Saturday, March 9, 2024

கமல் - அரசியல்

உண்மையில் இதுதான் கமலுக்கான இடம். கட்சி ஆரம்பிக்காமல் அப்படியே பொதுவாக நான்கு கருத்துக்களைச் சொன்னோமா, அறிவுஜீவிப் பிம்பத்துடன் கெத்தாக அலைந்தோமா என்றே இருந்திருக்கலாம். 

ரஜினி எப்படியும் கட்சி ஆரம்பிப்பார், எதிர்முனையில் நாம் நின்றால் அவருக்கு மாற்று நாம் என்று மக்கள் மனதில் பதிந்து  அரசியல் பாதை எளிதாக இருக்குமென நினைத்துவிட்டார். 

அதோடு சுற்றியிருந்தவர்கள் வெற்றிடம் சுற்றிடம் என்று ஆசைகாட்டிவிட ஏமாந்துவிட்டார்.  கட்சி ஆரம்பித்து அவர் முன்னெடுத்தது எல்லாம் என்.ஜி.ஓ வேலைகள் தாம். அதோடு இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு என்று பஞ்ச் டயலாக் என்று நினைத்துக்கொண்டு விட்டவை வெற்றுச் சத்தங்களே. தமிழ்நாட்டு மக்கள் அவருக்கான சரியான இடத்தை அவரது முதல் தேர்தலில் காட்டியதும்  அடுத்த தேர்தலுக்கு முன்பே அவர் அதனைப் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சி. வருங்கால ராஜ்ய சபா எம்.பி.க்கு வாழ்த்துகள்.

ஆனால் உலகத்தின் ஆகச் சிறந்த இந்த முடிவைத் தான் எடுத்ததற்கென்று காரணங்களை தன் வழக்கமான ஜாங்கிரி சுற்றல் மொழியில் பிழிவாரே, அதைத் தான் தாங்கிக் கொள்ள முடியாது.

Friday, January 19, 2024

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2024

தமிழை உலகுக்கு எடுத்துச் செல்லவும், உலகைத் தமிழுக்கு கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா. இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

தமிழ்ப் படைப்புகள் மற்றும் பதிப்பகங்கள் பற்றிய அறிமுகத்தை விழாவிற்கு வந்திந்த பன்னாட்டு பதிப்பகங்கள் தெரிந்துகொள்ளவும், போலவே பிற உலக மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரவும் இவ்விழா ஒருங்கிணைப்பு மேடை அமைத்துக் கொடுத்தது.

மூன்று நாள் நிகழ்வில் நூற்றுக் கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.  ஆர்வமாய் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இது முதற்படி மட்டுமே. இவை ஒப்பந்தங்களோடு நின்றுவிடாமல் மொழியாக்கப் படைப்புகளாக, மொழிபெயர்ப்புக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கைகளைப் பெறுபவைகளாக முழுமை அடைய வேண்டும். அதற்கு பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் முகவர்களின் தொடர் உழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. அப்போது தான் அரசின் இம்முயற்சிகள் முழு வெற்றியடைந்தவை ஆகும்.

இப்போது, ஒரு நினைவோடை... சென்ற ஆட்சியில், உலகத் தரமான அண்ணா நூற்றாண்டு நூலகமே பராமரிப்பின்றி கவலைக்கிடமாகக் கிடந்தது. இந்த அரசு, இருக்கும் நூலகங்களை புணரமைத்து திறம்பட செயல்பட வைப்பது மட்டுமின்றி கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்தது, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது, முத்தாய்ப்பாக ஆண்டுதோறும் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடத்துவது என்று அறிவுசார் உலகில் தமிழையும், தமிழ்நாட்டையும் முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறது. 

இத்தகைய அறிவுசார் நிகழ்வுகள் நடத்துவது ஓர் அரசின் கடமை தானே... இதில் கூடவா அரசியல் பேசுவது என்று கேட்பீர்களானால், ஆம் நம் மக்களுக்கு, அதுவும் இத்தகைய நிகழ்வுகளால் பயன்பெறும் இலக்கியச் சான்றோர்களுக்கு எப்போதும் ஞாபக மறதி அதிகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. 

மூன்று நாள் விழாவில் ஒரு நாளேனும் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. செறிவான ஓர் அனுபவம் தவறிவிட்டது. குறையொன்றுமில்லை, ஒரு நாள் இத்தகைய அறிவுசார் விழாக்களை எடுத்து நடத்தும், ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பேன்.

எந்தவொரு நிறுவனப் பின்புலமும், அதிகாரத் தொடர்புகளும் இல்லாமல், படைப்பாளியாக நாமே கலந்துகொள்ள முடியும் என்பதே இவ்விழாவின் சிறப்பு. உதவி தேவை எனில், தமிழ்நாடு அரசால் பயிற்சி பெற்ற இலக்கிய முகவர்கள் மூலமாகவும் விழாவிற்கு வந்திருந்த பன்னாட்டுப் பதிப்பகங்களை அனுகலாம். அதைச் சொல்லவே இப்பதிவு. அடுத்த ஆண்டு நம்மில் இன்னும் பலர் கலந்துகொள்ள வேண்டும்.

நம் படைப்புகளைப் பற்றி நாம் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது!

#CIBF2024
#StalinEra

Sunday, January 14, 2024

எங்கள் விஜயகாந்த்

டிசம்பர் 28, 2023 நடிகர் விஜயகாந்த் மறைந்தார்
 அவர் நினைவை ஒட்டொ எழுதியது.
---
தமிழ்த் திரைத்துறையின் ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக நடிகர்களில் அவரைப் போல ஒருவர் அவருக்கு முன்பும் இல்லை, அவருக்குப் பின்னும் இல்லை. அந்தளவு தனித்துவமான ஆளுமையாக விளங்கியிருக்கிறார் விஜயகாந்த்.

ரஜினிக்கும், கமலுக்கும் இளவட்டங்கள் ரசிகப்பட்டாளம் சேர்ந்து கொண்டிருந்த காலத்தில், அமைதியாக அவர்களை விட எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக பெண்களுக்குப் பிடித்த நடிகராக விஜயகாந்த் வீற்றிருந்தார். இன்று நாற்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் இருக்கும் தமிழகப் பெண்களில் பெரும்பான்மையோர் மனம் கசிந்து ஆத்மார்த்தமாக ஒரு துளிக் கண்ணீரேனும் சிந்தியிருப்பர். தமிழகத்துப் பெண்கள் அந்தளவு தங்கள் மனதிற்கு நெருக்கமானவராக, குடும்பங்களில் ஒருவராக விஜயகாந்த்தை வரித்திருந்தனர்.

தமிழ்த் திரைத்துறையில் இருக்கின்ற ஒருவரால் கூட அவரைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது போல. ஏற்றத் தாழ்வுகளும், அவமானங்களும் மலிந்து போயிருக்கும் திரைத் துறையில் மிக்க பெருந்தன்மையோடும், திறந்த மனதோடும் உண்மையான ஒரு தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். கடைநிலை ஊழியர்களின் நலம், தன்னைத் தேடி வந்த அனைவருக்கும் எப்போதும் பசியாற்றும் தன்மை, தனக்கு நியாயம் என்று தோன்றும் விஷயங்களுக்காக எந்தப் பயமும் இன்றி துணிந்து குரல் கொடுப்பது என்று இயல்பிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் இருந்திருக்கிறார்.

விஜயகாந்தின் திரைத்துறை வாழ்வு முழுமைக்கும், அரசியல் வாழ்வின் துவக்கத்திற்கும் பாதை அமைத்தவர் அவரது உயிர்த் தோழரான இப்ராகிம் ராவுத்தர். தன் நண்பனுக்காக தனது தனிப்பட்ட வாழ்வையே அர்ப்பணித்திருந்தார் ராவுத்தர். விஜயகாந்தும் அவரை முழுமையாக நம்பி தன்னை அவரிடம் ஒப்படைத்திருந்தார். விஜயகாந்த் முப்பது ஆண்டுகள் திரைத் துறையில் பெரும் பெயர் பெறுவதற்கும், சிறந்த ஆளுமையாக நிலைத்து நின்றதற்கும் ஆணிவேராக ராவுத்தர் இருந்தார்.

காலம் அவர்கள் நட்பில் சிறு விரிசல் கொண்டு வர, அதிலிருந்து விஜயகாந்தின் கிரீடம் நழுவத் துவங்கியது. திரைத்துறையில் நிறை வாழ்வு வாழ்ந்து சாதனைகள் புரிந்தவர், அரசியலில் சரியாகச் சென்று கொண்டிருந்த பாதி வழியில் தடம் மாறிவிட்டார். அதன்பிறகு உடலும் மனமும் நலிவுற இறுதி வரை அவரால் மீண்டு வர முடியவில்லை. இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜி தன் பிரியமான நண்பனுடன் சென்று சேர்ந்துவிட்டார். கண்ணீர் அஞ்சலி கேப்டன். என்றும் எங்கள் தலைமுறையின் மனங்களில் நிறைந்திருப்பீர்கள்.  

#Vijayakanth

கலைஞர் பல்கலைக்கழகம்

கலைஞர் பல்கலைக்கழகம் எந்த ஊரில் அமைய வேண்டுமென நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அது குறித்து எனக்குத் தோன்றியவை...

1. ஏற்கனவே பெரிய பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டமாக இருக்க வேண்டும்.
2. வான் வழி போக்குவரத்துக்குத் தோதாகவும், தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
3. பின் தங்கிய பகுதியாய் இருப்பின் கல்வியில் மேலோங்க நல்ல வாய்ப்பு
4. பரப்பளவில் விரிய, ஊர்/மாவட்டம் பெரிதாக வாய்ப்புள்ள, வளர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடிய பகுதியாக இருக்க வேண்டும்.
5. மாணவர்கள் உண்டு உறைவிட படிப்புகள் பயில, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தகுந்த இனிமையான தட்பவெட்ப நிலை.
6. பிற மாநில/பிற நாட்டு அறிஞர் பெருமக்கள் வந்து போகத் தோதுள்ள பகுதி
7. சர்வதேச நிகழ்விடங்களின் அருகாமை, மாணவர்கள் கண்ணோட்டமும், அறிவுத் திறனும் வளர உதவும்.
Update:
8. பன்னாட்டுத் தொழிற்சாலைகள் உள்ள பகுதியாய் இருப்பின், தொழிற்கூடம் - கல்விக்கூடம் இணைந்த ஆராய்ச்சிகளுக்கு, பொருளாதார நல்கைகளுக்கு வழிவகுக்கும்.
(பல்கலைக்கழகம் அமைக்கும் இடம் சார்ந்து வேறு என்ன அடிப்படைத் தேவை, நீங்களும் சொல்லலாம்)

ஆகவே, இத்தகைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, வேகமாக வளர்ந்து வரும், எதிர்காலத்தில் தமிழகத்தின் தொழில்நுட்பமாக மாறப் போகும், Little England என்று அழைக்கப்படும் ஒசூரில் "கலைஞர் சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" அமைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்...றோம்...றோம்...
#hosurdiary
#kalaignaruniv

Monday, January 1, 2024

2023

#2023
மற்றுமோர் ஆண்டு முடிகிறது, அலுவக ரீதியாக மிகச் சிறப்பான ஆண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கின் பொருட்டு இரண்டு வாரங்கள் தில்லியில் தங்கி இருந்தேன். பலதரப்பட்ட அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பயிற்சி என்று சிறப்பாகச் சென்றது. அதோடு இணையப் பாதுகாப்புத் துறையில் தேசிய அளவில் முக்கியமான ஓர் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த உத்வேகத்தையும், கற்றலையும் தொடர வேண்டும். 

தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பைக் கடைசி மாதத்தில் தந்துவிட்டு நகர்கிறது இவ்வாண்டு. எனது பணியின் முதல் மூன்றாண்டுகள் கொடைக்கானலில் தொழிலாளர் மேலாண்மை சார்ந்தே சென்றது. அதன் பின் மதுரை வந்து முழுமையாகத் தொழில்நுட்பத்தில் இறங்கி, தென் தமிழகத்தின் பத்து தொலைதொடர்பு மாவட்டங்களுக்கான “டாட்சாஃப்ட்” சர்வரில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், எங்கள் மேலதிகாரியாக வேறு பிரிவில் இருந்து மாற்றலாகி வந்தார் அருண்மொழி அம்மா. துறையில் ஏற்கனவே கடுமையான அதிகாரியாக அறியப்பட்டவர் ஆதலால் அனைவரும் அவரை வரவேற்று வணக்கம் வைத்து வந்தனர். இயல்பாக எனக்கிருந்த தயக்கத்தாலும், நம் வேலையை நம் இடத்தில் இருந்து பார்ப்போம் என்ற உந்துதலாலும் நான் மட்டும் சென்று அவரைப்  பார்க்கவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் என்னை அவர் தனது அலுவலக அறையில் வந்து பார்க்கும்படி கூப்பிட்டு விட்டார். நான் சென்று பார்த்த போது, நான் வேலை பார்த்த தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் ஒரு செமினார் கொடுக்கச் சொன்னார். சரியென்று ஒத்துக் கொண்டேன். இருந்தும் என்னைச் சோதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தேவையில்லாத வேலை என்ற எரிச்சல் மனதிற்குள் மண்டியிருந்தது.

அறை நிறைய அதிகாரிகளும் சக பணியாளர்களும் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நேர்காணல் எடுக்கும் தொனியில் டைரி, பேனா என்று முழுத் தயாரிப்புடன்  செமினாருக்கு வந்திருந்தார். “நீங்க என்ன என்னை சோதித்து மதிப்பெண் கொடுப்பது?” என்ற ஈகோவில் ஏனோ தானோவென்று துவங்கினேன். இரண்டே நிமிடத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார். கேள்வியின் உண்மைத் தன்மை என்னைச் சுட்டது. அவர் என்னைச் சோதிக்க வரவில்லை,  உண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறார் என்று எனக்குப் புலப்பட்டது. பிறகு அவர் சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்து, உண்மையான அர்ப்பணிப்புடன் எனக்குத் தெரிந்த விஷயங்களை எளிமையாக ஆரம்பித்து, கடுமையான பகுதிகள் வரை ஒவ்வொன்றாக விளக்கம் கொடுத்தேன். சுமார் ஒருவாரம், தினமும் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த செமினாரின் முடிவில் இருவரும் சீனியர் ஜூனியர் பாகுபாடின்றி அலுவலக ரீதியாக இயல்பாகக் கலந்துரையாடும் நிலைக்கு வந்திருந்தோம். துறையில் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர், உண்மையான திறமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுப்பார் என்று நேரடியாக உணர்ந்தேன். அது நடந்து ஆகின்றன 19 ஆண்டுகள்  ...

அப்போதே, அருண்மொழி அம்மா அவரது மகள் நினைவாக, சமூக நிலையில், பொருளாதாரத்தில், குடும்ப அமைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விச் சேவையில் பங்காற்றி வந்தார். அவருக்கு உதவியாக நானும், என் அலுவலக நண்பர்களும் பணி முடிந்த மாலை நேரங்களில் தினமும் செல்லத் துவங்கினோம்.  அவர் தலைமையில் சேவாலயம்  மாணவர் விடுதிக்குச் சென்று மாணவர்களுக்குத் தனிவகுப்புகள் நடத்தினோம், பொருளாதார உதவிகள் செய்தோம், மாணவர்களின் மேல்படிப்புக்காக துறை வல்லுநர்களை, புரவலர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினோம். தனித்தனியாகச் செய்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து, பின்பு “சியாமளா கல்வி அறக்கட்டளை” என்ற குடையின் கீழ், மாணவர்களுக்கான உதவியைத் தொடர்ந்தார் அருண்மொழி அம்மா. நானும் சில நண்பர்களும் உடன் இருந்து பணியாற்றுகிறோம். இத்தகைய எனது ”மெண்ட்டாரை” இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி இழந்துவிட்டேன். சமூகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு.

இப்போது எழுதும் போது, “அம்மா” என்று விளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரும் அதனை விரும்பியிருப்பார், ஆனால் அவருடன் பேசும்போது “மேடம்” என்பதைத் தாண்டி வாய் எழவேயிவில்லை. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை என்றாலும்,  முதலில் இருந்த அந்தத் தயக்கம் அப்படியே இறுதி வரை தங்கிவிட்டது. ஆனால், மாணவர் விடுதிக்குத் தனி வகுப்புகள் எடுக்கச் செல்கையில்  எங்களைத் தொடர்ந்து மாணவர்களும் அவரை “மேடம்” என்று அழைக்கத் துவங்க, அதனை கட்டாயமாக மாற்றி, மாணவர்கள் அனைவரையும் அவரை “அம்மா” என்று அழைக்க வைத்தேன். இழந்த தன் ஒரு மகளின் நினைவாக அவர் செய்த நற்செயல்களின் பொருட்டு அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு “அம்மா”வானார்.

அலுவலகம் சார்ந்தும், சமூக நலம் சார்ந்தும் அவர் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். அதைவிட மிக மிக முக்கியமான தருணம், என் வாழ்க்கைத் துணையை நான் கண்டடைந்தது அவரது அறிமுகத்தின் மூலமே. அதற்காக என் வாழ்நாள் நன்றிக்கடனுக்கு உரியவர் அவர். ஆனால் அதன் பொருட்டே சில பிணக்குகளும் ஏற்பட்டன. அவரைப் பொருத்தவரை, அன்பென்றாலும், ஆத்திரமென்றாலும் அதிரடி தான். சில ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் கோபம் கொண்டிருந்தார். ஆனாலும் அலுவகப் பணியிலும், அறக்கட்டளைப் பணியிலும் எந்த விலக்கமும் இன்றி தொடர்ந்து வழிநடத்திய வண்ணமே இருந்தார். நானும் கேட்டதற்கு பதில் சொல்லி, கொடுத்த பணியை மனசாட்சிப்படி திறம்பட செய்தேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு, அவரது பெருந்தன்மை காரணமாக மீண்டும் எங்களுடன் நன்றாகப் பேசத் துவங்கினார். பணி மாறுதல் காரணமாக உள்ளூரை விட்டு ஒசூர் வந்தபோதும் அவரது அணுக்கமும், வழிகாட்டுதலும் தொடர்ந்தபடியே இருந்தது.

சமூகக் கடமைகள் போக, தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அவரது அப்பாவைப் பராமரிக்கும் பணி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகளாக தீவிரமாக விபாசனா தியானத்தை மேற்கொண்ட அனுபவம் உள்ள அவர், தனது அப்பா காலத்திற்குப் பிறகு முழுமையாக விபாசனா தியானத்திற்குத் தன்னைப் ஒப்புக்கொடுத்துப் பணி செய்ய எண்ணியிருந்தார். ஆனால் காலம், அப்பா இறந்ததும் அவர் பூமிக்கு வந்த பணி முடிந்தது என்று தீர்மானித்துவிட்டது போல. அவரது அப்பா இறந்த ஒரு மாதத்திற்குள் அருண்மொழி அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற “சியாமளா கல்வி அறக்கட்டளை” பணி மீதமிருக்கிறது.  சுமார் நூறு உறுப்பினர்களோடும், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவப் பயனாளர்களோடும் இயங்கி வரும் அறக்கட்டளையை திறம்பட நடத்த, அவர் வழிகாட்டிய எங்கள் குழுவிற்குக் காலம் உறுதுணை புரியவேண்டும்.

இந்த ஆண்டும் கணிசமான அளவு எழுதினேன். இயக்குநர் நண்பர் ஒருவருக்காக நான்கு திரைக்கதைகளின் ஒன்-லைனர்களையும், காட்சிச் சுருக்கங்களையும் எழுதினோம், இருந்தும் முழுமையான திரைக்கதை வடிவமாக மாற்றவில்லை. இரண்டு நாவல்கள் பாதி எழுதி நிற்கின்றன. இவை எவையுமே முழுமை பெறாதாதால் இவற்றை எழுத்துப் பணி கணக்கில் சேர்க்க முடியாது. நேரம் போதவே இல்லை என்று அழகாகக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் ஒழுங்கான நேர மேலாண்மையில் இவற்றை முடித்திருக்க முடியும் என்று உள்ளுக்குள் உறுத்தியபடியே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சாக்குப் போக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும், பிறகு வேலைகள் தாமாக நடந்து முழுமை பெறத் துவங்கும். ஆண்டு இறுதியில் “நஞ்சுக் கொடி” சிறுகதைத் தொகுப்பு மட்டும் வெளியாகிறது. புத்தாண்டில் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள். கேட்கவும், கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.

இந்த வருடம் தங்கள் புதிய புத்தகங்கள் குறித்துக் முன்னுரை, விமர்சனம், மதிப்புரை கேட்டுச் சிலர் அணுகினர். அவை ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், “அடே நான் எழுத நினைத்து எழுதாததே இன்னும் நிறைய இருக்கேடா, அதுக்குள்ள சீனியர் சிட்டிசனாக்கி கருத்து கேட்குறீங்களே” என்று தோன்றாமல் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் நாம் இளையர் இல்லை. காலம் கடத்தாமல் எழுத வேண்டியதை சீக்கிரம் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறது. வரும் வருடமும் எழுத்து, வாசிப்பு, கற்றல் உட்பட மனதிற்குப் பிடித்ததை செய்துகொண்டு இங்கே தான் ஓரமாக சுற்றிக் கொண்டிருப்பேன். 

மற்றுமொரு துவக்கம், அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக 2024 அமையட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!

#HappyNewYear2024

Tuesday, August 8, 2023

வீரப்பன் வேட்டை

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய மற்றுமோர் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. வீரப்பனைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இன்றைய தலைமுறை இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை நான்கு பகுதிகள் கொண்ட இந்தப் படம் வழங்குகிறது. ஆனால் இதனைப் பார்க்கப் போகும் பெரும்பான்மையோர், வீரப்பனைப் பற்றி தொன்னூறுகளில், ஈராயிரத்தின் துவக்கத்தில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தவர்களாகவே இருப்பர்.

ஆவணப்படத்தின் பெரும்பகுதி கர்நாடக மாநில காவல்துறையினர், வனத்துறையினர், ஊடகவிலளாலர்கள் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. இடையிடையே வீரப்பன் கூட்டாளிகள், மற்றும் ஊர் மக்களின் கருத்துக்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனோ வீரப்பன் மனைவியின் பதிவு, வீரப்பன் குறித்த அவரது பெருமிதம் சார்ந்த பகுதியாக மட்டுமே சுருங்கிவிட்டது.

இதில் உணர்வுப் பூர்வமான ஒரு விஷயம், ஸ்ரீநிவாஸ் எனும் கர்நாடக வன அதிகாரியின் வாழ்வும் மரணமும். காந்திய வழியில் வீரப்பனை  சரணடைய வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார். வீரப்பனின் கோபிநத்தம் கிராமத்திலேயே அலுவலகம் அமைத்து அங்கேயே தங்குகிறார், ஊர் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்ய முனைகிறார், மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறார். இடையில் வீரப்பனின் தங்கை மாரி அவருக்குச் சில உதவிகள் செய்கிறார். ஊர்மக்கள் மூலமாகவும், மாரி மூலமாகவும் வீரப்பனை நெருங்கி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வீரப்பனைச் சரணடைய வைக்க முடியும் என நினைக்கிறார், அதற்காக உண்மையாகப் பணியாற்றுகிறார். ஒரு கட்டதில் மாரியை ஊர் மக்கள் தவறாகப் பேச, மாரி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். தன் தங்கையின் மரணத்திற்கு ஸ்ரீநிவாஸ் தான் காரணமென வீரப்பனின் கோபம் தனிப்பட்ட முறையில் அவர் மீது திரும்புகிறது. சில நாட்களில் வீரப்பன் சரணடைய விரும்புவதாகவும், ஸ்ரீநிவாஸ் தனியாக காட்டுக்குள் வர வேண்டும் என்றும் அவருக்குத் தகவல் வருகிறது. அதை நம்பி காட்டுக்குள் செல்லும் ஸ்ரீநிவாஸை வீரப்பன் சுட்டுக் கொன்று, அவர் உடலை அங்கேயே எரித்தும் விடுகிறான். வீரப்பனை சரணடைய வைக்க வேண்டும் என்ற ஸ்ரீநிவாஸின் காந்திய வழிமுறை அவ்வாறு முடிகிறது.

படத்தின் இறுதிப் பகுதி, இதே போன்று இன்னொரு நிகழ்வு. வீரப்பனின் கண்களில் புரை விழுந்து பார்வை மங்குகிறது. விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய ஆயுதத் தரகர் என்று பழக்கமாகும் ஒருவர், அவனின் கண் அறுவை சிகிச்சைக்கு வழிசெய்து, அவனை இலங்கையில் கொண்டு விடுவதாக வாக்களிக்கிறார். அதனை நம்பி நோயர் ஊர்தியில் வரும் வீரப்பனும் அவனது எஞ்சிய கூட்டாளிகளும், துப்பாக்கி ரவைகள் துளைக்கப்பட்ட பிணங்களாகவே மிஞ்சுகிறார்கள்.  ஆயுதத் தரகர் வேடமேற்றவர் காவல்துறை உயரதிகாரி. வீரப்பனின் போரட்டமான வாழ்வும், சுமார் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த அவனது தேடுதல் வேட்டையும் முடிவுக்கு வருகிறது. 

அவன் இறந்த சமயத்தில், அவன் கொல்லப்பட்ட விதம் குறித்து பல வதந்திகள் காற்றில் உலாவின. படத்தின் இறுதியில் வரும் சிறப்பு அதிரடிப்படையில் இருந்த தமிழகக் காவல் அதிகாரியின் கூற்று முக்கியமானது. வீரப்பன் இறந்தது உண்மை, அதற்கு சிறப்புக் காவல்படை தான் காரணம் என்பது உண்மை. இடையில் என்னவிதமான கதைகளை வைத்தும் நிரப்பிக் கொள்ளலாம் என்று அவர் கூறிய செய்தி வீரப்பன் மரணம் குறித்து காற்றில் உலவி வரும் செய்திகளை இன்னும் அலைவுறவே வைக்கின்றன.

குறைந்த காலத்தில், ஏற்கனவே இருக்கின்ற தகவல்களையும், காட்சிப் பதிவுகளையும் வைத்துக் கொண்டு சிலரின் அனுபவப் பகிர்வுகளை சேர்த்து, பறவைப் பார்வையாக இந்த ஆவணப்படத்தைச் செய்திருக்கிறார்கள். இதில் முக்கிமான விடுபடல்களாக இருப்பவை, வெறுமனே மேலோட்டமாக மட்டும் சொல்லப்பட்டு, கடந்து செல்லப்படும் 'ஒர்க்‌ஷாப்பில்' வைத்து நடத்தப்பட்ட சிறப்பு அதிரடிப் படையின் அத்துமீறல்களும், மனித உரிமை மீறல்களும். இன்னொரு விடுபடல், சிறப்பு அதிரடிப்படைத் தலைவராக இருந்து காவல் அதிகாரி விஜயகுமார் மற்றும் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கத் தூது சென்ற பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் இருவரின் அனுபவப் பகிர்வுகளோ நேர்காணலோ இல்லாதது. 

 காட்டு வாழ்க்கை, யானை வேட்டை, சந்தனக்கடத்தல், அரசியல்வாதிகளின் தெரிந்த, தெரியாத வாக்குறுதிகள், போராளிக்குழுக்கள் உடனான தொடர்பு, நடிகர் ராஜ்குமார் கடத்தல், ஊடக வெளிச்சம்  ஒலிநாடாக்கள், வீடியோ பதிவுகள், காட்டுக்குள் நேர்காணல்கள், இரு மாநில அரசுகளுக்கும் காவல்துறைக்கும் உண்டான நெருக்கடி, அதிரடிப் படையின் அத்துமீறல்கள், அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட சொல்லவியலாத் துன்பங்கள், வீரப்பனின் அந்திம நாட்கள், இறுதி நாடகம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டதும், சொல்லப்படாததுமாக ஆனால் இனியும் வெளிவர வாய்ப்பில்லாததுமாக ஏகப்பட்ட செய்திகளையும் இரகசியங்களையும் கொண்டது கட்ததல்க்காரன் வீரப்பனின் வாழ்வும் மரணமும். அதில் ஏற்கனவே பொதுவெளியில் பதிவாகியிருப்பதில் சில பகுதிகளைத் தொகுப்பாக்கி வந்திருக்கிறது, #HuntforVeerappan எனும் இந்த ஆவணப்படம். நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.