Monday, September 18, 2017

கல்வி – மரணம் – பாடம்

தமிழகத்துக் கல்விமுறை என்பது மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது, பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவனும் தொடர்ந்து எட்டாவது வரை பள்ளிக்கு வந்து, தொடர்ச்சியாக கல்விச் சூழ்நிலையில் இருந்து, முடிந்தமட்டும் கற்று, தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ள வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால், அவனைக் கல்விச் சூழலில் இருந்து விலக்கி, வொர்க் ஷாப் வேலைக்கோ, களையெடுக்கவோ அனுப்பி விடாமல், அடுத்த மாதமே மறு தேர்வு வைத்து, அந்த கல்வியாண்டே அவனுக்கு அடுத்த வகுப்பில் படிக்க வாய்ப்பு வழங்குவது. சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாணவனும், கல்வியின் மூலம் ஏதாவது ஒரு நிலையில் தனக்கான ஊன்றுகோலைப் பிடித்து மேல் எழுந்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை இது. பள்ளிக்கல்வியில் வெகு சுமாராகப் படிக்கும் எத்தனையோ மாணவர்கள், தொடர் வாய்ப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்கு இந்த இலகுவான கல்வி முறை தான் காரணம். தகுதியில்லை என பெரும்பகுதியைக் கழித்துக் கட்டிவிட்டு சிறந்ததற்கு மகுடம் சூட்டும் முறை அல்ல இந்த கல்வி முறை, மாறாக சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்கி அனைவரையும் மேலே அழைத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கம்.

நூற்றாண்டுகளாக சமூகத்தின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடும் இந்த அடிப்படையில் தான். ஒரு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது, அதில் ஊட்டச்சத்து இல்லாமல் இளைத்திருப்பவனுக்கு கொஞ்சம் க்ளுகோஸ் கொடுத்து அவனையும் தேற்றி, பந்தய தூரத்தை கடக்க வைப்பது.

போதுமான நீண்ட கால அவகாசமும், சரியாக முன்னெடுத்துச் செல்கின்ற தலைமையும் இருந்திருந்தால், ”நீட்” தேர்வையும் எதிர்கொள்ள தமிழகம் தயார் ஆகியிருக்கும். ஆனால் நீட் எதிர்ப்புக்கான காரணம் அதுவல்ல. பலதரப்பட்ட பண்பாடு, மொழி, பொருளாதார, சமூக நிலை உள்ள பரந்துபட்ட தேசத்தை, ஒற்றைக் கொள்கை மூலம் அடைக்க நினைக்கும் முட்டாள்த்தனத்துக்கு எதிராக கிளம்பு எதிர்ப்பு இது. ஏற்கனவே கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மாநிலங்களை, தங்கள் பிடிவாதமான கடிவாளப் பார்வை கொண்டு, ஒடுக்க நினைக்கும் அடக்குமுறையாகத் தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மாநில இனங்களின் அடையாளங்களை அழிப்பதன் மூலமே, அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து இருக்குமானால், அது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையாக நிச்சயம் இருக்காது.

சமீப காலத்தில், “நீட்” தொடர்பாக, மத்திய மாநில அளவில் நடந்த கலந்துரையாடல்கள் எதுவுமே ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லவில்லை. நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்று தெரிந்தே, மாநில வழிக்கல்விக்கு 85 சதம் ஒதுக்கீடு அளித்தது, மத்திய அமைச்சர்களின் பொய்யான வாக்குறுதிகள், மாநில அமைச்சர்களின் டெல்லி பயண நாடகங்கள் இப்படி எல்லாமே வெறும் கண் துடைப்பாகவே அமைந்தன. உடைத்து சொல்வதானால், இவையணைத்தும் மக்களை ஏமாற்றும் வேலையின்றி வேறு இல்லை. மத்திய மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து தவறான வழிகாட்டுதல்களை செய்து கொண்டே இருந்தார்கள். எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை மக்களின் மனதில் போலியாக விதைத்துக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் தங்கள் பதவிகளுக்காக நடந்த பேரங்களை எல்லாம், நீட் குறித்த விவாதம் என்று பரப்பினார்கள். விளைவு, நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு உயிர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றுக் கணக்கான பிள்ளைகள், மனக்குமுறலோடும் ஆற்றாமையோடும் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பெரும நிலை அரசியல் இப்படி தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இதற்கான உடனடித் தீர்வு கண்களுக்குத் தென்படுவது போல இல்லை. வழக்கம் போல, அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கத் தான் வேண்டியிருக்கிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு, நாமெல்லாம் கிள்ளுக் கீரைகள், இங்குள்ள மக்கள், அவர்களுக்கான முதல்தர குடிமகன்கள் இல்லை. மாநிலத்தில் இருப்பவர்களுக்கோ தங்கள் நாற்காலிகளைக் காத்துக் கொள்ள வேண்டிய பரிதாமான நிலை. இது மேலே இருப்பவர்களுக்கு மிக வசதியாய் போய்விட்டது. நினைத்தபடி எல்லாம் அடித்து ஆடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அரசன் குடிகளை நினைக்க மறந்தாலும், குடியானவன் உழுவதை நிறுத்தக் கூடாது என்பது தானே விதி. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய சிறுமியின் மன உறுதியை, ”மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போவேன் என்று சொல்லிட்டு இருந்த, இப்போ மாட்டுக்கு வைத்தியம் பார்க்கப் போறியா” என்பது போன்ற எந்த சுடு சொல் வீழ்த்தியதோ தெரியவில்லை.  அவளின் மனவருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு, அவளுக்கு இருக்கும் மறு வாய்ப்புகள் பற்றி, மாற்றுப் பாதைகள் பற்றி மனம் விட்டு உரையாட, அந்த நேரத்தில் அவள் அருகில், அணுக்கமான ஒரு ஆசிரியரோ அல்லது அவள் உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடத் துணை நின்ற ஏதேனும் அமைப்புகளோ இல்லாமல் போனார்களே என்ற ஆதங்கம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

கிராமப்புற, விளிம்பு நிலை மாணவர்களிடம் பேச வாய்பு கிடைக்கும் போதெல்லாம், நாம் நினைக்கின்ற கனவு தேசம் என்று ஒன்று இல்லவே இல்லை. இங்கே ஏற்றத்தாழ்வுகளும், அவநம்பிக்கைகளும், அவமானங்களும் எப்பொழுதும் நம் வழியை மறித்து நிற்கவே செய்கின்றன. அதற்காக எல்லாம், மனம் நொந்து, உங்கள் பயணத்தை இடையில் நிறுத்திவிடாதீர்கள். உங்கள் தொடர் முயற்சிகள் எப்பாடுபட்டேனும் திறக்காத கதவுகளைத் திறக்க வைக்கும், இல்லையென்றால், உங்கள் பயணத்துக்கான மாற்றுப் பாதையும்  இருக்கலாம், சரியான திசையைக் கண்டறிந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதே சாதிப்பதற்கான வழி. முழுதும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் தேவையில்லை. ஏற்கனவே இதைப் போன்ற இடர்களை எல்லாம் உடைத்து பலர் முன்னேறி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உங்கள் பயணத்தில் சந்திப்பீர்கள், அவர்களது வழிகாட்டுதல் உங்களுக்கு தக்க நேரத்தில் இளைப்பாறுதலைத் தரும். எப்படி இருந்தாலும், முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தன் வாழ்நாள் கனவான மருத்துவப்படிப்பு அநியாயமாக மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட அந்தச்சிறுமியின் மனநிலையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறியும் ஆற்றல் ஒருவருக்குமில்லை. ஆனாலும், இந்தப்பிரச்சனை தான் என்றில்லை, எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களின் தயக்கங்களை விலக்கி, அவர்கள் மனதில் உள்ளதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு அவர்களுடன் உரையாடினால், அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் பல விபரீத நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க முடியும் என்று தோன்றுகிறது. இன்று அந்தச் சிறுமிக்காக கண்ணீர் சிந்துகிற ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. ஒரு மரணத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்களைப் பற்றி பேச எதுவுமில்லை.

(நன்றி மலைகள் : http://malaigal.com/?p=10748)
******