Monday, April 10, 2017

சிறுகதைப் பயிலரங்கு – பிப்ரவரி 2017 குறித்த அனுபவங்கள்



உயிரோடை மற்றும் காலச்சுவடு இணைந்து நடத்திய, உண்டு உறைவிட வசதியுடன் கூடிய கட்டணமில்லா, மூன்று நாள் பயிலரங்கு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளயத்தில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெற்றது. அதில் பங்கேற்பாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் காணக்கிடைக்காத ஒழுங்கமைவுடனும், துறைசார் தகைமையுடனும் சிறப்பாக நிகழ்ந்தது இப்பயிலரங்கு. மூன்று நாட்களும் நம் மனதுக்குப் பிடித்த, மதிப்பிற்குரிய பேராசிரியர்களுடனும், பிரியமான நண்பர்களுடன் சுற்றுலா சென்று வந்த கல்லூரிக்காலங்களை மீட்டெடுத்தன.

மொத்தம் அனுமதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் 15 பேர்களுக்குள் தான். பெரும்பாலும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். இவர்களுடன் கலந்துரையாடி, இவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்காக வந்த எழுத்துலக வல்லுநர்கள் எட்டு பேர். யோசித்துப் பாருங்கள், 15 பேருக்குப் பயிற்சியளிக்க 8 பேர், அதுவும் மூன்று நாட்கள். மிகச்சிறப்பான அரிய வாய்ப்பு. பங்கேற்பாளர்கள் இதனை முடிந்தமட்டும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  மூன்று நாட்களில் வெவ்வேறு அமர்வுகளில் ஆளுமைகள் ஒவ்வொருவருடனும் நேருக்கு நேர் விவாதித்து பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான களமாக அமைந்தது. மொத்த நிகழ்வுகளுக்கும் முதுகெலும்பாக நின்று செயலாற்றியவர் கவிஞர் சுகுமாரன் அவர்கள். அவரின் ஞாபகத்திறனும், அர்ப்பணிப்பும் மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு விவாதங்களின் போதும் மிகச்சரியான உதாரணங்களையும், விளக்கங்களையும் சொன்னது மட்டுமல்லாமல், பேச்சுகள் திசைமாற நேர்கையில், நேர்கோட்டிற்கு இழுத்து வந்து நிகழ்வினை செம்மையாக்கியவர் அவர் தான். ஒரு பேராசிரியருக்கே உரிய அக்கறையுடனும், கண்டிப்புடனும் பயிலரங்கை சிறப்பாக வழிநடத்தினார்.

எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், எளிமையின் மறு உருவம். பங்கேற்பாளர்கள் கேட்ட மிக சாதாரணமாக கேள்விக்களுக்கும் பொறுமையாகவும், விளக்கமாகவும் சிரித்த முகத்துடன் பதில் கூறியபடியே இருந்தார். தூரத்தில், உயரத்தில் வைத்து அண்ணாந்து பார்க்கும் எழுத்தாளுமை எழுத்தாளர் பெருமாள் முருகன். அவருடன் சமமாக அமர்ந்து விவாதிக்கின்ற வாய்ப்பை இப்பயிலரங்கன்றி வேறு எப்படி பெற்றிருப்போம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும், கவிஞர் க.மோகனரங்கனின் விஷய ஞானம் பிரமிக்க வைத்தது. கவிஞர் சக்திஜோதி  மற்றும் எழுத்தாளர்கள் சீனிவாசன் நடராஜன், கே.என்.செந்தில், குமாரநந்தன், களந்தை பீர் முகமது, ஸ்டாலின் ராஜாங்கம், பழ.அதியமான் ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

அறிமுகப்படலத்திற்குப் பின்னான முதல் அமர்வில், பயிலரங்கிற்கான நோக்க உரையை எழுத்தாளர் பெருமாள் முருகன் நிகழ்த்தினார். கிரியேடிவ் ரைட்டிங் என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை என்று தான் நம்புவதாகவும் ஆனால் எழுதும் ஆர்வமுள்ள இளையோருக்கு சில அடிப்படைகளை விளக்குவது பயனளிக்கும் என்றும் விளக்கினார். தமிழ் சிறுகதையின் வரலாறு மற்றும் துறை சார்ந்த முன்னோர்கள் பற்றிய அறிவு, புதிய தற்காலத்திற்குண்டான கருப்பொருட்களை எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் கூறினார். ஐம்பது வருடங்களுக்கு முன் பூடகமாய் சொன்ன ஒரு விஷயத்தினை இன்று மிகச்சாதாரணமாய் வெளிப்படையாய் சொல்ல முடியும் எனும் போது, என்ன விஷயங்களை எழுத்தாளர்கள் எப்படி எழுத்தில் கொண்டு வரலாம் என்று சில உதாரணங்களுடன் விளக்கினார்.

கு.ப.ரா வின் “விடியுமா” சிறுகதையில், தன்னை கொடுமைப்படுத்தி வந்த கணவன் இறந்த தினத்தில் மனைவிக்கு மனதுக்குள் எழும் மகிழ்ச்சி, அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அவள் படும் அவஸ்த்தை ஆகியவற்றை இன்றைய தினத்தின் சிறுகதையான வாமு.கோமு வின் ”மயிலாத்தா திருவிழாவிற்குப் போனாள்” கதையில் “ஒன்னும் சரிப்படாட்டா உனக்கு சோத்துல விஷம் வச்சிருவேன்” என்று வரும் உரையாடலோடு ஒப்பிட்டுப்  பேசினார். அகம் சார்ந்த உணர்வுகள் எழுத்தாளனுக்கு உள்ளிருந்து தான் தோன்றவேண்டும் ஆனால் புறம் சார்ந்து எப்படி வெளிப்படுத்துவது என்பதனை பயிற்சி மூலம் பெற முடியும் என்றும் கூறினார்.

இரண்டாம் அமர்வு, தமிழ் சிறுகதைகளின் வரலாறு பற்றி பேராசிரியர். மதிவாணன் பேசினார். மு. வரதராசனார் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்த தனக்கு ஏற்பட்ட போதாமை, பின்பு ஜெயகாந்தனிடம் ஈர்ப்பு, அது தனக்குள் இன்று வரை நீடித்து இருப்பது பற்றிய பிரமிப்பு ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மற்ற வடிவங்களுடன் ஒப்பிடும் போது, சிறுகதை வடிவம் தமிழுக்குப் புதிது என்றும், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் பற்றியும், முதல் உரைநடை நூலிலேயே வழக்குச் சொற்கள் வந்துவிட்டன என்றும் கூறினார். அச்சு இயந்திரத்தின் வருகை, நாட்டின் எழுத்தறிவு சதவீதமும் அதிகரிப்பு ஆகியவற்றிற்குப் பின், சமூக அரசியல் சார்ந்த படைப்புகள் வரத் துவங்கின. பண்டித மொழியிலிருந்து எளிய எழுத்துமுறை பரவலான வாசிப்புக்கும் வித்திட்டது. ”தமிழ் சிறுகதை வரலாறும் , வளர்ச்சியும்” என்ற புத்தகம் 1980 வரையிலான படைப்புகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அதை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அனுபவம் கிடைக்குமென்றும் கூறினார்.

தமிழ்சிறுகதை உலகின் பிதாமகனாக வ.வே.சு அய்யரைக் குறிப்பிடலாம். சிறுகதையிலும் கவிதைச் சுவை இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர். சிறுகதை உலகின் பெரிய பாய்ச்சல் என்பது புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. அவர் எழுதிப்பார்க்காத வகைமைகளே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு இன்றும் மேற்கோள் காட்டக் கூடிய அனைத்து வகைமைகளிலும் அவர் எழுதியிருக்கிறார். அது போல, சமூக சீர்திருத்தக் கதைகளை  எழுதிய அ.மாதவய்யர் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெறும் கேட்லாக் பத்திரிகை என்ற நிலையிலிருந்து எழுத்தையும் வியாபாரமாக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர் எஸ்.எஸ்.வாசன். பின்னாளில் அதனைத் திறம்பட செயல்படுத்தியவர் சி.பா. ஆதித்தனார். 1929-30 வாக்கிலேயே வணிக எழுத்து, இலக்கிய நயம் உள்ள எழுத்து என்ற வகைகள் வந்துவிட்டன. கு. அழகிரிசாமியை கரிசல் இலக்கியத்துக்கான முன்னோடி எனலாம். தி.ஜானகிராமனின் “ரசிகனும் ரசிகையும்” முழுக்க உரையாடல்களாலேயே ஆன கதை.  பின் வந்தவர்களின் விளிம்பு நிலை மனிதர்களின் சித்திரத்தை எழுதிய ஜி. நாகராஜனும், ராஜேந்திர சோழனும், பூமணியும் முக்கியமானவர்கள். பின் தொன்னூறுகளுக்குப் பின்னால் வளர்ந்த தலித்திய மற்றும் பெண்/பெண்ணிய எழுத்துக்களும் கவனிக்கத்தக்கவை. இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் கதைகளை எழுதிய மீரான் மைதீனும், கரிசல் கதைகளை எழுதிய கி.ராவும் முக்கியமானவர்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள், தமிழின் முக்கியமானவர்களின் படைப்புகளை ஒரு சேர வாசிப்பதற்கான களமாக இருக்கும். அம்பை, திலீப் குமார், லா.ச.ரா, பா.ஜெயப்பிரகாசம், நகுலன், அசோக மித்ரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோரும் குறிப்பிடத்தக்கோரில் சிலர்.

எழுத்தின் மூலமாக நாம் காலத்தோடு உரையாடும் கலையைக் கற்கிறோம். அதனை செம்மையாகக் கையாள தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறந்த வழி. மொழியை செறிவாக எழுத, ஒரு எழுத்தாளன் சங்க இலக்கியங்களைப் படித்தே ஆக வேண்டும். இவ்வாறு பேரா. மதிவாணன் கூறினார்.

முதல் நாளின் மூன்றாம் அமர்வில், காலச்சுவடு இணை ஆசிரியர் களக்காடு பீர் முகமது தனது கதைகள் தோன்றிய கதையை பகிர்ந்து கொண்டார். மிக வெள்ளந்தியாகவும், சுவாரஸ்யமாகவும், சம்பவங்கள் எவ்வாறு கதையாக ரசவாதமடைகின்றன என்று உதாரணங்களுடனும் விரிவாகப் பேசினார். அதே அமர்வில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தனது பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். சார்லி சாப்ளினி “தி சர்கஸ்” திரைப்படத்தை முன்வைத்தும், தி.ஜா வின் “சிலிர்ப்பு” சிறுகதையை முன்வைத்தும் அருமையாகப் பேசினார்.

இரண்டாம் நாள் அமர்வில் கவிஞர், விமர்சகர் க. மோகனரங்கன் பேசினார். எழுதும் முறைக்கான சூட்சமத்தை சொல்லிக் கொடுத்து விளக்க முடியும் என்றார். ஹெமிங்வேவுக்கும் ஃபார்டனருக்கும் இருந்த எழுத்துமுறை வித்தியாசங்கள், அதனால் அவர்களுக்குள் இருந்த பனிப்போர் ஆகியவை பற்றியும் கூறினார். எல்லா கலைப்படைப்புகளுமே அறிவு வளர்ச்சிக்காக அல்ல, அவை மனதால் உணர்ந்து கொள்வதற்கான என்ற எண்ணம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். என்னென்ன வகைமைகளில் எழுதலாம் என்பதற்கு புதுமைப்பித்தனே நூலகம் என்றும் தீவிர தத்துவார்த்தம் சார்ந்த எழுத்துக்களுக்கும், வாசிப்பின்பம் சார்ந்த எழுத்துக்களுக்கும் உள்ள வேற்றுமையை ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எந்த வகைமை கதையாக இருந்தாலும் அதில் உயிர் இருக்க வேண்டும். இலக்கிய வாசகர்களுக்கான உள்ளடக்கம் சார்ந்த மாற்றும் கலைநேர்த்தியான வாசிப்பின்பத்திற்கு அசோகமித்ரனை வாசிக்கலாம் என்றும் சொன்னார். நாம் பார்த்த, கேட்ட, உணர்ந்த சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுதல், அவற்றை சிறுகதைகளாக வளர்க்க உதவும் என்றும் விளக்கினார். ஜெயமோகன் எழுதிய “நவீன இலக்கிய அறிமுகம்” எழுத நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

பின்நடந்த கலந்துரையாடலில், கதையின் கரு (Theme) மற்றும் களம் (Plot) பற்றியதொரு விவாதம், பங்கேற்பாளர்களையும், வந்திருந்த ஆளுமைகளையும் உள்ளடக்கி நடந்தது. அதன் பின், தொன்னூறுகளுக்குப் பின்னான எழுத்துலகம் பற்றிய தனது பார்வையை எழுத்தாளர் கே.என்.செந்தில் விவரித்தார். எண்பதுகளின் இறுதியில் யதார்த்தவாதங்கள் தீர்ந்து போய், இசங்களின் துவக்கம் நிகழ்ந்தது. அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா போன்றோர் அது வரை சொல்லப்படாத வாழ்க்கை முறையை பேசினர். அவர்கள் மொழியை ஜோடனையுடன் கையாளாமல், அதனை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினர். தனிப்பட்ட முறையில் தான் எழுத்தை கூடு விட்டும் கூடு பாயும் விஷயமாகவே பார்ப்பதாகவும், அதுவரி யோசிக்காத ஒரு விஷயம், எழுதும் போது தன்னியல்பாக வர வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பிறகு, காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. குருவம்மாள் அவர்கள் தனது மணிப்பிரவாக நடையில், சிறுகதைகள் பற்றியதொரு சிற்றுரையை ஆற்றினார். பின் பங்கேற்பாளர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பெருமாள் முருகன், பாவண்ணன், க.மோகனரங்கன், களந்தை பீர் முகமது ஆகியோர் குழுவிற்கு ஒரு ஆலோசகர் என்ற முறையில் நியமிக்கப்பட்டார்கள். பங்கேற்பாளர்களின் சிறுகதைகளை, அவர்கள் வரிக்கு வரி வாசித்து, தங்களது உண்மையான கருத்துக்களையும், கதையை இன்னும் எவ்வாறு மெருகேற்றலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். வழக்கமான பயிலரங்குகள் ஒரு வழிப்பாதையாகவே சென்று கொண்டிருக்கும். இந்நிகழ்வு அவ்வாறின்றி பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியதாக, அவர்கள் ஓவ்வொருவரின் எழுத்துக்களையும் தனிப்பட்ட முறையில் ஊன்றி கவனித்து ஆளுமைகள் கருத்து சொல்வதாக அமைக்கப்பட்டிருந்தது வெகு சிறப்பு. அதுவே இப்பயிலரங்கின் மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது.

அதன் பிறகான நிகழ்வில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய “பிரசாதம்” மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய “ஒரு மனுஷி” ஆகிய சிறுகதைகளை கவிஞர். எழிலரசி அவர்கள் வாசித்தார். பின் இயக்குநர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரில் இருந்து, இந்த இரண்டு கதைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் காட்சியிடப்பட்டன. பிறகு அவற்றைப் பற்றிய விவாதங்களும் நிகழ்ந்தன.

மூன்றாம் நாள் அமர்வில், எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், தமிழ் எழுத்துலகில் பெண்களின் பங்கு குறித்து  விரிவாகப் பேசினார். 1900களுக்குப் பிறகு, முக்கியமான எழுத்தாளுமைகளான ஆவுடையக்காள், கோதை நாயகி, குமுதினி ஆகியோர் பற்றியும், அதன் பிறகு கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, அம்பை, பிறகு வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, லக்‌ஷ்மி, சுகந்தி சுப்ரமணியன் ஆகியோர் பற்றியும் விளக்கமாக உரையாடினார். தொன்னூறுகளுக்குப் பின் வந்த பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்செல்வி, உமா மகேஷ்வரி, சந்திரா, பாமா, சிவகாமி, சல்மா ஆகியோர் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் கூறினார். பின்பு எழுத்தாளர் குமாரநந்தன் தன் கதைகள் தோன்றிய அனுபவங்களையும், தான் கதை எழுதும் சூழ்நிலைகள் பற்றியும் கூறினார்.

பின்பு பங்கேற்பாளர்கள் அனுப்பி தேர்வாயிருந்த கதைகள் பற்றிய விவாதமும் நடந்தது. மூன்று நாள் நிகழ்களையும், கிருஷ்ண பிரபு சிறப்பாக நெறியாள்கை செய்தார். இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான லாவண்யா சுந்தர்ராஜன், இத்தகைய பயிலரங்குகளின் தேவை குறித்தும், தன் மனதில் தோன்றிய சிறு விதை எவ்வாறு ஒரு வெற்றிகரமான பயிலரங்காக உருமாறியது என்றும், அதற்கு உறுதுணையாக இருந்த காலச்சுவடு பதிப்பகத்தினர், ஒரு சிறந்த வழிகாட்டியாக ஒவ்வொரு அடியிலும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கவிஞர் சுகுமாரன், தகுந்த ஆலோசனைகள் வழங்கும் கவிஞர் மோகன ரங்கன், இணைந்து பணியாற்றிய கிருஷ்ண பிரபு, இந்த நிகழ்வுக்கு இடம் தந்து உதவிய கவிஞர் சக்தி ஜோதி, பயிலரங்கிற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த எழுத்துலக ஆளுமைகள், நிதியளித்த புரவலர்கள் மற்றும் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மூன்று நாள் நிகழ்வுகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது கவிஞர் சுகுமாரன் அவர்களின் துணைவியாரின் இரண்டு நிமிடப்பேச்சு. நிகழ்வு முடிகையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பயிலரங்கில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளராக அமர்ந்திருந்த திருமதி.சுகுமாரனையும் பேசி அழைத்தனர். மிகத் தயக்கத்துக்குப் பின் பேசிய அவர், “நீங்கள் அனைவரும் (சுகுமாரன்) சாரிடம் இருந்து இவ்வளவு கற்றுக் கொண்டதை சொல்கிறீர்கள். கூடவே இருக்கும் நான், இத்தனை நாளில் இவரிடம் இத்தகைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற வருத்தமே வருகிறது. உண்மையில் இந்த பயிலரங்கிற்கு நான் வந்ததற்கான காரணம், இவரை இங்கே விட்டு விட்டு பக்கத்தில் பழனி போன்ற சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் என்னையறியாமலே இந்த நிகழ்ச்சியில் மூழ்கிப் போய்விட்டேன். மதிய நேரத்தில் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் கூட, சொல்லிக் கொடுப்பதை ஏதாவது மிஸ் பண்ணிவிடுவோமோ என்று வேகமாக ஓடி வந்து அமர்ந்து கொள்வேன். அந்த அளவு எனக்கும் ஈடுபாடு வந்துவிட்டது. சார் எப்போது சொல்லிக் கொண்டிருப்பார், ஏதாவது எழுது என்று. அதெல்லாம் பெரியவர்களின் வேலை, நம்மால் ஆகாது என்று நினைத்துக் கொள்வேன். இந்தப் பயிலரங்கின் மூலம் நானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற உற்சாகத்தைப் பெற்றிருக்கிறேன். நிச்சயம் எழுதவும் செய்தேன்” என்றார்.

நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மீட்டெடுப்பது தானே இலக்கியத்தின் பணி. அதனைப் இப்பயிலரங்கு துல்லியமாகச் செய்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி !


******

நன்றி: மலைகள்.காம் http://malaigal.com/?p=9878