Tuesday, August 21, 2012

தென்திசைப்பயணம்


நான் பிறந்தது முதலே புழங்கியது எல்லாம் மதுரையில் “சோலைஅழகுபுரம்” எனும் ஒரே ஏரியா தான். ஆரம்பப்பள்ளி “பாலகுருகுலம்” வீட்டிற்கு அருகிலேயே அமைந்து இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது ”டி.வி.எஸ்” பள்ளியில். அதுவும் வீட்டிலிருந்து மிஞ்சிப் போனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள் தான் இருக்கும். தினமும் சைக்கிள் பயணம். வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு என்று தான் இருப்பேன். பள்ளிப்பருவம் வரை பெரிதாக வெளியூர் எல்லாம் சென்று தங்கியதுமில்லை. வீட்டை விட்டு தனியாகக் கிளம்பிய முதல் பயணம், தெற்கு நோக்கியது. 

பள்ளிப் படிப்பு முடிந்து, பொறியியல் கலந்தாய்வு மூலம் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அப்போது கல்லூரியில் விடுதி வசதி இல்லை. எனவே கல்லூரிக்கு அருகில் இருந்த தனியார் விடுதியில் சேர்ந்து கொண்டோம். முதன்முறையாக விடுதி வாசம். கல்லூரி சேர்ந்த பரபரப்பு, ஆச்சர்யம், புது நண்பர்கள், ரேகிங் பயம் என பகலெல்லாம் ஓடி விடும். இரவு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்தால் போதும், இன்னதென்று தெரியாமல் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விடும். முதல் ஒரு மாதம் முழுதும் இதே கதை தான். பிறகு மண் பிடித்து, வேர் பிடித்து, நீர் பிடித்து, கிளை விரித்து, பூத்துக் குலுங்கிய வசந்தம் எல்லாம் வந்தது தனிக்கதை.

திருநெல்வேலியில் இருந்த பொழுது தான், நாம் பேசுவது மதுரை வட்டார மொழி,  நெல்லை வழக்கு மொழி நம் பேச்சு வழக்கு மொழியிலிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கும். நெல்லை நண்பர்கள் ராகம் போட்டு பேசுவதை விருப்பத்துடன் ரசித்துக் கொண்டிருப்பேன். அங்கிருக்கும் வரை முடிந்த மட்டும் நண்பர்களுடன் நெல்லை மொழியிலேயே உரையாடவும் முயற்சிப்பேன். கல்லூரி சமயங்களில் மதுரை வரும் போது, இங்கும் அதே பேச்சுவழக்கு வர, இங்கு அனைவரும் சிரித்திருக்கிறார்கள். சிறுவனாக இருந்த என்னை இளைஞனாக மாற்றியது நெல்லை தான். தாமிரபரணியும், குற்றாலமும், திருப்பரப்பு அருவியும் எப்போதும் நினைவில் நிற்கக் கூடிய அளவில் கல்லூரிக் காலங்களில் நீக்கமற கலந்திருந்தது. மதுரையில் இருந்து வெளியூர் கிளம்பும் போது, சென்னை நோக்கிய பயணமென்றால் ஒருவிதமான புழுக்கமும், தெற்கு நோக்கிய பயணமென்றால் குளிர்ச்சியான மனநிலையும் தன்னிச்சையாக அமைந்து விடுகிறது.

நிற்க ! பதிவுலகம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் சும்மா “பராக்கு” மட்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஒரு சுபயோக சுபதினத்தில் ”சோலைஅழகுபுரம்” என்று வசித்து வந்த ஏரியாவின் பெயரில் வலைப்பூவை துவங்கி இத்தோடு சேர்த்து 100 இடுகைகள் எழுதி இருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்ததா தெரியவில்லை. ஆனால் என் அளவில், மொழிக்கு மரியாதை தந்து என் சிற்றறிவுக்கு எட்டியவரை முழுமனதோடு தான் ஒவ்வொரு இடுகையையும் அளித்திருக்கிறேன். அந்த வகையில் எழுதிய ஒரு இடுகையும், அது நகைச்சுவையோ, அங்கதமோ, மொக்கையோ அல்லது கருத்தார்ந்ததாக (?) நம்பப்பட்டு எழுதப்பட்டதோ அனைத்தும் எனக்கு சிறிதளவேனும் மனநிறைவைத் தந்திருக்கின்றது. அன்றாட வாழ்வியலில் இணையம் அதிக நேரத்தை விழுங்கிக் கொள்வதும் உணமை தான். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதற்கான காரணம், இங்கே நான் இழப்பதை விட கற்றுக் கொள்வது அதிகம் என்றே நம்புகிறேன். தொடரும் இந்த பயணத்தில் உடன் பயணிக்கும், தொடர்ந்து உற்சாகமூட்டும், குறைகளை தயங்காமல் சுட்டிக்காட்டும், மௌனமாய் பார்வையிடும், எதிர்பாராத தருணங்களில் எப்போதோ எழுதிய ஒரு இடுகையைக் குறித்துப் பேசி கிளர்ச்சியடையச் செய்யும், என்னில் நம்பிக்கை வைத்து கேட்காமலே புதிய களங்களையும், வாய்ப்புகளையும் வழங்கும் நண்பர்கள் அனைவருக்கும் சிநேகங்கள் பூத்துக் குலுங்கும் அன்பும், பொறுப்புணர்வுடன் கூடிய நன்றியும்.

”தென்திசை” என்பதை உள்ளுக்குள் சென்று பகுத்தாயக் கூடிய , வேர்களை நோக்கிய பயணம் என்பதாய் எண்ணி, “சோலைஅழகுபுரம்” என்ற இந்த வலைப்பூவை “தென்திசை” (ThenDhisai.blogspot.in) என்று மாற்றம் செய்திருக்கிறேன். தென்திசை நோக்கிய பயணம் இங்கிருந்து துவங்குகிறது. என்னோடு சேர்ந்து நீங்களும் பயணிக்க வாருங்கள் நண்பர்களே !


************

13 comments:

துளசி கோபால் said...

சதம் அடிச்சதுக்கு இனிய பாராட்டுகள்.

அழகான நடையில் எழுதி இருக்கும் உங்கள் பதிவுகளை இன்றுதான் தற்செயலாக முதல்முறை பார்த்தேன்.

பயணம் தொடர வாழ்த்துகின்றேன்.

சுந்தர் said...

Congrats, we are ready to travel with u in then dhisai

சுந்தர் said...

cONGRATS, WE ARE READY TO TRAVEL WITH U IN THEN DHISAI

திண்டுக்கல் தனபாலன் said...

100௦ வது பதிவிற்கு பாராட்டுக்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

Ramani said...

சதத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஆயிரமாய்த் தொடர நல்வாழ்த்துக்கள்

மயிலவன் said...

Congratzzz...We will always travel with u..... What ever the name will be there..........

மயிலவன் said...

Enna area change anathala... name change ya...

Nagarajan S said...

தென்திசை பயணம் தென்றலாய் தொடர, மண்மணம் என்றும் மலராய் மணம் வீச, இன்னும் பல இடுகைகள் இன்பமாய் பெருக தொடரட்டும் தங்கள் பயணம்; தொடர்வோம் நாங்களும் மகிழ்வோடு.

Raju N said...

100th post! Heart Wishes anne. Kalakkunga.
:-)

Raju N said...

100th post! Heart Wishes anne. Kalakkunga.
:-)

வி.பாலகுமார் said...

அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள் !

Anonymous said...

" தென்திசை" நோக்கி திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் !

-மதன்

சித்திரவீதிக்காரன் said...

தென்திசை – நல்ல பெயர். நம்ம மதுரையும் தென்திசையில் தானே உள்ளது. தங்கள் தென்திசை பயணம் சிறக்க வாழ்த்துகள்.

Post a Comment