Tuesday, August 28, 2012

நெகிழ்த்தல் தேற்றம்


அன்று காலையிலிருந்து ஒரே மன அலைச்சல். செய்து முடிக்கவேண்டிய வேலை அடுக்கடுக்காய் சேர்ந்து கொண்டே வந்தது. மலை போல் வேலை குவியும் போது, அதை வகை வாரியாக பிரித்து ஒன்றொன்றாக செய்யத் துவங்குவதற்கு முதல் நாள் வரக்கூடிய நெருக்கடி. அப்படிப்பட்ட நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது முன்னனுபவம். எதைத் துவங்குவது என்ற குழப்பத்திலேயே எதையும் தொட மனம் வராது. கெடு நெருங்கக்கூடிய வேலையை துவங்கலாம் என்றால் அது கொஞ்சம் கடுப்படிக்ககூடியதாக இருக்கும், சரி விருப்பமானதை முதலில் துவங்கலாமென்றால் முக்கியமில்லாததற்கு முன்னுரிமை கொடுக்கிறோமே என்று நமக்குள்ளேயே ஒரு குற்றவுணர்ச்சி தோன்றி அதிலுள்ள ஈடுபாட்டையும் குறைத்து விடும். அப்போதெல்லாம் ஒரே வழி, கனினியை முறைத்துப் பார்த்துக் கொண்டு நாள் முழுவதும் கடுப்பாக அமர்ந்திருப்பது தான். 

செய்யக்கூடிய வேலைகளில் பெரும்பான்மை கணினி சார்ந்தவைகள் தாம். ஆனாலும் மூடி வைத்த மஞ்சள் பெட்டிகள் பக்கம் எலிக்குட்டியின் சுட்டி தவறியும் செல்ல மனம் இடம் தராது. இலக்கற்று எங்கெங்கோ செல்லும் இணைய மேச்சல். அதிலும் சலிப்புற்று ஃபேஸ்புக், ட்விட்டர், ஜி.பிளஸ் என்று மாறி மாறி சுழன்று கொண்டிருக்கும். அலுவல உபயோகம், சொந்தக் கணக்கு,  கருத்து சொல்லக்கூடிய முற்றொருமை ஒன்று, சும்மா வேடிக்கை பார்ப்பதற்கான கணக்கு ஒன்று என்று சுற்றி, சுற்றி, மாற்றி மாற்றி ஒன்றில் வெளியேறி இன்னொன்றில் நுழைந்து மீண்டும் மீண்டும் சுழன்று தலைக்குள் பூச்சி பறக்கத் துவங்கி விடும். முடிவில் பார்த்தால் மொத்தமே ஒரு பத்துக்குள்ளான தளங்களைத் தான் நாள் முழுவதும் திரும்பித் திரும்பி பார்த்திருக்கிறோம் என்ற நினைவு வந்து அதுவே பெரிய அயற்சியை உருவாக்கி விடும். 

பிறகு ஒருவழியாக அன்றைய தினத்து ஏய்ப்புகள் போதுமென்று அட்டையைத் தேய்த்து வெளியேறினால் மாநகரம் ஆவென்று வாயைப் பிளந்து காத்திருந்தது. அலுவலக குகைக்குள் சென்று விட்டால் நேரம், காலம் மட்டுமல்ல வெளியிலுள்ள சீதோசன நிலை கூட தெரியாது. பகலில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையோரமெங்கும் தண்ணீர் தேய்ங்கி இருந்தது. ஆனாலும் புழுக்கம் அதிகமாகவே இருந்தது. இருள் முழுதும் கவிந்திருந்தது. பகல் முழுவதும் குளிரூட்டப்பட்ட சிறைக்குள் இருந்து விட்டு வெளியே வந்ததால் உடம்பு உடனடியாக தன்னை நெகிழ்த்திக் கொள்ள முயற்சி செய்தது.  முதுகு, கைகள், மார்பு என எங்கும் வியர்வை சுரபி அடைபட்ட தோலின் துவாரங்களை திறக்க முயற்சிக்க உடம்பெங்கும் சுள்ளென்று குத்தியது. செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருந்தது.

ஒருவழியாய் இரண்டு பேருந்துகள் மாறி கசக்கித்துப்பிய சக்கையாக அறைக்குள் வந்து விழுந்த பிறகு தான் இரவு உணவுக்கு எதையும் வாங்கி வரவில்லை என உறைத்தது.  இனி மீண்டும் நான்கு அடுக்கு இறங்கிப் போய் சாப்பிட்டு விட்டு வர உடம்பிலும் மனதிலும் தெம்பு இல்லை என்று தோன்றியது. காலை ஏழு மணிக்குக் கிளம்பினால தான் ஒன்பதரை மணி அலுவலகத்திற்கு சிறிது தாமதத்துடனாவது செல்ல முடியும். காலை உணவு என்பது எப்போதும் நிகழ்ச்சி நிரலில் வரவே வராது. மதிய உணவு அலுவலகத்தில் கிடைத்து விடும், எனவே அதற்கான தேடலில்லை. இரவுக்குத்தான் நித்தம் ஒரு வழிவகை யோசிக்க வேண்டியிருக்கிறது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வருகிற நாப்பத்தேழு கிலோமீட்டர் தூரத்தில் எந்த கையேந்திபவன் இட்லிக்கு அரைத்த மாவிற்கான அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அங்கே தான் அன்றைக்கான பார்சல் கட்டப்படும். இன்று அதையும் தவரவிட்டு வந்தாகி விட்டது. அலமாரியைத் துலாவியதில் இரண்டு பாக்கெட் மில்க் பிக்கீஸ் கண்ணில்பட்டது. நினைவடுக்கினில் சென்ற ஜென்மத்தில் ஊரிலிருந்து கொண்டு வந்த ஊறுகாய் பாட்டிலும் நிழலாடியது. பெருமுயற்சிக்குப் பின் அதையும் தேடி எடுத்தால் முதலுக்கு மோசமில்லை. மேலுள்ள ஒரே ஒரு அடுக்கு தான் பூசனம் பிடித்திருந்தது. அதை நீக்கிவிட்டு பிஸ்கட்டுக்கு ஊறுகாய் தொட்டு அன்றைய இரவு உணவுக்கான கடமையை முடித்து விட்டேன்.

மறுநாள் செய்யவேண்டிய வேலைக்குக் குறிப்பெடுக்கலாம் என்று நினைத்து மடிக்கணினியைத் திறந்தேன். சாத்தான் மீண்டும் முழித்துக் கொண்டு விட்டது. டேட்டா கார்டை சொருகியது தான் தாமதம். சாத்தான் மேய்ச்சலுக்கு என்னையும் இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் சாத்தனைக் கட்டுப்படுத்தி வேலைக்குத் திருப்பி விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் சொல் பேச்சு கேளாமல் அது நேரத்தை விழுங்கிக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து மடிக்கணினியை மூடிய அடுத்த நிமிடம் மின்சாரம் நின்று விட்டது. வேகமாக அலைபேசியைத் தேடி எடுத்து மணி பார்த்தால் பத்து நாற்பத்தி மூன்று. வழக்கமாக சரியாக பதினோரு மணிக்குத் தான் மின்சாரம் நிற்கும். மீண்டும் நள்ளிரவு ஒரு மணிக்கு வரும் என்ற சமாதானத்தில் நானும் வியர்வை மழையில் தூங்கி விடுவேன். பிறகு மூன்று மணிக்கு நிற்கும் போதும்,  ஐந்து மணிக்கு வரும் போதும் முழிப்பு தட்டும். அதற்கொரு முக்கியத்துவம் தராமல் நான் தூங்கிக் கொண்டிருப்பேன். காலை ஏழு மணிக்கு மீண்டும் மின்சாரம் நிற்கும் போது நான் வாசல் கதவை சாத்திக் கொண்டிருப்பேன். இந்த ஒழுங்குமுறைக்கு பழகி தான் நாட்கள் சென்று கொண்டிருந்தது. என்றேனும், நிகழ்வில் எதிர்பாரா ஒழுங்கின்மை நேரும் போது ஒரு பதட்டம் வந்து விடுகிறது.  

அலைபேசியை தலைமாட்டுக்கு அருகில் வைத்துவிட்டு படுத்தால் தூக்கம் பிடிபடவே இல்லை. ஏதேதோ சிந்தனைகள். எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி செய்தி, ஒரே மாதிரி சண்டை, ஒரே மாதிரி ஊழல், ஒரே மாதிரி போராட்டம், நம்மை சுற்றி நடப்பவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்தது போலவும், ஆனாலும் அது நிகழ்வதையே எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவும் ஏதேதோ நம்மை சுற்றி சுற்றி மாய வலைப்பின்னல். எண்மயமாக்கப்பட்ட பின்னல். சுழியமாகவும், ஒன்றாகவும் மட்டுமே நிரம்பி நிற்கின்ற உலகம். உலகம் முழுக்க எண்கள், எண்கள், எண்கள் மட்டுமே. அர்த்தமில்லாத சுழியங்கள், அர்த்தமில்லாத ஒன்றுகள் இவற்றால் தழும்பித் தழும்பி சுழலும் உலகம்.

விழித்துப் பார்த்தால் எப்போது தூங்கினேன் என்று நினைவே வரவில்லை. பயங்கர தலைவலி. ஆனாலும் அந்த இரவு ஏதோ ஒரு பாடத்தை எனக்கு நடத்திச் சென்றது போலவே தோன்றியது. என்ன பாடம் என்று மீண்டும் மீண்டும் யோசிக்கத் துவங்கினேன். உலகத்தை சுருக்கி உள்ளங்கைக்குள் வைக்கிறேன் என்ற நினைப்பில், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன் என புரிய இரண்டு மூன்று நாட்கள் ஆகியது. அறையில் இணையத்துக்கு மூடுவிழா நடத்தினேன். மறுநாள் அலுவகலத்திலிருந்து அறைக்கு வரும் போது, நான் தங்கியிருக்கும் அடுக்ககத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு மாணவர் விடுதியிலிருந்து வரும் சிறுவர்களில் சத்தம் என்னை ஈர்த்தது. இத்தனை நாட்களும் இங்கு ஒரு விடுதி இருந்ததை எப்படி கவனிக்காமல் சென்றேன் என எனக்கே வியப்பாய் இருந்தது. வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளி அது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சிறுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கிப் படித்தனர். அடுத்து வந்த வார இறுதி நாள், பொழுதைக் கழிக்க நினைத்து அந்த விடுதியின் அருகில் சென்று எட்டிப்பார்த்தேன். உள்ளே சிறுவர்கள் பலவித விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். நானும் அப்படியே அவர்களை ரசித்துக் கொண்டே நின்று விட்டேன். 

சில நாட்களில் இது எனது வழக்கமான பழக்கமாகி விட, நாளடைவில் சிறுவர்களுடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. ஒரு நாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, விருப்பமுள்ள தன்னார்வலர்கள் சிலர் தங்களது விடுமுறை நாட்களில் விடுதிக்கு வந்து மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதாகத் தெரிவித்தனர். எனக்கும் ஆர்வம் வரவே, விடுதிக் காப்பாளரிடம் சென்று நானும் மாணவர்களுக்கு டியூசன் எடுக்க விரும்புவதாகக் கூறினேன். அவரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டு, நான் கணினி நிறுவனத்தில் வேலை செய்வதால் மாணவர்களுக்கு கணினி சொல்லித் தர வேண்டுமென விரும்பினார். நான் அதை மறுத்து, மாணவர்களுக்கு கணக்கு சொல்லித் தர விரும்புவதாகக் கூறினேன். அவரும் சரியென்று சொல்லி விட்டார்.

வாரயிறுதி நாட்களில் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சி முழுவீச்சில் சென்று கொண்டிருக்கிறது. நான் என்றோ உருப்போட்ட ஆர்.எஸ்.அகர்வாலும், சகுந்தலா தேவியும் இவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களாய் மாறியிருக்கின்றன. இப்போதும் என் கனவில் அவ்வப்போது எண்கள் வரத்தான் செய்கிறது. ஆனால் இவை வெற்று சுழியமும், ஒன்றுமாக இருப்பதில்லை. அடர்த்தியாக, பொருள் உள்ளதாக, தகைநேர்த்தி மிகுந்ததாக நிறைந்து இருக்கின்றது. உடலைப் போல தான் மனமும்,  தன் இயல்பிலிருந்து மாறினாலும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர தன்னைத் தானே நெகிழ்த்திக் கொள்ளவும் செய்கிறது.

************

Friday, August 24, 2012

வாசிப்போர் களம் - சில புத்தகங்கள்

எங்கள் அலுவலக ”வாசிப்போர் களம்”  அமைப்பிற்காக எழுதியது.
http://vasipporkalam.blogspot.in/2012/08/blog-post_23.html

*******************************************
எதிர்வரும் 30/08/2012 முதல் 09/09/2012 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியில் நண்பர்கள் புத்தகங்களை தேர்வு செய்ய ஏதுவாக சில புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு  ”வாசிப்போர் களம்” சார்பாக கேட்டனர்.
தரவரிசை என்றெல்லாம் பிரிக்காமல், மனதுக்கு சட்டென தோன்றிய சில புத்தகங்களைப் பற்றி சிறுகுறிப்புடன் அளித்திருக்கிறேன். வேறுபட்ட வாசிப்புத்தளத்தில் உள்ள பல நண்பர்களைக் கொண்டது ”வாசிப்போர் களம்”. அனைவருக்குமே இனிய வாசிப்பனுவம் தரக்கூடிய நூல்கள் இவை என்ற வகையில் இவற்றைத் தொகுத்திருக்கிறேன்.

வாடிவாசல் / சிசு செல்லப்பா / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.40

மாடணைதல் என்ற தமிழர் வீரவிளையாட்டின் சூட்சமங்களை சொல்லும் நாவல். இரண்டு துடிப்பான மாடுபிடி வீரர்கள் வேற்றூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்குச் செல்கிறார்கள். அதில் ஒருவன் தன் தந்தையை குத்திச் சாய்த்த ஒரு ”காரி” காளையை அடக்கி, இழந்த பெருமையை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி தான் நாவலின் கரு. நாவல் படிக்கும் போதே, களத்தில் மாடு பிடிக்க நாமும் நிற்பதைப் போன்ற உணர்வு எழும் அளவு தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. 

கோபல்ல கிராமம் / கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100

இது ஒரு இனக்குழுவின் கதை. ஆந்திர தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் செழிப்பாக வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தில் சர்வ லட்சணங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மானத்தை காக்க வேண்டி ஊர், நிலம் நீச்சு, சொந்தபந்தம், கால்நடை அனைத்தையும் விட்டு பலநாட்கள் பட்டினியோடும், உடல் ரணங்களோடும் தெற்கு நோக்கி பயணப்படுகிறார்கள். வழிநெடுக பல இன்னல்களையும், தெய்வாதீன்மான சில நிகழ்வுகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மேலும் பயணிக்க முடியாத நிலையில், அங்குள்ள வனப்பகுதியை சீர்திருத்தி விவசாயம் செய்து அந்தப் பகுதியிலேயே தங்கள் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று அழகாக விவரிக்கப்பட்டிருக்கும் நாவல்.

துணையெழுத்து / எஸ்.ராமகிருஷ்ணன் / விகடன் பிரசுரம் / ரூ.110

நம்மில் பெரும்பான்மையோருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகம் ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்த “துணையெழுத்து” மூலமாகவே நிகழ்ந்திருக்கும். அன்றாடம் நாம் கடந்து செல்லும் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களை சகபயணியாக உணர்ந்து எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு. தெள்ளிய நீரோடையில் மிதந்து செல்லும் தக்கை போல எளிய மனிதர்களின் மேன்மை பற்றி எதார்த்தமாக பேசும் தொகுப்பு. நாளிதழ்களில் நாம் காணும் “உயிர்காக்க உதவுங்கள்”அறிவிப்பு கொடுப்பவர்கள், நெடுஞ்சாலை உணவகத்தில் எடுபிடி வேலை செய்பவர், தெருக்கூத்து நடிகர்கள் என பல நிலை மனிதர்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் படைப்பு. 

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் / நேசமித்ரன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.50

தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம்.  கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை. சொற்களை பகடைகளாக்கி பரமபதம் ஆட வைக்கும் வித்தையை கற்றுத் தரும் இந்தத் தொகுப்பு. நாம் இதுவரை வாசித்த கவிதைத் தொகுப்புகளிலிருந்து இது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். தொடர் வாசிப்பில் சொற்களாலான புதையல் வேட்டையில் புதுப்புது திறப்புகளும், சுடோகு புதிர் அவிழ்க்கும் உற்சாகமும் பிறக்கும்.

சேவல்கட்டு / ம.தவசி / புதுமைப் பித்தன் பதிப்பகம் / ரூ.70


சேவல் சண்டையை மையமாக வைத்து புனைவும், யதார்த்தமும் கலந்து எழுதப்பட்ட நாவல். கொண்ட வைராக்கியத்திற்காக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து அவமானப்பட்டாலும், தான் அடிபட்ட களத்திற்குள்ளேயே சுழன்று தன் வாழ்வையே தொலைக்கிறான் ஒருவன். அவன் விட்ட இடத்திலிருந்து அவனது மகனும் அதே பாதையிலேயே அலைந்து திரிகிறான். போத்தையா என்னும் அறுபது வயது நபரும் அவரது தந்தை சேவுகப்பாண்டியனும் சேவற்கட்டில் தங்கள் வாழ்வை இழந்த கதை, மாயா யதார்த்த நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. கத்திக்கட்டு சேவல் சண்டையின் நுனுக்கங்களும், பண்டைய காலத்தில் பெண்களில் இந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

விழித்திருப்பவனின் இரவு / எஸ்.ராமகிருஷ்ணன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.110 

உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய அருமையான அறிமுகம் தரும் கட்டுரைத் தொகுப்பு. தற்கொலையை தவம் போல செய்யும் சாமுராயாகட்டும், வண்னத்துப் பூச்சியை கனவில் காண்பதோ, இல்லை ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவிற்குள் தான் வாழ்வதாக உருவகம் செய்பவராகட்டும், ஒரு வெற்றுக் காகிதத்தை உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக மதிப்பவராகட்டும், காளைச் சண்டையின் நுணுக்கங்களை தேர்ந்த நடனம் போல் ரசிப்பவராகட்டும் அவரவர் வாழ்வை அவரவர் வலிகளோடும், சிலிர்ப்புகளோடும், போதாமைகளோடும், சுக துக்கங்களோடும் நேர்மையாக பதிவு செய்திருக்கும் தொகுப்பு. வெறும் தரவுகளாக இல்லாமல், உலக இலக்கிய ஆளுமைகளின் வாழ்வை கதை போல சொல்லியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு.

******
வாசிப்பனுபவம் இனிதாகட்டும் நண்பர்களே !

Tuesday, August 21, 2012

தென்திசைப்பயணம்


நான் பிறந்தது முதலே புழங்கியது எல்லாம் மதுரையில் “சோலைஅழகுபுரம்” எனும் ஒரே ஏரியா தான். ஆரம்பப்பள்ளி “பாலகுருகுலம்” வீட்டிற்கு அருகிலேயே அமைந்து இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது ”டி.வி.எஸ்” பள்ளியில். அதுவும் வீட்டிலிருந்து மிஞ்சிப் போனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள் தான் இருக்கும். தினமும் சைக்கிள் பயணம். வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு என்று தான் இருப்பேன். பள்ளிப்பருவம் வரை பெரிதாக வெளியூர் எல்லாம் சென்று தங்கியதுமில்லை. வீட்டை விட்டு தனியாகக் கிளம்பிய முதல் பயணம், தெற்கு நோக்கியது. 

பள்ளிப் படிப்பு முடிந்து, பொறியியல் கலந்தாய்வு மூலம் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அப்போது கல்லூரியில் விடுதி வசதி இல்லை. எனவே கல்லூரிக்கு அருகில் இருந்த தனியார் விடுதியில் சேர்ந்து கொண்டோம். முதன்முறையாக விடுதி வாசம். கல்லூரி சேர்ந்த பரபரப்பு, ஆச்சர்யம், புது நண்பர்கள், ரேகிங் பயம் என பகலெல்லாம் ஓடி விடும். இரவு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்தால் போதும், இன்னதென்று தெரியாமல் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விடும். முதல் ஒரு மாதம் முழுதும் இதே கதை தான். பிறகு மண் பிடித்து, வேர் பிடித்து, நீர் பிடித்து, கிளை விரித்து, பூத்துக் குலுங்கிய வசந்தம் எல்லாம் வந்தது தனிக்கதை.

திருநெல்வேலியில் இருந்த பொழுது தான், நாம் பேசுவது மதுரை வட்டார மொழி,  நெல்லை வழக்கு மொழி நம் பேச்சு வழக்கு மொழியிலிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கும். நெல்லை நண்பர்கள் ராகம் போட்டு பேசுவதை விருப்பத்துடன் ரசித்துக் கொண்டிருப்பேன். அங்கிருக்கும் வரை முடிந்த மட்டும் நண்பர்களுடன் நெல்லை மொழியிலேயே உரையாடவும் முயற்சிப்பேன். கல்லூரி சமயங்களில் மதுரை வரும் போது, இங்கும் அதே பேச்சுவழக்கு வர, இங்கு அனைவரும் சிரித்திருக்கிறார்கள். சிறுவனாக இருந்த என்னை இளைஞனாக மாற்றியது நெல்லை தான். தாமிரபரணியும், குற்றாலமும், திருப்பரப்பு அருவியும் எப்போதும் நினைவில் நிற்கக் கூடிய அளவில் கல்லூரிக் காலங்களில் நீக்கமற கலந்திருந்தது. மதுரையில் இருந்து வெளியூர் கிளம்பும் போது, சென்னை நோக்கிய பயணமென்றால் ஒருவிதமான புழுக்கமும், தெற்கு நோக்கிய பயணமென்றால் குளிர்ச்சியான மனநிலையும் தன்னிச்சையாக அமைந்து விடுகிறது.

நிற்க ! பதிவுலகம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் சும்மா “பராக்கு” மட்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஒரு சுபயோக சுபதினத்தில் ”சோலைஅழகுபுரம்” என்று வசித்து வந்த ஏரியாவின் பெயரில் வலைப்பூவை துவங்கி இத்தோடு சேர்த்து 100 இடுகைகள் எழுதி இருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்ததா தெரியவில்லை. ஆனால் என் அளவில், மொழிக்கு மரியாதை தந்து என் சிற்றறிவுக்கு எட்டியவரை முழுமனதோடு தான் ஒவ்வொரு இடுகையையும் அளித்திருக்கிறேன். அந்த வகையில் எழுதிய ஒரு இடுகையும், அது நகைச்சுவையோ, அங்கதமோ, மொக்கையோ அல்லது கருத்தார்ந்ததாக (?) நம்பப்பட்டு எழுதப்பட்டதோ அனைத்தும் எனக்கு சிறிதளவேனும் மனநிறைவைத் தந்திருக்கின்றது. அன்றாட வாழ்வியலில் இணையம் அதிக நேரத்தை விழுங்கிக் கொள்வதும் உணமை தான். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதற்கான காரணம், இங்கே நான் இழப்பதை விட கற்றுக் கொள்வது அதிகம் என்றே நம்புகிறேன். தொடரும் இந்த பயணத்தில் உடன் பயணிக்கும், தொடர்ந்து உற்சாகமூட்டும், குறைகளை தயங்காமல் சுட்டிக்காட்டும், மௌனமாய் பார்வையிடும், எதிர்பாராத தருணங்களில் எப்போதோ எழுதிய ஒரு இடுகையைக் குறித்துப் பேசி கிளர்ச்சியடையச் செய்யும், என்னில் நம்பிக்கை வைத்து கேட்காமலே புதிய களங்களையும், வாய்ப்புகளையும் வழங்கும் நண்பர்கள் அனைவருக்கும் சிநேகங்கள் பூத்துக் குலுங்கும் அன்பும், பொறுப்புணர்வுடன் கூடிய நன்றியும்.

”தென்திசை” என்பதை உள்ளுக்குள் சென்று பகுத்தாயக் கூடிய , வேர்களை நோக்கிய பயணம் என்பதாய் எண்ணி, “சோலைஅழகுபுரம்” என்ற இந்த வலைப்பூவை “தென்திசை” (ThenDhisai.blogspot.in) என்று மாற்றம் செய்திருக்கிறேன். தென்திசை நோக்கிய பயணம் இங்கிருந்து துவங்குகிறது. என்னோடு சேர்ந்து நீங்களும் பயணிக்க வாருங்கள் நண்பர்களே !


************

Thursday, August 16, 2012

புத்தர் செத்தார், சித்தார்தன் சிரித்தான்

சில ”முத்துவ தத்துக்கள்”

ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தானுக்கு எத்தனை பதக்கம் என்றான் தம்பி. ஒன்றுமில்லை என்றவுடன், “அப்போ சரி, பாரத் மாதா கீ ஜே!” என்கிறான்.

******
பெண்களின் ஷாப்பிங் உலகில் வேண்டாத பொருள் என்றொரு கேட்டகிரியே கிடையாது.

******
தம்மை அறியாத தயிர்சாதங்கள், அதிகமாய் பேசுகையில் சட்னியாக்கப்படுகின்றன.
#சும்மாவொருகருத்து

******
காற்றை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கும் வித்தையை ‘லேஸ்’ சிப்ஸ் தயாரிப்பவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்

******
முதன்முறையாக ‘கோட்’ அணிபவன் பத்து நாளானாலும் அதைக் கழட்ட மாட்டான் என்பது தான் ‘சகுனி’ படம் நமக்குச் சொல்லும் செய்தி

******
"சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் ஆடுகளம்” என்பது தானே படத்தின் பெயர். அதை விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏன் எப்போதும் சுருக்கி வெறும் ‘ஆடுகளம்’ என்றே சொல்கின்றனர்?
#அப்பாவி கோயிந்து

******
எஸ்.ரா புத்தகம் எதையாவது வாசிக்க ஆரம்பித்த உடனேயே, மாமல்லன் தான் வந்து மனசுல உட்கார்ந்துட்டு ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கார்.
#இந்த இணையம் ரொம்ப மோசம்ப்பா.

******
அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டம் பிரமிக்க வைக்கிறது. மதுரைக்குள் கிடைக்காத ஸ்பெஷல் சரக்கெல்லாம் வைகை டேம் செல்லும் வழியில் கருமாத்தூர், ஆண்டிப்பட்டி ஊர் டாஸ்மாக்’களில் எப்போதும் கிடைக்கிறது.

******
ஆயிரம் தான் விமர்சனங்கள் இருந்தாலும், லாப நோக்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் என்றாலும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” மூலம் விஜய் டீவியின் சமுதாய் பொறுப்புணர்வு பாராட்டுதற்குரியது. 
கடைசி வாரம் கூத்தாடிகள் செய்த அலப்பறைகள் சகிக்கவில்லை, மோசமான அனுபவத்துடன் முடிக்கிறார்களே என்ற வருத்தம் இருந்தது. இன்று மிக அருமையான நிறைவு விழா கொடுத்தார்கள். வெல்டன் டீம், வாழ்த்துகள் சூர்யா !

#ஆனாலும் வாய்ல மாவாட்டி ஆட்டி பேசுறத கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.  :)

******
இணைய நடுநிலையாளர்களின் ”அரிய சிந்தனைகளை” எல்லாம் மதித்து இந்த உடன்பிறப்புகள் ஏன் விலாவாரியாக பதில் அளிக்கிறார்கள் என எண்ணுவதுண்டு.

”ஆனால் இந்த கேனைத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் சமூதாயத்தில், மேடைகளில், செய்தித்தாள் டீவி பேட்டிகளில், டீக்கடைகளில் , அலுவலகத்தில், கல்லூரிகளில், இணையம் சாராத பெரும்பான்மையினரிடம் (மொத்தமாகவென்றால் பொது மக்களிடம்) திமுக பற்றி எடுத்துச் சொல்ல (சமாளிக்கவும்) நிறைய பயிற்சி கிடைக்கிறது” என்றார் உடன்பிறப்பு நண்பரொருவர்.

நான் யோசிச்சேன், இங்க கேக்குற மாதிரி அறிவுப்பூர்வமான கேள்விகளை நடுநிலையாளர்கள் சமுதாயத்தில் கேட்டால் என்னவாகும்?

# ஒன்னு வாயிலயே குத்துவான், இல்ல கல்லால அடிப்பான்.
# என்னமோபோங்க !
******

புத்தர் செத்தார், சித்தார்தன் சிரித்தான்.



*******************