ கமெண்ட்ஸ்"
நன்றி: மூன்றாம்கோணம்
******

Wednesday, March 7, 2012

பன்னிரெண்டு மணிநேரத்தில் பதவி உயர்வு பெறுவது எப்படி!

சென்ற வார இறுதியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தேர்வுக்காக சென்னைக்குச் சென்றேன். பணிபுரியும் துறையில் பதிவு உயர்வுக்கான தேர்வு. தமிழகம் முழுமைக்கும் சென்னை தான் தேர்வு மையம். தேர்வு ஞாயிற்றுக்கிழமை. நானும் மதுரையில் உடன் பணிபுரியும் நண்பரும் ஒரு நாள் முன்னமே சென்று பிரிப்பேர் செய்வதாய் திட்டம். எனவே வெள்ளி இரவு “நெல்லை எக்ஸ்பிரஸில்” மதுரையிலிருந்து கிளம்பினோம். இரயிலுக்குள் நுழையும் வரை எல்லாம் கலகலப்பாகத் தான் சென்று கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் “கம்பார்மெண்ட்” முழுக்க நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த எங்கள் மக்கள் தான். அதுவும் ஆளுக்கொரு புத்தகமும் கையுமாய் ரொம்ப தான் சீரியஸாக படித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு கொஞ்சம் “திக்” என்று தான் இருந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “சென்னை போற வரைக்கும் இவனுக யார்ட்டயும் எக்ஸாம் பத்தி மட்டும் எதுவும் வாயக் கொடுத்துட கூடாது. பயபுள்ளய்க நம்ம கான்ஃபிடன்ஸ குறைச்சுப்புடுவானுக” என்று கண்களாலேயே பேசிக் கொண்டோம். ஆனா விதி வலிய வந்து வாலிபால் ஆடக் கூப்பிடும் போது, நாம சும்மா இருக்க முடியுமா!

சம்பிரதாய நலம் விசாரிப்புகள் முடிந்த பிறகு, வந்தவர்கள் மெதுவாக ஒவ்வொரு அஸ்திரமாக எடுக்கத் துவங்கினார்கள்.

“அப்புறம் பாஸ், பிரிப்பரேஷன் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?”

”ம்ம்ம், பரவால்ல.... அப்புறம் முடியெல்லாம் ரொம்ப கொட்டிடுச்சு போல, இப்போ தான் ஆபீஸர் மாதிரியே இருக்கீங்க” என்று பேச்சை மாற்றிப் பார்த்தாலும்... ஹூம் ஒரு பயனும் இல்லை, சுற்றி சுற்றி தேர்வு பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, வேறு வழியில்லை. உண்மையை ஒப்புக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.

“பாஸ், நாங்க ரெண்டு பேரும் ஒரு கொள்கையோட எக்ஸாம் எழுத வந்திருக்கோம். எங்க லட்சியம் எக்ஸாம்ல பாஸ் ஆகி, பிரமோஷனோட வெளியூர்க்கு ட்ரான்ஸ்ஃபர்ல போகுறது இல்ல, சுத்தமா பிரிப்பேர் பண்ணாட்டியும் நாளைக்கு ஒரு நாள் மட்டும் படிச்சு, ரொம்ப கேவலப்படாம கௌரவமான மார்க் வாங்கி ஃபெயில் ஆகிறது தான் எங்க லட்சியம். எங்க குறைந்த பட்ச திட்டத்தையும் குலைக்குற மாதிரி கேள்வி கேட்டு நோகடிக்காதீங்க” என்று சரண்டர் ஆகிடோம்.

எல்லாரும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எங்கள் மீது எய்திவிட்டு அமைதியாகி விட்டார்கள்.

அப்பாடா, இப்போதைக்கு எஸ்கேப்.

அப்படியே சீனைக் கட் பண்ணா, அடுத்த ஷாட்.... சென்னை மீனாம்பாக்கம் எங்கள் துறையின் பயிற்சி மைய விடுதி.

ஒரு அறைக்கு நான்கு பேர், மதுரையில் இருந்து சென்ற நாங்கள் இருவர், அப்புறம் நாகர்கோவிலில் இருந்து இன்னும் இரண்டு பேர் ஏற்கனவே அங்கே தங்கி இருந்தனர். அறைக்கு வந்து குளித்து முழுகிவிட்டு, மொந்தை மொந்தையாய் போட்ட சில பல தோசைகளை முழுங்கி விட்டு வந்து செட்டில் ஆனோம்.

நாகர்கோவிலில் இருந்து வந்தவர்கள்,

“சார், எக்ஸாம் சிலபஸ் இருக்கா?”

நாங்கள் எங்களுக்குள் சிரித்துக் கொண்டோம், “ பாருங்க, என்னமோ படிக்காம வாரோமேனு ஃபீல் பண்ணீங்க, இவங்களப் பாருங்க, சிலபஸ் கூட என்னனு தெரியாம வந்திருக்காங்க, நாம எவ்வளவோ பரவால்ல” என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு ஒரு வெற்றி நடையுடன் சிலபஸை அவர்களிடம் கொடுத்தேன்.

அங்கே தான் ஒரு பேரிடி. அவர்கள் இருவரும் ஜஸ்ட் சிலபஸை மட்டும் பார்த்துக் கொண்டு ஒவ்வொரு டாபிக்கா முழுவதுமாக ஒப்பிக்கத் துவங்கி விட்டார்கள். நடுவில் காற்றிலே படம் எல்லாம் போட்டு விளக்கம் வேறு.

நான் மெதுவாய் அவர்களிடம் போய்,
“பாஸ், இப்போ தான் படிக்க ஆரம்பிக்கப் போற மாதிரி சிலபஸ் எல்லாம் கேட்டீங்க, இப்ப என்னடானா காத்துல படம் எல்லாம் வரையுறீங்க” என்று மெதுவாய் கேட்க, அவரோ கூலாக
“இல்ல, திருவனந்தபுரத்துலயே மாடல் டெஸ்ட் வரைக்கும் எல்லாம் முடிச்சுட்டமேனு தான் எதும் கொண்டு வரல. சிலபஸ் இருந்தா சொல்லிப் பார்க்கலாமேனு தான் கேட்டேன், தப்பா பாஸ்” என்று அப்பாவியாய் கேட்டார்.

“என்ன பாஸ், திருவனந்தபுரமா, என்ன சொல்றீங்க”

“என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க, கடந்த ரெண்டு மாசமா திருவனந்தபுரம் ட்ரெயினிங் செண்டர்ல இந்த எக்ஸாமுக்காக பயிற்சி வகுப்புகள் நடந்ததே. மதுரைல இருந்து கூட கொஞ்சம் பேர் வந்து தங்கிப் படிச்சாங்களே. ஏன் உங்களுக்குத் தெரியாதா?”

“அடப்பாவிகளா, இதெல்லாம் வேற நடந்திருக்கா..” என்று நான் அதிர்ச்சியாக, உடன் வந்த மதுரை நண்பர் “ஏன் தெரிஞ்சிருந்தா நீங்க என்ன போய் படிச்சிருக்கவா போறீங்க” என்று மடக்கினார்.

நானும், “இல்ல, சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்கு கேட்டேன்” என்று சமாளித்தேன்.

நாகர்கோவில்க்காரரோ, “ஏன் ஜி, ஜெனரல் நாலேஜ் எல்லாம் வேற இருக்கா, அது சிலபஸ்ல இல்லவே இல்லயே, ஒரு வேளை நாங்க பிரிப்பேர் பண்ன சிலபஸ் தப்பா?” என்று பதறினார்.

நான் அவரை ஆசுவாசப்படுத்தி, “இல்ல பாஸ் பதறாதீங்க. அது எதுவுமே தப்பே இல்ல, இந்த ரூமுக்கு நாங்க வந்து சேர்ந்தோம் பாருங்க அது தான் தப்பு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, “இல்ல, இல்ல, யூ கண்டினியூ காத்துல ட்ராயிங்” என்று ஜகா வாங்கிக் கொண்டேன்.

என் கூட வந்த நண்பர் என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்க்க... சற்று நேரத்தில் எங்கள் உள்ளேயிருந்த தோசை மெல்லமாய் எங்களை ஆட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

“நோ... நாளைப்பின்ன ஆஃபிஸுக்குப் போனா, நம்ம பத்தி பேசாம, நம்ம வாங்கப் போற நெகடிவ் மார்க் பத்தி தானே பேசுவாங்க, அதுவும் நமக்கு நேரா பேசினாக் கூட பரவால்ல,ஏதாவது பன்ச் கொடுத்து சமாளிச்சுக்களாம். போகவிட்டு பின்னால பேசுவாங்களே...” என்று ஒரு பக்கம் மனசு அலாரம் அடித்தாலும், நாளைக்கு வரப்போற அவமானத்தை விட இன்னைக்கு வர்ற தூக்கம் தானே பெரிதாகத் தெரிந்தது. உலகின் தொன்று தொட்டும் வழங்கும் நிதர்சனமும் அது தானே.... சோ... ஓவர் டூ ஸ்லீப்...

அடுத்த சீன் வரும் போது, மதியம் சாப்பாடு முடிந்து, இரவு சாப்பாடு முடிந்து, பால் பழம் எல்லாம் முடிந்து, விடுதி வளாகத்தில் ஒரு சிறு நடைப்பயணமும் முடிந்திருந்தது.

“என்னங்க, இப்படி ஆகிப்போச்சு... இன்னைக்கு ஃபுல்லா புக்கை தொடவே இல்லையே... வெறும் பேப்பரைக் குடுத்துட்டு வந்தா தான், நெகடிவ் மார்க்ல இருந்து தப்பிப்போம் போலயே!”

“அப்போ நாம வாங்கப் போற மதிபெண்ணுக்குப் பேர் முட்டை”

“ஓகோ, அது அப்படி ஆகிடுமோ. சரி இப்போ மணி ஒன்பதரை... நாளை காலை ஒன்பதரைக்கு எக்ஸாம். ‘பன்னிரெண்டு மணிநேரத்தில் பதவி உயர்வு பெறுவது எப்படி”னு ஒரு திட்டம் வகுக்குறோம். எக்ஸாம் பாஸ் ஆகுறோம். ரிசல்ட்டோட ட்ராஸ்ஃபர் வரும் போது வேணாம்னு எழுதிக் கொடுக்குறோம்” என்று தொடை எல்லாம் தட்டாமல் ’சும்மா’ சபதம் மட்டும் எடுத்துக் கொண்டு படிக்க உக்கார்ந்தோம்.

உடனேயே நாகர்கோவில்காரர் எழுந்து வந்து விட்டார்.

“என்ன பாஸ், என்னமோ புக் எல்லாம் படிக்கிறீங்க... இதெல்லாம் சிலபஸ்ல இருக்கா. கொடுங்களேன், படிச்சுட்டுத் தர்றேன்”

“இந்தாங்க எல்லாமே இம்பார்ட்டெண்ட் கொஸ்டீன்ஸ், மிஸ் பண்ணாம படிங்க” என்று நாங்க வைத்திருந்த எல்லா புத்தகங்களையும் அவரிடம் கொடுத்து விட்டோம்.

இது வேலைக்காகாது. சரி, படுக்கலாம் என்று முடிவுக்கு வந்து படுக்கைக்குப் போகையில் மதுரை நண்பர் ஒரு வார்தை சொன்னார்,
”ஆனா, நாம கிரேட் தாங்க. ஒரு பத்து நிமிஷம் படிச்சதுக்கே, இரண்டு மாசமா இராப்பகலா கரைச்சு குடிச்சவங்களையே கலவரப்படுத்திட்டோம்ல, இதுவே நமக்கு வெற்றி தான். வாங்க தூங்கலாம்”

அப்படியே ஆனந்தமாக தூக்கம் வந்தது.

மறுநாள் ஞாயிறு காலை, தேர்வு அறை...

”படித்த படிப்பு வேண்டுமானாலும் எப்போதேனும் நம்மை கைவிடலாம், ஆனால் நம் உள்ளுணர்வு எப்பவும் நம்ம கைவிடாது” - இது தான் தேர்வு அறைக்குள் நுழையும் போது எனக்குத் தோன்றிய ”ட்விட்”.. ச்சீய் ... தத்துவம். பிறகென்ன “புறப்படு தோழா, போர்க்களம் சென்று புகுந்து விளையாடு!”

ஓ.எம்.ஆர். ஷீட் ல வரிசையா புள்ளி வச்சு கோலம் போட வேண்டியது தானே... மனசுக்கு பிடித்த பேட்டர்னை நினைத்துக் கொண்டு, ரேண்டமாக ஷேடு அடித்துக் கொண்டிருந்தேன். பின்னால் இருந்து யாரோ சுரண்டும் உணர்வு.

பார்த்தால், பின்னால் உக்கார்ந்து இருந்தவர் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு, என் விடைத்தாளை காண்பிக்கும் படி செய்கை செய்தார்.

எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. நம்மையும் நம்பி ஒரு ஜீவனா... சரி அப்படியே எல்லா விடைகளையும் அவருக்கு காண்பித்தால் என்ன என்று கூட தோன்றியது. ஆனால் ரிசல்ட் வரும் போது அவர் என்னை மனதுக்குள் எப்படி எல்லாம் திட்டுவார் என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். எமோஷன் ஆட்டோமேடிக்காக கட்டாகி விட்டது.

மனதை திடப்படுத்திக் கொண்டு,
“சார், உங்க முயற்சி எல்லாம் சரி தான், ஆனா செலக்ட் பண்ண ஆள் தான் தப்பு. என்னைப் பத்தின உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்கு, நீங்க உங்க பின்னாடி உள்ள ஆள்ட்ட எதுக்கும் முயற்சி செய்து பாருங்களேன்...” என்று திசை திருப்பினேன்.

அவர் பின்னாடி உக்கார்ந்திருக்கும் ஆள் யார் தெரியுமா, என் கூட வந்த மதுரை நண்பர் தான். பின்ன நமக்கு வந்த ஆனந்தக் கண்ணீர் அவருக்கும் கொஞ்ச நேரம் வரட்டுமே!

இப்படியாக வெற்றிகரமாக தேர்வெழுதி விட்டு எங்கள் பராக்கிரமங்களைப் பேசிக் கொண்டே மதுரை வந்து சேர்ந்தோம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதின தேர்வு முடிவுகள் என்னவாயிற்று என்று தானே கேட்கிறீர்கள். முறைப்படி முடிவுகள் வர இன்னும் மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் எனக்கு இப்போதே தெரியும்.

ஊளளளளளளளளளளளளளளளளளளளளளளள................................

******